Advertisement

சொல்லாமல்…!

மௌனம் 13

சில வருடங்களுக்கு முன்பு…

“தர்ஷினி நீ சொல்றது முட்டக்கண்ணி சீரிஸ் தேவாவ தான..”

“போடி..அது லவர் போய் பா..நா சொல்றது அந்த மூன்று நொடி சீரிஸ் தேவா டி..அந்த ரகட் பாய்” என்க பின்னே நின்றிருந்தவனின் உடலில் மெல்லியதாய் ஒரு அதிர்வு.

விழிகள் விரிய இதழ் பிளந்து சுவாசித்த படி நின்றிருந்த தோழனைக் கண்டதும் பாலாவின் இதழ்களில் புன்னகை எழுந்தது.

பக்கவாட்டாய் திரும்பி தோழனை பார்த்தவனுக்கு தேவாவின் சமைந்த நிலை ஏனோ அத்தனை உற்சாகத்தை தந்திட விசில் அடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம்.

“அப்போ காமெடி கலாய்னு சொன்ன..”

“ஆமா..தேவா ப்ரெண்டு பண்ற காமெடி சீன்ஸ் வர்ரதால சீரிஸ் புடிச்சுது..அப்றமா தான் தேவாவ புடிச்சுது..சத்தியமா டி..அந்த கண்ணால மட்டுமே காட்டுற பீலிங்க்ஸுக்கே நா ப்ளாட்..என்னா ஐ கான்டெக்ட்..”

“நா கூட நீ காமெடினு சொல்லும் போதும் முட்டக்கண்ணி சீரிஸ் தேவான்னு நெனச்சுட்டேன்..ஆனாலும் இந்த ரொம்ப ஓவர் டி..இன்னும் மூஞ்ச கூட காட்டாத ஆளு மேல க்ரஷ்ஷுங்குறது..”

“தெரில டி..அந்த கண்ணாலயே எல்லாத்தயும் சொல்றதும் நெத்திய மறச்சு மொகத்த மறச்சு கண்ணு மட்டும் வெளில தெரிற மாதிரி துணியால மறச்சிகிட்டு வந்து கண்ணால பேசும் பாரு..சத்தியமா அவ்ளோ அழகு பா அது..”

“எது அந்த ப்ரவுன் கலர் கண்ணா..?”

“ம்ம்..ரொம்ப அழகு பா அது..ஆனா அந்த கண்ணோட மணி கருப்பு கலரா இருந்தா இன்னும் அழகா இருக்கும்..ஆனா கார்த்தீஈஈஈஈ..நீயும் அந்த சீரிஸ் பாப்ப தானே..”

“பாக்குறேன் தான்..ஆனா க்ரஷ் எல்லாம் இல்ல..யேன் கேக்கற..”

“உனக்கு அந்த தேவாவ பாத்தா யாராவது ஞாபகம் வர்ராங்களா..?” என்று சிறு புன்னகையுடன் கேட்டிட சடுதியாய் ஒரு அதிர்வு.

ஏற்கனவே இதழ் பிளந்து சுவாசித்த படி நின்றிருந்தவனின் இதயத் துடிப்பு எகிற பலமாய் மூச்சு வாங்கியது.

தன் நெஞ்சில் வலது கையின் ஐவிரல்களையும் பதித்து தடவிக் கொடுத்தான் ஆடவன்.

அவன் தன்னிலையில் இல்லை என்பதை வெகுவாய் உணர்த்தியிருந்தது அந்தப் பதட்டமும் இழையோடிய மெல்லிய நடுக்கமும்.

செவிகளோ கூர்மையாகி அவளின் பதிலை எதிர்பார்த்திருக்க மனதோரம் எழுந்த தவிப்பு வார்த்தைகளை வாரிச் சுருட்டி தனக்குள் விழுங்கியிருந்தது.

“இல்லயே யேன் அப்டி கேக்கற..?”

“இல்லடி..எனக்கு அதுல வர்ர தேவாவ பாக்கும் போது நம்ம சீனியர் தேவா தான் மைன்ட்ல வர்ராரு..அந்த மேனரிசம்..அப்பப்போ கழுத்த தடவுறது இதெல்லாம் பாக்கும் போது..” என்று சொல்லி முடிக்கும் முன்னரே பின்னே நின்றிருந்தவனுக்கு புரையேறிட இருமல் எட்டிப்பார்த்தது.

திடுமென கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவளுக்கு பின்னே நின்றிருந்தவனை கண்டதும் சப்த நாடியும் ஒடுங்கிய நிலை தான்.

“ஆத்தாடி..இது இங்கயா இருக்கு..” தனக்குள் நினைத்தவளோ பதட்டத்துடன் எழுந்து கொள்ள முயன்று சமயம் கால் தடுக்கி விழப்பார்த்து எப்படியோ நிலைப்படுத்திக் கொண்டு கொஞ்சம் சரிந்திட தொப்பென அமர்ந்தாள், இருக்கையில்.

அவனின் கரங்கள் அவளை பிடிக்க தனிச்சையாக எழுந்திட அதை கவனிக்கும் நிலையில் இல்லை பெண்கள் இருவரும்.

கார்த்திகாவுக்கும் தேவாவை எண்ணி கொஞ்சம் பயம் தான்.

நீண்டிருந்த கரங்களை கண்டு பாலா தொண்டையைச் செரும அதில் கலைந்து தன்னிலை அடைந்து தோழனை எறிட்டவனுக்கு ஏனோ நீண்ட நேரம் அவனின் பார்வையை சந்திக்க இயலவில்லை.

கரத்தை இன்னும் நீட்டிக் கொண்டே இருப்பவனைக் கண்டு பாலாவுக்கு சிரிப்பு பீரிட்டது.

மீண்டும் ஒரு வித ராகமாய் தொண்டையை கனைத்திடவே விடயம் உரைத்த மறு கணம் கரத்தை பின்னே இழுத்துக் கொண்டவனின் தலை தாழ்ந்திட சிறு தயக்கப் புன்னகை ஓடிய விரிந்த இதழ்களுடன் ஆடவன் நின்றிருக்க பின்னங்கழுத்தை முட்டிக் கொண்டிருந்த சிகையினுள் விரல்கள் நுழைந்து கோதிக் கொடுத்தது,தவிப்புடன்.

“தர்ஷினி..என்னடி பண்றது..? பாரு ஏதோ யோசனைல இருக்காரு..ஒரே ஓட்டம் ஓடிரலாம் வா..” தோழியின் காதில் கார்த்திகா மெதுவாய் கிசுகிசுத்திட காலை அசைக்க முடியவில்லை, அவளால்.

“அடியேய்..கால் சுளுக்கிருச்சு போலடி..இந்த கன்டிஷன்ல ஓடவெல்லாம் முடியாது..” வலியில் சுருங்கிய முகத்துடன் அவள் சொல்லிட்டாலும் விழிகளோ பயத்துடன் தேவாவின் வதனத்தையே தொட்டுக் கொண்டு நின்றன.

தலையை கலைத்து தன் தவிப்பை களைத்து விட்டு நிமிர்ந்தவனின் முகம் மீண்டும் அழுத்தத்தை தத்தெடுத்து இருந்தாலும் ஏனோ அந்த விழிகளில் கொஞ்சமும் கோபம் இல்லை என்பதே உண்மை.

வலியில் சுருங்கிய முகத்துடன் தன்னையே பார்த்திருப்பவளை கண்டவனுக்குள் பலவித உணர்வுகளின் அலைகள் இதுவரை உணர்ந்தே இராதவையாய்.

ஒரு கணம் விழிகளை அழுந்து மூடி திறந்து அவளைப் பார்த்தவனின் விழிகள் சொன்ன செய்தியை அவனே உணர்ந்திராத பொழுது அவளுக்கு எங்கே புரிந்திடப் போகிறது..?

“என்னாச்சு..கால் அடிபட்டுருச்சா..?” கொஞ்சம் இளகாத இரும்புக் குரலில் அவன் கேட்டாலும் தவிப்பின் பெரும் புயலே வீசிக் கொண்டிருந்தது.

ஆம் என்பதாய் தலையசைத்தவளின் விழிகளில் அப்படியொரு பயம்.

அந்த பயம் ஏதோ உள்ளுக்குள் குடைய நேர்ப்பார்வையை தொடர்ந்தும் பதித்திட தடுமாறி தவித்துப் போனான், ஆடவன்.

அன்று அவளின் நிமிர்வு ஆட்டுவித்தது.

இன்று அவளின் பயம் ஆக்கிரமிக்கிறது.

மொத்தமாய் சொல்லப் போனால் அவளின் ஒவ்வொரு உணர்வும் அவனுள் ஆழமாய் உள்ளிறங்கி உள்ளுக்குள் ஏதோ செய்து தான் தொலைக்கிறது.

“சரி நீ கெளம்பு..” எங்கோ பார்த்தவாறு ஆடவன் உரைத்திட கார்த்திகாவின் உதவியுடன் எழுந்து நின்று அவள் கெந்திக் கெந்தி நடந்திட அவளையே பின் தொடர்ந்தது,

ஆடவனின் விழிகளில் புதிதாய் குடி கொண்ட தவிப்புடன்.

“தேவா..” மென்மையாய் அழைத்தான், பாலா.

“என்னடா..?”

“நீ அந்த பொண்ண லவ் பண்றியா..?”பயமிருந்தாலும் கொஞ்சம் தைரியத்துடன் கேட்டிட எந்தவொரு பதிலுமில்லை, ஆடவனிடத்தில்.

“தேவா..” மீண்டும் அழைத்து உலுக்கிட இயல்பு மீண்டது ஆடவனின்.

“லவ்வா..ச்சே..ச்சே..அப்டி எந்த எழவும் இல்ல..என்னமோ பண்ணுதுடா மனசு..” கூறியவாறு தோழனை ஏறிட்டவனின் விழிகளில் பெரும் அலைப்புறுதல்.

“என்ன தேவா..யேன் இப்டி இருக்க..?”

“ஒன்னுமே புரியல மச்சீ..சடன்னா யாரயும் ஏத்துக்கவும் முடியல..இவ லவ் லெட்டர் தந்தான்னு கொஞ்சமா வெறுப்ப வளக்க பாத்தா மனசு கேக்கல..சரின்னு தள்ளி நின்னா லவ் லெட்டர் தந்தது இவ இல்லன்னு தெரிய வருது..என்னமோ பண்ணுதுடா இவள பாக்குறப்போ..”

“………….”

“எல்லோர் கூடயும் அக்கறயா நடந்துக்குறா..அதுக்கு அன்புன்னு சொல்ல முடியாது..ஜஸ்ட் மனிதாபிமானம் தான் அது..தேவயில்லாம பேசுறதில்ல..நெருங்குனவங்கள தவிர மத்தவங்க கூட ரொம்ப அழுத்தமா இருக்கா..ஆனா புடிச்சவங்க கிட்ட அவ்ளோ அன்பா பாசமா தன்னையே மாத்திகிட்டு நடந்துக்குறா..அது என்னமோ பண்ணத் தொலக்கிதுடா மனச..” சொன்னவனின் விரல்கள் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டன.

“பொறந்ததுல இருந்து எனக்குன்னு யாருமே இல்ல..அன்ப பாத்து நா ஏங்கனதும் இல்ல..யார் அன்பும் எனக்கு கெடக்கனும்னு தோணுணதே இல்ல..

ஆனா இவ நெருங்குனவங்க கிட்ட காட்டுற அன்ப பாக்கும் போது அது எனக்கு வேணும்னு தோணுது..எனக்கு மட்டுமே வேணும்னு தோணுது..தெரியாதவங்க கிட்ட அவ காட்றத ஜஸ்ட் மனிதாபிமானம் தான்..அவங்களுக்காக அவ மெனக்கெடல..ஆனா புடிச்சவங்கள அப்டி பாத்துக்குறா மச்சீ..அத பாக்கும் போது நான் நானாவே இல்ல..அந்த அழுத்தத்துக்கு பின்னாடி நெருங்குனவங்க கிட்ட மட்டும் காட்டுறதுக்கு ஒளிச்சு வச்சுருக்குற பாசம்..யப்பா அத பாக்கும் போது மனசு ரொம்ப ஏங்குது டா..”

“அதுவும் அவளோட அக்கற வேணும்னு தோணுது..பாசம் வேணும்னு தோணுது..அந்த அக்கறயான திட்டு வேணும்னு தோணுது..இதுக்கெல்லாம் என்ன பேர் சொல்றதன்னு எனக்கு தெரியல..ஒரு மாசம் அவள பாக்காம இருந்தாலும் காலேஜ் வந்தாலே தவறுதலா சரி அவ என் கண்ல படனும் மனசு கேக்கும் டா..ஒரு மாசமா கன்ட்ரோல்ல இருந்தேன்..பட் இப்ப அவள பாத்ததும் ஐ ஊம் லூஸிங்க் மை செல்ப்..ஒரு காதலால நா பாதிக்கப் பட்டது எல்லாம் மொத்தமா மறந்து தான் போயிடுது..என்னமோ ஆகுது மச்சான்..”

“தேவா..அப்போ நீ அந்த பொண்ண லவ் பண்றடா..” ஒரு வித புன்னகையுடன் தோழனின் தோள் பிடித்து சொல்ல தோற்பட்டையில் படிந்த பாலாவின் கரத்தை வெடுக்கென தோற்பட்டையை அசைத்து உதறி விட்டு விட்டு முறைத்தான், ஆடவன்.

இத்தனை நேரம் இருந்த உணர்ச்சிகள் மொத்தமாய் துடைக்கப்பட்டு இருந்தது.

“லவ்வும் யெழவும்..ஒரு கருமமும் இல்ல..இப்டி ஒரு கேரக்டர பாத்தது இல்லங்குறதால என்னோட அடி மனசுல இருக்குற அன்புக்கான ஏக்கம் விழிச்சுக்குது..அதோட எபெக்ட் தான் இது..இன்னொரு தடவ லவ்வுன்னு சொன்ன கொன்னுருவேன்..கண்டிப்பா..இது லவ்..லவ் எ..எல்..எல்லாம் இல்ல..லவ் இல்ல..லவ் இல்ல தான்..விடு என்ன கொழப்பாத..” தயக்கமாய் முடித்து விட்டு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவனின் கரங்கள் தலையை பிடித்துக் கொண்டது.

“உனக்கு புரியுது லவ் தான்னு..ஒத்துக்க மாட்டேங்குற..பாக்கலாம் அது எவ்ளோ நாளக்கின்னு..”

“எதே லவ்வா..போடா..இது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன் தான்..அது கொஞ்ச நாள்ல காணாம போயிரும்..”

“பாக்கலாம் மச்சீஈஈஈஈ..” என்று விட்டு அவன் கடகடவென எழுந்து வெளியே சென்றிட பாலாவின் இதழ் முழுவதும் வந்து ஒட்டிக் கொண்டது, புன்னகை.

நேரம் இரவு ஏழு மணி எனக் காட்டிக் கொண்டிருக்க அந்த உணவகத்தில் தோழனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்,தேவா.

அவனை கொஞ்ச நேரம் காக்க வைத்த பின்னரே உணவகத்தினுள் நுழைந்தான்,ப்ரித்வி.

நேரத்தை பார்த்து விட்டு தோழனை முறைத்திட கண்களால் மன்னிப்பு இறைஞ்சியவனை ஏது செய்திட.

“ஆறர மணிக்கு வர சொன்னா இப்போ தான் வருவியாடா..?”

“சாரி..சாரி..மச்சி..சரி எதுக்குடா இப்போ அவசரமா வர சொன்ன..”

“அது ஒன்னுல்ல நம்ம வெப் சீரிஸ்ல என்ன ரிவீல் பண்றது அடுத்த எபிசோட்லன்னு சொன்னல..அத கொஞ்சம் தள்ளிப் போடேன்..”

“டேய் என்னடா இது திடுதிடுப்புன்னு..ஆனா எனக்கும் அந்த ஐடியா தான்..உன்னோட ஐ கான்டெக்டுக்கு எக்கச்சக்க வரவேற்பு..அதான் அத கன்டினியூ பண்ணலாம்னு தோணுச்சு..”

“சரி..அப்போ நல்லதாப் போச்சு..அப்டியே பண்ணிடு..இன்னும் ஆறு எபிசோட்ஸ்ல முடிஞ்சுரும் தான..”

“ஆமாடா..ஆமா..”

“அப்போ சரி..ஆனாலும் உனக்கு ஓவர் பயம் மச்சீ..உன்ன கண்டுபுடிச்சிருவாங்கன்னு..”

“யேன் அப்டி சொல்ற..?”

“பின்ன எதுக்கு ப்ரவுன் கலர் லென்ஸ் போட்ற..”

“அது அப்டி தான் டா..சரி தேவா கேரக்டர் கமிட் ஆகற மாதிரி எடுக்க மாட்டல்ல..”

“கவலப்படாத டா..எந்த தப்பான சீன்ஸும் வராது..வெறும் ஐ கான்டெக்ட் லவ் சீன்ஸ் மட்டுந்தான்.அதுவும் நீ தெரியாம பாக்கற மாதிரி தான் வரும்..அதனால டோன்ட் வொர்ரி..”

“ஏதாவது சீன் போட்டன்னு வை..அப்றம் இருக்கு உனக்கு..”

“சரி..சரி..ஆனாலும் நீ ரொம்பத் தான் பண்ற..பட் நல்லா நடிக்கிற டா..அதுவும் ஹீரோயின் க்ராஸ் ஆகி போனப்றம் தேவா தனியா லவ்வ பீல் பண்றப்போ கண்ல வருமே அந்த எக்ஸ்ப்ரெஷன்..ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க..”

“சரி..சரி…அந்த கதய விடு..” என்க அவர்களின் உரையாடல் வேறு பேச்சுக்கு தாவியது.

நேரம் இரவு ஒன்பது மணியை தாண்டிக் கொண்டிருக்க தன் வண்டியை வீட்டின் அருகே நிறுத்தியவனின் பாதங்களோ பக்கவாட்டாய் திரும்பிட விழிகள் தர்ஷினியின் வீட்டின் வாயிலைத் துழாவியது.

அவ்வப்போது தூரத்தில் இருந்து அவளைக் காண கிடைத்திடும் ஆடவனுக்கு.

இன்றும் அதே எதிர்பார்ப்பில் விழிகள் தேடிட அவனின் எதிர்பார்ப்பு புரிந்தது போல் ஏதோ கத்திக் கொண்டு வெளியே வந்தவளை கண்டதும் அவனிதழ்கடையோரம் துளிர்த்தது சிறு புன்னகை.

ஹெல்மெட்டை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு சாவகாசமாய் தன் வண்டியில் அவன் அமர்ந்திட தெளிவாய் பார்க்க முடிந்தது, அவளை.

இடுப்பில் கை குற்றிய படி வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளை ஒற்றைக் கண் சுருக்கி தலை சரித்து நோக்கிய ஆடவனின் சிகை வீசிச் சென்ற காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தது.

தன்னை யாரோ பார்ப்பது போன்று இயல்பான உணர்வு அவளைத் தாக்க சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அத்தனை தூரத்தில் அவன் அமர்ந்திருப்பது கண்ணாடி அணியாது தெளிவாய் தெரியாதே.

தோளைக் குலுக்கிக் கொண்டு மீண்டும் வானத்தை பார்த்தவளுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

“தேவாக்குட்டீஈஈஈ…” எனக் கத்திட இங்கு இதயத் தாளம் எகிறியது ஆடவனுக்கு தான்.

                    *************

இன்று…

அந்த அறையினுள் பெரும் நிசப்தம் நிலவிற்று.

கடிகார முட்களின் சத்தம் மட்டும் நொடி தவறாது கேட்டுக் கொண்டிருக்க விழியெடுக்காது உறக்கத்தில் இருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் பயமாகிற்று தோழனுக்கு.

அவளின் தந்தையோ அழுது வீங்கிய கண்களுடன் அவளருகே தலை வைத்திருக்க அவருக்கு ஆறுதல் சொல்லக் கூட தெம்பில்லை, அவனுக்கு.

அவனின் தோழன் தான் யாரைத் தேற்றுவது என்று தெரியாது விழி பிதுங்கி நின்றிருக்க அவளின் தந்தையின் அலைபேசி ஒலிக்க பதற்றத்துடன் எடுத்துப் பார்த்தவருக்கு திரையில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டதும் கலவரம் மூண்டது.

நடுங்கும் கரத்தால் அலைபேசியை காதில் வைத்து பிடித்துக் கொண்டு அறையில் அவர் வெளியேறிட மெல்ல அவளருகில் நெருங்கி வந்தான்,

அவன்.

அவளின் கரத்தையாவது தன் கரத்தினுள் பொத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற சின்ன ஆசை உள்ளத்தில்.

ஆனாலும் என்ன உரிமை..?

நீண்ட விரல்களை இழுத்து தன் பாக்கெட்டினுள் இட்டுக் கொண்டவனுக்கு விழிகளில் அவள் நிலை கண்டு கொஞ்சம் நீர் கோர்த்தது.

இமை சிமிட்டி தடுத்துக் கொண்டான் கண்ணீர் வழிவதை.

மெல்ல அவளின் காதருகே குனிந்தவனின் இதழ்கள் மென்மையாய் உச்சரித்து ஓய்ந்தது,

சில வார்த்தைகளை.

“பயப்டாத..நா பக்கத்துல இருப்பேன் எப்பவும்..” மெல்லிய குரலில் அவன் ஒப்புவித்த வார்த்தைகள் அவளின் செவியை அடைந்தாலும் அதை எங்கனம் அவள் கேட்டிட.

அதற்குள் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த அவளின் தந்தையின் முகம் இருண்டு கிடக்க அடுத்த ஓரிரு நொடிகளுக்குள் புயல் போல் அறைக்குள் நுழைந்திருந்தான்,

இன்னொரு ஆடவன்.

வந்தவனின் பார்வை சுற்றியிருந்தவர்களையும் உறக்கத்தில் இருந்தவளையும் அற்பமாய் தழுவிட அதில் சினம் ஏறியது,

அவனுக்கு…

அவளின் அவனுக்கு…

அவளருகே வந்து நின்றவனோ அவனின் தோழனைப் பார்த்து ” முருகா..இவ எப்டி இருக்கா..?” என்று சாதாரண குரலில் கேட்டிட அதில் இன்னும் ஆத்திரம் கிளம்பியது இவனுக்கு தான்.

“மாப்ள..இப்போ பரவால..” என்றது அவளின் தந்தை தான்.

அவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு மகளுக்கு இப்படி ஆகியதை எண்ணி உள்ளுக்குள் அத்தனை அலைப்புறுதல்.

“அங்கிள்..இந்த மாப்ள உறவு முற எல்லாம் தயவு செஞ்சு வேணாம்..ஏன்னா இதுக்கப்றமும் உங்க பொண்ண கல்யாண பண்ணிக்கிற அளவு எனக்கு பரந்த மனசு கெடயாது..” சாகவகாசமாய் சொல்லி முடிக்க அவன் முகத்தில எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லை.

“மாப்ள..” அவளின் தந்தை நடுங்கிய குரலில் அழைத்திட அதை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை, அவன்.

“கௌதம்ம்ம்ம்ம்..”

“என்ன முருகா..சும்மா சவுண்ட் விட்ற வேலயெல்லாம் என்கிட்ட வேணா..கற்ப பறிகொடுத்த பொண்ணுக்கு வாழ்க்க கொடுக்குற அளவு நா ஒன்னும் கொறஞ்சு போய்டல..”  வார்த்தைகளை முடிக்கும் முன்னே அவனின் சட்டையை பிடித்து முகத்தில் ஓங்கிக் குத்தியிருந்தான்,

அவன்.

அந்த தாக்குதலை கௌதமுமே எதிர்பார்த்து இருக்க மாட்டான் போலும்.

“முருகா..உன் ப்ரெண்ட..” என்று சொல்லி முடிக்கும் முன்னமே மீண்டும் ஓங்கி அறைந்திருந்தான், கன்னத்தில்.

அப்படி ஒரு ஆக்ரோஷம் அவனின் முகத்தில்.

“என்னடா சொன்னா..என்னடா சொன்ன..இன்னொரு வார்த்த அவள பத்தி பேசின..தொலச்சிருவேன்..கற்பு..ஹான்..அது என்னடா கற்பு..அது மனசுல தான் இருக்கு..அத மொதல்ல புரிஞ்சிக்க..வந்துட்டாரு அவள கொற சொல்ல..அவள பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லடா…இடியட்ட்ட்..கன்ட்ரோல் யுவர் வர்ட்ஸ்…இன்னும் ஒரு வார்த்த பேசுன” கத்தியவாறு அவனின் சட்டையை பிடித்து உலுக்கியவாறு பேசியவனோ அவனை முன்னே இழுத்து படாரென பின்னே தள்ளி விட முதுகு பலமாய் மோதியது, சுவற்றில்.

“இங்க பாரு..நா ஒன்னும் தப்பா சொல்லல..அவ கற்பு இல்” கௌதம் தன் பிடியிலேயே நின்றிட மீண்டும் ஒரு அறை பளாரென கன்னத்தில்.

கௌதமின் சிவந்த கன்னத்தில் அவனின் ஐ விரல்களும் தடம் பதித்து விட்டு மீண்டன.

அவனின் குரல்வலையை இறுக்கிப் பிடித்திட இங்கு பயம் தொற்றிக் கொண்டது தோழனுக்கு தான்.

“மச்சீ..விட்றா..விட்றா..செத்துரப் போரான்..மச்சீ..” என்று கத்தியவாறு அவனின் கைகளை அகற்றப்பார்த்திட

ம்ஹும்..

இன்னும் இறுக்கித் தான் பிடித்தன அவனின் விரல்கள்.

கௌதமும் அவனின் கரத்தை விலக்கப் போராடிட அதிலும் மேலும் கோபம் வரப்பெற்று இன்னும் நெருக்க அவளின் தந்தைக்கும் பயம் வந்திற்று.

“தம்பீ..வேணா தம்பீ..தம்பி விடுங்க..” அவரின் அவனின் தோற்பட்டையை பற்றிட நண்பணிடம் காட்டிய உதறலை இவரிடம் காட்ட முடியவில்லை அவனால்.

வயதில் மூத்தவர் ஆயிற்றே.

முறைப்பு தேங்கிய விழிகளுடன் அவனின் கழுத்தில் இருந்து கரத்தை அகற்றிட அவன் விட்ட கணமே பெரும் இருமல் வெளி வந்தது கௌதமில் இருந்து.

அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்து கௌதம் இரும அதைப் பார்த்தும் சற்றும் இளக்கம் இல்லை அவன் மனதில்.

தோழன் தான் பதறிக் கொண்டு அருகே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவனிடம் நீட்டப் பார்த்திட அதை உணர்ந்தவனின் விரல்கள் போத்தலைப் பற்றி தன் வாயிற்குள் சரித்திட கௌதமின் விழிகள் அவனிடம் இறைஞ்சி நின்றன,

நீர் கேட்டு.

ஓரவிழியால் கௌதமை பார்த்தவாறு அண்ணாந்தவாறே நீரை தன் வாயிற்குள் சரித்துக் கொண்டிருந்தவனுக்கு மனிதாபிமானம் சற்றே எட்டிப் பார்த்திருக்க வேண்டும்.

பாதி குடித்து விட்டு போத்தலை மூடி தரையில் அமர்ந்திருந்தவனின் மடியில் போட்டவின் விழிகளில் பெருமளவு நிரம்பியிருந்தது,

அலட்சிய பாவமே.

அவளின் தந்தை அசையாது நின்றிருக்கவே அவனுக்கு ஏதோ ஒன்று புரிவது போல்.

ஆனாலும் தெளிவாக ஊகித்துக் கொள்ள இயலவில்லை.

கௌதமோ சுவற்றை பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்றிட அவளின் தந்தையோ அவனிடம் கை கூப்பி ” நீங்க போங்க சார்..கல்யாணம் நடக்காது..இப்டி பட்ட ஒருத்தனுக்கு என் பொண்ண கட்டிக் கொடுக்க நா விரும்பல..” என்றிட இவனுக்குத் தான் விழிகள் விரிந்தன.

கெந்திய நடையுடன் கௌதம் அந்த அறையில் இருந்து வெளியேறிட இவனின் தோள் சாய்ந்து அழுதே விட்டிருந்தார்,

அவளின் தந்தை.

மகளைப் பெற்ற அப்பாவின் மனநிலைகைளை தனக்கும் மகள் பிறந்த தானும் தந்தை எனும் ஸ்தானத்தை அடையும் வரை யாராலும் உணர்ந்து கொண்டிட இயலாது என்பதே நிதர்சனம்.

அவனின் கரங்கள் அவரின் தோளை அழுந்தப் பற்றியது.

அழுத்தி அழுத்தி மொழியின்றி ஆறுதல் வார்த்தைகளை அவரினுள் கடத்த முயன்றது.

ஓரிரு நிமிடங்கள் கடந்த பின்னர் அவர் இயல்புக்கு மீள அவரை அமர வைத்து விட்டு நிமிர்ந்தவனின் மனதில் தீர்க்கமாய் தெளிவாய் ஒரு முடிவு.

“அங்கிள்..” என்றவனின் குரலில் அசைக்க முடியதா ஓர் உறுதி.

அவனின் குரல் கேட்டு தலை நிமிர்த்தி அவர் பார்த்திட நேர்ப்பார்வை பார்த்தன அவனின் விழிகள்.

“அங்கிள் உங்க பொண்ண எனக்கு கட்டித் தர்ரீங்களா..? கண் கலங்காம பாத்துக்குறேன்..” சிறு புன்னகையும் தன்மையாய் அதே நேரம் உறுதியாய் கேட்டவனைக் கண்டதும் அவருக்கு பெரும் அதிர்வே.

“தம்பீஈஈஈஈஈஈ…” அவரின் குரல் பிசிர் தட்டியது. சத்தியமாய் இப்படி ஒரு கேள்வியை அவனிடம் இருந்து எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் அந்த மனிதர்.

“எதிர்ப்பார்த்தது தான்..” என்பது போல் சிறு புன்னகையை இழுத்து ஒட்டிக் கொண்டன, அருகே இருந்த தோழனின் இதழ்கள்.

“நெஜமா தா அங்கிள் கேக்கறேன்..வெளயாடல..” சிவப்பேறிய விழிகளுடன் அவன் கேட்டிட்டாலும் இதழ்களில் உதித்திருந்த புன்னகை மட்டும் மாறவேயில்லை.

மறுப்புச் சொல்ல இயலவில்லை அவரால்.

மறுத்து என்ன காரணம் தான் சொல்லிட..?

இவனைப் போன்ற ஒருவனைத் தான் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் முன்பு அடிக்கடி அவனைக் காணும் போதெல்லாம் எழுவது உண்டல்லவா.

அவன் அங்கிருந்து சென்றவுடன் அவனைக் காண கிடைக்காததில் அவனைப் பற்றிய எண்ணங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்ததே தவிர அழிந்து போயிருக்கவில்லை.

அதிலும் அவனுக்கு திருமணம் முடிந்து விட்டதாய் வதந்தி வேறு உலா வந்திருக்கவே தான் மகளுக்கு வேறிடம் பார்த்திருந்தார், அவர்.

“அங்கிள் என்ன சொல்றீங்க..?” சிந்தனையை கலைத்து செவியை ஊடுருவிய அவன் குரலில் தானாகவே அசைந்தாடியது, அவரின் சிரசு.

புன்னகையுடன் அவருக்கு நன்றி சொன்னவனின் பாதங்கள் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தன.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி அவளின் வதனத்தையே அவன் பார்த்திருக்க அந்த விழிகளில் கசிந்திட்ட காதலைக் கண்டதும் அவளின் தந்தையின் மனதில் என்னவித உணர்வென்று அவராலே பிரித்தறிந்திட இயலவில்லை.

பேன்ட் பாக்கெட்டினுள் விரல்களை இட்டு அவளுக்கென வாங்கி வைத்த வெள்ளிச் சங்கிலியை கையிலெடுக்க அதில் இருவரினதும் முதலெழுத்து பொறிக்கப்ட்ட பென்டன் தொங்கிக் கொண்டிருந்தது.

அவளுக்கு சிறிதாய் ஒற்றையாய் வெள்ளிச் செயின் அணிவது பிடித்தமானது என்று தெரிந்த பிறகு அவனின் முதல் மாத சமபாத்தியத்தில் அவளுக்கென வாங்கி வைத்தது இது.

“அங்கிள்..” என்று அவளின் தந்தையை அழைத்திட அனுமதி கேட்டு நின்ற அவனின் விழிகளைக் கண்டதும் அவரிதழ்களில் எழுந்தது சிறு புன்னகை.

“கெட்டதிலும் ஒரு நல்லது இதுவா..?” என்கின்ற எண்ணம் தான் அவர் மனதில்.

அவளின் நிலை கண்டு மனம் வலித்தாலும் அதற்கு மீறிய சந்தோஷம் அவனுள்.

அவளாய் இருந்தவள் அவனின் அவளாய் ஆகப் போகிறாள் அல்லவா..?

தன் பர்ஸில் இருந்த தந்தையின் புகைப்பட்டத்தை ஒரு கணம் பார்த்து விட்டு கடவுளிடமும் கோரிக்கைகளை முன் வைத்தவனாய் அந்த வெள்ளிச் சங்கிலியை அவள் கழுத்தில் மாட்டிட்ட மறு கணம் அவளின் கரங்களை அழுந்தப் பற்றிக் கொண்டது,

அவனின் ஒற்றைக்கரம்.

சுழலில் மாட்டி அலைந்து திரிந்து கரை சேர்ந்த உணர்வு தான் அவனில்.

அவன் நெகிழ்ந்திருக்க அந்த நெகிழ்வில் புன்னகைத்தவாறு அவனின் தோளில் கை போட்டான், அவனின் தோழன்.

“மேடம்ம்ம்ம்ம்..”

“ம்ம்..” என்றவரின் விரல்கள் விழிகளோரத்தில் சேர்ந்திருந்த நீரை சுண்டி விட்டுக் கொண்டது.

” என்னமோ பண்ணுது மேடம் மனசுக்கு..ரொம்ப நல்ல ஆள் தான அவரு..இப்டி ஒரு புள்ள இருக்க அம்மா அப்பா கொடுத்து வச்சுருக்கனும்..” சொன்னவளின் குரலில் அத்தனை சிலாகிப்புத் தன்மை.

“அது சரி தான்மா..ரொம்ப ரொம்ப கொடுத்து வச்ச ஆளுங்க மா..” சொல்லும் முன் ஏனோ தொண்டை அடைத்தது.

அவரிடம் பேசி விட்டு தன் நோட்டை தட்டியவாறு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள்,

கயல்விழி.

அவள் வாயிலைத் திறந்து வெளியேறும் சமயம் சீறிப் பாய்ந்து கொண்டு வந்தது சித்தார்த்தின் என்.எஸ்.டூ ஹன்ட்ரட்.

அவளோ அதன் வேகத்தில் சமைந்து நின்றிருக்க அவனோ அவளைக் கவனிக்கவில்லை.

ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவனின் முகம் அவளுக்கு தெளிவாய்த் தெரியவுமில்லை.

காணாமல் போனது தான் விதியோ..?

அவளோ மறு கணமே விரைந்து நடக்கத் துவங்கிட எண்ண அலைகள் சாரதா சொன்ன நபரை பற்றியே சுற்றி வந்தன.

மறுநாள் காலையில் சீக்கிரமாகவே விழிப்புத் தட்டியிருந்தது, தர்ஷினிக்கு.

இன்று அவனின் பிறந்த நாள் என்பதாலோ..?

அலைபேசி திரையில் அவள் வைத்திருந்த முகப்புப் படத்தில் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டிருந்தான்,

அவன் கணவன்.

எப்போதே அவனின் அலைபேசியில் இருந்து அவனுக்கு தெரியாமல் அவளினதுக்கு அனுப்பிக் கொண்ட புகைப்படம் தான்.

சாதாரணமாகவே ரசிக்கத் தோன்றுவதாய் இருக்க நேசம் வழியும் விழிகளுக்கு தப்பிடும் வாய்ப்பு இல்லையே.

காற்றில் சிகை அசைந்தாட பக்கவாட்டாய் ஒரு கையை பான்ட் பாக்கெட்டில் இட்டபடி அவன் நின்றிருந்த தோரணையும் கடைவிழியின் ஊடு அவன் எங்கோ பார்த்திருப்பதும் ஏனோ அவளை அத்தனை கவர்ந்திருந்தது.

கறுப்பு நிற டெனிமும் கரு நீல நிற முழுக்கை சட்டையும் அணிந்து முட்டி வரை கையை மடித்து விட்டு இருந்தவனின் மறு கரம் அலைபேசியை தாங்கியிருந்தது.

என்றும் பார்ப்பது தான் என்றாலும் அனுதினம் புதிதாய்த் தான் தெரிகிறான் அவள் விழிகளுக்கு.

“என்னன்னாலும் இந்த ஆளு இவ்ளோ அம்சமா இருக்க கூடாது பா..ரொம்ப க்யூட்டான அர்ஜுனா இருக்குதே மனுஷன்..” தனக்குள் முணுமுணுத்தவளுக்கு விழிகளை அகற்றிடத் தான் இயலவில்லை.

ஓரிரு நிமிடங்கள் அசையாத கருமணிகள் அவன் விம்பத்தை தமக்குள் தேக்கி வைத்திருக்க தாய் அழைக்கும் சத்தத்திலயே நிகழ் உரைத்தது அவளுக்கு.

“ப்ரீஸ் ஆகித் தான் நிக்கறோம்..” நெற்றியில் அறைந்தவாறு போர்வையை விலக்கி விட்டு எழுந்தவளோ போர்வையை மடித்து வைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்திட ஒலித்தது அழைப்பு மணியின் சத்தம்.

தொடரும்.

🖋️அதி…!

2023.08.29

Advertisement