Advertisement

ஜீவ தீபங்கள் -2

அத்தியாயம் -2(1)

திருவாரூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருந்த பேரூராட்சி அது. சுயம்புலிங்கம் பெயரை சொன்னால் தெரியாதவர்கள் யாருமில்லை. வயது மூப்பின் காரணமாக தொழில்களில் இருந்து ஒதுங்கி விட்டார். ஆனாலும் மகன்களுக்கு முக்கிய முடிவு எடுக்கப் பட வேண்டுமென்றால் இவரின் ஆலோசனை அவசியம்.

பல தலைமுறைகளாக திருவாரூரில் ஜவுளி தொழில் நடத்தி வருகிறார்கள். இப்போது பல கடைகள் வந்து விட்ட போதும் இவர்கள் கடை இன்னும் பிரபலமாகவே இருந்து வருகிறது, இவர்களின் அடையாளம் அந்த ஜவுளி நிறுவனங்கள்தான்.

சுயம்புலிங்கத்தின் தாத்தா காலத்தில் ரமணியின் தாத்தாவிடமிருந்து வாங்கப் பட்ட நிலத்தில்தான் முதல் கடை தொடங்கப்பட்டது. ரமணியின் தாத்தா பெரிய செல்வந்தர், கொஞ்சம் சோக்காளி என சொல்வார்கள். ஆடம்பர வாழ்க்கையில் சொத்துக்களில் பாதியை இழந்து விட்டார்.

ஏதோ பண நெருக்கடி வந்த போது சுயம்புலிங்கத்தின் தாத்தா இட பத்திரம் பெற்று பணம் கொடுத்தார் எனவும் அதை மீட்க வந்த போது கெடு முடிந்து விட்டது என சொல்லி தர மறுத்ததில் அவர்களுக்குள் தகராறு ஆகி அது குடும்ப பகையாகிப் போனது எனவும் கூறிக் கொள்வார்கள்.

இப்படி இரு குடும்பங்களுக்கும் தலைமுறை தாண்டிய பகைமை இருக்க இடையில் சுயம்புலிங்கம் அதை முடித்து வைத்தார். ஆனால் அது நீடிக்கவில்லை, மீண்டும் பகைமை பாராட்டி நிற்கின்றன இரு குடும்பங்களும்.

பெரியவர் முன் தாம் தூம் என குதித்துக் கொண்டிருந்தார் பூமிநாதன்.

“சின்ன பய பதவிக்கு வந்திட்டான், எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியுமா எனக்கு? அப்பவே தலையிட்டு ஏதாவது செய்ங்கனு சொன்னேன், கேட்டீங்களா நீங்க? இப்பவும் ஒண்ணுமில்ல, உடனே முக்கியமானவங்கள கூட்டி வச்சு பேசுங்க. தேர்தல் திரும்ப நடக்கணும்” என்றார் பூமிநாதன்.

“அறிவில்லாம பேசாத, நம்ம தரத்தை நாமளே தாழ்த்திக்க கூடாது. அவன் ஒண்ணும் சாதாரண பட்டவனா தெரியலை. நான் சொல்றதை கேளுங்க” தீவிர தொனியில் சுயம்புலிங்கம் கூற, அவரது மகன்களோடு சேர்ந்து நின்று கொண்டிருந்த அவரது மாப்பிள்ளை இளங்கோவனும் கூர்ந்து பார்த்தார்.

“அவனை பகைச்சுக்க வேணாம். அது இந்த குடும்பத்துக்கு நல்லது இல்ல, இந்த பகைய நான் இருக்கிறப்பவே முடிச்சு வச்சிடுறேன்” என்றார் சுயம்பு.

“சின்ன பயலுக்கு போய் பயப்படுறீங்களா?” பூமிநாதன் சத்தம் போட அவரை இளங்கோ அமைதி படுத்தினார்.

ஆறு மாதங்கள் முன்பு சிவபாலனை நேரில் கண்டிருந்தார் சுயம்புலிங்கம். ஒரு வார்த்தை இவரிடம் பேசவில்லை அவன். ஆனால் ஒரே ஒரு பார்வை பார்த்தான். எதிரியை பழி வாங்க துடிக்கும் பார்வை அது. பெரியவர் மிரண்டு விட்டார், இப்போதும் நினைவில் நிற்கிறது. ஆபத்து வருவதை அறிந்து கொண்டுதான் சமாதானமாக போக வழி தேடுகிறார்.

“அப்பா, என்னன்னு சொல்லுங்க” தந்தையை பேச ஊக்கினார் வைத்தியநாதன்.

இப்போது பூமிநாதனும் அமைதியடைந்திருக்க, மூவரையும் பொதுவாக பார்த்த சுயம்புலிங்கம், “நம்ம இனியாவை அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடலாம்” என்றார்.

அவரின் மகன்கள் அதிர்ச்சியில் வாய் பிளந்திருக்க, “என் பொண்ணையா?” என வாய் விட்டே கேட்டார் இளங்கோ.

ஆமாம் என அவர் தலையாட்ட அது எப்படி சரி வரும் என்பது போல பார்த்து நின்றனர் மற்ற மூவரும்.

“இதை தவிர வேற வழி இல்லை”

“அப்படின்னாலும் அவன் ஒத்துக்கணுமே” என தனது சம்மதத்தை வெளிப் படுத்தினார் வைத்தியநாதன்.

“ரமணிகிட்ட நான் பேசுறேன்” என அழுத்தமாக கூறினார் சுயம்புலிங்கம்.

வீட்டு பெண்களுக்கு இது தெரிய வர சல சலப்பு ஏற்பட்டது. சுயம்புவின் மனைவி பாப்பாத்தி அம்மாளுக்கு மட்டும் விருப்பம் இருந்தது, ஆனாலும் இது நடக்காது, தேவையில்லாமல் அவமான பட நேரிடும் என கணவரிடம் அறிவுறுத்தினார்.

“வைத்தி விஷயம் நினைவிருக்கா? அப்போ கூட இப்படித்தான் சொன்ன, நடத்திக் காட்டலையா நான்? அதுவும் இவன் நம்ம வீட்டு பய, நான் பார்த்துக்கிறேன்” என தைரியம் சொன்னார் சுயம்பு.

ஒரு வழியாக அனைவரும் சுயம்புவின் வழிக்கு வந்து விட்டனர். ஆனால் இந்த விஷயம் சிறியவர்கள் யாருக்கும் சொல்லப் படவில்லை.

காலம் தாழ்த்தாமல் நாளையே போய் பேசுவது என முடிவெடுத்தார் சுயம்புலிங்கம்.

திருச்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழிற்சாலையில் பொறியாளராக இருக்கிறான் வருண். திறமையை மட்டுமே வைத்து பெற்ற வேலை. தன் குடும்பத்துக்காக அண்ணன் படிப்பை துறக்க அவனுக்கும் சேர்த்து இவன் படித்தான்.

அண்ணன் சிவபாலன் என்றால் அன்பு, மரியாதை இரண்டையும் தாண்டி அத்தனை பக்தி. ஆமாம் அப்படித்தான் சொல்ல வேண்டும். எத்தனை துயரங்கள் என்ற போதும் சிறு முக சுணக்கம் காட்டாது அம்மாவாகவும் அப்பாவாகவும் உடன் பிறப்புகளை வளர்த்தவன். கடமையாக இல்லாமல் தம்பியையும் தங்கையையுமே வாழ்வின் பற்றுகோலாக நினைத்து செயல் பட்டவன்.

பணி கிடைத்ததும் அண்ணன் கையில் ஆர்டரை கொடுத்து சாஷ்டாங்கமாக அவனது காலில்தான் விழுந்தான். எழுப்பி கன்னத்தில் தட்டிக் கொடுத்து தோளோடு அணைத்துக் கொண்டு மிகவும் சின்னதாக சிரித்தான் பாலன், அவ்வளவே.

அண்ணனை என்ன செய்து மகிழ்விக்கலாம் என தம்பிக்கு தெரியவில்லை. ஆனால் அண்ணன் கண்களில் சிரிப்பு எட்டிப் பார்க்க எதையும் செய்ய வேண்டும் என்ற வெறி நெருப்பாக உள்ளுக்குள் இருக்கிறது.

உருவத்தில் அம்மாவை கொண்டு, பார்ப்பவர்கள் யாவரும் ‘அழகன்டா பய!’ என எண்ணும் படி இருப்பான். கல்லூரி காலத்திலேயே ரெமோ என்றெல்லாம் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள், அத்தனை பெண் விசிறிகள். யாரையும் ஏறெடுத்து பார்த்தது இல்லை. பார்க்க கூடாத அளவுக்கு துறவி போன்றவன் இல்லைதான் என்றாலும் தன் கவனத்தை எல்லாம் படிப்பில் மட்டுமே குவித்துக் கொண்டான்.

அப்படியாகப் பட்ட வருண் பணி முடித்து நேராக தன்னுடைய குவார்ட்டர்ஸ் செல்லாமல் அந்த பொறியியல் கல்லூரியின் விடுதிக்கு அருகில் ஒரு பெண்ணின் வரவுக்காக காத்திருந்தான். இவனை கண்டு விட்டதில் துள்ளளோடு நடந்து வந்தாள் சௌமியா. மூன்று மாதங்களுக்கு முன்புதான் இவளை தெரியும்.

ஒரு ரயில் பயணத்தில் சந்தித்து போன மாதம்தான் காதலை சொல்லியிருந்தனர். இன்று சௌமியாவுக்கு பிறந்தநாள், அதனை கொண்டு இந்த சந்திப்பு.

அருகில் வந்தவள் சட்டென வருணின் கையை பிடித்துக்கொண்டாள்.

ஏற்கனவே அலைபேசி மூலம் வாழ்த்து சொல்லியிருந்தாலும் இப்போது நேரில் சொன்னான்.

“என் வருங்கால எஜமானிக்கு ஹாப்பி பர்த்டே!” அழகிய சிரிப்போடு சொன்னான்.

வருணின் மோவாய் பள்ளத்தை ரசித்துக் கொண்டே “தேங்க்ஸ்!” என்றவள், “கிஃப்ட் இல்லையா?” எனக் கேட்டாள்.

“ஃபர்ஸ்ட் கிஃப்ட், உனக்கு பிடிக்காம போய்டுச்சுன்னா? என் கூட நீயே வா, செலக்ட் பண்ணு, வாங்கி தர்றேன்” என்றான்.

“வெளியிலயா? பைக்லேயா?” அவனுடன் செல்ல ஆசை இருந்தாலும் லேசான தயக்கத்தோடு கேட்டாள்.

“இப்பவே இப்படி யோசிச்சா நாளைக்கு உன் வீட்ல ஒத்துக்கலைனா என்ன செய்வ?” சாதாரணமாக தோன்றினாலும் தீவிரமாகத்தான் கேட்டான்.

முகம் சுருக்கிக் கொண்டவள், “உங்களை தவிர யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணினாதான் நம்புவீங்களா?” எனக் கேட்டாள்.

“நீ விட்டாலும் உன்னை யார் விடப் போறா?”

“என்ன இது? ஏன் இப்படி பேசுறீங்க?”

“என்ன தப்பா சொன்னேன்?”

“நான் விட்ருவேன்னு மீன் பண்றீங்க, போங்க”

“நீயா ஏதாவது நினைக்காத. சும்மா பேச்சு வாக்குல சொன்னேன். என்னை பொறுத்த வரை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணைத்தான் லவ் பண்ணனும்னு கொள்கையோட இருக்கிறவன், இல்லைனா இவ்ளோ நாள் சிங்கிலா சுத்தியிருக்க மாட்டேன்” என்றான்.

“ஆமாம் நாங்க மட்டும் வேற எப்படி நினைச்சு லவ் பண்றோமாம்?” கோவமாக கேட்டாள் சௌமியா.

“கோவத்துல மூஞ்சு சிவந்தா அழகா இருக்கும்னு எவனோ சொல்லி வச்சிருக்கான், கொஞ்சோண்டு உண்மைதான் போல” சமாதான படலத்தில் இறங்கியிருந்தான் வருண்.

“என்ன கொஞ்சம்தானா?” இப்போது செல்லக் கோவத்தோடு கேட்டாள்.

“லவ்வரா இருந்தாலும் பொய் சொல்ல மாட்டேன், கொஞ்சமாதான். எனக்கு வெட்கத்துல சிவக்குற கன்னம்தான் பிடிக்கும். போன வாரம் ஒரு முறை அப்படி சிவந்து போச்சு உன் கன்னம். நைட் எல்லாம் அந்த சிவப்பு எப்போ எனக்கு சொந்தமாகும்னு வித விதமா கனவு வேற. ஆனா பாரேன் கனவுல கூட உன் கன்னம் சிவந்து போச்சு என் மீசை குத்தி, கனவுல நடந்தது நிஜத்துல எப்போ நடக்கும் சௌமி… ஹ்ம்ம்?” குறும்பு சிரிப்போடு கேட்டான்.

உதடுகள் பிரியாமல் இறுக்கி பார்வை தழையாமல் இருக்க சிரம பட்டு கோவமான பாவனையை முகத்தில் கொண்டு வருவதற்குள் திணறி விட்டாள்.

“ம்ம்… இப்போ செமயா சிவக்குது கன்னம்!” ரசனையாக சொன்னான்.

“ஆமாம் கனவு கலர் கலரா வருமா?” என அவள் சந்தேகம் கேட்க, மெலிதான சத்தத்தோடு பற்கள் தெரிய சிரித்தான் வருண்.

அவள் முறைக்க, “தூங்குறப்ப வர்ற கனவுதான் கருப்பு வெள்ளை, முழிச்சிக்கிட்டே காணுற கனவு கலர் கலராதான் இருக்கும்” என்றான்.

“போகலாம் வருண், தூரமா யாராவது ஃபிரெண்ட்ஸ் பார்த்தா ரொம்ப கிண்டல் செய்வாங்க” வெட்கத்தோடு கெஞ்சினாள்.

அதற்கு மேல் வம்பு செய்யாமல் வருண் வண்டியை எடுக்க அவன் பின்னால் அமர்ந்து கொண்டவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.

ஆடை எடுத்து தர நினைத்து பெரிய ஆடையகம் முன் அவன் வண்டியை நிறுத்த அவனது கைபேசிக்கு அழைத்தான் சிவபாலன்.

பவ்யமாக பேசியவனை கண்டு சௌமிக்கு சிரிப்பு வந்தது. அவன் கைபேசியை வைத்த உடனே, “அண்ணன்னா அவ்ளோ பயமா?” எனக் கேட்டாள்.

“என் அண்ணன் இருக்கும் போது யாருக்கும் நான் பயப்பட மாட்டேன், அவருக்கு மட்டும் பயப்படுவேனா?”

“நம்பிட்டேன் நம்பிட்டேன்” கிண்டலாக சொன்னவள் சட்டென, “உங்க அண்ணன் என்னை வேணாம்னு சொன்னா என்ன செய்வீங்க?” என விளையாட்டாக கேட்டாள்.

“ஒரு நாளும் என் அண்ணன் அப்படி சொல்ல மாட்டார். ஏன்னா அவர் என் அண்ணன்” என்றவன் குரலில் கர்வம் நிறைந்து போயிருந்தது.

வருண் மனதில் அவனது அண்ணனுக்கான இடத்தை நினைத்து சௌமிக்கு பொறாமையாக இருந்தது. இதை போன்ற ஆழமான இடத்தை தனக்கும் தருவானா என ஏக்கமாக பார்த்து நின்றாள்.

“நாம என்ன ஃப்ரீஸ் ரிலீஸ் கேம் விளையாடுறோமா? வா” என சொல்லி அவளை அழைத்து சென்றான்.

அவளுக்கு பிடித்த வகையில் ஆடைகள், ஐஸ்க்ரீம், பூ என அவளின் மனதில் இனிமை பரப்பி, விடுதியில் விடுவதற்கு முன் யாருமற்ற தனிமையில் அவள் புறங்கையில் மென்மையாக முத்தமிட்டான். அவன் இதழ்களின் ஸ்பரிசத்தோடு மீசையின் குறு குறுப்பையும் உணர்ந்த சௌமியின் உள்ளமெங்கும் பரவசம்.

கடந்து சென்ற மற்ற இரவுகளை விட அன்று அவள் கனவுகளை இன்னுமின்னும் ஆக்கிரமிப்பு செய்திருந்தான் வருண்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement