Advertisement

அத்தியாயம் -16(2)

மெல்ல உத்ரா அவளது மாமா பையன் ஆதவன் என்பவனுக்கு நிச்சயம் ஆனவள் என்ற செய்தி கல்லூரியில் பரவி விட்டது. நன்மையாக வேறு யாரும் அவளிடம் காதல் என வந்து நிற்கவில்லை, ஆனால் தோழிகள் அடிக்கடி ஆதவன் பெயரை வைத்து கிண்டல் செய்தனர்.

அதிகம் பழக்கம் இல்லாத வகுப்பு மாணவன் கூட, “உனக்கென்ன பாஸ் ஆகுறியோ இல்லையோ பல் டாக்டரை கட்டி செட்டில் ஆகிடுவ. நாங்க எல்லாம் பாஸ் ஆகி வேலைக்கு போய் வீடு கட்டி தங்கச்சி கல்யாணத்த முடிச்சு… ஹ்ம்ம்… பொறந்தா பொண்ணா பொறக்கணும், அதுவும் மாமா பையன் இருக்கிற பொண்ணா பொறக்கணும்” என கிண்டல் செய்வான்.

“நைட் ஆனாலும் இனிமே உத்ரா ஒருத்தி மட்டும் சூரியனோட இருக்கலாம்” என தோழி ஒருத்தி சொன்ன மொக்கைகடி இப்போதும் உத்ராவுக்கு நினைவில் உண்டு.

இப்படி பல விதங்களில் ஆதவனோடு இணைத்து பேசப் பட்டுக் கொண்டே இருந்தாள்.

ஒரு வேளை ஆதவனுடன் நெருங்கி பழகியிருந்தால் அவனை வேறு விதமாக பார்க்க தோன்றி இருக்காதோ என்னவோ. பழக்கம் இல்லாத காரணத்தால் அவனிடம் ஈர்ப்பு ஏற்பட்டு அவளை அறியாமலேயே அவளுக்குள் வர தொடங்கி விட்டான்.

மற்றவர்கள் எப்படி உத்ரா ஆதவனை திருமணம் செய்து கொள்ள போகிறாள் என நினைத்தார்களோ அப்படியே அவளது மனமும் நினைக்க தொடங்கி விட்டது. ஆதியிலேயே கிள்ளி ஏறிய படாத எதுவும் வளர்ந்துதானே ஆகும்? ஆதவனும் அவளுள் நிறைந்து விட்டான்.

பிரியா இங்கு கல்லூரியில் சேர்ந்த பின் அவளை சந்திக்கும் போது அவளிடமிருந்து ஆதவன் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வாள். பிரியாவோடு ஆதவன் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் உத்ராவின் கைபேசிக்கு மாறியது.

எடிட் செய்து ஆதவனோடு அவள் சேர்ந்து நிற்பது போல பல போட்டோக்கள் அவளது கைபேசியில் தனியாக ஒரு ஃபோல்டரில் இன்னமும் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அதை பார்த்து விட்டுத்தான் தங்கையின் காதலை அறிந்து கொண்டிருந்தான் வருண்.

ஒருவர் மீது காதல் வர பெரிதான விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதில்லை. சொல்லப் போனால் ஒருவர் மீது ஏன் லயிப்பு ஏற்படுகிறது என யாராலும் கணிக்க முடியாது, பிடித்து போனவருக்கே ஏன் இந்த பிடித்தம் என காரணம் தெரியாது.

பயத்தோடுதான் ஆதவனை திருமணம் செய்து கொண்டாள். சமீபமாக அவனிடம் சில நல்ல மாற்றங்களை கவனிப்பவளுக்கு விரைவில் அவன் தன் காதலை புரிந்து என் மீது அன்பு செலுத்த ஆரம்பிப்பான் என்ற நம்பிக்கை வர அன்றைய நாள் உற்சாகமாகவே சென்றது.

மதியம் வீடு வந்த பின் உணவருந்தி ஓய்வெடுத்து நான்கு மணிக்கு மாமனாரோடு மீண்டும் புறப்பட்டு விட்டாள் உத்ரா. எப்போதும் ஆறு மணிக்கு மருத்துவமனை செல்லும் ஆதவன் அன்று நாலரை மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டான்.

உத்ரா முதன்மை கிளையில் அல்லாது வேறு சூப்பர் மார்க்கெட்டில் இருக்க அவளது பள்ளிக்கால தோழி அங்கு வந்திருந்தாள். வெகு வருடங்களுக்கு பின் தன் தோழியை சந்தித்ததில் மகிழ்ந்த உத்ரா அருகிலிருக்கும் காபி ஷாப்புக்கு அழைத்து சென்றாள்.

இவர்கள் ஷாப்பின் முகப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தன் கணவன் பற்றி உத்ரா சொல்ல ஆதவனை நினைவு படுத்திக் கொள்ள முயன்று, “ஆமாம் கொஞ்சமா நினைவு இருக்கு, ஆனா ஃபேஸ் நினைப்பு இல்லப்பா” என சொல்லிக் கொண்டிருந்தாள் அந்த பெண்.

உத்ரா தன் கைபேசி எடுத்து திருமண போட்டோக்கள் காட்ட ஆர்வமாக பார்த்தாள் அந்த பெண்.

“ஏன் அவர் முகம் அப்படி இருக்குன்னு கேட்றாதடி, அன்னிக்கு அவருக்கு நல்ல ஹெட் ஏக்” உத்ரா சொல்லிக் கொண்டிருக்க, உள்ளிருந்த ஏசி அறையிலிருந்து வெளிப் பட்டான் ஆதவன். அவன் இவளை கண்டிருக்கவில்லை, ஆனால் இவளால் அவனை நன்றாக பார்க்க முடிந்தது.

‘இவர் எங்க இங்க?’ என்ற யோசனையோடு தோழிக்கு தன் கணவனை அறிமுகம் செய்யலாம் என உத்ரா நினைக்க ஆதவனுக்கும் பின்னால் நடந்து வந்தாள் சுதா. இருவரும் ஒன்றாக நடந்து வெளியே செல்ல உத்ராவின் முகம் கறுத்து போனது.

என்னவென தோழி கேட்க உடனே நன்றாக இருப்பதாக காட்டிக் கொண்ட உத்ரா எப்படியோ சமாளித்து அவளை அனுப்பி விட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து விட்டாள். மாமாவுக்கு அழைத்து உடம்புக்கு முடியவில்லை என சொல்லி படுத்தவளின் கண்ணீரை தலையணை தாங்கிக் கொண்டது.

பிரியாவுக்கு கௌதமை நினைத்து தலை வேதனையாக இருந்தது. அவனிடம் தெளிவாக சொல்லி விட்ட பின்பும் இரண்டு முறை இவளை காண மருத்துவமனை வந்து விட்டான். அருகில் வந்து தொந்தரவு எதுவும் செய்வதில்லை என்றாலும் இவளை காணத்தான் வருகிறான் என்பது நன்றாக தெரிந்தது.

கூட்டத்தில் ஒருவனாக அவன் இருப்பதை மற்றவர்கள் கவனிக்கவில்லை. எதுவும் தொந்தரவு தராதவனை என்னவென சொல்லி கல்லூரி நிர்வாகத்தில் புகார் கொடுக்க முடியும்? இல்லை இன்னும் மூன்று மாத காலமே இருக்க இப்படி பார்த்தால் பார்த்து விட்டு போகிறான் என விட்டு விடுவதா?

பல விதமாக யோசித்த பிரியா இன்று இரவில் கணவனிடமே சொல்லி விட வேண்டியதுதான் என முடிவு செய்து கொண்டாள்.

கடையிலிருந்து பாலன் வரும் வழியில் இரயில்வே ட்ரக் இருக்கும். கொஞ்ச தூரம் அந்த தண்டவாளத்தின் பக்கவாட்டில் இருக்கும் சாலையில் பயணித்து பின்னர்தான் ஆள் நடமாட்டம் உள்ள சாலையில் பயணித்து வீட்டுக்கு வருவான் பாலன்.

பாலன் செல்லும் வழியில் தன் டிவிஸ் பைக்கோடு போராடிக் கொண்டிருந்தார் பாலனின் ஃபர்னிச்சர் கடையில் வேலை செய்யும் பூபதி.

தன் பைக்கை நிறுத்திய பாலன் என்னவானது என விசாரிக்க, “என்னன்னு தெரியலைங்க தம்பி, காலைலதான் மெக்கானிக் கடை கொண்டு போய் பார்க்கணும்” என்றார் பூபதி.

“சரி வண்டிய ஓரமா போட்டுட்டு ஏறுங்க வீட்ல விட்டிடுறேன்” என அழைத்தான் பாலன்.

“இருக்கட்டுங்க தம்பி, வேற யாரும் வருவாங்க” தயங்கினார் பூபதி.

“ஏன் இந்த வண்டிக்கென்ன? ஏறுங்க” அதட்டலாக பாலன் சொல்ல அவரும் ஏறிக் கொண்டார்.

இரயில்வே ட்ரக் சாலைக்கு வந்த பாலன் நிதானமாகவே வண்டியை செலுத்திக் கொண்டிருக்க கைபேசி ஒலி எழுப்பியது.

பிரியாவாக இருக்கும் என பாலனுக்கு நன்றாக தெரிய வண்டி ஓட்டுவதால் அழைப்பை ஏற்காமல் விட்டான். இரண்டாவது முறையாக அழைப்பு வர வீடு போய் பேசிக் கொள்ளலாம் என நினைத்து அப்போதும் எடுக்காமல் போனான்.

இரவு சாப்பாட்டுக்கு இன்னும் உத்ரா வரவில்லை என துர்கா எரிச்சலோடு சொல்ல, “என்ன நினைச்சிட்டு இருக்கா அவ? தானா சாப்பிட மாட்டாளா? ஒவ்வொரு தடவையும் யாராவது போய் கூட்டிட்டு வரணுமா?” என ஆதவனும் எரிச்சல் கொண்டான்.

“உன் அப்பத்தா கூட என்ன ஏதுன்னு அவகிட்ட கேட்காம ‘புள்ள அசந்து தூங்கும், ஆதவன் வந்ததும் எழுப்பி விடு’ ன்னு எனக்கு கட்டளை போட்டுட்டு எட்டு மணிக்கெல்லாம் தூங்க போயாச்சு. சூப்பர் மாக்கெட் போகவும் அவளுக்கு ரொம்ப இடமாகி போச்சுடா” என ஏற்றி விட்டார் துர்கா.

நல்ல பசியில் இருந்த ஆதவன் தன் உணவை முடித்துக் கொண்டு எரிச்சலோடு அறைக்கு சென்றான். உறங்கிக் கொண்டிருந்த உத்ராவின் கண் இமைகள் தடித்திருக்க அம்மாவுடன் இன்றும் எதுவும் சண்டையோ, அம்மா சொல்லாமல் விட்டு விட்டாரோ என எண்ணியவன் அவளை எழுப்பினான்.

உறங்குவது போல பாவனை செய்து கொண்டிருந்த உத்ரா அவனது கையை வேகமாக தட்டி விட்டு, “என்னை தொடுற யோக்கியதை உனக்கு இல்ல, தள்ளி போ” என கத்தினாள்.

எதுவும் புரியா விட்டாலும் அவள் பேசியதில் ரோஷம் வரப் பெற்றவன், “இங்க எவனும் உன்னை தொட காத்திட்டு இல்ல. போடி” என பதிலுக்கு கத்தினான்.

உத்ரா இழுத்து போர்த்திக் கொண்டு அமைதியாக அழ ஆதவனும் உறங்க தயாரானான்.

தனது இரு அழைப்புகளை பாலன் ஏற்காமல் இருக்க பிரியாவுக்கு என்னவோ அன்று பொறுமை இல்லை. கெளதம் பற்றி சொல்ல வேண்டும் என்ற முனைப்பை தாண்டி எதுவோ அவளை உந்த மூன்றாவது முறையாக கணவனுக்கு அழைத்தாள்.

இந்த முறை அழைப்பை ஏற்றான் பாலன். பிரியா ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசியிருக்கவில்லை. அதற்குள் கலவரமான சத்தத்தைதான் அவளால் கேட்க முடிந்தது.

“என்னங்க என்னங்க…” என பயத்தோடு பிரியா அழைத்தது எல்லாம் தரையில் கிடந்த பாலனது கைபேசியில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அழைப்பை துண்டித்த பிரியா மீண்டும் பாலன் எண்ணுக்கு முயல ரிங் சென்று கொண்டே இருந்தது. இரண்டு முறை முயன்றும் அழைப்பு ஏற்க படாமல் போகவும் உடனே ஆதவனுக்கு அழைத்து விட்டாள்.

பிரியா சொன்ன செய்தியில் ஆதவன் கலவரமடைய இன்னும் உறங்காமலிருந்த உத்ரா தன் கோவத்தை தள்ளி வைத்துவிட்டு என்னவென கேட்டாள். பாலன் கைபேசிக்கு அழைத்துக் கொண்டே அவளுக்கு விஷயத்தை பகிர்ந்தான் ஆதவன். அவள் உடனே அம்மாவுக்கு அழைக்க வடிவம்மாள்தான் எடுத்தார்.

முழு ரிங் சென்றும் பாலன் அழைப்பை ஏற்காமல் போக, பேசிவிட்டு கைபேசியை வைத்த உத்ராவும், “இன்னும் அண்ணன் வீட்டுக்கு போகல” என கண்ணீரும் பயமுமாக சொன்னாள்.

இருவருக்கும் பாலனை நினைத்து பயம் தொற்றிக் கொண்டது.

கணவனுக்கு ஏதோ ஆகி விட்டது என பயந்து போன பிரியா அழ ஆரம்பிக்க அவள் தோழிகள் சமாதானம் செய்தனர்.

மீண்டும் தன் அண்ணனுக்கு அழைத்தாள் பிரியா. அவன் எடுக்காமல் போக உத்ராவுக்கு அழைத்தாள்.

அவளும் அழுது கொண்டே, “மாமாவும் அவரும் போயிருக்காங்க பிரியா, என்னாச்சுன்னு தெரியலை” என்றாள்.

“அவர் பைக் ஓட்டிகிட்டு இருக்கும் போது கால் பண்ணிட்டேன் போல, அதை அட்டெண்ட் பண்ண போய்தான் அவருக்கு ஏதோ ஆகிடுச்சு” என அரற்றினாள் பிரியா.

தன் அழுகையை நிறுத்திய உத்ரா, “அண்ணனுக்கு எதுவும் ஆகியிருக்காது, நீ அமைதியா இரு. என்னன்னு தெரிஞ்சதும் நான் கால் பண்ணி பேசுறேன்” என சமாதானம் சொல்லி அவளது தோழியிடம் கைபேசியை கொடுக்க சொல்லி பிரியாவை பார்த்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டு அழைப்பை முடித்தாள்.

யார் சொல்லியும் கேளாமல் உடனே ஊருக்கு புறப்பட வேண்டுமென பிடிவாதமாக புறப்பட்டு விட்டாள் பிரியா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement