Advertisement

ஜீவ தீபங்கள் -13

அத்தியாயம் -13(1)

சிவபாலன் சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்க இங்கே எல்லாம் வருண்தான் பார்த்துக் கொண்டான். எல்லாம் சரியாக செல்ல மேட்னி ஷோ செல்லும் படி கூறி மாப்பிள்ளை கையில் டிக்கெட் கொடுத்தான் வருண்.

ஆதவன் கடு கடு என இருக்க அவன் தோளில் தட்டிக் கொடுத்த வருண், “சும்மா போயிட்டு வாங்க மாப்ள சார். வீட்லேயே இருந்தா போர் அடிக்கும்” என்றான்.

“டேய் சும்மா தோள்ல தட்டுறது முதுகுல தட்டுறதுனு இருந்த மூஞ்ச பேத்திடுவேன். கை வைக்கிற வேலை இனிமே வச்சுக்காத” மிரட்டி விட்டு டிக்கெட் வாங்கிக் கொண்ட ஆதவன், “நீ கொடுக்கிற டிக்கெட்ல படம் பார்த்தா எனக்கு தலை வலி கன்ஃபார்ம், அதனால…” நக்கல் சிரிப்போடு டிக்கெட்டுகளை கிழித்து போட்டான்.

கோவம் கொண்ட வருண் என்ன சொல்லியிருப்பானோ பிரகதீஸ்வரி வரவும் அமைதியாகி விட்டான்.

“ஏன் ஆதவா வீட்லேயே இருக்கீங்களே… எங்கேயாவது போலாம்தானே?” என கேட்டார் பிரகதீஸ்வரி.

ஆதவனிடம் அதிகம் பேசியதே இல்லை அவர். துர்காவும் அவனை அத்தையிடம் ஒட்ட விடாமல் செய்து விட்டார். அவனது சிறு வயது புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்தில் கைக்குழந்தையான ஆதவனை அவனது அத்தை தூக்கி வைத்திருப்பது போல ஒரு படம் உண்டு. அவரது கண்களிலேயே தெரியும் பாசம். அவனை மிகவும் கவர்ந்த புகைப்படமும் கூட.

விவரம் வந்த பின் அத்தையின் துன்பங்கள் அறிந்து இவனும் வருந்தியது உண்டு. அவரிடம் எதுவும் மறுப்பாக சொல்ல இயலாமல், “ஈவ்னிங் போல கோயில் போயிட்டு வர்றோம் அத்தை” என சொல்லி அறைக்கு சென்று விட்டான்.

பார்த்துக் கொண்டிருந்த உத்ரா, அம்மா சென்ற பின், “ஏன் வருண் சும்மா அவரை சீண்டிகிட்டே இருக்க?” என சலித்தாள்.

“எனக்கு மட்டும் ஆசையா? நான் நார்மலா பேசினா அவன் ரொம்ப முறுக்குவான். டிக்கெட்ஸ் கிழிக்கிறான், உன்னை கல்யாணம் செய்துக்கலைனா இந்நேரம் குருமா ஆக்கியிருப்பேன்” என வருண் சொல்ல முறைத்தாள் உத்ரா.

“போ போ… ரூம் போய் உன் முசுட்டு ஹஸ்பண்ட்ட கவனி, வெளில போறப்போ கார் வேணாம், பைக்ல போங்க”

“வேணாம் வேணாம் கார்லேயே போறோம்” என சொல்லி உத்ரா நகர, “எல்லாம் ஓகேதானே உத்ரா?” என கேட்டான் வருண்.

“ம்ம்…” என்றவள் வேகமாக சென்று விட்டாள்.

ஆதவன் படுக்கையில் படுத்துக் கொண்டே கைபேசி பார்த்துக் கொண்டிருக்க இவளை கண்டவன், “தூக்கம் வர்ற மாதிரி இருக்கு, சாயந்தரம் எழுப்பி விடு” என சொல்லி கைபேசியை வைத்து விட்டு கண்கள் மூடிக் கொண்டான்.

உத்ரா வெளியில் வந்து விட வருண் யாரிடமோ கைபேசியில் அதிகப்படியாக சிரித்தும் குழைந்தும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அங்கேயே நின்றாள். தங்கையை கண்டவன் உடனே அழைப்பை துண்டித்து விட்டு, என்னவென கேட்டான்.

“யாரு?” சந்தேகமாக கேட்டாள்.

“ஃப்ரெண்ட்” என மொட்டையாக சொன்னவன், “கடைக்கெல்லாம் போய் ஒரு முறை பார்த்திட்டு வர சொல்லி அண்ணன் சொல்லியிருந்தார், அம்மாகிட்ட சொல்லிடு, நான் வர்றேன்” என சொல்லி வெளியில் கிளம்பி விட்டான்.

சார்லியின் அருகில் தூணில் சாய்ந்து கால் நீட்டிக் கொண்டமர்ந்த உத்ரா அப்படியே உறங்கிப் போனாள். சிறிது நேரத்தில் சார்லியும் அவள் பக்கத்தில் துணையாக உறங்கியிருந்தது.

தானாக விழித்துக் கொண்டு வெளியில் வந்த ஆதவன் உத்ராவை பார்த்து விட்டு அப்படியே நின்றான். இரு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டவள் என்பதற்கு அடையாளமாக புது மஞ்சள் கயிறு மட்டுமே. முகம் களையே இல்லாமல் லேசாக வெளிறிப் போய் காணப் பட்டது. உற்று நோக்கினால் சொல்லப் படாத சோகம் இழைந்தோடுவது போலிருந்தது.

அவளை நோக்கி முன்னேறவும் முடியாமல் அப்படியே அவளை விட்டு செல்லவும் முடியாமல் கன்னியில் கால் வைத்தவன் போல தவித்து போய் நின்றிருந்தான்.

பிரகதீஸ்வரியின் அறையிலிருந்து வந்த வடிவம்மாள், “தம்பி காபி எதுவும் எடுத்திட்டு வரட்டுங்களா?” என கேட்க அந்த குரல் சத்தத்தில் விழிப்படைந்தாள் உத்ரா.

கணவனை கண்டு விட்டு “எழுந்திட்டீங்களா? எப்படி தூங்கினேன் தெரியலை” என சோர்வாக சொன்னாள்.

தனக்கு எதுவும் வேண்டாம் என வடிவம்மாளிடம் சொன்னவன் உத்ராவை பார்த்து, “சீக்கிரம் கிளம்பு, வெளில போலாம்” என்றான்.

எங்கே என்றெல்லாம் கேட்காமல், “நீங்க ரெடி ஆகுங்க, நான் வர்றேன்” என்றாள் உத்ரா.

“நான் கிளம்ப எவ்ளோ நேரம் ஆக போகுது? நீ ரெடி ஆகிட்டு கூப்பிடு” என சொல்லி அங்கேயே கிடந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவர்களை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்றார் வடிவம்மாள்.

உத்ராவை காரில் அழைத்துக் கொண்டு தியாகராஜேஷ்வரர் கோயிலுக்கு சென்றவன் பின் தெப்பக்குளம் சென்றான். அவன் பணி செய்யும் மருத்துவமனை அருகில் என்பதால் அங்குதான் செல்லப் போகிறான் என எண்ணியவள், “என்னை வீட்ல விட்டுட்டு ஹாஸ்பிடல் போங்க” என்றாள்.

“நான் லீவ்ல இருக்கேன்” என்றான்.

“அப்புறம் இங்க எதுக்கு?”

“தெப்பம் விடறதுக்கு” கிண்டலாக அவன் சொல்ல பதில் தராமல் அமைதியானாள்.

“வாக் போலாம். ரெண்டு நாள்ல வயித்த குடோனா மாத்திட்டாங்க. ரெண்டு சுத்து சுத்தி வெயிட் எவ்ளோ குறையுதுன்னு செக் பண்ணி பார்க்கலாம்” என்றவன் குளத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தான். அவனது ஹாஷ்யத்தில் சிரிப்பு வராத காரணத்தால் இறுக்கமான முகத்தோடு அவளும் அவனுடன் சேர்ந்து நடந்தாள்.

குளத்தின் பின்னணியில் சூரியன் அஸ்தமனம் ஆகும் இயற்கை காட்சியை பார்த்துக் கொண்டே அவள் நடக்க அவன் ஏதோ யோசனையோடு நடந்து வந்தான்.

ஐந்து நிமிட நேர நடைக்கு பின், “எனக்கு கொஞ்சம் டைம் தா” என்றான்.

நடையை நிறுத்தியவள் என்ன என பார்க்க அவனும் நின்று, “உன்னை, இந்த மேரேஜை அக்செப்ட் பண்ணிக்க டைம் வேணும் எனக்கு” என்றான்.

தலையசைத்த உத்ரா மீண்டும் நடக்க, “நமக்குள்ள நடக்கிறது எதுவும் பாலனுக்கு தெரியக்கூடாது, ப்ளீஸ்” என்றான்.

உள்ளத்தில் வேதனை பரவ அந்த வேதனையை பிரதிபலிப்பது போல சிரித்தவள், “பிரியாவுக்காக என்கிட்ட பொய்யா நார்மலா போறத விட கோவமா சண்டை போடறது பெட்டர். சில சமயங்கள்ல கோவம் கூட என் மேல காட்டுற உரிமைன்னு நானே சமாதானம் ஆகிடுவேன், ஆனா இது…” என்றவள் கலங்கிய கண்களை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டு முன்னேறி நடந்து சென்றாள்.

“நீயாவே இப்படிதான்னு அஸம்ப்ஷன் பண்ணிக்காத. பிரியாவுக்காகதான் பாலனுக்கு தெரிய வேணாம்னு சொன்னேன், ஆனா டைம் கேட்டது…” ஆதவன் சொல்லிக் கொண்டிருக்க அவன் குரல் கேட்காத தொலைவுக்கு சென்றிருந்தாள் உத்ரா.

“சொல்றதை கேட்க கூட பொறுமை இல்லாம அப்படி என்ன அவசரம்?” கடிந்து கொண்டே அவளை நோக்கி வேக எட்டுக்கள் எடுத்து வைத்தான்.

உத்ராவை அவன் நெருங்கும் வேளை மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. விபத்தில் சிக்கிய ஒருவனுக்கு தாடையில் அடிபட்டிருப்பதாகவும் உடனடியாக வரும் படியும் கூறப் பட வருவதாக சொல்லி வைத்தவன் உத்ராவிடம் விவரம் சொன்னான்.

“நீங்க கிளம்புங்க, நான் இங்க இருக்கேன், வருணுக்கு சொன்னா வந்து அழைச்சிட்டு போவான்” என்றாள்.

“இங்க எப்படி தனியா இருப்ப? என் கூட ஹாஸ்பிடல் வா, டைம் ஆகும்னா அப்புறம் வருணை வர சொல்லலாம்” என சொல்லி அவளையும் அழைத்து சென்று விட்டான்.

மருத்துவமனையில் அவனது ஆலோசனை அறையில் அவளை இருக்க சொல்லி விட்டு நோயாளியை காண சென்றான். சில நிமிடங்களில் அவனே கைபேசியில் அழைத்து, வர அரை மணி நேரமாகும் என சொல்ல காத்திருப்பதாக சொன்னவள் வெளியே வந்தாள்.

கொஞ்சம் நடந்து கேஷுவாலிட்டி வந்தவள் அங்கே சுதாவை கண்டு விட்டு திகைத்தாள். உடனே உத்ரா திரும்பிப் போக எத்தனிக்க சுதாவும் இவளை பார்த்து விட்டாள். எதிர்கொள்ளாமல் இப்படி தவிர்ப்பது சரியல்ல, சாதாரணமாக இருப்போம் என்றெண்ணிய உத்ரா திரும்பி செல்லாமல் இருக்கை ஒன்றில் அமர்ந்து விட்டாள்.

அருகில் இருக்கும் மருத்துவமனையில்தான் சுதா பணி செய்கிறாள். இந்த இரு மருத்துமனை நிறுவனர்களும் சகோதரர்கள். மருத்துவர்கள் விடுப்பில் செல்கையில் அவசியம் ஏற்பட்டால் தங்கள் மருத்துவர்களை அடுத்தவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பர். இன்றும் டியூட்டி மருத்துவர் திடீரென விடுப்பில் செல்ல நேரிட நோயாளிகளின் வருகையும் அதிகமாக இருக்க சுதா இங்கு வந்திருந்தாள்.

வீட்டில் இருந்தால் பைத்தியமே பிடித்து விடும் என நேற்றுதான் பணிக்கு திரும்பியிருந்த சுதாவுக்கு புது மஞ்சள் கயிறோடு உத்ராவை கண்டதும் தனக்கு கிடைக்க வேண்டியது என்ற நினைவில் பொறாமையும் கோவமும் இயலாமையும் சேர்ந்து வந்தது.

ஒரு நோயாளியை பரிசோதித்து விட்டு நுரையீரல் மருத்துவரை காணும் படி பரிந்துரை செய்து அனுப்பியவள் பத்து நிமிடங்களுக்கு யாரையும் அனுப்ப வேண்டாம் என சொல்லி டியூட்டி மருத்துவர் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்ற சுதாவுக்கு அழுகை பொங்கி வந்தது.

‘இப்போது உனக்கு சந்தோஷமா?’ என உத்ராவிடம் சூடாக கேட்க வேண்டும் என்றெண்ணிய சுதா, அழுத தடம் தெரியாமல் முகத்தை கழுவிக் கொள்ள ஆரம்பித்தாள்.

தன் அறைக்கு திரும்பிய ஆதவன் உத்ராவை காணாமல் அழைக்க, “காஸுவாலிட்டி முன்னாடி உட்கார்ந்திருக்கேன்” என சொன்னாள்.

ஆதவன் வரும் போது சுதாவும் வெளியில் வர இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழல் உருவானது. அவளை கண்டதும் உத்ராவின் கணவன் கண்களில்தான் எத்தனை பரிவு, கனிவு. ‘அடடா காண கண் கோடி வேண்டும்’ மனதிற்குள் பொறிந்த உத்ரா அவர்களையே பார்த்த வண்ணம் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.

சுதா நக்கலாக, “கங்கிராட்ஸ் ஆதவன்!” என்றாள்.

ஆதவனால் அவளை எதிர்கொள்ள முடியாமல் போக என்ன செய்வது சொல்வது என தெரியாமல் தவித்தான். அவனது பரிதவிப்பு உத்ராவை உக்கிரமடைய செய்தது.

“எங்க… உங்க வைஃப்க்கு ஹாஸ்பிடலை சுத்தி காட்ட அழைச்சிட்டு வந்தீங்களா?” என சுதா குத்தலாக கேட்க ஆதவன் இயலாமையோடு பார்த்திருந்தான்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்து விட்டாள் உத்ரா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement