Advertisement

சொல்லாமல்…!

மௌனம் 09(ii)

இன்று…

தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் எழுந்திட்ட கோபம் உள்ளுக்குள் வலியை கீறலைத் தோற்றுவித்திட அதை வெகுவாக மறைத்திட பிரயத்தனப்பட வேண்டி இருந்தது,

தர்ஷினிக்கு.

அழுத்தமான முகம் உணர்வுகளை பிரதிபலிக்க மறுத்திட  ஓர விழியால் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு அவன் விம்பம் மனதில் ஆழப் பதிந்து போனது.

கவனம் முழுவதும் பாதையில் இருக்க ஏதோ யோசனையில் வண்டியை அவன் நகர்த்திக் கொண்டிருக்க அவனின் பார்வை தவறியும் அவள் புறம் திரும்பவேயில்லை.

அதீத நெரசலில் வண்டி சிக்கிக் கொண்டிட அதன் விளைவாய் அவன் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.

அவளோ அடிக்கடி அவனைப் பார்ப்பதும் வெளியே பார்வையை அலைய விடுவதுமாய் இருக்க கொஞ்சம் பதட்டம் தான் உள்ளுக்குள்,

எங்கே தன்னை கண்டு கொள்வானோ என்று.

நிமிடங்கள் நகர்ந்திட நெரிசல் இன்னும் குறைந்திடவில்லை.

அவனுக்கு பொறுமை எல்லை கடந்தது.

“பச்ச்ச்ச்ச்..” சத்தமாகவே சலித்துக் கொள்ள அவளுக்கு தற்சமயம் சிறிதாய் பயமும்.

அவளோ அவனை பாராது தலையை குனிந்து கொண்டிருக்க திடீரென விக்கல் எடுத்தது,

அவனுக்கு.

“ஹுக்..ஹுக்..” அவனுக்கு தொடராய் விக்கல் வந்து கொண்டிருக்க எப்போதும் காரில் வைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் போத்தலை துழாவ யாரின் நேரமோ அது காலியாய் இருந்தது.

அவனுக்கு விக்கல் எடுக்கத் துவங்கிய சமயமே அவளின் கைகள் தன்னிச்சையாய் தன் பையில் இருந்த தண்ணீர் போத்தலை வெளியே எடுத்திருக்க நீட்டுவதா இல்லையா என்கின்ற குழப்பத்தில் அவள் கையிலேயே உருண்டு கொண்டிருந்தது,

சிறு பகுதி மழுங்கியிருந்த அந்த அலுமினியப் போத்தல்.

சுற்றும் முற்றும் பார்வையால் துழாவியவனுக்கு இறுதியிலேயே அவளின் கைகள் வீற்றிருந்த தண்ணீர் போத்தல் தென்பட அவள் புறம் நீண்டிருந்தது அவன் விரல்கள், “தா..” என்பதாய்.

உள்ளுக்குள் தயக்கம் எட்டிப் பார்த்தாலும் அவள் நீட்டியிருக்க அவனின் பார்வை ஒரு நொடி அந்த போத்தலின் மீதும் அவளின் மீதும் அழுத்தமாய் படிந்து மீண்டிடவே ஆசுவாசப் பெருமூச்சொன்று அவளிடம் இருந்து.

“கில் யூ டேமிட்..”

யாருடனோ  கத்திக் கொண்டு கையில் அகப்பட்ட தன் போத்தலை எடுத்து மேசையில் ஓங்கி அடித்தவனின் செயல் நிழற்படமாய் நினைவில் விரிந்த ஏனோ அந்த கோபமும் ரௌத்திரமும் ஒருசேரக் கலந்திருந்த அவன் விழிகள் நினைவில் வந்திடும் சில சமயங்களில் அவள் மிரள்வதும் உண்டு.

அந்த கோபத்தினால் தானே இப்படி முடமாகி நிற்கிறது அவளுக்கு பிடித்த அவளின் தண்ணீர் போத்தல்.

நீரை குடித்துக் கொண்டிருந்தவனின் சட்டையிலும் சில துளி சிதறியிருக்க அவசரமாக விழுங்கிய மிடரினால் புரையேறியது அவனுக்கு.

தலையை தட்டிய படி இருமியவனின் கரம் மேல் பதறிக் கொண்டு எழுந்த அவளின் கரம் படிந்து தலையை தட்டிட அழுத்தமாய் திரும்பியவனின் விழிகள் சொன்ன செய்தியில் பட்டென அவள் கரங்கள் மீண்டிருந்ததன,

தன்னிடம்.

இமைகளை இறுகப் பொத்தி ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டு தன்னை சமப்படுத்தியவனின் விரல்கள் ஸ்டியரிங்களை இறுகப் பற்றியிருப்பதை கண்டவளோ தன் கரத்தை பார்த்திட ஒரு வித நடுக்கம் இழையோடியது அவள் விரல்களில்.

தலையைத் தட்டிய கரம் நடுங்கிட பதறித் துடித்த வெடவெடத்து தவித்திட யன்னல் புறமாய் சற்றே திரும்பியவளின் மனதில் பலவித எண்ணங்கள் அலைக்கழித்தது.

தன்னை மீறி பதட்டத்துடன் அவனை ஸ்பரிசித்த அரிதான இன்னொரு சந்தர்ப்பம் இது.

முன்பும் அவனின் காயங்களுக்கு மருந்திட உதவியின் பொழுது தோள் கொடுக்க ஸ்பரிசித்து இருந்தாலும் அப்பொழுதெல்லாம் இவன் மீதான நேச வேர்கள் ஊடுருவி ஆழம் செல்லும் நினைத்துக் கூட இருக்க மாட்டாளே..

இதயத்தின் அடிப்பு வழமைக்கு மாறாக இருக்க தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டவளுக்கு முழு தேகத்திலும் ஒரு வித நடுக்கம் இழையோடுவது போன்ற பிரம்மை.

பக்கமாய் திரும்பி விழிமூடி இருக்கையில் சாய்ந்து விட்டிருந்தவளின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது அவனின் பார்வை.

வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்திட சாய்ந்து இருந்தவளுக்கு விழிப்புத் தட்டியது.

“க்கும்..” தொண்டையைச் செருமியவனின் சத்தம் எதற்கென்று அவளுக்கு புரியாதா..?

மெல்ல அவன் புறம் திரும்பி அவன் விழிகளை ஸ்பரிசித்தவளின் விழிகளில் அத்தனை காதலும் இரசனையும்.

“என்ன விஷயம்..?” பட்டென கத்தரித்து அவன் கேட்ட கேள்வி புரியவில்லை, அவளுக்கு.

“என்ன விஷயம்னு கேட்டேன்..” அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்த படி அவன் கேட்கவே திடுக்கிட்டு கலைந்தவளுக்கு தன் மடத்தனம் புரிந்திட விழிகளை உருட்டி அங்குமிங்கும் கருமணிகளை அசைத்தவளின் முகத்தில் கொஞ்சமாய் பதட்டமும் சேர்ந்திருந்தது.

“என்ன விஷயம்னு கேட்டேன்..?” உணர்வு துடைத்த குரலில் அவன் கேட்க தந்தியடித்தது,

அவளுக்கு.

“அ..அது..நா உங்க கூட சண்..சண்ட போட்டுட்டு வந்து இருக்கேனான்னு வீட்ல எல்லாருக்கும் டவுட் வந்துருச்சு..அதான் என்ன பண்றதுனு தெரில சீ..”

“சீக்கிரமா ஏதாவது பண்ணனும்னு சொல்லாம சொல்றியா..?”

“ம்ம்..ம்ஹும் அப்டி இல்ல..வீட்ல அடிக்கடி என்னன்னு கேக்கறாங்க..அதான்..”அவள் சொல்ல அழுத்தமாய் அவனின் நெற்றியை தடவியது, ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்ட ஆட்காட்டி விரலும் நடுவிரலும்.

மூன்று நொடி நேர யோசனை.

“நா இனிமே அடிக்கடி உனக்கு போன் பண்றேன்..நீயும் மேனேஜ் பண்ணிக்க..நா விஷயத்த சொல்ற வர வேற யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது..அன்ட் போன் பண்ணேன்னு என்னால பேசவெல்லாம் முடியாது..”

“ம்ம்ம்ம்..”

“அம்மாவும் அடிக்கடி போன் பண்றாங்க..அவங்கள போய் பாக்க வேண்டி வரும்..ரெடியா இரு..நாம ரெண்டு பேரும் நடிக்க வேண்டி கூட வரலாம்..” எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் ஒரே நேர் கோட்டில் வெளிப்பட்ட குரலுக்கு கட்டுப்பட்டு தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை, அவளுக்கு.

“ம்ம்..இப்போ எங்க போனும்..?”

“வீ..வீட்டுக்கு..”

“பஸ் ஸ்டாப்ல யெறக்கி விட்றேன்..”

அது மட்டுமே அவனின் பதில்.

ஏனோ மனம் சுணங்கியது.

அவன் தன்னை வீட்டில் விடுவான் என்று மனம் எதிர்பார்த்திருக்க அவனிடம் இருந்து வந்தது விட்டேற்றியான பதில்.

யாரிடமும் எதையும் எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம் என்று நிதர்சனம் புரிந்தாலும் ஏனோ ஆழமாய் நேசிக்கும் ஜீவன்களிடம் இருந்து சிறு சிறு விடயத்துக்கும் எதிர்ப்பார்ப்பது காதலன்றி வேறேது..?

அவளின் காதல் சிறு  எதிர்ப்பார்ப்புக்களை சுமந்திருக்க அவளுக்கான காதல் சுமந்த எதிர்ப்பார்ப்புக்களை புதைத்து விட்டு மௌனமாய் நேசிக்கிறதே…

நேசித்து தவித்து தனை தொலைக்கிறதே..

அலை போல் அடிக்கடி   கரையை தொட்டு அவள் காதல் ஆர்ப்பரிக்கின்றதென்றால்..

ஆழ் கடலின் அமைதியுடனும் ஆழத்துடனும் அவளை மட்டுமே காதலித்து நிற்கிறது..

அவளுக்கான காதல்.

யார் காதல் முன்னிலை பெறும்..?

அவளை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு அவன் விருட்டென கிளம்பி விட ஆற்றாமையுடன் சேர்ந்து கோபமும் வந்தது இம்முறை.

“கடுவன் பூன..” மனதிற்குள் அவனைத் திட்டியவாறு அவள் பேரூந்துக்காக காத்திருக்க அவன் நினைவுகளே கண் முன் வந்து சென்றது.

காதலென்று துளிர்த்த பின் அன்று தற்செயலாய் காணக் கிடைத்த அவனின் கவர்ந்திழுக்கும் அந்த புன்னகை முகம் மெல்ல இதழோரம் விரியச் செய்திட அருகே இருந்த நபர் அவளை விசித்திரமாக பார்ப்பது புரிந்திட மெல்ல தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள்,அவள்.

ஆனால், மனம் மட்டும் உள்ளுக்குள் புன்னகையை தாங்கி நின்றிருந்தது.

திரும்பி வீட்டிற்கு வந்தவளின் முகத்தில் காணக்கிடைத்த உற்சாகம் தாயின் இதழ்களில் சிரிப்பை வரவழைத்தது.

ஒரு வித துள்ளலுடன் அவள் திரிந்து கொண்டிருக்க தம்பி கூட விசித்திரமாய் தான் பார்த்து வைத்தான்.

“இந்த அடாவடி அடங்கி போற ஒரே எடம் அர்ஜுன் மாமா தான்..” தனக்குள் நினைத்த படி அவன் நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்திட தங்கை கூட சந்தடிசாக்கில் கலாய்த்து வைத்ததை கணக்கில் கொள்ளவில்லையே,

அவள்.

இரவு நேரத்தில் கடிகார முட்கள் எட்டு மணி எனக் காட்டிட மொட்டை மாடியில்

நின்றிருந்தான்,

தேவேந்திரன்.

மனதில் பலவித எண்ணங்கள் வந்து போயின.

“அதா பாரு..அந்த அர்ஜுன்..அதான்டா நம்ம காலேஜ் சீனியர்..அவனும் டீ.டீ ஹாஸ்பிடல்ல டாக்டரா வர்க் பண்ணுர நம்ம ஜுனியர் பொண்ணு தீபிகாவும் ரொம்ப க்ளோஸா பழகுறாங்க..அடிக்கடி அவங்க ரெண்டு பேரும் தனியா பேசுறத நா பாத்துருக்கேன்..பாவம் அந்த தர்ஷினி..தீபிகா வேற அர்ஜுன வன் சைடா லவ் பண்ணால அந்த டைம்” நிஜமான வருத்தம் தொனிக்க தோழன் சொன்னதை நம்பாவிடினும் அவனும் கண்டானே..

அந்த தீபிகாவுடன் அவன் பேசிய படி நடந்து செல்வதை.

பார்த்தவுடன் முகம் சுளித்தவனுக்கு தர்ஷினியின் நிலமை கண்டு வருத்தம் எழுந்தாலும் அவளுடன் கை கோர்த்திடலாம் என்கின்ற எண்ணம் வலுப்பெற ஆழ் மனதில் துளியாய் ஒரு சந்தோஷம் எழுந்தது மறுப்பதற்கல்ல.

அவளைக் காதலித்து தன்னுள் பொத்தி வைத்து பாதுகாக்க நினைத்திட அதற்கு தடையாய் வந்து நின்றவன் தானே அவன்.

எத்தனை திட்டங்களோடு அவளின் திருமணத்தை நிறுத்தியிருக்க தான் நினைத்தது ஒன்றும் நடைபெறவில்லையே.ஆழ்ந்த பெருமூச்சொன்று விடுபட்டது தேவேந்திரனிடமிருந்து.

தர்ஷினிக்கு திருமணம் பேசி வைத்திருந்தவனிடம் எந்த குறையும் காண்பதற்கு இல்லை தான்.

ஆனால், தன்னை விட அவனால் அவளைப் பார்த்துக் கொண்டிட முடியாது என்கின்ற எண்ணம் அவனுள் ஆழமாய் புதைந்திருந்தது.

அது மட்டுமல்ல..

அவளை கண்கலங்காமல் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமே அவனை காதல் தீவிரவாதியாக மாற்றியிருந்தது.

அவனைப் பொறுத்தவரை காதலில் சரி பிழை என்று எதுவும் இருப்பதில்லை.

அவளின் மீது இருந்த நேசம் அவள் இன்னொருவனின் கரம் பற்றிய நொடி துவக்கமே வெறும் அக்கறையாக மாறியிருந்தது, தான் அவனின் தனித்துவம்.

அடுத்தவர் பொருளை விரும்பும் ரகமல்ல அவன்.

அவள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதும் உண்டு.

புதைந்திருந்த காதலை மறக்க போராடிக் கொண்டிருந்தவனை மீண்டும் மாற்றி வைத்தது, அவளின் விவாகரத்து செய்தி.

அதிலும் இப்போது அவள் கணவனின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்.

அதுவே அவளை மீண்டும் நேசித்து தன் வாழ்க்கைக்குள் இழுத்துக் கொள்ள கட்டளையிட்டிட அவள் மனதின் எண்ணம் அறிந்தால்..?

திருமணத்தின் பின் உண்டாகி அவளை முற்றாக ஆண்டு கொண்டிருக்கும் காதலை அறிந்தால்..?

விலகி செல்வானா..?

விடாப்பிடியாய் நிற்பானா..?

என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

கீழே இறங்கி வந்தவனின் முன்னே வந்து நின்றாள் ஆர்த்தி, முகம் கொள்ளாப் புன்னகையுடன்.

அவனின் முகத்தில் சடுதியாய் வந்து ஒட்டிக் கொண்டு மிளிர்ந்தது ஒரு வித எரிச்சல்.

அவனோ அவளைப் பாராது கடந்திட அவளிதழ்களில் அர்த்தப் புன்னகை.

இத்தனை நாள் அவன் யாரை காதலித்திருக்கிறான் என்பது தெரியாமல் இருக்க இப்போது தெரிந்து விட்டதே.

காதலித்தான் என்பது வலிக்கவில்லை, அவளுக்கு.

மீண்டும் காதலிக்க முயல்வது தெரிந்தால்..?

அவளுக்கும் தேவேந்திரன் தர்ஷினியைக் காதலிக்கிறானோ என்கின்ற சந்தேகம் இருந்தாலும் அதை அவனிடம் கேட்டிட விரும்பவில்லை,

அவள்.

ஒருவேளை அவன் ஒருதலையாய் அவளைக் காதலிப்பது அப்பொழுது தெரிந்திருந்தாலும் நிச்சயம் அந்த காதல் கை கூட வேண்டுக் கொண்டு இருக்க மாட்டாள்..

இருக்கவே மாட்டாள் என்பது மறுப்பதற்கல்ல.

காரணம்..?

தோழியை நினைத்து சிரிப்பு வந்தது.

அவளின் அறியாமையை எண்ணி.

தர்ஷினிக்கு தன்னை யாரும் காதலிப்பார்கள் என்கின்ற எண்ணம் வந்ததே இல்லை.

அதனோல என்னவோ பெரிதாக கருத்திற் கொள்ள மாட்டாள் யாரினது பார்வையையும்.

அது தானே சரியாகிப் போனது..

அதுவே தான் தவறாகியும் போனது.

தோழியை நினைத்து ஆழ்ந்த பெருமூச்சொன்று அவளிடமிருந்து.

ஏனோ மனதில் தேவேந்திரனை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை.

அவன் தன்னை புரிந்து கொள்ளாவிடினும் அவன் மீது உருப்பெற்றிருக்கும் நேசத்தை எங்கனம் இல்லாமல் செய்திட..?

சொல்லமால் ஒரு காதல்..

சொல்லத் தயங்கி

இன்னொரு காதல்..

சொல்லியும் புரிந்திடா வேறோரு காதல்…

மென் தூறலாய் நனைத்துக் கொண்டிருக்கும் காதலில் சாரலாய் கொட்டப் போவது எதுவோ…?

தொடரும்.

🖋️அதி…!

2023.08.15

Advertisement