Advertisement

போலீஸ் முன்பு தனக்கே தெரியாது என்பது போல டிரைவரை கண்டித்தான் நரேன். அவன் நடிப்பு தெரிந்தும் போலீஸ் எதுவும் செய்யவில்லை. பெரிய ஆட்களை அப்படி பகைக்க முடியாதே. பாலனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போல எதுவும் கூறாமல் பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொடுத்தமைக்கு போலீசுக்கு நன்றி கூறி அனுப்பி வைத்து விட்டான்.

லோட் இறங்கி லாரி திரும்ப செல்லும் வரை அங்குதான் இருந்தான் பாலன். தங்கள் ஜவுளிக்கடையின் இரண்டாவது தளத்தில் நின்று கொண்டு கண்ணாடி தடுப்பு வழியே பாலனை வெறித்துக் கொண்டிருந்தான் நரேன்.

பாலன் காதில் நரேன் பார்ப்பதை பாஸ்கர் சொல்ல அவனும் நிமிர்ந்து பார்த்தான். நரேன் கண்களில் ‘உன்னை விட மாட்டேன்’ எனும் வெறி தெரிய கடினமாக பார்த்த பாலனிடம் எப்போதும் போல ஒரு அலட்சிய சிரிப்பு.

“ரொம்பவும் அதிகமா போறான், என்ன செய்யலாம் தம்பி?” எனக் கேட்டான் பாஸ்கர்.

“நம்ம டெக்ஸ்டைல் கடை வந்ததுக்கு அப்புறம் எதிர்ல உள்ளது ஒண்ணுமில்லாம போய்டும். இவனுங்கள என்ன செய்றது? உயிரோடு இருந்து பார்க்க வேண்டியது நிறைய இருக்கு, நல்லா இருக்கட்டும்” என சிரிப்போடு சொன்னவன், “நீங்க இருந்து பார்த்திட்டு அப்புறம் மண்டிக்கு போங்க” என பணித்து விட்டு ஃபர்னிச்சர் கடைக்கு சென்று விட்டான்.

இரவில் பாலன் வீடு வரும் போது கருநீல நிற புடவையில் கோயிலுக்கு சென்றதன் அடையாளமாக நெற்றியில் திருநீறு குங்குமம் இட்டு வகிட்டில் வேறு குங்குமம் வைத்து வாசமான மல்லி தோள்களில் வழிய பொலிவோடு வரவேற்றாள் பிரியா. அவன் முகத்தில் தன்னைப் போல ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

பிரகதீஸ்வரி சார்லி பக்கம் அமர்ந்திருக்க அம்மாவிடம் பேசியவன் மனைவியிடம் கண்களால் என்ன புடவையெல்லாம் என்பது போல கேட்க, அவள் தோள்கள் குலுக்கினாள்.

“எல்லாம் நல்லா நடந்தா சாமிக்கு அர்ச்சனை செய்றேன்னு வேண்டிக்கிட்டாளாம். இதெல்லாம் நீ வந்து அழைச்சிட்டு போக கூடாதா? ஆசை படுவால்லடா? அப்புறம் வடிவோட போயிட்டு வர சொன்னேன்” என விவரம் சொன்னார் பிரகதீஸ்வரி.

‘எதற்காக வேண்டியிருந்தாள்… நேற்றைய இரவுக்காகவா?’ என திகைப்போடு பாலன் பார்க்க, “அச்சோ அதுக்கு இல்லைங்க, உத்ரா அண்ணன் கூட சேர்ந்திட்டா அரச்சனை செய்றேன்னு வேண்டியிருந்தேன்” என கணவனிடம் விளக்கியவள், “அத்த, உத்ராவுக்காக சொன்னேன்ல? சொன்னா முழுசா சொல்லணும், பாருங்க முறைக்கிறார்” என மாமியாரிடம் அதட்டலாக சொன்னாள்.

“பிரியா அம்மாகிட்ட அப்படிலாம் பேசக்கூடாது” கண்டித்தான் பாலன்.

“மாமியா மருமகன்னா அப்படித்தான் டெரரா பேசிக்கணும்” என விளையாட்டாக அவள் சொல்ல அம்மா முகத்தை பார்த்தான் பாலன்.

“அவ உன்னை வம்பிழுத்திட்டு இருக்கா” என சொல்லி சிரித்தார் பிரகதீஸ்வரி.

“குளிர் காத்துல திரும்ப முடியாம போய்ட போகுது, உள்ள போம்மா” என்றான்.

“என்ன குளிர் காத்து அடிக்குது, சும்மா ஏதாவது அவங்கள பாம்பர் பண்ணிகிட்டு. போங்க ரெஃப்ரெஷ் ஆகி வாங்க, பசிக்குது எனக்கு” என கணவனை விரட்டினாள்.

அம்மாவும் அங்கிருந்து எழப் போவதில்லை என அவர் அமர்ந்திருந்த விதம் வைத்து அறிந்தவன் உள்ளே சென்றான்.

குளித்து வந்த கணவனோடு சேர்ந்து பிரியா சாப்பிட ஏற்கனவே சாப்பிட்டிருந்த பிரகதீஸ்வரி அவர் அறைக்கு செல்ல நடந்தார். விடாமல் அவரையும் தங்களுடன் அமர வைத்துக்கொண்டாள்.

“அடடா சின்ன சிறுசுங்க நீங்க பேசிக்கிட்டே சாப்பிடுங்க, எனக்கு தூக்கம் வருது” என சொல்லி எழப் போனவரின் கையை பிடித்து வைத்துக்கொண்டாள்.

“ரெண்டு பேரும் சாப்பிடுறோம்ல யார் பரிமாறுவா? கொஞ்சமும் அக்கறை இல்ல உங்களுக்கு” என பிரியா சொல்ல அவளது தோளில் தட்டியவர் மகனை பார்த்து, “இவ ஏன் ப்பா வீட்ல இருக்கா? படிச்ச படிப்புக்கு வேலை செய்ய வேணாமா?” எனக் கேட்டார்.

“இபோதானே ம்மா வந்திருக்கா. கொஞ்ச நாள் போகட்டும்” என பாலன் சொல்ல, “அந்த பச்ச சட்னிய எடுங்க” என்றாள் பிரியா.

“அது மல்லி சட்னிமா” என சொல்லி அவளுக்கு பரிமாறினார் பிரகதீஸ்வரி.

“எனக்கு இதெல்லாம் கன்ஃப்யூஷன் ஆகும் அத்தை. ரெட் ஒயிட் ஆரஞ்ச் க்ரீன் அப்படினு என்ன கலர்ல இருக்கோ அந்த கலர் சட்னின்னுதான் சொல்வேன்” என்றாள்.

“இவ எப்படிடா பல் டாக்டர் ஆனா?” கிண்டலாக கேட்டார் பிரகதீஸ்வரி.

“அதெல்லாம் நல்லா வைத்தியம் பார்ப்பேன். நீங்க நம்பலைல? இருங்க நாளைக்கு உங்க பல்லுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிறேன்” என வம்பு செய்தாள்.

“என் பல் எல்லாம் நல்லாத்தான் இருக்கு” கன்னத்தில் கை வைத்து பயந்து போனவராக கூறினார் பிரகதீஸ்வரி.

“அதை நான் சொல்றேன். ஆறு மாசத்துக்கு ஒரு முறை நார்மல் டெண்டல் செக் அப் செய்யணும், நாளைக்கு உங்களுக்கு செய்திடலாம்” தீவிர தொனியில் அவள் கூற அவர் பதில் பேச என இருந்தனர்.

பாலன் எதுவும் பேசாமல் அவர்களையே பார்த்திருந்தான். அம்மாவை இப்படி சற்றே கல கலப்பாக பார்க்க மனம் நிறைவாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்த பின் மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்.

“என்ன இது… விடுங்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்” என்றாள்.

சில நிமிடங்கள் சென்று விட்டவன், “பகல்ல நல்லா தூங்கினியா?” எனக் கேட்டான்.

“எதுக்கு கேட்குறீங்க? தூங்கினேன்தான், ஆனா இப்போவும் தூக்கம் வருதே” விழிகளை நன்றாக விரித்து வைத்துக்கொண்டு சொன்னாள்.

 “ம்ஹூம்?” நம்பாத பார்வை பார்த்தவன் படுக்கையில் அமர்ந்து கொள்ள அவன் மடியில் அமர்ந்து கழுத்தை சுற்றி கைகள் போட்டுக் கொண்டவள், “டயர்டா இருக்கேன்” என்றாள்.

“அப்படியா?” நக்கல் சிரிப்பு அவனிடம்.

“ப்ச்… போங்க… வந்து… ஹான் இப்போ மூட் இல்ல” என்றாள்.

“எனக்கும்” என்றான்.

“அப்போ விடுங்க” என அவள் சொல்ல, அவளை சுற்றி வளைத்துக் கொண்டான்.

“நோ முத்தம் வேணாம்” என்றவளின் இதழ்கள் மூடினான்.

முத்தத்திற்கு பின் அவனை மையல் நிறைந்து பார்த்தவள், புருவங்கள் உயர்த்தி படுக்கையை காட்டியவள் தலையை வேண்டாம் என்பது போல அசைத்து தன் முந்தானை கொண்டு அவன் முகத்தை மூடினாள்.

தன் முகத்தை மூடியிருந்த துணியை மொத்தமாக தன் கைக்கு கொண்டு வந்தவன் சுருட்டி ஓரமாக போட்டான்.

அவள் முறைக்க கண்கள் சிரிக்க பார்த்தவன் அவளை படுக்கையில் விட்டு, “அடுத்து?” எனக் கேட்டான்.

அவன் மார்பில் குத்தியவள், “நாளைக்கு எனக்கு ஃபீல் குட் கனவு வேணாம்” என்றாள்.

“வேணும்னு சொல்லு” என வம்பு செய்தான்.

மாட்டேன் என்றவள் அவனை இழுத்து அவனது கழுத்தில் கடித்து வைத்தாள். வலியில் தடவி விட்டுக் கொண்டவன் அவள் வாயில் சுண்டி விட, “போங்க” என அவனை தள்ளி விட்டு முதுகு காட்டி படுத்தாள்.

இடையில் கை கொடுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன், அவள் காதில், “முதுகு காட்டுறது கோழைத் தனம் பிரியா” என்றான்.

உடனே திரும்பி படுத்தவள், “அப்போ நீங்களும் தைரியமா எதிர்த்து நிக்கணும்!” ஒரு விரல் காட்டி எச்சரிக்கை செய்தாள்.

கண்களால் தயார் என அவன் சொல்ல கணவன் முகத்தை ஆசையாக நெருங்கினாள். முதல் நாள் நாணி கோணி குழைந்தவள் இன்று தானும் இவனுக்கு சளைத்தவள் இல்லை என்பதை நிரூபணம் செய்யும் விதமாக அவனுக்கு ஈடு கொடுத்தாள்.

நடு இரவு தாண்டிய நேரம் அணைப்பில் இருந்த மனைவியிடம், “நல்ல முன்னேற்றம் பிரியா” என்றான். கண்கள் மூடியிருக்க இதமான அயர்வோடு சிரித்தாள் பிரியா.

முரடன் என சிறு வயதிலிருந்து நினைத்த ஒருவன் இப்படி தன் வாழ்க்கையாகவே மாறிப் போவான் என பிரியா என்றுமே நினைத்திருக்கமாட்டாள். அதிலும் அவளிடம் அவனது பரிமாணம் வேறுதான்.

திருமணம் வேண்டாமென நினைத்த தான் இப்படி ஒரு சிறு பெண்ணின் அன்பில் உருகி கரைவோம் என பாலனும் நினைத்ததில்லை.

பகலில் துணையின் நினைவுகளும் இரவில் காதலிலும் இனிமையாக நகர்ந்தன அவர்களின் நாட்கள்.

ஒரு நாள் மாலையில் பிரகதீஸ்வரியை சந்திக்க வந்து சென்றிருந்தார் சௌமியாவின் அம்மா அனுசுயா.

அம்மா அவசரமாக அழைக்கவும் வேலைகளை விட்டு விட்டு வீடு வந்து விட்டான் பாலன். குழப்பமும் யோசனையுமாக இருந்த பிரகதீஸ்வரி மகனிடம் விஷயத்தை சொன்னார்.

“இருக்காதும்மா. நம்ம வருண் அப்படி கிடையாது” என்றான் பாலன்.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா அனுசுயா பொய் சொல்லலை” என்றார் பிரகதீஸ்வரி.

தம்பிக்கு அழைத்த பாலன், சாதாரண நல விசாரிப்புகளுக்கு பின்  “நாளைக்கு இங்க வா, வந்ததும் என்னன்னு சொல்றேன்” என்றான்.

தொழில் விஷயமாக பிரச்சனை என நினைத்த வருண் சரி என சொல்லி கைபேசியை வைத்தான்.

எதிர்பாராத சம்பவங்களை தனக்குள் சுருட்டி வைத்துக்கொண்டு விடிய காத்திருந்தது அடுத்த நாள்.

Advertisement