பெரியவர் சேதுபதி பாண்டியனின் வீடு… பரபரப்பாகவே விடிந்தது அந்த வெள்ளிக் கிழமை! மாலை பொண்ணு பார்க்க போவோமென நல்ல நேரம் பார்த்து சொல்லியிருந்தார் பெரியவர். ரத்தினவேல் பாண்டியனின் அத்தை முகத்தில் மட்டும் சிறிது ஏமாற்றம் தெரிந்தது. பார்கவிக்கு தனக்கும் ரத்தினவேல் பாண்டியனுக்கும் திருமண பேச்சு வார்த்தை நடைபெற்றதும் தெரியாது.. அது தடை பெற்றதும் தெரியாது. ஆகையால் அவள் எப்பொழுதும் போல சிறு பெண்ணாகவே பேசிக் கொண்டிருந்தாள் ரத்தினவேல் பாண்டியனிடம்.
வெள்ளிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய தேன்மொழியை வரவேற்றனர் அவளது வீட்டில் குழுமியிருந்த சொந்தபந்தங்கள்… “இதோ பொண்ணு வந்தாச்சு” என்ற ஆரவாரத்தோடு!!. அதிர்ச்சியில் வாசலிலே நின்று கொண்டிருந்தவளை, அவளது அம்மா கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றார் எல்லோரிடமும் புன்னகையை சிந்திக் கொண்டே!
“என்னமா நடக்குது இங்க? யாரைக் கேட்டு இதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணுனீங்க?” என இவள் கேட்டுக் கொண்டிருக்கையிலே அந்த அறைக்குள் நுழைந்தார் அவளது அப்பா சாரங்கபாணி.
“இத்தனை நாளா உன்னை கேட்டதால தான் ரெண்டு வருஷமா வீடு தேடி வந்த வரன்களை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தோம். உன் வயசு பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குடும்பம், குழந்தைனு வாழ ஆரம்பிச்சுட்டாங்க.. ஒரு பெற்றோரா எங்களுக்கும் சில கடமைகள் இருக்கு. அது உனக்கும் தெரியும்னு நினைக்குறேன். வந்துருக்கவுங்க முன்னாடி எங்களை தலைகுனிய வைச்சிட மாட்டனு எங்களுக்கு நம்பிக்கையிருக்கு. சீக்கிரம் ரெடியாகி வா” என சொல்லிவிட்டு அவளது அப்பா சென்று விட செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தாள் தேன்மொழி.
கடந்த ரெண்டு வருஷமா வீட்லயும் போராட்டம், அவன் கூடவும் போராட்டம்!.. யாரை தான் சமாளிப்பாள்?.. இப்போது தான் அவளை தேட வைத்திருக்கின்றாள். அதற்குள் இப்படியொரு சூழ்நிலை வருமென கனவிலும் நினைக்கவில்லை.
“நீங்களும் போங்கமா!.. நான் கிளம்பி வரேன்”
“நான் உனக்கு சேலை கட்டி அலங்காரம் பண்ணுறேன்டா” என்றார் அவளது அம்மா கல்யாணி.
“தினமும் ஸ்கூலுக்கு நீங்க தான் எனக்கு சேலை கட்டிவிடுறீங்களா?… போங்கமா!.. நானே மேக்கப் பண்ணிட்டு வரேன். வந்துருக்கவுங்களை கவனிங்க போங்க!” என சொல்லியவள் தன் அன்னையை விரட்டிவிட்டு தன் ஃபோனை எடுத்தாள் வேகமாய்.
ரத்தினவேல் பாண்டியனின் செல்லுக்கு தொடர்பு கொள்ள முயன்றால், அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுவரை இருந்த தைரியம் காணாமல் போக, கண்களில் கண்ணீர் திரையிட… அடுத்து என்ன செய்வதென அறியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்திட… சிலையென அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட , “ஒரு ஐஞ்சு நிமிஷம்மா” என்று குரல் கொடுத்தவள் … மனதில் ‘என்ன நடந்தாலும் சரி இன்னொருத்தன் முன்னாடி நான் கல்யாணப் பொண்ணாய் நிக்க மாட்டேன். என் உயிர் வாழ்ந்தாலும், போனாலும் அவனுக்கே’ என முடிவெடுத்தவளாய் நடக்கப் போவதை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்தாள். மீண்டும் கதவு தட்டப்படவே …. “இன்னும் ஒரு ஐஞ்சு நிமிஷம்மா” என கூறியவள் வெளியே போய் என்ன பேச வேண்டுமென்பதை ஒரு முறை மனனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
அப்போது வெளியே இதுவரை கேட்டுக் கொண்டிருந்த பேச்சு சத்தங்கள் காரசாரமாய் உருமாறி… சண்டையிடும் சத்தங்களாய் கேட்க ஆரம்பிக்க… மெதுவாய் ஜன்னல் கதவை தேன்மொழி திறந்து பார்க்க அங்கே நடுக்கூடத்தில் சிவப்பேறிய கண்களோடும், திமிறிய புஜங்களோடும் அடங்கா காளையாய் நின்று கொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனின் உருவம் மட்டுமே தெரிய… அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு புயலாய் வெளியேறினாள் அறையை விட்டு எதையும் சிந்திக்காது!
வந்த வேகத்தில் அவனை கட்டிக் கொண்டு , “ஃபோனை ஏன் ஸ்விட்ச் ஆப் பண்ணுனீங்க?.. நான் எவ்ளோ நேரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்?” என அவனது நெஞ்சில் வீழ்ந்து அழுது கொண்டிருந்தாள்.
ரத்தினவேல் பாண்டியனுக்கு தேன்மொழி வீட்டின் சூழ்நிலை புரிந்ததும் அவனுக்கு முதலில் தேன்மொழியின் மீது தான் எல்லையில்லா கோவம் வந்தது.
‘இன்னொருத்தன் முன்னாடி கல்யாண பொண்ணா நிக்க தயாராகிட்டாளா? அப்புறம் எதுக்கு என்னை பொண்ணு கேட்டு வர சொன்னா?’ என கொதித்துக் கொண்டிருந்தவனின் மனதில் தேனை வார்த்தது தேன்மொழியின் இந்த வார்த்தைகள். மேலும் அவனை குளிர்ச்சியடைய வைத்தது அவள் இன்னும் அலங்காரம் பண்ணாமல் இருந்தது.
“ஃபோன் ரிப்பேரா இருக்குடா. அதான் அடிக்கடி சுவிட்ச் ஆப் ஆகிடுது. புதுசு வாங்க நேரமில்லை” என அவளது காதோரமாய் கூறியவன் தன் சர்ட் பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்துக் காட்டினான் ரத்தினவேல் பாண்டியன்.
“தேன்மொழி!!… என்ன பண்ணிட்டு இருக்க?” என்ற அவளது அம்மா கல்யாணியின் அதட்டல் சத்தத்தில் திடுக்குற்று சுற்றுப்புறம் உணர்ந்து தான் அவனை கட்டிக் கொண்டு நிற்கின்றோம் என்பது புரிய விலக முயன்றாள்..
ஆனால் அது முடிந்தால் தானே, இப்போது அவளை அணைத்து நிற்பது அவனல்லவா! அவள் நிமிர்ந்து அவனை நோக்க… அவனோ தன் விழிகளை அழுந்த மூடி திறந்தான் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்ளுவதாய்!!
“அதையே தான் நானும் கேட்குறேன்… என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என கோவமாய் கேட்டான் அவளது அம்மாவை நோக்கி.
“ஏன் உங்களுக்கு தெரியலையா? என் பொண்ணை கேட்டு வந்துருக்காங்க” என்றார் கல்யாணி.
“அவுங்க பொண்ணு கேட்டு வர போறதை உங்க பொண்ணுக்கு இன்பார்ம் பண்ணுனீங்களா?” என கேட்டான் ரத்தினவேல் பாண்டியன்
“அவ எங்க பொண்ணு. அவளுக்கு எது எப்போ பண்ணனும்னு எங்களுக்கு தெரியும். நீங்க யாரு எங்களை கேள்வி கேட்குறதுக்கு?”
“நானா?… நான் தான் இந்த வீட்டிற்கு வர போற மருமகன். உங்களுக்கு மகனும் கூட நானே. அந்த உரிமைல தான் கேள்வி கேட்குறேன்” இது எல்லாவற்றையும் தேன்மொழியை அணைத்தபடியே தான் பேசிக் கொண்டிருந்தான் ரத்தினவேல் பாண்டியன்.
“ஐயா…நீங்க இந்த ஊருல பெரிய குடும்பம். எல்லோருக்கும் நியாயம் சொல்லுறவுங்க. நீங்களே இப்படி ஒரு சுப காரியம் நடக்கும் போது வந்து பிரச்சனை பண்ணினா.. நாங்க என்ன செய்வோம்?” என்றார் சாரங்கபாணி பெரியவரைப் பார்த்து.
“நாங்க பிரச்சனை பண்ண வரலை சாரங்கபாணி. சம்பந்தம் பேச வந்துருக்கோம்” என்றார் பெரியவர்.
“சம்பந்தம் பேச வர்றவுங்க இப்படி தான் அதிரடியா வந்து நிற்பீங்களா? முன்னதாகவே எங்களுக்கு தகவல் சொல்லியிருந்தா நாங்க எங்க விருப்பத்தை சொல்லியிருப்போம். இப்போ பாருங்க, உங்களுக்கும் தர்மசங்கடம்… பொண்ணு கேட்டு வந்துருக்குற அவுங்களுக்கும் தர்மசங்கடம்” என்றார் சாரங்கபாணி வேதனையோடு.
சூழ்நிலையை சமாளிக்கும் பொறுப்பை நொடியில் தன் கையில் எடுத்துக் கொண்டான் ரத்தினவேல் பாண்டியன்.
“இதுல யாருக்கும் தர்மசங்கடம் வேண்டாம்” என்றவன்… வந்துருக்கவுங்களிடம் திரும்பி, “வணக்கம்ங்க!… உங்களைப் பார்த்ததும் தெரிஞ்சுக்கிட்டேன் நீங்க் எல்லோரும் பக்கத்து ஊரு தான்னு!.. நாங்க ரெண்டு பேரும் விரும்பினது எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது. சொல்லக் கூடாதுன்னு இல்லை. அதுக்கான அவசியம் இப்போ வரை ஏற்படலை. நான் இன்னைக்கு பரிசம் போட வருவது தேன்மொழிக்கு கூட தெரியாது. ஒரு சர்ப்ரைஸா வருவோம்னு தான் வீட்டுல சொல்லி கூட்டிட்டு வந்தேன். நீங்க பொண்ணு கேட்டு வர போறதையும் அவ வீட்டுல அவளுக்கு சர்ப்ரைஸா வைச்சுருக்காங்க போல” என்றான் அவளது அம்மாவை பார்த்துக் கொண்டே.
“தேன்மொழி படிச்ச பொண்ணு. இந்த ரெண்டு சர்ப்ரைஸ்ல ஏதாவது ஒன்னு அவளுக்கு தெரிஞ்சிருந்தா கூட இங்கே இப்படியொரு சூழ்நிலை வராம தடுத்திருப்பா. தவறு எல்லாம் என் மேல தான். யாரும் இதை பெருசுபடுத்த வேண்டாம். எங்களை எல்லோரும் மனசார ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றான் ரத்தினவேல் பாண்டியன்.
பெரியவர் சேதுபதி பாண்டியனின் குடும்ப செல்வாக்கும், ரத்தினவேல் பாண்டியனின் ஆளுமையும் வந்தவர்களை தணிந்து போகவே செய்தது.
“என்னப்பா சாரங்கபாணி… இப்படி செய்துட்ட? உன் பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு எங்களுக்கு விருப்பத்தை சொல்லியிருக்கலாம்ல” என புலம்பியவாறு கிளம்பி சென்றார் பக்கத்து ஊர் பெரியவர் ஒருவர். அவரோடு அவர் சொந்தங்களும் கிளம்ப யத்தனிக்க, அப்போது…
“நீங்க யார் என்ன சொன்னாலும் சரி, என் பொண்ணை ஒரு கொலைகாரனுக்கு கட்டிக் கொடுக்க முடியாது. அதுவும் பதினேழு வயசுலேயே ஒரு உயிரைக் கொன்ற கொலைகாரனுக்கு” என ஆவேசமாக கத்தினார் கல்யாணி.
அவருக்கு ரத்தினவேல் பாண்டியனின் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ எதுவும் கிடையாது. இன்னும் சொல்ல போனால் அவன் மீது மரியாதையே உண்டு எப்போதும். இன்று ஊரார் முன்னிலையில் தாங்கள் தலை குனிவதற்கு அவனே காரணமென நினைத்ததால்… அவனைக் காயப்படுத்திட எண்ணி அவ்வாறு கத்திவிட்டார் உண்மை அறியாது!!
அதுவரை கம்பீரமாய் தேன்மொழியை இடையோடு அணைத்தவாறு நின்று கொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனின் ஆளுமை நொடியில் உடைந்திடுவதாய் அவன் உணர்ந்திட… அவளது இடையை இறுக பற்றியிருந்த விரல்களின் இறுக்கத்தை அவன் தளர்த்திட… அதை பற்றிய தேன்மொழியின் விரல்கள் விடாது மீண்டும் இறுக பற்ற வைத்தது. அவனது கண்களை உற்று நோக்கியவள் விழியாலே கட்டளையிட்டாள் “நிமிர்ந்து நில்” என்று.
“இதை சொல்லுறது என் அம்மாங்குறதுனாலே நான் சும்மா விடுறேன். இதுவே உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்” என தன் அம்மாவை பார்த்து எச்சரித்தவள்..
ரத்தினவேல் பாண்டியனின் பக்கம் திரும்பி, “கொலைப் பழியை உங்க தலைல சுமந்துட்டு மௌனமா இருக்குறது உங்க பெருந்தன்மையா இருக்கலாம். ஆனா எந்தவொரு பொண்ணும் தன் புருஷன் ஒரு கொலைகாரன்னு மத்தவுங்க சொல்லுறதை விரும்ப மாட்டா…” என்றவள், கண்களில் நீரோடு அவனது கைகளை எடுத்து தன் தலையில் வைத்து,
“ம்ம்… இப்போ சொல்லுங்க. அன்னைக்கு என்ன நடந்துச்சுனு. போதும் உங்க மௌனம். இது என் மேல சத்தியம்” என்றாள் தேன்மொழி அழுதுகொண்டே.
“இப்போவாது நடந்தது என்னனு சொல்லு பாண்டியா… நான் கேட்டும் சொல்லலை. என் மருமக இப்போ கேட்குறா. அவளுக்காகவாவது சொல்லிடு” என்றார் பெரியவர்.
“ம்ம்…சொல்லுறேன்… என்னை கொலைகாரன்னு சொன்ன தேன்மொழி அம்மாக்காகவும், இந்த ஊருக்காகவும் நான் இதை சொல்லலை. என்னையவே உலகம்னு நினைச்சு சுத்திட்டு இருக்குற என் தேன்மொழிக்காக மட்டுமே சொல்லுறேன்” என்றவன் அன்றைய நினைவில் நடந்தவற்றை சொல்ல தொடங்கினான்.
“நான் அப்போ ப்ளஸ் ஒன் படிச்சுட்டு இருந்தேன். டெய்லி ஈவ்னிங் எங்க ஸ்கூலுக்கு அடுத்துள்ள கிரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடுறது வழக்கம். அப்படி அன்னைக்கு விளையாடும் போது கிரிக்கெட் பால் ஸ்கூல்க்குள்ள விழுந்துடுச்சு. நான் தான் எடுக்க வந்தேன். அது எல்லோரும் ஸ்கூல் முடிஞ்சு போயிட்ட நேரம். ஏதோ ஒரு சிலர் மட்டும் இருந்தாங்க. ஸ்கூலுக்குள்ள லாஸ்ட் பில்டிங் பக்கத்துல தான் பால் விழுந்துச்சு. நான் அத தேடிட்டு இருந்தப்போ, அங்கே பழைய உடைஞ்ச பெஞ்ச், ஏணி, இன்னும் தேவையில்லாத மர சாமான்களை போட்டு வைக்குற ஸ்டோர் ரூம்குள்ள இருந்து ஒரு பாப்பாவோட அழுகை சத்தம் கேட்டுச்சு. அந்த ரூமோட ஜன்னல் கதவு, வாசல் கதவு எல்லாமே பூட்டியிருந்துச்சு. நான் கதவை திறக்க ட்ரை பண்ணியதும் அந்த பாப்பாவோட அழுகை சத்தம் நின்னுடுச்சு. ஏதோ தவறு நடக்கப் போகுதுன்னு என் உள்ளுணர்வு சொல்ல, என் பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து கதவை ஓங்கி தள்ள… திறந்திட்ட அறைக்குள்ள நின்று கொண்டிருந்தது எங்க ஸ்கூல் வாத்தியார் தான்!!… ஆனா அவர் ஏதோ தப்பு செய்தது மாதிரி பயந்து, வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்தார். என்னைப் பார்த்ததும் கோவமாய் கேட்டார்…
‘ஏன்டா கதவை உடைச்சுட்டு வந்த?’
‘இங்க ஒரு பாப்பாவோட அழுகை சத்தம் கேட்டுச்சு. அதான் வந்தேன் சார்’
‘இங்க யாருமில்லை. நான் மட்டும் தான் இருக்கேன்’
‘அப்புறம் ஏன் சார் கதவை தட்டியதும் திறக்காமல் இருக்கீங்க?’
‘என்னடா அதட்டல் எல்லாம் பலமா இருக்கு. உன் அப்பன் வீட்டு ஸ்கூல்னா எல்லோரும் உனக்கு பயப்படனுமா?’
‘எதுக்கு சார் பயப்படனும்? தப்பு செய்தவன் தான் பயப்படுவான். இப்போ நீங்க தான் பயப்படுறீங்க… இங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’
நாங்க இப்படி பேசிட்டு இருக்கும் போதே அங்கே மூலையில் போட்டிருந்த நாற்காலிகள் அசைஞ்சு கீழே விழுந்துச்சு. நான் அதை என்னனு பார்க்க போனேன். அவர் என்னை தடுத்தார். அவரைப் பிடிச்சு தள்ளி விட்டுட்டு நான் போய் பார்த்தேன். அதிர்ச்சியாகிட்டேன். எங்க ஸ்கூல்ல படிக்குற பாப்பாவை கையையும், காலையும் கட்டி வாயையும் துணியால அடைச்சு வைச்சு உட்கார வைச்சிருந்தான் அந்த ராஸ்கல்!!