Advertisement

அத்தியாயம் -14(2)

மீண்டும் பணிக்கு திரும்பிய பிரியாவின் முகக் கலக்கத்தை கண்ட தேஜ் என்னவென விசாரித்தான். ஏற்கனவே கௌதமால் இவனுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து பார்த்தவளுக்கு அவனை பற்றி சொல்ல தைரியம் வரவில்லை.

“ஹெச் ஓ டி திட்டினதையே நினைச்சிட்டு இருக்காத” என தேஜ் சொல்ல சரியென தலையாட்டிக் கொண்டாள்.

மாலை விடுதி திரும்பும் போதும் தன் பின்னால் வருகிறானா என கவனித்து பார்த்தாள். இல்லை எனவும் நிம்மதி அடைந்தாள். ஆனாலும் அவன் பேசிய விஷயம் அருவருப்பை தாண்டி உறுத்தலாக இருந்தது. இந்த அளவு பேசுபவன் இப்படியே விடுவான் என அவளுக்கு தோன்றவில்லை.

யாரிடம் சொல்வாள்? இங்கு யாரிடமும் சொல்லி அவர்களுக்கு தேஜுக்கு ஆனது போல ஆகி விட்டால் என்ன செய்வது? மீண்டும் கெளதம் வந்தால் எப்படி சமாளிப்பது என குழம்பிக் கொண்டிருந்தாள்.

இவளை விடுதியில் விட்டுத்தான் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்வாள் ஹர்ஷினி. தோழி வழக்கம் போல இல்லை என உணர்ந்து அவளும் என்ன என கேட்க தேஜிடம் சொன்னது போலவே சொல்லி சமாளித்து விட்டாள்.

இடம் வாங்கி விட்டதில் மிக சின்னதாக பாலனிடம் ஓர் ஆனந்தம். விரைவாகவே வீடு வந்து விட்டவன் வெகு நேரமாக மனைவியின் அழைப்பொலிக்காக காத்திருந்தான்.

மனம் மனைவியை தேடுவதை உணர்ந்து அவள் தன்னிடம் வர இன்னும் எத்தனை நாட்களாகும் என கணக்கு பார்த்து ‘இன்னும் இவ்ளோ நாளா?’ என நொந்து கொண்டான்.

இன்னும் பிரியா அழைக்காமல் போக அதற்கு மேல் பொறுமை இழந்தவனாக அவனே அழைத்தான்.

அவள் எடுத்த உடன், “என்ன ஏதும் படிச்சிட்டு இருக்கியா?” எனதான் விசாரித்தான்.

 வழக்கமாக அழைப்பவள் அப்படி செய்யாமல் போகவும் படிக்கிறாளோ என நினைத்து விட்டான். கெளதம் தன்னை பார்க்க வந்தது பற்றி கணவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அவனுக்கு அழைத்திருக்கவில்லை பிரியா.

“பிரியா…”

“ஹ ம்… சொல்லுங்க”

“என்ன பிஸியா நீ? சாப்பிட்டீல்ல… நான் வைக்கவா?”

“இல்ல பிஸிலாம் இல்ல”

“வேற என்ன பிரச்சனை?”

“பிரச்சனையா அதெல்லாம் இல்லையே”

“அப்புறம் நீ கால் பண்ணல? சரி விடு, நாள் எப்படி போச்சு?”

“ம்… நல்லா போச்சு”

“என்னாச்சு பிரியா உனக்கு?”

“என்ன?”

“இந்நேரம் பல்ல பேத்த கதை உன் ஹெச் ஓ டி முறைச்ச கதைனு மூச்சு விடாம பேசியிருப்பியே… உண்மைய சொல்லு, என்ன நடந்துச்சு இன்னிக்கு?” அதட்டினான் பாலன்.

முன்னர் நடந்ததும் அவனது குடும்பம் பற்றி அண்ணன் சொல்லியிருந்ததும் நினைவு வர கெளதமால் பாலனுக்கு ஏதும் ஆபத்து வருமோ என்ற பயம் எதையும் சொல்ல விடாமல் அவளை தடுத்தது.

“இன்னிக்கு ஸ்கேலிங் (பற்கள் சுத்தம் செய்யும் செயல்முறை) பண்ணினேன் ஒரு பேஷண்ட்டுக்கு. ரொம்ப டைம் எடுத்துகிட்டேன், அப்பவும் இன்னொரு சிட்டிங் வர சொல்ற மாதிரி ஆகிடுச்சு. ஹெச் ஓ டி திட்டிட்டார்” என அன்று நடந்த சம்பவத்தையே தனது அமைதிக்கு காரணமாக கூறினாள்.

“அவ்ளோதானே, வேற இல்லையே?” இன்னொரு முறை அவன் கேட்டும் கெளதம் பற்றி வாய் திறக்கவில்லை அவள்.

“ஏன் லேட் பண்ணின, சரியா செய்யனும்தானே நீ?”

“அம்பது வயசு பேஷண்ட், கவனமாதான் பண்ண வேண்டியிருந்துச்சு”

இன்னும் அவளது வேலை சம்பந்தமாகவே அவன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அவளும் பதில் சொல்லிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில், “என்ன நீங்க விட்டா பல்லோட அனாடமி எல்லாம் கேட்பீங்க போல…” சலித்துக் கொண்டாள்.

“அதை ஏன் கேட்குற, கடையில பல்லு ஆடுறவன் பூச்சி பல்லு வந்தவன் எல்லாம் என்கிட்ட யோசனை கேட்குறான். எனக்கென்னடா தெரியும்னா அண்ணி பல் டாக்டர்தானே உங்களுக்கு தெரியாதான்னு வேற கேட்டு வைக்கிறானுங்க” என்றான்.

சிரித்தவள், “என்கிட்ட யாரும் கயிறு பத்தி செருப்பு பத்தி ஃபர்னிச்சர் பத்தி எல்லாம் கேட்க மாட்டேங்குறாங்க” என பொய் சோகத்தோடு சொன்னாள்.

“நான் யாருன்னு நீ சொல்லியிருக்க மாட்ட, தெரிஞ்சா கேட்பாங்க. எதுக்கும் தெரிஞ்சு வச்சுக்க” என்றவன் சில பொதுவான விஷயங்களை சொல்லி தர, “ஹையோ நிறுத்துங்க!” என அலறி விட்டாள்.

“என்ன பிரியா?”

“எப்பவும் அரை மணி நேரம் நாம பேசிகிட்டா இருபத்தெட்டு நிமிஷம் நான்தான் பேசுவேன், அந்த ரெண்டு நிமிஷம் கூட நீங்க ‘அப்புறம் வேற ம்’ னு சொல்றதுலேயே முடிஞ்சு போகும். இன்னிக்கு அதிகமா பேசுறீங்கன்னு சந்தோஷ படவா? பேட்டா செருப்பு பத்தி இன்னும் என்ன தெரிஞ்சுக்கலாம்னு யோசிக்கவா?”

“இப்போதான் நீ நார்மல் ஆகியிருக்க, பேசு நான் ம் போடுறேன்”

“எப்போ மூணரை மாசம் முடியும்?”

“ம்…”

“என்னங்க!” சிணுங்கினாள்.

“சின்ன புள்ள மாதிரி அதையே கேட்காத. மூணரை மாசம் முடியறப்பதான் முடியும்”

“எனக்கு வயசு இருபத்திரெண்டு!”

“நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும் இதை”

“ம்ம்… எனக்கு இன்னும் பொறுப்பு வரலை, எதை எப்படி செய்றதுன்னு தெரிய மாட்டேங்குது. எதுக்கெடுத்தாலும் யாரோட ஹெல்ப்பாவது தேவை படுது. இண்டிபெண்டண்ட்டா இருக்க மாட்டேங்குறேன்” விட்டால் அழுது விடுபவள் போல பேசினாள்.

தான் அடிக்கடி சின்ன பெண் என சொல்லிக் காண்பிப்பது பிடிக்கவில்லை என நினைத்தவன், “சரியாதான் சொல்ற, ஆனா நீ முயற்சி பண்ணினா மாறிக்கலாம்” என்றான்.

“என்ன செய்யணும் நான்?”

“உன்னால முடியாதுன்னு எதுவும் இல்லைனு நீ நம்பனும் முதல்ல. நீயே ட்ரை பண்ணி முடியலைன்னா மட்டும்தான் ஹெல்ப் கேட்கணும். நிறைய வெளி விஷயம் பார்க்கல நீ, உன் அப்பா வீட்ல பார்க்க விடல, அதான் இப்படி இருக்க. எதையும் நீயா செய்ய பழகிக்க, போக போக பெரிய பொண்ணு ஆகிடுவ” என்றான்.

“அப்படியா எல்லாத்தையும் சரியா ஹேண்டில் செய்ய கத்துக்குவேனா, என்னால முடியுமா?” சந்தேகமாக கேட்டாள்.

நோயாளிகளுக்கு செய்யும் செயல்முறைகள் சரிவர செய்ய வராமல் சொல்கிறாளோ என இப்போதும் தவறாக புரிந்து கொண்டவன், “ஒழுங்கா கவனமா இருந்தா முடியும். கத்துக்க வேண்டியது எல்லாம் நல்லா கத்துக்க. நான் வேற உன்னை நம்பி கிளினிக் வைக்க எல்லாம் இடம் தேடிட்டு இருக்கேன்” என்றான்.

பாலன் பேசியதில் தைரியம் வரப் பெற்றவள் உற்சாகமடைந்து, “இன்னும் நாம குடும்பமே நடத்த ஆரம்பிக்கல, அதுக்குள்ள கிளினிக் ஆரம்பிக்க போயாச்சா நீங்க?” எனக் கேட்க குரலை செருமினான் பாலன்.

“அடிக்கடி குதிரை மாதிரி எதுக்கு கணைக்குறீங்க?” என கிண்டல் செய்தாள்.

“ஏது?”

“அதான்…” என்றவள் அவனை போலவே குரலை செருமிக் காட்டி, “இப்படி சவுண்ட் விடுறீங்களே அதை சொன்னேன்” என்றாள்.

“அது அது… நேரம் ஆகிடுச்சு பாரு, போ, தூங்கு போ. காலைல எழுப்பி விடுறேன்”

“இப்போ என்ன பேசிட்டு இருந்தோம்? சவுண்ட்… இல்ல அதுக்கு முன்னாடி… ஹான்… சொல்லுங்க குடும்பமே நடத்தாம…”

“பிரியா!” அவனது அதட்டலில் அவளது பேச்சு நிற்க, “என்ன இருக்கியா?” என்றான்.

“ம்ம்… நீங்க சும்மா என்னை அதட்டுறீங்க, நான் கரெக்ட்டாதான் கேட்டேன்”

“குடும்பம் நடத்தறது எல்லாம் தெரியுமா உனக்கு?”

உடனே அவனிடம் வம்பு செய்யும் ஆசை தொற்றிக் கொள்ள, “ஏன் தெரியாம? காலையில உங்களை ரெடி பண்ணி சாப்பிட வச்சு அனுப்பி விடணும், மதியம் லஞ்ச் ரெடி பண்ணனும். நைட் டின்னர் கொடுத்து தூங்க வைக்கணும்” என்றாள்.

“ம்ம்… வேற?”

“வேற என்ன?”

“வேற என்ன… நீ சின்ன பொண்ணு கூட இல்ல, குழந்தை புள்ள, பேசாம தூங்கு”

“ஹான் முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டுட்டேன்”

“இன்னும் இருக்கா… சொல்லு கேட்கிறேன்” அவளிடம் பேசிக் கொண்டே வெளிக் கேட்டை பூட்டிக் கொண்டிருந்தான்.

“நைட் டின்னருக்கு அப்புறம்… நீங்க தூங்கறதுக்கு முன்னாடி…” ரகசியம் போல சொன்னவள் அடுத்து பேசாமல் நிறுத்த, அவள் சொல்ல வந்ததை அவனாக கணித்தவன் திடுக்கிடலில் பூட்டை பூட்டாமல் சாவியை கீழே தவற விட்டான்.

“டின்னர் தூக்கம் ரெண்டுக்கும் இடைப்பட்ட நேரத்துல…” காற்றில் மிதந்து வந்த அவளது கிறங்கும் குரலில் மயங்கியவன் உடனே தெளிந்து, “பிரியா!” என அதட்டினான்.

“சொல்ல விடாம அதட்டுங்க, அப்புறம் சின்ன பொண்ணுன்னு நீங்களே சொல்லிக்கோங்க” குறை பட்டாள்.

அவனை மீறி வந்த வெட்க சிரிப்பை உதிர்த்து சாவியை தேடி எடுத்து பூட்டிக் கொண்டே, “சரி சரி சின்ன பொண்ணுன்னு தெரியாம சொல்லிட்டேன். நேர்ல சொல்லு இதெல்லாம்” என்றான்.

“சூடா ஒரு கிளாஸ் பால் உங்களுக்கு கொடுக்கணும்னு சொல்ல நேர்ல வரணுமா நான்? போன்லேயே கேட்டுக்கோங்க. ஆனா தூங்கறதுக்கு முன்னாடி கண்டிப்பா பிரஷ் பண்ணிடனும், அப்புறம் எதுவும் சாப்பிட கூடாது சரியா?”

திண்ணைக்கு வந்திருந்தவன் அப்படியே நின்று பேந்த பேந்த விழித்தான்.

“லைன்ல இருக்கீங்களா? நைட் பிரஷ் பண்ணிடனும் சரிதானே, சொல்லுங்க” என கொஞ்சம் அதிகாரமாக கேட்டாள்.

என்ன சொல்ல என தெரியாமல் இவன் அமைதியாகவே இருக்க, விளையாட்டை கைவிட்ட பிரியா, “எனக்கு இவ்ளோதான் குடும்பம் நடத்தறது பத்தி தெரியும், வேற எப்படில்லாம் நாம குடும்பம் நடத்தலாம்னு நீங்கதான் சொல்லி தரணும்” என கிசு கிசுத்தாள்.

“அறுந்த வாலு! நேர்ல இருந்த போட்ருப்பேன் நாலு. ஓடு போய் கண்ண மூடி தூங்கு” பாலனின் குரலில் தெரிந்த துள்ளலில் அவளும் பரவசம் கொண்டு, “இப்போ குட் நைட், அப்புறமா குட் நைட்டுக்கும் குட் மார்னிங்க்குக்கும் இடையில உள்ள டைம்ல குடும்பம் நடத்தற கிளாஸ். குட் நைட்!” என்றாள்.

அடுத்து பாலன் திட்டுவதற்குள் அவனை புரிந்தவளாக அழைப்பை துண்டித்திருந்தாள் பிரியா.

கணவனிடம் பேசிய பின் பிரியாவுக்கு அவளது மனக் கிலேசம் எல்லாம் மறைந்தது போலதான் இருந்தது.

இன்னொரு முறை கெளதம் வந்து தொல்லை செய்தால் நிர்வாகத்தில் புகார் கொடுத்து விடலாம், அவரை இழுத்தடிக்க கூடாது, நானே சமாளிப்பேன் என தைரியமாக நினைத்துக் கொண்டு உறங்க சென்றாள்.

பாலன் அறைக்கு திரும்பாமல் திண்ணையிலேயே இரு கைகளையும் தரையில் ஊன்றி கால்களை நீட்டி தளர்வாக அமர்ந்து கொண்டான். உடல் சோர்ந்திருந்த போதும் உறக்கம் வரும் போல தெரியவில்லை.

சிறு பெண் என இவன் சொல்லிக் கொண்டிருப்பவளின் எண்ணங்கள் கொதி நிலை அடைந்த உலைப் பானையில் எழும் குமிழிகளாக எழுந்து அவனை படுத்த ஆரம்பித்தன.

வாழ்க்கையில் முதல் முறையாக இரவின் குளுமையை அனுபவித்து ரசித்தான். வெளிப் பக்கம் ஓரமாக இருந்த தென்னை மரங்கள் அவனை பார்த்து குசலம் விசாரித்து ஆனந்தம் கொள்வது போல பிரம்மை ஏற்பட்டது. தென்றலில் இசைந்தாடும் தென்னங்கீற்றுகளின் வடிவம் அழகாக தோன்றியது.

நன்றாக சாய்ந்து விட்டவன் கண்களை மூடிக் கொள்ள மாசில்லாத பளிங்கு போன்ற வள்ளிபிரியாவின் எழில் முகம் மதியையும் மனதையும் நிறைத்தது.

அந்த மோன நிலையில் மனைவியை நினைத்து தன்னை எப்படி மாற்றி விட்டாள் என்பதை நினைத்து அவனிடம் மோகனப் புன்னகை ஒன்று உதயமானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement