Advertisement

ஆதவன் மருத்துவமனையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்க கோயிலில் கௌதமோடு நின்றிருந்தாள் பிரியா. நம்ப முடியாமல் காரை நிறுத்திய ஆதவன் இறங்கி வந்து பார்த்தான், தங்கையின் பக்கத்தில் கௌதமேதான்.

கௌதமுக்கு கை கொடுத்து சிரித்தாள் பிரியா. அவனும் சிரித்த முகமாக தலையசைத்து கோயிலின் வாயில் வழி வெளியே செல்ல பிரியா இன்னொரு வாயில் நோக்கி திரும்பினாள். கோவம் கொண்டவனாக நின்றிருந்த ஆதவன் தங்கையின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு காருக்கு சென்றான்.

முதல் நாள் இரவிலிருந்தே பிரகதீஸ்வரிக்கு நல்ல காய்ச்சல். சரியாக சாப்பிடவில்லை என வடிவம்மாள் கூற உத்ராவும் பாலனும் அம்மாவின் அறையில் இருந்தனர்.

அம்மாவை சாப்பிட வைத்து மாத்திரை போட்டுக் கொள்ள செய்து உறங்க வைத்தான் பாலன்.

பிரகதீஸ்வரி உறங்க ஆரம்பிக்க திடீரென ஹாலிலிருந்து சத்தம் கேட்டது. எழுந்த பாலன், “நீ அம்மா கூடவே இரு” என தங்கையை பணித்து விட்டு அறையின் கதவை வெளியிலிருந்து வெறுமனே அடைத்து விட்டு வேகமாக ஹாலுக்கு வந்தான்.

தாத்தா பாட்டியை தவிர ஏனைய ஆதவன் குடும்பத்தினர் அங்கிருக்க பிரியாவின் கை ஆதவனின் பிடியில் இருந்தது.

“நீ அங்க இருந்து என் உயிர வாங்கினது போதும். இனிமே இங்கேர்ந்து கிளம்பின காலை முறிச்சு போட்ருவேன்” கோவமாக கத்திய ஆதவன் தன் தங்கையை பாலன் முன் தள்ளி விட, வேகமாக வந்து பிரியாவை பிடித்துக்கொண்டான் பாலன்.

முடி களைந்து கண்கள் சிவந்து கன்னங்கள் வீங்கி உதட்டின் ஓரம் இரத்தம் கசிய என பிரியாவின் நிலை அலங்கோலமாக இருக்க பாலனின் இதயம் நின்று துடித்தது. அவனுக்கு எதுவும் புரியவில்லை.

வெளியில் என்ன நடக்கிறதோ என்ற பயத்தில் அம்மாவோடு வடிவம்மாளை இருக்க செய்து விட்டு வெளியில் வந்தாள் உத்ரா.

பிரியாவை இருக்கை ஒன்றில் அமர வைத்த பாலன், “என்னம்மா ஆச்சு?” பரிதவிப்பாக கேட்டான்.

பிரியாவுக்கு எதுவும் பேச முடியவில்லை. அழுகை மட்டும்தான் வந்தது. தன் முன் நின்றிருந்த கணவனை இடையோடு கட்டிக் கொண்டு அவனில் முகம் மறைத்துக் கொண்டு தேம்பினாள்.

உத்ரா பதறிப் போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவர்கள் அருகில் வர, மனைவியை தன்னிடமிருந்து பிரித்து தண்ணீர் பருக வைத்தான். பயத்தில் மேல் எல்லாம் சிந்திக் கொண்டே இரண்டு வாய் தண்ணீர் பருகியவள் மீண்டும் தன் அரணாக கருதிய கணவனிடம் சரண் புகுந்தாள்.

“போம்மா ஏதாவது சூடா குடிக்க எடுத்திட்டு வா” என பாலன் உத்ராவிடம் சொல்ல அவள் வேகமாக சமையலறை சென்றாள்.

மனைவி இப்போது பேசக் கூடிய நிலையில் இல்லை என புரிந்து தன் முன் நின்ற மூவரையும் பார்த்தான் பாலன். ஆதவன் கோவமாகவும் மலையரசன் குன்றிப் போயும் துர்கா பயத்தோடும் நிற்க கண்டவன், “என்ன மாமா ஆச்சு?” எனக் கேட்டான்.

பாலை அடுப்பில் வைத்திருந்த உத்ராவும் கவனத்தை இங்குதான் வைத்திருந்தாள்.

முதலில் தயங்கிய மலையரசன் எப்படியும் சொல்லித்தான் ஆக வேண்டும் என நினைத்து, “அது பாலா… அந்த கெளதம் வந்திருக்கான் ப்பா இங்க. அவனை தனியா சந்திக்க போயிருக்கா. ஆதவன் பார்த்திட்டு அழைச்சிட்டு வந்திருக்கான். கேட்டா இவதான் வர சொன்னதா சொல்றா. ஆதவன் அடிச்சிட்டான்” என ஒருவாறு சொன்னார்.

உத்ரா ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டு வர பாலன் ஆதவன் பக்கம் பார்க்கவே இல்லை. மனம் குமுறியது. துடித்த நெற்றிப் பொட்டு கூறியது அவனது கோவத்தின் அளவை. ஆயினும் நிதானம் தவறினால் ஆதவனை என்னவும் செய்து விடுவோம் என்பதால் கவனம் முழுவதையும் மனைவி மீது குவித்தான்.

“பிரியா இங்க பாரு, இதை குடி முதல்ல” என பாலன் சொல்ல அவன் இடுப்பை சுற்றியிருந்த பிரியாவின் கைகள் இன்னும் இறுக்கமடைந்தன.

“பிரியா…” பாலன் அழைக்க, “வேணாம்” என்ற பிரியாவின் குரல் பலஹீனமாக ஒலித்தது.

“பிரியா இங்க பாருடி, ரூம் போலாமா? வா” பிரியாவின் தோள் தொட்டு அவளை எழுப்ப பார்த்தாள் உத்ரா.

 தன் தோளை குலுக்கி உத்ராவின் கையை விலக்கி விட்ட பிரியா ஒரு கையால் பாலனின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள். இன்னோரு கை இன்னும் அவனது இடையை சுற்றிக் கொண்டிருந்தது.

பிரியாவுக்கு யாரை காணவும் பிடிக்கவில்லை, அவளுக்கு இப்போதைய தேவை தன்னை முழுமையாக நம்பும் கணவனின் அடைக்கலம் மட்டுமே.

பிரியாவின் உடல் நடுக்கமும் வியர்வையும் அவளது பயத்தின் அளவை காட்டியது. மின் விசிறி மட்டும் ஓடிக் கொண்டிருக்க அண்ணன் பார்வை ஏசி பக்கம் செல்வது கண்டு உடனே ஏசியை ஆன் செய்தாள் உத்ரா.

“கொஞ்சமா பால் குடி பிரியா” கெஞ்சலாக சொல்லிப் பார்த்தான் பாலன். அவனை விட்டு பிரிவதாக இல்லை பிரியா.

“அம்மா பிரியா… பாலா சொல்றான்ல, அந்த பாலை குடிடா” என்றார் மலையரசன்.

“அவளை கண்டிக்காம இன்னும் என்ன எல்லாரும் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க?” ஆதவன் கத்த பிரியாவின் அழுகை அதிகமானது.

தன் மாமாவை பார்த்த பாலன், “அவனை போடான்னு சொல்லக் கூடாதுன்னு ரொம்ப பொறுமையா இருக்கேன் மாமா” என பற்களை கடித்துக் கொண்டு கூறினான்.

“அவளை அடிச்சிட்டேன்னு கோவமா உங்களுக்கு? ஏற்கனவே என்னென்ன சொன்னாங்க அவளை? தனியா பார்க்க போயிருக்கா அவனை. தெரிஞ்சவங்க பார்த்தா என்ன சொல்வாங்க…” ஆதவன் பேசிக் கொண்டிருக்க தன் பக்கவாட்டில் இருந்த ஷோகேஸிலிருந்து கைக்கு அகப்பட்ட பீங்கான் ஜாடியை எடுத்த பாலன் தரையில் வீசியெறிந்தான். ஆதவன் காலை ஒட்டினார் போல விழுந்து உடைந்து தெறித்தது பீங்கான் ஜாடி.

“நான்…” ஆதவன் ஏதோ சொல்லப் போக, “வாய மூடுடா” சத்தம் அதிகம் இல்லா விட்டாலும் கடினமாக பாலன் சொன்ன தொனியில் ஆதவனின் வாய் தன்னால் அடை பட்டது.

மகனின் பக்கத்தில் போய் நின்று கொண்டார் பாலனை பார்த்து பயந்து போன துர்கா.

மகனுக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டையாகிப் போகுமோ என பயந்த மலையரசன், “ஆதவன் தப்பா சொல்லலைப்பா. வேற யாரும் நம்ம பிரியாவை அப்படி சொல்லிடக் கூடாதுன்னு…” முடிக்க முடியாமல் திணறினார்.

“இங்க எவனுக்கும் என் பொண்டாட்டியை தப்பா பேச தைரியம் கிடையாது. ஆனா அடிக்கிற அளவுக்கே இவனுக்கு தைரியம் இருக்கு. உங்க புள்ளைக்கு நெஞ்சுல அவ்ளோ உரம்னா என்கிட்ட வந்து கை இல்ல விரலை நீட்டி பார்க்க சொல்லுங்க. பொம்பளைங்கள அடிக்கிறவன் தைரியசாலி இல்ல,  மூடன். அழிவை நெருங்கி போயிட்டிருக்கிறவன்தான் பொண்ணுங்க மேல கை வைப்பான்” என்றான்.

“அண்ணா!” மன்றாடியது உத்ராவின் குரல்.

நிதானத்திற்கு வந்த பாலனின் சீரற்ற மூச்சுகள் மட்டுப்பட தொடங்க அங்கே சுவர்க்கடிகாரத்தின் முள் நகரும் ஒலி மட்டும் தனியாக கேட்டது.

ஆதவனிடம் வந்த உத்ரா, “நீங்க கிளம்புங்க, பிரியாவ நாங்க பார்த்துக்கிறோம்” என்றாள்.

தன் தங்கையின் பக்கம் திரும்பினான் ஆதவன். பாலனின் கோவம் கண்டு இவனுக்கே உள்ளே பதற எதற்கும் அசையாமல் இன்னும் கணவனை விட்டு அகலாமல் இருந்தாள் பிரியா.

ஆதவனுக்கு உள்ளே குன்றிப் போனது. கெளதம் பிரச்சனையில் எல்லாவற்றையும் சமாளித்தது பாலன்தான். ஏன் இப்படி செய்தாய் என இன்னும் ஒரு வார்த்தை மனைவியை கடியவில்லை. திருமணம் ஆன நாளில் இருந்து மனைவியை எப்படி தாங்குகிறான்?

வீட்டில் வைத்து தங்கையை திட்டிய போதே, “அவர் மட்டும்தான் என்னை கேள்வி கேட்க முடியும். அவர் என்னை தப்பா நினைக்க மாட்டார்” என நம்பிக்கையோடு அழுது கொண்டே பிரியா சொன்னது நினைவில் வந்தது.

தன் மனைவியை நேராக பார்த்த ஆதவன், “நான் செய்றது பிடிக்கலைன்னா கூட இருந்து சண்டை போடு. என்னை விட்டு வர்றதுன்னா நான் செத்து போனதும் வா” என சொல்லி அவள் கையை பிடித்து வாயில் நோக்கி நடந்தான்.

திகைத்தாலும் மறுத்து எதுவும் சொல்லவில்லை உத்ரா. கணவன் பிடியில் அவன் இழுப்புக்கு சென்றவள் அண்ணனை திரும்பிப் பார்த்து தலையசைத்து சென்று வருவதாக சொன்னாள்.

அதிர்ந்து போய் ஏதோ சொல்ல வாயெடுத்த பாலன், “ப்ளீஸ் ண்ணா, நீ பிரியாவ பாரு” என கெஞ்சலாக உத்ரா சொன்னதில் அமைதியானான்.

ஆதவன் குடும்பம் சென்று விட்டது. இன்னும் பாலனை விட்டு விலகியிருக்கவில்லை பிரியா.

அழுகையை நிறுத்த முயன்றாலும் அவளால் முடியவில்லை. நீண்ட கேவல் வந்தது அவளிடம். பிரியாவின் தலையை இன்னும் தன்னோடு அழுத்திக் கொண்ட பாலன் அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, “அழாதடி பிரியா” என்றான்.

Advertisement