Advertisement

சொல்லாமல்…

மௌனம் 06(i)

சில வருடங்களுக்கு முன்பு…

“தர்ஷினீஈஈஈஈ…என்னாச்சுன்னு சொல்லித் தொலடி..”

“ம்ஹும் வேணாண்டி..நீ வேணுன்னா அந்த பக்கி கிட்டவே கேட்டுக்க..” என்றவளின் பார்வை யன்னலுக்கு வெளியே மேயத் துவங்கியது.

“ரொம்பத் தான் அழுத்தம்ம்ம்ம்ம்ம்..”

சிறு இதழ் சுளிப்புடன் சொல்லியவளுக்கு தோழியின் முகத்தில் ஏதோ கலவரம் தெரிந்தது.

சுற்றி ஆட்கள் நின்றிருக்க கேட்பது பொருத்தமில்லை என்று தோன்றிடவே அமைதி காத்தவளின் விரல்கள் தொடையில் தாளம் தட்டின.

பேரூந்து நிறுத்தத்தில் இறங்கி வீடு வரை நடந்து வந்தவளுக்கு இன்று கல்லூரியில் நடந்ததே அடிக்கடி நினைவில் மின்னி மறைந்தது.

ஏனோ தேவா அவளுடன் கதைத்திடும் போது கடந்து சென்றவர்களில் இருந்த தாக்கிய பார்வைகளில் ஒரு வித அசௌகரிய உணர்வு அவளுக்கு.

இருவரும் ஒரே கல்லூரி.

தற்செயலாக சந்திப்புக்கள் நடை பெறும் நிலைகளிலும் அவன் இவ்வாறு நடந்து கொண்டால்..?

அவன் அப்படிபட்டவன் அல்ல என்பதை புரிந்து கொண்டிடும் நாள் வெகு தொலைவில் இல்லை,

என்பதை அந்நொடி உணரவில்லை அவள்.

அதை விட்டாலும் தன் தந்தையிடம் அந்த கடிதத்தை கொடுத்து விட்டான் எனின்..?

நினைத்திடும் போதே மனதுக்குள் ஒரே நேரத்தில் பல அணுகுண்டுகள் வெடிப்பது போல் ஒரு மாயை.

பெரு மூச்சு விட்டவாறு தன்னறைக்குள் நுழைந்து குளித்து விட்டு மொட்டை மாடிக்கு சென்றிட தோளின் இருபுறமும் விரிந்து படர்ந்திருந்த துப்பட்டாவின் சிறு பகுதியை சிகையில் இருந்து சொட்டிய நீர்த்திவலைகள் ஈரமாக்கி தொலைந்து போயின.

அந்த மென் காற்று இதமளிக்க ஒரு கணம் விழிகளை அழுந்த மூடி அதன் இதத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தவளின் மேல் நிலைத்திருந்தன,

அவன் விழிகள்.

மொட்டை மாடியின் விளிம்பு பூராகவும் எழுந்து நின்றிருந்த கட்டில் சாய்ந்து கொஞ்சம் சரிந்து நின்றிருந்தவனின் சிகை காற்றின் தாளத்திற்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அவனுக்கு பிறகு தான் அவள் மாடியேறி இருக்கவே தூரத்தில் இருந்தவளை தெளிவாகவே இனம் கண்டு கொண்டிருந்தன,

அவன் விழிகள்.

அவளைக் கண்டதும் அவனிதழ்களில் ஏளனப் புன்னகையொன்றுடன் சிறு கோபம் எட்டிப் பார்த்தாலும் விழிகளோ அவளின் செய்கைகளை ஆராய முயன்று கொண்டிருந்ததே..

ஏதேதோ காரணங்களை மனதுக்கு மழுப்பிச் சொல்லியவாறு.

அவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு காதல் கடிதம் கொடுத்து சினத்தை எழச் செய்ததும் அவள் தான்.

அவனுக்கு முதன் முதலாக வித்தியாசமாய் தோன்றிய பெண்ணும் அவள் தான்.

முரணான இரு வேறு எண்ணங்கள் தோன்றி முரண்டு பிடிக்கும் அவனின் மனதை அலைக்கழித்தன.

தான் அவளைப் பற்றி சித்தரித்து வைத்திருக்கும் எண்ணங்கள் பிழையோ..?

நொடி நேரத்தில் எழுந்த எண்ணத்தில் திடுக்கிட்டு தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்நத பொழுது அந்த விழிகளின் கருமணிகளில் அவள் விம்பம் இல்லை.

பதறிக் கொண்டு கருமணிகள் அங்குமிங்கும் அசைந்திட விழிகள் சுழன்று அவள் விம்பத்தை தமக்குள் பொதிந்து கொள்ள முயன்றது ஏனோ..?

சரியாக முப்பது நொடிகள்.

முப்பது நொடிகள் கடந்த பின்பே தன் செயல் உரைக்க பின்னந்தலையில் தட்டிக் கொண்டு விழிகளை இறுகப் பொத்திக் கொண்டான்,

அவன்.

“சில்ல்ல்ல்ல்…” தனக்கே சொல்லிக் கொண்டவனுக்கு தன்னை மீறி தன் விழிகள் அவளைத் தேடியதில் தன் மீதே அத்தனை கோபம்.

“ஊப்ப்ப்ப்ப்..” வாயைப் பிளந்து ஆழமாய் சுவாசித்தவனின் விரல்கள் பின்னந்தலை சிகையினுள் நுழைந்து அழுத்தமாய் கோதின.

துளியாய் மனதில் சலனமும் இல்லை.

கட்டியிழுத்திடும் ஈர்ப்பும் இல்லை.

அவளின் வித்தியாசங்கள்  ஏனோ அவளின் நடத்தைகளை ஆராய்ந்திடும் ஒரு வாத ஆர்வத்தை விதைத்திருந்தது,

அவன் அகத்தில்.

நாட்கள் வேகமாக நகர்ந்திட கல்லூரியிலும் சரி வீட்டு வளாகத்திலும் சரி தேவாவின் கண்களில் சிக்காமல் எப்படியோ தப்பித்துக் கொண்டாள்,

தர்ஷினி.

அவளுக்கு மட்டுமல்ல..

அவனுக்குமே அது பெரும் நிம்மதி தான்.

ஏனோ அவளைக் காணாத பொழுதுகளில் அவளின் வித்தியாசங்களின் மேல் தலை தூக்கியிருந்த ஆர்வங்கள் தானாகவே மட்டுப்பட அவன் இயல்பு அவனை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தன.

அன்று தன்னை மீறி அவளின் செய்கைகளை ஆராய்ந்தது நினைவில் வரும் போதெல்லாம் “தன்னையறியாமல் நடந்த மடத்தனம்..” என தனக்குள் சொல்லிக் கொண்டு தன்னையே தேற்றிக் கொள்வான், அவன்.

இனி அவளைக் கண்டாலும் மனதில் எந்த வித ஆர்வமும் முளைத்திடாது என்று ஆழமாய் ஒரு நம்பிக்கையை தனக்குள் விதைத்து வைத்திருந்தன,

ஆடவன் மனது.

காலத்தின் சுழற்சியில் அந்த ஆர்வம் அமிழ்ந்து போயிருந்ததே தவிர அழிந்து போயிருக்கவில்லை.

தற்செயலாக அவளைக் கண்டிடும் போது அவனைக் கேட்டிடாமல் அது மேலெழத் தான் செய்திடும்,

உள்ளுக்குள்.

அன்று இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச் சாலையின் ஒரு மூலையில் இருந்த மேசையில் அமர்ந்து தன் அருகே பக்கவாட்டாய் இருந்த கார்த்திகாவுடன் கதை அளந்த படி உணவுண்டு கொண்டிருந்தாள்,

தர்ஷினி.

அது சிற்றுண்டிச்சாலையின் மூலையில் இருந்த சிறு அறை போன்ற அமைப்பு.

மொத்தமாய் ஐந்து மேசைகள் மட்டுமே இடக்கூடிய பரப்பளவு,

அவ்விடத்தில்.

உணவைப் பெறும் இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி நடந்து வர வேண்டும் என்பதால் பெரிதாய் யாரும் வர ப்ரியப்படுவதில்லை,

அவ்விடத்துக்கு.

தர்ஷினிக்கு தேவாவின் விழி வீச்சில் சிக்காதிருக்க அவ்விடமே மிகப்பெரிய உதவியாய் இருந்தது என்பது மறுப்பதற்கல்ல.

முதல்  நிரையில் மூன்றும் மறு நிரையில் இரண்டுமாய் மேசை இடப்பட்டிருக்க முதல் நிரையில் முன்னால் இருந்த மேசையில் அமர்ந்திருந்தது,

தர்ஷினியும் கார்த்திகாவும் மட்டுமே.

அவர்களுக்கு ஒரு மேசை தள்ளி இன்னொரு மாணவியர் கூட்டம் அமர்ந்திருக்க பக்கமாய் இருந்த நிரலில் ஒரு மேசையில் அவளின் தோழிகளும் அதன் பின்னே இருந்ததில் தேவாவின் வகுப்பில் கற்கும் மாணவர் கூட்டமும்.

அவர்களின் முதுகுக்கு பின்னே ஒரு காலி மேசை இருக்க இடம் தேடி சோர்ந்து போய் அந்த மேசைக்கு வந்தது,

தேவாவும் அவனது தோழர்களும் தான்.

கதை மும்முரத்தில் அவர்கள் அவனைக் கவனிக்காதிருக்க அவனுக்கு புரிந்தது,

அது அவளும் அவளின் தோழியும் தான் என்பது.

சீண்டிப் பார்க்க மனம் எழவில்லை.

தான் ஏன் இவளிடம் மட்டும் வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும்..?

இயல்பாக இருந்தால் சரி தானே என்கின்ற எண்ணம் அவனுக்குள்.

அவர்கள் வந்தமர்ந்து சில நிமிடங்கள் கடந்த பின் பெண்கள் தமது உணவை முடித்துக் கொண்டு கிளம்பிய கதையின் லயிப்பில் எங்கே இருவரின் கருத்திலும் பதியும்..?

தமக்குள் இருவரும் சலசலத்து கொண்டிருப்பது அவர்களுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவளின் செவிகளை உரசியது,

கொஞ்சம் தெளிவாகவே.

தர்ஷினியின் அலைபேசியில் இருந்த அவளின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டிருப்பது,

தேவாவுக்கு தெரியாதே.

கொழுத்த கன்னத்துடன் குட்டை முடி விரிந்து கிடக்க பாற் பற்கள் தெரிந்திட இருந்த தன் புகைப்படத்தை பார்த்தவளுக்கு சிரிட்பாய் வந்தது.

“அழகா இருக்குற தேவா..” தன் புகைப்படத்தை வருடிக் கொடுத்தன,

அவள் விரல்கள்.

நீர் அருந்திக் கொண்டு பின்னே அமர்ந்திருந்தவனின் செயல் தான் அவன் பேச்சில் தடைப்பட்டு போனது.

அவளுக்கு அது தெரியாதே.

“நீ எவ்ளோ அழகு தேவா..இந்ச போட்டோல உன்ன பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு..லவ் யூ..லவ் யூ..” எனக் கூறிக் கொண்டு தன் புகைப்படத்துக்கு முத்தம் வைத்திட இங்கே தேவாவின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.

ஏனென்று காரணம் அறியாத ஒரு வித கோபம்.

விருட்டென அவன் எழுந்த நின்ற சத்தத்தில் மொத்த இடமுமே நிசப்தமாகிட திடும் அமைதிக்கு காரணம் தெரியாது திரும்பிப் பார்த்த கார்த்திகாவின் விழிகளில் அப்பட்டமான அதிர்வு பிரதிபலித்திட தோழியைத் தட்டினாள்,

படக்கென்று.

“அடியேய்..பயர் பால் டி..” அவள் சொல்லிட படக்கென்று நிமிர்ந்து பார்த்தவளோ பயத்தில் ஒரு நிமிடம் திகைத்தாலும் மறு நொடியே சுதாரித்துக் கொண்டு குனிந்து மேசையின் கீழ் சென்று ஒளிந்திருந்தாள்,

சிந்தியாமல்.

அவள் சராசரிக்கும் சற்று உயரம் அதிகம் என்றிருக்கவே குனிய முற்பட்ட நேரத்தில் மேசையின் விளிம்பில் தலை மோதிட ஓரமாய் வைக்கப்பட்டிருந்த கார்த்திகாவின் டிபன் பாக்ஸ் கீழே விழுந்து சத்தத்தை கிளப்பியது.

அவனின் விழிகளோ தோழர்களின் மீது அழுத்தமாய் படிந்திட அதன் பொருள் விளங்கியவர்களாய் பாலாவைத் தவிர மற்றையவர்கள் நகர்ந்திருந்தனர்,

அவ்விடத்தில் இருந்து.

ஆக அவ்விடத்தில் அவர்கள் நால்வர் மட்டுமே.

மேசையின் பக்கமாய் வந்து கார்த்திகா விரல்களை பிசைந்த படி நின்று கொண்டிருக்க வெளியே நடப்பது எதுவும் முழுதாய் தெரியாமல் மேசையில் கீழ் தரித்திருந்தாள்,

தர்ஷினி.

கனலை கண்களில் கவ்விக் கொண்டு அவள் புறம் திரும்பி தானிருந்த மேசையில் ஏறி ஒற்றைக் காலை ஆட்டிய படி அமர்ந்திருந்தவனின் கரங்கள் மார்புக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்தது.

அவன் விம்பம் தெரியாவிடினும் காற்றில் அலைந்து கொண்டிருந்த அவனின் பாதத்தை கண்டதுமே அவளால் உணர்ந்து கொள்ள முடியாது போகுமா..?

சட்டமாய் அன்று போல் இன்றும் ஒரு தோரணையில் அமர்ந்திருக்கிறான்,

என்பதை.

“கம் அவுட்ட்ட்ட்..” இதழ்கள் அழுத்தமாய் உச்சரித்த வார்த்தைகளில் உள்ளுக்குள் பயம் தாண்டிவமாடியது,

அவளுக்கு.

பாலாவோ தோழனை அமைதிப்படுத்த முயன்றிட அழுத்தமான தோழனின் பார்வையில் அவனும் இருந்து விட்டான்,

அமைதியாக.

“ஐ செட் கம் அவுட்..” கணீர்க்குரல் அந்த இடம் எங்கும் எதிரொலிக்க இதற்கு மேலும் அவன் முன் எழுந்து வராமல் இருப்பது சரியல்ல எனத் தோன்றிற்று,

அவள் மனதில்.

தலையைத் தேய்த்துக் கொண்டே எழுந்த அவன் முன்னே நின்றவளை கூர்மையாக அளவிட்டன,

அவன் விழிகள்.

“நீ என்ன பண்ணிட்டு இருந்த..?” ஒற்றைப் புருவமுயர்த்தி அவன் கேட்ட கேள்வியில் இவளுக்கு சத்தியமாய் எதுவும் புரியவில்லை.

அவன் முன்னே வந்ததற்கு தான் இந்த கோபம் என நினைத்துக் கொண்டது, மனது.

“சா..சாப்டுடு இ..இருந்தேன் சீனியர்..” வார்த்தைகள் திக்கியது, அவளுக்கு.

அவளின் பதிலில் அவனுக்கு கோபம் ஏறினாலும் ஆட்காட்டி விரலால் மென்மையாய் புருவத்தை தடவியவனின் பார்வை அவளைத் தழுவியது,

“அப்படியா..?” என்பதாய்.

“என்ன கலாய்க்குறியா..?”

“இல்..இல்ல..சீனியர் நெஜமா தான்..” அவனின் நடத்தை புரியாத குழப்பம் அவள் முகத்தில்.

“ஓகே ரைட்ட்ட்ட்ட்..சாப்டுடு அப்றம் என்ன பண்ண..?”

“கார்த்தியோட கதச்சுட்டு இருந்தேன்..” இயல்பாய் அவள் சொல்லிட அவனுள் இன்னும் இறுக்கம்.

“ஓகேஏஏஏ ரைட்ட்ட்ட்..அப்போ நீ ஒன்னும் பண்ணல..”

“இல்ல சீனியர்..”

அவள் மீண்டும் அதையே சொல்லிட அவனின் பூட்டுக்கள் எல்லாம் உடைந்து போயின.

“ஷட் அப்ப்ப்..அறிவில்ல..கொஞ்சமாவது அறிவில்ல..அன்னிக்கு என்னமோ லவ் லெட்டர் தந்த படிக்கிற பொண்ணாச்சேன்னு பேசாம விட்டேன்..திரும்பவும் அப்டியே இருப்பேன்னு நெனச்சிகிட்டு இருக்கியா..?” அவன் சீறிட அவள் எதுவும் பேசவில்லை.

அந்த விடயத்தில் தானே அவனைப் பொறுத்தவரையில் குற்றவாளி என்பதால் அமைதி காத்தவளின் தலை தாழ்ந்தே இருந்தது.

அவளின் அமைதி ஆடவனை இன்னும் கோபப்படுத்தி இருக்க வேண்டும்.

“என்ன ப்ரச்சுன உனக்கு..எனக்கு தான் உன்ன புடிக்கலனு தெளிவா சொல்லிட்டேனே..அப்றம் எதுக்கு இன்னும் ஆசய வளத்துகிட்டு சுத்துற..”

“யப்பா..இது வேற இப்டி வச்சி அறுக்குதே..முடிலடா..நா எங்க லவ் பண்ணேன்..”

“இவ்ளோ கத்துறேன் பதில் சொல்லாம இருக்க பாரு..திமிரு..திமிரு..உடம்பு பூரா திமிரு..

ஆமா என்னோட போட்டோக்கு லவ் யூ சொல்றதுக்கு உனக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தா..?” அவன் கேட்கவே தலையை நிமிர்த்தி பார்த்தவளின் புருவங்களில் முடிச்சுக்கள் சேர்ந்து கொண்டன.

” என்ன புரியாத மாதிரி பாக்கற..இவ்ளோ நேரம் எதுக்கு என் போட்டோவ வச்சி பாத்துட்டு இருந்த..அழகு தேவான்னு பேசுறது வேற..அதுல..” ஏதோ சொல்ல எடுத்தவனின் பேச்சு சங்கடத்தில் நின்று போனது.

அவன் சொன்னது புரியவே அவளிடம் இருந்த ஆசுவாசப் பெருமூச்சொன்று.

அவனது வீண் குற்றச்சாட்டில் அவளுக்கும் கோபம் துளிர்த்திருக்க வேண்டும்.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டு “சீனியர்..” என்றவளின் குரலில் அத்தனை நிமிர்வு.

அந்த நிமிர்வில் அவன் விழிகளில் மெல்லிய அதிர்வு.

சட்டென தன் அலைபேசியை எடுத்து தன் புகைப்படத்தை அவன் முன்னே நீட்டியவளின் விழிகளில் இருந்த கோபம் அவனையும் கொஞ்சம் புருவமுயர்த்திட செய்ததோ..?

“என் பேரு தேவதர்ஷினி..தேவான்னு நான் சொல்லிப்பேன்..” என்றவளின் குரலில் முகத்திலும் அப்படி ஒரு அழுத்தம்.

Advertisement