Advertisement

                 “தீரா  நேசம்”

                     நிலவுக்  காதலியுடன்   கூடிக்  கழித்த  களிப்பில்,  பிரிந்திட  மனம்  வந்திடாத  மேகங்கள்…  தூதாய்  அனுப்பிய  ஈரக்  காற்றுடன்   சாரல்களும்   சேர்ந்து  கொள்ள,  மயிலிறகாய்  தேகத்தோடு  மனதையும்  வருடிச்  செல்லும்  அதிகாலை  தென்றலை  கண்மூடி  ரசித்தபடி   தேன்மொழி…

               வெளுத்துக்  கட்டின  வேட்டியை   மடிச்சுக்  கட்டின  முறுக்கேறிய   கையில  முத்திரையாய்   ஓர்  தங்க  காப்பு…   முறுக்கிக்  கொண்டு  நிற்கும்  அந்த   கத்தை   மீசையோடும்,    யாருக்கும்  அடிபணிந்திட  மாட்டேன்  என  மறுத்திடும்  அடர்ந்த  சிகையோடும்…  எப்போதும்  முரட்டுப்  பார்வையோடு   அவனது  ராயல்  என்பீல்டில்  கம்பீரமாய்  ரத்தினவேல் பாண்டியன்…

               முல்லையூர்…. இயற்கை  வளம்  கொட்டிக்  கிடக்கும்  கிராமம்.   வலது  பக்கம்  மாந்தோப்பும்,  இடது  பக்கம்  தென்னந் தோப்பும்  நிறைந்திருந்த   அந்த  ஒற்றையடிப்  பாதையில்  குறுக்காக,  தன்  ஸ்கூட்டியின்  மீது  சாய்ந்து  நின்று  கொண்டு..  அவனுக்காகவே   அலைபாய்ந்திடும்  தன்  மனதையும் ,  விழிகளையும்  அடக்கும்  வழி தெரியாது  காதலோடு  காத்துக்  கொண்டிருந்தாள்   தேன்மொழி.

‘இன்னைக்கும்    வந்துட்டாளா  ராட்ஷசி!!… என்னை  உயிரோடு  கொல்லுறதுக்காகவே  வந்துருக்கா  போல.  சும்மாவே  கண்ணுக்குள்ள   இருப்பா.  இதுல  சிகப்பு  கலர்  சேலை  வேறயா?…  கொல்றாளே!!..  ஒரு  முடிவோடு  தான்  ஊருக்குள்ள  சுத்துறா  போல… இவளை!!’  என  பல்லைக்  கடித்துக்  கொண்டு   கோவமாய்  மனதிற்குள்  திட்டியபடியே (இதுக்கு  பேரு  திட்டாம்… நம்புங்க)  அவனது  ராயல்  என்பீல்டில்  வந்து  கொண்டிருந்தான்  ரத்தினவேல் பாண்டியன்.

‘குளிச்சிட்டு  வேட்டி  பனியன்  போட  தெரிஞ்சவனுக்கு  சட்டை  போட  தெரியாதா?..  அதென்ன  பனியனோட  நகர்வலம்?..  எத்தனை  பேர்  கண்ணு  வைச்சாங்களோ?..  மூஞ்சியை  உர்ன்னு  மூஞ்சுறு  மாதிரி  வைச்சிக்கிட்டு,  முறைச்சுக்கிட்டே  என்னை   பார்க்குற  அந்த  கண்ணை’  (இதுக்கு   பேரும்  திட்டாம்… நம்பிடுங்க!)  அவளது  பக்கத்தில்  வந்து  பெரும்  சத்தத்துடன்   ப்ரேக்  அடித்து  வண்டியை   நிப்பாட்டினான்   ரத்தினவேல் பாண்டியன்.

“நீங்க   டீச்சர்  தான?  உங்களுக்கு  அறிவில்லையா?  இப்படி  தினமும்  நான்  போற  வர்ற  இடத்துக்கு   நீங்களும்  வந்தா  ஊருக்குள்ள  என்னை  பற்றி  என்ன  பேசுவாங்க?   உங்களைப்  பற்றியும்  தான்  என்ன  பேசுவாங்க?”  என  கோவமாக  கேட்டான்.

“நம்ம  ரெண்டு  பேரைப்  பற்றியும்   சேர்த்துப்  பேசட்டும்னு  தான்   வர்றேன்”   என  தேன்மொழி   அசால்ட்டாக  சொல்லவும்,

“லூசாடி  நீ?… படிச்சவ  தான?.. நீ  எப்படி  பிள்ளைகளுக்கு  ஒழுக்கத்தை  பற்றி   பாடம்  சொல்லி  கொடுக்கப்  போற?”  என  ஆத்திரத்தில்   ரத்தினவேல்  பாண்டியன்   கத்தவும் 

அவனை  வினோதமாக   ஓர்  பார்வை  பார்த்துக்  கொண்டே  தன்  ஸ்கூட்டியை  எடுத்துக்  கொண்டு  கிளம்பிவிட்டாள்   தேன்மொழி.

‘என்னடா  இது… அதிசயமா  இருக்கு?  எப்பவும்  ஏட்டிக்கு  போட்டியா  வாய்  ஓயாம  பேசுவா.  இன்னைக்கு  எதுவுமே  சொல்லாம   கிளம்பி  போயிட்டா.  ஓவரா  பேசிட்டோமோ?’  என  குழப்பத்துடன்  அவள்  சென்ற  வழியை   வெறித்தவாறு  பார்த்துக்  கொண்டிருந்தான்.

           “நீ   கடந்து  சென்ற  பின்பும்…

            என்னை  கடக்கவில்லை  உன்  கொலுசொலி…

            கடத்திவிட்டாய்   என்னை  உன்  கொலுசின்  மணிக்குள்!”

“இந்த   பொண்ணு   போட்டோவை   பாருங்க   ஐயா.  நம்ம  தம்பி   ஜாதகத்தோட  ஒத்துப்  போகுதுங்கய்யா”  என  பணிவோடு   சொன்னவாறு   கைகளைக்  கட்டிக்  கொண்டு  பவ்யமாய்  நின்று  கொண்டிருந்தார்  கல்யாண  தரகர்  பொன்னுசாமி. 

“பொண்ணு  முகத்துல  லட்சணம்  இல்லையே.  கண்ணுல  ஒரு  ஒளியில்லையே…”  என  தாடையை  தடவிய  பெரியவர்  சேதுபதி பாண்டியன்…

“என்  வீட்டுக்கு  மருமகளா  வர்ற  பொண்ணோட   அழகுல  இந்த  வீடே  பிரகாசிக்கனும்.  அவ  ஏத்துற  தீபத்தில்  இருக்கும்  நிமிர்வு  அவ  குணத்தில்  இருக்கனும்.  இந்த  வீட்டுக்கு  வரப்  போற  மகாலட்சுமியை  நாங்க  தான்  தங்கத்துல  அலங்கரிச்சு  கூட்டிட்டு  வரணும்.  அதனால  எங்களுக்கு  வசதி  முக்கியமில்லை.  இதையெல்லாம்  மனசுல  வைச்சுட்டு   பொண்ணு  தேடு”  என  சொல்லியவாறு  எழுந்து  கொண்டார்.

மேஜையின்  மீது  பரப்பி  இருந்த  போட்டோக்களை   அடுக்கி  வைத்துக்  கொண்டே,  ‘நானென்ன  வைச்சுக்கிட்டா  வஞ்சனை  பண்ணுறேன்?…  எல்லோரும்  சொல்லி வைச்ச மாதிரி   ஒரே  காரணத்தையே  சொல்லுறாங்க.  நான்  என்ன  செய்யட்டும்?’  என  தனக்குள்  பேசுவதாய்  நினைத்து   வெளியே  உளறிக்  கொண்டிருந்தார்  தரகர்  பொன்னுசாமி.

“என்ன  காரணம்  சொல்லுறாங்க?”  என்று  பெரியவரின்  கோவக்குரலைக்  கேட்டதும்  தான்    தன்னுடைய  மையின்ட்வாய்ஸ்  வெளியே  கேட்டு  இருப்பதை  தாமதமாக  உணர்ந்தார்  பொன்னுசாமி.

“அது  வந்துங்கய்யா…”  என  இழுத்தவரை,

“ம்ம்…  இப்போ  சொல்ல  போறியா இல்லையா?..  என்  பையன்  அழகுக்கும், படிப்புக்கும்,  குணத்துக்கும், திறமைக்கும்  சோடி  போட்டு  நிக்க  ஊருக்குள்ள  ஒருத்தனுமில்ல.. அதை  தெரிஞ்சிக்கோ”

“ஐயா… எனக்கும்  அது  நல்லாவே  தெரியும்ங்க.  ஆனா…”  என  மீண்டும்   இழுத்தவர்…

பெரியவரின்  முறைப்பை  பார்த்தவுடன்,  “எல்லோரும்  நம்ம  தம்பி  ஜெயிலுக்கு   போயிட்டு  வந்ததை   தான்   சொல்லுறாங்க.  நம்ம   தம்பியோட   நல்ல  மனசு   யாருக்கும்  தெரிய  மாட்டுது  ஐயா.  ஆனாலும்  விடாம  நல்ல  பொண்ணா   நம்ம  தம்பிக்கு  தேடுறேன்.  சீக்கிரமே   வரேன்  ஐயா”  என  வேகமாக  வெளியேறினார்  பொன்னுசாமி.

இவர்கள்   பேசுவதையெல்லாம்  வெளியில்  நின்று  கேட்டுக்  கொண்டு  தான்  இருந்தான்  ரத்தினவேல் பாண்டியன்.

வெளியில்  வந்த  தரகர்  இவனைக்  கண்டதும்  அதிர்ச்சியில்   நின்றுவிட,

“என்ன  தரகரே?  உங்களை  இந்த  பக்கம்  வரக்  கூடாதுனு  சொல்லி இருக்கேன்ல.  இதுவே  கடைசி  தடவையா  இருக்கனும்  நான்  உங்களை  இங்கே  பார்க்குறது.  ம்ம்..  கிளம்புங்க”  என  கர்ஜிக்கவும்…  விட்டால்  போதுமென  ஓடினார்   தரகர்.

வீட்டினுள்ளே  சென்றவன்  அவனது  அம்மாவின்  திருவுருவ  பட்த்திற்கு   மாலையிட்டு  விளக்கேற்றி   கும்பிட்டவன்… அவனது  அப்பாவின்  பக்கம்  திரும்பினான்.

அவரோ  இவன்  செய்வதை  எல்லாம்  பார்த்துக்கொண்டு  தான்  இருந்தார்.

“உங்க  கிட்ட  நிறைய  தடவை  சொல்லிட்டேன்பா,  இந்த  பொண்ணு  பாக்குற  வேலையை  விட்டுடுங்கனு…  நான்  இப்படியே  இருந்துட்டு  போறேன்.  என்னை  நிம்மதியா  இருக்க  விடுங்கப்பா”  என்று  சொன்னபடி  மாடிபக்கம்  சென்றவனை…

“இந்த  வீட்டுக்கு  விளக்கு  ஏற்ற  ஒரு  மகாலட்சுமி  வரணும்னு  தான்…  என்  உசுரை  கையில்  பிடிச்சுட்டு  இருக்கேன்  பாண்டியா!…  எனக்கு  பின்னாடி  உன்னை  பார்த்துக்க  ஆள்  வேணும்.  அதை  புரிஞ்சுக்கோ!”  என்றார்  பெரியவர்.

“இப்போ  நான் ஏற்றிய  விளக்கு  எறிஞ்சுட்டு  தான  இருக்குப்பா.  இதுக்கு  ஒரு  பொண்ணு  தான்  வந்து   ஏற்றனும்னு  அவசியமில்லை.  நான்  என்ன  சின்ன  பையனா?  என்னை  பார்த்துக்க  ஆள்  வேணும்னு  சொல்றதுக்கு?  உங்களுக்கு  என்ன  அப்பா… இந்த  வயசுலையும்  ராஜா  மாதிரி  கம்பீரமா  இருக்கீங்க…  கண்டதையெல்லாம்  யோசிக்காதீங்கப்பா”  என்று  சொல்லிவிட்டு  தன்  அறைக்குள்  சென்று  விட்டான்.

அறைக்குள்  சென்றவனின்  சிந்தனையில்  முழுவதும்  சித்திரமாய்  அந்த  சிவப்பு  சேலைக்காரி…

“சிக்கிவிட்டேன்  உன்னிடம்…

மீளும்  வழி  தெரியாமல்  இல்லை…

மீண்டிடும்   எண்ணம்  இல்லாமல்!”…  

‘என்கிட்ட  என்ன  இருக்குனு  என்  பின்னாடி  சுத்திட்டு   இருக்கா?  அதுவும்   ஜெயிலுக்கு   போயிட்டு  வந்து   ஊரே  ஒதுக்குற  என்  பின்னாடி  சுத்துறா?  அழகா,  அம்சமா  தான்  இருக்கா.  என்  பின்னாடி  சுத்தி  சுத்தியே  என்னை  மயங்க  வைச்சுட்டா…  மாயக்காரி!..  இவளை  என்  மனசு  ஏத்துக்கிட்டாலும்    அறிவு   வேணாம்னு  சொல்லுது.  இவ்ளோ  அழகான   திறமையான  பொண்ணுக்கு   நான்  பொருத்தமானவன்  கிடையாது.  அதனால  என்  காதல்  என்னோடவே  இருந்துட்டு  போகட்டும்  ரகசியமா!..  இதை  அவகிட்ட  சொல்லனும்னு  எந்த  அவசியமுமில்லை’   என  தன்  மனதோடு  அக்ரிமென்ட்   ஒன்றை  போட்டுக்  கொண்டான்.

சாப்பிட்டு   முடித்துக்  கிளம்பியவன்   தன்  அப்பாவிடம்,  “அப்பா…இன்னைக்கு  நடவுக்கு  வர  சொல்லியிருக்கேன். வயக்காட்டுல   தான்  இருக்க  போறேன்.  நேரமிருக்கும்   போது  தான்  அரிசி மில்லுக்கு  போவேன்.  அதனால  மதிய  சாப்பாட்டை  முத்தையனை  போன்  போட்டுட்டு  கொண்டு  வர  சொல்லுங்க.  நீங்களும்  நேரமா  சாப்பிடுங்க”  என  சொல்லியபடி  அவரது  பதிலுக்கு  காத்திராமல்  கிளம்பிவிட்டான்.

அவன்  கம்பீரமாய்  வண்டியில்  செல்வதை  வைத்த  கண்  வாங்காமல்  பார்த்துக்  கொண்டிருந்தார்  பெரியவர்…

“ஐயா…உள்ளே  வாங்க!… போதும்  பார்த்தது.  வந்து  ப்ரஷர்   மாத்திரையை  சாப்பிடுங்க.  நேரமாச்சு.  அப்புறம்  தம்பி  என்னை  வந்து  திட்டும்”  என்று  சொன்னவாறு  மாத்திரையை  கொண்டு  வந்து  கொடுத்தான்  அங்கே  வேலை  செய்யும்  முத்தையன்.

“ம்ம்…என்  புள்ளைக்கு  என்ன  குறைச்சல்?  அவனுக்கு  மட்டும்  ஒரு  கல்யாணத்தை  பண்ணி  வைச்சுட்டேனா  அது  போதும்  எனக்கு.  அப்புறம்  இந்த  மாத்திரை  மண்ணாங்கட்டி  எல்லாம்  தூக்கிப்  போட்டுடுவேன்”  என்றார்  பெரியவர்.

“நீங்க  தூக்கிப்  போடுறதை  அப்புறம்  பார்க்கலாம்.  முதல்ல  இப்போ  சாப்பிடுங்க  ஐயா!”  என்று  சொன்ன  முத்தையனை  முறைத்தவாறே  மாத்திரையை   விழுங்கினார்  பெரியவர்.

அவள்  வரும்  வழி  பார்த்துக்  கொண்டே  கண்ணோடு  மனதையும்  தேட  விட்டு  வந்து  சேர்ந்தான்  வயக்காட்டுக்கு.

           தேன்மொழியைக்  காணாத  ஏக்கத்தை   தன்னுள்  தேக்கியவாறு,  வேலைகளை   கவனிக்கத்  தொடங்கியவனால்    மதியத்திற்கு   மேல்  தொடர  முடியவில்லை.

‘காலையில  அவ  மனசு  வலிக்கும்படி  திட்டிட்டோம்  போல.  அதான்  நம்மை  பார்க்க  வரலை’  என  அதையே  நினைத்துக்  கொண்டிருந்தவன்  கிளம்பிவிட்டான்  தேன்மொழியை  பார்க்க.

தன்  கை கடிகாரத்தைப்  பார்த்தவன்… மணி  நண்பகல்  இரண்டை  தொட்டுக்  கொண்டிருக்க,  ‘இந்நேரம்  ஸ்கூலில்  தான்  இருப்பா.  சும்மா  அந்த  பக்கம்  போறது  போல  போவோம்.  என்னடா  பாண்டியா?  நீயா  இது?   ஒரு  பொண்ணுக்காக  இப்படி  ஆகிட்ட.  காலையில  தான்  சொன்ன…  என்  காதலை  எப்பவும்  அவகிட்ட  சொல்ல மாட்டேன்னு.  இப்போ  அவளை  பார்க்க  எப்படி  போவோம்னு   ப்ளான்  போட்டுட்டுருக்க..’  என   கேலி  பேசிய   அவன்  மனசாட்சியின்  குரலைக்  கேட்டும்  கேளாதவாறு   புறப்பட்டுவிட்டான்   தன்  மனதிற்கினியவளை  காண!.

              இதே   ஊருக்குள்   இருந்தாலும்,  தங்களது  பள்ளியே  என்றாலும்  பல  வருடங்களாய்  அவன்  செல்ல  மறுத்த  இடம்  அது!   இன்று   தேன்மொழிக்காக   செல்ல  முடிவெடித்துவிட்டான்.   வெளியே  கம்பீரமாய்  வண்டியை  நிப்பாட்டியவனின்  உள்மனதோ  தயங்கியது   உள்ளே  செல்ல.

               அவனது   தயக்கத்தை   களைவதற்காகவே   வருவதை  போல  ஓடி  வந்தார்  அப்பள்ளியின்  செக்யூரிட்டி.  அவனைப்  பார்த்து  விரைப்புடன்  சல்யூட்  ஒன்றை  வைத்தார்.

“வண்டியை  உள்ளே  கொண்டு  வந்து  நிப்பாட்டுங்க  சார்!..  நான்  H.M. சாரை  கூட்டிட்டு  வரேன்  சார்!”  என்றார்  மரியாதையுடன்.

“இல்லை…நீங்க  உங்க  வேலையை  பாருங்க.  நானே  போய்  பார்த்துக்கிறேன்”  என  அவசரமாக  மறுத்தவன்,    

‘சீக்கிரம்  அவளைப்  பார்த்துட்டு  கிளம்பிடனும்.  வேற  யார்  கண்ணுலயும்  சிக்கிட  கூடாது’  என  மனதுக்குள்  எண்ணியவாறு  நடக்க  ஆரம்பித்தான்.

           

Advertisement