Advertisement

மலையரசன், தாத்தா, பாட்டி மூவரும் ஹாலில் இருக்க அங்கு வந்த பாலன், “கொஞ்ச நாள் இருக்கட்டும் இங்க” பொதுவாக சொல்லி, “அவள சாப்பிட வை அம்மாச்சி. மாட்டேன்னு அடம் பிடிச்சா எனக்கு கால் பண்ணு, பார்த்துக்க” சோர்வாக சொன்னான்.

அவள் இங்கேதான் இருக்கப் போகிறாள் என்பதில் மூவரும் அதிர, “நான் வர்றேன்” என்ற பாலன் நிற்காமல் சென்று விட்டான்.

பிரியா கணவனோடு செல்லவில்லை என தெரியவும் துர்காவும் ஆதவனும் கூட வந்து விட்டனர்.

நானும் வருகிறேன், உடனே உத்ராவை இங்கு அழைத்து வந்து விடலாம் என மகனிடம் சொன்னார் மலையரசன். அமைதியாக விட்டிருந்தால் அவனே சில நாட்களில் உத்ராவை அழைக்க சென்றிருப்பான். இப்படி நெருக்கடி கொடுப்பதில் தன்னகங்காரம் எழுச்சி பெற்றவனாக முடியாது என மறுத்து மீண்டும் அறைக்கு சென்று விட்டான் ஆதவன்.

“அவளுக்காக என் பொண்ணு இங்க வந்து உட்கார்ந்திருக்கா, அவளுக்கும் இதே பாசம் இருந்தா அவளா இங்க வந்திருக்கணும். என் பொண்ணு ஒரு பைத்தியக்காரி, ரெண்டுக்கும் நல்ல இடமா அமையணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல, ஒண்ணுக்கு கூட உருப்பட்ட துணை கிடைக்கலியே…” துர்கா தன் புலம்பலை ஆரம்பித்து விட்டார்.

ரமணி தாத்தா வெறுப்பாக வெளியில் கிளம்பி விட்டார்.

“நாங்க செஞ்ச புண்ணியம் எங்க பேர புள்ளைங்களுக்கு கிடைச்சிருக்கு. இல்லைனா உன் வயித்துல பொறந்தும் ரெண்டுக்கும் தங்கமா இப்படி துணை அமைஞ்சிருப்பாங்களா?” எனக் கேட்டார் பாட்டி.

“ஆஹா நீங்கதான் மெச்சிக்கணும்! ஒருத்தி புருஷனை அடிப்பா, அவ அண்ணன் தங்கச்சிக்காக பொண்டாட்டிய இங்க இருடின்னு சொல்லிக் கொடுத்திட்டு நல்லவன் மாதிரி நடிச்சிட்டு போவான்” என்றார் துர்கா.

தன் மகனை பார்த்து கையெடுத்து கும்பிட்ட வள்ளிக்கண்ணு, “உன் வாழ்க்கைய சீரழிச்சிட்டேன்டா இந்த சிறுக்கிய உனக்கு கட்டி வச்சு. மன்னிச்சுடுடா அரசா!” என சொல்லி பேத்தியின் அறைக்கு எழுந்து சென்றார்.

துர்கா ஆ என பார்க்க சலிப்பு கொண்டவராக மலையரசனும் மகளிடம் சென்றார். துர்கா இன்னும் மிச்சமிருந்த தன் புலம்பலை கொட்டித் தீர்க்க மகனின் அறைக்கு செல்ல, “ம்மா மனசாட்சியோடு பேசும்மா. போ போய் தூங்கு, என்னை ஆள விடு” என எரிச்சலாக சொல்லி கண்களை மூடிக் கொண்டான் ஆதவன்.

பிரியா சாப்பிடவெல்லாம் அடம் செய்யவில்லை. சாப்பிடாமல் போனால் பாலனுக்கு தெரிய வரும் என தெரியும். நன்மையென நினைத்து தான் செய்யும் இந்த செயல் அவனை எவ்வளவு வருத்தப்படுத்தும் என அறிந்ததால் மேலும் துன்பம் கொடுக்க விளையாமல் சாப்பிட வந்தாள்.

சாப்பாட்டு தட்டிலிருந்து ஒரு கவளம் சாப்பாடு எடுத்தவள் ஒரு செல்ஃபி எடுத்து கணவனுக்கு அனுப்பி வைத்து, ‘நீங்களும் சாப்பிடுங்க’ என செய்தி அனுப்பி வைத்தாள்.

தங்கையிடம் விவரம் சொல்லிக் கொண்டிருந்த பாலன், “அவ உனக்காக பண்றான்னு அவளுக்காகன்னு நீயும் அங்க போய் நிக்காத. உங்க உங்க வாழ்க்கைய உங்களுக்காக வாழுங்க” என்றான்.

கைபேசி ஒலி கொடுக்க எடுத்து பார்த்தவன் தங்கையிடம் பிரியாவின் சாப்பிடும் போட்டோ காட்டி, “இவள என்னம்மா பண்றது?” எனக் கேட்டான்.

“அவ்ளோதான் ண்ணா அவ வளர்ச்சி. பாசக்காரிய ஒண்ணும் சொல்லவும் முடியாது. உன்னை விட்டுட்டு இருக்க முடியாம ரெண்டு நாள்ல எப்படி வந்து நிக்க போறான்னு பாரு” என்றாள் உத்ரா.

“எப்படி அடம் பண்றா? மூஞ்ச பார்த்தா ஒண்ணும் கோவமா சொல்ல முடியலை” சலித்தவன், “உன் புருஷனை நான் என்னம்மா பண்ணினேன்? இன்னும் ஒரு வார்த்தை நடந்தது பத்தி கேட்டுக்கல. என்னை பார்த்து மூஞ்சு திருப்பிக்கிறான் மா” கவலையாக சொன்னான்.

“ண்ணா, பசிக்குது வாண்ணா சாப்பிடலாம்” என கணவன் பற்றிய பேச்சை உத்ரா நாசூக்காக தடை செய்ய, “எல்லாரும் வளர்ந்து பெரியாள் ஆகிட்டீங்க ம்மா. நான்தான் சின்ன புள்ளைங்கனு தப்பா நினைச்சிட்டு இருக்கேன்” என்ற பாலனும் சாப்பிட சென்றான்.

மாலை போல பாலன் கடைகளை காண சென்று விட பிரியாவுக்கு அழைத்த உத்ரா அவளை நன்றாக திட்டினாள்.

“இது சம்பந்தமா பேசுறதா இருந்தா பேசாத, போ” என சிணுங்கினாள் பிரியா.

“இந்தா அம்மா பேசணுமாம் உன்கிட்ட” என சொல்லி பிரகதீஸ்வரியிடம் கொடுத்து விட்டாள் உத்ரா.

மாமியாரை பேசவே விடாமல், “சார்லிதான் இளைச்சு போய்ட்டான். என் வீட்டுக்காரர் எல்லாம் இளைச்சு போனா உங்க கூட கா விட்ருவேன்” என விளையாட்டாக ஆரம்பித்து, “நீங்களாவது என்னை புரிஞ்சுக்கணும் அத்தை. அவர் கூட இருக்க போறோம்னு ரொம்ப ஆசையா வந்தேன். உத்ரா இப்படி இருக்கும் போது என்னால மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? சப்போர்ட் பண்ணுங்க எனக்கு” என தீவிர தொனியில் பேச அவர் என்ன சொல்ல முடியும்?

“ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு தெரியலைடா. சீக்கிரம் சரியாகனும். நீ பார்த்துக்க” என சொல்லி வைத்து விட்டார்.

“உன் மருமக சரியான கேடி. எல்லாரையும் ஆஃப் பண்ணிடுறா. அண்ணன் பாவம்மா. எதையும் வாய் விட்டு சொல்ல மாட்டார். நேத்து நைட் கண்ணுல இருந்த ஒளி இன்னிக்கு இல்ல” கவலையாக சொன்னாள் உத்ரா.

“அவனை மீறிக்கிட்டு எல்லாரும் இஷ்டத்துக்கு செய்றீங்க, அவன் பாசத்தை தப்பா பயன்படுத்திக்கிறீங்க. அவன் கொந்தளிச்சா யாரும் தாங்க மாட்டீங்க, வேற என்னத்த சொல்ல?” மகளையும் மறைமுகமாக பிரகதீஸ்வரி தாக்கி பேச உத்ரா எழுந்து சென்று விட்டாள்.

இரண்டு நாட்கள் கூட பிரியா தாங்க மாட்டாள் என உத்ரா நினைத்திருக்க ஒரு வாரத்தை அம்மா வீட்டில் கழித்து விட்டாள் பிரியா.

பாலனுக்கு மனைவி மீது கோவமிருக்க அவளாக அழைத்து பேசிய போதும் உரையாடலை ஒரு நிமிடத்திற்கு மேல் நீட்டிக்கவில்லை. வைக்காதீங்க என அவள் சொன்னாலும், “உன் கூட போதுமான அளவு ஃபோன்ல குடும்பம் நடத்திட்டேன். எது பேசறதா இருந்தாலும் நேர்ல வா” என அழுத்தமாக சொல்ல பிரியாவால் அடுத்து பேச முடியவில்லை.

கணவனை பிரிந்து தங்கை தன் வீட்டில் இருந்தும் ஆதவனிடம் மாற்றம் இல்லை. தானாக பிறந்தவீடு வந்த மனைவியை தேடிக் கொண்டு வந்தானே பாலன். அவன் கொடுத்த தைரியம்.

தங்கையின் வாழ்வில் பிரச்சனை அவளால்தான், அவளை வைத்து என்னை இறங்கி வர செய்ய அவளுக்கு கூட வாய்ப்பு தர மாட்டேன் எனும் விதமாக அழுத்தமாக இருந்தான்.

தாத்தாவும் பாட்டியும் பிரியா மூலமாகவாவது உத்ரா இங்கு வந்து சேரட்டும் என இருந்து கொண்டனர்.

மகளிடம் கலகலப்பு மறைந்து போனது கண்டு துர்காவுக்கு கவலை ஏற்பட்டது. அன்றைய இரவு உணவின் போது சரியாக சாப்பிடாத மகளிடம் “போயேன்டி அங்க” என அவராகவே சொன்னார்.

“ஏம்மா கல்யாணம் ஆகிடுச்சுன்னா பொறந்த பொண்ணு இங்க வரக்கூடாதா. இங்க இருக்க மருமகளுக்கு சுமை ஆகிடுமா?” எனக் கேட்டாள் பிரியா.

“அருமை பெருமையா பெத்து வளர்த்தேன் டி உன்னை? அவ வந்து அப்படி சொல்வாளா? சொல்லட்டும், உன் அண்ணன் பார்த்திட்டு இருப்பானா? இல்ல நான்தான் ஒரு வார்த்தை உன்னை சொல்ல விடுவேனா? எவ்ளோ நாள் வேணும்னாலும் நீ இங்க இரு. நீதான் களை இல்லாம இருக்க, அதுக்காக சொன்னேன் டி” என்றார் துர்கா.

“அப்போ உன் பேர்ல தப்பு இல்ல. அத்தைய அப்படி நீ சொல்லும் போது கேட்டுக்காத அப்பா மேலேயும் உன்னை உண்டு இல்லைனு செய்யாத அப்பத்தா மேலேயும்தான் தப்பு” வெடுக் என சொல்லி விட்டு பிரியா உள்ளே செல்ல அசந்து விட்டார் துர்கா.

பாட்டி மெச்சுதலாக பேத்தி சென்ற திசையை பார்க்க, மலையரசன் மனைவியை முறைக்க துர்காவுக்கு யார் முகத்தையும் காண முடியவில்லை. அமைதியாக அடுக்களை புகுந்து கொண்டார்.

மருத்துவமனை பணி, தோழிகள் என ஏதோ சென்னையில் நேரம் ஓடி விட்டது. அப்படி பிஸியாக இருந்துமே கணவன் நினைவு வாட்டும். இங்கு ஒரு வேலையும் செய்யாமல் நிதம் பாலனின் நினைவில் தவித்து போனாள். ஆனாலும் இன்னும் கொஞ்சம் மன உறுதி ஒட்டிக் கொண்டிருக்க அதை இழுத்து பிடித்துக்கொண்டு அம்மா வீட்டில் எப்படியோ இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் இருந்த ஆதவன் ஏதோ அவசர கேஸ் என அழைப்பு வரவும் மருத்துவமனைக்கு சென்றான். பிரியா வீட்டருகில் இருந்த கோயிலுக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்றிருந்தாள்.

Advertisement