Advertisement

“உங்களை எனக்கு புரியவே இல்ல இன்னும். எதுக்கு இப்போ கிஸ் பண்ணுனீங்க, சொல்லுங்க” என்றாள்.

அவளை விலக்கி நிறுத்தியவன், “நான் ஒண்ணு சொன்னா உன்னோட ஒப்பீனியன் மட்டும் சொல்லு. உன் அண்ணாகிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லாத. இனிமே நான்தான் உனக்கு ஃபர்ஸ்ட், அப்புறம்தான் அவர்” என்றான்.

“ம்ம்… எனக்கு கார்லலாம் இதான் வேணும்னு ஆசை இல்ல. எது பெஸ்ட்னு உங்களுக்கு தோணுதோ அதுவே ஓகேதான். ஆனா கலர் மட்டும்…”

அவளுக்கு முன், “ப்ளூ” என்றான்.

அவள் சிரிக்க, “இந்த விஷயம் இல்ல எதா இருந்தாலும் நம்ம முடிவுதான்” என சொல்லி அவள் கை பிடித்துக்கொண்டு உணவு மேசைக்கு வந்தான்.

மலையரசனும் வந்துவிட கார் வாங்குவது பற்றி அறிவித்தான். அவர் சரி என்க, “எதுக்கு இப்போ? வேணாம் டா. குழந்தை குட்டின்னு வந்தா வீட்லதான் இருக்க போறா. சும்மா ஆறு மாசத்துக்காக கார் வாங்குவியா? வேணும்னா நகை நட்டா வாங்கி கொடு” என்றார் துர்கா.

உத்ரா அமைதி காக்க, “ஏன் குழந்தை வந்தா நீ பார்க்க மாட்டியா? இவ ஸ்டோர் போறத நிறுத்த மாட்டா. இவளுக்கு கார் வாங்கி தரதான் போறேன்” என்றான்.

“ம்ம்… உங்களுக்கு எடுபிடி வேலை பார்க்க மட்டும் நான் தேவைப்படுவேன். அப்படித்தான் அந்த சுதாவ உனக்கு பேசியிருந்தப்பவும் நாங்க கிளினிக் வச்சுக்குவோம். நீதான் குழந்தை எல்லாம் வளர்க்கணும்னு சொன்ன என்கிட்ட. பொண்ணுதான் மாறியிருக்கு, எனக்கு ஆயா வேலை தரப் போற உன் முடிவு மட்டும் மாறல” என பேசிக் கொண்டே ஏதோ எடுக்க சமையலறை சென்று விட்டார் துர்கா.

உத்ரா சாப்பிடுவதை நிறுத்தி விட்டு தட்டை வெறிக்க ஆதவன் அம்மா சென்ற திசையை எரிச்சலாக பார்த்தான்.

“அவ கூறு கெட்டவம்மா. எப்ப எதை பேசன்னு தெரியாது. நீ சாப்பிடும்மா” என மலையரசன் சமாதானமாக சொல்ல பேச்சை வளர்க்க விரும்பாமல் அமைதியாக சாப்பிட்டாள் உத்ரா.

மீண்டும் அறைக்கு வரவும் ஆதவன் சங்கடமாக உத்ராவை பார்க்க அவள் சாதாரணம் போலவே தென்பட்டாள்.

ஆதவனின் கைபேசியில் ஏதோ செய்தி வந்ததற்கான ஒலி வர எடுத்தவள் கைபேசி திரையை வெறுப்பாக பார்த்து விட்டு அவனிடம் தந்தாள். அவன் வாங்கிப் பார்க்க ஏதோ ஃபார்வர்ட் செய்தி அனுப்பியிருந்தாள் சுதா.

‘அடியே சுதா!’ சத்தமாக மனதில் கத்தியவன் கைபேசியை படுக்கையில் வைத்து விட்டு பாவமாக மனைவியை பார்த்தான்.

“நோ ப்ராப்ஸ், கேரி ஆன்!” என்றாள்.

ஆதவன் விழிக்க, “என்னை கல்யாணம் பண்ணிகிட்டே நம்ம ஃபேமிலி எப்படி பிளான் பண்றோம்னு அவகிட்ட டிஸ்கஸ் பண்ணும் போது முன்னாடி பண்ணியிருக்க மாட்டீங்களா? அட இல்லைன்னுதான் சொல்லி பாருங்களேன்” நக்கலாக சொன்னாள் உத்ரா.

விளக்குகிறேன் என ஆரம்பித்து எதுவும் பிரச்சனை ஆகுமோ என பயம்தான் அவனுக்கு. ஆயினும் என்ன சொல்லலாம் என மனதில் ஓட்டிப் பார்த்து, “அது… அம்மா சொன்னது பொய்னு சொல்ல மாட்டேன். எஸ், வீ டிஸ்கஸ்டு எவ்ரிதிங். ஆனா அது பாஸ்ட் உத்ரா. பெருசு பண்ணாத” என்றான்.

“பாஸ்ட்னா அதை விட்ரனும்தானே? திரும்ப திரும்ப அதையே ஏன் பேசுறீங்க? உங்க அம்மா என்னை ஹர்ட் பண்ணனும்னே அவளை பத்தி பேசுறாங்க. நீங்க அவ கூடவே பேசுவீங்க. கெளதம் விஷயத்துல ஊர் உலகம் என்ன சொல்லும்னு ரொம்ப கவலை உங்களுக்கு, சுதா விஷயத்துல ஆஃப்டர் ஆல் பொண்டாட்டிதானே கஷ்ட பட போறா? நான்னாலே டோண்ட் மைண்ட் ஆட்டிடியூட்தான் உங்களுக்கு”

ஆதவன் இயலாமையோடு உதடுகள் குவித்து மூச்சை வெளியேற்ற, “யூ ப்ளீஸ் கன்டினியூ யுவர் சாட் வித் ஹெர்” கைபேசியை காட்டி அவளுடன் உரையாடலை தொடருங்கள் என்றாள்.

“உத்ரா… எங்க ரிலேஷன்ஷிப் ஜஸ்ட் பாஸ்ட், அவ்ளோதான். இப்போ தப்பான முறையில நான் பழகல. நாங்க ஃப்ரெண்ட்ஸ்… இல்ல… ஹ்ம்ம்… அவளுக்கு ஒரு வெல்விஷர்னு வச்சுக்க” என்றான்.

சிரித்த முகமாக பார்த்தவள், “பாஸ்ட்தானே விடுங்க. நான் கூட உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டேன். ஐ வாஸ் இன் லவ் வித் சம்ஒன்” என சொல்லி அவனை நிலை குலைய வைத்தாள்.

அவன் அதிர்ச்சியோடு பார்க்க, “அது பாஸ்ட் அத்தான். நீங்க சுதா மாதிரி இந்தளவுக்கெல்லாம் டிஸ்கஸ் பண்ணினது இல்ல நாங்க. பட் எனக்கு அவர வச்சு நிறைய கனவுகள் இருந்தது. ப்ச்…” என்றாள்.

உள்ளுக்குள் திகு திகு என கனன்றாலும், “யாரு எப்படி பிரேக் அப் ஆச்சு?” எனக் கேட்டான்.

“யாருன்னு தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? பிரேக் அப் லாம் இல்ல. ஒன் சைட் லவ். நான் சொல்லவே இல்ல. அவர் வேற பொண்ண லவ் பண்ணினார். அவருக்கும் நிறைவேறல, என்னவோ அப்புறம் எனக்கு அவர்கிட்ட சொல்லத் தோணவே இல்ல” என்றாள்.

“ஏன் சொல்லியிருக்கலாம்னு இப்போ தோணுதோ” குதர்க்கமாக கேட்டான்.

“கிட்டத்தட்ட நாலு வருஷம் மனசுல நினைச்சிருந்தேன். சொல்ற தைரியம் மட்டும் வரவே இல்ல. சொல்லியிருக்கணும்னு நிறைய தடவ நினைச்சிட்டேன், உங்கம்மா அந்த சுதா பத்தி சொல்றாங்க, நீங்க சுதா கூட இன்னும் வெல்விஷரா இருக்கீங்க…. குட்!” என நிறுத்தியவள் இரு நொடி அவகாசத்துக்கு பின், “இந்த செகண்ட் கூட நினைக்கிறேன். நான் அவர்கிட்ட சொல்லியிருக்கணும், எனக்கு கிடைக்க இருந்த ஆப்பர்ச்சுனிட்டிய மிஸ் பண்ணிட்டேன்… மிஸ் பண்ணிட்டேன்…” என்றவளுக்கு அவளை மீறி கண்ணீர் வந்தது.

பற்களை கடித்து தாடை இறுக அமர்ந்திருந்தான் ஆதவன்.

கண்களை துடைத்துக் கொண்டவள், “தப்பா நினைக்காதீங்க. அது பாஸ்ட், முடிஞ்சு போச்சு. இப்போ நீங்கதான் என் ஹஸ்பண்ட். உங்க கூடத்தான் வாழ நினைக்கிறேன்” ஒரு மாதிரி குதர்க்கம் நிறைந்துதான் சொன்னாள்.

“யார் அவன்?” இறுகிப் போன குரலில் கேட்டான்.

“உங்ககிட்ட சொல்லலாம்னு நான் நினைக்கிறப்போ சொல்றேன், இப்போ இல்ல” என்றாள்.

ஆதவன் முகம் விழுந்து விட்டது. தாங்கவே முடியவில்லை. எது சொன்னாலும் சுதாவை வைத்து தன்னையும் சொல்வாள் என புரிந்ததால் அமைதியாக குப்புற படுத்து விட்டான்.

“சாப்பிட்டு இப்படி படுத்தா தொப்பை வளரும்” என்றாள்.

“வரட்டுமே ஏன் அவன் ரொம்ப ஃ பிட்டோ?”

“கம்பேர் பண்ணாதீங்க, இப்போ இருக்க ப்ரசென்ட் மட்டும் பாருங்க. அது பாஸ்ட்” என்றாள்.

அவளை பார்க்க படுத்தவன், “பொய் சொல்றியா நீ? பொய்தானே?” எனக் கேட்டான்.

“எது… இந்த விஷயத்துல போய் பொய் சொல்வேனா? நிஜம்தான்” அதிராமல் உத்ரா சொல்ல மீண்டும் திரும்பி படுத்து விட்டான்.

‘இனி அந்த சுதாவ பத்தி பேசுங்க’ மனதில் கருவிக் கொண்ட உத்ராவும் படுத்து விட்டாள்.

உத்ரா அழுத அழுகை பொய் இல்லை என்பதை ஆதவனும் உணர்ந்தே இருந்தான். ஒரு தலைக்காதல் என்ற போதும் எளிதாக கடக்க முடியவில்லை. யாரென தெரியாமல் மனைவியின் முன்னாள் காதலன் மீது ஆத்திரம் வந்தது. இப்போதைய அவனுடைய ஒரே ஆறுதல் அவனுடன் அவள் எந்த விதமான தொடர்பிலும் இல்லை என்பதே.

உத்ராவுக்கு இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என எந்த திட்டமும் இல்லை. சற்று முன்னர் கூட எல்லாம் சரியாகி விடும், குணத்தைதான் கொஞ்சம் மாற்ற வேண்டும் என எண்ணியிருந்தாள். சுதா பற்றிய பேச்சுக்கள் அவளது ஆழ் மன ஈகோவை உயிர்த்தெழ செய்து விட்டது.

‘நான் என்ன அனுபவிக்கிறேன்னு உனக்கு புரியலைல… இந்தா நீயும் அனுபவி’ என அவனை நோக்கி குண்டு வீசி விட்டாள். எந்த நேரத்திலும் அவன் கோவத்தில் வெடிப்பான் என்பதை அவள் யோசித்திருக்கவில்லை.

கட்டிடம் கட்டும் இடத்தில் இருந்தான் பாலன். மேற்கூறை ஒட்டப் பட்டிருப்பதால் அது நன்றாக செட் ஆன பின்புதான் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பிப்பார்கள். சிமெண்ட் லோடு வந்திருக்க அதே நேரம் பூமிநாதன் கடைக்கு குடவுனில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு டெம்போவும் வந்திருந்தது.

பூமிநாதன் கடைக்கும் பாலன் கட்டிக் கொண்டிருக்கும் கடைக்கும் இடையில் சாலை மட்டுமே பிரதானமாக இருக்கும். சாலையின் இரு மருங்கிலும் நடை பாதை மட்டுமே. ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் வந்து திரும்ப முடியாது.

நரேனின் உத்தரவின் பெயரில் சரக்கு இறக்கப் பட்ட பின்பும் அவர்களின் டெம்போ அங்கேயே நிறுத்தி வைக்க பட்டிருக்க சிமெண்ட் லாரியை பாலனின் இடத்தின் உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை.

விஷயமறிந்து பாலன் வந்து விட்டான். வரும் போதே போலீசுக்கு தகவல் தந்து விட்டுத்தான் வந்தான். அதற்குள் அந்த பக்கம் சென்ற மக்களுக்கும் இடையூறாகிப் போனது. போலீஸ் வந்த பின் டெம்போ நகர சிமெண்ட் லாரியும் உள்ளே சென்று விட்டது.

Advertisement