Advertisement

அத்தியாயம் -12

இனியா சபரீஸ்வரன் திருமணம் நடந்து முடிந்திருக்க மாலையில் வரவேற்பு நடைபெற்று கொண்டிருந்தது. சபரி குடும்பம் திருவாரூரில் தியேட்டர் ஒன்றையும் பெட்ரோல் பங்க் ஒன்றும் வைத்து நடத்துகிறார்கள். இனியாவை போட்டோவில் பார்த்தே சபரிக்கு பிடித்து போய் விட மள மள என அடுத்த கட்ட வேலைகள் நடந்தி இனியாவை மனைவியாக்கிக் கொண்டான்

பூமிநாதன் காமாட்சி தம்பதியினரின் மூத்த மகள் சந்தியா அவள் கணவன் விவேக்கோடு வளைய வந்தாள். பூமிநாதனின் இரண்டாவது மகன் நரேன் வந்தவர்களை கவனித்து கொண்டிருக்க அவனுக்கு அடுத்த நரேஷ் வைத்தியநாதன் சுந்தரி தம்பதியினரின் மகன் கரணோடு பேசிக் கொண்டிருந்தான்

நரேஷ் எம் பி படித்துக் கொண்டிருக்க கரணும் இன்ஜினியரிங் கடைசி வருடத்தில் இருக்கிறான். இனியா நரேனுக்கு முறைப்பெண் என்றாலும் இருவரது ராசிகள் வைத்து அவர்களுக்கு பொருத்தம் இல்லை என்பதால் அவர்களுக்கு மணம் செய்வது பற்றி பெரியவர்கள் யோசித்தது கூட கிடையாது

இனியாவின் தங்கை சௌமியாவைதான் நரேனுக்கு செய்ய வேண்டும் என பெரியவர்களுக்கு ஆசை. நரேனுக்கும் சௌமியாவை பிடிக்கும். இதோ இப்போது கூட அக்காவின் திருமண வரவேற்பில் வெளிர் ஊதா லெஹங்கா அணிந்து சுற்றி சுற்றி வருபவளை அவ்வப்போது பார்த்த வண்ணமிருக்கிறான் நரேன்

பாப்பாத்தி அம்மாளின் அண்ணன் மகன்தான் இளங்கோவன். அந்த காலத்தில் உறவுக்குள் பெண் இருந்தால் வெளியில் செய்ய மாட்டார்கள். அப்படித்தான் சுயம்புலிங்கம் குடும்பத்தில் பெண் கொடுத்து பெண் எடுத்தார் இளங்கோவன். ஆமாம், பூமிநாதனின் மனைவி காமாட்சி இளங்கோவனின் அக்கா.

இளங்கோவனின் தங்கை சுந்தரியை வைத்தியநாதனுக்கு மணம் செய்யலாம் என பேச்சு எடுக்கையில் ஏதோ கோயிலில் தான் பார்த்த பிரகதீஸ்வரியின் அழகில் மயங்கிப் போய் அவரைதான் திருமணம் செய்வேன் என பிடிவாதம் செய்தார் வைத்தி

இரு குடும்பத்து பகையை முடித்து வைக்கலாம் என சொல்லி ரமணியின் மனதை பேசியே கரைத்து மகனின் ஆசையை நிறைவேற்றி வைத்தார் சுயம்பு. தன் தங்கையின் வாழ்க்கையை பறித்துக் கொண்டதாக எண்ணி காமாட்சியும் தன் அண்ணன் மகள் வாழ வேண்டிய இடத்தில் பகைவன் வீட்டு பெண் வாழ்கிறாள் என பாப்பாத்தியம்மாளும் பிரகதீஸ்வரியை சரியாக நடத்த மாட்டார்கள்.

வைத்தியநாதன் அன்பாகத்தான் நடப்பார். அவருக்காக எதையும் பொறுத்து கொள்ள தயாராக இருந்தார் பிரகதீஸ்வரி. அனுசுயாவுக்கு பிள்ளை பேறு தள்ளி சென்ற போதும் அவருக்கு ஆறுதலாக இருந்தது எல்லாம் பிரகதீஸ்வரிதான். இனியா பிறந்த போது நாத்தனாரை அப்படி கவனித்துக் கொண்டார்

சுந்தரிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க, ஒரு வார காலத்தில் அவரது கணவர் விபத்தில் இறந்து போக மீண்டும் அண்ணன் வீட்டுக்கே வந்து விட்டார்

உத்ரா ஒரு வயது குழந்தையாக இருந்த சமயம் பெரியகார்த்திகை அன்று அசம்பாவிதமாக பிரகதீஸ்வரிக்கு தீ விபத்து ஏற்பட்டது. உயிர் பிழைத்தாலும் தீ காயங்கள் அதிகம். முகத்தின் ஒரு பகுதி சிதைந்து போனது. மூன்று மாத காலம் மருத்துவமனையில் இருந்து விட்டு இன்னும் உடல் நலன் தேறாத காரணத்தால் தாய் வீடு சென்றார் பிரகதீஸ்வரி. உத்ராவை வள்ளிக் கண்ணு கவனித்துக் கொள்ள இங்கிருந்தே பாலனையும் வருணையும் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தார்

வைத்தியநாதன் அவ்வப்போது வந்து பார்த்து செல்வார். ஓரளவு உடல் நலன் தேறிய பின் பிரகதீஸ்வரி கணவர் வீடு செல்ல அப்போதுதான் வைத்தியநாதன் சுந்தரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

பிரகதீஸ்வரியின் அழகு போனதால் சுந்தரியை மணந்து கொண்டதாக பெரியவர்கள் முதற் கொண்டு அது சரியே என பேச பிரகதீஸ்வரியால் அந்த துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. குழந்தைகளை பார்த்துக் கொண்டு பிரகதீஸ்வரியும் இந்த வீட்டிலேயே இருக்கலாம் என பெருந்தன்மையோடு நடப்பது போல அவர்கள் சொல்ல தாலியை கழட்டி வைத்து விட்டு தன் பிள்ளைகளோடு தாய் வீட்டுக்கே வந்து விட்டார் பிரகதீஸ்வரி

விவாகரத்து என முறையாக செய்யா விட்டாலும் அவர்கள் பிரிந்து விட்டனர். தன் மகன்களை பார்க்க பள்ளிக்கு சென்ற வைத்தியநாதனை பார்க்க மறுத்து விட்டான் பாலன். யாருக்கும் தெரியாமல் பிள்ளைகளை பார்க்க வருவார் வைத்தி

வருண் கொஞ்சம் பெரியவனாக ஆன பின் பள்ளி வாயிலில் காத்திருந்த வைத்தியநாதனை கல்லை விட்டெறிந்து அடிக்க அவருக்கு காயமாகி விட்டது. அன்றிலிருந்து பள்ளிக்கு வருவதையே நிறுத்திக் கொண்டு விட்டார்

பிள்ளைகள் மீதிருந்த பற்று ஒன்றே பிரகதீஸ்வரி உயிர் சுமக்க காரணமாக இருக்க சில வருடங்களில் அம்மாவை கவனிக்கும் பொறுப்போடு உடன்பிறப்புகளின் பொறுப்பையும் தானே தாங்கி வளர்ந்து நிற்கிறான் சிவபாலன்

தன்னை அழகாக படம் எடுத்து தரும் படி கரணிடம் கேட்டு கொண்டிருந்தாள் சௌமியா

அதென்ன அழகா? உள்ளதைத்தான் நான் எடுத்து தர முடியும்என கரண் சொல்ல, சௌமியா முறைக்க, “எங்கிட்ட கொடு அழகா இல்லாட்டியும் இப்போ நீ இருக்க மாதிரி அசிங்கமா இல்லாம எடுத்து தர்றேன்என சொல்லி கரணுக்கு ஹைஃபை கொடுத்தான் நரேஷ்

போங்கடாஎன சொல்லி சௌமியா நகர அவளை சமாதானம் செய்து வித விதமாக போட்டோ எடுத்து கொடுத்தனர்

நரேஷ் தன் கைபேசிக்கு சில போட்டோக்கள் அனுப்பி விட்டுக் கொண்டான்

என் போட்டோ எதுக்குடா உனக்கு?” என விசாரித்தாள் சௌமியா

அடுத்து உனக்குதான் கல்யாணம் பண்ணுவாங்க. இனியாவை நான் எடுத்த போட்டோ பார்த்திட்டுத்தான் சபரி மாமா ஓகே சொன்னார், என்கிட்ட இருக்கட்டும், தேவை படும் போது யூஸ் ஆகும்என சொல்லிக் கொண்டே அவனது அண்ணன் கைபேசிக்கு அவளது போட்டோவை அனுப்பி வைத்தான் நரேஷ்

ரெண்டு வருஷத்துக்கு எதுவும் இல்ல, போடாஎன சொல்லி நகர்ந்த சௌமியா அவள் கண்களுக்கு சிறப்பாக தெரிந்த அவளது போட்டோக்களை வருணுக்கு அனுப்பி வைத்தாள். உடனே அவனும் முத்தங்களை அலைபேசி வழியாக அனுப்பி வைத்தான்

தட்ட பார்த்து சாப்பிடாம என்னடா செய்ற நீ?” பாலன் அதட்ட பட் என கைபேசியை வைத்து விட்டு அமைதியாக சாப்பிட மட்டும் செய்தான் வருண்

சார்லிக்கு உணவு கொடுத்து விட்டு பிரகதீஸ்வரி வர, “அவ சொன்னான்னு உடம்பு முடியாதப்போ கூட நீயே செய்யணும்னு இல்ல ம்மா. ஒரு வேளை வேற யாரும் கவனிச்சுக்க போறாங்கஎன்றான் பாலன்

இருக்கட்டும் டா, சொல்லிட்டேன் செய்யலைனா தூக்கம் வராது. நாலு நாள்ல என்னை தெரிஞ்சுக்கிட்டு வால் ஆட்டுதுஎன சற்றே பெருமையாக சொல்லி அவரது அறைக்கு சென்று விட்டார்

உணவு முடியும் வரை வேறு பேசாதிருந்த பாலன் தம்பி எழவும், “என் ரூமுக்கு வாஎன சொல்லி செல்ல வருணுக்கு பக் எனதான் இருந்தது

சற்று தயக்கத்தோடு அண்ணன் அறைக்கு வருண் செல்ல, “ஆதவன்கிட்ட இனிமே ஒழுங்கா நடக்கணும் நீஎன்றான் பாலன்

என்ன ண்ணா?” 

கல்யாண மேடையில வச்சு உங்களுக்குள்ள முட்டிக்கிட்டாமே?” 

யாரு என் அண்ணி வேலையா இது?”

ஷ்ஷ்அவ பேரை இழுக்காத. ஆயிரம் பேர் இருந்த மண்டபம் அதுமனைவியை விட்டு தராமல் சொன்னான்.

நான் எதுவும் செய்யலை ண்ணா, அவன்தான் உர்ருன்னு நின்னான் சிரிக்க சொன்னதுக்கு சிலுப்பிகிட்டான்

அவனுக்கு தலைவலிஎன பாலன் சொல்ல அது காரணமில்லை என மனதில் நினைத்தாலும் எதுவும் சொல்லாமல் நின்றான் வருண்

முன்னாடி எப்படியோ, இப்ப அவன் உத்ரா புருஷன், அதுக்குண்டான மரியாதைய நாம கொடுத்துதான் ஆகணும். ஏதாவது விவகாரம் ஆன பின்னாடி கண்டிக்கிறது விட இப்பவே முன்னெச்சரிக்கை செய்றது நல்லதுன்னு பட்டுச்சு. புரியுதா?” எனக் கேட்டான் பாலன்

வருண் தலையாட்ட, “நாளைக்கு கறி விருந்து முடிச்சு பிரியாவ சென்னைல கொண்டு போய் விட நான் கிளம்பிடுவேன். ஒரு நாள் இங்க தங்கிட்டுதான் ஆதவனும் உத்ராவும் மாமா வீடு போவாங்க. ஒழுங்கா பார்த்துப்பதானே, உன்னை நம்பி போலாமா நான்?” எனக் கேட்டான் பாலன்.

ண்ணா! அவ்ளோ பயம் இருந்தா அண்ணிய நான் கொண்டு போய் விட்டுக்கிறேன். உன் மாப்ளய நீயே கூட இருந்து கவனிச்சுக்க” 

தம்பி தோளில் தட்டிய பாலன், “உன் அண்ணி நான் சொல்லித்தான் அங்க போய் இருக்கா. நாளைக்கே அவ கிளம்பணும் வேற. திரும்ப எப்ப வருவாளோஎன்றான்.

அண்ணி ஏங்கி போய்டுவாங்க அதானே சொல்ல வர்ற?” 

பாலன் சிரிக்க, “ஓஹோ என் அண்ணன்தான் ஏங்கிப் போய்டுவாரா?” என கிண்டல் செய்தான்.

இப்போது பாலன் முறைக்க வருணும் விளையாட்டை கைவிட்டு, “போயிட்டு வா ண்ணா, நான் பார்த்துக்கிறேன்என்றான்

 “நாளைக்கு நைட் புறப்பட்டு நாளன்னை சாயந்தரம் இல்ல நைட் ஆகிடும் நான் வர. அது வரைக்கும் அவன் ஏதாவது கோவ பட்டா கூட பொறுமையா போகணும். அவனை உத்ரா பார்த்துப்பா, நீ தலையிட்டா பெரிய பிரச்சனை ஆகும்என அறிவுறுத்தினான்.

அவன் அடங்க மாட்டேங்குறான் ண்ணா” 

அவன் பிறவிக் குணம் டா. கொஞ்சம் கொஞ்சமா உத்ரா மாத்தி கொண்டு வருவா. ஒண்ணு பண்ணு, மதிய விருந்து முடிச்சிட்டு மேட்னி ஷோ அனுப்பி வச்சிடு. அப்புறம் அந்த சபரி தியேட்டர் வேணாம், புரியுதா?” 

வருண் அமைதியாக அண்ணனை பார்க்க, “ஆகாதுன்னு ஆகிட்டா ஒரு நூல் அளவு கூட வச்சுக்க கூடாது அவங்களோட சம்பந்த பட்டவங்க கூட. வேற தியேட்டர் அனுப்பி விடு. இப்போ போய் தூங்குஎன்றான் பாலன்

வந்து அண்ணா…” என எதுவோ சொல்ல வந்து முடியாமல் அண்ணன் கண்களையும் சந்திக்க முடியாமல் வருணிடம் தடுமாற்றம் ஏற்பட, “என்னடா?” என வாஞ்சையாக கேட்டான் பாலன்

ஆதவனை பிடிக்காதுன்னாலும் உத்ரா ஆசை பட்டானு நடத்தி வச்சியே, நானும் அப்படி ஏதாவதுஉனக்கு பிடிக்காதது செஞ்சா என்ன பண்ணுவ?” 

தம்பியை கூர்மையாக பார்த்தவன் சில நொடிகள் சென்று புன்னகைத்து, “எனக்கு பிடிக்காதத செய்யாத, போஎன்றான்

மனதிற்குள் கலங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாது வருண் செல்ல, “டேய் வருண்என அழைத்தான் பாலன்

வருண் திரும்பிப் பார்க்க, “உங்க சந்தோஷம் டா என் சந்தோஷம். ஆறு மாசம் போகட்டும். கண்ணெல்லாம் சோர்ந்து தெரியுது பார், போன் பார்க்காம ஒழுங்கா தூங்குஎன சொல்லி அனுப்பி வைத்தான்

Advertisement