Advertisement

அத்தியாயம் -13(2)

“ஹாஸ்பிடல் ஒண்ணும் பிக்னிக் ஸ்பாட் இல்லங்க சுத்தி பார்க்க, எமர்ஜென்சின்னு வந்தார்” என்ற உத்ராவின் குரல் கேட்டு சுதா திரும்ப ஆதவனும் சுதாவின் பின்னால் பார்த்தான்.

உத்ராவை பார்த்த சுதா இளக்கார சிரிப்போடு வாழ்த்து கூற, அவள் தடுமாற்றம் ஏதும் இல்லாமல் அலட்சிய பாவனையில் நன்றி சொன்னாள்.

“எமெர்ஜென்சின்னா இப்போ எல்லாம் வைஃப கூட கூட்டிட்டு வரணும் போல” என நக்கல் செய்த சுதா, “ஒரு வேளை என் வாழ்க்கைய பாரேன்னு என்கிட்ட காட்ட வந்தீங்களா மிஸஸ் ஆதவன்?” என குதர்க்கமாக கேட்டாள்.

“நீங்க யாருங்க எனக்கு?” எனக் கேட்டாள் உத்ரா.

“உத்ரா!” அடக்க பார்த்தான் ஆதவன்.

“ஓ அதுக்குள்ள மறந்தாச்சா? அது சரி இனி நான் எப்படி உங்க ஞாபகத்துல இருப்பேன்?” சுதாவின் பேச்சு உத்ராவிடம் இருக்க பார்வை ஆதவனிடம் இருந்தது.

“நான் நல்ல விதமா பேச எனக்கு நீங்க ஃப்ரெண்ட்டும் இல்ல, உங்களை ஹர்ட் பண்ண நீங்க என் எதிரியும் இல்ல. நீங்க எனக்கு யாருமே இல்ல” அடிக் குரலில் உறுமினாள் உத்ரா.

“உத்ரா…” அழுத்தமான கண்டிப்பு ஆதவனிடமிருந்து வெளிப் பட்டது.

“ஆமாம் நான் யாருமே இல்லைதான்” ஆற்றாமையாக ஆதவனை பார்த்துக் கொண்டே சுதா சொல்ல, “தெரிஞ்சா சரி” என்றாள் உத்ரா.

“சுதா…” என்ன சொல்லி சமாதானம் செய்ய இவளை என ஆதவன் தடுமாறி நிற்க, அவனருகில் சென்று அவன் கையை உரிமையாக பிடித்த உத்ரா, “வேலை முடிஞ்சுதுன்னா நாம போலாமா?” எனக் கேட்டாள்.

ஆதவன் அவளது கையை விலக்க முனைய, விடாமல் அழுத்தி பிடித்து அவனை கோவமாக பார்த்தவள், “போலாமான்னு கேட்டேன் உங்களை” என்றாள்.

இனியும் அங்கு நிற்க வேண்டாம் என நினைத்தவன் வெளியே செல்ல நடந்தான். அவர்களுக்குள் சரியில்லை என்பது புரிய சுதாவுக்கு இதமாக இருந்தது.

பார்க்கிங் வந்த பின் “அவ கஷ்ட பட்டுட்டு இருக்கும் போது இப்படித்தான் நடந்துப்பியா உத்ரா? ஷேம்லெஸ் இடியட்!” சீற்றமாக சொல்லி அவளது கையை வேகமாக உதறி விட்டான் ஆதவன்.

“ப்ரொவோக் பண்ற மாதிரி அவதான் நடந்துகிட்டா. அவளையெல்லாம் பொறுத்து போகணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை” என உத்ராவும் சீறினாள்.

“உத்ரா! நீயும் பொண்ணுதானே? அவ வருத்தம் உனக்கு புரியலையா?”

“கட்டினவன் மனசுல நான் இல்ல, அவரோட முன்னாள் காதலிக்காக உருகும் புருஷன்… அவ வாழ்க்கைய நான் பிடுங்கிட்டேன் மாதிரி பேசுறவளை ஸ்டாப் பண்ண துப்பில்ல, அவ மனசு புரியலையான்னு என்னை கேள்வி கேட்குறீங்க… ஹும்! இங்க என் மனசு என்ன பாடுபடும்னு உங்களுக்கு புரியலைல?”

“உனக்கு என் கூட மேரேஜ் ஆகிடுச்சு, லாஸ் அவளுக்குத்தான்” இன்னும் அவளுக்கே பரிந்து பேசுபவனை கண்டு உத்ராவின் ஆத்திரம் இன்னும் இன்னும் அதிகமாகியது.

“நல்ல வேளை அவளுக்கு மட்டும்தான் லாஸ்னு சொன்னீங்க…”

“அஃப்கோர்ஸ் எனக்கும்தான் டி லாஸ்” ஆத்திரத்தில் வார்த்தை விட்டான்.

அவன் பேசியதை ஜீரணிக்க முடியாமல் உத்ரா நிற்க, “சுதா அஃபெக்ட் ஆகியிருக்கா, அவ கோவம் நியாயமானது. நான் நீ எல்லாம் பொறுமையாதான் போகணும் அவகிட்ட” என்றான் ஆதவன்.

“ஸ்டுபிட் மாதிரி பேசாதீங்க, இந்த கல்யாணமே நான் பண்ணியிருக்க கூடாது. நீங்க ரொம்ப மோசம்” என கத்தினாள்.

“தெரிஞ்சுதானே கட்டிக்கிட்ட? நான் சொல்லியும் நிறுத்தலைதானே கல்யாணத்த? அப்போ அனுபவி டி!” பற்களை கடித்துக் கொண்டு கூறியவன் காரில் ஏறிக் கொண்டு உத்ரா ஏற காத்திருந்தான். மனதில் ஏற்பட்ட வலியை வெளிப் படுத்தாமல் அடக்கிக் கொண்டு பின் இருக்கையில் அமர்ந்தாள் உத்ரா.

ஆதவனின் கோவத்தை காட்டியது காரின் வேகம்.

வீடு வந்த பின் ஒருவரை ஒருவர் தவிர்த்தனர். மாலையே இவர்களை கவனித்திருந்த வடிவம்மாள் இவர்களுக்குள் ஏதோ சரியில்லை என பிரகதீஸ்வரியிடம் சொல்லியிருந்தார். இப்போது இருவரது முகத் திருப்பல் கண்டு பயந்து போனார் பிரகதீஸ்வரி.

அனைவரும் உறங்கிய பின் வருணை தேடி வந்த பிரகதீஸ்வரி தன் கவலையை பகிர, “சும்மா ஏதாவது சின்ன சண்டையா இருக்கும், சரியா போய்டும்” என சமாதானம் சொல்லி அவரை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்து அவர் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான்.

அம்மா உறங்கும் வேளையில்தான் பாலன் வந்தான். அம்மாவை தொந்தரவு செய்யாமல் சைகை செய்து வருணை வெளியில் அழைத்து சென்ற பாலன் எல்லாம் விசாரித்தான். அனைத்தும் சுமூகமாக நடந்ததாகவே தம்பி சொல்ல அவனை உறங்க சொல்லிவிட்டு தானும் உறங்க சென்று விட்டான்.

தங்கையை நினைத்துக்கொண்டே வருண் நின்றிருக்க உறக்கம் வராத ஆதவன் வெளியில் வந்தான். வருணை கண்டவன் உள்ளே செல்ல போக தன்னிடம் வர சொல்லி அழைத்தான் வருண்.

‘நீ கூப்பிட்டா நான் வரணுமா?’ எனும் பார்வை பார்த்த ஆதவன் உள்ளேயும் செல்லாமல் வருணிடமும் வராமல் நிற்க, அவன் கையை இழுத்துக் கொண்டு தள்ளி வந்து நிறுத்தினான் வருண்.

“என்னை தொடாதேன்னு மதியமே உனக்கு சொன்னேன்” கோவம் கொண்டான் ஆதவன்.

“என்னடா இன்னும் உனக்கு புத்தி வரலையா? என் தங்கச்சிய கஷ்ட படுத்திறியா நீ?”

வருணின் போக்கும் பேச்சும் ஆதவனை சீண்டி விடத் தவறவில்லை.

“ஆமாம்டா, அவளை டார்ச்சர் பண்ணுவேன். ஒவ்வொரு நொடியும் ஏன் டா இவனை கட்டுனேன்னு அவளும் இவனுக்கு ஏன் கட்டி வச்சோம்னு நீயும் நொந்து நொந்து அழணும். உன்னால என்ன பண்ண முடியும்?” எனக் கேட்ட ஆதவன் விடு விடு என அறை நோக்கி நடக்க அறையின் வாயிலில் நின்றிருந்தாள் உத்ரா.

தான் சொன்னதை அவளும் கேட்டு விட்டதில் திகைப்பு ஏற்பட்டாலும் “வழிய விட்ரி!” என அவளிடமும் சீறி விட்டு தரையில் போர்வை விரித்து படுத்தான்.

வருண் தன் தங்கையை கனிவாக பார்க்க, “நீ போய் தூங்கு வருண்” என்றவளும் அறைக்கு வந்து படுத்து விட்டாள்.

வருணுக்கு எப்படி ஆதவனை கையாள்வது என தெரியவில்லை. தங்கையின் திருமண விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் காலம் கடந்து அவனுக்கு ஏற்பட தலையை உலுக்கி கொண்டு ‘எல்லாம் சரியாகிடுவான்’ என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு உறங்க சென்றான்.

அடுத்த நாள் காலையிலேயே கணவனோடு புகுந்த வீடு சென்று விட்டாள் உத்ரா. மாலையில் வருணும் திருச்சி புறப்பட்டு விட்டான்.

நகரத்தின் முக்கியமான இடத்தில் இருந்தது அந்த கட்டிடம். பழமையான கட்டிடம். கீழ் தளம் முழுதும் சிறு சிறு கடைகளாக கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். முதல் தளம் லாட்ஜ் ஆக செயல் பட்டு கொண்டிருந்தது. பின் பக்கம் வண்டிகள் பார்க் செய்யவென இட வசதி. மதில் சுவரோடு அந்த இடம் முடிய சுவருக்கு அப்பால் பழைய பெரிய வீடு ஒன்று பூட்டி கிடந்தது.

தனது ஜவுளிக்கடை ஆரம்பிக்க அந்த இடத்தைத்தான் முடிக்க வேண்டும் என முயன்று கொண்டிருக்கிறான் சிவபாலன். சுவருக்கு அப்பால் இருந்த வீட்டை யாரும் இப்போது உபயோகிப்பது இல்லை. விற்பனைக்கு வருவதாக கூட தகவல் இல்லை. அதன் உரிமையாளர்கள் சென்னையில் குடியேறி விட்டனர்.

திருமணம் முடிந்து பிரியாவை சென்னையில் விட சென்ற போதே அந்த இடத்தின் உரிமையாளரை சந்தித்து பேசியிருந்தான் பாலன். அவர்களும் விற்க ஒப்புக் கொள்ள இன்று காதும் காதும் வைத்தது போல வாங்கியும் விட்டான்.

லாட்ஜ் இருந்த இடத்தின் உரிமையாளர்களாக மூன்று சகோதரர்கள் இருக்கின்றனர். முதலிலேயே மூவரிடமும் பேசி முன்பணமும் பாலன் கொடுத்து விட்டான். அதில் இருவர் பாலனுக்கு தர ஒப்புக் கொண்டதில் பிறழாமல் இருந்த போதும் திடீரென ஒருவர் மட்டும் இழுத்தடிக்கிறார்.

 பூமிநாதனும் நரேனும் அந்த இடத்தை தங்களுக்கு முடித்து கொடுத்தால் அவருக்கு தனியாக பணம் கொடுப்பதாக சொல்லி தங்கள் பக்கம் வைத்திருந்தனர்.

சுயம்புலிங்கத்தின் பாரம்பரிய ஜவுளி நிறுவனம் அந்த லாட்ஜுக்கு எதிர்புறத்தில்தான் இருக்கிறது. அங்கேயே தானும் போட்டிக்கு ஜவுளிக்கடை ஆரம்பிக்க வேண்டும் என பாலன் தீர்மானமாக இருக்க அதற்கு இடம் தராமல் பூமிநாதன் தரப்பு முயல்கிறது.

அந்த இடத்தின் சகோதரர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை. இழுபறி செய்து கொண்டிருந்தவர் வீட்டுக்கு மாலை வேளையில் மண்டியில் வேலை பார்க்கும் பாஸ்கரோடு பாலனே நேரில் சென்று பேசிக் கொண்டிருந்தான். தகவல் அறிந்து சற்று நேரத்தில் பூமிநாதனும் நரேனும் அங்கு வந்து விட்டனர்.

பணம் தருவதாக பாலன் சொன்னதில் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்திருந்தார் அந்த மனிதர். அவரது மனம் பாலன் பக்கம் சாயாமல் இருப்பதற்காக மிரட்ட ஆரம்பித்தான் நரேன்.

“அனாவசியமா பயப்படாதீங்க, உங்களுக்கு எதுவும் ஆகாம நான் பார்த்துக்கிறேன்” என்றான் பாலன்.

“என்னத்த பார்ப்பான் இவன்? இருபத்திநாலு மணி நேரமும் உன் கூட இருப்பானா? ஒண்ணும் செய்ய முடியாது இவனால. குரைக்கிறது எல்லாம் கடிச்சிடாதுன்னு சொல்வாங்கல்ல… அப்படித்தான் இவனும்” என நக்கலாக நரேன் சொல்ல அவனை அடித்திருந்தான் பாலன்.

அதிர்ந்த நரேன் ஆவேசமாக பாலனை தாக்க வர, சுதாரித்த பாலன் அவனது வலது கையை பிடித்து முறுக்க வலியில் துடித்தான். பயம் கொண்ட பூமிநாதன், “விடு அவனை, பெரிய பதவியில இருந்திட்டு இப்படி பண்ணுவியா? இதை வச்சு உன் மேல ஆக்ஷன் எடுக்க முடியும் என்னால” என்றார்.

“நல்லதா போச்சு, அஞ்சு பேருக்கு மட்டும் தெரிஞ்ச விஷயத்தை அம்பலம் பண்ணிட்டா நமக்கு செலவில்லாம விளம்பரம் ஆகிடும், அப்புறம் என்கிட்ட வச்சுக்க எல்லாருக்கும் பயம் வரும்” என்ற பாலன் நரேனை இழுத்துக் கொண்டு போய் வீட்டிற்கு வெளியில் தள்ளினான்.

பூமிநாதன் ஓடி சென்று மகனை கவனித்தார். அவனது கை வீக்கம் அடைந்திருக்க உடனடியாக மருத்துவமனை சென்று விட்டனர்.

“யாருக்காவது இடத்தை நீங்க கொடுத்துதான் ஆகணும். எனக்கு கொடுத்தா நான் சிக்கல் இல்லாம வாங்கிக்குவேன், இல்ல எனக்கு கொடுக்க முடியாதுன்னாலும் வேற எவனுக்கு கொடுத்தாலும் சரி, ஆனா இவனுங்களுக்கு கொடுக்க நான் விட மாட்டேன். முக்கியமான விஷயம் என்னன்னா வேற எவனுக்கும் கொடுக்க இவனுங்களும் விட மாட்டானுங்க. யோசிச்சு நாளைக்கு முடிவு சொல்லி விடுங்க. அப்புறம்… இப்போ நீங்க பார்த்த அளவுக்கு முரடன் இல்லைங்க நான்” என சொல்லி மெலிதாக சிரித்தான்.

 உரிமையாளர் பாலனையே பார்த்திருக்க, திடீரென முகம் இறுகிப் போனவன், “நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒருத்தன் எனக்குள்ள இருக்கான், அவனை சந்திக்க நினைக்காதீங்க, தாங்க மாட்டீங்க. வர்றேன்” கணீர் என பேசி கிளம்ப, திகைப்பிலிருந்து விடுபட முடியாமல் சமைந்து போயிருந்தார் உரிமையாளர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement