Advertisement

சொல்லாமல்…!

மௌனம் 09(i)
சில வருடங்களுக்கு முன்பு…
கல்லூரியின் தன் வகுப்பில் ஒரு வித யோசனையுடன் அமர்ந்திருந்தான்,
தேவா.
நேற்றைய அதிர்வில் இருந்து அவன் அவனாய் இல்லை என்பதே சத்தியமாய உண்மை.
“டேய்..என்னடா இது மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி அமைதியா இருக்க..?”
“தேவா..என்னடா ஆச்சு..கோழி திருடன் மாதிரி அமைதியா இருக்க..”
“தேவா..அடேய் தேவா..என்னடா இது வந்ததுல இருந்து அமைதியாவே இருக்க..என்னாச்சுடா..”
“மச்சான்..ஏதாச்சும் கெட்ட கனவு கண்டியா..இல்லன்னா பேய் பிசாசு எதுக்காச்சும் பயந்தியா..? என்னடா இப்டி இருக்க..?”
விதம் விதமாய் பலமுறை கேட்ட தோழனின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தது மட்டுமே அவன் பதில்.
தள்ளி அமர்ந்து தோழனையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த பாலாவுக்கும் அவனில் இருந்த சிறு வித்தியாசம் தென்படாமல் இல்லை.
ஏனென்று கேட்டாலும் பதில் சொல்வதில்லை என்பது தெரிந்ததால் மேலும் குடையவில்லை, அவனும்.
ஆட்காட்டி விரலால் நெற்றியைத் தேய்த்து பின்னந்தலையை கலைத்து சிகை கோதிய ஆடவனின் செயலில் அருகே இருந்த தோழர்களின் புருவங்களும் சுருங்கிற்று.
ஏனோ அவனை இயல்பாக்க முனைப்பு தான் உடனிருந்த மூவருக்கும்.
“தேவா..உனக்கு ஒரு இன்ட்ரஸ்டிங் ஆன விஷயம் சொல்லவா..?” குதூகலத் தொனியில் கேட்டான் கிஷோர்.
ஏதோ யோசனையில் அலைந்து கொண்டிருந்த கருமணிகளை மையத்தில் வைத்து அடர்ந்த முடிகளை தாங்கிய இமைகளை நிமிர்த்தி விழியால் என்னவென கேட்ட ஆடவனின் செயல் ஏனோ அத்தனை அழகாய் இருந்தது.
“சொன்னா நீ கோபப்படுவ..பட் சொல்லாம இருக்க முடியல..வர வர உனக்கு பேன் பேஸ் கூடிட்டு போகுது..”
“எரும கிஷோர்..சுத்தி வளச்சி பேசாம விஷயத்த சொல்லடா வெண்ண..”
“பாலா..கொஞ்சம் பொறுடா..அவனே பேசாம தான இருக்கான்..” என்று சொல்லி முடிக்கும் முன்னரே தேவாவின் பார்வை கிஷோரிடம் தாவி விடயத்தை சொல்லும் படி கட்டளை இட்டிருந்தது.
“நேத்து காலஜ்ல கிரிக்கெட் டோர்னமன்ட் நடந்துச்சு தான..”
“ஆமா..அது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான..”
“டேய் பக்கி பாலா..முழுசா கேளுடா வெண்ண..”
என்று விட்டு தேவாவை பார்க்க கவனத்தை இங்கே வைத்திருந்தாலும் அடிக்கடி அவனின் சிந்தனை வேறு புறம் தாவிடுவது புரிந்தது.
மெதுவாய் ஆடவனைப் பார்த்து தொண்டையைச் செருமிக் கொண்டே..
“நேத்து நா பெவிலியன் ஸ்டெப்ஸ்ல நின்னுட்டு இருந்தேனா..எனக்கு பக்கத்துல இருந்து தான் ஸ்டார்ட் ஆகிருச்சு பர்ஸ்ட் இயர் கேர்ள்ஸ் இருந்த எடம்..” என்க எங்கேயே திரும்பியிருந்த தேவாவின் விழிகளின் கருமணி பட்டென மையத்திற்கு வந்து கிஷோரின் உருவத்தை சுமந்து நின்றது ஒரு நொடி தான்.
மறு கணமே இயல்பாக்கி விழிகளை அலைய விட்ட படி இருந்தாலும் ஒரு நொடி ஏறி வில்லென வளைந்து நின்று பின் தாழ்ந்த ஒற்றைப் புருவம் தப்பவில்லை பாலாவின் கண்களில் இருந்து.
“அப்றம்…?” தோழனை சோதித்திட வெகு ஆர்வத்துடன் குரல் கொடுத்தது பாலாவே தான்.
“அப்றம் என்னாச்சுனா..அதுல ஒரு பொண்ணு மச்சி..பேசாம தான் இருந்துச்சு..இவன் வந்து பேட்டிங்க் பண்ண ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் இருக்கும்..திடீர்னு தேவா தேவான்னு ஒரே கத்தல்..பக்கத்துல இருந்த மொத்த பேரும் அந்த பொண்ண தான் திரும்பி பாத்தாங்க..
ஆனாலும் நிறுத்தாம கத்திட்டே இருந்துச்சு..அன்னிட்கி கேன்டின்ல இருந்துச்சே..பேரு கூட தர்ஷினி”
சொல்லி முடிக்க முன்னரே விரிந்த விழிகளை அழுந்த மூடி தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டான், ஆடவன்.
“டேய் அது சாதாரணமா கத்தியிருக்கும் டா..” ஓரக்கண்ணால் தோழனை நோட்டமிட்ட படியே சொன்னவனில் இருந்து எதையும் காட்டிடாது தப்பிக்க வெகு பிரயத்தனங்கள் எடுக்க வேண்டி இருந்தது ஆடவனுக்கு.
பார்வை மட்டும் வேறு புறம் இருக்க பாத முதற்கொண்டு மற்றைய அனைத்துமே கிஷோரின் புறம் அல்லவா திரும்பி இருந்தன.
செவியை கூர் தீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் செவிப்பறையில் அலைமோதிடும் வார்த்தைகளுக்காக அவனுள் ஒரு வித ஆர்வம் புரண்டெழுந்திருந்தது மறுக்க முடியாத உண்மையே.
“டேய்..இருடா..அது மட்டுல்ல..கைல போர்ட் வேற..தேவான்னு இவன் பேர போட்டு..நானும் ஏதோ ஆர்வக் கோளாறுன்னு தான் நெனச்சிகிட்டு இருந்தேன்..ஆனா இவன் அவுட் ஆனப்றம் அந்த பொண்ணு மேட்ச பாக்கவே இல்ல..அமைதியா உக்காந்துருச்சு..ஏதோ புக் வாசிச்சுகிட்டு இருந்துச்சு மேட்ச் முடியுர வர…அப்போ தான் எனக்கும் லைட்ட ஒரு டவுட்..”
“ஆனா எனக்கு அப்டி தோணலயே..”
“பிசாசு பாலா..உனக்கு எப்டி தோணும்..தேவா..”
“ம்ம்..”
“எனக்கு என்னமோ அந்த பொண்ணுக்கு உன் மேல க்ரஷ்னு தோணுது..” சிறு புன்னகையுடன் அவன் சொல்லிட எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை,
ஆடவனின் ஆழ்ந்த பார்வையை தந்திடும் விழிகள்.
பட்டென எழுந்தவனோ எதுவும் பேசாது பின்னந்தலையை கோதிக் கொண்டே வகுப்பறையில் நடந்து செல்ல அர்த்தமாய் அவனின் முதுகை துளைத்தது பாலாவின் பார்வை.
அந்த பெரிய மரத்தடியின் அருகில் இருந்த கட்டுத்திண்டில் தனியாக அமர்ந்திருந்தான்,
தேவா.
மனதில் ஒரு ஆர்ப்பரிப்பு என்றால் மறுபுறம் அவள் மீது மீண்டுமாய் ஒரு கோபம்.
அவள் தன்னுடன் நடந்து கொள்வதைப் பார்த்திடும் போது சத்தியமாய் அவள் தன்னை காதலிக்கிறாள் என்கின்ற எண்ணம் துளியும் எட்டிப் பார்ப்பதில்லை ஆடவனுக்கு.
ஆனால், நடக்கும் நிகழ்வுகளை பார்த்திடும் பொழுது..?
அவள் மீது அவனுக்கு கோபம் பிறந்ததற்கு முழுக்காரணமும் அவள் தன்னை காதலிப்பதாக தந்த கடிதம் தான்.
அது இல்லையென்றால் நிச்சயம் அவள் மீது கோபம் வந்திருக்காது.
மற்ற பெண்களை விட இவளின் மேல் ஒரு படி மேல் அளவு மரியாதையும் கண்ணியமும் தோன்றியிருக்கும் என்பதை உணர அவனுக்கு அவளுடனான முதல் சந்திப்பில் இருந்தான ஒரு சில நாட்களே போதுமாக இருந்தது.
அந்த கடிதம் அவளுடைய பெயரில் அவனை வந்தடையும் வரை அவனுக்கு அவள் மீது ஒரு நன்மதிப்பு இருந்தது நிஜமல்லவா..?
அவளை அவனுக்கு பிடிக்காது என்கின்ற இடத்தில் இருக்கும் போதே இப்படி இழுபட்டுச் செல்லும் மனது அவள் மீது அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்காவிடின்..?
அதற்கு மேல் யோசிக்கவில்லை ஆடவன்.
தலையை உலுக்கிக் கொண்டு அவள் தனக்கு காதல் கடிதம் கொடுத்தவள்…
தன்னை காதலிப்பவள் என்று மனதில் பதிய வைத்து கோபத்தை வளர்த்துக் கொண்டது நேசத்தின் விதைகள் அவன் மனதில் தூவப்படாமல் இருப்பதற்காகத் தானோ..?
மொத்த உணர்வுகளையும் மனமாற்றங்களையும் உள்ளுக்குள் அமிழ்த்தி கோபத்தை மட்டுமே மனதில் எழுப்பி நிற்க வைத்த பின்னே ஆசுவாசம் அடைந்தது ஆடவனின் மனது.
இனி அவளை ஒரு போதும் சந்தித்திடக் கூடாது என்று நினைத்தவனுக்கு விதியின் செயல் என்னவென்று அப்போது தெரியாதல்லவா..?
தோழனைத் தேடி பாலா வந்திட அந்த நேரம் பார்த்து அந்த இடத்தை கடந்து சிற்றுண்டிச்சாலைக்கு நுழையும் முனைப்பில் வந்து கொண்டிருந்தாள்,
தர்ஷினி.
உடன் கார்த்திகாவும் வந்திருந்தாள்.
அவளைக் கண்டதும் சாதாரணமாக இருந்து விட முடியவில்லை ஆடவனால்.
என்னவென்று புரியாத தன் உணர்வுகள் தன் இயல்பை வெல்வது புரிந்திட மொத்தமும் கோபமாய் உருப்பெற்று நின்றது,
அவள் மீது தான்.
அவனை அங்கு கொஞ்சமும் எதிர்பாராத திகைப்பில் அவள் விழிகள் விரிய ஆடவன் விழிகள் ஒரு கணம் அவ்விழகளினுள் ஊடுவிப் பார்த்து இயல்பு மீண்டிட காரணம் என்னவோ..?
இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவின் ஒரு முனையை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு திரும்பி நடக்கப் பார்த்தவளை கலைத்தது அவன் அழைப்பு.
“கம் ஹியர்..”கூரிய விழிகளால் அவளைத் துளைத்து ஆடவனின் குரல் இறுக்கத்துடன் ஒலிக்க மொத்த தைரியமும் வடிந்து தான் போயிருந்தது,
அவளில் இருந்து.
பாலாவும் அச்சமயம் தோழனை நெருங்கியிருக்க இன்று எதற்கு திட்டப் போகிறானோ என்ற பயத்தில் அவனருகே வந்து நின்றவளுக்கு தப்பிக்கும் வழி இல்லையே.
தன் முன்னே வந்து நின்றவளின் தோற்றம் அவனை கொஞ்சம் தளர்த்த முயன்றதோ..?
இளக முயன்ற மனதே இறுகப் பிடித்து பேசத்துவங்கியவனுக்கு தன் மேலும் கோபம் தான்.
“இங்க பாரு..நா உனக்கு இது ரெண்டாவது தடவ சொல்றேன்..சும்மா லவ்வு கிவ்வுன்னு என் பின்னாடி சுத்தாத..நேத்து கிரிக்கெட் பாக்க வந்து கத்தி என் மானத்தை வாங்குனது எனக்கு தெரியாதுன்னு நெனச்சிகிட்டு இருக்கியா..?ஹான்..”
அவன் கேட்ட தொனியே அவள் உடலை அதிர வைத்திட இத்தனை நாட்கள் கண்டிராத கோபம் படர்ந்து இருந்தது, அவனின் நீள் அகல விழிகளில்.
பேசியிருப்பாள் தான்.
ஏனோ ஆடவனின் கோபம் அப்படியொரு பயத்தை விதைத்திருந்தது அவள் மனதில்.
“என்ன கேட்ட கேள்விக்கு பதில் வர்ல..ஹான்..நேத்து அப்டி கத்துனதுக்கு என்ன அர்த்தம்..?” கத்தி முனைப்பார்வையுடன் கேட்க அவன் கோபத்தில் மிரண்டு எச்சில் விழுங்கியவளை தெளிவாகவே படம் பிடித்துக் கொண்டன அவன் விழிகள்.
“சா..சாரி..சீ..சீனியர்..தவறுதலா..” அவள் முடிக்கவில்லை.
எள்ளளுடன் சத்தமான ஒரு நகையொலி ஆடவனிடம் இருந்து.
“வாட்..வாட்..கம் அகெய்ன்..என்ன மிஸ்டேக்கா..?” இத்தனை நேரம் பரிகாசமாய் இருந்தவனின் முகம் அடுத்த நிமிடமே அத்தனை ரௌத்திரத்தை தத்தெடுத்துக் கொண்டது.
“இங்க பாரு..என் பின்னாடி சுத்தறது..அடுத்தது வன் சைட்டா லவ் பண்ணிகிட்டு திரியுறது இந்த வேலயெல்லாம் வச்சிக்காத சொல்லிட்டேன்..
ஹான்..தென் எனக்கு எழவு லவ்வு எதுவும் புடிக்காது..இதுக்கப்றம் ஏதாச்சும் நடந்துச்சு தொலச்சி கட்டிருவேன்..தென் எனக்கு ஆல்ரெடி ஆளும் இருக்கு” சம்பந்தமின்றி பொய்யொன்றுடன் விரல் நீட்டி எச்சரித்து வார்த்தைகளை கடித்து துப்பிட அவனின் அவதாரத்தில் பயந்து தலையாட்டி வைத்தவளுக்கு அவளுள் இருந்த தைரியம் எங்கு போனது என்பது தெரியவேயில்லை.
“ஓகேஏ ரைட்ட்ட்ட்..நவ் லீவ் திஸ் ப்ளேஸ்..” அதிகாரமாய் வந்து விழுந்த வார்த்தைகளில் மறு விநாடியே அவ்விடத்தை விட்டு ஓடியிருந்தவளின் விம்பம் மறையும் வரை அவளையே தொட்டு நின்றிருந்தன,
ஆடவனின் ஆழம் பார்த்திடும் பார்வை.
பழைன கசடுகளின் ஆக்கிரமிப்பில் கோபம் கொண்டு பற்களை நறநறத்தபடி இருந்த ஆடவனை விசித்திரமாக தான் பார்த்து வைத்தான்,தோழன்.
“மச்சீஈஈஈ…என்னாச்சுடா..?”
“நத்திங்..” விட்டேற்றியாய் வந்த பதிலில் அவன் முகத்தில் புன்னகை.
“மாப்ள..எனக்கு என்னமோ அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் டிபரெண்டா பிஹேவ் பண்றன்னு தோணுது…அந்த பொண்ண புடிச்சிருக்கா..?”
“வாட்..விரு..விருப்பமா..எனக்கா அவ மேல..சா..சான்ஸே இல்ல..”திக்கல் திணறாக கூறியவனிடம் நிச்சயம் அன்றிருந்த உறுதி இல்லை.
கொஞ்சம் குறைந்தாற் போல் தோன்றியது.
“தேவா..எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி இல்லடா..” அதை மட்டுமே சொல்ல முடியும் அவனால்.
எந்த வார்த்தைகளும் அவனின் காயத்திற்கு மருந்து இட்டிடுமா..?
“ப்ச்ச்…விடு மச்சான்..எல்லாரும் ஒரே மாதிரி தான்..” சிடுசிடுப்புடன் சொல்லி விட்டு நகர்பவன் தானாக தான் உணர்ந்திட வேண்டும்.
அவள் அவனின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவள் என்பதை.
ஒரு மாத காலம் வேகமாய் கடந்திருந்தது.
தேவாவின் விழிகளின் சிக்காமல் அவளின் கல்லூரி வாழ்வு இயல்பாய் செல்ல அவளின் தாக்கமின்றி அவனும் பழைய நிலைக்கு மீண்டு தன்னியல்பில் தரித்திருந்தான்.
பழைய கசடுகளும் சிலரை சந்திக்க நேர்ந்ததால் அடிக்கடி மேலெழுந்திட அவளின் மீது அவனின் கோபம் இன்னும் வளர்ந்து கொண்டதே தான் போனது.
காதல் என்ற தவறால் தான் ஒரு முறை வாழ்க்கையில் பட்ட அடி போதாதா..?
அன்று அந்த கேட்போர் கூடமே நாளை நடைபெற இருக்கும் கல்லூரியின் நிகழ்வொன்றிற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க மேடையில் இருந்தவாறு மேடையை ஒழுங்கமைக்கும் செயலை மேற்பார்வை பார்த்த படி வேலைகளை ஏவிக் கொண்டும் தானும் உதவிய படி நின்றிருந்தான்,
தேவா.
அணிந்திருந்த கறுப்பு நிற புல் ஸ்லீவ் ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட்டு பின்னந்தலையை அடிக்கடி கோதிக் கொண்டு நின்றிருந்தவனுக்கு அணிந்திருந்த கறுப்பு நிற டெனிம் பாந்தமாய் பொருந்தியிருந்தது.
அங்கு அவ்விடத்தை சுத்தம் செய்வதற்கும் இதர வேலைகளுக்கும் வந்திருந்த பெண் மாணவியரின் பார்வை தன் மீது ஒரு வித ரசனையுடன் படிவதை கண்டவனின் விழிகளில் ஒரு வித வெற்றுப் பாவத்துடன் கூடிய அலட்சியம்.
“நீ பார்த்தால் பார்த்துக் கொள்..நான் அசரமாட்டேன்..” எனும் படியாய் இருந்த அவனின் செயலும் விழிமொழியும்.
சுற்றும் முற்றும் விழிகளை சுழற்றி பார்த்த படி அங்கு கூடத்துக்குள் நுழைந்தாள், தர்ஷினி.
“பக்கி..நம்மள மாட்டி விட்டுடாங்க..நாம தான் புல்லா கூட்டி க்ளீன் பண்ணனும் போல..” கையில் இருந்த தும்புத்தடியை பார்த்து தோழிக்கு திட்டிய படி வந்த ஆர்த்தியின் விழிகள் அங்கு தேவாவைக் கண்டதும் மின்னியது.
“நீ சொல்றது சரி தான் ஆரு..நாம தான் எப்பவுமே இந்த க்ளீனிங்க வேலை எல்லாத்துக்கும் மாட்டிக்கிறோம்..” பள்ளிக் காலம் முதல் அனுபவிக்கிறேன் என்கின்ற பெயரில் அடக்கியாண்டு அடுத்தவருக்கு எரிச்சலைத் தந்த சில மாணவியர் குழுக்களின் கீழ் சிக்கித் தவித்து அவர்களிடம் சண்டோ வேண்டாமென்று ஒதுங்கிப் போக தலையில் கட்டும் வேலைகளை எல்லாம் செய்து கல்லூரிக் காலத்திலும் அதே தொடர்வதை குறித்து ஏகபோக எரிச்சல் மண்டிக் கிடந்தது, அவள் குரலில்.
அவளின் கேள்விக்கு பதில் கிடைக்காது போகவே ஆர்த்தியை திரும்பி பார்த்திட அவளின் பார்வை ஆர்வத்துடன் ஆடவனின் மீது படிந்திருப்பது கண்டு வெளிப்படையாகவே நெற்றியில் அறைந்து கொண்டன, அவள் விரல்கள்.
தேவாவைக் கண்ட தர்ஷினிக்கு தான் திக்கென்றது.
விழிகளில் பயம் மின்ன மேடையின் அருகே சுத்தம் செய்யும் பணியை தோழியரிடம் ஒப்படைத்து விட்டு மண்டபத்தின் மறுமுனைக்கு சென்று தன் வேலையை துவங்கியவளுக்கு தூசு அதிகம் ஒத்துக் கொள்வதில்லையே.
நல்ல வேளையாக பையை எடுத்து வந்திருக்க அதிலிருந்த இன்னொரு துப்பட்டாவை எடுத்து விழிகள் மட்டும் தெரியும் படி தலையில் சுற்று முகத்தை மறைத்துக் கொண்டு தன் வேலையைத் துவங்கிட அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பெண்கள் யாரும் அவளுக்கு உதவவில்லை.
அவளுக்கு அந்த விடயம் எல்லாம் பெரிதாக கருத்தை கவரவில்லை.
கோபம் வந்தது தான்.
இறைவனுக்காக என்று இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு சுத்தம் செய்திட அவளின் முதுகுக்குப் பின்னே ஒலித்தது,
ஆடவனின் அழுத்தமான காலடியோசை.

Advertisement