Advertisement

சார்லியை தூக்கி பிரகதீஸ்வரியின் மடியில் வைத்த பிரியா, “எனக்கு பிராமிஸ் பண்ணின மாதிரி ஒழுங்கா பார்த்துக்கணும். வடிவம்மா பார்த்தாங்கனு எல்லாம் சொல்லக்கூடாது, உங்களை நம்பித்தான் அத்த எடுத்திட்டு வந்தேன்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும் என சிரத்தையாக விசாரித்தறிந்த பிரகதீஸ்வரி வருணை பார்த்து, “இவ சொல்றது எல்லாம் எழுதி கொடுப்பா, மறந்து போய்டுவேன்” என்றார்.

“அதெப்படி மறக்கும், மறக்காத படி நான் சொல்லி தர்றேன். நான் கிளம்பறதுக்குள்ள உங்களுக்கு மனப்பாடம் ஆகிடும்” என்றாள் பிரியா.

 சார்லியை வைத்து பேச்சு ஓடிக் கொண்டிருக்க உத்ரா இதில் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருப்பதை கவனித்த பிரியா, “உத்ரா, என்ன ஏன் டல்லா இருக்க? எங்கண்ணன் கூட சண்டையா? அது அப்படித்தான் ஏதாவது கோவத்துல கத்தும், அப்புறம் மறந்து போய் தன்னால வரும். அதுக்காக உன் அண்ணிக்கு ஒரு வாய் காபி தண்ணி வேணுமான்னு கூட கேட்காம இருப்பியா?” எனக் கேட்டாள்.

ஓரமாக அமர்ந்து இவர்களை பார்த்திருந்த பாலன் தங்கையை உற்று கவனிக்க அதற்குள் வருண் செய்த எச்சரிக்கையில் சுதாரித்த உத்ரா “இன்னும் பல்லு துலக்காத உனக்கு காபி இல்லடி, கழனி தண்ணி எடுத்து வச்சிருக்கேன். குடி” என பிரியாவை ஓட்டினாள்.

தன் குடும்பத்தை ரசித்து பார்த்திருந்த பாலன் உள்ளே சென்று விட்டான்.

“இன்னும் நாலே மாசத்துல பல் டாக்டர் நான். ரெண்டு வேளை பிரஷ் பண்ணுங்கனு அட்வைஸ் மட்டும் கொடுக்கிறதில்ல, நானும் ஃபாலோ பண்றேன். நீ மரியாதையா காபி வேணுமான்னு கேட்ருக்கணும் என்னை, நான் சொல்வேன் பிரஷ் பண்ணிட்டு குடிக்கிறேன்னு. கல்யாணம் ஆக போகுது இன்னும் பொறுப்பு வரலியே உனக்கு” என்றாள் பிரியா.

“நீதான் எல்லாரையும் உபசரிக்கணும், போ போய் காபி எடுத்திட்டு வா. நாங்கெல்லாம் பிரஷ் பண்ணியாச்சு” என  உத்ராவும்  பதில் கொடுத்தாள். ஆக மொத்தம் இரு பெண்களுமே இடத்தை விட்டு நகராமல் யார் காபி தருவது என சண்டையிட்டு கொள்ள ஆரம்பித்தனர்.

பிரகதீஸ்வரியையும் வடிவம்மாளையும் ஆளுக்கு ஒருவர் ஆதரவுக்கு வேறு இழுக்க, ரெஃப்ரெஷ் ஆகி வந்த பாலன், “வருண் வா. முகூர்த்த மாலைக்கு சொன்னது இன்னொரு முறை கன்ஃபார்ம் பண்ண சொன்னேனே, செஞ்சியா? சமையலுக்கு காய்கறி எடுக்க இன்னிக்குதான கும்பகோணத்துக்கு ஆளு போகுது, வண்டிக்கு டிரைவர் யாருன்னு முடிவாச்சா? இல்லைனா என் கூட சென்னை வந்தவனை போக சொல்லு” என விசாரித்து யோசனை சொல்ல அண்ணன் பக்கம் வந்து விட்டான் வருண்.

“நீயும் போடி பிரஷ் பண்ணிட்டு வா, சேர்ந்து காபி குடிக்கலாம்” என சண்டையை விட்டு சமாதானமாக உத்ரா அழைக்க பிரியாவும் சென்றாள். வடிவம்மாள் காபி எடுத்து வர சென்றார்.

சார்லி குரைத்து குரைத்து அமைதியாக, “என்னம்மா அவ என்னமோ சொல்றா? உன்கிட்ட கேட்டுத்தான் அழைச்சிட்டு வந்திருக்காளா?” தம்பியிடம் பேசிக் கொண்டிருந்த பாலன் அம்மாவிடம் கேட்டான்.

“ஆமாம் பாலா” என பிரகதீஸ்வரி சொல்ல, “இருக்கட்டும் ண்ணா, அம்மாவுக்கு மாற்றமா இருக்கும்” என வருணும் ஆதரவாக பேச சரி என விட்டான் பாலன்.

“எனக்கு  பிளவுஸ் ஸ்டிச் பண்ணியாச்சா?” கேட்டுக் கொண்டே வந்தாள் பிரியா.

 “அம்மா உன் மருமக திரும்ப ஒரு முறை எங்கண்ணன் கூட கல்யாணம் பண்ணிக்க போறா போல. எனக்கு அங்க எடுத்த மாதிரியே சொல்லி புடவை எடுத்துக்கிட்டா, என் பிளவுஸ் மாதிரியே டிசைன்ல இவளுக்கும் செய்யணும்னு சொல்லி அதுவும் நடத்திக்கிட்டா. என்ன நினைச்சிட்டு இருக்கா?” விளையாட்டாக பேசினாள் உத்ரா.

வந்து கொண்டிருந்த பிரியா பாலனை கடக்கும் தருவாயில் உத்ராவை பார்த்து, “என்னடி டவுட் உனக்கு? உங்கண்ணனைதான் நினைச்சிட்டு இருக்கேன் நான்” என சொல்ல அடுத்த நொடி அந்த இடம் பேரமைதியாகி விட்டது.

உத்ரா சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்க்க பிரியா பாவமாக விழித்துக் கொண்டே அத்தையை பார்த்தவள் பக்கவாட்டு பக்கம் திரும்ப பாலன் என்ன உணர்வை காட்டுவது என நினைத்து நெற்றியை தேய்த்துக் கொண்டு என்ன பார்க்கிறோம் என தெரியாமல் கைபேசியை குடைந்து கொண்டிருந்தான்.

அடக்கப் பட்ட சிரிப்போடு பிரியாவின் அருகில் வந்த வருண், “வளருங்க அண்ணின்னு சொன்னா கேட்குறீங்களா அண்ணி? பொறுமையா இருங்க. அண்ணன் ரூமுக்கு வருவார், அவர்கிட்ட சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லுங்க, இப்படி எங்க எல்லார் முன்னாடியும் இல்லைங்க அண்ணி” என்றான்.

போ என வருணை லேசாக தள்ளி விட்டவள் உள்ளே செல்ல முனைய வடிவம்மாள் காபியோடு வந்து விட்டார். வேறு வழியின்றி அங்கேயே உத்ரா பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள்.

வந்ததிலிருந்து சல சலத்தவளுக்கு இப்போது ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் வெட்கமும் சங்கடமும் சூழ்ந்து கொண்டது. தம்பியிடம் திருமண வேலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்த பாலன் கூட கைபேசியை விட்டு கண் எடுக்காமல் காபி பருகினான்.

பிரியா அவளை மீறி அவளது மனதை வெளிப் படுத்தியிருந்தாலும் அதில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இறுக்கமாகவே இருக்கும் தன் மகனை அன்பால் செண்டிப்பு கொள்ள செய்து விடுவாள் என பிரகதீஸ்வரியும் அகம் மகிழ்ந்தார்.

அமைதியாக காபியை பருகிக் கொண்டே ஓரக் கண்ணால் அனைவரையும் நோட்டம் விட்டாள் பிரியா. எல்லோரும் இயல்பாக இருப்பது போலிருக்க இனி பார்த்து பேசணும் என எண்ணிக் கொண்டாள்.

காபி நேரம் முடியவும் பிரியா அறைக்கு சென்று விட, பாலனை பார்த்த வருண், “போ ண்ணா, எங்கண்ணிய வெயிட் பண்ண வைக்காத, முக்கியமான விஷயம் எதுவும் சொல்லணுமா இருக்கும்” என்றான்.

“ச்சீ வாய மூடுடா, ஆதவன் வீட்டு சொந்தம் அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தங்க கல்யாணத்தன்னிக்கு முதல் நாள் நைட்லேர்ந்து ரூம் போட சொல்லியிருந்தேனே, என்னாச்சு?” எனக் கேட்டான் பாலன்.

தங்கும் விடுதி பெயர் சொன்ன வருண், “எல்லாம் போட்டாச்சு ண்ணா” என்றான்.

“அங்க யார் போட சொன்னா உன்னை? நான்தான் ஏற்கனவே பேசி வச்சிட்டேன், நீ புக் பண்ணினா போதும்னு சொல்லிட்டுதானே போனேன்? நான் சொன்ன ஓட்டல்ல ஏன் போடல?”

“இங்க ரேட் கம்மியா இருந்துச்சு ண்ணா”

“அந்த காச மிச்சம் புடிச்சு திருவாரூரை வாங்க போறியா? அங்க மெயிண்டனென்ஸ் சரியில்லை. தங்குனவங்க எல்லாம் குறை சொல்லுவாங்க. முதல்ல மாத்து. ரூம் இல்லைனு மட்டும் அங்கேர்ந்து சொல்லட்டும், உனக்கு இருக்கு. வேலை ஒண்ணும் உருப்படி இல்ல, வாய் மட்டும் கூடிப் போச்சு எல்லாருக்கும்” என்றவன் எழுந்து உள்ளே சென்று விட்டான்.

இடுப்பில் கை வைத்து அண்ணன் சென்ற திசையை முறைத்துக் கொண்டு வருண் நிற்க, “அண்ணிய கூப்பிடவா வருண், வந்து உனக்கு சப்போர்ட் பண்ணுவா” எனக் கேட்டாள் உத்ரா.

“அந்த அரை டிக்கெட் எனக்கு அண்ணி ஆனாலும் ஆச்சு, அறிவாளியா மாறிக்கிட்டு வருது. இன்னும் போட்டு கொடுக்கும், நீயே உன் அண்ணிய சமாளி” என்ற வருண், அம்மாவை பார்த்து, “பிரியா வந்ததும்தான் விஷேஷ வீடு போல கல கலன்னு இருக்கு, என்னம்மா?” எனக் கேட்டான்.

ஆமோதிப்பது போல பார்த்த பிரகதீஸ்வரி “அவளை பேர் சொல்லாதடா இனிமே” அருகில் இருந்த சார்லியை வருடி விட்டுக் கொண்டே சொன்னார்.

அம்மாவை செல்லமாக முறைத்த வருண் வந்து சாப்பிடுவதாக சொல்லி விட்டு பாலன் சொன்ன விடுதியிலேயே அறைகள் பதிவு செய்வதற்காக புறப்பட்டான்.

அறைக்கு பாலன் வர அவனையே நினைத்துக் கொண்டிருப்பதாக சொன்னதற்கு எதுவும் சொல்வானா என அவன் முகத்தை முகத்தை பிரியா பார்க்க அவன் சாதாரணமாக இருந்தான்.

“ஹும்! இப்படியெல்லாம் வாய் விட்டு சொன்னா ரொம்ப முறுக்கிக்குவாங்க போல. இனிமே சொல்ல கூடாது” மெலிதாக அவள் முணு முணுத்தாலும் அவன் காதில் நன்றாகவே விழுந்தது. ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் அவன் பாட்டுக்கும் குளித்து தயாராக படுத்திருந்தாள் பிரியா.

“கழுத்து வலிக்கு மருந்து எதுவும் போட்டுக்கிறியா?” தலை வாரிக் கொண்டே கேட்டான் பாலன்.

“எனக்கு கழுத்து வலிக்குதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” வியப்பாக கேட்டாள்.

“தினம் காலைல நாலைஞ்சு கொத்து வேப்பிலைய வெறும் வயித்துல நல்லா நறுக் மொறுக்னு மென்னு தின்னா எல்லாமே தெரியும்” தீவிர தொனியில் கூறினான் பாலன்.

“உவ்வே… ச்சீ கசக்கும். எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க வேணாம்” பிரியா சொல்ல தைல குப்பி எடுத்து வந்து நீட்டியவன், “தேச்சுக்கிட்டு படு. நான் கிளம்பறேன்” என்றான்.

நன்றாக படுத்துக் கொண்டவள் அவனையே போட்டு விட சொல்லி கழுத்தை அவனிடம் காட்ட, திகைத்து போனவன், “நான் உத்ராவை வர சொல்றேன்” என சொல்லி வெளியேறி விட்டான்.

உத்ரா வந்து பிரியாவுக்கு தைலம் தேய்த்து விட்டு அண்ணன் சாப்பிட்டு கடைக்கு சென்று விட்டார் எனவும் தகவல் தர பிரியாவுக்கு அத்தனை கோவம். ‘ஒரு பத்து நிமிஷம் என் கூட உட்கார்ந்து பேசிட்டு போனா என்னவாம்?’ என மனதிற்குள் சண்டை கட்டினாள்.

அன்றைய இரவில் தன் பிள்ளைகள் மருமகளோடு சேர்ந்து சாப்பிட அமர்ந்திருந்தார் பிரகதீஸ்வரி. பாலன் சாப்பிட்டு விட்டு பின் மற்ற வேலைகள் பார்க்கலாம் என நேரமாகவே வந்திருந்தான். சாப்பாட்டு நேரம் கூட பிரியாவின் வாய் ஓயவில்லை.

பாலன் பொதுவாக இப்படி கலகலப்பு இல்லை என்பதால் அமைதியாக இருந்தான். வருண் பதிலுக்கு பதில் பிரியாவை தாக்க அவள் துடைத்தெறிவது போல செய்து விட்டு அவனை உண்டு இல்லை என செய்தாள்.

“போதும் டி, இனி அம்மா இங்க சேர்ந்து சாப்பிட வருவாங்கன்னு தோணல. அலறிப் போய்ட்டாங்க பாரு” என்றாள் உத்ரா.

“போடி கோட்டான். நீ புகுந்த வீடு போனப்புறம் உன் மாமியார் எப்படி அலறப் போறாங்கன்னு பாரு. ஆனா எங்கண்ணன் உனக்கு சப்போர்ட் பண்ணுவான்னு நினைக்காத, அவனுக்கு வாய விட கைதான் முதல்ல பேசும். உன்னையும் அப்புனாலும் அப்புவான்” விளையாட்டாக சொல்வதாக நினைத்து ஆதவனின் குணத்தை உள்ளது உள்ள படி பிரியா சொல்ல உத்ராவின் முகம் கூம்பிப் போனது.

“உங்கண்ணன் கை வச்சா நாங்க சும்மா இருப்போமா, பல் டாக்டர் எலும்பு டாக்டரோட பேஷண்ட் ஆகிடுவார் அண்ணி” என்றான் வருண்.

“நீ செஞ்சாலும் செய்வ, அண்ணன் வேலை பார்க்கிற ஹாஸ்பிடல் டாக்டர் ஃபிரீயா வைத்தியம் பார்த்து விடுவார், அண்ணனுக்கு செலவு இல்ல”

பிரியாவும் வருணும் வம்பளந்து கொண்டிருக்க உத்ராவை கவனித்த பாலன், “என்ன உத்ரா? ஆதவன் பேசுறானா உன்கிட்ட? அண்ணன்கிட்ட எதுவும் சொல்லணுமா?” எனக் கேட்டான்.

எல்லோரும் உத்ராவின் முகத்தை பார்க்க இல்லை என்றாள்.

“என்னடி எங்கம்மா நினைச்சு பயப்படுறியா? அவங்க சத்தம் போட்டா நீயும் பதிலுக்கு சத்தம் போடு. யார் சவுண்ட் அதிகமோ அவங்க பக்கம்தான் அப்பா பேசுவார். அப்புறம் கூட தாத்தா அப்பத்தா எல்லாம் இருக்காங்கல்ல?” என பிரியாவாக காரணம் கண்டறிந்து விளையாட்டான தீர்வும் சொன்னாள். துர்கா நினைத்தே கவலை கொள்கிறாள் தங்கை எனதான் பாலனும் நினைத்துக்கொண்டான்.

Advertisement