Advertisement

ஜீவ தீபங்கள் -10

அத்தியாயம் -10

பிரியா ஏற்கனவே அதிகமாக விடுப்பு எடுத்து விட்டதால் திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வருவதாக இருந்தாள். அவளை தனியே வர வைக்க வேண்டாம் என கருதிய பாலன்,  தம்பியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு இங்கு தேவைப்படும் என்பதால் பெரிய காரை விட்டு விட்டு சிறிய காரில் அவனே சென்னை புறப்பட்டான். உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பதால் அவன் காரை ஓட்டாமல் டிரைவர் ஒருவரை அமர்த்திக் கொண்டான்.

சென்னை வந்ததும் முதலில் தங்கும் விடுதியில் அறை எடுத்துக் கொடுத்து டிரைவரை ஓய்வெடுக்க சொன்னவன் அவனே காரெடுத்துக் கொண்டு பிரியாவின் விடுதிக்கு புறப்பட்டான்.

விடுதியை நெருங்கும் போதே கைபேசியில் அவளை அழைத்து வெளியில் வர சொல்லி விட்டு இவன் செல்ல கையில் சார்லியோடு நின்றிருந்தாள் பிரியா.

ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த அந்த பொமரேனியன் வகை நாய்க்குட்டியை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறான் என்றாலும் பிரியா இதை பற்றி கூறியிருப்பதால் சார்லி என உடனே தெரிந்தது.

“யார் உன் ஃப்ரெண்ட் யாராவது எடுத்திட்டு வந்தாங்களா? இங்க எப்படி அலோவ் பண்ணினாங்க? நீ விட்டுட்டு கிளம்பு” என்றான்.

“ஹர்ஷினி கொடுத்திட்டு போய்ட்டா. ஈவ்னிங்லேர்ந்து எப்ப எடுத்திட்டு போவன்னு வார்டன் நச்சு பண்ணிட்டாங்க”

“இதை கொண்டு போய் விட்டுட்டு அப்புறம் கிளம்பணுமா? தெரிஞ்சுதான் செய்றியா பிரியா?” கடிந்து கொண்டான்.

“எங்கேயும் போக வேணாம், நாம நம்மளோட எடுத்திட்டு போறோம்” என அவள் சொல்ல இன்னும் முறைத்தான்.

சார்லியின் உரிமையாளர்கள் மகன் வெளிநாட்டில் இருப்பதால் ஆறு மாதங்கள் அங்கு தங்கலாம் என செல்கிறார்கள், எனவே சார்லியை யாரிடமாவது கொடுக்க நினைத்தனர். ஹர்ஷினி மூலம் அறிந்து கொண்ட பிரியா அவளே எடுத்துக் கொள்வதாக சொல்ல இன்று ஹர்ஷினியும் உரிமையாளரிடம் பேசி வாங்கி கொண்டு வந்து கொடுத்து விட்டாள்.

பிரியா அனைத்தையும் சொல்ல, “உத்ரா கல்யாணம் முடிஞ்சு நீ இங்க வந்திடுவ, இதை யார் பார்த்துப்பா?” என கேட்டான்.

“அதெல்லாம் பார்க்க ஆள் இருக்காங்க, இப்போ கார்ல ஏத்துவீங்களா மாட்டீங்களா?” பிரியா குரல் உயர்த்த பாலன் பார்த்த பார்வையில் அமைதியடைந்து கெஞ்சுதலாக பார்த்தாள்.

அரை நிமிட நேரம் பாலன் தன் முறைப்பை மாற்றிக் கொள்ளாமல் பார்த்திருக்க விதம் விதமாக பார்வையால் கெஞ்சினாள் பிரியா. ‘வேணாம்னு சொல்லிடு’ என மூளை கட்டளை இட்டாலும், “சரி ஏறு” எனதான் அவனிடமிருந்து வார்த்தைகள் வந்தன.

“ஹேய் சார்லி நான்தான் சொன்னேன்ல… நம்மாளு மாட்டேன்னு சொல்ல மாட்டார், ரொம்ப நல்லவர்னு, போலாமா நம்ம ஊருக்கு?” சார்லியின் முகத்தோடு முகம் மோதி கேட்டாள்.

“கிளம்பு பிரியா” என பாலன் சொல்ல அவன் கையில் சார்லியை கொடுத்து விட்டு தன் பையை எடுத்து வந்து வைத்தாள்.

இருவரோடும் பாலன் ஓட்டலுக்கு வர டிரைவர் இன்னும் உறங்கி கொண்டிருந்தான்.

“எழுப்பி விடுங்க, சீக்கிரம் வீட்டுக்கு போலாம்” என்றாள் பிரியா.

“அவனுக்கு ஒழுங்கா ரெஸ்ட் கொடுக்கலைனா சீக்கிரம் ஊருக்கு போக மாட்டோம், ஒரேயடியா  மேல போய் சேர்ந்திடுவோம். அவசரம் இல்ல, வெயிட் பண்ணலாம்” என்றவன் இன்னொரு அறை எடுக்க இங்கு நாய் எல்லாம் கொண்டு வரக்கூடாது என்றனர் விடுதி நிர்வாகத்தினர்.

பிரியாவை அவன் முறைக்க, “சார்லி கார்ல ரெஸ்ட் எடுப்பான், அவனுக்கு கொஞ்சம் பால் மட்டும் வாங்கி தாங்க” என்றாள்.

பின் அவள் சொன்ன படியே சார்லியின் வயிற்றை நிறைத்து அதை காரிலேயே விட்டு இவர்கள் மட்டும் அறைக்கு வந்தனர். இரவு சாப்பாடு முடித்த பின், “டிரைவர் போன் பண்ணினா என்னை எழுப்பி விடு” என சொல்லி படுத்த பாலன் உடனே உறங்கிப் போனான்.

பிரியா வீட்டுக்கு அழைத்து பேசி விட்டு கைபேசி பார்த்துக் கொண்டிருக்க டிரைவர் பாலனின் கைபேசிக்கு அழைத்தான். பாலன் உறக்கம் கலையாதவாறு தள்ளி வந்து பேசியவள், பாலன் உறங்கி கொண்டிருப்பதாகவும் எழுந்ததும் கூப்பிடுவதாகவும் சொல்லி வைத்து விட்டாள்.

பாலன் எழுந்து பார்த்த போது பிரியா ஒற்றை சோபாவில் அமர்ந்த வண்ணம் உறங்கி கொண்டிருந்தாள். நேரம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 கைபேசி எடுத்தவன் டிரைவருக்கு அழைக்க, “தங்கச்சி பாப்பா என்னையும் தூங்க சொல்லிட்டாங்க, விடிய காலை போலாம் சொன்னாங்க” என தகவல் தந்தான். இரண்டாவது முறை டிரைவர் அழைத்து கேட்ட போது இப்படித்தான் சொல்லியிருந்தாள் பிரியா.

டிரைவரை உடனே தயாராகும் படி சொன்னவன் பிரியாவை எழுப்பி விட, அவள் உறக்க கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.

பாலன் விசாரிக்கவும்தான், “ஆமாம் நான்தான் சொன்னேன். உங்களை மறந்து தூங்குறீங்க, எவ்ளோ அசதி இருக்கும்? அதான் எழுப்பல” என்றாள்.

“ரெண்டு நாளைல கல்யாணம் வச்சிட்டு… பொறுப்பில்ல பிரியா உனக்கு? போன் வந்தா என்னை எழுப்பாம நீயா முடிவு பண்ணுவியா?” கடிந்து கொண்டான்.

“நீங்க இருந்தாதான் எல்லாம் நடக்கும்னு இல்ல, வருண் பார்க்கும் எல்லாத்தையும். உங்க உடம்ப யார் பார்ப்பா?” கண்களை உருட்டிக் கொண்டு பிரியா மிரட்ட, அவனது கோவம் எல்லாம் எங்கே ஓடியது என அவனுக்கு தெரியவே இல்லை.

அதன் பின் கடினமாக அல்லாமல், “நீயும் நல்லா படுத்து தூங்க வேண்டியதுதானே?” எனக் கேட்டான்.

“இடையில சார்லிய போய் பார்த்திட்டு வந்தேன், அப்புறம் இங்க வந்து உங்களையே பார்த்திட்டு உட்கார்ந்து இருந்தேன், எப்படி தூங்கினேன்னு தெரியலை” என்றவளுக்கு சொன்னதை நினைத்து வெட்கம் வர, பாலன் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை.

“சரி சரி கிளம்பு” என மட்டும் சொன்னான்.

அடுத்த கால் மணி நேரத்தில் புறப்பட்டிருந்தனர். டிரைவரின் விழிகள் சிவந்திருக்க பாலனுக்கு அவன் சரியாக ஓட்டுவானா என சந்தேகம் இருக்க, தானே ஓட்டுகிறேன் என்றான்.

“டெல்லி வரை கூட தூங்காம ஓட்டிட்டு போயிருக்கேன் ண்ணா. நான் ஓட்டுவேன் ண்ணா” எங்கே பணத்தை குறைத்து விடுவானோ என பயந்து போன டிரைவர் அளந்து விட்டான்.

“கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு, மூணு மணி வாக்குலதான் உறக்கம் சுழட்டும், ரிஸ்க் எடுக்க முடியாது” என்றான் பாலன்.

“அண்ணா அண்ணா… என் கண்ணே அப்படித்தான் ண்ணா. தங்கச்சி பாப்பா தூங்க சொன்னதால போனேன், இல்லைனா இந்நேரம் ஊர் போய் சேர்த்திருப்பேன். நீங்க ஓட்டிட்டு வந்தது தெரிஞ்சா வேற யாரும் காரோட்ட கூப்பிட மாட்டாங்க ண்ணா”

“ஐயோ அண்ணா, இவர் அண்ணன் நான் தங்கச்சியா? சகிக்கல உறவுமுறை” இடையிட்டாள் பிரியா.

“வேற எப்படிம்மா கூப்பிடுறது உங்களை? சின்னவங்களா இருக்கீங்க அண்ணின்னு சொல்ல வரலை, அதான்” டிரைவர் சொல்ல,

“பரவாயில்லை, அண்ணின்னு சொல்லுங்க. இல்லைனா பேர் சொல்லுங்க, என் பேர் பிரியா” என்றாள் பிரியா.

“ஐயையோ அண்ணன் சம்சாரத்தை பேர் சொல்லி கூப்பிடறதாவது? நான் அண்ணினே கூப்பிடுறேன் தங்கச்சி” என்றான்.

“திரும்ப தங்கச்சியா? செவனேனு இவரை மாப்ள மச்சான்னு கூப்பிடுங்களேன்” என பிரியா சொல்ல, ‘கிண்டலா நிஜமா சொல்றாங்களா?’ என புரியாமல் டிரைவர் பிரியாவை திரும்பி பார்க்க, “இல்லைனா மாமா ஓகேவா?” என அவள் கேட்க அதற்கு மேல் வாயே திறக்கவில்லை டிரைவர்.

இருவரது உரையாடல் கண்டு என்ன சொல்வதென பாலனுக்கு புரியவில்லை. ஆனால் சிரிப்பு வந்தது.

‘ஒருத்தர் பாக்கியில்லாம எல்லாரையும் பேசியே ஒரு வழி பண்ணிடுவா இவ’ என செல்லமாக மனதிற்குள் அலுத்துக் கொண்டான் பாலன்.

இடையில் வண்டியை நிறுத்த சொன்ன பாலன் டிரைவருக்கு தேநீர் வாங்கி கொடுத்து அவனுக்கு உறக்கம் இல்லை இப்போது என தெளிவு செய்து கொண்டே மேற்கொண்டு காரை ஓட்ட விட்டான். தானும் உறங்காமல் அவ்வப்போது ஏதாவது பேச்சு கொடுத்து கொண்டே வந்தான்.

 டிரைவர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்தது சார்லி.

பிரியாவுக்கு தூக்கமாக வர சிறிய கார் சௌகர்யமாக இல்லாததால் உழண்டு கொண்டே இருந்தாள். பார்த்திருந்தவன் அவளை தன் மடியில் படுக்க வைத்துக்கொள்ள முயல அவள் பயந்து போனவளாக விழித்தாள்.

“என்ன?” என அவன் கேட்க ஒன்றுமில்லை என்பதாக தலையாட்டினாள்.

வாகாக அவளை மடியில் படுக்க வைத்து, “கால நல்லா நீட்டிக்க. சும்மா புரள கூடாது” என்றான்.

அவன் சொன்ன படி செய்தவளுக்கு இப்போது படுக்க வசதியாகத்தான் இருந்தது. ஆனால் உறக்கம்தான் வரவில்லை. கணவனே என்றாலும் இதுதான் முதல் நெருக்கம், அவள் தோளை வேறு அணைவாக பிடித்திருந்தான். அவ்வப்போது அவள் நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கி விட்டான். போர்த்தியிருந்த அவளது துப்பட்டா விலகினால் சரி செய்து விட்டான். ஆக மொத்தம் அவளை உறங்க விடாமல் அழகாக இம்சை செய்து வைத்தான். அந்த இனிய குறு குறுப்பை அனுபவித்துக் கொண்டே வெறுமனே கண்களை மூடி படுத்திருந்தாள்.

எவ்வளவு நேரம் உறங்காமல் விழித்துக் கிடந்தாளோ ஒரு கட்டத்தில் காரின் ஆட்டத்தில் கண்கள் அசந்தாள். வீடு வரவும் பாலன் எழுப்பி விட்டான். ஒரு பக்கமாக படுத்திருந்ததில் வலித்த கழுத்தை தடவிக் கொண்டே எழுந்து வெளியில் பார்த்தாள் பிரியா. நன்றாக விடிந்து போயிருந்தது.

இறங்கியவள் முன் சீட்டில் இருந்த சார்லியை தூக்கிக் கொண்டு, “தேங்க்ஸ் அண்ணா. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க” என டிரைவரிடம் சொல்லி, “நான் சாரலிய போய் எல்லாருக்கும் காட்டுறேன்” என பாலனிடம் சொல்லி, தன் லக்கேஜ் கூட எடுக்காமல் வீடு நோக்கி விரைந்தாள்.

“தங்கமானவங்க சார் தங்கச்சி” என டிரைவர் பாலனிடம் சொல்ல சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனை கிண்டலாக பார்த்தான் பாலன்.

அசடு வழிய சிரித்த டிரைவர், “அது… நான் எப்படிங்க உங்களை தங்கச்சி சொன்ன மாதிரி கூப்பிட, அதான் யோசிச்சு இப்படி கூப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு பாலன் வர வீட்டு திண்ணையில் சார்லியும் பிரியாவும் இருக்க பிரகதீஸ்வரி, வருண், உத்ரா, வடிவம்மாள் என அனைவரும் அவர்களை சுற்றி இருந்தனர்.

சார்லி நிறுத்தாமல் குரைக்க, “இவ்ளோ நேரம் சைலண்டா இருந்திட்டு இவரை பார்த்ததும் சவுண்ட் விடுவியா? இந்த வீட்டுக்கும் எனக்கும் ஓனர்டா சார்லி இவர். அமைதியா இரு” என சொல்லி அடக்கினாள் பிரியா.

“நீ வளரவே மாட்டியா அண்ணி?” கிண்டல் செய்தான் வருண்.

“ஓவரா வளர்ந்த உன்னை அவரால சமாளிக்க முடியலையாம், அதனால என் வளர்ச்சி போதுமாம் உங்க அண்ணனுக்கு” அவளும் பதிலுக்கு கிண்டல் செய்தாள்.

Advertisement