Advertisement

சொல்லாமல்…

மௌனம் 08(i)
சில வருடங்களுக்கு முன்பு…
அந்த மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது,
அவனின் வேகத்தில்.
அவர்கள் கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவே இத்தனை சத்தம் அந்த அரங்கத்தில்.
வேகமும் விவேகமுமாய் தேவா துடுப்பெடுத்தாடி ஆட்டத்தை நகர்த்திட அனைவரினது பார்வையும் அவனின் மீது படிந்திருந்தது,
ஆர்வமாகவும் மகிழ்வாகவும்.
ஒருத்தி மட்டும் அதற்கு வித விலக்கு.
கர்சீப் கொண்டு முகத்தை மூடி ஏதோ புத்தகத்தை மடியில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தவளை விசித்திரமாக தான் பார்த்து வைத்தது,இருந்த கூட்டம்.
அவளருகே இருந்த ஆர்த்திக்கோ இருப்புக் கொள்ளவில்லை.
முன்னே அமர்ந்திருந்த தோழயரின் தலையை அங்குமிங்கே தள்ளி முனைப்புடன் அவள் பார்த்திட கடுப்பேறியது முன்னே அமர்ந்திருந்தவர்களுக்கு.
கார்த்திகாவும் விளையாட்டில் சிறிது ஆர்வம் இருக்கவே அவளும் குதூகலமாக ரசித்துக் கொண்டிருந்தான்.
முதலில் தேவாவின் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்க அவன் வந்ததும் ஆட்டம் களை கட்டியிருந்தது.
ஒரு கட்டத்தில் பவுண்டரியைத் தாண்டி நான்கு ரன்கள் கிடைத்திட அவளருகே எழுந்த ஆரவாரக் கூச்சலில் காது அடைத்திற்று அவளுக்கு.
“யப்பா..நாம செவுடா ஆகிருவோம் போல இருக்கே..” தனக்குள் எண்ணியவளாய் முகம் சுருக்கிய தோழியின் செயலில் அத்தனை கோபம் ஆர்த்தியின் முகத்தில்.
“நீ எதுக்குடி கிரிக்கெட் பாக்க வந்த..சும்மா மொகத்த சுருக்கி கிட்டு..இங்க வந்தும் புக் வாசிக்கிற..க்ளாஸ்ல இருக்க வேண்டியது தான..”
“அம்மா தாயே சும்மா விடு..நானே ஸ்பெக்ஸ மிஸ் பண்ணிட்டு தூரத்துல இருக்குறது தெளிவா தெரிலனு புக் படிக்கிறேன்..”
“ஆமா..அப்டியே ஸ்பெக்ஸ் இருந்தா மட்டும் பாத்து கிழிச்சுருவா..”
“ஐயோஓஓஓ..உனக்கென்ன இப்போ நா கத்தனும் அதான..சரி கத்தி தொலைறேன்..”
வந்ததில் இருந்து தனக்கு திட்டிக் கொண்டிருக்கும் தோழியின் செயலில் கடுப்பேறிற்று,
தர்ஷினிக்கு.
“ஹேய்..சும்மா இல்ல..தேவா தேவா ன்னு கத்தனும் ஓகே வா..”
“சரிடி..அந்த நோ மிஸ்டேக் விசிறிங்க தொல்ல தாங்க முடியல..”
“ஏய் என்னடி சொன்ன..?”
“ச்ச..ச்ச..ஒன்னுல்ல..ஆர்த்தி நா வேணா கத்தாம நம்ம க்ளாஸ்ல மிஸ்டர்.தேவ் பேன்ஸ் எல்லாம் சேந்து பெருசு ப்ரிஸ்டல் போர்ட்ல எழுதி வச்சீங்களே அத எழுந்து புடிச்சுக்கவா டி..”
“எத சொல்ற..?”
“அதப் புடிச்சிக்க எல்லாம் வேணா..நீ பொத்திட்டு கத்து..”
“கிறுக்கு புடிச்சவளே சரிடி..” என்றவளும் தன் குரலில் கத்திட திடுமென கேட்ட சத்தத்தில் அனைவரினது பார்வையும் அவள் மீது திரும்பி மீண்டது,
ஒரு நொடி.
தோழியின் தொல்லையை விட அவர்களின் விசித்திர பார்வை சகித்துக் கொள்ளக் கூடியதாய் இருக்க அவளும் கத்துவதை நிறுத்தவில்லை.
அதிலும் அவர்கள் எழுதியிருந்த “யூ கேன் தேவா..” என்கின்ற வாசகத்தை தாங்கிய பிரிஸ்டல் போர்டையும் ஆர்த்தியின் நச்சரிப்பு தாங்காமல் இடைக்கிடையே தாங்கிப் பிடிக்க வேண்டிதாயிற்று அவளுக்கு.
ஒருவாறு ஐம்பத்தேழு ரன்களுடன் தேவா ஆட்டமிழக்க அப்படி ஒரு நிம்மதி தர்ஷினிக்கு.
“யப்பா..இனி கத்த சொல்ல மாட்டா..” என்று நினைத்து பெருமூச்சு விட ஓரவிழியால் அவளை முறைத்தாள்,ஆர்த்தி.
“ஆர்த்தி இனி கத்த சொல்ல மாட்டில்ல..மூச்சு வாங்குது டி..”
“சரி..சரி..நீ இப்போ உன் வேலய பாரு..” என்று விட்டு அவள் மீண்டும் கத்தத் துவங்க அமைதியாகி விட்டிருந்தாள், தர்ஷினி.
அது தான் அடுத்த அவனின் கோபத்திற்கு அடித்தளமே.
பொதுவாக எல்லோருக்கும் தேவாவின் மீது மதிப்பு உண்டென்பதால் இவர்கள் கத்துவதை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான் தேவாவின் தோழனொருவன்,
இவர்களில் இருந்து சற்றுத் தள்ளி நின்று.
தர்ஷினியின் கட்டைக் குரல் வெகுவாகவே அவனின் கவனத்தை ஈர்த்திருக்க அவள் அவள் பிடித்திருந்த போர்டில் இருந்த வாசகமும் கொஞ்சம் அவனை புருவம் சுருக்க வைத்திருக்க தேவா ஆட்டமிழந்தவுடன் அவள் சோர்வாகி அமர்ந்ததும் வேறு யாருக்கும் இல்லாது அவனிருக்கும் போது மட்டும் கத்தியதும் அவன் மைதானத்தில் இருந்து வெளியேறிய பின் பின் வந்த யார் ஒருவருக்கும் கத்தாததும் அவள் மீது சந்தேகத்தையே கிளப்பி விட்டிருந்தது,
அவனுக்கு.
“இந்த பொண்ணுக்கு தேவா மேல க்ரஷ் போல..” தானாகவே ஊகித்து மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டிருக்க அப்படி ஒருவன் தன்னை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதே தெரியவில்லையே,
அவளுக்கு.
மீண்டும் தன் புத்தகத்தில் அவள் ஆழ்ந்திட அவளின் கவனம் மைதானத்தில் நிலைக்கவில்லை.
ஆட்டமும் முடிய அவர்களின் கல்லூரி வெற்றி பெற்றிருக்க தேவாவைத் தூக்கிக் கொண்டவர்களின் செயலில் அவளிதழ்களில் புன்னகை.
தோளில் யாரைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரியாவிடினும் ஏனோ இதழ்கள் மலர்ந்தன.
மைதானத்தில் இருந்து அனைவரும் கலைந்து சென்றிட ஆர்த்தி மட்டும் அவனைக் காண வேண்டி தரித்திருக்க கார்த்திகாவை அனுப்பி விட்டு அவளுடன் இருந்தாள்,தர்ஷினி.
மைதானத்தின் ஒரு மூலையில் தோழியின் செயலால் கிளம்பியிருந்த எரிச்சலில் அவள் முகம் அஷ்டகணோலாய் சுருங்கி இருந்தாலும் அவளை ஆர்த்தி கண்டு கொண்டால் தானே.
“இந்த க்ரஷ் பைத்தியத்தோட முடியல..” இதழ்கள் முணுமுணுக்க அது மெதுவாய் தன் காதை வந்தடைந்தாலும் அவளின் பார்வை மைதானத்தின் மறு மூலையில் இருந்த தேவாவின் மீதே நிலைத்து நின்றது.
ஒரு கையால் முன்னுச்சி முடியை பின்னே தள்ளி கோதிவிட்டுக் கொண்டு மறு கையை பான்ட் பாக்கெட்டில் நுழைத்து தோழனுடன் கதைத்தவாறு அவன் நின்றிருந்த விதம்…
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு வெகு ரசனைக்குரிய காட்சியே.
தோழியின் அலப்பறை தாளாது தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டு முகக் கவசத்தில் இருந்து தப்பித்த விழிகளூடு எங்கெங்கோ பார்வையை அலையவிட்ட படி இருந்த தர்ஷினியின் மீது அவன் பார்வை ஒரு கணம் படிந்திட மறு கணமே வேகமாக திரும்பிக் கொண்டன,
அவன் விழிகள்.
எதிர்பாராமல் அவளைக் கண்டதும் என்னவோ ஆகியது,
ஆடவனின் அகமதில்.
முயன்று தன்னை சமாளித்துக் கொண்டு அவன் திரும்பி தன் கவனத்தை திசை திருப்பி வெற்றியும் கண்டான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆர்த்திக்கு இதற்கு மேலும் அவன் தன்னிடம் பேச வருவான் என்கின்ற எண்ணம் துளியும் இல்லை.
அத்தை மகன் என்பதற்காக அவளும் பணிந்து போகப் பார்த்தால் முறுக்கிக் கொண்டு நிற்கின்றானே ஆடவன்.
பொறுமை பறந்திட கோபம் எழுந்திட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோழியை இழுத்துக் கொண்டு முன்னே நடந்தவளின் இழுப்புக்கேற்ப இசைந்து உடன் நடந்தாள்,தர்ஷினி.
தோழியின் கோபத்தில் சிரிப்பு பொத்துக் கொண்டு வர அதை கடினப்பட்டு அடக்கியவளின் விழிகளில் அந்த நமட்டுச் சிரிப்பு படமாய் விரிந்து நின்றிருந்ததை ஆடவன் விழிகள் அலச அவனின் இதழ்களில் தன்னாலே கேளாமல் ஒரு மெல்லிய சிரிப்பு இழையோடியதன் ரகசியம் என்னவோ..?
அவர்கள் அந்த மைதானத்தை விட்டு நகர்ந்திடும் விடும் அவர்களின் புறம் திரும்பாவிடினும் ஓரவிழியில் அவளின் விம்பத்தை மட்டுமே தேக்கி நின்றிருந்தான்,தேவா.
ஏனோ கடந்து வந்த போது பல பெண்களை சந்தித்து இருந்தாலும் இவள் ஒருத்தி மட்டுமே தன்னியல்பில் தரித்து எதையும் செய்யாமலே தன் கவனத்தை ஈர்த்துக் கொள்பவள் என்பது புரியாமல் இல்லை,
அவனுக்கும்.
அவள் நிமிர்வா..?
அலட்சியமா..?
இல்லை பின்னொரு நாளில் அவனை மூழ்கடிக்க போகும் அந்த விழிகளில் தெரிந்திடும் வெற்றுப்பாவமா..?
ஏதோ ஒன்று மட்டும் அவனின் கவனத்தை ஈர்த்து அவள் புறம் வெகு ஆர்வத்தை கிளப்பியிருந்தது.
நேரம் இரவு இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.
எத்தனை முயன்றும் உறக்கம் கிட்டாது இருக்கவே மொட்டை மாடியில் நின்று கருவானத்தை வெறித்த படி நின்றிருந்தான்,
ஆடவன்.
எதையும் தாங்கும் மனப்பக்குவத்தை அவனுக்கு இறைவன் கொடுத்தது அவனின் வாழ்க்கையின் தடங்கல்களை முன்னமே அறிந்ததால் தானோ..?
நினைக்கும் பொழுது மெல்ல இதழில் விரக்தியின் துளிகள் சேர்ந்து நின்றன.
எதையும் நினைக்க பிடிக்காமல் தரித்து நின்றிருந்தவனை கலைத்தது தர்ஷினியின் வீட்டு மொட்டை மாடியில் திடீரென ஒளிர்ந்த மின்விளக்கு வெளிச்சம்.
யாரோ வெளியில் வருவது புரிந்திட அது தர்ஷினி தான் என்று அங்கு கசிந்திருந்த வெளிச்சம் அவனுக்கு எடுத்துக் காட்டிட இருந்த மனநிலைக்கு அவனில் எந்த மாற்றமும் இல்லை என்றே தோன்றிற்று அவனுக்கு.
அவனிருந்த மனநிலையில் “காதல்” என்பதையே வெறுத்திருக்க அந்த நேரத்தில் உணர்ந்த அவளின் வருகை அவள் மீது மட்டுப்பட்டிருந்த கோபத்தை கொஞ்சமாய் தட்டு விட்டிருந்தது என்பதே நிஜம்.
புதிதாய் முளைத்த கோபத்தில் மறுபுறம் திரும்பின, ஆடவனின் பாதங்கள்.
மொட்டை மாடிக்கு வந்த தர்ஷினிக்கு தூரத்தில் அவன் நிற்பது அந்த இருட்டில் தெரியவில்லை.
தெரியவில்லை என்பதை அவள் அவனின் புறம் திரும்பவேயில்லை.
பொதுவாகவே அவளுக்கு இருளான நேரங்களில் பார்ப்பதில் சில கஷ்டங்கள் இருப்பதுண்டு.
மொட்டை மாடியை சுற்றி போடப்பட்டிருந்த கட்டில் கைகளை பதித்து அண்ணாந்து வானத்தை பார்த்தவளுக்கு மின்னிய விண்மீண்கள் மங்கலாயத் தான் தெரிந்தது.
இதழ்கள் தன்னாலே துப்பாட்டை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டிருந்தவளுக்கு என்ன தோன்றியதோ..?
“லவ் யூ தேவாஆஆஆஆஆஆஆ…” என்று தனக்காக கத்தியிருந்தாள், உச்சஸ்தானியில்.
அவளிடம் வேறு எந்த நோக்கமும் இல்லை.
தனக்கு தானே சொல்லிக் கொள்ளும் வார்த்தை தான் அது.
ஆனால், ஆடவனுக்கு…?
ஆடிப்போய் விட்டானே ஆறடி ஆடவன்.
அந்த நள்ளிரவை தாண்டிய நேரத்தில் நிசப்தமான அந்த ஏகாந்த வேளையில் யாருமில்லை என நினைத்து தனக்கென அவள் கத்தியது வெறும் பூச்சிகளின் ரீங்காரத்தை மட்டுமே தனக்குள் சுமந்து நின்றிருந்த அமைதிக்காற்றில் கரைந்து கொண்டு வந்து விழி மூடி மறுபறும் திரும்பி நின்றிருந்த ஆடவனின் செவியை உரசிய கணம் அவன் நிலை…?
இதயத்தின் ஓசை திடுமென எகிற உடலில் மெல்லியதாய் ஒரு அதிர்வு ஓடி மறைந்தது.
தேக மயிர்கள் சிலிர்த்து நிற்க
விலுக்கென நிமிர்ந்தவனுக்கு பலமாகவே மூச்சு வாங்கிட இதயமோ சீரின்றி துடிக்க அப்படியே சரிந்து தரையில் அமர்ந்திருந்தான்,
ஆடவன்.
தேகத்திலும் அகத்திலும் சடுதியாய் தோன்றிய சிறு சிறு மாற்றங்கள் அவனை கொஞ்சம் பலமிழக்க வைத்ததோ..?
ஏன் இப்படி..?
சத்தியமாய் காரணம் தெரியவில்லை, அவனுக்கு.
இந்த வார்த்தையே தன் முகத்துக்கு நேரே தனக்கெனவே பலர் சொல்லி இருந்தாலும் பொருட்டாக மதியாது கடந்திட்டவன் தான்.
ஆனால், இந்த நொடி..?
சீரின்றி துடித்த இயத்தின் ஓசை காதை நிறைக்க நெஞ்சை நீவிக் கொடுத்தது, அவன் விரல்கள்.
அவளுக்கு எங்கனம் அவன் நிலை தெரிந்திடப் போகிறது..?
“தேவாக்குட்டீஈஈஈ..லவ் யூ..” மீண்டும் சத்தமாய் கத்திட இதை கொஞ்சம் எதிர்ப்பார்த்து இருந்ததால் அந்தளவு அதிர்வில்லை அவனிடத்தில்.
ஆழமாய் சுவாசித்து நெஞ்சை நீவிக் கொண்டு கட்டில் சாய்ந்து மெல்ல விழிகளை மூடியவனுக்கு ஏனோ அந்த வார்த்தையின் தாக்கம் மீதமிருப்பது புரிந்தது.
நிமிடங்கள் தானாய் கடந்திட மெல்ல இயல்புக்கு மீண்டு எழுந்து நின்றான்,
ஆடவன்.
ஏதோ சுழலில் சிக்குண்டு தன்னாலே மீண்டு வந்த எண்ணம் மனதில்.
விழிகள் அவளின் மங்கலான உருவத்தை தேடி அது கிடைக்காது போக “யப்பா..பொய்ட்டாடா.” என்று நிம்மதிப் பட்டுக்கொண்டது,
மனதின் ஒரு புறம்.
அவனின் ஆழ் மனதின் சோர்வை உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியது காரணம் துளிர்த்திருந்த ஆர்வம் ஈர்ப்பின் எல்லைக்குள் இழுபட்டுச் செல்ல முயல்வதாலோ..?
தலையை கலைத்து பின் விரல்கள் கோதிட இடுப்பில் கரம் குற்றி பெருமூச்சு விட்டவனாய் படியிறங்கிச் சென்றவனின் மனநிலை மட்டும் அவன் வசமில்லை.
என்னென்னவோ மாற்றங்கள் அவனுக்குள்..
அவனுள்ளுக்குள்.
விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டவனுக்கு உறக்கம் வந்து தொலைக்கவில்லை.
மாடிக்குச் செல்லாமல் பேசாமல் கட்டிலிலேயே உருண்டு கொண்டாவது இருந்திருக்கலாமோ என்கின்ற சிந்தனை தான் உதித்தது,
உறக்கமின்றி தவித்த அந்த வேளையில்.
உருண்டு புரண்டு ஒருவாறு விடியும் வேளையில் அவன் உறக்கத்தை தழுவிட மூடிய விழிகளுக்குள் மங்கலாய் வந்து நின்றாள்,
அவள்…
அவனின் அவள்…!

Advertisement