Advertisement

சொல்லாமல்…!

 மௌனம் 02

இரவு நேரம் மணி பத்தை தாண்டிக் கொண்டிருக்க முழங்காலை கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்,

தர்ஷினி.

மௌனமான அந்த வேளையில் வானில் பறந்திடும் விமானத்தின் சத்தம் கேட்டிட சொல்லாமலே எட்டிப் பார்த்தது,

அவனின் நினைவு.

இந் நேரம் அவனும் விமான நிலையத்தில் இருப்பானோ..?

இல்லை விமானத்தில் பறந்து கொண்டிருப்பானோ.?

தன் மானம் பார்த்திடா மனம் சிந்தனையை அவன் புறமே விரட்டித் தள்ளியது.

நேற்றுத் தான் எவ்வித முன்னறிவிப்புமின்றி

தான் இரண்டு மாதம் வெளிநாடு செல்ல இருக்கும் செய்தியை கூறி விட்டு மறுமொழி கேளாமலே நகர்ந்திருந்தானே.

ஏன் இந்த அலட்சியம்..?

அதுவும் அவளிடம்..?

சத்தியமாய் எத்தனை யோசித்தும் பதில் கிடைக்கவில்லை,

அவளுக்கு.

இன்று மட்டுமா கிடைக்காமல் போனது..?

ஒவ்வொரு முறையும் பதில் தேடி சோர்ந்து போவது நிஜம் தானே.

இப்போதும் ஆழமான பெருமூச்சொன்று விடுபட விரல்கள் தானாகவே கழுத்தை வருடிக் கொடுத்தது,

வழமை போலவே.

முன்பெல்லாம் அவர்களின் வீட்டுக்கு எதிர்ப்புறம் இரண்டு வீடுகள் தள்ளி தான் அவன் வீடு.

மொட்டை மாடியில் நின்றால் இரு அவனைப் பார்த்திடலாம்.

அடிக்கடி அவனின் வீட்டு மொட்டை மாடியில் அவனைப் பார்த்ததும் உண்டு.

அவனின் கல்லூரி முடியும் வரை அவர்கள் இருந்தது இங்கு தான்.

ஏதோ வேலை நிமித்தமே இடம் மாறிச் சென்றிருந்தனர்.

அப்போதெல்லாம் அவனின் மீது சிறு சலனம் கூட தட்டிடாமல் தன்னை காத்துக் கொண்டவளுக்கு திருமணத்தின் உண்டான சடுதியான காதலை இன்னுமே நம்ப முடியவில்லை,

தான்.

முன்பெல்லாம் அழுத்தமும் இறுக்கமும் சிடுசிடுப்புமாக வலம் வருபவன் தான் அவன்.

திருமணத்திற்கு அது அவன் மீது பிடித்தம் வராததற்கு பெரும் காரணம் அதுவாகத் தான் இருந்திருக்கும்.

ஆனால், திருமணத்தின் பின்..?

அவற்றை அத்தனை பிடித்தது.

எத்தனை முறை அவனின் விழியசைவை கூட உள்வாங்கி புதைத்து தனக்குள் மீண்டும் மீண்டும் நிழலாடவிட்டு ரசித்திருப்பாள்..?

பிடிக்காதது கூட பிடித்தவர்கள் செய்திடும் போது பிடித்து பேரழகாய்த்  தோன்றிடுவது மாயம் தான் போலும்.

கேளாமலே அவனின் எண்ணங்கள் மனதை நிரப்பி அவளின் திண்ணக்கத்தை தகர்த்து விட்டு வேடிக்கை பார்த்திட என்ன தான் செய்ய அவளும்…?

விடிய விடிய விழித்து விட்டத்தை வெறித்து அவன் நினைவுகளை சுமந்தவளாய் அவள் இருக்க அவனின் மனநிலை யாருக்கு தான் தெரியும்…?

அவள் காதலிக்கிறாள்.

அளவுக்கு மீறி காதலிக்கிறாள்..

ஆனால், அவள் காதலிப்பதை விட  அவளையும் ஒருவன் காதலித்துக் கொண்டு உள்ளுக்குள் புதைத்து மருகி  நிச்சயமில்லா காதலில் அவள் நினைவுகளை மட்டுமே தனக்குள் அடக்கி தினம் தினம் செத்துப் பிழைப்பது அவளுக்கு தெரிந்தால்…?

காதலிக்கப்படுவதன் சுகத்தை முன்பொருமுறை உணர்த்த தவறியவனுக்கு மீண்டுமொரு வாய்ப்பை தந்திடுமோ விதி..?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மறுநாள் அழகாய் மொட்டை மாடியில் நின்று அவளின் வீட்டு மாடியை உரசி மீண்டு கொண்டிருந்தன,

அவன் விழிகள் எதிர்பார்ப்பு மின்னிட.

அவள் இன்னொருத்தரின் மனைவி.

விவாகரத்து பெறப் போவது என்பதாலோ மீண்டும் புதைந்திருந்த காதல் தன்னை மீறி எழ முயன்று கொண்டிருந்தது,

அவனுக்குள்.

முன்பெல்லாம் எத்தனை சிடுசிடுப்பாக இருப்பான்…?

எப்படியெல்லாம் கோபம் வரும்..?

முற்றாக மாற்றியது அவள் தானே.

ஒருவேளை அவளிடம் முன்பே தன் காதலை சொல்லியிருக்க வேண்டுமோ..?

“ச்சே..என்ன இது…?” தனக்கு வந்த நினைவின் மடத்தனத்தை உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்திட அவன் விழிகளில் இடம் பிடித்தது,

உடைகளை உலர்த்தப் போட்டிட வந்த அவள் விம்பம்.

ஏனோ தற்செயலாய் அவளின் பார்வை அவன் புறம் தாவ சிறு புன்னகையை தெளிக்க விட்டவளை கண்டு அவனிதழ்களிலும் புன்னகை தவழ்ந்தது.

“வணக்கம்.” என்றவாறு கையசைத்தவளின் முகத்தில் துளியும் உண்மை இல்லை என்று புரிந்தாலும் அவனால் கேட்டிட இயலாதே.

பதிலுக்கு அவனும் “வணக்கம்..”என்றவாறு சைகை செய்திட “நலமா..?” என்றான் சைகையின் ஊடு.

“ஆம்..” என்றவாறு தலையசைத்து விழிகளால் அவனிடம் வினவ “சூப்பர்..” என்றவாறு அசைந்து கொடுத்தன,

அவன் விரல்கள்.

வேறெதுவும் கேளத் தோணாமல் சிறு தலையசைப்புடன் அவள் நகர்ந்திட விரிந்திருந்த இதழ்களில் இருந்த புன்னகை அப்படியே வற்றிப் போயிட விரக்தியின் சாயல் முகத்தினில்.

கல்லூரியில் தன் முன் வரப் பயந்து அவள் ஒதுங்குவதும் அவளை வேண்டுமென்றே தான் சீண்டிப் பார்ப்பதும் தானாக நினைவிலாட மாற்றங்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை,

அவனால்.

மாற்றங்கள் தினம் தினம்..

மாறத் தெரியாமல் தவிப்பது தான் மனித மனம்..

மெல்ல கீழிறங்கியவனை தாயார் ஒரு வித வருத்தத்துடன் பார்த்திட சட்டென்று தன் முக பாவத்தை மாற்றிக் கொண்டு இயல்பாகி நின்றாலும் தாய் அறியா சூலா..?

அவளின் திருமணத்தன்று தன் மடியில் படுத்து கட்டிக் கொண்டு அழுத தேவேந்திரன் தான் அவரின் கண் முன்னே வந்து செல்ல ஏனோ விழிகளில் மெல்லிய நீரேற்றம்.

தாயின் கலங்கிய விழிகளை கண்டிடும் தைரியம் அவனுக்கும் இல்லையே.

விருட்டென கீழிறங்கி நகர்ந்திட வலித்தது,

தாய் மனம்.

அதே நேரம்..

அந்த நோட்டை கையில் எடுத்தவரின் மனதில் பலவித எண்ணங்கள்.

“யேம்மா இது நிச்சயமாவே நீ எழுதுன கதயா..?”

அவரின் கேள்வியில் அவளுக்குள் சுருக்கென்றது.

ஆமோதிப்பாய் தலையசைத்தாள்,

அவள்.

எப்படியோ தன் அறையில் யாருமறியாது வைத்திருந்த நோட்டை எப்படித் தான் கண்டுபிடித்தாரோ..?

தலை சுற்றியது,

அவளுக்கு.

“அங்கிள்..”

“ம்ம்..என்னம்மா..?”

“இத யார்கிட்டவும் சொல்ல வேணா ப்ளீஸ்..”

“யேன் மா..?”

“இல்ல அங்கிள் வேணாம்..இத்தன வருஷத்துக்கு அப்றமா இப்டி ஒரு ப்ராப்ளம் வர்ரத நா விரும்பல..”

“சரிமா..”என்றவரின் மனம் மட்டும் ஆறவில்லை.

எத்தனை பெரிய துரோகம்.

“சரி..இது யாரோட கதமா..?”

“இது..நா முன்ன வேற ஊர்ல இருந்தேன்..அப்போ அங்க ஒரு அக்கா ரொம்ப க்ளோஸா எங்கூட பழகுனாங்க..அவங்கள ஒரு அண்ணன் சைலன்டா லவ் பண்ணாங்க..அவங்க கத தான் இது..”

“ஆமா..சரி அந்த பொண்ணு பேர் என்னது மா..?” இடைக்கிடையே படித்தவருக்குள் அந்த கதாப்பாத்திரங்களின் மீது ஒரு மதிப்பு எழுந்திருந்தது,

உண்மையே.

“அக்கா பேரும் தேவா..அண்ணா பேரும் தேவா..”

“அட..அப்போ உண்மையான பேரயா வச்சிருக்க”

“ஆமா அங்கிள்..”

“அம்மாடி..இந்த கதய புக்கா வெளியிடலாமே..”

“இல்ல அங்கிள் இப்போதக்கி வேணா..ரொம்ப ப்ராப்ளம் வரும்..கொஞ்சம் நாள் போகட்டும்..”

“அந்த அண்ணன் ரொம்ப நல்லவராமா..?”

“ஆமா..அங்கிள்..ரொம்ப ரொம்ப நல்லவரு..எனக்கு அந்த அண்ணனோட காதல் ரொம்ப புடிக்கும்..அதான் வீட்ல யாருக்கும் தெரியாம எழுதி வச்சேன்..நீங்க யார் கிட்டயும் சொல்லிராதீங்க..ப்ளீஸ்..”அவள் கண்களை சுருக்கி கெஞ்சிட ஆமோதிப்பாய் தலையசைத்தாலும் மனம் நெருடிக் கொண்டு தான்,

இருந்தது அவருக்கு.

“சரிமா..நா யார் கிட்டவும் சொல்ல மாட்டேன்..”

“தேங்கஸ் அங்கிள்..”

“அம்மாடி..”

“என்ன அங்கிள்..?”

“இந்த நோட்ட கொஞ்சம் எனக்கு தர்ரியா..? நா கொஞ்சம் படிச்சிட்டு தர்ரேன்..”

“சரி அங்கிள்..”

“ஆமா..எதுக்கு அக்னின்னு பேர் போட்டு வச்சுருக்க..”

“அது..பென் நேம் அங்கிள்..”அவள் புன்னகையுடன் சொல்லிட அவருக்குத் தான் மனம் பாரமாகியது.

சட்டென்று மாறிய பாவனையுடன்

“ஆமா..டைட்டில் யாரு சாய்ஸ் பண்ணா..?”

“அது கொஞ்சம் தடுமாறி நா தான் வச்சேன்..சொல்லாமல் காதல் செய்வேன் அப்டின்னு..”

“சொல்லமால் காதல் செய்வேன்..நல்லா இருக்கும பேர்..”

“தாங்க்ஸ் அங்கிள்..”

அவளின் ஆத்மார்த்தமான நன்றியை தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டாலும்

ஏதேதோ எண்ணங்கள் மனதை அலைக் கழித்திட சட்டென்று வெளியேறி இருந்தார்,

மனிதர்.

            ●●●●●

மாலை நேரம் நகர்ந்திருக்கவே வெளியில் வந்தான்,

தேவேந்திரன்.

ஏனோ இன்று அலுவலகத்துக்கும் செல்ல விருப்பம் இருக்கவில்லை.

மனதில் அப்படி ஒரு போராட்டம்.

மெல்ல கால் போன போக்கில் அவன் நடந்திட இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏனோ தர்ஷினியின் நினைவுகள் மனதில் தோன்றி மறைந்தது.

முன்பெல்லாம் இப்படி இல்லை.

இன்று அவளுக்கும் அவனுக்கும் விவாகரத்து நடந்திடப்போவது அறிந்ததால் மீண்டும் காதல் துளிர்விட்ட அவளின் கைத்தலம் பற்ற முனைகிறதோ..?

தெரியவில்லை.

ஆனால்,

நிச்சயம் அவளுக்கு நல் வாழ்வு ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் உறுதி எடுத்துக் கொண்டது,

மனது.

அந்த ஒற்றையடிப் பாதை வழியே நகர்ந்து அந்த மரத்தின் கீழே நிற்க அவனின் பின்னே கேட்ட பாதச்சத்தங்களில் கவனம் திரும்பிட திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் சட்டென்று பரவியது, கடுமை.

புன்னகை வாடாத இதழ்களுடன் அவனின் விம்பத்தை விழிகளில் தேக்கி ரசிப்பின் ரேகைகளை முகத்தில் படரவிட்டு நின்றிருந்தாள்,

ஆர்த்தி.

அவனின் அத்தை மகள்.

அவனை ஒரு தலையாய் காதலித்துக் கொண்டு அவனின் காதல் வேண்டி அவனையே சுற்றி வருபவள்.

“அத்தான்..”

“அத்தான் பொத்தான்ன..பல்ல ஒடச்சி கைல தந்துருவேன்..எதுக்கு இங்க வந்துருக்க..?”

“ஏன் நா வரக் கூடாதா..?” துடுக்காக கேட்டவளின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.

“இங்க பாரு ஆர்த்தி..காதல் கீதல்னு என் பின்னாடி சுத்தாத..சொல்லிட்டேன்..”

“ஹலோ..சும்மா அதட்டுற வேலயெல்லாம் வேணா..”

“இங்க பாரு ஆர்த்தி..நா..”

“நா ஒரு பொண்ணு விரும்புனவன்..அதனால உன்னோட காதல என்னால ஏத்துக்க முடியாது..அதத் தான சொல்ல வர்ரீங்க..யாரந்த பொண்ணுன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க..திரும்ப சேர்ரதுக்கு வாய்ப்பே இல்லாத காதல நெனச்சு எதுக்கு அத்தான் இப்டி வதச்சுக்கிறீங்க..?”

“ஏய்..ஷட் அப்..” அவளின் பேச்சில் அவனுக்குள் சினம் எழுந்திற்று.

இத்தனை நாள் வராத கோபம் இன்று மட்டும் எழுந்ததற்கு காரணம் அவளின் விவாகரத்து செய்தியன்றி வேறேது..?

ஆனால், அதை அவளிடம் சொல்ல இயலாதே.

“இங்க பாரு ஆர்த்தி..வாய மூடிட்டு கெளம்பு..நானே செம்ம கடுப்புல இருக்கேன்..இந்த ஜென்மத்துல உன்னால என்னோட மனசுக்குள்ள வர்ர வேலய பண்ண முடியாது..ஸோ ப்ளீஸ் இங்கிருந்து போ..”

உரக்க துவங்கி ஆற்றாமையில் முடிக்க கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி இன்னும் புன்னகை மாறாமல் பார்த்திருந்தாள்,

அவனை.

அவள் முகத்தில் இருந்த உணர்வுகளில் எந்த வித மாற்றமும் இல்லை.

“இங்க பாருங்க அத்தான்..இவ்ளோ நாள் இதத்தான் சொல்றீங்க..வேற மாடுலேஷன்ல வேணா ட்ரை பண்ணுங்க..எப்டின்னாலும் என்னோட முடிவுல மாற்றம் இல்ல..” அழுத்தம் திருத்தமாய் உச்சரித்தவளுக்கு அவனின் காதலியை மறக்க முடியாததால் தான் தன்னை தள்ளி வைக்க எப்போதும் போல் இப்படி பேசுகின்றான் என்கின்ற எண்ணம்.

புதைந்திருந்த காதல் துளிர்விட்டது தான் அவனின் இத்தகையை கோபத்துக்கு காரணம் என்று அவள் அறிந்திருந்தால் கொஞ்சமேனும் வலியை தவிர்த்திருக்க இயலுமோ..?

அவனாவது சொல்லியிருக்கலாம்.

அவனுக்கு அவளின் கூற்றில் இன்னும் கோபம் எகிற ஒரு முறைப்புடன் நகர்ந்திருந்தான்,

அவ்விடத்தில் இருந்து.

போகும் அவனையே விழியெடுக்காமல் பார்த்திருந்தவளின் இதழ்களில் புன்னகை இன்னும் வீற்றே இருந்தது.

தன் அறையை ஒழுங்டுபடுத்தி விட்டு நிமிர்ந்தாள்,

தேவதர்ஷினி.

அறையை ஒழுங்குபடுத்தும் போது ஏனோ மனம் ஆற்றாமையில் பொங்கியிருந்தது,

உண்மை தான்.

மொத்த எண்ணங்களிலும் அவன் தான்.

அவன் மட்டுமே தான்.

மெல்ல நகர்ந்து யன்னல் புறம் நகர்ந்தவளுக்கு ஏனோ அன்றைய நினைவு.

ஒற்றைக் கையால் தலை கோதிய படி அவனின் யன்னலுக்கு வெளிப்புறம் விழிகளால் ஸ்பரசித்தவனாய் நின்றிருந்தவனை விழியெடுக்காது தன் பார்வையால் உரசி நின்றது கேளாமலே நினைவில் வந்து போக அவளிதழ்களில் மெல்லமாய் சிறு விரிவு.

அவன் மீதான காதல் உதித்திடும் வரை தன்னால் இந்தளவு காதலிக்க முடியுமா…?

என்பது அவளே அறிந்திராதது.

நிமிடங்கள் கடக்க யோசனையில் நின்றவளை அலைபேசி கலைத்திட திரையில் மறைந்த எண்ணைப் பார்த்ததும் விழிகள் விகசித்தாலும் மெல்லிய கலக்கமொன்று மனதில்.

பயத்துடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாலும் அவனின் கம்பீரக் குரலை  ரசிக்க வெகு ஆவல் எழுந்தது  மறுப்பதற்கல்ல.

“ஹலோ…”

“ஹ..ஹலோ..”

“ஏய் இது உன் நம்பரா….மிஸ் ஆகி கால் பண்ணிட்டேன்..”

படக்கென்று அவன் அழைப்பை துண்டிக்க தன் குரலை இனங்கண்டு கொண்டதற்கு மகிழ்வதா..?

இல்லை தவறாக அழைத்துள்ளான் என்று மருகி நொந்து போவாதா..?

என்று தெரியவில்லை,

அவளுக்கு.

ஆனால், அவன் பதிலில் மனதோரம் சிறு வலி எழுந்தது சத்தியமான உண்மையே.

திரையில் மிளிர்ந்த அவனின் புகைப்படத்தை சலனமற்று ஓரிரு நிமிடம் பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ சட்டென அலைபேசியை கைகள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பொத்தி வைக்க விழிகளில் கொஞ்சம் சிவப்பேறியது.

ஆனால், அழவில்லை அவள்.

அவனின் பாராமுகம் வலிக்கிறது.

அவனின் கோபம் காயப்படுத்துகிறது..

அவனின் அலட்சியம் நோகடிக்கிறது.

ஆனால், அதற்கும் மேலாக அவனைப் பிடித்துத் தொலைகிறதே.

அது தானே அவள் பிரச்சினை.

அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டவளால்..

அவனை அவன் குணங்களில் இருக்கவே நேசிக்கத் துவங்கியவளால்..

அவனின் ஒவ்வொரு அசைவையும் மனதில் தேக்கி ரசிக்கத் தெரிந்தவளால்..

காரணமின்றியே ஒட்டு மொத்த காதலையும் அவனிடம் கொட்டி வைத்து தவிப்பவளால்…

அவனின்றி வேறு யாருக்கும் மனதில் இடம் கொடுப்பது இயலாத காரியம் ஆயிற்றே.

அவளின் காதலையும் தோற்கடிக்கும் காதலை கொண்டுள்ள ஒரு காதல் இதை விட அதிகமாய் காதலிக்க தூண்டுமெனின்..?

விதி வலியது.

கதவை தட்டும் சத்தம் கேட்டிடவே விழிகளில் ஓரமாய் நின்றிருந்த ஈரத்துளிகளை துடைத்துக் கொண்டு கதவைத் திறந்திட அங்கு நின்றிருந்த தோழியை துளியும் அவள் எதிப்பார்த்திருக்கவில்லை.

தொடரும்.

🖋️அதி…!

2023.07.29

Advertisement