Advertisement

என்ன  நடந்துருக்கும்ன்னு   ஓரளவு   எனக்கு  புரிய  ஆரம்பிக்க… அந்த  நாயை  அடிச்சு  துவைக்கனுங்குற  ஆத்திரம்   தலைக்கேற  ஆரம்பிச்சது.  அதை  விட   முக்கியம்   முதல்ல  அந்த  பாப்பாவை   அங்கயிருந்து   கூட்டிட்டு   போகனும்னு   தோணுச்சு…

           ஓடி  போய்  கட்டுக்களை  எல்லாம்  அவிழ்த்துட்டு,  அந்த   பாப்பாவை   கையில  பிடிச்சுக்கிட்டு   அங்கயிருந்து   வெளியேற   போன  என்னை  தடுத்து   அடிக்க  வர… நானும்  பதிலுக்கு  அடிக்க னு   சண்டை  போட்டுட்டு  இருந்தோம்.   ஒரு  கட்டத்துல    சண்டை  முற்றி  அந்த  ஆள்  என்னை  முரட்டுத்தனமா   அடிக்க  ஆரம்பிச்சுட்டான்.  நான்  வலி   தாங்க  முடியாம   சுருண்டு   விழுந்துட்டேன்.  அடுத்து  அவன்  அந்த  பாப்பாவை    பிடிக்க   போக    அவளோ   அந்த   உடைஞ்ச   சாமான்களுக்குள்   பயந்து  ஓட … விரட்டிப்  போன  அந்த  நாயை    கீழே  கிடந்த   ஒரு  கயிறு  இடறி  விழ  செய்ய….  அவன்  விழுந்த   இடமோ   உடைஞ்ச  ஜன்னல்  கதவின்   கண்ணாடியின்   மேல… அது  அவனின்  தொண்டை  குழியை   சரியாய்  பதம்  பார்க்க   அவன்  அந்த  இடத்துலயே  உயிரை  விட்டுட்டான்.

            இதையெல்லாம்  பார்த்து    மிரண்டு  போயிருந்த   அந்த  பாப்பாகிட்ட  இதை   யார்கிட்டவும்  சொல்ல  கூடாதுனு  சொல்லி  அனுப்பிட்டேன்.

        போலீஸ்  வந்துச்சு.  நான்  தான்  கொலை  செய்துட்டேன்னு   சொன்னாங்க.  ஏன்னா  அவன்  உடம்புல  என்  கை ரேகைகள்  தான்  இருந்துச்சு.  இந்த  கொலையை   நானும்  பண்ணலை,   அந்த  பாப்பாவும்  பண்ணலை… இது   ஒரு  விபத்து   தான்னு  நான்  சொன்னாலும்    அந்த   பாப்பாவை  பற்றி    தேவையில்லாத  கேள்விகள்  வரும்.   மருத்துவ  பரிசோதனை  என்ற  பேர்ல    அந்த  பாப்பாவுக்கு  மட்டுமல்ல,  அந்த  குடும்பத்துக்கே    பெரிய  சோதனை  மனசளவுல.    பேப்பர்,  T.V. னு    அந்த   பாப்பா  பேர்  அடிபடும்.   முகத்தை  மறைச்சு  காட்டுறோம்னு   சொல்லுவாங்க.   ஆனா  அந்த  பாப்பா  யாருனு  நம்ம  ஊருக்கு   கண்டிப்பா   தெரிஞ்சுடும்.    அவளோட   எதிர்காலம்  பாதிக்கப்பட  கூட  வாய்ப்பு  இருக்கு.  அதனால  நான்  எதுவும்  யார்கிட்டவும்  சொல்லலை.    என்  அப்பாகிட்ட  கூட   நான்  சொன்னதில்லை.  ஏன்னா  பிள்ளை  பாசத்துல  அவர்  யார்கிட்டவாவது  சொல்லுறதுக்கு   வாய்ப்பிருக்கு.  

           கோர்ட்ல  கூட  நான்  எதுவுமே  சொல்லலை.   நான்  பதினேழு  வயசு  மைனர்ங்குறதுனால   சிறுவர்  சீர்திருத்த  பள்ளியில   தான்  போடுவாங்க.  ஒரு  வருஷத்துல  வெளியே  வந்துடலாம்ன்னு   வக்கீல்  எங்க  அப்பாகிட்ட  சொன்னார்.  அதனால  நான்  தைரியமா   மௌனமா  இருந்தேன்.

             கோர்ட்,  கேஸ்னு  ரெண்டு  வருஷம்  ஓடிடுச்சு.  வெளியே  வந்த  என்னை  இந்த  ஊர்  கொலைகாரனா  தான்  பார்த்துச்சு.  அதனால  எங்க  அப்பா  என்னை  சென்னைக்கு  அனுப்பி  படிக்க    வைச்சார்.  அங்கேயே  டிகிரியும்  முடிச்சுட்டு   வேலையும்  பார்க்கலாம்னு  நினைச்சப்போ …  எங்க  அப்பாவோட   உடல்நிலையை  மனசுல  வைச்சு   தான்  திரும்பி  இந்த  ஊருக்குள்ள  வந்தேன்.  இப்போவும்  என்னை  எல்லோரும்  கொலைகாரனா  தான்  பார்க்குறாங்க”  என  ஆதங்கத்துடன்   பேசி   முடித்தான்  ரத்தினவேல்  பாண்டியன்.

“இல்லை  தம்பி… நீங்க  கொலைகாரன்  இல்லை.  இனி   எவனாவது    உங்களை   அப்படி  சொல்லட்டும்   அவனை  நான்  வெட்டுவேன்!”  என  ஆவேசமாக  பேசினார்   அவ்வூர்கார்ர்  ஒருவர்.

“அப்படியெல்லாம்  சொல்லாதீங்க… உசுரோட   மதிப்பு  தெரிஞ்சவன்  நான்.  உங்க  அன்பு   மட்டும்  எனக்கு  போதும்”  என்றான்  ரத்தினவேல்  பாண்டியன்.

“இன்னும்  என்ன  சாரங்கபாணி  யோசிக்குற?  இப்படி  ஒரு  மருமகன்  கிடைக்க  நீ  கொடுத்து  வைச்சுருக்கனும்.  சீக்கிரம்   சரினு  சொல்லு”  என்றார்  இன்னொரு   சொந்தக்காரர்.

தேன்மொழியின்   அப்பாவும்  அம்மாவும்   கண்ணால்  பேசிக்  கொண்டனர்.

“யோசிக்காமல் பேசிட்டேன். எதுவும் மனசுல  வைச்சுக்காதீங்க.  எல்லாத்தையும்   மறந்துட்டு  நடக்க  வேண்டிய    கல்யாணத்தை  பற்றி  பேசுவோம்”  என்ற  கல்யாணி   

“என்னங்க  மாப்பிள்ளையை  உட்கார  சொல்லுங்க..  பார்த்துட்டே  இருக்கீங்க”  என்றார்  சந்தோசமாய்.

           மின்னலாய்   அடுத்தடுத்த  நிகழ்வுகள்  நடந்தேற…  அடுத்து  வந்த   முதல்   முகூர்த்தத்திலேயே   தேன்மொழியின்  சங்கு  கழுத்தினில்   மங்கல  நாண்  பூட்டினான்  ரத்தினவேல்  பாண்டியன்.

“இதென்ன  தேன்மொழிக்கு   இப்படி  வேர்க்குது?  AC  ஓடியும்  இப்படி  வியர்க்குதுனா  நிச்சயம்  பயமா   தான்  இருக்கும்.   தேன்மொழிக்கு   பயம்னா…  அது  அதிசயமா தான்  இருக்கு?”  என்றாள்    தேன்மொழியை   முதலிரவுக்காக   அலங்காரம்  பண்ணிக்  கொண்டிருந்த   தோழி  ஒருத்தி.

சுற்றி  நின்று  கொண்டிருந்த  மீதி  இரண்டு  தோழிகளும்  சிரிக்க,  “நீ  ஏன்  பயப்படனும்  தேன்மொழி?  பாண்டியன்  அண்ணா  ரொம்ப  ரொம்ப  நல்லவர்.   நீ  அவரை  லவ்  பண்ணி   கல்யாணம்  பண்ணியிருக்க.   அண்ணா  ரொம்ப  சாப்ட்  டைப்”   என்றாள்   இன்னொரு  தோழி.

‘அவருக்கு   கோவம்  வந்தா  அக்னியை  சாப்பிடுற  டைப்.  அதோட  வெப்பத்துல  கருகிப்  போறது  நானா  தான்  இருப்பேன்”   என்றது   தேன்மொழியின்  மைன்ட்வாய்ஸ்.

“போதும்   அலங்காரம்   பண்ணியது.  எல்லோரும்  போங்க… அவளே  போயிடுவா”   என  சொல்லியபடியே  அங்கே  வந்தார்   தேன்மொழியின்  அம்மா.

         கையிலிருந்த   பால்  சொம்புடன்  அடி  மேல்  அடி  வைத்து  நடந்தவளின்   இதயம்  ஏங்கியது  ‘இந்த  ரத்தினவேல் பாண்டியனுக்கு  பழசு  எல்லாமே  மறந்து  போயிட  கூடாதான்னு?’

திருமணம்   முடிவானதுல  இருந்து  கேட்க   ஆரம்பிச்சுட்டான்… ‘உனக்கு  எப்படி  அந்த   ஸ்கூல்ல  நடந்தது   தெரியும்?   நான்  கொலை  செய்துருக்க  மாட்டேன்னு  எப்படி  அவ்ளோ  நம்பிக்கையா  இருந்த?’

இவளும்   ‘நீங்க  என்  கழுத்துல  தாலி  கட்டியதும்  அதை  சொல்லுறேன்னு’  சமாளிச்சுட்டே   வந்திருந்தாள்.

இப்போ  உள்ளே  நுழைந்ததும்   அதை  தான்  கேட்பான்… அவனது  குணம்  அவள்  அறிந்ததே.

உள்ளே  நுழைந்தவளை  அள்ளி   எடுத்தது   ரத்தினவேல் பாண்டியனின்   கரங்கள்.  அவளது   பதட்டத்தை  உணர்ந்தவன்,   “ரிலாக்ஸா  இருடி…  ஏன்  இப்படி  வியர்க்குது?… நான்  உனக்கு   அறிமுகமில்லாதவனா?”  என்றவன்  அவளைக்  கீழே  விட்டான்.

“ஒன்னுமில்ல…குடிக்க  தண்ணி  வேணும்”  என்றவள்  அங்கிருந்த   தண்ணீர்   ஜக்கை  திறந்து  குடிக்க  தொடங்கினாள்   தன்  மார்பு  சேலை  நனைந்திடும்  வரை.

“மெதுவா  குடி… புரையேறிட  போகுது.  உன்  விருப்பத்துக்கு  மாறா   எதுவும்  இங்க  நடக்காது.  நாம  இப்போ  பேச  தான்  போறோம்.  இங்க  வந்து  உட்காரு”  என்றான்.

“என்னது?   பேச  போறீங்களா?”  என  வாய்விட்டே  தன்  அதிர்ச்சியை  சொல்லிவிட்டாள்  தேன்மொழி.

ரத்தினவேல்  பாண்டியனுக்கோ  வாய்கொள்ளா  சிரிப்பு.  “ஓஓ… அப்போ   பேச  வேணாம்னு  சொல்லுற?”  என்றான்  குறும்பு  பார்வை  பார்த்துக்  கொண்டே.

‘என்ன  ஆண்டவா  எனக்கு  வந்த  சோதனை?  நான்  ஒரு  பக்கம்  வண்டியை  திருப்புனா  அது  டாப்  கியர்ல  எகிறி  குதிச்சு  வேற  ஒரு   பக்கம்  ஓடிட்டு   இருக்கு’  என  மனசுக்குள்  நொந்து  கொண்டிருந்தாள்  தேன்மொழி.

“என்னடி   எப்பவும்  வாய்  ஓயாம  பேசுற  நீயே  பேச  வேணாம்னு  சொல்லுற?.. அப்போ  ஆக்சன்ல  இறங்குடா  மடையானு  சொல்லுற,  அப்படித்தான?”  என்றான்  சிரிப்புடன்.

‘என்ன  சொன்னாலும்  இவன்கிட்ட  வாயை  திறக்க  கூடாது. இன்னைக்கு  இவன்  ஒரு  முடிவோடு  தான்  வந்துருக்கான்…’  என்றது  தேன்மொழியின்  மைன்ட்வாய்ஸ்.

“இப்படி  அழகா  வெட்கப்படுற  என்  தேன்மொழி   எனக்கு  புதுசு.  இவளையும்  எனக்கு  பிடிச்சுருக்கு.  ஆனா  இவளை  விட  எப்பவும்  அடாவடியா  எகத்தாளமா  பேசி  என்னை  வம்பு  இழுக்குற   தேன்மொழியை  தான்  நேசிச்சேன்.  அவளை  தான்  எனக்கு  ரொம்ப  பிடிக்கும்”  என்றான்  காதலோடு.

‘அட  போடா…நீ  வேற!… வெட்கப்பட்டுட்டு  யாரு  உட்கார்ந்துருக்கா?…  நீ  கேட்கப்   போற  கேள்விக்கு  பயந்து  போய்  உட்கார்ந்துருக்கேன்’  என்றாள்  மனதுக்குள்.

அவளது   கைகளை  எடுத்து  தன்  கைகளோடு  இணைத்துக்  கொண்டு,  “ம்ம்… இப்போ  சொல்லு  தேன்மொழி …என்னை  ஏன்  உனக்கு   பிடிச்சது?  ஏன்  என்னை  துரத்தி  துரத்தி  லவ்  பண்ணி  கல்யாணம்  பண்ணிக்கிட்ட?   அன்னைக்கு  ஸ்கூல்ல  நடந்தது  உனக்கு  முன்னாடியே  தெரியுமா?  நான்  கொலை  செய்துருக்க மாட்டேன்னு  எதை  வைச்சு  நம்புன?”  என  அடுக்கடுக்காய்  பல  கேள்விகளை  கேட்டுக்  கொண்டிருந்தான்.

‘இதுக்கு  தான்டா  இவ்ளோ  நேரம்  பயந்துட்டு  இருந்தேன்…  மறக்காம  உன்  கேள்விகளை  கேட்க  ஆரம்பிச்சுட்ட  பாரு… அங்க  நிக்குறடா  நீ!!’  இதுவும்  தேன்மொழியின்  மைன்ட்வாய்ஸ்  தாங்க

‘இன்னும்  மௌனமாய்  இருந்தால்  இந்த  பயமே  என்னை  சாகடிச்சுடும்  போல.  வருவது  வரட்டும்… உண்மையை  சொல்லிடும்  நேரம்  வந்துடுச்சுனு’  மனசுக்குள்  நினைச்சுட்டு  சொல்ல  தொடங்கினாள்  வர  போகும்  பல   குற்றச்சாட்டுக்கு  பதில்  சொல்ல  தன்னை  ஆயத்தமாக்கிக்  கொண்டு!!

“நீங்க  கொலை  செய்யலைனு  எனக்கு  பல  வருஷத்துக்கு  முன்னாடியே  தெரியும்”  

“எப்படி  தெரியும்?  அதை  நீயும்  பார்த்தியா? எங்களை  தவிர அங்க  யாருமே  இல்லையே…நானும்  அந்த  பாப்பாவும்  தானே  அங்கே  இருந்தோம்”  என்றான்  தீவிரமாய்  யோசித்துக்  கொண்டே.

“அந்த  பாப்பா  உன்கிட்ட   சொல்லிட்டாளா?”

இல்லை  என்று   தலையாட்டி  மறுத்தவளை,  “இப்போ  சொல்ல  போறியா  இல்லையாடி”  என  அதட்டவும்

“நான்  தான்டா   அந்த  பாப்பா…லூசு  மாதிரி  பாப்பா, பாப்பானு  சொல்லிட்டே  இருக்காதீங்க…  எரிச்சலாருக்கு”  என  சற்று  கோவமாய்  சொன்னாள்  தேன்மொழி.

சிறிது நேரம்  அவளது  முகத்தை  கூர்ந்து  பார்த்தவன்… அவளது  கைகளை  தன்னிடமிருந்து  விடுவித்து  விட்டு… எழுந்து  சென்று  தண்ணீர்  குடித்தான்  தன்னை  சமநிலைப்படுத்திக் கொள்ள!!

“அப்போ  எல்லாமே  பக்கா  ப்ளானிங்.   என்னை   விரட்டி  விரட்டி  கல்யாணம்  பண்ணிக்கிட்டது   ஒரு   நன்றிக் கடனுக்காக!  இதுக்கு  பேரு  லவ்னு  நினைச்சுட்டு  இருந்துருக்கேன்.  நான்  நிஜமாவே  லூசு  தான்”  என்றான்  வேதனையோடு.

          தேன்மொழிக்கு   தெரியும்  அவன்  இதை  தான்  சொல்லுவானென்று!! … அவனைப்  பற்றி  முழுவதும்  அறிந்தவள்  ஆயிற்றே  அவள்!…  அதனால  தான்  அவனிடம்  உண்மையை  சொல்லாது  மறைத்து  கல்யாணம்  பண்ணிக்   கொண்டாள்.  இவனிடம்  தன்மையாய்   பேசினால்  வேலைக்காகாது  என  முடிவெடுத்தவளாய்…

“ஆமா… இப்போவும்  சொல்லுறேன்  நீங்க  ஒரு  லூசு  தான்.  என்னுடைய  காதலை  புரிஞ்சுக்காம  நன்றிக்கடன்னு  சொல்லுறீங்க  பாருங்க… தெளிவா  விளங்கிடுச்சு  நீங்க  ஒரு  லூசுன்னு”  என்றாள்  தேன்மொழி.

அவனோ  மிகவும்  அமைதியாய்  எழுந்து  சென்று  தான்  ஏமாற்றுப்பட்டுவிட்டோம்  என்ற  எண்ணமே  மேலோங்க… மூடியிருந்த  ஜன்னல்  கதவுகளை  திறந்து விட்டு  தன்  மூச்சுக்களை  ஆழமாய்  உள்ளிழுத்து  விட்டான்  தன்  கண்களை  மூடி  கொண்டு!

அவனது  இந்நிலையை  காண  சகியாது…  அவன்  பின்னோடு  சென்று,  “சாரி…  கொஞ்சம்  எமோஷனலா   பேசிட்டேன்”  என்று  அவனது   தோளில்  கை  வைத்தாள்.

அவளது  கையை  தட்டிவிட்டு,  கட்டிலில்  அமைதியாக  அமர்ந்து   கொண்டான்.  அவனது   அமைதி  அவளுக்குள்   பூகம்பத்தை  ஏற்படுத்திக்  கொண்டிருந்தது.  அவன்  முன்  மண்டியிட்டவாறு  அமர்ந்து…  அவனது  கைகளை  பிடித்தவாறு  பேச  ஆரம்பித்தாள்.

“நான்  சொல்லுறதையும்   கொஞ்சம்   அமைதியா  கேளுங்க…  என்   அம்மா  கிட்ட  கூட  நான்  நடந்த   எதையும்   சொல்லலை… காரணம்  நீங்க  சொன்னது  தான்.  யார்கிட்டவும்  சொல்லாதேன்னு   சொல்லி  அனுப்பினது  தான்…ஏனோ   அந்த   சின்ன  வயசுலேயே  உங்க  பேச்சை  மீற  மனசில்லை.  விவரம்  அறியா  வயசுல  உங்களை  பார்த்ததும்  நான்  கேட்க  நினைச்ச  கேள்வி,  ‘ஏன்  உண்மையை  சொல்லலை??…  ஏன்  ஜெயிலுக்கு  போனீங்கன்னு?’  தான்…  அப்புறம்  விவரம்  புரிய  ஆரம்பிச்சதும்,  உங்களை  எப்போ  பார்ப்போம்னு  தான்  தோணுச்சு.  அந்த  சின்ன  வயசுலேயே  நீங்க  அவ்ளோ  மெச்சுரிட்டியா  யோசிச்சது  எனக்கு  உங்க  மேல  ஒரு  ஆர்வத்தை   தூண்டுச்சு.  அந்த   ஆர்வமே   நாளாக  ஆக  காதலா  மாற  ஆரம்பிடுச்சு.  அந்த  காதலை  எல்லாம்  நீங்க  ஊர்ல  இருந்து   வந்ததும்  உங்க  கிட்ட  காட்ட   ஆரம்பிச்சேன்.உண்மையை  சொன்னா  நீங்க  இதை  தான்  சொல்லுவீங்கனு  தெரியும்.  அதனால  தான்  மறைச்சேன்.  விவரம்  அறியா  வயசுலையும்  சரி  உங்களுக்கு  நன்றி  சொல்லனும்னு  எனக்கு   தோணவே  இல்லை.  ஏன்   இப்போ  கூட  தோணல. ஏன்னா  என்னை  காப்பாற்ற  வேண்டியது  உங்க  கடமை  தான்ங்குற  உணர்வு  தான்  எனக்கு  வருது”  என்றாள்  கண்களில்  நீரோடு…

அவனிடம்  இருந்து   அப்போதும்  பதில்  இல்லாது  போகவே  எழுந்து  கொண்டாள்.  அறையை  சுற்றிலும்  ஒரு   பார்வை  பார்த்தாள்.  தான்  கொண்டு  வந்திருந்த  சூட்கேஸ்  அங்கே  இருந்த  ஒரு  டேபிளின்  மீது  இருக்க  கண்டாள்.

“நான்  சொல்லுறதை  சொல்லிட்டேன்.  இனி  உங்க  இஷ்டம்  முதலிரவை  கொண்டாடுறது.  மறக்காம  லைட்  ஆப்   பண்ணிட்டு  வந்து  படுங்க. ஹூக்கும்!!!”  என்று  தன்  முகவாயை  தோள்பட்டையில்   இடித்துக்கொண்டு…  சூட்கேஷை  திறந்து  தன்  நைட்டியை  தேடிக்  கொண்டிருந்தாள்.

அது  வரை  அமைதியாக  இருந்தவன்,  அவளது   கடைசி  வார்த்தையில்  சுய  உணர்வு  வர   பெற்றவனாய்…  “ஏய்  நில்லுடி  இந்த  எகத்தாளத்துக்கு  ஒன்னும்  குறைச்சல்  இல்லை… உண்மையை  இத்தனை  நாளா  மறைச்சு  வைச்சுட்டு,  இப்போ  என்ன  பேச்சு  பேசுற?  இப்போவும்  எனக்கு  சந்தேகமா  இருக்கு…  நீயா  அந்த  பாப்பான்னு?  அந்த   பாப்பா  குட்டியா  இருந்தா”  என்று  அதிபுத்திசாலிதனமாக  கேள்வி  ஒன்று  கேட்டான்.

அவனை  முறைத்தவாறு, “என்னால  திரும்ப  திரும்ப  சொல்ல  முடியாது”  என்றாள்  கோபமாய்…

“என்ன  சொல்ல  முடியாது?”

“நீங்க  ஒரு  லூசுன்னு”

“என்னடி??…  தாலி  கட்டிட்டேன்னு  தைரியம்  வந்துடுச்சா??”

“ம்ம்ம்…  ஆமா  இது   ரத்தினவேல்  பாண்டியன்  கட்டின  தாலில!!…  அதான்  தைரியம்   வந்திடுச்சு”

“இந்த  வாய்  தான்டி  உன்னை  வாழ வைக்குது”

“இல்லை…ரத்தினவேல் பாண்டியனின்  காதல்  தான்  என்னை  வைக்குது  அத்தான்”  என்றாள்  காதலோடு

“போதும்…போதும்…டாபிக்கை  மாத்தாதே… நான்  கேட்ட  கேள்விக்கு  பதில்  இன்னும்  வரலை”

“நான்  தான்  அந்த  பாப்பா  அத்தான்…ஏன்  நம்ப  மாட்டுறீங்க?”

“அப்போ  ரொம்ப  குட்டியா  இருந்த?… எந்த  க்ளாஸ்  படிச்சுட்டு  இருந்த?”

“செவன்த்  ஸ்டாண்டர்டு  அத்தான்”

‘தான்  அவள்  மீது  காதல்  கொண்ட  இந்த  இரண்டு  வருடங்களில்  ஒரு  பொழுது  அவளை  காண  தவறினாலும்…  அவனது  மனசு  படும்பாடு  அவன்  மட்டுமே  அறிவான்.  ஆனால்  இவளோ  பல  வருடங்களாக  இவனுக்காகவே  காத்திருந்து  தன்  காதலை  வளர்த்துக்  கொண்டிருந்திருக்கின்றாள்…  இது  எப்படி  நன்றிக்கடனாகும்?’

பதில்  பேசாது    சிந்தனையில்  இருந்தவனை  நோக்கியவள்,  “சரி  அத்தான்… நீங்க  விடிய  விடிய  உட்கார்ந்து  நல்லா  யோசிங்க.  ஆனா    நல்ல  முடிவுக்கு  வந்துடுங்க.  ம்ம்ம்… முடிவு  வராட்டியும்  பரவாயில்லை.  பட்டிமன்றம்  போட்டாவது  விடை  கண்டுபிடிச்சுடுவோம்…. நன்றிக்கடனா  காதலா னு  தலைப்பு  வைச்சுடுவோம்.  இப்போ  நான்  தூங்க  போறேன்”  என்று   தோளில்  நைட்டியை  போட்டுக்  கொண்டு  பாத்ரூம்   நோக்கி  சென்றவளை…  கைகளில்  அள்ளி   கட்டிலில்  போட்டவன்,

“என்கிட்ட  உண்மையை  மறைச்சு  கல்யாணம்  பண்ணிக்குவ!..  நான்  கேட்டா  என்னை  பட்டிமன்றம்  நடத்த  சொல்லுவ?…  இது  எந்த  ஊர்  நியாயம்டி?”  என  கேட்டான்  ரத்தினவேல்  பாண்டியன்

“அப்புறம்  என்ன?  மனசு  நிறைய  ஆசையை  வைச்சுட்டு..”  என  மேற்கொண்டு  பேச  போனவளை    பேச  விடாது  மூடின  அவனது  இதழ்கள்!

          “பிழையின்றி   எழுதிடவே  துடித்து…

           தோற்றுப்  போகின்றேன்  உன்  இதழ்களிடம்..

           இலக்கணப்  பிழையாய்  இடறி  விழுகின்றேன்..

           இதழ்களின்   சந்திப்பில்!!”

தங்களது   தீரா  காதலை  தீவிரத்தோடு  விளக்கிக்  கொண்டிருந்தனர்  ஒருவருக்கொருவர்!!

“தீரா  காதல் 

  தீராது  எப்போதும்!!”

                                   சுபம்

  

         

  

     

Advertisement