Advertisement

ஜீவ தீபங்கள் -16

அத்தியாயம் -16(1)

பூமிநாதனும் நரேனும் சுயம்புலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். சுயம்புவின் பார்வை பேரனின் கையில் நிலைத்திருந்தது. பாலன் முறுக்கியதில் அப்போதே வீக்கம் ஏற்பட மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து முறிவு எதுவும் இல்லை என சொல்லி வலி நிவாராணிகள் கொடுத்து அனுப்பி விட்டனர். ஆனால் வீக்கமும் வலியும் குறைந்த பாடு இல்லை.

எலும்பு சம்பந்த பட்ட தொந்தரவுகளுக்கு என நாட்டு வைத்தியம் பார்க்கும் இடம் ஒன்று அருகில் ஒரு கிராமத்தில் உள்ளது. அங்கு சென்று காட்டி அவர்கள் தந்த எண்ணெய் தடவி வருகிறான் நரேன்.

“இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த வீட்டு பையன்னு சொல்லி சொல்லியே அவனை காப்பாத்துவீங்க? நம்ம கடை எதிர்லேயே கடை கட்ட போறான். என் மேல கை வச்சிட்டான், அப்பாவை ஸ்டேஷன்ல வச்சிட்டான்” பொங்கினான் நரேன்.

“அந்த ஆதவன் பேசுன பேச்சுக்கு சமயம் பார்த்து செய்யலாம்னு சொல்லிட்டு அப்புறம் நம்ம வீட்டு பொண்ண கட்டியிருக்கான், எதுவும் செய்யாதன்னு சொன்னீங்க. சரின்னு விட்டு தொலைச்சா இப்போ பாலனையும் ஒண்ணும் செய்யாதன்னு சொல்றீங்க. உங்களை மதிக்காதவங்க மேல இருக்க பாசம் கூட இருக்கிறவங்க மேல இல்லையே” பூமிநாதனும் கோவப்பட்டார்.

“வைத்தி பசங்கடா அவங்க ரெண்டு பேரும்” எடுத்து சொன்னார் சுயம்பு.

“நமக்கு தெரியாம பொண்ணு கல்யாணத்துக்கு போனவரை அடிச்சு விரட்டியிருக்கானுங்க அண்ணனும் தம்பியும். அவனுங்களே சித்தப்பாவ அப்பாவா மதிக்கிறது இல்ல” என்றான் நரேன்.

வேறு யாராக இருந்தாலும் தயவு பார்க்க மாட்டார்தான் சுயம்புலிங்கம். நேரடியாக மோதுவதை காட்டிலும் தந்திரமாகத்தான் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள பார்ப்பார். ஆனால் பாலன் சிறு வயதில் அவர் தூக்கி வளர்த்த பிள்ளை. தன் இரத்தம் தன் வம்சம் என ஏதோ ஓர் ஒட்டுதல் உண்டு.

பாலனது பழி தீர்க்கும் உணர்ச்சி அறிந்து இவருக்கும் பயம் என்றாலும் அதற்காக ஆட்கள் வைத்து அவனை எதுவும் செய்யும் அளவிற்கு மனதில் துணிவு வரவில்லை.

“அவன் வளர்ச்சியை தடுக்க வேறு ஏதாவது செய்யுங்கடாப்பா, இடத்த வாங்கியிருக்கான் அவ்வளவுதானே? ஜவுளிக்கடை எல்லாம் ஆரம்பிக்காத படி ஏதாவது பண்ணி விடுங்க. ஆனா அவனை ஏதும் செய்திடாதீங்க” என்ற சுயம்புலிங்கத்தை முறைத்து பார்த்து விட்டு அப்பாவும் மகனும் நகர்ந்தனர்.

நரேன் யோசனையாக இருக்க, “அப்பாக்கு தெரிய வேணாம், நீ ஏற்பாடு பண்ணுடா, நாம செஞ்சதா அப்பாக்கும் தெரிய வேணாம், எவனுக்கும் தெரிய வேணாம்” என்றார் பூமிநாதன்.

நரேன் குழப்பமாக பார்க்க, “நமக்கும் நடந்ததுக்கும் சம்பந்தமே இல்லைனு இருக்கணும். ரெண்டு மூணு மாசம் முன்னாடி அவன் கயிறு மண்டில வேலை பார்த்திட்டு நம்ம கடைக்கு வேலைக்கு சேர்ந்தானே… அவன் பேர் என்ன?” என விசாரித்தார்.

“யாரு…” என யோசித்த நரேன், “மனோகரா? கூட வேலை பார்த்தவ யாரையோ லவ் பண்ணினான்னு பாலன் வேலைய விட்டு அனுப்பினவனா?” எனக் கேட்டான்.

“ம்…” என பூமிநாதன் சொல்ல அர்த்தம் புரிந்தவனாக பார்த்தான் நரேன்.

இன்றிலிருந்து உத்ரா தன் மாமனாருடன் சூப்பர் மார்க்கெட் செல்வதாக இருக்க தயாராகிக் கொண்டிருந்தாள். நீல நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தவள் கப்போர்டை வெகு நேரமாக குடைந்து கொண்டிருக்க மருத்துவமனை செல்ல தயாராகிக் கொண்டிருந்த ஆதவன், “என்ன தேடுற?” என விசாரித்தான்.

“நான் போட்ருக்க இந்த சுடியோட துப்பட்டா காணோம்” என்றவள் இன்னும் மும்முரமாக தேடினாள்.

“உன் அண்ணன் வீட்ல விட்டுட்டு வந்திட்டியோ என்னவோ?”

“இல்ல, எடுத்திட்டு வந்ததாதான் நினைவு”

“பாரு உன்னாலேயே கன்ஃபார்மா சொல்ல முடியலை, வேற ட்ரெஸ் மாத்திட்டு கிளம்பு, ஈவ்னிங் அங்க போய் செக் பண்ணு” என்றான்.

உத்ராவுக்கும் இன்னும் தேடி நேரம் விரயம் செய்ய விருப்பமில்லை. ஆதலால் கையில் இரண்டு சுடிதார் டாப்களை எடுத்தவள் எது அணியலாம் என யோசிக்க, “ஹோய் ப்ளூதான் உன் ஃபேவரைட் கலரா?” எனக் கேட்டான்.

உத்ரா அவனை வியப்பாக பார்க்க, “போட்ருக்க ட்ரெஸ் ப்ளூ, கையில இருக்க ரெண்டுமே ப்ளூ. உனக்கு ப்ளூ மேனியான்னு தெரிஞ்சுக்க இது போதுமே” என்றான்.

“சில விஷயங்கள் நம்மள அறியாமலேயே வெளிப் படுத்திடுறோம்ல?” சிறு புன்னகையோடு கேட்டுக் கொண்டே மீண்டும் எதை அணியலாம் என பார்த்தாள்.

“எப்பவுமே வெளிப் படுத்திட்டுதான் இருப்போம். ஆப்போசிட்ல உள்ள ஆளு ஷார்ப்பா இருந்தாதான் அதை கண்டுக்க முடியும்” என அவன் சொல்ல அவனை பார்த்து சிரித்தாள்.

“இந்த சிரிப்புக்கு என்ன மீனிங்? என்ன நான் ஷார்ப் இல்லைங்கிறியா?” என அவன் கேட்டதற்கு பதில் தராமல் கண்ணாடி முன் நின்று இரு டாப்களையும் ஒவ்வொன்றாக தன் மீது வைத்து பார்த்தாள்.

“ரைட் ஹேண்ட்ல உள்ளது போட்டுக்கோ” என்ற ஆதவனின் பேச்சில் திகைத்து போய் அவள் பார்க்க, “என்ன?” எனக் கேட்டான்.

இல்லை என தலையாட்டியவள் அந்த டாப்பையே அணிவதாக முடிவு செய்து அதன் பாட்டம் துப்பட்டா எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவனிருந்த திசையை பார்க்க அவன் எப்போதோ வெளியேறியிருந்தான்.

அவன் தேர்வு செய்த ஆடை என்பதாலோ என்னவோ தான் இந்த உடையில் மிக அழகாக இருப்பது போல தோன்றியது அவளுக்கு.

உணவு மேசை வந்தவள் தன்னை அவன் ஆவலாக பார்க்கிறானா என நப்பாசை கொண்டு அவ்வப்போது பார்க்க அவனோ வெகு சாதாரணமாக இருந்தான்.

ஒரே நாளில் தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்க கூடாது என்ற புரிதலோடு தன்னை தேற்றிக் கொண்டாள்.

சாப்பிட்ட பின் தாத்தா பாட்டியிடம் சொல்லிக் கொண்டவள் மாமியாரிடமும் கிளம்புவதாக சொல்ல “ம்ம்…” என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சொன்னார் துர்கா.

கவனித்த ஆதவன் அம்மாவை எதுவும் சொல்லாமல், “தினம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு இருக்க முடியுமா உன்னால? இந்த ஃபார்மாலிடீஸ்லாம் வேணாம், வா சீக்கிரம்” என்றான்.

மலையரசன் கிளம்பி சென்று விட்டது அப்போதுதான் உத்ராவுக்கு தெரிந்தது. பாட்டிதான் இவன் அழைத்துக் கொண்டு போய் விடட்டும் என சொல்லியிருந்தார், ஆதவனும் மறுப்பாக எதுவும் சொல்லயிருக்கவில்லை.

“நீங்களா அழைச்சிட்டு போறீங்க?” கேட்டே விட்டாள் உத்ரா.

“டெய்லி கரெக்ட்டா இந்த டைம் ரெடி ஆகிட்டீனா இன்னிக்கு மட்டுமில்ல, தினமும் நானே கொண்டு போய் விடுவேன். மதியம் அப்பா அழைச்சிட்டு வருவார். ஏன் உனக்கு எதுவும் இதுல சேஞ்ச் பண்ணனும்னு தோணுதா?” எனக் கேட்டான்.

“நம்ப முடியாம டவுட்ல கேட்டா ஆமாம்னு ஒரு வார்த்தைல பதில் சொல்லுங்க. என் கேள்விய டைவெர்ட் பண்ணாதீங்க” என உத்ரா சொல்ல சிறு சிரிப்பும் சிறு தலையாட்டலுமாக ஆதவன் முன்னே நடக்க உத்ராவின் முகம் மலர்ந்து போய் விட்டது.

ஆதவனின் காரில் புறப்பட்டனர் இருவரும். உத்ராவுக்கு அந்த பத்து நிமிட நேர பயணம் சில நொடிகளில் முடிந்தது போலிருந்தது. சூப்பர் மார்க்கெட்டில் இறக்கி விட்டவன் வாழ்த்துகள் வேறு சொல்ல அவளுக்கு மயக்கம் வராத குறைதான்.

சிறு வயது முதலே உத்ராவிடம் எப்போதும் ஆதவன் முகம் காட்டியது இல்லை, நெருங்கி பழகியதும் இல்லை. வருணும் இவனும் ஒரே வகுப்பு என்பதால் அடிக்கடி அவர்கள் சண்டை போட்டு கொள்வார்கள். ஒரு முறை ஏதோ பெரிய கைகலப்பு போல இருவருக்குள்ளும். அதன் காரணமாக சில நாட்களாக பார்த்தாலே முறைத்துக் கொண்டு திரிந்தனர்.

அன்று வருணுக்கு காய்ச்சல் என்பதால் பள்ளிக்கு வரவில்லை. ஆதவனின் நண்பன் வருணை பழிவாங்குவதாக நினைத்து உத்ராவின் சைக்கிள் டயரில் காற்றை பிடுங்கி விட்டான். உத்ராவும் அங்கு வந்து விட்டவள் அவனிடம் கேள்வி கேட்டு திட்ட ஆதவனும் அங்கு வந்துவிட்டான்.

ஆதவனும் அவன் நண்பனை போலத்தான் பேசப் போகிறான் என உத்ரா நினைத்திருக்க அவனோ நண்பனிடம், “சண்டை எனக்கும் அந்த வருணுக்கும்தான். இவ என் அத்த பொண்ணு. இன்னொரு முறை இவகிட்ட ஏதாவது வம்பு பண்ணின ஃப்ரெண்ட்டுன்னு பார்க்க மாட்டேன்” என கடிந்து கொண்டான்.

அத்தோடு நிறுத்தாமல் உத்ராவின் சைக்கிளை அவனே எடுத்து சென்று டயரில் காற்று அடித்து கொண்டு வந்து கொடுத்தான். அப்போது உத்ராவுக்கு பதினோரு வயதிருக்கும். முதல் முறையாக ஆதவனை நல்லவன் என்ற கண்ணோட்டத்தில் காண ஆரம்பித்தாள்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டதே இல்லை. ஆதவன் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சென்ற பின் பிரியா பேச்சு வாக்கில் அவளது அண்ணன் பற்றி சொல்வதை கேட்பதோடு சரி, அவனை நேரில் கண்டதும் இல்லை, அவனை பற்றி பெரிதாக யோசித்ததும் இல்லை. ஆனால் அவன் நல்லவன் எனும் எண்ணம் மட்டும் உத்ராவின் மனதில் ஆழமாக பதிந்து போயிருந்தது.

உத்ரா இன்ஜினியரிங் படித்தது சென்னையில். அப்போது வருண் திருச்சியில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். தங்கையை கல்லூரி சேர்த்து விட்ட பாலனுக்கு ஆதவன் சென்னையில் இருப்பது தெரிந்தும் அவனிடம் கவனித்து கொள் என்றெல்லாம் சொல்லியிருக்கவில்லை.

முதல் வருடம் படிக்கும் போது சீனியர் மாணவன் காதல் தொல்லை செய்ய தோழியின் யோசனை படி “எனக்கு என் மாமா மகனோடு நிச்சயம் ஆகி விட்டது” என பொய் சொன்னாள் உத்ரா.

அவன் நம்பவில்லை. ஆதலால் வேறு வழியின்றி ஆதவனும் சென்னையில் படிப்பது பற்றி சொல்லி, “எங்க படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்” என்றாள்.

 அவனும் ஆதவன் என ஒருவன் இருப்பதை உறுதி படுத்தி உத்ரா சொல்வது உண்மைதான் என விலகி விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement