Advertisement

*சொல்லாமல்…!*

*மௌனம் 15(i)*

*சில வருடங்களுக்கு முன்பு…*

அவளின் செயலில் கோபம் கொண்டு அந்த சிற்றுண்டிச் சாலையின் வெளியே சென்றவனின் பாதங்கள் ஓரமாய் இருந்த மரத்தின் அருகே தன் நடையை நிறுத்தின.

தோழனின் செயலை விசித்திரமாக பார்த்தவாறு பின்னூடு வந்த பாலாவுக்கு ஏனோ தேவாவின் நடத்தை அத்தனை குழப்பத்தை தந்திருந்தது.

நீட்டிய கரத்தின் உள்ளங்கைப் பிரதேசத்தை மரத்தில் ஊன்றிய படி ஒரு பாதத்தின் மேல் மறுகாலை கொண்டு சென்று நிலத்தில் அந்த பாதத்தை பதித்து நின்றிருந்தவனின் மறு கரத்தின் விரல்கள் தலையை அடிக்கடி கலைத்து கோதிக்கொடுப்பதும் இடுப்பில் அவ்வப்போது வந்து தரித்து மீள்வதுமாய் இருந்தன.

“தேவா..என்னாச்சுடா..எதுக்கு இவ்ளோ கோபம்..?”

“பின்ன அவனுங்க கலாய்ச்சிட்டு போறதுக்கு அழுதுகிட்டு இருக்குது..நல்லா திட்டிருக்க வேணா..பொண்ணுன்னா கொஞ்சமாச்சும் தைரியம் வேணும்ல..” தோழனின் புறம் திரும்பாமல் சொன்னவனின் ஒற்றைக் கரத்தின் விரல்கள் அழுத்தமாய் நெற்றியைத் தேய்த்து விட்டன.

“அழுது வடிஞ்ச..அழுது வடிஞ்சன்னு திட்ற..அந்தப் பொண்ணு அழவே இல்லயே டா..”

“கண்ணு செவந்துச்சுல..அழுக வரப் பாத்துச்சுல..எதிர்த்து பேசியிருக்க வேணாம்..”

“எல்லாரும் அப்டி இல்ல டா..மச்சான்..அது அவ ஹேபிட் டா..” அவன் சொல்லி முடிக்கும் முன்னே தோழனின் புறம் திரும்பியவனின் பார்வை தோழனை கூர்மையாக அளவிட்டது.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி தோற்பட்டையால் மரத்துக்கு முட்டுக் கொடுத்தவாறு நின்றவனின் ஒற்றைப் புருவம் மட்டும் ஏறி வில்லென வளைந்து நின்றிட காற்றில் அசைந்திட்ட முன்னுச்சி சிகைகள் புருவத்துக்கு கவசமாய் ஆகி திரும்பிக் கொண்டிருந்தன.

“யேன் இப்டி பாக்கறான்..என்னாச்சு..ஓஹ்ஹ்ஹ்..மரியாத..மரியாத..” தன் நெற்றியில் அறைந்தவாறு சற்று சரிவாய் நின்று அழுத்தமாய் விழிகளுடன் தன் விழிகளை உரசிக் கொண்டிருந்த தோழனை பார்த்து இளித்து வைக்க அப்போதும் மாறவில்லை ஆடவனின் பார்வையின் கூர்மை.

“அதான் மச்சீஈஈஈஈ..அது தான் அவங்க ஹேபிட்..அத எப்டி மாத்துவாங்க..” சமாளித்த படி கேட்ட தோழனின் மீது மெச்சுதலாய் படிந்தது,ஆடவனின் ஆழப் பார்வை.

“அதுக்குன்னு இப்டி பயந்துருக்குறதா..?”

“அது அவங்க ஹேபிட் டா..அத உனக்காக எதுக்கு மாத்திக்கனும்..”

“எனக்காக ஒ..ஒன்னும் மாத்திக்க அவசியம் கெடயாது..ஆன அவங்களுக்கு அது தான ஸேப்..”

“டேய்..அந்த பொண்ணு அப்டி இருக்குறது தப்பு தான்..”

“தப்பு தான்..”

“தப்பில்லடா..அது அவங்கவங்க விருப்பம் டா..”

“ம்ஹும் தப்பு தான்..நாளக்கி ஒரு ப்ராப்ளம் வரும் போது எப்டி பேஸ் பண்ணுவா..? எப்பவும் கூடவே நின்னு நானா காப்பாத்த முடியும்..போலீஸ்காரன் பொண்டாட்டினா இப்டி ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் பயந்துட்டு இருக்க முடியுமா..? லைப் லோங்க் என்னோட ட்ராவல் பண்ணப் போற பொண்ணுக்கு இவ்ளோ பயம் ஆகாது..” அவன் பாட்டுக்கு சொல்லிக் கொண்டு செல்ல தன் செவியை தீண்டிய வார்த்தைகளில் பாலாவுக்கு தலை சுற்றிற்று.

“எதேஏஏஏஏ..?” தொண்டை அடைக்க அவனின் காற்றான வார்த்தைகளும் அதிர்ந்த முகபாவமும் வேறு புறமாய் திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்த ஆடவனுக்கு புலப்படவில்லையே.

கொஞ்சம் பார்த்திருந்தாலும் சுதாரித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பானே..?

“நா சொல்றது கரெக்ட் தான மச்சீ..நாளக்கி நா வேல பாக்கும் போது பயந்துட்டு இருக்க முடியுமா..? கொஞ்சமாவது தைரியமா இருக்க வேணா..அப்போ தான என்னால நிம்மதியா வேல பாக்க முடியும்..நா சொல்றது சரி தானே..இப்டியே இருந்த நாளக்கி எங்க பசங்கள எப்டி வளத்தெடுக்க போறது..? இத மாதிரி பயந்தாங்கொல்லியாவா எங்க கொழந்தங்க இருக்கனும்..என்ன மாதிரி தைரியமா இருக்க வேணாம்..?”

குழந்தை என்றதுமே பாலாவின் கரம் தன் நெஞ்சை பிடித்துக் கொள்ள பேசியவாறே தோழனின் புறம் திரும்பியவனின் விழிகளில் சிறு வித்தியாசமான பாவம் தோழனின் நடத்தையில்.

அதிர்ச்சியில் விழிகள் விரிந்திப நெஞ்சில் கை வைத்தவாறு சமைந்தவனாய் தன்னையே பார்த்திருந்த தோழனின் செயலில் இவனுக்கு கண்கள் சுருங்கின.

“என்னடாஆஆஆஆ.?” தாடையை மென்மையாய் விரல்களால் உரசிக் கொண்டே கேட்டவனுக்கு சத்தியமாய் அவன் பேசியது தன்பாட்டில் நடந்ததே.

“உன்ன தான் டா..கேக்கறேன்..சொல்லுடா..”

“க்..கொ..க்..கொழந்த..”

“ஆமா கொழந்த..பொறந்தா தைரியமா வளக்கனும் அதுக்கு இப்டி இருக்க கூடாதுன்னுஉஉஉஉஉஉஉஉ” என்கவுமே சுரீரென உரைத்தது மண்டைக்குள்.

“ஓஹ் ஷிட்..வாட் ஹேப்பன்ட் தேவா..ரிலாக்ஸ்ஸ்ஸ்ஸ்..” தனக்குச் சொல்லிக் கொண்டவனின் முகத்திலும் மெல்லிய அதிர்வலைகள்.

ஒரு கையை இடுப்பில் குற்றி புறங்கையால் விழிகள் இரண்டையும் மறைத்து அண்ணாந்து பார்த்து இதழ் குவித்து ஊதியவனுக்குள் பெரும் எண்ண அலைகள்.

உடலும் மனமும் இயல்பு நிலைக்கு திரும்பாது இருக்கவே முழங்கையை மரத்தில் ஊன்றி படி நின்றவனின் பாதங்கள் மட்டும் நிற்க முடியாமல் தடுமாறிப் போயின.

தவிர்க்கிறேன் என்று உறுதியெடுத்தவனால் கட்டவிழும் தவிப்புக்களையும் தடுமாற்றங்களையும் களைய முடியாமல் கையறு நிலையில் நிற்பதன் காரணம் காதலன்றி வேறேது..?

தள்ளித் தான் நின்றாலும் உணராத ஆழ் மனக் காதல் ஆடவனின் மனதை ஆக்கிரமித்து ஆர்ப்பரித்து ஆதிக்கம் செலுத்தி ஆட்டுவித்து ஆண்டு முடித்து ஆர்ப்பட்டமாய் சிரிக்கிறதே.

தோழனின் விழி பார்த்து பேசக் கூட இயலவில்லை அவனால்.ஏன் முகம் பார்க்கும் திராணி கூட அற்றுப் போயிருந்தது.

தலையை குனிந்து கொண்டே பின்னங்கழுத்தை தடவியவனுக்குள் எழுந்திட்ட உணர்வை அவன் உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே நிஜம்.

அசராது நிற்கும் ஆடவனின் தடுமாற்றம் தோழனுக்கு வெகு ரசனையாய் இருக்க மெல்ல நடந்து வந்து தோழனின் தோளில் கரம் பதித்தவனுக்கு சிரிப்பாய் வந்தது.

“லவ் பண்றியா தேவா..?” சிரிப்பை அடக்கிய குரலில் கேட்டிட சரேலென நிமிர்ந்து முறைப்புடன் பார்த்து வைத்தான் தோழனை.

“இல்ல மச்சீஈஈஈஈ..லவ் எல்லாம் இல்ல..ஜஸ்ட் ஏதோ யோசனைல வந்துருச்சு..”

“கொழந்த பத்தி யோசிக்கிறியேடா..?”

“அ..அ..அது தவறுதலாஆ…ஏதோ யோசன..இது லவ்வும் இல்ல ஒரு யெழவும் இல்ல…ஜஸ்ட் ஒரு இன்பாக்சவேஷன் தான்..”

“சரி..சரி..விடு..”

“ம்ம்ம்ம்ம்..ஓகே ரைட்ட்ட்..நா லைப்ரரிக்கு போனும்..பொய்ட்டு வரேன்..” எதிலிருந்தோ தப்பிக்க முயன்று ஓடிய தோழனின் பிடிவாதம் சிரிப்பை தான் தந்து நின்றது பாலாவுக்கு.

நூலகத்தில் அமர்ந்து இருந்து அருகே இருந்த பெண்களை கலாய்த்து தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு மூவர் அமர்ந்திருக்க அமைதியாய் நடந்து வந்தவனின் பார்வை அவர்களை சுட்டெரித்து நின்றது.

நின்று நிதானமாய் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து நகர்ந்தவனை விசித்திரமாய் தான் பார்த்து வைத்தனர் உள்ளே அமர்ந்திருந்த சிலர்.

அதில் ஆர்த்தியும் ஒருத்தி.

தேவாவின் வருகையை கண்டு அவர்கள் மூவருக்கும் உள்ளுக்குள் சற்றே பயம் எடுத்தாலும் வெளிப்படுத்தாமல் எகத்தாளமாய் அமர்ந்து இருந்தவர்களின் செயலில் ஆடவனின் சினம் இன்னும் எகிறியிருக்க வேண்டும்.

அவர்கள் அமர்ந்திருந்த மேசையின் அருகே சென்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய பக்கத்தில் இருந்த அலுமாரியில் பாதத்தை ஊன்றி வளைந்து நின்றவனின் தோரணை அங்கிருந்த அனைவரினதும் கருத்தை தன் புறம் ஈர்த்திருந்தது.

“மூணு பேரும் கொஞ்சம் வெளில வர்ரீங்களா..?” புன்னகைத்த இதழ்களுடன் கேட்டவனின் குரலில் கோபம் என்பதற்கான அடையாளமே இல்லை.

“எ..எதுக்கு..வெ..வெளில வ..வரனும்..?” திக்கல் திணறலாய் ஒருவன் கேட்டிட பதிலாக ஒரு இளநகையே ஓடியது ஆடவனின் இதழ்களில்.

“இன்னும் அஞ்சு நிமிஷத்துல க்ரவுண்ட் ப்ளோர்ல இருக்குற ரூம் கு வர்ரீங்க…இல்லன்னா..ம்ஹும் வர்ரீங்க..” தன்பாட்டில் சொல்லி விட்டு விடுவிடுவென வெளியேறி விட மூவருக்கும் அதற்கான காரணம் புரியாது தான் போய் விடுமா..?

ஆடவனின் விழிகளில் இருந்த அனல் அவனின் பேச்சை மீறுவதற்கு விடவில்லையே.

தயங்கித் தயங்கி அவனின் பின்னூடு சென்றனர் மூவரும்.

அரைமணி நேரம் கடந்திருக்கும்.

அந்த அறையில் ஓரமாய் போட்ப்பட்டிருந்த கதிரையில் சாவகாசமாய் அமர்ந்திருந்த ஆடவனின் கரத்தில் தும்புத்தடியின் கைப்பிடி சுழன்று கொண்டிருந்தது.

மற்றைய மூவரும் அவனின் முன் கைகட்டி பாவமாய் நின்றிருக்க அதைக் கண்டும் இளகிடவில்லையே அவன்.

“நா சொன்னது புரிஞ்சுதுல..இனிமே யாருக்கும் எதுவும் சொல்லக் கூடாது…”

“சரி சீனியர்..யாருக்கும் எதுவும் சொல்ல மாட்டோம்..முக்கியமா அவங்களுக்கு..”

“அவங்கன்னா யாரு..” யோசனையாய் கேட்டவனின் விரல்கள் தலையைக் கலைத்து கொண்டது.

“அதான் சீனியர் அண்ணிக்கு தான்..நீங்க லவ் பண்ற பொண்ணு..சத்தியமா எதுவுமே சொல்ல மாட்டோம்..இனிமே அவங்ங போறங பஸ்ஸுல கூட போக மாட்டோம்..”

“வாட்..நா லவ் பண்றேன்னு சொன்னேனா..” கதிரையை உதைத்த படி எழுந்தவனைக் கண்டதும் தொண்டைக் குழி ஏறி இறங்கியது மற்றைய மூவருக்கும்.

“சொல்லுங்க…நா லவ் பண்றேன்னு சொன்னேனாஆ..” கேட்டவாறு மீண்டும் அந்த கொஞ்சம் தடித்த கைப்பிடியால் விளாசி விட்டு நிமிர பாவமாய் பார்த்து வைத்தனர் அவர்கள்.

“இங்க பாரு நா ஒன்னும் லவ் பண்ணல..ஜஸ்ட் எல்லாருக்கும் மாதிரி நடந்து கிட்டேன்..நீ எப்டி லவ்னலாம்..” கேட்டவாறு மீண்டும் ஒரு அடியை வைத்திட விழி பிதுங்கிற்று அவர்களுக்கு.

“ஏதாவது சொல்லுவீங்களா..? நானே இப்டி பேசுறதில்ல அவங்க கூட..நீ எப்டி தப்பான வார்த்த பேசலாம்..ஹான்..தேவாவ சீண்டுனீங்க நா சும்மா இருக்க மாட்டேன்..” வார்த்தைகளை கடித்து துப்பியவாறு தடியால் சாற்றிய தேவா தான் கண் முன்னே வந்து போனான் அச்சுப்பிசகாமல்.

“உங்கள தான் கேக்கறேன்..நா லவ் பண்றேனா..”

“இல்ல..சீனியர்..தவறுதலா சொல்லிட்டோம்..”

“ஓகே ரைட்ட்ட்ட்..” தடியை ஓரமாய் போட்டு விட்டு வெளியே நகர்ந்தவனோ “நா அவள லவ் பண்ணல..” எனும் கூற்றை பலமுறை தனக்கே சொல்லிக் கொண்டது ஏனோ..?

அவன் வெளியேறியதும் அந்த மூவரின் முகத்திலும் பழிவெறி தாண்டவமாடியது.

“டேய்ய்ய்..இவன் அந்த பொண்ண லவ் பண்றான்டா..”

“ம்ம்..எனக்கும் அப்டி தான் தோணுது..”

“என்னா அடி..இத கண்டிப்பா யாதவ் அண்ணா கிட்ட சொல்லனும்..அப்போ தான் இவனுக்கு ஏதாவது பண்ண முடியும்..” தமக்குள் பேசிக் கொண்டதை அவன் கேட்டிருந்தால்

சிலதை தவிர்த்து இருக்கலாமோ..?

இருள் சூழத் துவங்கி இருந்த சமயம் அது.

தன் அறையில் கட்டிலில் படுத்து இருந்தவளுக்கு தலை வலித்தது.

” அழுது வடியாம போ இங்கிருந்து..” தேவாவின் கத்தல் மீண்டும் நினைவில் வந்திட மறுமுறை மனம் வலித்தது.

அவளுக்கு கொஞ்சம் மென்மையான மனது.வெளியில் அழுத்தமாய் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் நொருங்கி நிற்கும் சமயங்கள் ஏராளம்.

ஏனோ ஆடவன் எல்லோர் முன்னிலையிலும் வைத்து கத்தியிருக்க அது அவளை நன்றாகவே பதம் பார்த்திருந்ததன் விளைவே இத்தனை பாரம் மனதில்.

நேரத்தை பார்த்திடவே தான் வெகுநேரம் உறங்கி இருப்பது புரிந்திட எழுந்து சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்தவளின் விழிகளில் சிவப்பு இன்னும் மறைந்து இருக்கவில்லை.

“தர்ஷினி என்னாச்சு இது..இப்டி இருக்க..?” அவளின் முகத்தை ஆராய்ந்த படி தாயார் கேட்டிட பதில் சொல்லிட கொஞ்சம் திணறல் தான் அவளுக்கு.

பள்ளிக்காலங்களில் கூட தனக்கு நடந்திடும் அசௌகரியங்களை வீட்டில் சொல்லிடும் பழக்கமில்லை அவளுக்கு.தன்னை விட அவர்கள் பயந்திடுவார்கள் என்பது அறிந்த விடயம் ஆயிற்றே.

“ஒன்னுல்லமா..லேசா தலவலி..கொஞ்சம் ஜொரம் வர்ர மாதிரி இருந்துச்சு அதான்..” லாவகமாய் சமாளித்தவளை நம்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு.

அவளிடம் இருந்து விடயங்களை வாங்குவது அத்தனை சுலபமான காரியமில்லை என்பது பெற்ற அன்னைக்கு தெரியாதா..?

சூடாய் உள்ளிறங்கிய காபியை சுவைத்தவளுக்கு மனம் கொஞ்சம் சமப்பட தன் அலைபேசியை எடுத்து நோண்டியவளின் விரல்கள் கார்த்திகாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை தட்டி விட்டு தனக்கு பிடித்த வெப்சீரிஸை ஓடவிட்டு அதில் ஆழ்ந்து தான் போனாள்.

யாரென்று தெரியாமல் அந்த விழிகளின் மொழியின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு அவளுக்கு.

“யப்பா..என்னா ஆக்டிங்க்..கண்ணால பேசறது ரொம்ப அழகா தான் இருக்கு..பட் மூஞ்ச எப்ப தான் காட்டுவாங்களோ..” தனக்குள் சொல்லிக் கொண்டு அலைபேசியை வைத்தவளை அடுத்த மூன்று மணிநேரம் தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தன பாடம் சம்பந்தப்பட்ட படிப்புக்கள்.

படித்து முடித்து விட்டு நிமிர்ந்திடும் போது இரவு பதினொரு மணியை தாண்டியிருக்க அணைந்திருந்த விளக்குள் வீட்டில் அனவரும் உறங்கி இருப்பதை உறுதிப் படுத்திட உண்ணும் மனம் கூட இல்லை அவளுக்கு.

தன் அறையில் யன்னலை திறந்து வெளியே நோட்டமிட அங்கு பக்கமாய் நின்று அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான்,

தேவா.

“இங்க என்ன பண்ணுது..கால் பேச இவ்ளோ தூரம் வரணுமா..? அதுவும் அங்க இருந்து..அவங்க வீட்ல கவரேஜ் இருக்கும் தான..” யோசித்தவளாய் யன்னலை அடைத்திட அந்த சத்தத்தில் திரும்பி யன்னலூடு பார்க்க முயன்றவனுக்கு அவளின் முகம் தெரியாவிடினும் நின்றிருப்பது அவள் தான் எனப் புரிந்திட வெகுநேரம் எடுத்திடவில்லை.

இதழ்கள் விரிந்திட அவன் தலையைச் சற்று குனித்து பார்த்திடும் முன் யன்னலை அடைத்து திரைச்சீலையை இழுத்து விட்டவளுக்கு கைகள் நடுங்கிற்று, இதற்கும் திட்டி விடுவானோ என்கின்ற பயத்தில்.

புருவம் சுருக்கி ஒரு கணம் யோசித்து விட்டு தன் சிந்தனையில் ஆழ்ந்தாலும் நினைவில் நிழலாகி நிறைவைத் தந்தது,

அவனின் அவளே தான்.

Advertisement