Advertisement

ஜீவ தீபங்கள் -22

அத்தியாயம் -22(1)

‘யார் நீ விரும்பும் பெண்?’ என பாலன் கேட்டிருக்க பதில் சொல்லாமல் நின்றிருந்தான் வருண்.

“கல்யாணம் பண்ணிக்க டா. அப்பவாவது உனக்கு பக்குவம் பொறுமை எல்லாம் வருதா பார்க்கலாம். என்ன?” என்றான் பாலன்.

“அறிவை விட்டுட்ட ண்ணா?” வருத்தமான சூழலை இலகுவாக்கும் பொருட்டு கேட்டாள் உத்ரா.

“வர்ற பொண்ணு அறிவா இருந்தா போதும் மா” என பாலனும் சற்றே சிரித்த முகமாக சொல்லி தம்பியை பார்த்து, “சொல்லுடா” என்றான்.

“என்ன ண்ணா நீ? உத்ரா பிரச்சனை சரி ஆகட்டும். இப்போ வேணாம்”

“அட இப்போ வேணாமாம்ல” நக்கலாக சொன்ன பாலன், “பொண்ணு யாருன்னு விவரத்த சொல்லுடா” என கேட்டுக் கொண்டிருக்க வருணின் கைபேசி அழைத்தது.

 “கொஞ்ச நாள் ஆகட்டும், நானே சொல்றேன் ண்ணா” என்றவன் அழைப்பை ஏற்றுக்கொண்டு வெளியில் சென்று விட்டான்.

“ரோதனை பண்றான் மா. அப்படி என்ன அது யாருன்னு சொல்லாம என்கிட்ட மறைக்கிறான்? உனக்கு எதுவும் தெரியுமா?” தங்கையிடம் கேட்டான்.

“கண்டிப்பா லவ்தான் ண்ணா. யாருன்னு எனக்கும் தெரியாது. இந்த லவ் ஏன்தான் வருதோ?” என்றாள்.

தங்கையை கனிவாக பார்த்தவன், “ஆதவன் ஓகேதானே? ஏன் அவனை கல்யாணம் பண்ணினோம்னு நீ நினைக்கிறியா? அண்ணன் அவனை புரிஞ்சுக்காம கல்யாணம் பண்ணி வச்சிட்டேனா? என் மேல கோவமா?” எனக் கேட்டான்.

அண்ணனின் கன்னம் தாங்கியவள் “நான் ஆசைப் பட்ட வாழ்க்கைங்கிறது விட என் அண்ணன் பண்ணி வச்ச கல்யாணம் இது. தோத்து போயிடாது ண்ணா” என நம்பிக்கையாக சொன்னாள்.

“ம்ம்… சரி போ, அம்மாகிட்ட எதுவும் சொல்லி பயமுறுத்த கூடாது. இவன் ஏதோ பெருசா இழுத்து விட போறான்னு தோணுது. சாயம் வெளுத்து வரட்டும், அப்போ நல்லா வெளுத்து விடுறேன்” என்ற அண்ணனை பார்த்து உத்ரா சிரிக்க பாலனின் கைபேசி அழைத்தது.

அண்ணன் கைபேசி எடுத்த உத்ரா, “எங்க அண்ணி கூப்பிடுறாங்க ண்ணா” என சொல்ல, “ஹேய் நீ எடுத்து பேசிடாத. அவளை எல்லாம் சமாளிக்க முடியாது என்னால, கொடு என்கிட்ட” என்றான் பாலன்.

“ஹ்ம்ம்… எங்கண்ணனையே அலற விடுறாங்களே அண்ணி!” கிண்டலாக சொல்லி கைபேசியை கொடுத்தாள்.

அழைப்பை ஏற்ற உடன், அவளுக்கு பதிலாக “இல்ல தூங்கல” “மறக்கல ம்மா” “கணக்கு பார்த்திட்டு இருந்தேன்” “இல்ல பேசலாம்னு நான் போன் எடுத்தேன் அதுக்குள்ள நீ அடிச்சிட்ட” “ஹான்… ரிங் போகும் போது உன் பேர் ஸ்கீரின்ல தெரியுதில்ல அதை பார்த்திட்டே ஃபர்ஸ்ட் ரிங்ல எடுக்கல” என தொடர்ந்து சமாளித்து வந்தவன் “போதும் பிரியா!” என அதட்டினான்.

அறையை விட்டு சென்று கொண்டிருந்த உத்ராவின் காதில் அண்ணனின் அதட்டலான பிரியா என்ற அழைப்பு மாறி இப்போது குழைவான பிரியா வெட்கமான பிரியா என வித விதமான பாவங்களில் ஒலிக்க சிரிப்பு வந்தது.

தன் தோழியை பற்றி நன்கு அறிந்தவள் ஆகிற்றே. “சேட்டை சேட்டை, என் அண்ணனை ஒரு வழி பண்றா” செல்லமாக அலுத்துக் கொண்டாள் உத்ரா.

இரண்டு நாட்கள் அமைதியாகவே இருந்தான் வருண். ஞாயிறு மாலையில் அவன் கிளம்பும் போது காரை வெளியில் நிறுத்தினான் பாலன்.

“இப்ப வேணாம், இந்த பைக்க என்ன ண்ணா பண்றது?” எனக் கேட்டான் வருண்.

“தம்பி… என்னதான் நீ என்கிட்ட மறைச்சாலும் ஒரு நாள் சொல்லித்தான் ஆகணும். சீக்கிரம் உன் கல்யாணம் நடக்க போகுது, வர்ற பொண்ணையும் பைக்ல வச்சு அழைச்சிட்டு வந்து சிரம படுத்திட்டு இருக்க போறியா? இனி தேவைப்படும்லடா? இப்போதைக்கு இந்த கார் வச்சுக்க. கல்யாணத்துக்கப்புறம் புதுக் கார் வாங்கி தர்றேன். பைக்க பகல் நேரமா யாரையாவது கொண்டாந்து அங்க விட சொல்றேன்” என்றான் பாலன்.

திருமணம் முடித்து குடும்பமே நடத்திக் கொண்டிருக்கும் ஒருவனை பார்த்து அவன் அன்பு அண்ணன் விரைவில் உனக்கு திருமணம் நடக்க போகிறது என்றால் வேடிக்கையாகத்தான் இருந்தது.

அண்ணனுக்கு தெரியாமல் தான் செய்யும் காரியத்தில் வேதனை கொண்டவனாக அவனை நேராக பார்க்க முடியாமல் தலை குனிந்தான் வருண்.

தம்பியின் சட்டை காலரை சரி செய்து விட்ட பாலன் அவனது தாடையை பிடித்து நிமிர்த்தி, “வெளுத்து விடுறேன்னு நான் சொன்னதை உத்ரா சொல்லிட்டாளா? அது சும்மாடா, காதல் ஒண்ணும் அவ்ளோ பெரிய துரோகம்லாம் இல்ல, நிமிந்து நில்லுடா” என சொல்ல பொய்யாக சிரித்தான் வருண்.

“கிளம்பு நேரமாகுது” என அண்ணன் சொல்ல தம்பியும் புறப்பட்டு விட்டான்.

நாட்கள் அமைதியாக கடப்பது போலத்தான் இருந்தது. உத்ரா அண்ணன் வீட்டிலிருந்த படியே சூப்பர் மார்க்கெட் சென்று வர ஆரம்பித்திருந்தாள்.

திருச்சியிலிருந்து வேறு கான்ட்ராக்ட் ஆட்கள் வைத்து கடையை நிர்மானிக்க ஆரம்பித்திருந்தான் பாலன்.

இப்போதெல்லாம் உத்ரா இல்லாத தனது அறையில் இருக்கவே ஆதவனுக்கு பிடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் உத்ரா அவளாகவே வந்திருக்க மாட்டாளா என எதிர்பார்த்துக் கொண்டே வீடு வருகிறான்.

அந்த வார சனிக்கிழமை மாலை உத்ரா எந்த சூப்பர் மார்க்கெட்டில் இருக்கிறாள் என அறிந்து கொண்டு எதேச்சையாக செல்வது போல சென்றான். அது முதன்மை கிளை இல்லை, ஊருக்கு வெளியில் சற்று தள்ளியிருக்கும் சிறிய கிளை, அங்கிருக்கும் ஊழியர்களுக்கு ஆதவனை யாரென தெரியவில்லை.

ஒன்றும் வாங்கவில்லை அவன். மிக வெளிப்படையாக உத்ராவை பார்த்தான், தன்னை கண்டு கொள்ளாதவளை முறைத்தான். கால் மணி நேரமாகவே இப்படியேதான் கடைக்குள் நடந்து கொண்டிருந்தான்.

கடை ஊழியன் ஒருவன், சிறு பையன்தான், பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கும். ஆதவனின் செயலில் சந்தேகம் கொண்டு அவனை நெருங்கி வந்து நின்றான்.

ஆதவன் என்ன என பார்க்க, “யாருய்யா நீ கடையில சாமான் வாங்க வந்தியா இல்ல என்கிட்ட வாங்கிக் கட்டிக்க வந்தியா?” என முரட்டுத் தனமாக கேட்டான் அந்த பையன்.

எழுந்த கோவத்தை அடக்கிய ஆதவன் ‘நான் யாரென சொல்’ எனும் உத்தரவை பார்வையில் தாங்கி உத்ராவை பார்த்தான்.

‘ஏன் நீங்களே சொல்ல மாட்டீங்களா?’ என பதில் பார்வை பார்த்தவள், “ஆனந்த், நீ போ” என மட்டும் சொல்ல, “அக்கா இந்தாளு பார்வை சரியில்லை க்கா. உங்களுக்கு தெரியாது” என்றான் அந்த பையன்.

“போன்னு சொல்றேன்ல?” என அதட்டலாக உத்ரா சொல்லியும், கொஞ்சம் துடிப்பான பையனாக இருந்தவன் ஆதவனிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தான்.

“டேய் இவளோட புருஷன் டா நான், போடா தள்ளி” சீறிய ஆதவன், “அண்ணனுங்கதான் தொல்லைனா திடீர்னு தம்பின்னு ஒருத்தன் முளைச்சு வர்றான்” என உத்ராவை முறைத்துக் கொண்டே முணு முணுத்தான்.

ஆதவன் கூற்றை இன்னும் நம்பாமல் உத்ராவை பார்த்தான் அந்த பையன்.

மற்ற கடை ஊழியர்கள் சில வாடிக்கையாளர்கள் என சிறு கூட்டம் தங்களை கவனிப்பதை உணர்ந்தவள் ஆதவன் பக்கத்தில் வந்து நின்று, “இவர் என் ஹஸ்பண்ட், போ நீ” என சொல்லிவிட்டு நிற்காமல் முதல் தளம் சென்றாள்.

தன்னிடம் வேறு எதுவும் பேசாமல் செல்பவள் மீது கோவம் கொண்ட ஆதவன் அவளை தொடர்ந்து மேலே சென்றான்.

அந்த தளம் விளையாட்டு சாமான்கள் மற்றும் ஃபேன்சி சாமான்களுக்கானது. இரு ஊழியர்கள் மிக சில வாடிக்கையாளர்கள் என இருந்தனர். உள் பக்கமாக போய் நின்று கொண்டாள் உத்ரா.

“உத்ரா…” என அழைத்துக் கொண்டே அவளது கையை பிடித்தான் ஆதவன்.

ஆதவனின் கையை உதறி விட்டவள் அவனை முறைக்க, “உன்னை பார்க்க ஒண்ணும் வரலை, கடைன்னு இருந்தா யார் வேணும்னாலும் வரத்தான் செய்வாங்க” சீண்டலாக சொன்னான்.

“இங்க என்ன வாங்க வந்தீங்க?” கடு கடுத்தாள்.

கண்களை சுழற்றி அந்த பகுதியை பார்த்தவன், “ஹான்… ஏன் பொண்ணுங்களும் புள்ளைங்களும்தான் வரணுமா இங்க? பொண்டாட்டிக்கு வாங்க புருஷன் வரலாம், புள்ளைக்கு வாங்க அப்பன் வரலாம்” என்றான்.

உத்ரா முறைக்க, “என்னவோ என்னை வில்லன் மாதிரி பார்க்குறாங்க வீட்ல எல்லாரும். நானா போக சொன்னேன் உன்னை? வெளில வெயிட் பண்றேன், வா… வீட்டுக்கு போலாம்” வீட்டில் உள்ளவர்களுக்காக அழைப்பது போல சொன்னான்.

 உத்ரா திகைக்க, “என்ன?” என்றான்.

“திடீர்னு இங்க வந்து கூப்பிட்டா?”

“ஏன் இங்க வந்தா என்ன?”

ஆதவன் மேல் இன்னும் கோவம் உள்ளது. ஆனால் இப்படி தனித்து இருப்பதில் அண்ணன்களும் அம்மாவும் கவலை கொண்டிருப்பது புரிய அவனுடன் சேர்ந்து இருந்தே வாழ்க்கையை சரி செய்து கொள்ள முயலலாம் எனும் முடிவுக்கு வந்தவள், “வந்து… அங்க வாங்க. அண்ணாகிட்ட சொல்லிட்டு அழைச்சிட்டு போங்க” என்றாள்.

“எதுக்கு? நீயும் அடிச்ச நானும் அடிச்சேன். என்னை அடிச்சத சொல்லி உன் வீர பராக்கிரமத்தையும் எல்லாருக்கும் சொல்லியாச்சு. இதுக்கப்புறமும் உன் அண்ணனுக்கு வேற பதில் சொல்ல முடியாது என்னால. ஏதோ பெரிய மனசு பண்ணி உன்னை கூப்பிட்டா ஒழுங்கா வர்றத விட்டுட்டு இன்னும் இறங்கி போக சொல்வியா?”

“நான் அடிச்சத மட்டும் சொல்றீங்க, அதுக்கு முன்னாடி நடந்ததை விட்டுட்டீங்க”

“ஏன் அதையும் நீயே சொல்லேன் எல்லார்கிட்டேயும்” சாதாரணமாக அவன் சொல்ல அவனை அடிக்க கைக்கு எதுவும் கிடைக்காதா என பார்த்தாள் உத்ரா.

“சொல்ல முடியாத விஷயம், எங்க சொந்த விஷயம்னு நீயே உன் அண்ணன்கிட்ட சொல்லி சமாளிச்சுக்க. நீயா போன, ஆனாலும் கூப்பிட வந்திருக்கேன். வா” என்றான்.

“ப்ச், நான்தான் போனேன். அதை அப்புறம் நாம பேசிக்கலாம். அண்ணனுக்கு கல்யாணத்துக்கு முன்ன நடந்தது எல்லாம் தெரிஞ்சு போச்சு, நானும் வருணும் சொல்லிட்டோம். இப்போ வீட்டுக்கு வந்து அழைச்சிட்டு போங்க, அதான் சரியா இருக்கும்” என்றாள்.

“எதுக்குடி சொன்ன அதெல்லாம்?”

“எவ்ளோ நாள் மறைக்க முடியும்? சொல்ல வேண்டியதாகிடுச்சு, சொல்லிட்டோம்”

சுர் என கோவம் வரப் பெற்றவன், “நீ வரவே வேணாம், உன் அண்ணாத்தே கூடவே இரு” என சொல்லி விறு விறுவென நடந்து வெளியேறி விட்டான்.

கடையில் வைத்து தன் உணர்வுகளை யாருக்கும் காட்ட விரும்பாதவள் நிதானித்து தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

அதன் பின் உத்ராவை தேடி வரவே இல்லை ஆதவன்.

அவன் அழைத்த போதே அவனோடு சென்று அதன் பின் அவனை சமாதானம் செய்து புரிய வைத்து அண்ணனை பார்க்க அழைத்து வந்திருக்க வேண்டுமோ என யோசித்தவள் ‘இல்லயில்ல இதுதான் சரி’ என்ற முடிவுக்கு வந்து அவனிடம் பேசக்கூட முயலவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement