Advertisement

அத்தியாயம் -22(2)

பிரியாவுக்கு படிப்பு முடிகிறது. அவளுக்கு அப்பாடா என இருந்தது. படிப்பை முடித்து விட்டோம், ஊருக்கு செல்லப் போகிறோம் என்பதை விட கணவனோடு இருக்க போகிறோம் என்பதுதான் மனதில் நிறைந்திருந்தது, மனதை நிறைத்திருந்தது.

பாலன் கட்டும் ஜவுளிக்கடை கட்டிடத்தின் மேற்கூறை அடுத்த நாள்தான் போடப்பட இருந்தது. அதனை முன்னிட்டு வேலை செய்பவர்களுக்கு கடை ஊழியர்களுக்கு என அசைவ விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. பாலனுக்கு இங்கு இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

இரவில் சொன்னால் உறங்க மாட்டாள் என்பதால் காலையில் பேசும் போது, “இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்க பிரியா, நாளைக்கு நைட் நானே புறப்பட்டு வர்றேன்” என்றான் பாலன்.

“அந்தளவுக்கு எனக்கு பொறுமை இருக்குன்னு நினைக்குறீங்களா? ரொம்ப பேட் நீங்க” கலங்கி விட்டது அவளின் குரல்.

பாலனுக்கும் உருகிப் போக, “டிரைவர் போட்டு கார் அனுப்புறேன், தெரிஞ்ச பையன்தான். நான்தான் வரணும்னு அடம் பண்ணாத” என்றான்.

“நான் உங்களுக்கு தெரியாம பஸ்ல வரலாம்னு இருந்தேன், அதுக்கு இது பெட்டர்”

“அப்படி என்னதான் கிறுக்கோ உனக்கு?”

“வந்து காட்டுறேன், உங்களுக்கும் இதே கிறுக்க புடிக்க வைக்கிறேன்” என சொல்லி வைத்தாள் பிரியா.

அத்தனை வேலை பளுவுக்கும் இடையில் நாளை பிரியா வந்து விடுவாள் என்ற நினைவு பாலனுக்கு இதம் கொடுத்தது.

திருமணமாகி இனிதான் சேர்ந்து இருக்க போகிறார்கள், இரு மாத காலமாக நேரில் பார்த்துக் கொள்ளவில்லை. அந்த இருபத்து நான்கு மணி நேரமும் சுகமான எதிர்பார்ப்பை சுமந்து கொண்டே மிக மெதுவாக நகர்ந்தது.

ஆரவாரமாக தன் புகுந்த வீடு வந்திறங்கினாள் வள்ளிப்பிரியா.

சார்லியை கொஞ்சி மாமியாரிடம் “சார்லி நூறு கிராம் இளைச்சு போயிட்டான், கவனிப்பு சரியில்லை” என வம்பு பேசிக் கொண்டே கணவனுக்காக கண்களை அலை பாய விட்டாள். வந்ததோ உத்ரா.

கடை கட்டுமிடத்தில் எதுவும் பூஜையாக இருக்கும், அதற்கென வந்திருக்கிறாள் போல உத்ரா என இவளாகவே நினைத்துக் கொண்டாள்.

லக்கேஜ் எல்லாம் இறக்கி வைத்த டிரைவர் சொல்லிக் கொண்டு புறப்பட, “எங்க உங்க ண்ணா? கூப்பிடதான் வரலை, வெளில கூட வர மாட்டாரா?” கேட்டுக் கொண்டே உள்ளே சென்ற பிரியாவின் கையை பிடித்த உத்ரா, “அண்ணன் இல்ல, விடியறதுக்கு முன்னாடியே கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கிற இடம் போயிட்டார்” என்றாள்.

ஏமாற்றம் பிரியாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிய, “இதே ஊர்லதான் இருக்கார்டி, மதியம் வந்திடுவார்” என சமாதானம் செய்தாள் உத்ரா.

“வா நாமளும் அங்க போலாம்” என்றாள் பிரியா.

“நமக்கென்னடி அண்ணி வேலை அங்க? பிரியாணி இங்கேயே கொண்டு வந்து தருவாங்க. நீ வர்றதால நான் இன்னிக்கு ஸ்டோர் போகல. குளிச்சிட்டு வந்து சாப்பிடு, அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து உன் திங்ஸ் எல்லாம் அரேஞ் பண்ணிடலாம்”

“எனக்காகவா இங்க வந்த! பரவாயில்ல, அண்ணி மேல உனக்கு பாசம் இருக்கு. அடுக்கி வைக்கிறதெல்லாம் அப்புறம் செய்யலாம். நீ ரெடி ஆகு, நாம போலாம் அங்க. அவர் தனியா டென்ஷனா நிப்பார், கூட போய் நின்னு கூல் பண்ணுவோம்” என்ற பிரியா உள்ளே ஓடி செல்ல தன் அம்மாவை பாவமாக பார்த்தாள் உத்ரா.

“அவ மட்டும் போனா திட்டுவான், அதான் உன்னை ஜோடி சேர்க்குறா, போயிட்டுதான் வாயேன்” என்றார் பிரகதீஸ்வரி.

“அம்மா இவளுக்கு இவ ஹஸ்பண்ட உடனே பார்க்கணும். அறுந்த வாலு எனக்கும் அண்ணாகிட்ட திட்டு வாங்கித் தர பார்க்குது” என்றாலும் கிளம்புவதற்காக உள்ளே சென்றாள் உத்ரா.

அந்த இடமே மக்கள் கூட்டம் நிறைந்த இடம். இன்று இன்னும் பர பரப்பாக காணப் பட்டது. மழை வரும் போல வானம் இருட்டி காணப் பட கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தான் பாலன்.

“நான் வானிலை அறிக்கை பார்த்திட்டேன், இன்னிக்கு மழை கிடையாது சார், நல்ல படியா முடிச்சிடலாம்” என தெம்பாக பேசினார் இன்ஜினீயர்.

உத்ராவுக்கு காரோட்ட தெரியும் என்பதால் பிரியாவோடு காரில்தான் வந்தனர். உத்ரா இறங்க கூட காத்திராமல் வேகமாக இறங்கி ஓடி சென்றாள் பிரியா.

பாலன் கைபேசியில் தன் தம்பியிடம், “வேலை வேகமாதான் நடக்குதுடா, மழை எப்ப வருமோன்னு பயம் காட்டிட்டு இருக்கு, நல்ல படியா முடியணும்னு தியாகேசனுக்குதான் வேண்டியிருக்கேன், பார்ப்போம்” என பேசிக் கொண்டிருக்க அவன் பின்னாலிருந்து கண்களை மூடினாள் பிரியா.

சட்டென கோவமாக அவள் கையை பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தியவன், “அப்புறம் பேசுறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு பிரியாவை முறைத்தான்.

அவள் முகம் சுண்டிப் போக, “பொது இடத்துல எப்படி நடக்கன்னு தெரியாதா உனக்கு?” என அவன் காய அவளது கண்கள் கலங்கி விட்டன.

பாலனால் அவளை அப்படி பார்க்கவே முடியவில்லை. சற்று முன்புதான் வந்தடைந்திருப்பாள் என தெரியும், தன்னை காணும் ஆவலில்தான் களைப்பையும் பொருள் செய்யாமல் ஓடி வந்திருக்கிறாள் என பாலனுக்கு யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லையே.

‘அடடா கண்ணு கலங்கிப் போச்சே’ தன்னையே கடிந்தவன், “ப்ச் அழுதிடாத” என மன்றாடும் குரலில் சொன்னான்.

பிரியா முறைக்க, “பாரு இன்னும் கட்டிடம் மேல மூடி முடிக்கல. மழை வரும் போல இருக்கு. ரொம்ப டென்ஷன்ல இருக்கேன். உன் அழுகைய பார்த்தா மொத்தமா ஆஃப் ஆகிடுவேன்” என கெஞ்சலாக சொன்னான்.

பட் என புன்னகை செய்தவள், “அதெல்லாம் மழை வராது. கடவுள்கிட்ட சொல்லிட்டு டவுட் பட்டுட்டே இருக்க கூடாது. முழுசா நம்பணும்” என சொல்லி அவன் கையை பிடித்தாள்.

பாலன் நாசூக்காக தன் கையை விலக்க முனைய, “ரெண்டு மாசம் ஆச்சு நேர்ல பார்த்து, ரொம்ப பண்ணுனீங்க கட்டி பிடிச்சிடுவேன்” என சின்ன குரலில் அவள் சொல்ல நொடியில் பாலனின் மனநிலை எல்லாம் மாறி அவன் முகத்தில் குப் என வெட்கம் வந்து அப்பிக் கொண்டது.

கொஞ்சம் இளைத்து கண்கள் சோர்ந்து தெரிந்தாலும் அவற்றை மீறிய உற்சாக குரலில், “நான் வந்திட்டேன். இனிமே உங்க கூடத்தான்” என்றாள்.

பாலனும் அவளது கையை லேசாக அழுத்தி, “அன்னம் தண்ணி ஆகாரம் ஏதுமில்லாம படிச்சியோ?” என வாஞ்சையாக கேட்டான்.

“ம்ம்ம்…” வேகமாக ஆம் என தலையசைத்தவள், “ஆனா படிப்புக்காக அப்படி இல்ல. என் அத்தான் நினைப்புல எதுவும் இறங்கல” என சொல்லி கண்கள் சிமிட்டி சிரித்தாள். கிண்டல் போல் தெரிந்தாலும் ஆழத்தில் ஏக்கம் இழைந்தோடியது.

தணலில்தான் இரும்பு இளகுமா? அன்பில் கூட இளகும் என பாலனை பார்த்தவர்கள் அறிந்து கொள்ளலாம். என்னிடம் வந்து விட்டாள் என்ற நிறைவு கண்களில் தெரிய அவள் முன் மொத்தமாக இளகிப் போய் நின்றிருந்தான்.

“அண்ணா கார் எங்க பார்க் பண்ணன்னு தெரியலை, ரோட்டோரமாவே நிறுத்திட்டு வந்திருக்கேன், இவ என்னை விட்டுட்டு ஓடி வந்திட்டா” என சொல்லிக் கொண்டே வந்தாள் உத்ரா.

மனைவியின் கையை விட்டு ஆள் ஒருவனை அழைத்தான். உத்ராவிடமிருந்து கார் சாவி வாங்கி அவனிடம் கொடுத்து காரை பார்க் செய்ய அனுப்பி வைத்தவன், “நீதான் அழைச்சிட்டு வந்ததா இவளை?” என தங்கையிடம் கேட்டான்.

“இல்லையே அவதான் என்னை அழைச்சிட்டு வந்தா” என்றாள் உத்ரா.

பெண்கள் இருவரும் வம்பு செய்து கொண்டிருக்க மலையரசன் இவர்களை கவனித்து விட்டு வந்தவர் மகளிடம் நலம் விசாரித்தார்.

“அண்ணன் வருண் எல்லாம் வரலையா ப்பா?” எனக் கேட்டாள் பிரியா.

“வருணை அலைய வைக்க வேணாம்னு பாலாதான் வர சொல்லலை. ஆதவனை பாலா கூப்பிட்டான் தான், அவனுக்கு முக்கியமான வேலையாம், வந்தே ஆகணுமான்னு கேட்டான், போடான்னு சொல்லிட்டேன். நீ வந்துட்டீல்ல, சரி பண்ணி விடு எல்லாத்தையும்” என்றார்.

பிரியா குழப்பமாக பார்க்க, “போங்க ரெண்டு பேரும் ஓரமா இருங்க. முடிஞ்சதும் கிளம்பிடலாம்” என சொல்லி அவர்களை அமர வைத்து விட்டு நகர்ந்தான் பாலன்.

என்ன செய்வதென தெரியாமல் தோழிகள் இருவரும் பேச ஆரம்பித்தனர். உத்ராவிடமிருந்து விஷயத்தை தெரிந்து கொண்ட பிரியாவுக்கு ஊருக்கு வந்த மகிழ்ச்சியே வடிந்து போய் விட்டது.

“இடையில என்னை கூப்பிட ஸ்டோர் வந்தார் உன் அண்ணன், இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் அண்ணாகிட்ட சொல்லி அழைச்சிட்டு போனாதானே நல்லா இருக்கும்? வருண் மேல கோவப்படுறதுல ஓகே, பாலன் அண்ணா என்ன பண்ணினார்? இப்போ வரை உன் அண்ணனை எதுவும் கேட்டுக்கல பாலாண்ணா” வருத்தமாக சொன்னாள் உத்ரா.

“நீ ஃபீல் பண்ணாத” என்றாள் பிரியா.

“என்னை விட சுத்தி உள்ளவங்க ஃபீல் பன்றாங்க பிரியா. சில சமயம் உன் அண்ணனை ஸ்டோருக்கு வர சொல்லி போய்டலாமான்னு கூட தோணுது, அண்ணன் சொல்லிக்கலைனாலும் உள்ளுக்குள்ள கஷ்ட படுறார்” என்ற உத்ரா சிறு இடைவெளி கொடுத்து, “நீ வந்தாவது அண்ணன் சந்தோஷமா இருக்கட்டும்” என முடித்தாள்.

பிரியா எதுவும் சொல்லாமல் யோசனையாகவே இருந்தாள்.

நல்ல படியாக எல்லாம் முடிய வானம் தெளிவடைந்து மிதமான வெயில் படர மனைவியை தேடினான் பாலன். அவனையே பார்த்திருந்தவள் புருவங்கள் உயர்த்தி ‘நான் சொன்னேன்ல?’ என மௌன மொழியில் கேட்க சிரித்தான்.

பிரியாவுக்கு கணவனை காண என்னவோ போலிருந்தது. சிறு வயதிலிருந்து எத்தனை விதமான வேதனைகள்? அவருக்கென எந்த சந்தோஷமும் இல்லை, அவர் குடும்பத்தின் மகிழ்ச்சிதான் அவருடையது. அவரேதான் எல்லாம் பார்க்க வேண்டுமா? அனைவரையும் இவர்தான் தாங்க வேண்டுமா? கணவனுக்காக பிரியாவின் மனதில் இரக்கம் சுரந்தது.

அம்மா, அண்ணன் அவர்களை கண்டிக்காத அப்பா என அனைவர் மீதும் கோவம் வந்தது. உத்ராவை நினைத்தும் எத்தகைய மன உளைச்சளில் பாலன் இருக்கக் கூடும் என்பதை நினைத்தும் வேதனை படர்ந்தது.

பிரியாவின் பிறந்த வீட்டினரின் குணம் பற்றி இவளை விட வேறு யாருக்கு நன்றாக தெரியப்போகிறது? உத்ராவின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.

பாலன் பிஸியாக இருக்க இரு பெண்களும் காரில் கிளம்பினார்கள்.

“என்னை அம்மா வீட்ல விடு” என்றாள் பிரியா.

“நாளைக்கு போக கூடாதாடி? உனக்காகத்தான் நான் வீட்ல இருக்கேன் இன்னிக்கு” என கெஞ்சலாக கேட்டாள் உத்ரா.

“ரொம்ப முக்கியம் உத்ரா, நான் போயே ஆகணும்” என பிரியா சொல்ல சரி என அவளும் இறக்கி விட்டு அண்ணன் வீடு வந்து விட்டாள்.

பாலன் மதிய உணவு எடுத்துக் கொண்டு வந்தவன் ஆவலாக பிரியாவை தேட விஷயத்தை சொன்னாள் உத்ரா.

பிரியாவுக்கு அழைத்த பாலன், “என்ன அவசரம் உனக்கு? மதியம் வருவேன்னு தெரியாதா?” எனக் கேட்டான்.

“பேசாதீங்க, என்கிட்ட எதுவும் சொல்லலை நீங்க”

“அரை நாள் ரெண்டு பொம்பள புள்ளைங்கள தனியா விட்டா அவ்ளோ கதையவும் பேசி முடிச்சிடுவீங்களா?”

“என்னங்க!” அதட்டினாள் பிரியா.

“அதை அப்புறம் பேசிக்கலாம். இன்னிக்கு இதுக்கு மேல கடைக்கு கூட போகல நான், வீட்லதான் இருப்பேன், உனக்காகத்தான். இப்போ வெளில வந்து நில்லு, நான் வர்றேன் கூப்பிட. சேர்ந்து சாப்பிடலாம்”

“இல்ல வராதீங்க. நான் வர மாட்டேன்”

“என்ன திடீர் கோவம்? காலையில அதட்டினதுக்கா? நேர்ல வந்து கோவப்படு”

“ப்ச் கோவம்தான். உங்க மேல இல்ல. உத்ராவை அண்ணன் வந்து அழைச்சிட்டு வரட்டும். அதுவரைக்கும் நான் அங்க வர மாட்டேன்” என்ற பிரியா அழைப்பை துண்டித்து விட மனைவி மீது கோவம் வரப் பெற்றவனாக நின்றிருந்தான் சிவபாலன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement