பள்ளியில் நிறைய மாற்றங்களை அவனது அப்பா கொண்டு வந்திருந்தார். தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருந்தார். கிராமப்புற மாணவர்களுக்கும் மிக மிக குறைந்த கட்டணத்தில் CBSE ஆங்கில வழி கல்வியை கிடைக்குமாறு செய்திருந்தார். இன்னும் ஆங்காங்கே கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. உயர்நிலைப் பள்ளியாக மேலும் தரம் உயர்த்துவதற்கு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
தன் தந்தையின் உழைப்பை எண்ணி வியந்தவாறே நடந்தவன், ‘இவ எங்க இருக்கானு கூட தெரியல. யாருகிட்ட கேட்கலாம்?’ என நினைத்தவனுக்கு உதவி செய்ய இவனை நோக்கி ஓர் சிறுவன் வந்து கொண்டிருந்தான்.
“தம்பி… இங்க வா!… தேன்மொழி மிஸ் எங்க இருப்பாங்க?”
“அவனை முறைத்த அச்சிறுவன், “ஹலோ சார்? யாரு நீங்க? எப்படி உள்ளே வந்தீங்க?.. தேன்மொழி மிஸ் எதுக்கு கேட்குறீங்க?” என அந்த சிறுவன் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்கவும்…
ரத்தினவேல் பாண்டியன் சிரித்துக் கொண்டே , “உன் பேரு என்ன? எந்த க்ளாஸ் படிக்குற?” என கேட்டான்.
“நான் உங்களை கேள்வி கேட்டா… பதில் சொல்லாமல் திருப்பி என்னையவே நீங்க கேள்வி கேட்குறீங்களா?” என அந்த சிறுவன் முறைக்க ஆரம்பித்துவிட்டான்.
“இந்த சின்ன வயசுலேயே இவ்வளவு பொறுப்பா இருக்க. அதான் உன் பேரை தெரிஞ்சுக்க கேட்டேன்” என ரத்தினவேல் பாண்டியன் சொல்லிக் கொண்டிருக்கையிலே…
“கணேஷ்… இன்னும் க்ளாஸ் ரூம் போகலையா?… போ. நேரமாச்சு” என அதட்டியவாறு வந்தாள் தேன்மொழி.
“எஸ் மிஸ்!” என்றவாறு பறந்தான் சிறுவன்.
“குட் நூன் சார்!” என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள் தேன்மொழி.
“ஏய்!..நில்லுடி… என்ன நக்கலா?” என்றவனுக்கு
“இதுக்கு பேரு நக்கல் இல்லை, மரியாதை. நீங்க இந்த ஸ்கூலுக்கு கரஸ்பாண்டன்ட்!…உங்களுக்கு மரியாதை கொடுக்குறது என் கடமை” என்றாள் தேன்மொழி.
“அப்போ நீ கடமை தவறாதவ?.. அப்படி தான?”
“ஆமா” என்றவளுக்கு
“கடந்த ரெண்டு வருஷமா மாந்தோப்புக்கும், வாழைத்தோட்டத்துக்கும் இலவசமா செக்யூரிட்டி வேலையை கடமை தவறாம, கண்ணுங்கருத்துமா பார்க்குற கடமையாயினி… இன்னைக்கு காலைல உன் கடமையை ஏன் செய்ய தவறுன?” என கோவமாய் கேட்பதை போல கிண்டலாய் கேட்டான்.
“என்ன நக்கலா இருக்கா உங்களுக்கு?” என சண்டைக்கோழியாய் சிலிர்த்து நின்றவளிடம்…
“நம்ம சண்டையை வீரய்யன் வாழைத்தோட்டத்துக்கு செக்யூரிட்டி வேலைக்கு இன்னைக்கு சாயந்திரம் நீ வரும் போது வைச்சுக்குவோம்” என சொல்லியவாறு நடக்க ஆரம்பித்தான் ரத்தினவேல் பாண்டியன்.
“இல்லை…நான் வரலை” என முறுக்கிக் கொண்டு நின்றாள் தேன்மொழி.
வேட்டியை ஒரு காலால் மடக்கி அதன் நுனியை கைகளுக்கு கொண்டு சென்று மடித்துக் கட்டப் போனவன், இவளது பதிலால் திரும்பி…
“நீ வருவடி!… எனக்கு தெரியும்!” என தன் மீசையை இரு விரல்களால் நீவிவிட்டுக் கொண்டு புன்னகைத்தவாறு நடக்க ஆரம்பித்தான் ரத்தினவேல் பாண்டியன்.
அவனது அச்செயலில் தன்னை தொலைத்து… அவன் மீதான கோவத்தையும் தொலைக்கத் தொடங்கியிருந்தாள் தேன்மொழி.
“பத்து விரலிலும் மோதிரமாய் மாட்டிக் கொண்டாலும்..
பற்றிக் கொண்ட ஆசைத் தீ அணைய மறுக்கின்றதே..
உன் மீசை முடியின் மேல் நான் கொண்ட ஆசை!!”
தேன்மொழியும் இதே ஊரில் தான் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு தெரியும் ரத்தினவேல் பாண்டியன் ஏன் இந்த பள்ளிக்கூடத்திற்குள் வர மாட்டானென்று? அப்படிப்பட்டவன் இன்று இவளுக்காக வருகின்றானென்றால், தன் காதல் விரைவில் கைகூடிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது தேன்மொழிக்கு. காலையிலிருந்து சோர்ந்திருந்தவள் உற்சாகமாய் வலம் வந்தாள்… அவனை சந்திக்கப் போகும் மாலைப் பொழுதை நோக்கி!
தேன்மொழியோடு பேசிவிட்டு வந்து பிறகு மனசு லேசாகி பறப்பதைப் போல உணர்ந்தான் ரத்தினவேல் பாண்டியன். தினமும் காலையில் ஏழு மணிக்கும், ஒன்பது மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் கிடைத்திடும் அவளது தரிசனம்… ஒரு பொழுது தவறியதும் அவனது மனம் தவித்த தவிப்பு அவளைக் கண்டதும் தான் அடங்கியது.
‘காலையில் நீ எடுத்த சபதமென்ன? இப்போ நீ செய்துவிட்டு வந்திருக்கும் செயலென்ன?… இவ்வளவு முரண்பாடுகளை உனக்குள்ளே வைத்திருக்கும் நீ யாருக்கு தான் உண்மையாக இருக்க போற?… உன்னையே உலகம்னு நினைச்சு சுத்திக்கிட்டு இருக்குற அவளுக்கா?… மனசு நிறைய ஆசையை வைச்சுக்கிட்டு அறிவு வேணாம்னு சொல்லுதுனு பொய்யாய் ஒரு முகமூடியை போட்டுட்டு திரியுற உனக்கா?’ என்ற அவனது மனசாட்சியின் குரலுக்கு மௌனத்தையே பதிலாய் தந்தவாறு களத்துமேட்டின் மீது அமர்ந்திருந்தவன்…
நேரமாவதை உணர்ந்து மனசாட்சியின் கேள்விக்கு தன் மனதிற்கினியவளிடமே பதில் சொல்லும் பொருட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
“என்னை வர சொல்லிட்டு நீங்க லேட்டா வரீங்க?” என்ற தேன்மொழியின் அழகு அவனை பித்தம் கொள்ள வைத்தது. காற்றில் பறந்து கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கியவாறு… இடுப்பு சேலையையும் இடை தெரியாத அளவு இழுத்துப் பிடித்துக் கொண்டு… காலையில் நெற்றியில் பூசியிருந்த விபூதிக் கீற்று இப்போது தடமாய் மட்டுமே. அதுவும் அவளுக்கு அழகையே கொடுத்தது.
“ஒவ்வொரு அந்தி வெயிலும்…
மறுக்காது ஆயிரம் உண்மைகள் சொல்லிடும்…
யாவற்றிலும் முதன்மையாவள்..
எனது மஞ்சள் நிற அழகி அவள் மட்டுமே!!”
“சாரி… கொஞ்சம் லேட்டாகிடுச்சு” என்றான் ரத்தினவேல் பாண்டியன்
“ம்ம்..சொல்லுங்க. எதுக்கு என்னை வர சொன்னீங்க? இனி உங்களை தேடி வரக் கூடாதுனு நினைச்சேன்”
“ஏன் அப்படி நினைச்ச?”
கலங்கிய கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க… உதடு கடித்து தன் அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள் தேன்மொழி. அவளை தன் நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்ல முயன்ற தன் கைகளுக்கு கடிவாளமாய் கோவத்தை ஆயுதமாய் எடுத்தான் ரத்தினவேல் பாண்டியன்.
“நான் என்ன சொல்லிட்டேன்னு அழுகுற? எப்பவும் வியாக்கியானம் பேசுவ, அதே மாதிரி இன்னைக்கு காலைலயும் பேச வேண்டியது தான? அப்போ எதுவும் பேசாமல் போயிட்டு இப்போ வந்து அழுதுட்டு நிக்குற?” என கேட்டான்
“என்னை திட்டுவற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா நீங்க என்னுடைய ஒழுக்கத்தை பற்றி பேசிட்டீங்க!… இந்த உலகமே என்னை பார்த்து இந்த கேள்வி கேட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனா நீங்க என்னை பார்த்து கேட்டது தான் தாங்க முடியல. இனி நான் உங்களை தேடி வர மாட்டேன்… உங்களுக்கு நான் வேணும்னு தோணுச்சுனா முறைப்படி எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்க” என சொல்லிவிட்டு கிளம்ப போனவளை தடுத்து நிறுத்தியவன்,
“நானும் அதையே தான் சொல்ல வந்தேன். இனி நானும் உன்னை தேடி எப்பவும் வர மாட்டேன். வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் கட்டிக்குற வழியை பாரு” என மனசு வலிக்க அவளிடம் கூறிக் கொண்டிருந்தான்… ஆனால் வெளியிலோ படு ஸ்டைலாக நின்று கொண்டு!
அவன் சொன்னதை கேட்டு சிரித்து விட்டு, “யாரு , நீங்க? இன்னொருத்தனை என் கழுத்துல தாலி கட்ட விட்டுடுவீங்க?… சீரியஸா பேசிட்டு இருக்கும் போது ஏன் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க? நான் உங்களை லவ் பண்ணுறதை விட … இப்போ பல மடங்கு அதிகமா நீங்க தான் என்னை லவ் பண்ணுறீங்க!” என்றாள் தேன்மொழி.
“இல்லை…நான் உன்னை லவ் எல்லாம் பண்ணலை. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல” என்று மீண்டும் முரண்டு பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான் ரத்தினவேல் பாண்டியன்.
“ஓஓ…அப்போ சார் என்னை லவ் பண்ணலை? ஊருல உள்ள எல்லா பெண்களையும் அம்மா, அக்கா, தங்கைனு முறை வைச்சு அன்பா மரியாதையா கூப்பிடுறவரு… என்னை மட்டும் வாடி, போடினு உரிமையா ஏன் கூப்பிடனும்?”
‘கரெக்ட்டா பாயிண்ட்ட பிடிச்சுட்டா. இவ டீச்சருக்கு படிக்காம லாயருக்கு படிச்சுருக்கலாம்’ என மனதுக்குள் அவளுக்கு சர்டிபிகேட் ஒன்றை கொடுத்து விட்டு, “எனக்கு பிடிக்காதவங்களையும் நான் வாடி, போடினு தான் கூப்பிடுவேன்” என்றான் வீம்பாக.
“இதுவரை எத்தனை பெண்களை அப்படி கூப்பிட்டு இருக்கீங்க?” என்றாள் தேன்மொழியும் விடாப்பிடியாக.
“அதையெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை. இவ்வளவு ஆர்க்யூமென்ட் பண்ணி என்னையே கல்யாணம் பண்ணிக்கனும்னு உனக்கென்ன தலையெழுத்து? நான் ஒரு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்.. அது உனக்கு தெரியுமா?” என்றான்
“உங்க ஜாதகமே என் கையில இருக்கும் போது இது தெரியாதா எனக்கு?”
“தெரிஞ்சுமா என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுற… ஏன்?” என கேட்டான் ரத்தினவேல் பாண்டியன்
“அதை நீங்க என் கழுத்துல தாலி கட்டிய பின்னாடி சொல்லுறேன் அத்தான்” என அந்த “அத்தானில்” அழுத்தம் கொடுத்து சொல்லி சென்றாள் தேன்மொழி.
‘இனி என்னை தேடி வராதேனு நாம சொன்னா… தாலியோட வானு சொல்லிட்டு கிளம்பிட்டா’ என அவள் சென்ற வழியை குழப்பத்துடன் பார்த்தவாறு கிளம்பி சென்றான் ரத்தினவேல் பாண்டியன்.
வெறுமையாய் ஓடி சென்றது ஒரு வாரம் இருவருக்கும். அவனை தேடி அவள் செல்லவில்லை…. மாறாக இவன் தான் சென்று கொண்டிருக்கின்றான் பள்ளிக் கூடத்திற்கு!… தனது தந்தையிடம் இனி பள்ளிப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்ளுவதாய் சொல்லிக் கொண்டு!!
“இறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியையும்…
என்றும் உயிர்ப்புடன் வைத்திருப்பது..
என்னை நீங்கா உன் நினைவுகள் மட்டுமே!!”
ஒரு நாள் மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த ரத்தினவேல் பாண்டியனை வரவேற்றனர் அவனது அத்தையும் மாமாவும் அவர்களது பொண்ணு பார்கவியும்.
“வாங்க தம்பி.. எப்படி இருக்கீங்க?” என்ற அவனது மாமாவின் நலம் விசாரிப்புக்குப் பின் அத்தையின் உடல் நலம், மாமாவின் பண்ணை தொழில், விவசாயம், பார்கவியின் கல்லூரி படிப்பு என இரவு சாப்பாட்டோடு ஒரு மணி நேரமாக நீடித்த பேச்சுவார்த்தை… ரத்தினவேல் பாண்டியனின் திருமண பேச்சில் முடிவுக்கு வந்தது.
அவனது திருமண பேச்சை எடுத்ததும் தூக்கம் வருவதாக சொல்லி தன் அறைக்குள் சென்று விட்டான் ரத்தினவேல் பாண்டியன். உடைமாற்றி படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை… கண்ணை மூடினால் இமைகளுக்குள் இம்சையாய் வந்து நிற்கின்றாள் அவள்!
இமைகளை இறுக்கமாய் மூடினால், இதயக் கதவை வந்து தட்டுகின்றாள் அந்த வசியக்காரி!.. தட்டினால் தட்டிவிட்டு போ, நான் திறக்க மாட்டேன் என இமைகளை அழுந்த மூடி படுத்திருந்தவனுக்கு… நிஜமாகவே யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு வேகமாய் எழுந்து கதவை திறக்க சென்றான்.
“அப்பா!… என்ன இந்நேரம் வந்துருக்கீங்க? ஏதாவது வேணுமாப்பா? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?… ஃபோன் போட்டுருக்கலாமே. ஏன் மாடி ஏறி வந்தீங்க?” என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டுக் கொண்டே போனான் ரத்தினவேல் பாண்டியன்.
“பாண்டியா… இது போன்ல பேச வேண்டிய விஷயமில்லை. காலையில உனக்கு நேரமிருக்காது. அதான் நானே மாடி ஏறி வந்துட்டேன்” என்றார் அவனது தந்தை.
“இந்த நடுஜாமத்துல அப்படி உடனே பேசி தான் ஆக வேண்டிய கட்டாயம் என்ன?.. என்ன விஷயம்ப்பா …சொல்லுங்க”
“உன் அத்தை ஊர்ல இருந்து வந்து என் கூட ஒரே சண்டை!.. உனக்கு பொண்ணு தேடிட்டு இருக்கேன்னு தெரிஞ்சு வந்துருக்கா. நாமளா பொண்ணு கேட்போம்னு, நம்ம கிட்ட அவுங்க விருப்பத்தை சொல்லாம இருந்திருக்காங்க. நான் உன் அத்தைகிட்ட பொண்ணு கேட்காததுக்கு காரணம்… எங்கே ஊருக்குள்ள எல்லோரும் சொல்லுற அதே காரணத்தை சொல்லி பொண்ணு கொடுக்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டா அதை என்னால தாங்க முடியாது. உறவுகளுக்குள்ள விரிசல் வந்துடும்னு கேட்கலை. ஆனா இப்போ அவுங்களே வந்து பொண்ணு தரேன்னு சொல்லுறாங்க. பார்கவியும் அழகா, புத்திசாலி பொண்ணா இருக்கா. உனக்கு எல்லா விதத்துலயும் அவ பொருத்தமானவளா இருப்பானு தோணுது பாண்டியா. நீ என்ன சொல்லுற?” என நீளமாக பேசிவிட்டு அவனது சம்மதத்துக்காய் அவனது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
‘இது என்னடா புது பிரச்சனை?’ என மனதுக்குள் நினைத்தவாறு , “எனக்கு கல்யாணம் வேணாம்ப்பா” என்றான் ரத்தினவேல் பாண்டியன்.
“உனக்கு கல்யாணம் வேண்டாமா? இல்லை இந்த பொண்ணு வேண்டாமா?” என அவனை பார்த்தவாறு கூர்மையாக கேட்டார் பெரியவர்.
சிறிது நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது. ஒரு வார காலமாய் அவளைக் காண முடியாமல் தவித்த தவிப்பு… அவனது காதலை வெளிக்கொணர்வதற்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. சூழ்நிலையும் சாதகமாக அமைந்ததால் தன் காதலை தன் தந்தையிடம் தயக்கமின்றி கூறுவதற்கு ஏதுவாக இருந்தது.
“நம்ம ஊருக்கார பொண்ணு தான்ப்பா. பேரு தேன்மொழி. நம்ம ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்ணுறா. அவளை நான் விரும்புறேன்ப்பா. நம்ம வீட்டுக்கு அவ தான் மருமகளா வரணும்னு ஆசைப்படுறேன்” என்றான் தயக்கமின்றி.
“உன் விருப்பத்தை என்கிட்ட இத்தனை நாளா ஏன்டா மறைச்சு வைச்ச? அதான் ஸ்கூல் பொறுப்பையும் கையில் எடுத்துக்கிட்டியா? உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம். அத்தை கிட்ட நான் பேசி சமாளிச்சுக்கிறேன். அந்த காலண்டரை எடு” என்றவர் காலண்டரில் நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
“நாளைக்கே நல்ல நாள். நிறைஞ்ச வெள்ளிக் கிழமை. பொண்ணு பார்த்துட்டு அப்படியே பரிசமும் போட்டுட்டு வந்துடுவோம். விடிஞ்சதும் நீ அந்த புள்ளைக்கு போன் போட்டு சொல்லிடு” என்றார் பெரியவர்.
“இல்லைப்பா… நாம சர்ப்ரைஸா போய் நிப்போம்” என்றான் அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு… தனக்கே ஒரு அதிர்ச்சி அங்கே காத்திருப்பது அறியாமல்!
“சீக்கிரம் படுத்து தூங்கு பாண்டியா. காலையில ரொம்ப வேலையிருக்கும். என் மருமகளுக்கு சேலை, நகை நீ தான் போய் வாங்கிட்டு வரனும்” என சொல்லி சென்றார் பெரியவர்.
‘அடியே தேனு… வரேன்டி நானு!.. ஒரு வாரமா என் கண்ணுல சிக்காம கண்ணாமூச்சி ஆடுனியே.. நாளைக்கு உன் முன்னாடி வந்து நிக்க போறேனே… என்னடி செய்ய போற?… அந்த மொச்சைக்கொட்டைக் கண்ணை முழிச்சு முழிச்சு தான் பார்ப்பியா? வக்கனையா பேசுற அந்த வாயை திறந்து வைச்சு தான் பார்ப்பியா? இல்ல.. உன்னை எப்படியும் நான் தேடி வருவேன்னு தெரிஞ்சு தான் இவ்ளோ ஆட்டம் காட்டுனியா என்கிட்ட? எது எப்படியோ? நீ எனக்கு கிடைச்சா போதும்’ என வாய்விட்டு புலம்பியவாறு படுத்திருந்தான் ரத்தினவேல் பாண்டியன். இத்தனை நாளாக அவளைக் காணாத தவிப்பின் காரணமாக அவனை விட்டு விலகியிருந்த நித்திரா தேவி இன்றும் வர மறுக்கின்றாள்… அவளை நாளை காண போகும் உற்சாகத்தின் காரணமாய்!!