Advertisement

ஜீவ தீபங்கள் -20

அத்தியாயம் -20(1)

“உன் ஆசை அத்தான் கடை கட்ட ஆரம்பிச்சிட்டான், உனக்கு சந்தோஷமா இருக்குமே?” இரவில் படுக்கையில் தன் அருகில் தன்னால் களைத்து போய் படுத்திருந்த இனியாவிடம் குரோதமாக சபரி கேட்க கண்ணில் நிறைந்த நீரோடு அவனை பார்த்திருந்தாள்.

“ஹ்ம்ம்… சொல்லுடா ஹாப்பியா இப்போ?” மீண்டும் நக்கலாக கேட்டான்.

சற்று முன்னரான இனிமை எல்லாம் இனியாவிடம் காணாமல் போயே விட்டது. திருமணம் முடிந்து ஒரு மாத காலம் காதலில் கொண்டாடிய கணவனிடம் மனம் திறக்கிறேன் என இவள் சொன்ன விஷயத்தை வைத்து இப்படி தன்னை வார்த்தைகளால் வதை செய்து கொண்டே இருப்பான் என அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

“என்ன பதில காணோம். நான் பக்கத்துல இருக்கும் போது யாரை நினைச்சு கனவு?”

“ஐயோ! ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? நான்… என்னை தப்பா புரிஞ்சுக்காதீங்க. எத்தனை முறை சொல்றது அது சாதாரண ஈர்ப்பு. இப்படி குத்தி பேசாதீங்க கஷ்டமா இருக்கு எனக்கு” என்ற மனைவியின் கண்ணீரை சுண்டி விட்ட சபரி ஏளனமாக நகைத்தான்.

“ஈர்ப்பு… வித விதமா பேர் கொடுத்தாலும் அவனை நீ நினைச்சதானே? அவன் வேணாம்னு சொன்னவ எனக்கு பொண்டாட்டி. ச்சீய்!” படுக்கையில் ஓங்கி குத்தி விட்டு எழுந்து கொண்டவன் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

தன்னை சரி செய்து கொண்ட இனியா கணவனை பயத்தோடு பார்க்க, அவளை கோவமாக பார்த்தவன் வெளியேறி விட்டான். இனி நள்ளிரவு நேரம் போதையில் மிதந்து கொண்டே வருவான். யாரிடமும் சொல்லவும் பயமாக இருந்தது. அவன் இப்படி இருக்க இதுதான் காரணம் என அனைவர் மத்தியிலும் சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விடுவானோ என்ற பயத்தில் மனதிற்குள்ளேயே இதை மறைத்து சோர்வோடு படுத்துக் கொண்டாள்.

சௌமியாவுக்கு கடைசி வருட தேர்வுகள் இன்று தொடங்கியிருக்க ‘ஆல் த பெஸ்ட்’ என செய்தி அனுப்பியிருந்தான் வருண்.

கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தாள் சௌமியா. என்னவோ இன்னும் கூட நன்றாக படித்திருக்கலாம் என்ற எண்ணம். சென்ற முறை வீட்டிற்கு சென்ற போதே படிப்பு முடியவும் நரேனுடன் திருமணம் என சொல்லி விட்டனர். இப்போதைக்கு வேண்டாம் என இவள் சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

வருணிடம் புலம்ப எல்லா ஏற்பாட்டையும் செய்து சென்ற மாதமே இவளை திருமணம் செய்து கொண்டிருந்தான். இவளது தோழிகள், வீட்டினர் என யாருக்கும் தெரியாது. வருணை மணந்தது மகிழ்ச்சிதான் என்றாலும் வீட்டிற்கு தெரியாமல் இப்படி ஒரு காரியத்தை நடத்திக் கொண்டதில் குற்ற உணர்வாக இருந்தவளால் படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை.

தனியாக சென்று வருணுக்கு அழைத்தவள் தேர்வு சரியாக எழுத முடியாது என சொல்லி அழ, “ஸ்டராட்டிங்ல படிக்காத எதையும் இந்த ஒரு மாசத்துல புதுசா படிச்சிருக்க போறியா? வீணா பயப்படாத. மனச ஒரு நிலை படுத்தி எழுது” என நம்பிக்கை ஊட்டினான்.

“ஃபெயில் ஆகிட்டேனா?”

“எடுத்த உடனே நெகடிவா பேசாத. பாஸ் ஆகிடுவோம்னு பாசிட்டிவ் நினைப்போட போ. கண்டிப்பா நல்லா எழுதுவ” என அவளை ஒரு விதமாக தேற்றி கைபேசியை வைத்த வருணுக்கு மனம் பாரமாகி விட்டது.

அவள் படிப்பு முடியவுமே திருமண பேச்சு எடுப்பார்கள் என இவன் சிந்தித்திருக்கவில்லை. இவளது படிப்பு முடியாதது நெருடல்தான் என்றாலும் வேறு வழியில்லாமல் நன்றாக யோசித்துதான் திருமணம் செய்திருந்தான்.

 இப்போது சௌமியா அழுது புலம்பியதில் தேர்வுகள் முடியும் வரை காத்திருந்திருக்கலாம் என தோன்ற மனமே சரியில்லாமல் போய் விட்டது. அவள் தேர்வுகளை நன்றாக எழுத வேண்டும் என வேண்டிக் கொள்வதற்காக கோயிலுக்கு சென்றவனுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற சிந்தனையும் மூளையை குடைய கோயிலிலேயே அமர்ந்து விட்டான்.

அலுவலகத்திற்கு சொல்லியிருந்த பெர்மிசன் நேரம் முடிவடைய போவதை உணர்ந்துதான் அங்கிருந்து புறப்பட்டான்.

உத்ரா தினமும் சூப்பர் மார்க்கெட் செல்கிறாள். காலையில் ஆதவன்தான் அவளை ட்ராப் செய்கிறான். அவளை கவனிக்க ஆரம்பித்திருந்தான். அவள் முகம் கண்கள் என அவனை ஈர்க்கத்தான் செய்தது. அவளறியா வண்ணம் அவளை ரசிக்கிறான்தான்.

மாமியாரிடம் முட்டல் மோதல் என்றாலும் கணவனிடம் குறை என எதுவும் சொல்வதில்லை. முடிந்த அளவு அவளே திருப்பி தருவாள், முடியாமல் போனால் என்னவோ பேசிக் கொள்ளுங்கள் என அவள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்து விடுகிறாள். இந்த குணம் கூட அவனை ஈர்த்தது.

துர்காதான் மகனிடம் நிதமும் மருமகளை பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஆதவனுக்கு பழகி விட்டது. ஆனால் ஒரு வார்த்தை யாருக்கும் சாதகமாக பேச மாட்டான்.

சாப்பிடும் நேரத்தில் தந்தை மருமகளை பற்றி பெருமை பாடுவார். இவனும் மனதில் பெருமையாக நினைத்துக் கொள்வான். தன் வேலை பற்றி கூட ஆதவனிடம் வாய் திறக்க மாட்டாள். சுதா விஷயம் தவிர உத்ரா மற்ற எதற்காகவும் கோவம் கொள்வதில்லை, பொறுமையாக போகிறாள் என அவனுக்கும் புரிந்தது.

ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் இருக்கும் நேரம் உத்ராவோடுதான் செல்கிறது. ஏதாவது இவன் வெப் சீரிஸ் பார்த்தால் அவளையும் அழைப்பான். பிகு செய்யாமல் அவனுடன் அமர்ந்து பார்ப்பாள். அவளது அருகாமை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இன்னும் வெளிப் படுத்தவில்லை, எப்படி வெளிப் படுத்த என்றும் தெரியவில்லை.

ஒரு குளிர்ந்த இரவில் மனைவியின் உடல் நெருக்கத்திற்கு மனம் விழைய ஆசையாகத்தான் வீடு வந்தான். உத்ரா வீட்டிற்கு தூரம் என்பது தெரிந்து ஏமாற்றமாக உணர்ந்தாலும் அவன் மனதை இன்னும் அவளிடம் சொல்லியிருக்கவில்லை.

அந்த வாரம் நகர்ந்து சென்றது. அன்று துர்காவுக்கும் உத்ராவுக்கும் ஏதோ சண்டையாகிப் போக மருமகளை மட்டுமே குறையாக சொன்ன துர்கா மகனிடம் அழுதே விட, முதல் முறையாக மனைவியை அழைத்து அம்மாவிடம் மரியாதையாக பேசு என கண்டித்தான்.

இரவு நேரத்தில் சண்டையை வலுக்க விரும்பாத உத்ராவும் கடமைக்கு சரி என சொல்லி சென்று விட்டாள். அறைக்கு வந்த ஆதவனுக்கு என்னவோ அவளை காதலாக அணுக முடியவில்லை. இவளிடம் விசாரிக்காமல் இவளை மட்டும் கண்டித்தது சரியில்லை என பட மனதில் தடை வந்து உட்கார்ந்து கொண்டது.

அப்படியே அமைதியாக இருவரும் படுத்து விட்டனர்.

இன்னும் சில மாதங்களில் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வு வர இருக்கிறது. சுதாவும் மகப்பேறு மருத்துவம் படிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள். விண்ணப்பம் செய்து விட்டாள். இப்போதும் இவனை காண்கிறாள்தான், கோவம், குத்தி பேசுதல் என இல்லாமல் நல்ல விதமாகவே பேசுகிறாள்.

ஆதவனுக்குதான் இன்னும் அவளை நினைத்து சிறு உறுத்தல் இருக்கிறது. அவளுக்கு இடம் கிடைத்து விட்டால் படிக்க சென்று விடுவாள். அதன் பின் முற்றிலும் தேறி விடுவாள் என நினைத்தான்.

ஆதவனின் நண்பனின் மனைவி மகப்பேறு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் படிக்க உதவுவாள் நான் அந்த பெண்ணின் கைபேசி எண் வாங்கித் தருகிறேன் என சுதாவிடம் கூறியிருந்தான் ஆதவன்.

அந்த பெண்ணின் எண்ணை அவளது கணவன் இப்போது அனுப்பியிருக்க உடனே சுதாவுக்கு அனுப்பி வைத்த ஆதவன் இந்த நேரம் அந்த பெண் விழித்துக் கொண்டுதான் இருப்பாள், பேசு என அவன் நண்பன் சொன்னதையே சுதாவுக்கும் செய்தியாக அனுப்பி வைத்து விட்டு உறங்க ஆரம்பித்தான்.

ஆதவன் நல்ல உறக்கத்தில் இருக்க அவனது கைபேசி சத்தம் போட்டது. உத்ராதான் எடுத்து பார்த்தாள். சுதாவின் பெயரை திரையில் கண்டவள் நேரம் பதினொன்று பத்து ஆகியிருப்பதை கவனித்து விட்டு அழைப்பை துண்டிக்க போக, “யாரு?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தான் ஆதவன்.

உத்ரா அவனை முறைக்க அவளது கையிலிருந்து கைபேசியை பறித்தவன் உடனே அழைப்பை ஏற்றுக்கொண்டான்.

உத்ராவின் பக்கத்தில் இருந்து கொண்டுதான் பேசினான். தவறாக எந்த பேச்சுக்களும் இல்லை. ஆதவன் பேசியதிலிருந்தே படிப்பை பற்றி அவனது நண்பனின் மனைவியிடம் அவள் பேசியது பற்றி பேசுகிறார்கள் என புரிந்ததுதான். ஆனால் இரவில் இந்த நேரத்தில் பேசிக் கொள்வதை உத்ராவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

உத்ரா படுத்து விட்டாலும் உறக்கம் வரவில்லை. அவர்களின் பேச்சும் முடிவதாக தெரியவில்லை. மிகவும் அக்கறையாக கவனமா படி கண்டிப்பா சீட் கிடைச்சிடும், இந்த பொண்ணு என்ன ஹெல்ப் வேணா பண்ணுவா என சொல்லிக் கொண்டிருந்தான் ஆதவன்.

அரை மணி நேரம் கடந்த நிலையில், “அவ தூங்கிட்டா. கடைக்கு போறா இல்லையா, டயர்ட் ஆகிடுறா” என ஆதவன் சொல்ல தன்னை பற்றி பேசிக் கொள்கிறார்கள் என்பதில் உத்ராவுக்கு இன்னும் கோவம் வந்தது.

“ஏதோ ஓடுது, அம்மாக்கும் அவளுக்கும்தான் செட் ஆக மாட்டேங்குது. இன்னிக்கு கூட ஒரு பஞ்சாயத்து, போக போக சரியாகிடும்னு நம்பிட்டு இருக்கேன்” என சொல்லி சிரிக்க, இதையெல்லாம் அவளிடம் சொல்வதை உத்ராவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“குழந்தையா!” என திகைத்த ஆதவன், “இப்போதான் கல்யாணம் ஆச்சு? என்ன அவசரம் சுதா? ரெண்டு வருஷம் போகட்டும்னு இருக்கோம்” என ஆதவன் சொல்லிக் கொண்டிருக்க உத்ராவின் பொறுமை காற்றில் பறந்தது.

வேகமாக எழுந்து அதைவிட வேகமாக கைபேசியை பறித்துக் கொண்டவள், “மேனர்ஸ் மேனர்ஸ்னு ஒண்ணு சொல்வாங்களே அது கொஞ்சம் கூட இல்லையா உனக்கு? எந்த நேரம் பேசுறதுன்னு அறிவு வேணாம்? அதை விட என்ன பேசுற நீ?” உத்ரா சீற்றமாக பேசிக் கொண்டிருக்க அவளிடமிருந்து கோவமாக கைபேசியை பறித்த ஆதவன் அறையை விட்டு சென்று விட்டான்.

பத்து நிமிடங்கள் கழித்து ஆதவன் அறைக்கு வர உறுமலாக அமர்ந்திருந்தாள் உத்ரா.

நீ செய்தது அநாகரீகமான செயல் என சொல்லி ஆதவன் கோவப்பட பதிலுக்கு உத்ராவும் பேச சண்டையாகிப் போனது.

பேச்சு வலுத்த நிலையில், “இப்படி என்னை கொடுமை படுத்தறதுக்கு நீங்களே அந்த சுதாவை பத்தி சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். நான் கல்யாணத்தை நிறுத்தாம செஞ்ச தப்புக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?” என குமுறலாக சொன்னாள்.

“யாருக்குடி தண்டனை? ஒரு பஜாரிய கட்டிட்டு நான்தான் கஷ்ட படுறேன். எனக்குதான் இது பனிஷ்மென்ட்” என வார்த்தைகளை சிதற விட்டான்.

அவன் அவளை குறித்து சொன்ன வார்த்தையை தாள முடியாதவள், “அவ்ளோ எல்லாம் நீங்க கஷ்ட பட வேணாம். போயிடுறேன் நான்” கோவமாக சொன்னாள்.

அவளை பார்த்து கை எடுத்து கும்பிட்டவன், “நல்லாத்தான் இருக்கும். என் தங்கச்சி லைஃப் போய்டும். கால்ல விழுறேன் போயிடாத” என நக்கல் கலந்த கோவத்தோடு பேசினான்.

“பிரியா சுதா உங்கம்மா எல்லாரையும் யோசிப்பீங்க, என்னை பத்தி யோசிக்கவே மாட்டீங்களா?”

“என்னடி யோசிக்கணும்?”

பதில் சொல்ல முடியாமல் தன்னிரக்கத்தில் கரைந்தவள் அமைதியாக படுத்து விட, அவன் மீண்டும் வெளியே சென்று விட்டான்.

சில நிமிடங்கள் அவனுக்கு எதுவும் ஓடவில்லை. கோவம் மட்டுப் படவும் சுதாவோடு இந்த நேரம் பேசியிருக்க கூடாது என தோன்றியது. இன்னொரு பக்கம் ‘ஏன் அவ முன்னாடித்தானே பேசினேன், தப்பா எதுவும் பேசலையே அப்புறமும் என்ன?’ எனவும் யோசித்தான்.

இறுதியாக உத்ராவுக்கு தன்னுடனான வாழ்க்கை பற்றி நம்பிக்கையின்மை இருக்கிறது. அதை சரி செய்து விட்டால் சரியாகி விடுவாள் என்ற புரிதலுக்கு வந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement