Advertisement

ஜீவ தீபங்கள் -15

அத்தியாயம் -15(1)

“இது பேரு பூரின்னு சொல்லிடாத கேட்டவங்க சிரிக்க போறாங்க” மருமகள் சுட்ட பூரி உப்பாது போனதால் நக்கல் செய்தார் துர்கா.

உத்ரா பதில் கொடுக்கும் முன், “அவ பெரிய படிப்பு படிச்சு பெரிய வேலைல இருந்தவ. பூரி உப்பலைனா போகுது, எப்படினு பதமா சொல்லி கொடுக்கிறத விட்டுட்டு நையாண்டி பண்ணுவியா?” சிலிர்த்து கொண்டார் வள்ளிக்கண்ணு.

“ம்ம்… ஏன் நான் வந்த புதுசுல நீங்க செஞ்ச நையாண்டி விடவா நான் பண்றேன். வர்றவ கூட உங்க கூட கூட்டு சேரணும்னுதான உங்க பேத்திய கொண்டு வர நினைச்சீங்க? நான் ஆசையா கொண்டு வர நினைச்ச பொண்ண வர விடாம நான் பெத்த கழுதையே நாசமாக்கி விட்டுட்டாளே” என புலம்ப தொடங்கினார் துர்கா.

“தேவையில்லாத விஷயத்தை எல்லாம் இழுக்காதீங்க, பிரியா என்ன செஞ்சான்னு அவளை திட்டுறீங்க. என்ன செஞ்சா பூரி உப்பும்னு சொல்லுங்க” என சமாதானம் செய்ய பார்த்த உத்ரா விதாண்டாவாதத்தை தடுக்க நினைத்து பாட்டியையும் அங்கிருந்து அனுப்பி விட்டாள். ஆனால் அப்படி அடங்குபவர் இல்லையே துர்கா.

“உன் அம்மாச்சி இருக்காங்களே…” என ஆரம்பித்து கடந்த காலத்தில் மாமியாராக வள்ளிக் கண்ணு செய்ததை குறையாக புலம்பி, “சமையல்கட்டு ஒண்ணுதான் என் ராஜாங்கமா இருந்துச்சு, அதையும் நீயே கட்டி ஆளு” என குதர்க்கமாக சொல்லி அவரது அறைக்குள் புகுந்து கொண்டார் துர்கா.

உத்ரா அவளது பிறந்த வீட்டில் இருந்தவரை சமையலுக்கு ஆள் உண்டு. கல்லூரி விடுமுறையில் வீடு வரும் போது வடிவம்மாள் உதவியோடு ஆசைக்காக ஏதாவது செய்து கொள்வாள். விடுதி வாசம் என்பதால் அத்தியாவசியமாக சமைக்க வருமே தவிர பக்குவம் எல்லாம் தெரியாது.

இங்கு மேல் வேலைக்கு ஆள் இருந்தாலும் சமையல் துர்காதான். முடிந்த வரை மாமியாருக்கு உதவிகள் செய்கிறாள்தான், ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார் துர்கா.

 இன்று காலையிலும் உத்ராவே தானாக காயெல்லாம் நறுக்கி தருகிறேன் என்றதற்கு வேண்டுமென்றே மாவு பிசைய சொல்லி விட்டார். பதமாக பிசைய படாத மாவு உப்பி வரவில்லை.

தன் மருமகள் அறைக்குள் அடைந்து கொண்டிருப்பது கண்டு விட்டு மீண்டும் சமையலறை வந்தார் வள்ளிக்கண்ணு.

 “பூரி வரலை, இப்போ என்ன செய்ய அம்மாச்சி?” என பாட்டியிடம் உத்ரா கேட்க, அதே நேரம் “அம்மா…” உணவு மேசையில் அமர்ந்திருந்த ஆதவன் உணவுக்காக சத்தமிட்டான்.

பாவமாக தன் அம்மாச்சியை பார்த்தாள் உத்ரா.

“தோசை மாவு இருந்தா தோசையா ஊத்திக் கொண்டு போய் வை” என பாட்டி யோசனை சொல்ல வேகமாக அப்படியே செய்தவள் ஆதவனுக்கு தோசை பரிமாறினாள்.

“இதென்ன பூரி கிழங்கு செய்திட்டு தோசை தர்ற?” என ஆதவன் விசாரிக்க மலையரசனும் சாப்பிட வந்து விட்டார். தாத்தா பாட்டி எப்போதும் காலை வேளையில் தானிய கஞ்சிதான் பருகுவார்கள்.

“பூரி சரியா வரலை, அதான் தோசை ஊத்தினேன்” என உத்ரா சொல்ல, “துர்கா எங்கம்மா?” எனக் கேட்டார் மலையரசன்.

உத்ரா பதில் சொல்லாமல் நிற்க, “உன்கிட்டதானே கேட்குறார்” என ஆதவனும் கேட்டான்.

மகனுக்கும் தோசை கொண்டு வந்து வைத்த பாட்டி எல்லாம் சொல்லி, “புதுசா வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட போய் மோடி வைக்கிறாடா. நீங்களும் ரோதனை பண்ணாம செவனேனு சாப்பிடுங்க” என்றார்.

“சரி சரி தோசைக்கும் இந்த மாசாலாவுக்கும் கூட டேஸ்ட் நல்லா இருக்கே” என்ற மலையரசன் சாப்பிட ஆரம்பிக்க ஆதவனும் அமைதியாக சாப்பிட அடுத்த தோசைகள் வார்க்க சமையலறை சென்று விட்டாள் உத்ரா.

“நீங்களே தனியா மூணு சூப்பர் மார்க்கெட் பார்க்க கஷ்டமா இல்லையா?” என அப்பாவிடம் கேட்டான் ஆதவன்.

“கஷ்டம்தான்டா, அதான் ரெண்டு பேரும் பல்லுக்கு படிச்சீட்டிங்க, என் பேச்சை எங்க கேட்டீங்க?” அங்கலாய்த்தார் மலையரசன்.

“உத்ராவ அழைச்சிட்டு போங்க. இங்க அம்மா பார்க்கட்டும், சமையலுக்கும் வேணும்னா கூட ஒரு ஆள் போட்டுக்கலாம்” என ஆதவன் சொல்லிக் கொண்டிருக்க கேட்டுக் கொண்டே தோசை எடுத்து வந்த உத்ரா வியப்பாக கணவனை பார்த்தாள்.

“என்ன உத்ரா, வர்றியாம்மா அங்க?” என மாமனார் உடனே கேட்க, “யோசிச்சு சொல்றேன் மாமா” என்றாள்.

“யோசிக்க என்ன இருக்கு? சமையல்கட்டுல ரெண்டு பேரும் பிரச்சனை பண்ணிகிட்டு தினம் எங்க தலையை உருட்ட நினைக்குறீங்களா?” எனக் கேட்டான் ஆதவன்.

“ஏய் ஏன் டா சுள்ளுங்கிற?” அதட்டினார் மலையரசன்.

“காலையிலேயே கடுப்பாகுதா இல்லையா? இன்னிக்கு பூரி உப்புது உப்பலைன்னு சண்டை. நாளைக்கு சட்னியில உப்பு இருக்கு இல்லைனு சண்டை வரும். நாம நிம்மதியா இருக்க ரெண்டு பேரையும் பிரிச்சுதான் வைக்கணும், அழைச்சிட்டு போங்க அவளை” என அப்பாவிடம் சொன்னவன் மனைவியை பார்த்து, “தோசை ஊத்தி நீயும் சாப்பிட்டு ரெடி ஆகு. அது வரைக்கும் இருக்க டைம்ல யோசிச்சுக்க” என்றான்.

உத்ரா அமைதியாக இருக்க, “இவன் இப்படித்தான் உத்ரா, கொஞ்சம் பதமா சொன்னா உன் பக்கம் பேசுறதா அவன் அம்மாக்காரி நினைச்சுக்குவாளாம், அதான் கல்லடி பட்ட நாயாட்டம் வள் வள்ளுன்னு கத்திட்டே சொல்றான்” என வள்ளி பாட்டி பேத்தியை சமாதானம் செய்ய அஷ்ட கோணலான முகத்தோடு பாட்டியை பார்த்தான் ஆதவன்.

வந்த சிரிப்பை அடக்க முடியாமல் உத்ரா உள்ளே செல்ல பேரன் தட்டில் மசாலா கொஞ்சம் பரிமாறிய பாட்டி, “எழுந்து போய்டாதடா மொறுவலா இன்னும் ரெண்டு தோசை போட்டு எடுத்திட்டு வருவா உன் பொண்டாட்டி” என்றார்.

அவன் முறைக்க, “கண்ணு உத்ரா தோசையில ரெண்டு சொட்டு நெய் ஊத்தி கொண்டாந்து வை பயலுக்கு” என சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

ஆதவன் இப்போது தன் அப்பாவை முறைக்க, “ஏன் ம்மா என்ன குறைச்ச ன்னு ரெண்டு சொட்டுங்கிற நல்லா நாலு கரண்டி நெய்ய ஊத்த சொல்லு, என்னைய முறைக்கிறான் பார் பய” என மலையரசனும் வம்பு செய்தார்.

நெய் தோசையை ஆதவன் தட்டில் வைத்த உத்ரா, “மாமா, நான் அண்ணன்கிட்ட கேட்டுட்டு சூப்பர் மார்க்கெட் வர்றது பத்தி சொல்றேன்” என்றாள்.

சரி என சொல்லி விட்டு மலையரசன் புறப்பட்டு விட, “கல்யாணம் ஆகி இங்க வந்தப்புறமும் இன்னும் என்ன உங்க அண்ணாத்தேகிட்ட ஆலோசனை வேண்டி கிடக்கு? பிரியாவ காலேஜ் அனுப்பாதன்னு நான் சொன்னதுக்கு நான் தலையிட கூடாதுன்னு சொன்னார் உங்கண்ணன். இப்போ அவர் மட்டும் நம்ம விஷயத்துல தலையிடுவாரா?” என காய்ந்தான்.

“இப்போவும் எங்கண்ணன் வந்து தலையிடல, நான்தான் கேட்கிறேன்னு சொன்னேன். உங்க தங்கச்சி உங்ககிட்ட கேட்டு செய்ற மாதிரி நீங்க நடந்துக்கல. சும்மா என்கிட்ட கத்தாதீங்க” என உத்ரா பதில் தர, அவளை முறைத்து விட்டு அவனும் மருத்துமனை கிளம்பி விட்டான்.

தன் அண்ணனுக்கு அழைத்து பேசி யோசனை கேட்டாள் உத்ரா.

“மாமா தனியாதான் அல்லாடுறாங்க, போயேன், உதவியா இருக்கும் அவருக்கு” என்றான் பாலன்.

“இல்லண்ணா இவரோட அம்மா எதுவும் நினைப்பாங்களா? நான் அவங்ககிட்ட கேட்கணுமா ண்ணா?” தங்கை கேட்கவும் இதையெல்லாம் கணவனிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிடம் ஏன் கேட்கிறாள் எனதான் பாலனுக்கு தோன்றியது.

“அவங்க என்ன நினைப்பாங்கன்னு நமக்கு தெரியாது, ஆனா ஒரு வார்த்தை சொல்லிட்டே செய். இந்த ஆதவன் எங்க ஹாஸ்பிடல் போய்ட்டானா?”

“போய்ட்டார் ண்ணா”

“அவன் ஃப்ரீயா இருக்கும் போது வீட்டுக்கு வந்திட்டு போ, முன்னாடியே சொல்லிடு, நானும் வீட்ல இருந்துப்பேன்”

உத்ரா சரி என சொல்ல, நல்ல நாள் பார்த்து சொன்னவன் அன்றிலிருந்து போ என சொல்லி வைத்தான்.

துர்கா இருந்த அறையின் மூடிய கதவை எரிச்சலாக பார்த்த உத்ராவுக்கு இன்னும் கணவனின் மனம் கூட தனக்காக திறக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

நீண்ட மூச்சை வெளியிட்டு தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு தனக்கும் தோசை ஊற்றி சாப்பிட்டவள் அறைக்கு சென்றாள்.

உத்ரா அறைக்கு சென்ற பின் சாப்பிட்டு விட்டு மீண்டும் அவரது அறையில் முடங்கிக் கொண்டார் துர்கா. வேலை செய்யும் பெண்மணி வரவும் பாத்திரங்கள் ஒழித்து போட்டு விட்டு மதியம் என்ன செய்ய என பாட்டியிடம் கேட்டு சமையல் வேலையை தொடங்கினாள் உத்ரா.

இடையில் வந்த துர்கா, “இதென்ன உனக்கும் உன் புருஷனுக்கும் மட்டும் சமைக்கிறியா? நாங்க தனி சமையல் செய்துக்கணுமா?” என ஆரம்பித்தார்.

“எனக்கு அளவு தெரியலை, எப்படின்னு சொல்லுங்க செய்றேன்” என்றாள் உத்ரா.

“அதை முன்னாடியே வந்து கேட்ருக்கணும் நீ”

மூண்ட எரிச்சலை விழுங்கிக் கொண்டு, “ரூம் கதவு சாத்தியிருந்தது, தூங்குறீங்க போலன்னு நினைச்சேன். இப்போதான் கேட்குறேனே” என்றாள்.

“இதை கூட கத்துக்காம என்ன வளர்ந்தியோ. டாக்டரா இருந்தாலும் அந்த பொண்ணு சுதாவுக்கு சமையல் அப்படி தெரியுமாம். ஹ்ம்ம்… எங்களுக்கு கொடுத்து வைக்கல”

“இல்லையில்லை கொடுத்து வச்சிருக்கு, போங்க அந்த சுதாகிட்ட போங்க நீங்க” கோவமாக சொன்னாள்.

“என்னடி மரியாதை இல்லாம பேசுற?” என துர்கா அதட்ட, “எனக்கு சமைக்க வராதுதான், அதனால என்ன? நீங்களே சமைச்சிடுங்க. இன்னிக்கு மட்டுமில்லை தினம் நீங்களே செய்யுங்க. நான் அடுத்த வாரதிலேர்ந்து மாமா கூட சூப்பர் மார்க்கெட் போறேன்” என கோவமாக பொரிந்த உத்ரா சமையலறையிலிருந்து வெளியேறி விட்டாள்.

கோவம் கொண்ட துர்கா அடுப்பை அணைத்து விட்டு கணவருக்கு அழைத்து விவரம் கேட்க அவரும் ஆமாம் என்றார். உடனே வீட்டு வேலைகளை யார் பார்ப்பது என சண்டையிட ஆரம்பித்தார். ஆள் வைத்துக்கொள் என காலையில் மகன் சொன்னதை சொன்னவர், “உதவிக்கு ஆள் இல்லாம திண்டாடுறேன் நான். வேணும்னா உத்ரா வீட்ட பார்க்கட்டும், நீ வா என் கூட” என்றார்.

எப்போதும் துர்காவின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாதவர் மலையரசன். இப்போதும் எதிர்த்து பேசாமல் வேறு வகையில் மனைவி சொல்வது நடக்காது என்கிறார்.

“என்ன பேச்சை காணோம்? எனக்கு வேலை கிடக்கு நான் வைக்கிறேன்” என வைத்து விட்டார்.

மனதிற்குள் பொறுமிக் கொண்டே சமையலை கவனித்தார் துர்கா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement