Advertisement

அத்தியாயம் -20(2)

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அறைக்கு வந்தவன் உத்ரா பக்கத்தில் படுத்து அவளை அணைக்க பதறிப் போய் எழுந்தாள் அவள்.

“என்ன, வா” என்றவன் அவள் கையை பிடித்திழுத்து தன் மீது போட்டுக் கொண்டு கணவனாக அவளிடம் செயல்பட முரண்டு செய்தாள் உத்ரா.

“உத்ரா என்னடி? புரியலையா உனக்கு?” தாபமாக கேட்டவன் கன்னங்களில் முத்தமிட்டு ஆடை களைய துவங்கியிருந்தான்.

எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என அவன் தெளிவாக பேசியிருந்தால் அது வேறு. ஏற்கனவே சுதா பற்றிய விஷயத்தில் கோவத்தில் இருப்பவளிடம் சற்று முன் மனம் நொந்து போக வேறு பேசி விட்டு திடுமென உரிமையை நிலைநாட்ட முயன்றால் அவளால் அவனோடு ஒன்ற முடியவில்லை.

அவனது புஜத்தில் நகங்கள் கொண்டு கீறி தன் எதிர்ப்பை காட்டினாள்.

“வாங்கி கட்டிக்காத உத்ரா. என்னடி செய்யணும்ங்கிற நான்?” எரிச்சலோடு சீறியவன் அடுத்த நொடி தன்னை நிதானம் செய்து கொண்டு, “கோ ஆப்ரேட் பண்ணு, எனக்கும் புதுசுதான். என்னை மீறி ஏதாவது ஹார்ஷா பண்ணிட போறேன்” என்றான்.

“ப்ளீஸ் தள்ளி போங்க” என அவள் கெஞ்சியதை ஆதவன் பொருள் செய்யாமல் போக, வலிமை திரட்டி தன்னிடமிருந்து அவனை பிடித்து தள்ளியவள், “இப்படி செய்ய அசிங்கமா இல்ல உங்களுக்கு?” என அழுகையும் ஆத்திரமுமாக கேட்டு தன் உடையை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டாள்.

தன்மானம் சீண்ட பெற்றவன், “கட்டுன புருஷன்கிட்ட இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல?” என கோவப்பட்டான்.

“என்ன நம்ம புரிஞ்சுக்கிட்டோம்னு இப்படி பாஞ்சு வர்றீங்க?”

“புரிஞ்சிக்கிறதா? இது நடக்காததாலதானே இன்னும் என்னை டவுட் படுற நீ? நீதான் என் வைஃப், அப்படி ஒண்ணும் உனக்கு துரோகம் பண்ணிட மாட்டேன்னு உனக்கு புரிய வைக்கத்தான் இது. காட் இட் டேமிட்?” என்றவன் மீண்டும் அவளிடம் வர தன்னை அவன் நெருங்காமல் இருக்க போராடினாள்.

“உத்ரா எதுக்கு இவ்ளோ அடம்? நான் சொல்றதை கேளு” என அவளிடம் பொறுமையாக பேசலாம் என ஆதவன் பேச அதற்குள் அவனை அடித்திருந்தாள் உத்ரா.

அடுத்த நொடி அவளை அறைந்த ஆதவன், “பொண்ணாடி நீ? இவ்ளோ அடாவடியா இருக்க, போ போய் படுத்து தொலை” என்றவன் வெளியேறி விட்டான். மொட்டை மாடிக்கு சென்று விட்டவன் விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் அறைக்கு வர இழுத்து போர்த்திய படி உறங்கிக் கொண்டிருந்தாள் உத்ரா.

தன் புஜத்தில் அவள் ஏற்படுத்திய காயத்தை வருடி விட்டுக் கொண்டே, இரவில் அரை குறையாக அவளை உணர்ந்ததை நினைவுக்கு கொண்டு வந்தவனுக்கு புன்னகை உதித்தது.

‘என் அழகு அடிதடி சண்டைக்காரி! எப்படி தூங்குறா பாரு’ அவள் அடி கொடுத்த கன்னத்தை பற்றிக் கொண்டே மனதில் செல்லமாக அலுத்தான்.

இரவில் அவசரப் பட்டு விட்டோம் என அவனுக்கு புரிய அவளை எழுப்பவோ நெருங்கவோ கொஞ்சம் பயமாக இருந்தது. அவளிடமிருந்து நன்றாக இடைவெளி விட்டு தள்ளியே படுத்துக் கொண்டான்.

ஏழு மணி போல விழித்தவன் தன் முன் நடமாடிக் கொண்டிருந்த உத்ராவை கோவம் குறைந்து விட்டதா என ஆராய்ச்சியாக பார்த்தான். அவளது சிவந்த கன்னத்தில் பதிந்திருந்த தன் கை தடத்தை கண்டவன் ‘ஐயோ!’ என எண்ணினாலும் அவளிடம் ஒரு வார்த்தை அது பற்றி கேட்கவில்லை.

‘இவளும்தான் என்னை அடிச்சா’ என மனதில் நினைத்துக்கொண்டே எழுந்தவன் அவனது கன்னத்தை கண்ணாடியில் பார்க்க அது எப்பொழுதும் போலதான் இருந்தது.

காலைக் கடமைகளை முடித்த உத்ரா அறையை விட்டு செல்லவே இல்லை. தான் சமாதானமாக பேசினாலும் கோவம்தான் படுவாள், தானும் கோவத்தில் ஏதாவது பேசி இன்னும் சண்டையாக கூடும் என நினைத்தவன் சமாதான படலத்தை இரவுக்கு தள்ளி வைத்து விட்டு வள்ளி பாட்டியிடம் சென்றான்.

“நைட் சின்ன சண்டை, கோவமா இருக்கா. பார்த்துக்க அப்பத்தா” என்றவனை வள்ளி பாட்டி திட்ட ஆரம்பிக்க அவர் வாயை கையால் மூடியவன், “உன் ஜீன்தான் போல உன் பேத்தியும். இப்படி பேசித்தான் வாங்கி கட்டிக்கிட்டா” என்றான்.

பேரன் கையை விலக்கி விட்டவர், “அவ மேல கை வச்சியா?” என அதிர்ந்து இன்னும் பொரிந்து தள்ள, தாத்தாவும் என்னவென விசாரிக்க ஆரம்பிக்க காலை சாப்பாடும் சாப்பிடாமல் கோவமாக மருத்துவமனை புறப்பட்டு விட்டான் ஆதவன்.

சிறிது நேரத்தில் ஆதவன் உத்ராவை அடித்து விட்டான் என வீட்டில் அனைவருக்கும் தெரிந்து விட்டது. மலையரசன் மாலையில் மகனை கண்டிப்பதாக சொல்லி உத்ராவை இன்று வர வேண்டாம் என அறிவுறுத்தி அவர் மட்டும் சூப்பர் மார்க்கெட் சென்று விட்டார்.

பேத்தியை அவளது அறையிலேயே சாப்பிட வைக்க மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் வள்ளிக்கண்ணு. மனது சரியில்லாமல் கோயிலுக்கு சென்று விட்டார் தாத்தா.

“என் பையன் வாழ்க்கையே போச்சு. என்னமோ இவ பேசியிருக்கா. இல்லாமலா அடிக்கிற அளவுக்கு போவான் அவன்? கல்யாணம் ஆனதிலேர்ந்து அவன் முகத்துல சந்தோஷத்தையே காணோம்? வில்லங்கத்தை கட்டி கூட்டிட்டு வந்திருக்கான்? இந்தா அவனும்தான் சாப்பிடாம போயிட்டான். பொறந்திலேர்ந்து எம்புள்ள ஒரு வேளை பட்டினியா இருந்திருப்பானா? நல்லா வந்தா மகாராசி!” என அங்கலாய்க்க தொடங்கி விட்டார் துர்கா.

அறையின் கதவு திறந்திருக்க வெளியில் கத்திக் கொண்டிருந்த துர்காவின் பேச்சு நன்றாக காதில் விழ, “தனியா விடு அம்மாச்சி என்னை, அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என சொல்லி படுத்து விட்டாள் உத்ரா.

இதற்கு மேல் அவளை வற்புறுத்த சக்தி இல்லாமல் வெளியில் வந்த வள்ளி பாட்டி தன் மருமகளை பிடித்துக்கொள்ள பதிலுக்கு துர்காவும் பேச என வீடு இரண களப் பட்டது.

தங்கையிடம் பேச வேண்டும் போல உந்துதலாக இருக்க உத்ராவுக்கு அழைத்தான் பாலன். கைபேசி அணைத்து வைக்க பட்டிருக்க சூப்பர் மார்க்கெட்டில்தான் இருப்பாள் என நினைத்து மலையரசனுக்கு அழைத்தான். உத்ராவுக்கு உடல்நிலை சரியில்லை எனவே இன்று வரவில்லை என சமாளித்து வைத்து விட்டார் மலையரசன்.

சற்று நேரம் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த பாலனுக்கு உத்ராவின் நினைவாகவே இருக்க அவளை பார்க்க கிளம்பி விட்டான்.

“உங்களாளதான் குடும்ப நிம்மதியே போச்சு. உங்க பொண்ண கொண்டாந்து இங்க வச்சுக்கலைன்னு அப்போத்திலேர்ந்தே என் மேல கடுப்புல இருந்தீங்க. என்ன செய்யலாம்னு பார்த்து உங்க பேத்திய என் மகன் தலையில கட்டிட்டீங்க. நாங்க கிடந்து அல்லாடுறோம்” என மாமியாரிடம் அலறினார் துர்கா.

“நான் கேட்டுத்தான் முதல்ல ஒத்துக்கலையே நீயும் உன் மகனும். அப்புறமா உன் மகனாதான் போய் பேசி கட்டிக்கிட்டான் அவளை. அப்படியே கட்டிக்கிட்டாலும் என்னடி குறைய கண்டுபிடிச்ச என் பேத்திகிட்ட?” என வள்ளி பாட்டியும் கோவமாக கேட்டார்.

“என்ன குறையா?” எனக் கேட்ட துர்கா சமையல் வரவில்லை, மகன் பணி முடித்து வந்ததும் அவனுக்கு ஓடி ஓடி சேவகம் செய்யவில்லை, தன்னை மதிப்பதில்லை என உப்பு பெறாத காரியங்களை எல்லாம் பட்டியலிட்டு இறுதியாக, “அவ அம்மாக்காரி போலவே இவளும் புருஷனை வச்சு வாழத் தெரியாதவ” என்றார்.

வள்ளிப் பாட்டி அசந்து போனவராக பார்க்க தன் அம்மாவை பற்றி சொன்னது பொறுக்க முடியாமல் வந்து விட்டாள் உத்ரா.

“என் அம்மாவை பத்தி இன்னொரு வார்த்தை வந்தது…” ஒரு விரல் காட்டி உத்ரா எச்சரிக்கை கொடுக்க, “உள்ளதைத்தான் சொன்னேன், உன் அம்மா அது புருஷன் கூட என்னத்த வாழ்ந்தது? அவங்களாவா போக சொன்னாங்க? உன் அம்மாதான் பொட்டிய கட்டிகிட்டு என் உசுரை வாங்க இங்க வந்து சேர்ந்தது. நான் எந்த செம்மம் செஞ்ச புண்ணியமோ அஞ்சு வருஷத்தோட என் வதை முடிஞ்சது. ஆனா இப்போ நீ வந்து சேர்ந்திருக்க” என உச்சஸ்தாயில் அலறினார் துர்கா.

இப்படியான பேச்சுக்களை இதுவரை கேட்டிராத உத்ரா கலங்கிப் போனவளாக நின்றாள்.

“ஐயா சாமி!” என வள்ளிப் பாட்டி சத்தமிட மற்ற இரு பெண்களும் திரும்பிப் பார்க்க வாயிலில் கண்கள் சிவக்க நின்றிருந்தான் பாலன்.

பாலனின் கோவ முகத்தை கண்ட துர்கா பயந்து போனவராக ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க அண்ணனை கண்டதும் ஓடிப் போய் அவனை கட்டிக் கொண்டு விசும்பினாள் உத்ரா.

தன் தங்கையின் மாமியார், தன் மனைவியின் அம்மா ஆகிய இரு பதவிகளுக்கும் சொந்தக்காரர் அதை விட ஒரு பெண் என்ற காரணங்களால் பாலனிடமிருந்து தப்பித்து விட்டார் துர்கா.

எப்படி பாலன் தன்னை கட்டுப்பாட்டோடு வைத்திருந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை. தங்கை அழவும் அவள் முதுகு வருடிக் கொடுத்தான். துர்கா உள்ளே ஓடி சென்று விட்டார்.

தன்னிடமிருந்து உத்ராவை பிரித்து அவளது முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்ட பாலன் அவளது கன்னத்தில் விரல் தடங்கள் கண்டு விட்டு அதிர்ந்து போனான்.

உத்ரா என்ன சொல்வதென தெரியாமல் இன்னும் அழ பாட்டியை கேள்வியாக பார்த்தான் பாலன்.

“அது…” தயங்கிய பாட்டி, “ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டைடாப்பா. அவன் கோவம் வந்தா ஒரு நிலையில இருக்க மாட்டான்னு தெரியாதா உனக்கு? நீ பொறுமையா இருப்பா” என்றார்.

“எதெதுல பொறுமையா போறது அம்மாச்சி? என்ன தைரியம் அவனுக்கு?” என பாலன் கோவம் கொள்ள, “அண்ணா எதுவும் பேச வேணாம். நான் அங்க வர்றேன் ண்ணா. என்னை அழைச்சிட்டு போ” என்றாள் உத்ரா.

நொடிகள் யோசித்த பாலன், “போலாம் மா. அவனை கூப்பிடுறேன் இங்க. வரட்டும், எனக்கு பதில் சொல்லட்டும்” என்றான்.

“ஐயா புருஷன் பொண்டாட்டி விவகாரம்யா” இரு பேரன்களுக்கும் சண்டையாகிப் போகுமோ என பயந்து போனவராக சொன்னார் பாட்டி.

“கை நீட்டுறது என்ன பழக்கம் அம்மாச்சி? அவனுக்கு இந்த தைரியம் யார் கொடுத்தது? அவன் அம்மா இவ்ளோ தூரம் பேசுறாங்கன்னா இது முதல் தடவ மாதிரி தெரியல. இதுக்கும் அவன்தானே காரணம்? வரட்டும் அவன்” தன் கைபேசியை கையில் எடுத்த பாலன் ஆதவனுக்கு அழைக்க போனான்.

அண்ணன் கோவமாக இருக்கும் இந்த நேரம் தன் கணவனை அண்ணன் சந்திக்க வேண்டாம் என நினைத்த உத்ரா, “அண்ணா வேணாம். என் மேலேயும் தப்பு. நானே சரி பண்ணிக்கிறேன், நான் கொஞ்ச நாள் நம்ம வீட்ல இருக்கேன் ண்ணா. ப்ளீஸ்…” என கெஞ்சினாள்.

“சரிடா உன் மேலயே தப்பு இருக்கட்டும், அதுக்காக அடிக்கிறது தப்பு இல்லையா?” எனக் கேட்டான் பாலன்.

அண்ணன் இதை விடப் போவதில்லை என புரிந்த உத்ரா வேறு வழியின்றி, “இல்லண்ணா நான்தான்…” தயங்கி பின் தன்னை உறுதி படுத்திக் கொண்டு, “நான்தான் அவரை முதல்ல அடிச்சிட்டேன்” என்றாள்.

பாலனும் பாட்டியும் அதிர்ந்து பார்க்க, அனைத்தையும் உள்ளிருந்து கேட்டிருந்த துர்கா பொங்கிக் கொண்டு வெளியில் வந்தார்.

“நல்லா கேட்டுகிட்டீங்களா?” என தன் மாமியாரிடம் சீறிய துர்கா, பாலனை பார்த்து, “என் பொண்ணு இப்படி செஞ்சா விடுவியா நீ? இதான் நீ வளர்த்து வச்சிருக்க லட்சணம்! புருஷனை அடிக்கிற பொண்டாட்டி பத்தி எங்கேயாவது கேட்ருக்கோமா? இதுல என் புள்ளகிட்ட கேள்வி கேட்பியா நீ?” என விடாமல் ஆங்காரமாக பேசினார்.

உத்ரா மருகிப் போனவளாக நிற்க, “அம்மாடி சொல்லுடா தங்கம் என்ன நடந்துச்சுன்னு, இவ வாய அடைக்கவாவது நீ சொல்லணும்” என்றார் பாட்டி.

உத்ரா அண்ணனை கலக்கமாக பார்க்க, “நீ எதுவும் இவங்களுக்கு விளக்கம் சொல்ல வேணாம், அவன்கிட்ட பேசிக்கலாம்” என தங்கையிடம் சமாதானமாக சொல்லி, பாட்டியிடம், “நான் உத்ராவை அழைச்சிட்டு போறேன் அம்மாச்சி, மாமாகிட்ட போன்ல சொல்லிக்கிறேன்” என சொல்லி தங்கையோடு புறப்பட்டு விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement