Advertisement

வருண் தன் தங்கையின் கையை பிடித்து முறைத்து விட்டு பின் சாதாரணமாக, உத்ராவும் இயல்பாக இருந்து கொண்டாள்.

ஆதவன் கலக்கமாக அவனது அறையில் படுத்திருந்தான். வருண் வந்து பேசிய பிறகு இதற்கு மேலும் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது என புரிந்து சுதாவிடம் அவள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டான். அவள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என யோசனை கொடுக்க ஆதவன் சம்மதிக்கவில்லை.

“என் மேல தப்புதான் சுதா. இதுக்கு மேல நாம பழகறது சரி வராது. எல்லாத்தையும் மறந்திடு” என ஆதவன் சொல்ல கண்ணீர் நிறைந்த முகமாக பார்த்தாள் சுதா.

சுதா தன் வாழ்வில் இல்லை என்பதை காட்டிலும் அவளுக்கு அநீதி இழைத்து விட்டதாக நினைத்துதான் அதிகம் வருந்தினான் ஆதவன்.

இனி நாம் சேர்வது நடக்கவே இயலாத ஒன்று என ஆதவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் கேட்டால்தானே. இன்னமும் ஆதவன் தனக்கு கிடைப்பான் என நம்பியவள் தினமும் அவனுக்கு செய்திகள் அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.

இதோ இப்போது கூட ‘ஆதவன்…’ என அழைத்து செய்தி அனுப்பியிருந்தாள். கைபேசியை எடுத்து அணைத்து வைத்தவனுக்கு சுதாவை நினைத்து குற்ற உணர்வாக இருந்தது. அவனுடைய தவறு புரியாமல் வருண் உத்ரா இருவர் மீதும் கோவம் கொண்டான்.

நடு இரவில் வீடு வந்த பாலன் அறையில் பிரியாவை காணாமல் தேடிக் கொண்டு உத்ராவின் அறைக்கு வந்தான். இன்னும் உத்ரா விழித்திருக்க பிரியா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

“ஏன் ண்ணா இவ்ளோ லேட். நீங்க வர்ற வரைக்கும் முழிச்சிருக்கேன், கம்பெனி கொடுன்னு வந்தவ பதினோரு மணிக்கெல்லாம் தூங்கிட்டா. இரு, எழுப்பி விடுறேன்” என்றாள் உத்ரா.

“வேணாம் வேணாம், தூக்கம் கலைஞ்சு போகும் அவளுக்கு. இங்கேயே தூங்கட்டும். நீ என்ன பண்ற தூங்காம?” என விசாரித்தான்.

“அது… தூக்கம் வரலை ண்ணா”

தங்கையின் தலை கோதி விட்டவன், “ஆதவன் அம்மாவை நினைச்சு பயப்படுறியா? அவங்கள கூட சமாளிக்கலைனா அப்புறம் என்ன நீ என் தங்கச்சி? தூக்கம் வரலைன்னாலும் சும்மா கண்ண மூடிட்டு படு” என்றான்.

உத்ரா படுத்துக் கொள்ள வெளியேறலாம் என நினைத்து விளக்கை அணைக்க போனான் பாலன். உத்ரா மீது காலை தூக்கி போட்டு கொண்ட பிரியா, “அவர் வந்தா எழுப்பு” என தூக்கத்திலேயே பேசினாள்.

அண்ணனை பார்த்த உத்ரா, “ரொம்ப மிஸ் பண்றா போலண்ணா உன்னை. நீ வந்ததை சொல்லலைன்னா காலைல என் கழுத்த கடிச்சு வச்சிடுவா, அது கூட பரவாயில்லை மூஞ்சு தூக்கி வச்சுக்குவா. எழுப்பி அழைச்சிட்டு போ ண்ணா” என்றாள்.

விளக்கை அணைக்காமல் விட்டவன், “பெட்லேர்ந்து நீ இறங்கு” என்றான்.

தன் மீது கிடந்த பிரியாவின் காலை எடுத்து விட்டு உத்ரா இறங்கிக் கொள்ள பிரியாவை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டான் பாலன்.

வெளியே செல்ல பாலன் நடக்க “அண்ணா இங்க பார்” என உத்ரா சொல்ல பாலன் பார்க்க கைபேசியில் போட்டோ எடுத்தாள்.

“என்னம்மா இது?” பாலன் கடிந்தான்.

“உன் கைல இருக்க பாப்பா காலைல இந்த போட்டோ பார்த்தா செம ஹாப்பி ஆகிடும். வேற யாருக்கும் காட்ட மாட்டேன்”

“வர வர இவளோட சேர்ந்து உனக்கும் விளையாட்டுதனம் அதிகமா போச்சு” என பாலன் சொல்ல, அறையின் கதவை உத்ரா நன்றாக திறந்து விட, “நீயும் தூங்கு” என்றவன் மனைவியோடு வெளியேறினான்.

பிரியாவுக்கு எதுவுமே தெரியவில்லை. அவர்கள் அறையில் அவளை கிடத்திய பின்பும் அவளுக்கு விழிப்பு வரவில்லை. தங்கையின் மீது இவள் கால் போட்டுக் கொண்டது பாலனுக்கு நினைவு வர சிறு சிரிப்போடு அவளுக்கு அணைவாக தலையணைகளை வைத்து விட்டு தள்ளி படுத்துக் கொண்டான்.

காலையில் பிரியா எழும் போது பாலன் அறையில் இல்லை. இங்கே எப்படி வந்தோம் என்பது பற்றி யோசிக்காமல் வேகமாக காலை கடமைகளை முடித்து விட்டு வந்தவள் கணவனை காணாமல் முகம் சுணங்க, “அண்ணன் காலையிலேயே கிளம்பிட்டார். எனக்கே தெரியாது, வடிவம்மாதான் சொன்னாங்க. வருண் கூட இல்ல பார், கல்யாண வேலை இருக்கும்ல டி” என சமாதானம் செய்தாள் உத்ரா.

உத்ரா சொல்வது பிரியாவுக்கும் தெரிகிறதுதான், அவளுக்கே புரியவில்லை ஏன் இத்தனை தூரம் மனம் அவனையே எதிர்பார்க்கிறது என. ‘ஒரு மாத காலத்தில் எத்தனை பெரிய மாற்றத்தை என்னுள் கொண்டு வந்து விட்டார்?’ என ஒரு பக்கம் கணவன் மீது கோவமாக கூட வந்தது.

உத்ரா தன் கைபேசியை எடுத்து போட்டோவை காட்ட அப்படியே மலர்ந்து விட்டது பிரியாவின் முகம்.

“எங்கண்ணனுக்கு வார்த்தையால எதுவும் சொல்லத் தெரியாது, நீதான் புரிஞ்சுக்கணும். சும்மா எல்லாத்துக்கும் மூஞ்சு தூக்க கூடாது” என உத்ரா சொல்ல தன் கைபேசிக்கு போட்டோவை மாற்றிக் கொண்டவள் உத்ராவை கட்டியணைத்து விட்டு அறைக்கு ஓடி சென்றாள்.

உடனே பாலனை பார்க்க வேண்டும் அவனிடம் பேச வேண்டும் என்றெல்லாம் ஆசை வர தன் கைபேசியிலிருந்து அந்த போட்டோவை அவனுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தாள். கால் மணி நேரத்தில் பார்த்து விட்டான், ஆனாலும் பதில் வரவில்லை.

பொறுத்து பார்த்தவள் அவளே அழைக்க ஏற்றவன், “என்ன பிரியா?” என சாதாரணமாக கேட்டான்.

“போட்டோ அனுப்பினேன், பார்த்தீங்களா?”

“ம்…” என்றவன், அங்கு வேறு யாரிடமோ “இன்னும் கேப் விட்டு கேப் விட்டு போடுங்க சேரை, கார்பெட் அழுக்கு பண்ணாதீங்க” என சொல்லிக் கொண்டிருந்தான்.

“என்னங்க!” பிரியா அழைக்க, “சொல்லு பிரியா” என்றான்.

“என்ன சொல்ல, கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள்தான் இருப்பேன், அப்புறம் நான் சென்னை போகணும்” என ஏக்கம் நிறைந்த குரலில் சொன்னாள்.

“அதான் தெரியுமே, வேற?”

“போங்க நான் வைக்கிறேன்”

“சரி மதிய சாப்பாட்டுக்கு வருண் வருவான், அவன்கிட்ட எனக்கு சாப்பாடு கொடுத்தனுப்பு”

“என்ன லஞ்ச்க்கு வர மாட்டீங்களா வீட்டுக்கு?”

“நைட் சாப்பாடு உன் கூட சேர்ந்துதான். வைக்கவா?”

பிரியாவுக்கு மனமே இல்லை. கண்கள் கலங்கிப் போக ம் என மட்டும் சொன்னாள். அந்த ஒற்றை சொல்லில் தெரிந்த குரல் மாற்றத்தை கண்டு கொண்டவன், “என்னம்மா?” எனக் கேட்டான்.

“ம்ஹூம்” என்றாள்.

சில நொடிகள் அமைதியாக கடக்க, “போட்டோ பார்த்தேன்” என்றான்.

“ம்” என்றாள்.

“இன்னிக்கு நம்ம ரூம்லேயே தூங்கு, உத்ரா முன்னாடி உன்னை தூக்க ஒரு மாதிரி இருக்கு. என்னை கூச்ச பட வைக்காத” என்றான்.

“ம்… நைட் வருவீங்கதானே?” என சந்தேகமாக கேட்டாள்.

“லேட் ஆகும், ஆனா வந்திடுவேன். நிறைய வேலை கெடக்கு பிரியா” நிஜமாகவே அத்தனை வேலைகள் இருக்க ஆனாலும் அவளாக கைபேசியை வைக்காமல் தானாக வைக்க இவனுக்கு மனம் வரவே இல்லை.

பிரியாவே மனது வைத்து கைபேசியை வைத்தாள்.  பின் அத்தை, உத்ரா, சார்லி என அவளது நேரத்தை செலவிட ஆரம்பித்து விட்டாள்.

ஒரு நாளில் திருமணம் வைத்துக்கொண்டு களையின்றி திரிந்த  ஆதவனிடம் என்னவென துர்கா விசாரிக்க, “தெரியலை மா, உடம்பு அசதியா இருக்கு” என சொல்லி சமாளித்தான்.

கடந்த சில நாட்களாக தன் மகன் சரியாக சாப்பிடாமல் இருப்பதை கண்ட துர்கா புலம்ப, “ராத்திரி நேரங்கெட்ட நேரம் மாடியில உலாவாதன்னு சொன்னா கேட்குறானா? போன வாரம் முழுக்க மாடியே கதின்னு நின்னுட்டு இருந்தான். ஏதோ காத்து பட்ருச்சு” என்ற வள்ளிக்கண்ணு அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏதோ கயிறு கொண்டு வந்து அவன் கையில் கட்டி விட்டார்.

சுதாவும் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கிறாள். கடந்த நான்கு தினங்களாக விடுப்பு எடுத்துக் கொண்டு அறையிலேயே அடைந்து கிடக்கிறாள். அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போய் விட்டது. ஆதவன் ‘இனி சரி வராது’ என்ற போதே தன் அப்பாவிடம் ஆதவன் வீட்டில் பேசிப் பாருங்கள் என கெஞ்சி விட்டாள்.

“நிச்சயம் கூட நடக்கல, வெறும் பேச்சு வார்த்தைதானே? நம்மகிட்ட என்ன குறைன்னு நாம போய் அவங்ககிட்ட தொங்கணும்?” என அவர் அழுத்தமாக மறுத்து விட்டார்.

 ஆதவன் வந்து பிரியாவை தன் அண்ணனுக்கு கேட்ட போதே சம்மதம் கொடுத்திருந்தால் தனக்கும் ஆதவனுக்கும் திருமணம் நடந்திருக்கும் என இப்போது பெற்றோர் மீது திரும்பியிருந்தது அவளது கோவம்.

சுதாவின் அம்மா மகளை நினைத்து வருத்த பட, “என்னமோ பல வருஷ பழக்கம் போல ஏன் கிடந்து அழுவுறா? இவளுக்கு பிடிச்சுதுன்னுதான் நானும் பொறுமையா போனேன், அவன் தங்கச்சிய ஏத்துக்கலைன்னதும் என்னமா குதிச்சான்? இவளுக்கு அவனை பிடிச்சிருக்குன்னா நம்ம பையனுக்கு குணம் இல்லாத பொண்ணை கட்டி வைக்க முடியுமா? அவங்களா நிறுத்திக்கலாம்னு சொல்லவும் நல்லதுக்குன்னு விட்டுட்டேன். ஒரு வருஷம் போகட்டும், நான் இவளை மாதிரி ஒரு டாக்டரையே இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என சொல்லி விட்டார் சுதாவின் தந்தை.

 சுதாவால் சமாதானம் ஆக முடியவில்லை. சில நாட்கள் என்றாலும் அவனை மிகவும் பிடித்து விட்டது. இவள் மேற்படிப்பு படிப்பது எனவும் அதன் பின் இருவரும் சேர்ந்து தனியாக கிளினிக் வைக்க வேண்டும், பிறக்கும் குழந்தைகளை அம்மாக்கள் கவனித்து கொள்வார்கள் என்பது வரை திட்டங்களும் கனவுகளும் வைத்திருக்க சீட்டு மாளிகை போல எல்லாம் சரிந்து போனதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டு தன்னிடம் வந்து விட மாட்டானா என இன்னமும் நப்பாசை வைத்திருந்தாள் சுதா.

பிரியாவின் துணையால் கொஞ்சமே கொஞ்ச நேரம் இதமாகவே செல்வது போலிருந்தாலும் இந்த திருமணம் நடக்குமா என்ற சந்தேகத்தாலும் அப்படியே நடந்தாலும் அதற்கு பின்னர் வாழ்க்கை எப்படி செல்லும் பயத்தாலும் பீடிக்க பட்டிருந்தாள் உத்ரா.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு கவலையில் இருக்க இதோ உத்ரா ஆதவன் திருமண நாளும் விடிந்து விட்டது.

Advertisement