Advertisement

ஜீவ தீபங்கள் -21

அத்தியாயம் -21(1)

உத்ராவை அடித்தது இந்நேரம் வீட்டினருக்கு தெரிந்திருக்கும், அப்பா கண்டிப்பாக ஏதாவது கேட்பார் என்ற நினைவில் மதிய உணவுக்கு கூட வீடு வரவில்லை ஆதவன். பெற்றோரின் அழைப்பையும் ஏற்கவில்லை. ஆனால் உத்ராவின் நினைவு மனதை கனக்க வைத்து இயல்பாக இருக்க முடியாமல் படுத்தி வைத்தது.

சுதா அழைக்க எரிச்சலோடு அழைப்பை துண்டித்து பிஸி என செய்தி அனுப்பி வைத்தவன் உத்ராவுக்கு அழைக்க நினைத்தான். நேரில் பேசினாலே முட்டிக்கொள்கிறது இதில் கைபேசியில் பேசி இன்னும் சண்டையாகிப் போகுமோ என பயந்து கைபேசியை ஓரமாக வைத்து விட்டு நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தான்.

எப்படியாவது உத்ராவை சமாதானம் செய்து விட வேண்டும் என்ற முடிவோடு இரவில் ஆதவன் வீடு வர அவனுக்காக காத்திருந்த வீட்டின் பெரியவர்கள் அவனை முறைத்த வண்ணம் வரவேற்றனர்.

“சும்மா முறைக்காதீங்க. அது ஏதோ கோவத்துல…” என்றவன் உத்ரா எங்கிருக்கிறாள் என பார்த்தான்.

“நீ ஏன் டா மருகி நிக்குற? பொம்பள புள்ளையா அவ? அவ அடிச்சா நீ திருப்பி அடிக்காம வேடிக்கை பார்த்திட்டு நிக்கணுமாம் இவங்களுக்கு?” என மகனுக்கு ஆதரவாக பேசினார் துர்கா.

அம்மாவை அதிர்ச்சியோடு ஆதவன் பார்க்க, “என்னடா நடந்து தொலைச்சுது? கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும்னு சொல்லிட்டான் பாலன். எந்த மூஞ்சு வச்சுகிட்டு போய் பேசுவேன் நான்? இவ என்னமோ அந்த புள்ள உன்னைய அடிச்சிட்டுனு கதை விட்டுட்டு இருக்கா?” கோவமும் சலிப்புமாக பேசினார் மலையரசன்.

“நான் கதை விடுறேனா? உங்கம்மாகிட்ட கேட்டு பாருங்க, உங்க மருமக அவ வாயாலேயே இவனை அடிச்சேன் அதான் இவன் திருப்பி அடிச்சிட்டான்னு அவ அண்ணன்கிட்ட சொன்னா” என்றார் துர்கா.

அரை குறையாக புரிந்த விஷயத்தில் குழப்பம் கொண்ட ஆதவன் தன் பாட்டியிடம் என்ன நடந்தது என விசாரிக்க ஒன்று விடாமல் எல்லாம் சொன்னார் பாட்டி.

ஆதவனுக்கு கண்கள் இருட்டுவது போலிருக்க தண்ணீர் குடித்து வந்தவன் சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

அவள் ஏன் அடித்தாள்? இவன் என்ன செய்தானோ? என பெரியவர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க என்னை அடித்ததை போய் ஏன் சொல்லித் தொலைத்தாள்? என்னிடம் சொல்லாமல் எப்படி அவள் வீட்டை விட்டு செல்லலாம்? என்பதிலேயே உழன்றது ஆதவனின் மனம்.

“காலையிலேயும் எம்புள்ள சாப்பிடல, இப்பவும் ஓஞ்சு போய் உட்கார்ந்திட்டான். எல்லாரும் உள்ள போங்க” என அதட்டிய துர்கா மகன் கை பிடித்து சாப்பிட வா என அழைத்தார்.

கண்கள் திறந்தவன், “ஏம்மா அவள இப்படி பேசின? அத்தைய எல்லாம் ஏன் இழுக்குற? போம்மா” என சலித்தவனாக சொன்னான்.

“அவ உன்னை அடிச்சாதானேடா? அவளே சொன்னா, எவ்ளோ அவமானம் உனக்கு? சரியான பஜாரிடா அவ” முதல் நாள் இரவில் அவன் சொன்ன அதே வார்த்தையை இப்போது அவனது அம்மாவும் உபயோகம் செய்ய அவனால் ஏற்க முடியவில்லை. அப்படி உத்ராவை தான் சொன்னதும் தவறு என புரிய தலையை பிடித்துக்கொண்டான் ஆதவன்.

“நீ வா முதல்ல சாப்பிடு” என்ற அம்மாவின் கையை உதறி விட்டவன், “ஆமாம் அடிச்சா என்னை, ஏன் அடிச்சான்னு காரணம் சொன்னாளா?” எரிச்சலாக கேட்டான்.

“என்ன வேணா இருக்கட்டுமே, ஆம்பளைய அதுவும் கட்டுன புருஷனை கை நீட்டி அடிப்பாளா?” கேள்வி கேட்டார் துர்கா.

“ம்மாஆஆ!” அடிக்குரலில் சீறியவன், “எதுவும் தெரியாம பேசாத. அவ இண்டென்ஷனா அடிக்கல. எமமேலதான் தப்பு, இதுக்கு மேல என்னால சொல்ல முடியாது. சொன்னா என்னைத்தான் கேவலமா பார்ப்ப நீ” என்றவன் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான்.

துர்கா திகைப்பும் குழப்புமாக நிற்க மற்றவர்களுக்கும் அதே நிலை என்ற போதும் நாகரீகம் கருதி என்னவென அதற்கு மேல் அவனிடம் விசாரணை செய்யவில்லை.

“டேய் ஆதவா, அவளும் காரணம் என்னன்னு கேட்டப்போ சொல்ல மாட்டேனுட்டா டா. பாலன் நீ அவளை அடிச்சதுல கோவமா இருந்தான், அதனாலதான் உனக்காகத்தான் உன்னை அடிச்சேன்னு அவ சொன்னா” என்றார் பாட்டி.

“எல்லாம் சரிதான் அப்பத்தா. எதுக்கு வீட்டை விட்டு போனா?” பாட்டியிடம் கோவப்பட்டான்.

என்ன சொல்வதென வள்ளி பாட்டி பார்க்க, “நாளைக்கு நீ போய் பாலன்கிட்ட பேசி உத்ராவை அழைச்சிட்டு வா. நானும் வர்றேன் கூட” என்றார் தாத்தா.

“என்கிட்ட சொல்லாம போனாதானே? நானா போக சொன்னேன்? அவளுக்கா தோன்றப்ப வரட்டும்” என்றான் ஆதவன்.

“கல்யாணம் பண்ணி முழுசா மூணு மாசம் இருக்குமாடா? வீம்பு பண்ணாம போய் கூட்டிட்டு வா. பிரியா வாழ்க்கையும் இதுல சம்பந்த பட்ருக்கு. பாலனை எதுவும் உன்கிட்ட கேட்டுக்க வேணாம்னு நானும் அப்பாவும் சொல்லிடுறோம். நாளைக்கு உத்ரா இங்க இருக்கணும்” என்றார் மலையரசன்.

“நானா உத்ராவை அனுப்பினாதான் பிரியாவை பாதிக்கும், அவளா வெளில போயிட்டு பிரியாவ என்ன செய்வாங்கன்னு நானும் பார்க்கிறேன். நீங்க ஆகுறத பாருங்க” என்ற ஆதவன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் உத்ரா அவளது பிறந்த வீட்டில்தான் இருந்தாள். ஆதவன் பேச வருவான் என பாலன் நினைத்திருக்க அவன் வராதது அவனுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

பாலனை அவனது கடைக்கு நேரில் வந்து சந்தித்து ஆதவன் பேசியதை கூறி விரைவில் சரி ஆகும் என சமாதானமாக பேசி சென்றார் மலையரசன்.

ஆதவன் சரியான அவசரக்காரன் மூர்க்கன் என பாலன் ஏற்கனவே அறிந்ததுதான். உத்ராவின் பிடித்தம் மட்டுமே அல்லாது நல்லவன் எனும் நம்பிக்கையில்தான் தங்கையை மணம் செய்து வைத்தான். துர்காவை கண்டித்திருப்பதும் உத்ராவின் மீது முழு தவறும் இல்லை என அவன் பேசியிருப்பதும் ‘இல்லை பெரிய அளவில் போகாது பிரச்சனை, விரைவில் சரியாகும்’ என்ற எண்ணத்தை பாலனுக்கு கொடுத்தது.

தொழில் என்று விட்டால் என்ன வந்தாலும் தடுமாறாமல் சமாளித்து விடுவான். அப்படி அதிரடியாக எதையும் செய்து விட முடியாதே உறவுகளுக்குள். அதிலும் கணவன் மனைவி உறவில் யாராக இருந்தாலும் அந்நியரே.

மூக்கை நுழைத்து பிரச்சனையை சரி செய்து விட்டாலும் மூக்கை நுழைத்தவர் தம்பதியில் யாருக்கேனும் ஒருவருக்கு விரோதியாக மாறி விடக் கூடும் அபாயம் இருக்க பொறுமையாகத்தான் இதை கையாள வேண்டும் என நினைத்த பாலன் ஆதவனே வரட்டும் என காத்திருந்தான்.

மகளை நினைத்து பிரகதீஸ்வரிக்கு கலக்கம் ஏற்பட பெரிய மகனிடம் புலம்பினார்.

“சின்ன புள்ளைங்கமா, புரியாம ஏதோ பண்றாங்க. சரியாகிடும். இல்லைனாலும் அப்படியே விட்ருவேனா நான்?” என பெரிய மகன் சொல்லவும் அவருக்கும் அப்போது வரை மலை போல தெரிந்த விஷயம் சிறு துரும்பானது போலிருந்தது.

இன்னும் உத்ரா இங்கு வந்து இருப்பது பிரியாவுக்கு தெரியாது. அவளது நிம்மதிக்காக தெரியாமல் பார்த்துக் கொண்டான் பாலன்.

ஆனால் வார இறுதியில் விஷயத்தை தெரிந்து கொண்டு வருண் வந்து நின்றான்.

இரவில் உணவு முடித்து விட்டு வீட்டு திண்ணையில் ஏதோ கணக்கு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பாலன். உத்ராவும் இன்னும் உறங்க செல்லாமல் ஒரு ஓரமாக அமர்ந்து கைபேசி பார்த்துக் கொண்டிருந்தாள்.

வருணை கண்டதும் உத்ரா சென்று கேட்டை திறந்து விட்டாள். தங்கையை இரக்கமாக பார்த்துக் கொண்டே பைக்கை உள்ளே விட்டான் வருண்.

தம்பியை நிமிர்ந்து பார்த்த பாலன், “என்னடா சொல்லாம கொள்ளாம, பஸ்ல வர்றதுக்கு என்ன? இங்க கிடக்க சின்ன காரை நீ எடுத்திட்டு போ. இனிமே இவ்ளோ தூரம் பைக்ல வரக்கூடாது” கண்டிப்போடு சொன்னான்.

ஒன்றும் சொல்லாமல் வருண் உள்ளே செல்ல அவனுக்கு தோசை ஊற்ற ஆரம்பித்தாள் உத்ரா. அவனுக்கும் நல்ல பசி. தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தவன் சாப்பிட்டுக் கொண்டே, “என்ன உத்ரா, என்ன கோமுட்டித்தனம் பண்ணினான் அவன்?” என கேட்டான்.

“வருண்!” அதட்டியவள், “பேசாம சாப்பிடு” எரிச்சலாக சொல்லி அடுத்த தோசை ஊற்ற உள்ளே சென்று விட்டாள்.

நான்கு தோசைகள் சாப்பிட்டவன் போதும் என்க, “சாப்பிட்டதும் நீ கை கழுவிட்டு போய் தூங்கு, நான் வந்து எல்லாம் எடுத்து வச்சிக்கிறேன்” என்ற உத்ரா மீண்டும் பெரியண்ணன் இருந்த திண்ணைக்கு வந்து விட்டாள்.

“இவன்கிட்ட தனியா மாட்டாத, முக்கியமா உன் மாமியார் பேசினதை சொல்லிடாத” என எச்சரிக்கை செய்த பாலன் மீண்டும் கணக்கு வழக்குகள் பார்த்திருந்தான்.

வெளியில் வந்த வருண் ஆதவனை உண்டு இல்லை என செய்து விடுவதாக தாம் தூம் என குதிக்க உத்ராதான் அடக்கினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement