Advertisement

ஜீவ தீபங்கள் -23

அத்தியாயம் -23

மகளை கண்டதும் துர்கா மகிழ்ந்து போனார். தாத்தாவும் பாட்டியும் நலன் விசாரித்தனர்.

மதிய உணவுக்காக வந்திருந்த ஆதவனும் தங்கையை கண்டு விட்டு நலன் விசாரித்து, “கொஞ்ச நாள் ஃபிரீயா இரு. அப்புறம் நான் இருக்க ஹாஸ்பிடல்லேயே பிராக்டீஸ் வா” என யோசனை சொன்னான்.

“பாலன் கூட சேர்ந்து வந்திருக்கலாம்ல டா?” எனக் கேட்டார் பாட்டி.

பிரியா ஒன்றும் சொல்லாமல் இருக்க, “என்னடி அவளா போய் அங்க போய் உட்கார்ந்ததுக்கு உன்னை இங்க அனுப்பிட்டாங்களா?” பயமும் கோவமுமாக கேட்டார் துர்கா.

ஆதவனும் சந்தேகத்தோடு தங்கையை பார்க்க, “என் புருஷனும் என் மாமியாரும் அவ்ளோ சீப் கிடையாது. அவங்க அனுப்ப மாட்டாங்கன்னுதான் நானே வந்திட்டேன்” என்றாள்.

என்ன சொல்கிறாள் இவள் என அனைவரும் பார்க்க உணவு எடுத்துக் கொண்டு வந்தார் மலையரசன்.

இன்று வீட்டில் சமைக்கவில்லை. முன்னரே மாமனிடம் பாலன் சொல்லியிருந்தான். அனைவருக்கும் அங்கிருந்துதான் சாப்பிடு.

“என்ன பிரியா இங்க இருக்க? நீ சாப்பிடாம காத்துகிட்டு இருப்பேன்னு வேக வேகமா கிளம்பி போனான் பாலா” என்றார் மலையரசன்.

“எடி அவனுக்கு தெரியாதா நீ இங்க வந்தது?” எனக் கேட்டார் பாட்டி.

“பிரியா என்ன? பாலன்கிட்ட சொல்லிட்டு வரலையா நீ?” எனக் கேட்டான் ஆதவன்.

அனைவரும் பிரியாவின் முகத்தை பார்க்க, “இல்ல, அவர் வீட்டுக்கு வந்ததும் தெரிஞ்சுப்பார்” என்றாள்.

முதலில் அங்கு கிளம்பு என பாட்டி சொல்ல மற்றவர்களுக்கும் அதுதான் எண்ணம். மகளை புறப்பட சொல்லி மலையரசன் வற்புறுத்திக் கொண்டிருக்க, “முடியாதுப்பா. உத்ரா ஏன் அங்க போயிட்டா? அவளுக்காக யாரும் கவலை பட்டீங்களா? இல்லைதானே?” எனக் கோவமாக கேட்டாள்.

“யாரும் போக சொல்லலை அவளை, அவளா போனா. நான் கூப்பிட்டும் வரலை அவ” என ஆதவன் சொல்ல இவன் சென்று எப்போது கூப்பிட்டான் என பிரியாவை தவிர மற்றவர்கள் நினைக்க, “நீ கூப்பிட்டும் வரலைனா என்ன நினைச்சிட்டு இருக்காளாம்?” குதர்க்கமாக கேட்டார் துர்கா.

பிரியாவுக்கு பாலனிடமிருந்து அழைப்பு வர பேசியவள் இறுதியாக “ப்ச் கோவம்தான். உங்க மேல இல்ல. உத்ராவை அண்ணன் வந்து அழைச்சிட்டு வரட்டும். அதுவரைக்கும் நான் அங்க வர மாட்டேன்” என சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

பிரியா செய்வது சரி கிடையாது என பெரியவர்கள் எடுத்து சொல்லிக் கொண்டிருக்க அவள் கேட்பதாக இல்லை.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ? இதான் சாக்குன்னு உன்னை இங்கேயே விட்டுட்டு என்னை அவர் கால்ல விழ வைக்கணும்னு பார்ப்பார். கிளம்பு இங்கேர்ந்து” பிரியாவின் கையை முரட்டுத் தனமாக இழுத்துச் செல்ல பார்த்தான் ஆதவன்.

அண்ணனின் கையை உதறி விட்டவள் அப்பாவிடம் சென்று, “நான் அங்க போ மாட்டேன் ப்பா. இங்கேர்ந்து அண்ணன் அனுப்பினா வேற எங்கேயாது போய்டுவேன்” என்றாள்.

“ரெண்டு போட்டேனா தெரியும்” கை ஓங்கிக் கொண்டு வந்தான் ஆதவன்.

மலையரசன் திட்டுவதற்குள் பிரியாவை தன்னிடம் இழுத்து நிறுத்திக் கொண்டான் பாலன். ஆமாம் மனைவி வர மாட்டேன் எனவும் இங்கேயே வந்து விட்டான்.

ஆதவனை பாலன் கோவமாக பார்க்க அவன் கையை கீழிறக்கி, “வாங்க” என கடைமைக்காக அழைத்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

“வா” மோட்டுவளை பார்த்து கூறிய துர்கா உள்ளே சென்று விட்டார்.

“வா பாலா, அழைச்சிட்டு போ இவளை. கிறுக்குத்தனமா என்னென்னமோ சொல்றா” என்றார் மலையரசன்.

பிரியாவின் கைபிடித்துக் கொண்டு வாயிலை நோக்கி பாலன் நடக்க, “இல்ல நான் வரலை, விடுங்க” என்றவள் கையை உருவிக் கொண்டு அடமாக பாட்டி பக்கம் போய் நின்று கொண்டாள்.

மாமா கொண்டு வந்த சாப்பாடு அப்படியே இருப்பதை கண்டவன், “சாப்பிடுங்க எல்லாரும்” என பொதுவாக சொல்லி மனைவியை இழுத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்றான்.

எல்லோரும் பார்த்திருக்க கதவு அடைப்பட்டு விட்டது.

நிம்மதியாக சுவாசித்த பாட்டி, “அவன் பார்த்துக்குவான். பிரியாவுக்கு அவ புருஷன் வீட்லதான் சாப்பாடு, வாங்க நாம சாப்பிடலாம்” என்றார்.

அனைவருக்குமே அப்படித்தான் தோன்றியது. பிரியா சிறு பிள்ளைத் தனமாக ஏதாவது செய்வது வாடிக்கைத்தான், அப்படி ஏதோ நடக்கிறாள். பாலனிடம் அவளது அடம் எல்லாம் செல்லுபடியாகாது என கருதி சாப்பிட சென்றனர்.

பாலனுக்கு முதுகு காண்பித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் பிரியா.

“என்னை கோவ படுத்தி பார்க்காத பிரியா. உத்ரா அங்க இருக்கிறதுக்கும் நீ இங்க வந்திருக்கிறதுக்கும் என்ன கனெக்ஷன்? இதை மாதிரி எல்லாம் செஞ்சு உத்ரா லைஃப் சரி பண்ண முடியாது. ஒருத்தர் மேல அன்பு தானா வரணும். உன் அண்ணனை கூப்பிட்டு வச்சு மிரட்டி உத்ராவை அனுப்பி வைக்க தெரியாமத்தான் அமைதியா இருக்கேனா?” எனக் கேட்டான்.

முகத்தை மட்டும் திருப்பி, “அண்ணன் பத்தி சரியா தெரியலை உங்களுக்கு? உத்ராவ பிடிக்காமலா ஸ்டோருக்கு நேர்ல போய் வான்னு கூப்பிட்டிருக்கு?” என்றாள்.

பாலன் புரியாமல் பார்க்க விளக்கியவள், “உத்ராவை நீங்க வந்து கூட்டிட்டு போய்ட்டீங்கனு உங்க மேல கோவத்துல இருக்கு. கல்யாணம் முன்னாடி நடந்த விஷயம் வேற உங்களுக்கு தெரிஞ்சு போச்சா? உங்களை ஃபேஸ் பண்ணவும் தயக்கம் வந்திருக்கும். எல்லாத்தையும் விட ‘நானா இறங்கி போறதா?’ ன்னு ஈகோ திமிரு எல்லாம் பொங்கி வழியுது. நான் இங்க இருந்தா மனசு மாறி உத்ராவை நம்ம வீட்டுக்கே வந்து அழைச்சிக்கும்” என்றாள்.

“ரொம்ப நல்லா தெரிஞ்சு வச்சிருக்க உன் அண்ணனை. ஆனா அப்படி ஒண்ணும் உன் அண்ணன் என் தங்கச்சிய தேடி வர வேணாம். என் தங்கச்சி வேணும்னு மனசார நினைச்சு வரட்டும். இப்பன்னு இல்ல எப்பவுமே அவங்க சண்டையில உனக்கு சம்பந்தம் இல்ல. நீ அவன் தங்கச்சி, உத்ரா என் தங்கச்சி அதுக்காக…” நிறுத்தியவன் சில நொடி இடைவெளிக்கு பின், “புருஷன் பொண்டாட்டி உறவு வேற பிரியா… புரியாம பண்ணக்கூடாது. வா என்னோட” என்றான்.

“புருஷன் கஷ்டம் பொண்டாட்டிக்கும்தான். எவ்வளவதான் சமாளிப்பீங்க தனியா? என்னால முடிஞ்சதை நானும் செய்றேன்”

“நல்லா செய்ற” புன்னகைத்தவன், “என் கூட மட்டும் இரு, நான் சமாளிச்சுக்கிறேன்” என்றான்.

முகத்தை திருப்பிக் கொண்டவள் “சும்மா வர மாட்டேன்னு சொல்ல வைக்காதீங்க. உங்களை பார்த்து அப்படி சொல்ல முடியலை என்னால” என்றவள் உடனே கைகளுக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

அவள் பக்கத்தில் வந்தவன், “அவசரமா முடிவெடுத்து கஷ்ட படாத, வந்திடும்மா” என்றான்.

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள், “அண்ணனை விடுங்க, அம்மா உத்ராவை ஏதாவது சொல்லிட்டே இருக்காங்கதானே? அவங்களுக்கு பயம் வரட்டும். இனி உத்ரா இங்க வந்ததுக்கு அப்புறம் அவ நிம்மதியா இருக்கணும். நீங்க கிளம்புங்க” என்றாள்.

“ஆயிரம் காரணம் சொல்லு பிரியா. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். இது உன் பொறந்த வீடு, சுமூகமான முறையில எப்ப வேணா வரலாம் எவ்ளோ நாள் வேணா தங்கலாம். ஆனா உத்ராக்காகன்னு சொல்லிட்டு இருக்க கூடாது”

“உங்களை பொறுத்த வரை நான் அம்மா வீட்ல தங்க வந்ததா இருக்கட்டும். நான் வரலை, ப்ளீஸ் விடுங்க என்னை”

பாலன் அவள் கை பிடிக்க போக தெரிந்து கொண்டவள் தன்னை நோக்கி வந்த கணவனின் கையை தள்ளி விட்டு, “கிட்ட வராதீங்க, அவ்ளோ உறுதி இல்ல என்கிட்ட. என்னை அழ வைக்காதீங்க” என சொல்லி அழுதாள்.

“ஏன் இந்த வேதனை பிரியா? என்னை விட்டுட்டு உன்னால இருக்க முடியாதுடாம்மா” என கனிந்த குரலில் சொன்னான்.

“தெரியும், ஆனா இருந்துப்பேன். உத்ராவுக்காக” என்றவள் தேம்பலோடு, “உங்களுக்காக” என்க, அவள் கண்களில் இருந்து அடுத்த சுற்று கண்ணீர் விழ ஆரம்பித்தது.

இவளுடையது சிறு குழந்தையின் அடம் போலிருந்தது. இது சரியில்லை என தானாக புரியும் வரை தெளிவடையாத நிறைவு பெறாத அடம். எதுவும் சொல்ல முடியாமல் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான் பாலன்.

இன்னும் சற்று நேரத்தில் சென்று விடப் போகிறான் என தெரிந்து விசும்பிக் கொண்டிருந்தாள் பிரியா.

வலுக்கட்டாயமாக தூக்கி சென்றால் யாரும் கேட்க போவதில்லை, பிரியாவாலும் அவனை தடுக்க முடியாது. ஆனால் அப்படியெல்லாம் செய்ய அவனுக்கு விருப்பமில்லை.

ஆதவனும் துர்காவும் சாப்பிட்டு முடித்து அறைக்கு சென்று விட்டனர். ஆனாலும் பிரியா பாலனோடு செல்கிறாளா என கவனத்தை வெளியில்தான் வைத்திருந்தனர்.

Advertisement