Advertisement

ஜீவ தீபங்கள் -18

அத்தியாயம் -18

“முதல்ல சொல்ல வேணாம் நினைச்சேங்க, இப்ப கூட எப்படி சொன்னேன் தெரியலை. பயந்து போய்ட்டேன் போல…” கெளதம் பற்றி சொன்ன பிரியா இப்படி சொல்ல முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அவளை பார்த்திருந்தான் பாலன். 

“ஆரம்பத்துல என் படிப்புக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னுதான் படிப்பு முடிஞ்சதும் அவனை வீட்ல வந்து பொண்ணு கேளுன்னு  சொன்னேன். அங்க ஸ்டார்ட் ஆச்சு எல்லாம். என்னன்னெவோ நடந்து எனக்கு திடீர் கல்யாணம்னு சொன்னப்ப கூட படிக்க மட்டும் விட்டா போதும்னு நினைச்சேன்”

 “இப்போ படிப்ப பத்தின நினைப்ப மீறி மீதி இருக்க ரெண்டு மாசம் எப்படி போகுமோன்னு பயமா இருக்கு. பின்னால வருவானா, கல்யாணம் முன்னாடியே என்னை பத்தி தப்பு தப்பா பேச்சு இருக்கையில இப்ப எதுவும் அசிங்கமா போய்டுமோ, எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க, கடத்திட்டு போய்டுவானா இல்ல ஆசிட் அட்டாக் மாதிரிலாம் எதுவும்…” என்றவள் பேச்சை நிறுத்தி விட்டு கேவினாள். 

மனதில் உள்ளது எல்லாம் சொல்லட்டும் என பொறுமையாகவே இருந்தான் பாலன். 

கணவனை நெருங்கியவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டு, “உங்களை பத்தி நல்லா தெரிஞ்சும் கூட நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு எல்லாம் யோசனை வருது. மொத்தத்துல என் நிம்மதியே போச்சுங்க” என்றவள் அழுது தீர்த்து விட்டாள். 

நிமிடங்கள் கடந்து அழுகையை நிறுத்தியவள், “இப்போ உங்களுக்கு வேற இப்படி ஆகிடுச்சு. நான் படிப்ப விட்டிடுறேங்க, சென்னைக்கு போகாம உங்க கூடவே இருந்திடவா?” எனக் கேட்டாள். 

“இதை சொல்லவா அவசரமா கல்யாணம் பண்ணி அத்தனை பேரையும் எதிர்த்துகிட்டு உன்னை அங்க அனுப்பி வச்சேன்? படிக்கிறதுக்கான சூழல் எனக்கு இல்ல,  கிடைக்காத எனக்குத்தான்  அதோட அருமை தெரியும்.  ரொம்ப ஈஸியா நாலரை வருஷ உழைப்ப விடுற அளவுக்கு துணிஞ்சிட்ட, இவ்ளோ யோசிச்ச நீ அவனை எப்படி ஃபேஸ் பண்றதுன்னு யோசிச்சிருக்கலாம்தானே?” எனக் கேட்டான். 

“என்ன யோசிக்க நான், என் படிப்ப நிம்மதியா நான் கம்ப்ளீட் பண்ண இப்பவும் சான்ஸ் இருக்குங்குறீங்களா?” ஏக்கமாக கேட்டவள் வந்த கண்ணீரை அவன் தோளில் துடைத்துக் கொண்டாள். 

“என்கிட்ட சொல்லிட்டீல, இனி அந்த கெளதம் பத்தி மறந்திடு. உன் படிப்ப கண்டிப்பா நீ முடிக்கலாம், நிம்மதியா… அது என் பொறுப்பு, இன்னிக்கு நைட் நீ சென்னைக்கு கிளம்ப” என்றான். 

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “வருண்கிட்ட சொல்ல போறீங்களா? அடிதடி பிரச்சனை எல்லாம் வேணாங்க. ஏற்கனவே நான்தான் தேவையில்லாம ஏதோ கெளதம்கிட்ட சொல்லி அவன் இப்படி ஆகிட்டான்னு கில்டியா இருக்கு. தேஜ் உயிருக்கு ஆபத்தாகி கூட அவன் அம்மா கௌதம் ஃப்யூச்சர் நினைச்சு மன்னிச்சு விடலையா? அதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும். எனக்கு படிப்ப நல்ல படியா முடிச்சிட்டு இங்க வந்தா போதும். அவனை எதுவும் செய்ய வேணாம்” என்றாள். 

பாலன் முறைக்க, “என்னால என்னை சேர்ந்தவங்களுக்கும் பிரச்சனை வேணாம், வெளியாளுக்கும் கெடுதலா முடிய வேணாம். அவன் ஃப்யூச்சர் போயிட்டாபாவம் இல்லையாங்க? வேற ஏதாவது செய்யுங்க” அழுது கொண்டே சொன்னாள். 

மெலிதாக முறுவலித்தவன் அவள் கன்னத்து ஈரத்தை துடைத்து விட்டு, “சரி, வேற எதுவும் சொல்லணுமா?” எனக் கேட்டான். 

பிரியாவின் தலை மேலும் கீழுமாக ஆட என்னவெனக் கேட்டான். 

“மிஸ் பண்றேன் உங்கள” என்றாள். 

“தெரியும், வேற…” என பாலன் மிக சாதாரணமாக கேட்க முறைத்தாள் பிரியா. 

“நைட் கிளம்பணும்ல… தேவையானது எடுத்து வச்சுக்க. நான் வெளில போயிட்டு வர்றேன்” என்றவன் எழ, அவன் கை பிடித்துக்கொண்டாள். 

என்ன என்பது போல அவன் பார்க்க, கெஞ்சலாக பார்த்தவள், “இப்பவே அஞ்சு மணி ஆக போகுது. மிஞ்சி போனா மூணு நாலு மணி நேரம் உங்க கூட இருப்பேன். உங்களுக்கு காயம் வேற இருக்கு, எங்கேயும் போகாதீங்க, என் கூடவே இருங்க” என்றாள். 

“முக்கியமான வேலை பிரியா” என்றவன் அவளது கையை விலக்கி விட்டு அடுத்து எதுவும் பேச அவளுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் வெளியில் கிளம்பி விட்டான். 

பாலனுக்கு இன்னும் கழுத்தில் வலி இருந்தது. வருணை கூட துணைக்கு அழைக்காமல் கொட்டும் மழையில் அவனே காரெடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான். 

செருப்பு கடைக்கு சென்றான். பெரிய கடை என சொல்ல முடியாது. இருபதுக்கு பத்து எனும் அளவு கொண்ட சிறு கடை, புதிய சரக்குகள் எல்லாம் முதல் தளத்தில் வைத்திருப்பார்கள். வாடிக்கையாளர் தேவையை பொறுத்து மேலிருந்து எடுத்து வந்து காட்டுவார்கள். இடம்தான் சிறியதே ஒழிய மாதம் யாராலும் நம்ப முடியாத வகையில் லாபம் ஈட்டித் தரும் கடை. 

தேவையின்றி இங்கு வரவும் மாட்டான் பாலன், ஏனெனில் அத்தகைய நம்பிக்கையான நிர்வாகியாக இருந்தார் கடையை கவனிக்கும் உஸ்மான் பாய். நல்ல மழையாக இருந்ததால் கடை ஊழியர்கள் தவிர வேறு யாருமில்லை.  அவர்களை கூட மேல் தளத்தை ஒதுங்க வைக்க என அனுப்பியிருந்தார் பாய். 

பாலனை கண்டவர் “இதுக்கு போய் உடம்பு முடியாதப்பவும் நீயே நேர்ல வரணுமா ப்பா? பாஸ்கர்தான் இருக்கானே” எனக் கேட்டார். 

“இருக்கட்டும் பாய், கழுத்தறுத்தவனை இன்னொரு முறை பார்த்திட்டு போறேன்” கடினமாக சொன்ன பாலன் கடையின் பின் பக்கம் செல்ல அங்கிருந்த ஷட்டரை திறந்து விட்டார் பாய். 

அங்கு தனியாக இன்னொரு அறை இருந்தது. இந்த கடையோடு இணைந்த இடம் என யாரின் கவனத்திலும் இல்லாத படி பூட்டிக் கிடக்கும் ஏதோ இடம் போலவே காட்சி தந்தது. அந்த அறையின் முடிவில் கீழ் நோக்கிய வரிசையில் காணப் பட்ட படிகள் வழியே பாலன் இறங்க மீண்டும் ஷட்டரை மூடி விட்டு கல்லாவில் அமர்ந்து கொண்டார் பாய். 

ந்த பேஸ்மெண்ட்டிற்கு அந்நியர்கள் ஏன் கடை ஊழியர்கள் கூட வருவது கிடையாது. சுவர் ஓரமாக  பிரிக்க படாத அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்க பட்டிருக்க அடித்து துவைக்க பட்டு கிடந்தனர் பூபதி, மனோகர், மற்றும் மனோகரின் நண்பன் மூவரும். 

பாஸ்கரும் அவனுக்கு உதவியாக இருந்த இன்னும் இருவரும் பாலனை கண்டு விட்டு பவ்யமாக எழுந்து நின்றனர். 

பாலன் கேள்வியாக பாஸ்கரை பார்க்க, “அவங்க வேலைதான் தம்பி, நரேன் நேரடியா பேசியிருக்கான் இந்த மனோகர்கிட்ட. அவங்க பேர் வெளில வரக் கூடாதுங்கிறதுக்காக இவனை வச்சு செய்ய நினைச்சிருக்கான். மாட்டினாலும் ராஜிகிட்ட இவன் தொந்தரவு செஞ்சதுக்கு நீங்க இவனை அடிச்சீங்களே, அதுக்கு பழி வாங்கன்னு சொல்ல சொல்லியிருக்கான்” என்றான். 

பாலன் பூபதியை கேவலமாக பார்க்க, அவர் தலை குனிந்து கொண்டார்

“கடையில வச்சு நீங்க திட்டினதுல ஐயாவுக்கு அவமானம் ஆகிப் போச்சாம். ஒரு பொண்ணுக்காக இவரை கடை மாத்தி விட்டதுல மனசு ஒடிஞ்சு போய்ட்டாராம்” என்ற பாஸ்கர் இன்னொரு அடி போட அலறக் கூட சக்தி இல்லாமல் முணகினார் பூபதி. 

“வெளில விட்ருங்க ண்ணா” என்றான் பாலன். 

“தம்பி!” என பாஸ்கர் திகைக்க, “இங்கேர்ந்து வெளில சொன்னேன். ஆனா இவனுங்க வீடு போக கூடாது. ஃபர்னிச்சர் கடைல வந்த கலெக்ஷனை பேங்க்ல கட்டாம எடுத்திட்டு ஓட பார்த்திருக்கான் பூபதி. அதுக்கு ரெண்டு பேரும் உடந்தை. என்ன செய்யணுமோ செய்யுங்க” என்றான். 

போலீஸ்ல புடிச்சு கொடுக்கிறதுன்னா நிஜத்தையே கேஸா கொடுக்கலாமே தம்பி?” 

“இங்க அடி கொடுக்கிறவனுக்குத்தான் மரியாதை, அடி வாங்கினவனுக்கு இல்ல. என் மேல எவனும் கை வைக்கல, எனக்கு நடந்தது ஆக்ஸிடெண்ட்தான் புரியுதா?” என கடினமாக பாலன் சொல்ல சரி என தலையாட்டினான் பாஸ்கர். 

பூபதியை கோவமாக பார்த்த பாலன் “அப்புறம் கடை மாத்தினதுல மனம் நொந்து போன இந்த மானஸ்தர் போட்டோ போட்டு திருடன்னு பேப்பர்ல வரணும். காச திருடறத விட பெருசா என் நம்பிக்கையை திருடியிருக்காரே, விளம்பரம் வேணும்ல” என்றான்.

ஆனாலும் தம்பி… கொஞ்ச நாள் பொறுத்து இவனுங்க வெளில வந்திடுவானுங்க, இன்னும் கூட ஏதாவது பெருசா செஞ்சு விடலாமே” என்றான் பாஸ்கர். 

“வெளில வரட்டும், நம்மள மீறி இங்க எப்படி இவனுங்க பொழைப்பு ஓடப் போகுதுன்னு நாம பார்க்கலாம்” என நக்கலாக பாலன் சொல்ல, “சரிங்க தம்பி, மத்தத நான் பார்த்துக்கிறேன் தம்பி” என்றான் பாஸ்கர். 

அப்புறம் தம்பி அந்த நரேன் க்ரூப்…?” கேள்வியாக பாஸ்கர் நிறுத்த, “சொல்றேன்என்ற பாலனிடம் அலட்சிய சிரிப்பு

பாலன் வீடு வரும் போது நேரம் எட்டு ஆகியிருந்தது. வருணுக்கு அவனது அண்ணன் எங்கு சென்றிருப்பான் என்ற கணிப்பு இருக்க, “நான் பார்க்க மாட்டேனா ண்ணா?” என ஆதங்கமாக கேட்டான். 

“இந்த மாதிரி விஷயத்துல நீ தலையிட்டுக்க வேணாம். காருக்கு டிரைவர் வர சொல்லியிருக்கேன். அவளை சென்னையில விட்டுட்டு அங்கேர்ந்தே நீ திருச்சி போய்டு” என முடிவாக சொல்லி விட்டான் பாலன். 

தான் கேட்டும் தன்னுடன் தங்காமல் சென்று விட்டார் என பிரியா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க அவளை கண்டு கொள்ளாமல் படுத்து விட்டான் பாலன். வேறு சுடிதார் மாற்றிக் கொண்டவள் தலை வாரிக் கொண்டிருந்தாள். 

தலை குளித்த கேசம் அவளுக்கு அடங்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக முடியை படிய வாரி பாதி முடியை பிரித்து உச்சியில் க்ளிப் செய்ய போனாள். கண்ணாடியில் தெரிந்த கணவனை பார்த்துக் கொண்டே கையில் எடுத்த கிளிப்பை கீழே தவற விட்டாள். முடியை விட்டால் மீண்டும் படியாது என நினைத்து ஒரு கையால் முடியை பிடித்துக்கொண்டே கிளிப்பை தேடினாள். கருமை நிற க்ளிப் ட்ரெஸிங் டேபிளுக்கு அடியில் பதுங்கியிருக்க, தேடியவள் அலுத்து போய் முடியை விட்டு விட்டு கீழே அமர்ந்து விட்டாள். 

வேடிக்கை பார்த்திருந்த பாலன் “என்ன பிரியா செய்ற?” எனக் கேட்டான். 

“ஹான்… சுத்தி சுத்தி வர்ற பொண்டாட்டிய திரும்பியே பார்க்காதவர் அவ பின்னாடியே சுத்தணும்னு வசியம் பண்ற மந்திரம் ஒண்ணு போட்டுட்டு இருக்கேன்” என சொல்லி மந்திரக்காரி போல தலை விரி கோலத்தில் தலையை சிலுப்பினாள். 

“வேப்ப மரம் வெளில இருக்கு, கொத்து கொத்தா வேப்பிலை பறிச்சி அதையும் கைல வச்சுகிட்டு சுத்தினா பார்க்க நல்லா மாஸா இருக்கும்” என்றவனை பார்த்து கைகளை மடக்கிக் கொண்டு “ஹாஹ…” அடிக் குரலில் கத்தினாள். 

எழுந்து அவளிடம் வந்தவன் அவள் கையை பிடித்து எழுப்பி நிறுத்தி, “நைட்ல கார்ல தூங்கி வழிஞ்சிட்டே போக போற, ஏதோ ஃபங்ஷன் போற மாதிரி எவ்ளோ நேரம் அலும்பு பண்ணுவ, அதான் சகிச்சுக்க முடியாம கிளிப் பதறிப் போய் எங்கேயோ தொலைஞ்சு போயிடுச்சு. சும்மா ஏதாவது பின்னல் போட்டுட்டு ரெடி ஆகு” என கிண்டலாக பேசி கண்டிப்போடு முடித்தான். 

Advertisement