Advertisement

சொல்லாமல்…!

மௌனம் 14

சில வருடங்களுக்கு முன்பு…

“பிசாசு..இப்போ எந்த தேவாவ நெனச்சு கத்துறான்னு தெரிலியே..நம்ம ஹார்ட் பீட்டு வேற எகிறுது” சிகையை கலைத்து விட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தது ஆடவனின் மனது.

திடுமென அவளுக்கு கால் இடறியது நினைவில் வந்தது வேகவேகமாக ஆடவனின் விழிகள் அவளின் காலை ஆராய முனைந்திட தெரியுமேன்..?

தர்ஷினிக்கோ தூரத்தில் யாரோ இருப்பது போன்று தெரிந்தாலும் தெளிவாக இனங்காண முடியவில்லையே.

கண்களை கசக்கி விட்டு ஒரு தடவை அவனின் புறம் பார்த்தவளின் செயல் ஏனோ இன்னும் ஆடவனை அசைத்து பார்த்தது.

“தேவாஆஆஆஆஆஆஆஆஆஆஆ…” மீண்டும் அவள் கத்திட உள்ளிருந்த அவளின் தாயார் எகிறும் சத்தம் கேட்க கொஞ்சம் இடறலுடன் உள்ளே ஓடியவளை ரசித்து தான் மீண்டன ஆடவனின் விழிகள்.

“பாத்து போமாட்டாளா..திரும்ப கால் சுளுக்கிரும்னு தெரியாது..பயமே இல்ல இவளுக்கு..” என்று அர்ச்சனை செய்ய தவறவுமில்லை உள்ளுக்குள்ளால்.

இரு கைகளையும் ஊன்றி பைக்கில் இருந்து துள்ளி எழுந்து விசிலடித்தவாறே உள்ளே நுழைந்தவனை புன்னகையுடன் பார்த்திருந்தார்,

அந்த முதிய பெண்மணி.

“என்ன பாட்டீஈ..அப்டி பாக்குறீங்க..?”

“ரொம்ப நாளக்கி அப்றம் சிரிச்சிட்டு இருக்க ராசா..அதான்..” என்க அதை ஆமோதித்தாலும் அவனின் கண்முன்னே கசப்புக்கள் நிழலாட ஏனோ சிறு இறுக்கம் சூழ்ந்தது மனதில்.

சிறு தலையசைப்புடன் முகத்தில் எதையும் வெளிக் காட்டிடாது அறைக்குள் கதவடைத்து விட்டு உடை கூட மாற்றாது கட்டிலில் குறுக்காக சரிந்தவனின் இரு பாத விரல் நுனிகளும் தரையை உரசிக் கொண்டிருந்தன.

மூடிய விழிகளுக்குள் கருமணிகள் அலைபாய்ந்து இருக்க “இவன இந்த வீட்ட விட்டு போக சொல்லுங்க..இவன் இந்த வீட்ல இருந்தா நா இங்க இருக்க மாட்டேன்..” என்று கத்திய பெண்மணியின் செய்கை அச்சுப் பிசகாமல் அப்படியே நிழற்படமாய் ஓடிட விரக்திப் புன்னகை அவனிதழ்களில்.

காலங்கள் மாறினாலும் சில காயங்கள் ஆறுவதில்லை.

நாட்கள் நகர்ந்தாலும் சில வடுக்கள் தகர்வதுமில்லை.

முன்பென்றால் வருத்தப்பட்டிருக்கிறான் தான். ஆனால், இப்போதெல்லாம் எழுவது விரக்தியான எண்ணங்கள் மட்டுமே.

ஏனோ அந்த நினைவுகளை கூட தாங்கிட இயலாதது போல் மனம் கனத்தது.

எப்படி தான் நிஜத்தை சகித்துக் கொண்டு மீண்டோம் என்பது இன்னுமே அவனுக்கு புரியாத புதிர் தான்.

பெருமூச்சொன்றுடன் கட்டிலில் இருந்து எழுந்தமர்ந்து வெளியே சென்று குளித்து விட்டு வந்து மொட்டை மாடிக்குச் சென்றவனின் விழிகள் தர்ஷினியைத் தான் தேடின.

காரணத்தை உணர்ந்திருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் முன் வர வேண்டுமே..?

துளிர்த்திருந்த காதலை வெறும் ஈர்ப்பு என மனம் சொல்லிச் சொல்லி பதிய வைத்திட முயன்றதன் மாயம் தான் என்னவோ..?

முன்பு போல் ஆடவனின் எதிர்பார்ப்பு அவளுக்கு புரியவில்லை போலும்.நேரங்கள் கடந்தும் மொட்டை மாடிக்கு வரவில்லையே அவனின் அவள்.

சோர்வான மனதுடனேயே மீண்டும் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவனின் உறக்கத்தில் ஆழ வெகுநேரம் பிடித்திருந்தது தான் அதிசயத்திலும் அதிசயம்.

மறுநாள் கல்லூரி செல்ல பேரூந்து தரிப்பிடத்தில் தர்ஷினி நின்றிருக்க தூரத்தில் இருந்த நடந்து வந்து கொண்டிருந்தான்,

ஆடவன்.

வண்டியில் சிறு குழறுபடி நேர்ந்திருக்க அதை வீட்டிலேயே விட்டு விட்டு பேரூந்து தரிப்பிடத்துக்கு வந்தவனோ தூரத்தில் இருந்தே தர்ஷினியை கண்டு கொண்டிருக்க என்னென்னவோ உணர்வுகள் உள்ளுக்குள் எழுந்து ஆட்டுவித்தது ஆடவனை.

எதையும் காட்டிக் கொள்ளாமல் இறுகிய முகத்துடன் வந்து கொஞ்சம் தள்ளி நின்று கொள்ளவே அடையாளம் காண முடிந்தது, அவனை.

“ஐயையோஓஓஓஓ..சீனியர்ர்ர்ர் வந்துருக்கே..” பயத்துடன் மறுபுறம் திரும்பி நின்றவளுக்கு நேற்று உளறிக் கொட்டியதை எண்ணி பெருமளவு பயம் தான்.

ஓரளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் நின்றிருக்க அவர்களை காக்க வைக்காது பேரூந்தும் வந்திட அதனுள் நிரம்பியது, கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம்.

அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறி ஓரிருக்கையை பிடித்துக் கொண்டு அமர்ந்த பின்னே சாவகாசமாய் மூச்சு விட முடிந்தது அவளால்.

நின்று கொண்டு செல்லும் போது பல உரசல் பேர்வழிகளை சந்தித்து இருக்கிறாள் அல்லவா…?

ஆனாலும் சற்று பயம் தான். யன்னலோர இருக்கை கிடைக்கவில்லையே.

அவளில் இருந்து ஓரிரு இருக்கை தள்ளி பேரூந்தின் மேற் பகுதியில் நீட்டப்பட்டிருந்த கம்பியை ஒரு கரத்தாலும் இருக்கையின் கம்பியை மறு கரத்தாலும் பிடித்த படி நின்றிருந்த ஆடவனின் பார்வை அடிக்கடி அவளைத் தான் தொட்டு மீண்டு கொண்டிருந்தது.

மையத்துக்கும் முனைக்குமாய் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்த கருமணிகள் அலைவும் அசைவும் போதாதா அவனின் கடைவிழிப் பார்வையை காட்டிக் கொடுத்திட.

பாவம் அவள் தான் அதை உணரவில்லை, ஏதோ சிந்தனையுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள், கொஞ்சம் பதற்றத்துடன்.

அதற்குள் அடுத்த நிறுத்தம் வந்திட சனம் இன்னும் ஏற நகர வேண்டியதாய் போயிற்று ஆடவனுக்கு.

மேலும் ஓரிரு நிறுத்தங்கள் கடந்திட தர்ஷினி அமர்ந்திருந்த இருக்கையின் கைப்பிடியை பற்றிக் கொண்டு நின்றிருந்தான்,ஆடவன்.

ஆட்கள் தள்ளி எப்படியோ ஆடவனை அவளருகே கொண்டு சேர்த்திருந்தனர்.

அவள் தலை நிமிர்த்தி பார்த்து விட்டு சிறு பாதுகாப்பு உணர்வுடன் வேறு புறம் பார்வையை திருப்பிட இவனுக்கு தான் அவளருகே நிற்கக் கூட இயலவில்லை.

நெற்றியிலும் கழுத்திலும் வியர்வைத் துளிகள் பூத்திட இதயம் எகிறிக் குதிக்க இதழ் பிளந்து சுவாசித்துக் கொண்டிருந்தவனின் விழிகளோ அழுந்த மூடி மூடி திறக்க அருகே நின்றிருந்த நபருக்கு பதற்றமாகிற்று.

ஏன் இத்தனை பதட்டமாக அவளருகே உணர்கிறோம் என்பதன் காரணத்தை ஆராயந்திட விரும்புவதில்லையே அவன்.

“தம்பீஈஈஈஈ…என்னாச்சு தம்பீ..மூச்சு வாங்கறீங்க..மயக்கம் ஏதாவது வர்ர மாதிரி இருக்கா..?” மனிதாபிமானத்துடன் கேட்டிட்ட நபரை ஆடவன் சங்கடத்துடன் பார்த்திட தர்ஷினியின் செவிகளிலும் அவரின் வார்த்தைகள் உரசி நின்றன போலும்.

அவளும் விலுக்கென தலை தூக்கி நிமிர்ந்து பார்த்திட கீழ்க்கண்ணால் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவனுக்கு இருப்புக் கொள்ளவே இல்லை.

“என்ன தம்பீ..எதுவும் பேச மாட்டேங்குறீங்க..அம்மாடி..” என்று ஆரம்பிக்கும் முன்னமே தர்ஷினி இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு இடம் கொடுத்திட மறுத்தவனை கட்டாயப்படுத்தி அமர வைத்திருந்தனர், அருகே இருந்த பெரியவரும் அவனின் கல்லூரி தோழர்கள் மூவரும்.

தர்ஷினியும் தன் பையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவனுக்கு நீட்ட படக்கென வாங்கி மடமடவென குடித்திட சிதறிய நீர்த்திவலைகள் அவனின் சட்டையையும் நனைத்துப் போட்டன.

“தம்பி..இப்போ ஓகேவா…?”

“தேவா..ஆர் யூ ஆல் ரைட்..?”

“மச்சான்..ஓகே தான..”

மூவரிடமும் இருந்து வந்த கேள்விக்கு தலையசைப்பை பதிலாக கொடுத்தவனின் மனமும் அவளிடம் இருந்தும் அப்படி ஒரு கேள்வியை எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

கம்பியை பிடித்துக் கொண்டு நின்றவளின் மீது ஏக்கத்துடன் தொட்டு மீண்டன, ஆடவனின் விழிகள்.

அவளுக்கு பயம் தான்.கேட்டாலும் தவறாக நினைத்துக் கொள்வானோ என்கின்ற எண்ணத்தில் பேசாமல் இருந்து விட்டிருந்தாள்,அவள்.

தர்ஷினியோ ஒருவாறு நகர்ந்து பெண்கள் நின்றிருந்த கூட்டத்துக்குள் புகுந்திட இருக்கையின் மேலிருந்த கம்பியின் மீது நெற்றியை பதித்து முகம் தாழ்த்தி வாய் பிளந்து சுவாசித்தவனின் இரு கைகளும் கம்பியை அழுத்தமாய் பற்றிக் கொண்டன, தன்னை இயல்பாக்க முயன்று.

“பிசாசு..என்னமோ ஆயிடுச்சு..இன்னிக்கு இவ்ளோ பக்கத்துல வந்து நின்னதும்..ரிலாக்ஸ் தேவா..” தனக்குள் நினைத்தவனின் அடுத்த விழி திறந்தது தமது கல்லூரி தரிப்பிடத்தில் தான்.

சிற்றுண்டிச் சாலை மேசையில் அமர்ந்து பாலாவோ தோழனின் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்க இலக்கின்றி பார்வையை அலையவிட்டிருந்த தேவாவின் முதல் மூவிரல்களும் அந்த காலியான காபி டம்ளரின் விளிம்பை பற்றி டம்ளரை சுழற்றிக் கொண்டிருந்தன.

தோழனின் நிலை கண்டு பாலாவுக்கு சிரிப்புடன் சேர்த்து சிறு சந்தோஷம் வேறு.

“மச்சான்ன்ன்ன்ன்..”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..”

“தேவாஆஆஆஆஆஆ..”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..”

“அடேய் தேவாப்பயலே..”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..”

“டேய் மச்சான்..” என்று தோழன் உலுக்கிய உலுக்கலிலே தன்னிலை மீண்டவனின் பார்வை பாலாவின் மீது முறைப்புடன் படிந்தது.

“நீ எதுக்குடா மொறக்கிற..? இவ்ளோ நேரம் என்னடா பண்ற..? ம்ம்..ம்ம் னு கிட்டு..”

“ஹான் அது ஒன்னுல்ல..நீ விஷயத்த சொல்லு..”

“அது ஒன்னுல்ல..கல்சுரல் டே வருதுல்ல..அதுல நீ நடிக்கப் போறியான்னு கேட்டாங்க..”

“பாக்கலாம் டா..இப்போ கரெக்டா மைன்ட் இல்ல..அப்றம் பாக்கலாம்..”

“ஹும்ம்ம்ம்..வர வரே ஏதோ மார்க்கமாவே சுத்தறடா நீ..”

“வாட் நானா..நான் ஒரு மார்க்கமா இருக்கேனா..ஓகே ரைட்ட்ட என்ன ரீசன் அத சொல்லேன்..” கூறியவாறு விரல்களை கோர்த்து கரங்களை பின்னந்தலையில் வைத்துக் கொண்டான்,ஆடவன்.

அவன் விரல்களை எடுத்ததும் அந்த காபி டம்ளர் அப்படியே மேசையில் சரிந்தது.

“அது தான் உனக்கே தெரியும்ல..அப்றம் நா எதுக்கு சொல்லனும்..” என்றவனின் விரல்கள் காபி டம்ளரை நிமிர்த்தி வைத்தது.

“போ மச்சீ..இது ஜஸ்ட் ஒரு இன்பாக்சுவேஷன் தான்..” சொல்லிக் கொண்டே தோழனைப் பார்த்தவனின் விழிகள் தனை மீறி அவனின் பின்னே பார்வையைத் தாவச் செய்திட தோழனின் பார்வை தனக்கு பின்னால் செல்வதை உணர்ந்த பாலா திரும்பிப் பார்த்திட்ட கணம் ஒரு பக்கமாய் அவனின் இதழ்கள் வளைந்தன.

தர்ஷினியும் ஆர்த்தியும் வந்து கொண்டிருக்க ஆர்த்தியின் பார்வை தேவாவின் மீது படிந்து மீள்வதை தெளிவாகவே கண்டுகொள்ள முடிந்தது பாலாவால்.

ஏனோ அந்தப் பார்வையில் இருக்கும் வித்தியாசம் புரிந்திட அவனின் புருவங்கள் தமக்குள் முடிச்சிட்டுக் கொண்டிட தேவாவின் பார்வை தர்ஷினியை மட்டுமல்லவா தொட்டுக் கொண்டிருந்தது.

தர்ஷினியை அவ்விடத்தில் விட்டு விட்டு ஆர்த்தி உள்ளே வந்திட அவளோ சுற்றும் முற்றும் பார்த்த படி நின்றிருக்க தூண் மறைவில் தேவா அமர்ந்திருந்ததால் அவளுக்கு அவன் தெரியவில்லை என்றாலும் தேவாவின் பார்வை அவளை மட்டுமே வட்டமடித்திட ஆடவனின் ஒற்றை ஆட் காட்டி விரல் மென்மையாய் புருவத்தை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

தன் கையில் இருந்த கைக்கடிகாரத்தை ஆராய்ந்த நின்றிருந்தவளை அவன் விழியெடுக்காது பார்த்திருக்க அவளைக் கடந்து சென்ற ஆடவர் கூட்டமொன்று அவளுக்கு ஏதோ சொல்லி விட்டு பட்டென ஒதுங்கி நின்றவளுக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை.

அவளறிந்து அவள் தந்தையும் சரி உறவுகளும் சரி பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்தவர்கள்.

பள்ளிக் காலங்களிலும் அவள் ஒதுங்கியே நிற்பதால் இப்படியான வார்த்தைகளை அவள் கேட்டதுமில்லை.

தன்னை மீறி கண்கள் சிவந்து விட மறைத்துக் கொண்டே நின்னாலும் கண்ணீர் வழியவில்லை.

ஓரமாய் நகர்ந்தவளை பார்த்துக் கொண்டே எழுந்த ஆடவனின் விழிகளில் கனல் மின்னியது.

கதிரையை உதறி விட்டு அவன் எழுந்த விதமே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்க அவனுக்கு அது எல்லாம் புரிந்தால் தான் புதினம்.

விடுவிடுவென அவளருகே நகர்ந்து சென்றவனை சாதாரணமாகவே பார்த்தனர் அனைவரும்.

தேவாவின் குணம் தெரியும்.அதே வேளை தர்ஷினிக்கு சொன்ன வார்த்தைகள் ஓரிருவரின் காதுகளிலும் விழுந்திருந்ததே.

ஓரமாய் ஒதுங்கி நின்றவளின் முன்னே வந்து நின்ற ஆடவனின் பார்வை அவளை கோபத்துடன் நோக்கியது.

“எதுக்கு இங்க வந்த..?” அவன் அனல் தெறிக்க கேட்ட கேள்வியில் பதில் தெரியாது விழித்தாள்,அவள்.

“உன்ன தான் கேக்கறேன்..எதுக்கு இங்க வந்த..? ஹான்..ஓகே ரைட்ட்ட்ட்..வந்தது வந்தது தான்..அவனுங்க பேசுறத கேட்டுட்டு பதில் பேசாம அழுது வடிஞ்சிட்டு நிக்கற..? எதிர்த்து பேச தெரியாது..என்கிட்ட மட்டும் கோபப்பட தெரியுதுல..அப்றம் எதுக்கு அவனுங்க கிட்ட பேசாம நிக்கிற..? வாயல் என்ன துணியா அடச்சிருக்கு..?”

“…………..”

“இப்டி முட்ட கண்ண வச்சு முழிச்சு முழிச்சு பாக்கறது ஒன்னும் அப்பாவித்தனம் இல்ல..நமக்கு ஒரு ப்ராப்ளம்னா நாம தான் பேசனும்..பேசாம அழுது வடிஞ்சிட்டு நின்னா எல்லாம் சரியாய்டுமா..? கேக்கறேன் தான..

எதுக்கு பதில் சொல்லாம இருக்க..?” ஆட்கள் இருப்பதால் அடங்கிய குரலில் அழுத்தமாய் ஆடவன் பேசிட அவளுக்கு இன்னும் விழிகள் சிவந்து போயிற்று.

“உன்ன தான் கேக்கறேன்..” அவன் எகிற விழி நிமிர்த்தி அவனைப் பார்த்தவளின் விழியோரம் ஏறியிருந்த சிவப்பு அவனை கொஞ்சம் அசைத்ததோ..?

“அழுது வடியாம போ இங்கிருந்து..” விழிகளை மூடிய படி உள்ளங்கையை பொத்தி பக்கவாட்டாய் நெற்றியில் தட்டிய படி கூறிய ஆடவனின் செயலைக் கண்டு மிரண்டு ஓடியே விட்டிருந்தாள் தன்னை சமப்படுத்த முயன்று கொண்டு.

அவள் அழவில்லை.

விழிகளில் இருந்து துளிக் கண்ணீரும் வழியவுமில்லை.

ஏனோ கொஞ்சமாய் படர்ந்திருந்த சிவப்பும் முகத்தில் சற்றே வெளிப்பட்ட பயமும் ஆடவனை அத்தனை கோபப்படுத்தியிருக்க அதன் காரணம் காதலின்றி வேறேது….?

அவளின் சிறு முக மாற்றமும் அவனை கலங்கடித்து கொதித்தெழச் செய்ய காரணம் கேட்டால்..?

அத்தனை எளிதில் காதல் என்று ஒத்துக் கொள்வானா..?

அந்த அழுத்தமான ஆடவன்…..

அதற்கு கொஞ்சம் காலம் காத்திருக்கத் தான் வேண்டும்.

                 *************

இன்று…

அழைப்பு மணிச் சத்தத்தில் திடுக்கிட்டாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை,அவள்.

அவள் நினைப்பவன் வந்திருக்க போவதில்லை என்பதை மனம் உறுதியாக நம்பிட பேசாது குளியலைறைக்குள் நுழைந்து வெளியே வந்திடும் போது மொத்தமாய் பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தன.

அறைக்குள் நுழைந்து அலுமாரியைத் திறந்தவளுக்கு ஏனோ இன்று அவளின் அந்த கருநீல நிற சுடிதாரை அணிய வேண்டும் என்று தோன்றிற்று.

அவனும் அவளும் தற்செயலாய் திருமணத்திற்கு முன்பு ஒருமுறை அணிந்து கொண்டு வந்திட அனைவரின் கவனமும் தன் மீது பதிந்ததை இன்றும் மறக்க முடியாதே அவளால்.

சிறு புன்னகையுடன் அணிந்து கொண்டு தலைமுடியை சிறு க்ளிப்பில் அடக்கிய படி வெளியே கூடத்துக்கு வந்திட அங்கு அவளின் தம்பி தங்கையுடன் கதையளந்த படி இருந்தான், அவள் கணவன்.

இதழ் பிரித்து புன்னகைத்து தம்பியுடன் ஏதோ ஆர்வமாய் கதைத்த படி இருப்பவனைக் கண்டதும் அவளுக்கு ஒரு நிமிடம் உலகமே தலைகீழாய் சுழலும் உணர்வு தான்.

விழி விரித்து அவள் நின்றிருக்க அவளை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு திரும்பியவனின் மன எண்ணம் அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம்.

“தர்ஷினி…என்ன ப்ரீஸ் ஆகிட்ட..?”

“………”

“தர்ஷினி..அடியேய் தர்ஷினி..” தம்பி உலுக்கவே சுயம் மீண்டது அவளுக்கு.

“ஹான்..ஒன்னுல்லடா..” என்று மழுப்பி சமாளித்தவளுக்கு உறைந்து நின்ற தனது மடத்தனத்தை எண்ணி கொஞ்சம் சங்கடமே.

அதற்குள் அவளின் தாயார் அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்திட புன்னகையுடன் அதனை வாங்கிக் கொண்டவனின் செயலை ஏனோ ரசிக்கத் தான் செய்தது, அவள் மனம்.

காதல் ஒரு போதும் தந்திட்ட காயங்களை கவனிப்பதில்லையே..?

 ரணங்களை மறக்கவே விழைந்து மீண்டும் நாடிடும் எண்ணமெல்லாம் சில ஆழமான நேசங்களில் மட்டுமே சாத்தியம்.

எதிராய் இருந்தாலும் புதிராய்த் தெரிந்தாலும் அவளின் மனமோ அவனின் மனதுடன் சதிராடி சங்கமித்திட தானே ஏங்குகிறது.

அது தான் அவள் நேசத்தின் ஆழம்.

ஆனால், அவளுக்கான நேசத்தின் முன் இதுவெல்லாம் தலை குனிந்து நின்றிடும் என்று ஏனோ அவள் அறிந்திடும் வாய்ப்பில்லை.

“தர்ஷினி..மாப்ளய உள்ள கூட்டிட்டு போ மா..” தாய் புன்னகையுடன் சொல்லிட அவளுக்கு பெரும் கலக்கமே.

தாயின் முகத்தில் இருக்கும் நிறைவும் பூரிப்பும் தங்களின் விவாகரத்து செய்தி கேட்டிடும் சமயம் என்னவாகும் என்ற பதபதைப்பு உள்ளுக்குள்ளே அவளை குடைந்து கொண்டிருந்தது.

அவளோ முன்னே நகர அவளின் பின்னூடு வந்த ஆடவனின் கரங்கள் தனது கருநீல நிற சட்டையின் கையை மடித்து விட்டுக் கொண்டது.

ஒரு பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்து அவனுக்கு அமருவதற்கு கதிரையை எடுத்துக் கொடுக்க அதை மறுத்து விட்டு கட்டிலில் தொப்பென சரிந்து கண்களை மூடிக் கொண்டவனுக்கு நேற்று இரவு தூங்காததால் களைப்பு வேறு.

சட்டைப் பொத்தான் இரண்டை திறந்து விட்டு அவன் மல்லாக்க விழுந்திருக்க பக்கவாட்டாய் தலை வைத்திருந்தவனின் ஒரு கரம் தலையணையை இறுகப் பற்றி தன்னோடு சேர்த்திருக்க ஓரிரு நிமிடங்களிலேயே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான், அவன்.

கதவை அடைத்து விட்டு அப்படியே மேசையின் அருகே இடப்பட்டிருந்த கதிரையில் அவனை பார்ப்பதற்கு ஏதுவான விதத்தில் அமர்ந்து கொண்டவளின் இமைகளின் உரசல் சில நொடிகளுக்கு நின்று தான் போயிருந்தது.

புழுக்கத்தின் மத்தியில் அவனுக்கு வியர்த்து போட்டிருக்க மின் விசிறியை போட்டு விட்டு நகரப்பார்த்தவளுக்கு அவனின் முகத்தில் இருந்த களைப்பு ஏதோ செய்தது.

சுருங்கியிருந்த விழிகளும் கசங்கியிருந்த முகமும் அவனுக்கு தலைவலி என்பதை உணர்த்திட மெதுவாய் தைலத்தை எடுத்துக் கொண்டு அவன் உணராமல் மென்மையாய் பூசி விட்டவளின் விரல்கள் அவனின் நெற்றியை மென்மையாய் அழுத்தி விட்டன.

விழிப்புத் தட்டினால் தனக்கு திட்டு விழும் என்று தெரிந்தாலும் ஏனோ செய்யாமல் இருக்கத் தான் இயலவில்லை.

அவன் அதை உணரவில்லை போலும். விழிகளின் சுருக்கம் மெதுமெதுவாய் குறைந்து கொண்டு போக அவளின் கரத்தை எடுத்து தன் கன்னத்தின் கீழே வைத்தவாறு அவன் இன்னும் நிம்மதியாய் உறங்கிட இவளுக்கு தான் ஒரு நிமிடம் வெடவெடத்து மீண்டது, தேகம்.

தொண்டைக் குழி ஏறி இறங்க எச்சிலு விழுங்கிக் கொண்டே தன் கரத்தை உருவ முயன்றிட இலேசான அசைவு அவனிடத்தில். அப்படியே நிறுத்தி இருந்தாள் தனது செயலை.

விழிகள் அவனின் வதனத்தை தான் மீளாமல் உரசிக் கொண்டு நின்றன.

கொஞ்சம் தடித்த மீசையும் சிறு படையாய் படர்ந்திருந்த தாடியும் ஏனோ அவனை இன்னும் அழகாகத் தானே காட்டித் தொலைக்கிறது அவள் விழிகளுக்கு.

களைந்திருந்த சிகை முன்னே வந்து நெற்றியைக் கொஞ்சமாய் மறைத்திருக்க அடர்த்தியான இமை முடிகள் அணையாய் நின்றன இமையோரங்களுக்கு.

விழகளில் இரசிப்பு மின்ன இதழ்களில் புன்னகை துளிர்த்திட அவனின் தலையை மெதுவாய் வருடி விட்டவளின் மனதை அவன் மீதான காதல் ஆண்டு கொண்டிருந்தது.

அவனைத் தவிர இதுவரை வேறு யாரையும் ரசித்திருப்பாள் என்கின்ற எண்ணம் துளியும் வரவில்லை அவளுக்கு.

ரசித்ததும் இல்லையே.

பத்து நிமிடங்கள் அவனின் தலைகோதிக் கொடுத்த படியை அமர்ந்திருந்தவளுக்கு தன்னிலை உரைத்திருக்க வேண்டும். மெதுவாய் எழுந்து விலகி வந்திடவே சமப்பட்டது மனது.

ஒரு கணம் அவனை பார்வையால் உரசி விம்பத்தை விழிகளுக்குள் நிரப்பி ரசித்து விட்டு மேசையில் இருந்த தனது நோட்டை கையில் எடுத்தவளின் கரங்கள் ஏதோ கிறுக்கிட சிறு புன்னகையுடன் எழுதி முடித்தவளோ கதவை அடைத்துக் கொண்டு வெளியேறி இருந்தாள், சமயலறைக்கு.

அதே நேரம்..

ஒருவாறு தேடிப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணாவின் வீட்டை வந்தடைந்திருந்தனர்,

ஆதியும் கதிரும்.

பூட்டியிருந்த கதவை நெற்றியில் முடிச்சுக்களுடன் பார்த்து விட்டு அழைப்பு மணியை அழுத்திட வந்து கதவை திறந்தது ஒரு வயதான பெரியவர் தான்.

“ஐயா இங்க கிருஷ்ணாங்குறது..?”

“என்னோட பையன் தான் தம்பி..பையனுக்கு தெரிஞ்சவங்களா..?உள்ள வாங்க..” அவர் அழைத்திட அவரைப் பார்த்து புன்னகைத்தான், ஆதி.

“இல்லய்யா..கிருஷ்ணா..”

“கிருஷ்ணா காலைலயே சென்னைக்கு பொய்ட்டானே தம்பீ..இன்னிக்கு நாலர மணி பஸ்ஸுல தான் போனான்..உங்களுக்கு தெரியாதா..?”

“அப்டிங்களாய்யா..சரி..அப்போ நாங்க வர்ரோம்..”

“தம்பி உள்ள வாங்க..வந்து ஒரு வாய் காபி சாப்டு போங்க..”

“இல்லய்யா..ரொம்ப நன்றிய்யா..” அவரின் வற்புறுத்தலையும் மீறி நகர்ந்து வந்த ஆதியின் நெற்றியில் முடிச்சுக்கள் தேங்கியிருக்க முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.

“என்னடா கதிர்..அங்க இருந்து இங்க வந்தா..இங்க இருந்து அங்க போயிருக்கான்..இந்த கேஸ் என்ன ரூபத்துல போய் நிக்கப் போகுதுன்னு தெரிலியே..” நெற்றியைத் தட்டிய படி யோசனையில் ஆழ்ந்தவனைக் கண்டு பாவமாகத் தான் இருந்தது கதிருக்கும்.

“அதான் பாஸ்..எனக்கும் புரியல..நாம நெனச்சுற மாதிரி இல்ல இந்த கேஸ்..பாஸ் சீப் வேற கால் பண்ணி கொடச்சல பண்றாரு…நாம அன் அபீஷியலா இன்வெஸ்டிகேட் பண்றத யாரோ அவருக்கு சொல்லியிருக்காங்க போல..கவனமா இருக்கனும் பாஸ்..”

“ஆமா கதிர்..” என்றவனுக்கு அண்ணனின் நினைவு தான் வந்தது.

அவனிடம் ஏதாவது யோசனை கேட்டால்..?

பட்டென பிரகாசமாகிய முகத்தை ஆராய்ச்சியாய் தான் பார்த்து வைத்தான்,

கதிர்.

“பாஸ் யேதாவது ஐடியா கெடச்சுருச்சா..?”

“ஆமா கதிர்..என்னோட ப்ரதர் கூட டிஸ்கஸ் பண்ணா நல்லாருக்கும்னு தோணுது..”அவன் சொல்லி முடிக்க கதிரின் புருவங்கள் வியப்பில் மேலேறி நின்றன.

நேரம் காலை பதினொரு மணி என கடிகாரம் காட்டிக் கொண்டிருக்க மனதில் பல கேள்விகளுடன் அந்த அறையை ஆராய்ந்து கொண்டிருந்தான்,

அவன்.

அந்த வீட்டின் அளவே அவர்களின் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்ட அவனுக்கு வியப்பு தான்.

தன் தொண்டையச் செருமியவாறு தோழனின் பிரமிப்பில் சிறு புன்னகையை இதழ்களில் தாங்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த தோழனின் அருகில் வந்தமர்ந்தான்,

ஆரவ்.

“என்ன மச்சான் இப்டி பாத்துகிட்டு இருக்க..”

“இல்லடா இவ்ளோ பெரிய வீட்ட விட்டுட்டு நீ எப்புர்ரா ஹாஸ்டல்ல தங்கி படிச்ச..?”

“அது அப்டி தான் மச்சி பழகிருச்சு..ஆனா இந்த வீட்ட விட ஹாஸ்டல் பெட்டர்..எங்க பெரியப்பா ஒன்னு இருக்கே..யப்பா கொடுமடா சாமி..”

“அவ்ளோ டெரரா மச்சி அவரு..”

“ஆமாடா..ரொம்பத் தான் டெர்ரரு..”

“டேய் உங்க பாமிலிய பத்தி சொல்லேண்டா..”

“ப்ச்ச்ச்..சொல்றதுக்கு பெருசா ஒன்னுல்ல..ஊர்ல கொஞ்சம் வசதியான குடும்பம் தான்..கொஞ்சம் பரம்பரையாவே வசதியான பேமிலி தான்..எங்க தாத்தாக்கு ரொம்ப சொத்து..எக்ஸ்ட்ராவா பாட்டியும் அவங்க வீட்டுக்கு ஒத்த பொண்ணு..அப்டி இருக்கும் போது மொத்த சொத்தும் தாத்தாக்கு தான..அதனால பேமிலிக்குள்ள இருந்த அண்ணன் தம்பி பாசமெல்லாம் காணாம போயிருச்சு..எங்க தாத்தா பேரு ஆரவமுதன்..எங்க பேமிலில பொறக்குற மூத்த வாரிசுங்களுக்கு ஒரே மாதிரி பேர் வக்கிற பழக்கம் இருக்கு..தாத்தா பேரு ஆரமுதன்.அதுக்கு பின்னாடி ஒரு பேர் வரும்….அது மாதிரி குடும்பத்துல பொறக்குற மூத்த பையன்னா அந்த பேர் வரும்..பொண்ணுன்னா ஒரு பேர்..எங்க பெரிப்பா அவரோட பையன்..அப்றம் எங்க மூத்த அண்ணன் எல்லாருக்கும் அந்த பேர் இருக்கு…அது பரம்பர பழக்கம்..ஆம்பள புள்ளன்னா ஒரு பேர்..அப்றமா அப்பாக்கு ரெண்டு அண்ணன் ஒரு தம்பி..ரெண்டு தங்கச்சீஈஈஈ..மூத்த அண்ணனோட வைப் கல்யாணமாகி ஒரு வருஷத்துலயே டைவோரஸ் பண்ணிட்டு பொய்ட்டாங்க..அவங்களுக்கு ஒரு பையன் இருக்காரு..பெரிப்பா அந்த பையனுக்கு ஆறு மாசம் இருக்குறப்போவே யெறந்து பொய்ட்டாங்க..அந்த பையன சின்ன வயசுலயே யார் கிட்டவோ கொடுத்து இருக்காங்க..யாரோ தத்தெடுத்துட்டு போய் இருக்காங்க..பாட்டியும் இல்லயா..தாத்தாவால பாத்துக்கு முடியாது..அப்றம் வீட்ல இருக்குற வேற யாருக்கும் மூத்த பெரியப்பாக்கும் ஆகாது..அதனால தான் அவரு உறவே வேணான்னு அத்து விட்டுட்டாங்க..

ரெண்டாவது மத்த பெரிப்பா..இவரோட வைப் டீச்சர்..ரொம்ப நல்லவங்க பெரிம்மா..சத்தமா பேச கூட மாட்டாங்க.. ரொம்ப ரொம்ப நல்லவங்க..அவங்களுக்கு மூணு பசங்க இருக்காங்க..ஒருத்தர் ஆடிட்டர்..மத்த பையன் வக்கீல்..மூணாவது பொண்ணு படிச்சிட்டு இருக்கா..அடுத்து எங்கப்பா..மொத்தமா நாலு பசங்க..மூத்த அண்ணன்ட டாக்டர்..ரெண்டாவது அண்ணன் லாயர்..மூணாவது நானு..நாலாவது ஆர்னவ்..அதுக்கப்றம் ஒரு சித்தப்பா..அவருக்கு மூணு பசங்க..மூத்தவ காலேஜ் போறா..மத்த ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கிறாங்க…அதுக்கப்றம் அத்த..”

“டேய்..டேய் நிறுத்துடா…”

“இருடா..இரு..ஒரு ப்லோல சொல்லிட்டு விட்றேன்..எங்க அத்த ரொம்ப ஸ்ட்ரிக்ட்..அவங்களுக்கு ரெண்டு பொண்ணு..அத்தகி அப்றம் தான் சித்தப்பா..அவங்களுக்கு ஒரு பையன்..ரெண்டு பொண்ணு…அவங்களோட மூத்த பொண்ணு டாக்டர்..ரெண்டாவது பொண்ணு சிவில் இன்ஜினியர்..இப்போ பாரின்ல வர்க் பண்றாங்க..பையன் அத்த கூட கோச்சிகிட்டு பொய்ட்டான்..ஏதோ சண்ட அவங்களுக்குள்ள..அவங்க கூட பேசுறதே இல்ல..அப்றம் மாமா..ரொம்ப பாவம்..அதிகமா யார் கூடவும் பேச மாட்டாரு..யேன் அதட்டி கூட பேச மாட்டாரு..ரொம்ப ரொம்ப நல்ல மனசு..ரெண்டாவது அத்த அவங்களுக்கு பெறகு..அவங்க ரொம்ப நல்லவங்க..அவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க..மூத்தவ டீச்சர்..ரெண்டாவது பொண்ணு காலேஜ் படிக்கிறா..சின்னத்த தான் இந்த பேமிலில ரொம்ப நல்லவங்க”

“மச்சீ..போதும் டா..தல சுத்துது..” என்று விட்டு அப்படியே மல்லாக்க விழுந்தான்,கட்டிலில்.

“என்ன மச்சீ..கன்பியூஸா இருக்கா..?”

“இல்லாம..போடா டேய்..ஒரு சரித்திரத்தயே..சொல்ற குடும்பத்த பத்தி கேட்டா..” கூறியவாறு தலையைணையை அவன் மீது விட்டெறிய லாவகமாக அதைப் பிடித்துக் கொண்டான்,ஆரவ்.

“மச்சீஈஈஈஈ..உங்க சித்தி பையன் கௌதமுக்கு கல்யாணம் பேசறாங்களா..?”

“ம்ஹும்..இல்ல மச்சீ..இன்னும் ஆகல..பேசறாங்க தான்..அவரு தான் ஒத்துக்க மாட்டேங்குறாரு..” என்று எழுந்தவாறே சொன்னவனின் பார்வை அறைக்கு வெளியே மேய்ந்தது.

கதவருகே வந்து தலையை போட்டு எட்டிப் பார்த்தவனுக்கு அங்கு யாரும் இருப்பது தெரியாதிருக்க படாரென கதவை அடைத்துக் கொண்டது, அவனின் கரம்.

“என்ன ஆரவ்..நர்வஸா இருக்க..?”

“ஒன்னுல்ல மச்சீ..நாம பேசிட்டு இருந்தத யாராவது கேட்டுட்டு இருந்த போல இருந்துச்சு..அதான்..”

“யேன் மச்சீஈஈ..கேட்டா என்னடா ஆகும்..?”

“இல்ல ரோஹித்..எங்க வீட்டாளுங்கள பத்தி உனக்கு தெரியாதுடா..சரியான வில்லங்கம் புடிச்சதுங்க..” என்றவனின் நினைவில் சிலபல கசப்பான சம்பவங்கள் வந்து போக மறந்திடவில்லை.

அதே நேரம்..

தன் தலையை தாழ்த்தி ஆழமான சிந்தனையில் ஆழந்திருந்தான்,

யாதவ்.

தர்ஷினியின் புறக்கணிப்பு அவனின் தன்மானத்தை சீண்டி விட்டிருந்தது வெகுவாகவே.

அவளின் இந்த பாராமையும் அலட்சியமும் தான் தேவாவின் கவனத்தையும் அவள் புறம் திருப்பியிருக்க கூடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை அவனுக்கு.

தேவாவின் குணாதிசயங்கள் பற்றி ஓரளவுக்கு அவனுக்கும் தெரியும் ஆயிற்றே.

தர்ஷினியின் காதலை தன் மீது திருப்பி விடுவது தான் அவனை தோற்கடிக்க இருக்கும் ஒரே வழி என்பதை உணர்ந்திருந்தவனுக்கு அதை செயற்படுத்தும் வழி தான் புரியவேயில்லை.

தன் நெற்றியில் நடுவிரலால் தட்டிய படி யோசனையில் இருந்தவனுக்கு அவளிடம் தோழமைக் கரம் நீட்டிட எழுந்தது சிறு யோசனையொன்று.

தொடரும்.

🖋️ அதி…!

2023.08.31

Advertisement