Advertisement

சொல்லாமல்…!

மௌனம் 12

சில வருடங்களுக்கு முன்பு…

அருகே இருந்த நீர்க்குழாயின் அருகே சென்று திருகை திறந்திட பாய்ந்தோடிய நீர் அவளின் கையை நனைத்திட அதி வேகத்துடன் தன் முகத்துக்கு விசிறி அடித்துக் கொண்டன,

அவளின் கரங்கள்.

மென்மையாய் எடுத்து தடவிக் கொண்டால் தன் தூக்கம் தூரப் போகாது என்பது அவளுக்குத் தெரியாதா..?

விழிகளை இறுகப் பொத்தியிருக்க விசிறிய நீர்த்துளிகள் அவளின் முகத்தில் படர்ந்திருந்தன.

அவளுக்கு சற்று தள்ளித் தான் நின்று கொண்டிருந்தான்,

தேவா.

எத்தனை முயன்றும் அடிக்கடி தர்ஷினியின் புறம் திரும்பி ஒரு வித ரசிப்புத் தன்மையுடன் ஆராயும் அவன் விழிகளை தடுக்கத் தெரியாமல் தடுமாறியபடி.

தலையைக் கோதிக் கொண்டு எதேச்சையாக வேறு புறம் பார்வை தாவியிருக்க அவளுக்குப் பின்னே தூரத்தில் இருந்த கூட்டமொன்று அவளைப் பற்றி ஏதோ கதைத்து தமக்குள் சிரிப்பது புரிந்திட இத்தனை நேரம் மெலிதான சிரிப்பை தாங்கியிருந்த ஆடவனின் அதரங்கள் இறுகிற்று.

அதிலும் கிசுகிசுத்தபடி அலைபேசியை கையில் எடுக்க அவனின் நிலை..?

சிவப்பேறிய விழிகளில் அப்படியொரு அனல்.

தன் அழுத்தமான விரைவார காலடிகளுடன் அவளின் பின்னே வந்து மூவடி இடைவெளி விட்டு நின்றிட பாதச் சுவடுகளின் சத்தத்தில் தன் நெற்றியில் இருந்த வியர்வைத் துளிகளை புறங்கையால் துடைத்த படி திரும்பிட அங்கு ரௌத்திரமான முகத்துடன் நின்றிருந்த ஆடவனைக் கண்டதும் விரிந்தன,

அவள் விழிகள்.

“எதுக்கு இங்க வந்த..பசங்க இருக்குற எடம்னு தெரியாது..” நறநறத்த பற்களுடன் வார்த்தைகளை அவன் வார்த்தைகளை உதிர்த்திட அடியும் புரியாது நுனியும் புரியாது விழித்தது,

அவள் தான்.

“உன்னத் தான் கேக்கறேன்..இங்க எதுக்கு தனியா வந்த..

அறிவில்ல..?” மலங்க மலங்க தன்னை விழிகளால் உரசிய படி நின்றிருந்தவளைக் கண்டதும் கொஞ்சமாய் தணிய முயன்ற கோபத்தை இழுத்துப் பிடித்த படி பேசிட அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, அவளுக்கு.

“இல்ல..கேர்ள்ஸ் தனியா வருவ..வருவாங்க தான..அதான்..”எச்சில் விழுங்கிய படி விழிகளை முற்றாய் அமிழ்த்திக் கொண்ட மிரட்சியுடன் அவள் சொல்ல கோபம் மறைந்திட தெளித்து விட்டது போல் இரசனைச் சொட்டுக்கள், ஆடவனின் விழிகளில்.

“இங்க பாரு..இதுக்கப்றம் தனியா வந்த..இருக்கு உனக்கு..வர்ரதுன்னா யார வேணா கூட்டிட்டு வா..தனிய வந்த அப்றம் நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..”

“சரி சீனியர்..இதுக்கப்றம் உங்க முன்னாடி தனியா வர மாட்டேன்..சீனியர்..”

“என்ன..?”

“எல்லாரும் பாக்கறாங்க சீனியர்..இப்டி பொது எடத்துல வச்சி திட்ட வேணாமே..நா உங்க முன்னாடி தனியா வந்ததுக்கு இப்டி எல்லார் முன்னாடியும் திட்ட வேணாம் ப்ளீஸ் சீனியர்..”

“இல்ல…அதுக்கு..”என்றவனின் குரல் பாதியிலேயே தடைப்பட்டு நின்றது.

அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று புரிந்து கொள்ளாமல் தனக்கென்று தனியாய் அவள் ஒரு காரணம் வகுத்துக் கொண்டிருப்பது புரிய விரிய முயன்ற இதழ்களுக்கு அணைகட்டியது, மனம்.

“சரி போஓஓஓஓ..” அவன் முயன்று இயல்பாக்கிக் கொண்ட குரலில் சொல்லிட எதுவும் புரியாது நகர்ந்திருந்தாள், அவள்.

காரணத்தை சொல்லியிருக்கலாம் தான்.

தனக்கே ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம் என்பது புரியாதவிடத்து அவள் கேட்டால் என்ன பதில் சொல்ல இயலும் ஆடவனால்..?

“பசங்க இருக்காங்க..” இப்படியேனும் சொல்லியிருக்கலாம்.

சொல்லாமல் விட்டது தான் விதியோ..?

ஏனோ அவளின் கசங்கிய முகம் பிடிக்கவில்லை, ஆடவனுக்கு.

சொல்லி விடலாம் என்று எண்ணியவனுக்கு என்றுமில்லாமல் வந்து ஒட்டிக் கொண்ட தயக்கம் இம்சையாய்.

தன்னில் இருந்து ஒரு இருபது அடி தூரத்தில் நடந்து கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு மனம் உந்தித் தள்ளியது.

“தேவா..” மென்மையும் கனிவுமாய் இதழ்கள் சத்தமிட்டிருக்க  அவளை நோக்கி நீண்டிருந்த கரத்தில் வீற்றிருந்த மோதிரம் ஒளித்துகள்களின் மோதலில் பிரகாசித்தது.

அவன் அழைத்திடவும் மண்டபத்தின் உள்ளே உயர் சத்தத்தில் பாடலொன்று ஒலிக்கவும் சரியாய் இருக்க அவன் அழைத்தது அவள் செவிகளை அடையவில்லை.

தான் அழைத்தும் திரும்பாது முன்னே நடப்பவளின் செயலில் புருவங்கள் முடிச்சிட்டாலும் தனக்கு பக்கத்தில் இருந்த சுவரில் மாட்டியிருந்த ஸ்பீக்கரில் இருந்து பரவிய சத்தம் அவனின் சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்க இடுப்பில் கை குற்றிவனின் இதழ்கள் மெல்லமாய் விரிந்து கொடுத்தது.

அவனோ விழியெடுக்காது தன் விழிகளை சுருக்கி அவளையே பார்த்துக் கொண்டிருக்க இயல்பான உணர்வின் தாக்கத்தால் பட்டென அவள் பின்னே திரும்ப முனைந்த கணம் சுதாரித்துக் கொண்டான், ஆடவன்.

பின்னந்தலையை அழுந்தக் கோதிய படி இதழ்களில் ஓடிய சிறு சங்கடப் புன்னகையுடன் அவன் மறுபுறம் திரும்பியிருக்க பின்னால் திரும்பியவளுக்கு காட்சியளித்தது தனக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்த ஆடவன் தான்.

விரல்கள் பின்னந்தலை சிகையினுள் விரல் நுழைத்து அழுத்தமாய் தேய்த்தன சிரசை.

“ரிலாக்ஸ் தேவா..” என்று இதழ்கள் உச்சரித்துக் கொண்டிருக்க பாதங்கள் நிலையாக நில்லாமல் தரையை முத்தமிட்டு மீண்டபடி இருந்தது.

இதயம் படபடக்க இத்தனை நேரம் கேசத்தை கலைத்துக் கொண்டிருந்த விரல்கள் மேலெழுந்து உச்சந்தலை சிகையை இறுகப் பற்றி வலிக்காமல் நெறித்திட மறு கரத்தின் பாதி ஒரு விழியையும் மீதி நெற்றியையும் மறைத்திருக்க அத்தனை ரசிக்கும் படியான விதத்தில் ஆடவனின் செயல்.

விரிந்த இதழ்களில் புன்னகை ஓடிட அந்த தாடி அடர்ந்த கன்னங்களையும் ஒரு கணம் தடவி விட்டு மேலெழும்பி வந்தது, வதனத்தில் பதிந்திருந்த ஆடவனின் கரம்.

அவளோ தன் நெற்றியில் அறைந்தவாறு முன்னே திரும்பி நடக்க தேவாவின் நடத்தையில் ஏனோ சிறு கோபம் அவன் மீது.

அவளுக்கும் புரியாமல் இல்லை, பின்னே இருந்தவர்களை தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது.

அதற்கு அவளால் என்ன செய்திட இயலும்…?

கண்டு கொள்ளாமல் கடந்திடுவது தான் அவளைப் பொறுத்த வரையில் சமயோசிதம்.

எதிர்த்து நின்றிடும் தைரியம் இல்லை.

துணைக்கு நின்றிடவும் எவரும் இல்லாத பொழுது கண்டு கொள்ளாமல் கடந்திடுவது தானே முறை..?

அதைத் தானே அவளும் செய்தாள்.

எந்த இடத்திலும் இப்படியான ஆட்கள் இருக்கத் தானே செய்கிறார்கள்…?

எல்லோரிடமும் வம்பு வளர்த்திட இயலாதே.

அவளின் பாதுகாப்பு தானே அவளுக்கு முக்கியம்.

சிலர் இயல்பிலேயே தைரியசாலிகளாக இருப்பார்கள்.

ஆனால், அவள் அப்படி இல்லை.

கொஞ்சம் பயந்த சுபாவம்.

அதனாலோ என்னவோ இவற்றை எல்லாம் முன்பிருந்தே கண்டு கொள்வதில்லை.

ஆனால்,தேவாவின் எண்ணம் வேறல்லவா..?

அதை அவள் உணர்ந்திடும் சாத்தியம் இல்லையே.

“ஒருவேள அந்த பசங்க இருக்குறதால தனியா வர வேணான்னு சொல்லி இருப்பாரோ..?”

“ச்சே..அப்டிலாம் இல்ல..தனக்கு சம்பந்தப்படாத விஷயத்துல அவரு தலயிட்ரது இல்லன்னு தான் அன்னிக்கு ப்ரெண்ட் கிட்ட சொல்லிட்டு இருந்தாரே..”

“ஆனா அன்னிக்கி ஆர்த்திக்கி ஹெல்ப் பண்ணாருன்னு சொன்னாளே..”

“ஆமா..அது அவர் அத்த பொண்ணு..நீ யாரு..சும்மா கற்பன பண்ணிக்காத..”

“ஆமா..ஆமா..”என்றவளாய் தனக்கே பதில் கூறிக் கொண்டு அவள் நடந்திட தூரத்தில் நின்றிருந்தவனின் பார்வை அவள் மீது தான்.

வேறு பெண்ணுக்கு என்றாலே கோபம் வரும் அவனுக்கு.

இதில் அவனின் அவள் என்றால்..?

இன்னும் உணரத்தான் இல்லை.

உரிமைப் போராட்டம் எப்போதோ உயிர்ப்பெற்றிருந்தது.

உரிமையுணர்வு அவனின் இதயத்தில் கொடி நட்டிருப்பதை அவனே புரிந்து கொள்ளவில்லை, என்பது தான் நிதர்சனம்.

விழா இனிதே நிறைவுற்றிருக்க மாணவர் கூட்டம் கலைந்து செல்ல ஓரிருவரே அந்த மண்டபத்தில் தரத்திருந்தனர்.

அனைவரையும் வெளியேறச் செய்து கதவை அடைக்கும் எண்ணத்துடன் அவன் உள்ளே வந்திட வாயிலின் அருகே போடப்பட்டிருந்த இருக்கைகளிடையே தர்ஷினி துழாவிக் கொண்டிருக்க அவளின் செய்கையும் அதற்கான காரணமும் புரிய தன் பாக்கெட்டில் இருந்த கீ செய்னை இன்னும் பத்திரப்படுத்திக் கொண்டன, அவனின் விரல்கள்.

பாலாவுக்கு தோழனின் செய்கையின் காரணம் தெள்ளத் தெளிவாய் புரிந்ததன் விளைவாய் மெல்ல புன்னகை எட்டிப்பார்த்தது, இதழ்களில்.

கிஷோர் தான் நடந்தது அனைத்தையும் எத்தி வைத்திருந்தானே.

“கார்த்தி..இங்க தான்டி விழுந்திருக்கும்..ப்ச்ச்..பாரேன்..” தனக்குள் நொந்தவளாய் கொஞ்சம் சத்தமாகவே அவள் முணுமுணுத்திட அவனின் செவியில் வந்து மோதிச் சென்றாலும் எந்தவொரு எதிர்வினையும் தந்திடவில்லை, ஆடவன்.

தர்ஷினிக்கும் சரி..

கார்த்திகாவுக்கும் சரி..

பின்னே வந்து பாலாவும் தேவாவும் நின்றது, கருத்தில் பதியவில்லை.

யாரோ கடந்து செல்லும் போது கேட்ட நடைச்சத்தம் என தம் வேலையில் மூழ்கி இருந்தனர்.

“யாராச்சும் எடுத்திருப்பாங்களோ..”

“அதான்டி எனக்கும் தோணுது..காலைல திரும்ப ஹால க்ளீன் பண்ணல..அப்டின்னா யாரு கைலயாவது மாட்டியிருக்கனும் தான..”

“தர்ஷினி..யாரு காலுக்காவது மாட்டி நசுங்கி இருக்குமோ..?”

“வாய மூடுடி..நா காலைலயே வந்து பாத்தேன்..பர்ஸ்டா..அப்போவே இருக்கல..நேத்து நா தான் கடைசியா ஹால்ல இருந்து வந்ததும்..”

“நல்லா யோசுச்சு பாரு..உனக்கு அப்றம் வந்த ஒருத்தர் தான் கண்டிப்பா எடுத்துருக்கனும்..இல்லன்னா மார்னிங்க் உனக்கு ஏர்லியா வந்துருக்கனும்..”

“இல்ல..நா தான் சாவிய வாங்கிட்டு வந்து தெறந்தேன்..அப்போ எனக்கு அப்றம் நேத்து ஹால்ல இருந்து வந்தவங்க தான் எடுத்துருக்கனும்..நேத்து நா பேக் அ வச்சிட்டு போற டைமும் கீசெய்ன் இருந்துச்சு..திரும்ப எடுத்துட்டு வீட்டுக்கு போற டைம் தான் காணாம போயிருந்துச்சு..அதான் நா பேக் எடுக்கும் போது கீழ விழுந்துருக்கும்னு கன்பார்ம் பண்ணி சொன்னேன்..”

“ஆ..அப்போ கன்பார்மா உனக்கு அப்றம் நேத்து கெளம்பி போன யாராவது தான் எடுத்து இருப்பாங்க..யோசிச்சு பாரு..”

“அது சரி தான்டி..அதுல என்னோட பேர் தான போட்டுருக்கு..அப்டி எடுத்தாலும் எந்த யூஸும் இல்ல..ஒரு வேள தேவான்னு பேர் போட்ருக்குற யாராவது எடுத்துருப்பாங்களோ..அட நம்ம சீனியர் தேவாவோ..?” சிறு புன்னகையுடன் கூறிட பின்னே நின்றிருந்தவனின் விழிகள் விரிந்திட தோழனின் செயலில் புதிதாய் முளைத்திட துடித்த புன்னகையை அடக்கிக் கொண்டன பாலாவின் இதழ்கள்.

“யெதே சீனியர் தேவாவா..?”

“கத்தாதடி எரும..நா சும்மா சொன்னேன்..தப்பித் தவறி காதுல கேட்டுச்சு கரடி மாதிரி வந்து கத்தும்..”

“மெதுவாடி..”

“ஆமால..சாரி சாரி..ஆனா கண்டிப்பா அது எடுத்துருக்காது..யேன்னா என்னோட பேர் தேவான்னு தெரிஞ்சதுல இருந்து அதுக்கு தேவாங்குற பேரே புடிக்காதுன்னு தோணுது..”

“அது சரி தான்..இதுக்கு மேல என்னால குனிஞ்சிகிட்டு இருக்க முடியாது..நீ தேடு..”

“சரி..சரி..ஆனா பாருடி யாரோ இத எடுத்துருக்காங்கன்னு மட்டும் உள் மனசு சொல்லிகிட்டே இருக்கு..”

“ஒரு வேள சீனியர் தேவாவோ..? அவர் தான உனக்கு அப்றம் அங்க இருந்து வந்தாருங்குற..தேவாங்குற பேர் இருக்குறதால வச்சிகிட்டு இருக்குறாரோஓஓஓஓ..”

“ச்சே..அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல..இதென்ன சினிமாவா..ப்ச்ச்..எங்க போயிருக்கோ..?”

“சரி விடுடி..வேறொன்னு செஞ்சிக்கலாம்..”

“ம்ஹும்..எனக்கு அது வேணும்..”

“ஏன்டி..?”

“அது ஸ்பெஷல் தேவா டி..”

“யெதேஏஏஏஏ..? என்னடி சொல்ற..?”

“ஒரு தேவா தான் நானு..மத்தது மை க்ரஷ்ஷு..” இவள் பாவமாய் சொல்ல பின்னே நின்றிருந்த தேவாவுக்கு மனதில் பொறாமை கொழுந்து விட்டெறிந்தது.

கோபத்துடன் தன் பின்னந்தலை சிகையை நெறித்துக் கொண்டவனின் இதழ்கள் அழுந்த மூடிக் கொண்டன.

“இது எந்த சீரியல் ஓர் மூவி..”

“அது புதுசா ஒரு வெப் சீரிஸ் போகுதே..அதுல வர்ர ஹீரோ பேரும் தேவால..”

“கருமம் புடிச்சவளே..அதுக்காகவா..?”

“ச்சே..அதுக்காகன்னு இல்ல..லைட்டா..ஒரு சீரோ பாய்ண்ட் சீரோ சீரோ சீரோ சீரோ சீரோ சீரோ “

“சரி…இந்த சம்பவம் எப்போ நடந்துச்சு..”

“அது..செம்ம ஹியுமரா செம்ம காமெடியா ஒரு கலாய் சீன் வரும்ல..ப்ரம் தட் மூமன்ட்..போர்த் எபிசோடு டி..”

“ஓஹோஓஓஓஓ..உனக்கு ஏத்த பேரா தான் வச்சியும் இருக்கானுங்க…”

“செம்ம கேரக்டர்…செம்ம ஆக்டிங்க்ல..ரொம்ப நல்லாருந்துச்சு பாக்குறதுக்கு..ரொம்ப நாளக்கி அப்றம் எனக்கும் ஒருத்தர் ஆக்டிங்க பாத்து க்ரஷ் வந்துருக்கு பா..”

“சர்தான்..சர்தான்..நானும் பாத்தேன்..நல்லா இருந்துச்சு..”

“ம்ம்ம்ம்ம்..பாரேன் இப்போ என்னாச்சுன்னு..கடவுளே என்னோட கீ செய்ன்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் தந்துரு..”

                       *************

இன்று…

பேரூந்தின் கம்பியில் தலைசாய்த்து வெளியே வெறித்த படி அமர்ந்திருந்தவளின் விரல்கள் மடியில் இருந்த பையில் தனக்கேற்றவாறு தாளமிட்ட படி இருந்தன.

அவனின் நினைவில் இதழ்கள் விரிந்திருக்க காற்றின் தயவில் வாரிய சிகையில் கொஞ்சம் மேலெழுந்து அசைந்து கொண்டிருக்க அதை அவ்வப்போது சரி செய்து கொண்டிருந்தது, அவளின் ஒற்றைக் கரம்.

பேரூந்தோ ஆட்களை ஏற்றிட தரிப்பிடத்தில் நின்றிருக்க தன் நெற்றி வியர்வையை கர்சீப்பால் துடைத்த படி வண்டியில் ஏறிக் கொண்டான்,யாதவ்.

சிவந்த தேகத்தில் வியர்வைத் துளிகள் ஏறிக் கிடக்க கொளுத்தும் வெயிலின் தயவில் முகமோ செந்நிறத்தை பூசிக் கொண்டிருந்தது.

அவன் பின்னே தோழனின் செயலை நொந்தவாறு தலையில் அடித்துக் கொண்டு பின்னூடு ஏறிக் கொண்ட குருவுக்கு தோழனின் செயல் துளியும் உவப்பானதாய் இல்லை.

“சொன்னா கேக்க மாட்டான்..இடியட்ட்ட்ட்ட்..” மனதுக்குள் அர்ச்சித்தவாறு நின்றவனின் பார்வை தர்ஷினியின் மீது ஒரு கணம் அழுத்தமாய் படிந்து மீண்டது.

அவளைப் பார்க்கும் போதே பாவமாய்த் தோன்றிற்று.

அவளும் எத்தனையைத் தான் தாங்குவாள்..?

நினைக்கும் போதே அவனில் இருந்து பெருமூச்சொன்று.

என்ன தான் கல்லூரிக் காலத்தில் தேவாவுடன் முட்டி மோதிக் கொண்டாலும் அவன் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இருந்ததில்லை.

ஒரு காரணம் அவனின் குணாதிசயங்கள் என்றால் மற்றையது,

தர்ஷினியின் மீதான அவனின் மௌனமான காதல்.

அந்த மௌனமான காதலின் மீது அவனுக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு இருந்ததுண்டு.

ஏனென்று தெரியவில்லை அவளைக் கண்டிடும் போது தானாகவே மாறிக்கொள்ளும் தேவாவின் செயல்களை இவன் கூட ஓரிரு முறை நின்று ரசித்ததுண்டு.

அது தான் தோழனை எதிர்த்து கேட்கச் சொல்லி மனதுக்கு கட்டளையிட்டிட எதிர்த்தவனால் தோழனின் செயலை தடுக்கத் தான் இயலவில்லை.

அவனோ யாரும் அறியாது அவளை ஒரு தலையாய் காதலித்து வந்து கொண்டிருந்தது யாதவ்வும் குருவும் அறிந்து கொண்டிட வேண்டும் என விதி எழுதி இருந்தது போலும்.

யாரைத் தான் விட்டது விதி..?

தர்ஷினி அமர்ந்திருந்த இருக்கையின் அருகே சென்று யாதவ் நின்று கொண்டிட அவளின் பார்வை அவனின் மீது ஒரு கணம் படிந்திட புருவங்கள் சுருங்கிற்று.

கல்லூரியில் கண்ட நினைவுகள் மனதில் எட்டிப் பார்த்தது போலும்.

அவனோ அவளைப் பார்த்து கடமைக்காக வலுக்கட்டாயமாய் புன்னகைத்திட அற்பமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு யன்னலுக்கு வெளியே தன் பார்வையை மேய விட்டாள், அவள்.

அவளுக்கு இதுவெல்லாம் பிடிப்பதில்லை.

“அவ லவ் பண்றது இருக்கட்டும்..பர்ஸ்ட் அவ உன்ன கண்டுக்குறளானு பாரு..அப்டி அவளோட பார்வ உன் மேல இன்ட்ரஸ்டா பட்டுச்சுன்னா கூட ஐ ஆம் தி லூஸர்..” சிவந்த விழிகளுடன் தான் நின்று கொண்டிருக்க சாவகாசமாய் இதழ்கடையோரப் புன்னகையுடன் முன்நெற்றி முடியை பின்னே தள்ளிய படி தேவா சொன்னது நேரம் தவறாது நினைவில் வந்திட இன்னும் இறுகிப் போனது, அவன் முகம்.

அவன் கூற்று சரியென்பதாய் ஒரு சின்ன எண்ணம் மனதின் ஓரம்.

பயணம் முழுவதும் அவளின் பார்வை யன்னலுக்கு வெளியேவே நிலைத்திருக்க அந்த முகத்தில் அடிக்கடி நினைவுகளின் ஆதிக்கத்தில் வந்து போன புன்னகையையும் விழிகளில் மின்னிய ரசனையையும் தெளிவாகவே படம் பிடித்துக் கொண்ட யாதவ்வின் மனதில் யோசனையில் துளிகள்.

அவன் நினைக்கும் ரகத்தில் இவள் உள்ளடங்க மாட்டாள் என கூக்குரலிட்டது,

உள் மனது.

பேரூந்து நெரிசலில் அவனுக்கு வியர்த்திட அந்த நிலையை அறவே வெறுத்தான், அவன்.

“பார்ன் வித் சில்வர் ஸ்பூன்..” என்பதால் பேரூந்தில் எல்லாம் சென்று பழகியதில்லை, சற்றேனும்.

நெற்றியை வியர்வையைத் துடைத்த படி முகத்தில் எரிச்சல் ரேகைகளுடன் நின்றிருந்த தோழனைக் கண்டதும் குருவின் மனதிலும் அப்படியொடு கோபம்.

முரணாய் முரண் பிடிக்கும் மனம் தானே இதற்கு காரணம்..?

மானசீகமாய் மட்டுமே நெற்றியை முட்டிக் கொள்ள முடிந்தது.

அதே நேரம்..

இறந்து போன கிரியின் மனைவியின் குடும்பத்தை சந்திக்கச் சென்றிருந்தனர், கதிரும் ஆதியும்.

அவனின் கொலைக்கான காரணத்தை கண்டறிந்திட வேண்டும் அல்லவா..?

கதவைத் தட்டிட அங்கு வந்து திறந்தது ஒரு வயதான பெண்மணியாய் இருக்க அது கிரியின் மனைவியின் தாயாக இருக்கும் என ஊகித்துக் கொண்டது, ஆதியின் மனம்.

இருவரும் மப்டியில் இருக்க புருவம் சுருக்கி பார்த்தார், அவர்.

“தம்பி நீங்க யாரு..?”

“அம்மா..நாங்க கிரிக்கு தெரிஞ்சவங்க..சீதா இருக்காங்களா..?”

என்றதுமே அவரின் முகத்தில் சடுதியாய் சில மாறுதல்கள் அவர்களின் வரவிற்கான பிடித்தமின்மையை வெளிக்காட்டி நின்றது.

“சீதா இல்ல..”

“எங்க போயிருக்காங்க..?”

“அது எதுக்கு உங்க கிட்ட சொல்லனும்..” கடுப்புடன் மொழிந்தவாறு கதவை அடைத்திட பார்க்க இருவரின் கெஞ்சலும் தடுத்து நிறுத்தியது, அவரை.

“அம்மா..அம்மா..ப்ளீஸ் மா..நாங்க உங்க கூட கொஞ்சம் பேசனும் மா..”

“…………”

“ப்ளீஸ் மா..”

“உள்ள வாங்க..” வெடுக்கென பதில் மொழிந்து விட்டு உள்ளே நகர்ந்திட ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அர்த்தப் புன்னகை சிந்தினர், இருவரும்.

கூடத்தில் அமர்ந்து தன் விழிகளை சுழலவிட்டு அந்த வீட்டை அளவிட்ட கதிரின் செயலை கனைப்புடன் தடுக்க முயன்று தோற்றான்,

ஆதி.

“சின்ன வீடு..ரெண்டு பெட் ரூம் தான் இருக்கும் போல..இந்த வீட்டு பொண்ண எப்டி அந்த பணக்காரன் கட்டிகிட்டு இருப்பான்..?” தனக்குள் முணுமுணுத்துவாறு கதிர் அமர்ந்திருக்க தன் நரைத்த தலைமுடியை அள்ளி முடிந்த படி கூடத்துக்கு வந்தார்,

அந்தப் பெண்மணி.

“சொல்லுங்க தம்பீ..என்ன விஷயம்..?” என்று கேட்ட தொனியே அப்பட்டமாய் வெளிக் காட்டியது அவரின் பிடித்தமின்மையை.

“அது அம்மா..”

“ஒன்னுல்லமா..சீதா தான் உங்கள போய் பாத்து இந்த பணத்த கொடுத்துட்டு வர சொன்னாங்க..அவங்க ரொம்ப வருத்தப்பட்றதா சொன்னாங்க..” கையில் பணத்துடன் சம்பந்தமே இல்லாது பேசிய கதிரை அதிர்வுடன் பார்த்தன,

ஆதியின் விழிகள்.

விழி விரித்து பார்த்திடும் ஆதியைக் கண்டாலும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்து அந்த பெண்மணியுடன் பேசியவனின் கரத்தின் தட்டலே இயல்புக்கு திருப்பியது ஆதியை.

கதிரின் நடத்தைக்கு காரணம் தெரியாது அவனும் தன்னை சமப்படுத்திக் கொள்ள அந்த பெண்மணிக்கோ கண்கள் கலங்கிற்று.

“என்னாச்சும்மா..ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்குங்க..”

பவ்யமாய் வெளி வந்தன,கதிரின் வார்த்தைகள்.

“இல்ல தம்பீ…அப்டிலாம் இல்ல..” என்று வார்த்தைகளை உதிர்த்தவரின் குரலில் அப்படி ஒரு வருத்தம் இழையோடியது.

“அம்மா..தப்பா எடுத்துகாதீங்கம்மா..சீதா இப்போ அங்க தனியா தான் இருக்காங்க..இங்க கொண்டு வந்துஉஉஉஉ…”

“வேணா தம்பி வேணா..திரும்ப ஒரு அவமானத்த பாக்கற தெம்பு எனக்கில்ல..”

“டேய் கதிர் என்னடா இது..?”அருகே அமர்ந்திருந்தவனின் காதுகளில் மென்மையாய் கிசுகிசுத்தான், ஆதி.

இந்த சடுதியான நடிப்புக்கு காரணம் சத்தியமாய் அவனுக்கு புரியவில்லையே.

“பாஸ்..கொஞ்சம் சும்மா இருங்க..அப்றமா சொல்றேன்..” அவனும் இன்னும் ரகசியமாக சொல்லிட சட்டென்று அமைதியாகிப் போயிருந்தான், ஆதி.

“அம்மா..நீங்க தப்பா ஏதும் எடுத்துக்கலனா..?

சீதாக்கும் கிரிக்கும் கல்யாணம் எப்டி ஆச்சு..? அதுக்கப்றம் என்னாச்சுன்னு சொல்ல முடியுமா..?தெரிய வேணான்னு நெனச்சீங்கன்னா சொல்ல வேணாம்..”

“அதுல சொல்றதுக்கு என்ன இருக்கு தம்பீ..ஊருக்கே தெரிஞ்ச விஷயம் ஆச்சே..உங்க கிட்ட எதுக்கு சொல்லாம இருக்கனும்..எல்லாம் எங்க தல விதி..சீதாக்கு தெரிஞ்சவங்கனு வேற சொல்றீங்க..புள்ளங்களால இன்னொருத்தருக்காக பெத்தவங்கள சுலபமா தூக்கி எறிய முடியும்..ஆனா பெத்தவங்களால எப்டின்னாலும் அது முடியாத விஷயம்..”

“………….”

“எங்க பொண்ணு தான் பா சீதா..மூத்தவ சக்தி..ரெண்டாவது ப்ரியா..மூணாவது தான் இவ..இவளுக்கு ரெண்டு தங்கச்சிங்க..மொத்தம் அஞ்சு பொண்ணு எங்களுக்கு..ரொம்ப அன்பா தான் வளத்தோம்..என்ன சீதாக்கு கொஞ்சம் கூடுதலா செல்லம்..ரொம்ப நல்லா தான் இருந்தா..அந்த எடுபட்ட பயல சந்திக்கிற வர..”

“………….”

“அப்போ அவளுக்கு பத்தொன்பது வயசு தம்பீஈஈஈஈ..என்னோட மூத்த பொண்ணுக்கு இருபத்தஞ்சு வயசு..என்ன தான் அஞ்சு பொண்ணுன்னாலும் அவங்கள நல்லா படிக்க வச்சு அப்றம் தான் கட்டிக் கொடுக்கணும்னு வைராக்கியத்தோட இருந்தாரு என்னோட வீட்டுக்காரர்..அதனால தான் பெரிய பொண்ண நல்லா படிக்க வச்சு அதுக்கப்றமா வரன் பாத்தோம்..அவளுக்கு கல்யாணமும் முடிவாகி இருந்துச்சு..”

“………..”

“அந்த நிச்சயதார்த்த நேரம் தான் இந்த கிரிப்பையன் எங்க வீட்டுக்கு வந்தான்..மூத்த மாப்ளயோட தம்பியோட சிநேகிதன் பா..சீதா ரொம்ப அழகா இருப்பா..அதே மாதிரி ரொம்பவே வெகுளியும் தான்..இவன் அவ பின்னாடி சுத்துனதே நானும் பாத்துருக்கேன்..எங்க வீட்டுக்காரர் கூட அவன கூப்டு கண்டிச்சு இருக்காரு..ஆனா என்ன..பெத்த பொண்ணு மேல இருக்குற நம்பிக்கைல அவள கண்டிக்காம விட்டுட்டோம்..மூத்தவ கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட இருக்காது..அவன் வீட்டால வந்து பொண்ணு கேக்கறாங்க…”

“…………”

“நாங்க கூட வெளயாட்டுப் பய சும்மா தான் பொண்ணு பின்னாடி சுத்திகிட்டு இருக்கான்னு பாத்தா இவன் வீட்டுக்கே கேட்டு வந்துட்டான்..எங்க வீட்டுக்காரருக்கு அவ்ளோ சின்ன வயசுல பொண்ண கட்டி கொடுக்க இஷ்டமே இல்ல..அவளுக்கு மூத்தவ ஒருத்தியும் கல்யாணமாகாம இருக்கால..”

“…………”

“சரி நிச்சயம் பண்ணியாவது வச்சிர்லாம்னு பையன பத்தி விசாரிச்சது எதுவுமே சரியா தோணல..”

“அப்டின்னா மா..”

“அந்தப் பையனோட நடவடிக்க சரியில்லன்னு தெரிஞ்சுதுப்பா..எப்பவுமே குடி சிகரெட்னு திரிவானாம்..பொண்ணுங்க பழக்கமும் ஜாஸ்தின்னு சொன்னாங்க..ஏற்கனவே வீட்டுக்கு தெரியாம இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்குறதாவும் அரசல் புரசலா கத வந்துச்சு..”

“அப்றம் என்னாச்சு மா..?”

“இதெல்லாம் கேள்விப்பட்டதும் எங்க வீட்டுக்காரர் வேணாம்னே முடிவெடுத்தாரு..சீதா வேற பக்குவமில்லாத பொண்ணுன்னு அவளோட விருப்பத்த கேக்கல..அப்டியே அவளுக்கு விருப்பம் இருந்தாலும் அந்த மாதிரி ஒரு பையனுக்கு கட்டிக் கொடுக்க எந்த அப்பாம்மாக்கு தம்பி மனசு வரும்..?”

“…………….”

“கல்யாணம் பண்ணித் தர முடியாதுன்னு சொன்னப்றம் ரொம்ப ப்ரச்சன பண்ணாங்க அவனும் அவங்க வீட்டாளுங்களும்..நாங்க அந்தளவா எடுத்துக்கல..பொண்ண கூட்டிட்டு ஓடிருவேன்னு சொன்னான்..நாங்களும் பொண்ணு மேல இருந்த நம்பிக்கைல பேசாம இருந்துட்டோம்..”

“…………..”

“அப்றம் ஒரு நாள் பாத்தா சீதாவ காணோம்..ஊர விட்டு ஓட்றத நாளு பேர் பாத்தேன்னு சொன்னத கூட நம்ப முடியல..எங்க வீட்டுக்காரர் நம்பவே இல்ல..பொண்ண கடத்திட்டு போயிருப்பான்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் பண்ண முடிவெடுத்து வீட்டுல இருந்து கெளம்புறப்பொ மாலையும் கழுத்துமா வந்து நின்னாங்க ரெண்டு பேரும்..நம்பவே முடியல..எங்க வீட்டுக்காரர் அதிர்ச்சியில மயங்கிட்டாரு..”

“…………..”

“அப்றம் தான் எல்லாமே தெரிய வந்துச்சு..சீதாவ இவன் வெளில வச்சு சந்திச்சு இருக்கான்னு..நெதமும் சாயந்தரம் நாலு மணிக்கு கோயிலுக்கு போவா..நாங்க கூட பெருசா கண்டுக்குறதில்ல..அப்றம் தான் புரிது அவன பாக்க தான் போய் இருக்கான்னு..என்ன பண்ண அதுக்கப்றம்..மொத்தமா அவள தல முழுகிட்டோம்..அதுக்கப்றம் பேச்சு வார்த்த கூட கெடயாது..” என்றவரில் இருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்பட அது அவரின் மன வலியினதும் இயலாமையினதும் பிரதிபலிப்பாய்.

“மொத்தமா நாலு வருஷம்..பேச்சு வார்த்த கூட இல்ல..அவள விட அவன் பதிமூணு வருஷம் மூத்தவன் தம்பி..காதலுக்கு எங்க வயசு வித்தியாசம் எல்லாம் தெரியும்..? இப்போ அவன் யெறந்தத நெனச்சு கவலப்பட்றதா சந்தோஷப்பட்றதான்னு தெரியல..”

“யேம்மா அப்டி சொல்றீங்க..?”

“அத எப்டி சொல்றது தம்பீ..இது நடந்து ரெண்டு வருஷம் ஆயிருக்கும்..ஒரு தடவ இங்க ஊருக்கு கொஞ்சம் பேர் வந்து இருந்தாங்க..அதுல ரெண்டு பொண்ண இந்த நாதாரிப் பய சீரழிச்சிட்டான்..படுபாவி..அதுல ஒரு பொண்ண விரும்புற பையன் இவன கொல பண்ற வெறியோட சுத்திகிட்டு இருந்தான் தம்பீ..அப்டிப்பட்டவன் செத்தா யேன் தம்பி கவலடிசம்பரெணஅவனோட வண்டவாளம் எதுவுமே என்னோட பொண்ணுக்கு தெரியாத கல்யாணம் பண்ணப்போ…எங்களுக்கே இப்போ கொஞ்சம் நாள் முன்னாடி தான் தெர்யும்..”

“யாருமா அந்த பையன்..?”

“சென்னைல படிச்ச பையன் தான் பா..பேரு கூட கிருஷ்ணான்னு சொன்னாங்க பா..ஏதோ டீ டீ காலேஜ்ல படிச்ச பையனாம்..” என்றவாறு தனக்கு தெரிந்ததை அவர் கூறி முடித்திட இவர்களின் மனதில் புதிதாய் ஒரு சந்தேக விதை.

அதே நேரம்..

வழமைக்கு மாறாக சாரதாவை சந்திக்க வெகு சீக்கிரமாக தயாராகி வந்திருந்தாள், கயல்விழி.

அவரின் வரவை அவள் ஆவலாய் எதிர்ப்பார்த்து காத்திருக்க அவளைக் கடந்து சென்ற ரகுவரைனைக் கண்டு புன்னகை சிந்தினாள், மென்மையாய்.

பதிலுக்கு அவரும் புன்னகைத்தாலும் அவளைக் கண்டதும் எழும் பரிதாபத்தை அடக்கும் வழி தெரியவில்லை, அவருக்கு.

அவர் கடந்து செல்லவும் சாரதா உள்ளே வரவும் சரியாய் இருக்க கயல்விழியின் முகத்தில் இருந்த ஆர்வம் தப்பவில்லை, அவரின் விழிகளில் இருந்து.

“என்ன கயல் ரொம்ப ஆர்வமா இருக்க போல..என்னோட கதய கேக்கவா..இல்லன்னா அவனோட கதய கேக்கவா..”

“ரெண்டயும் தான் மேடம்ம்ம்ம்..”

“நல்லா சமாளிக்குற நீயி..”

“தேங்க்ஸ் மேடம்..நீங்க சொல்லுங்க…உங்க லைப்ல மறக்க முடியாத அடுத்த சம்பவத்த..இதுவும் அந்த அண்ணணோடதா..?”

“ம்ம்ம்ம்..ஆனா இத நா பாக்கல..என்னோட ப்ரெண்ட் தான் பாத்துருக்கா..அவ சொன்னத சொல்றேன்..”

“சரி மேடம்..”

வருடம் 2022 ஜுன் மாதம் 11ம் திகதி..

கைகளில் இருந்து குருதி வழிய அதை உணரும் நிலையில் இல்லை அவன் துளியளவும்.

முகம் இறுகிக் கிடக்க விழிகளில் ரௌத்திரம் ஏறியிருக்க ஏனோ அவனின் தோற்றமும் உணர்வு துடைத்திருந்த முகமும் பார்ப்போரில் ஒரு வித பயத்தை உண்டாக்கிட தவறவில்லை.

அருகில் நின்றிருந்த அவனின் தோழனுக்கு இவனின் நிலை கண்டு உள்ளுக்குள் கொஞ்சம் கலவரமே.

அவனின் அமைதிக்கான காரணம் தெரியாதா..?

“மச்சான்..” என்று அமர்ந்திருந்தவனின் தோளைத்தொட்டிட ஏறிட்டுப் பார்த்தவனின் சிவப்பேறியிருந்த விழிகள் அவன் மனதில் கனன்று கொண்டிருக்கும் பழிவெறியைச் சொல்லிட கொஞ்சமாய் பயமெடுத்தது, தோழனுக்கும்.

“மச்சான்ன்ன்ன்ன்..” அவன் மீண்டும் அழுத்தி அழைக்க ” நா அவன கொல பண்ணப் போறேன்..” வெகு தீவிரமாய் தோழனின் இதழ்கள் உச்சரித்த வார்த்தைகளை கண்டு திடுக்கிட்டு போனான், அவன்.

“மச்சீஈஈஈஈ..காம் டவுன்..அவளு..அவங்ங்களுக்கு எதுவும் ஆகி இருக்காது..”

“எனக்கு தெர்யும்..அவளுக்கு எதுவும் ஆகாது..ஆகி இருக்காது..அப்டி நடக்கவும் கூடாது..பட் ஐ வான்ட் டூ கில் தட் இடியட்..” இலக்கின்றி வெறித்த பார்வையுடன் வெகு துல்லியமாய் வெளி வந்தன, வார்த்தைகள்.

அதற்குள் அவளை பரிசோதித்த வைத்தியரும் வருகை தந்திட அவரின் மீது கலக்கமாய் படிந்தது, அவனின் பார்வை.

” ஷீ ஹேஸ் பீன் ரேப்ட்..இப்பொ சுய நினைவுக்கு வந்துட்டாங்க..போய் பாக்கலாம்..” என்றிட திடுமென ஒரு அழுகைக் குரல்.

அவளின் தந்தை தான் கத்தி அழுதிருந்தார், தன்னிலை மறந்து.

அந்த சத்தத்தில் தான் அவனுக்கும் அவளின் தந்தை அந்த இடத்தில் இருப்பது நினைவில் வந்தது போலும்.

என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு.

அவரை முந்திக் கொண்டு அவனாலும் முன்னே செல்ல இயலவில்லை.

கைகளை இறுகப் பொத்திய படி அந்த இடத்திலேயே அமர்ந்திட தோழனின் தவிப்பு அசைத்து பார்த்தது, அவனையும்.

தோழனின் தோள்களை மெல்ல அழுத்த ஏறிட்டுப் பார்த்தவனின் விழிகளில் கொஞ்சமாய் நீர் கோடிட்டு இருந்தது.

அவளின் தந்தையோ அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு முன்னே நடக்க இதற்கு மேலும் முடியாது என அவரைப் பின் தொடர்ந்தான், தளர்ந்த நடையுடன்.

கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க கசங்கிய பூவாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், அவனின் மனம் கவர்ந்தவள்.

கைகளிலும் கால்களிலும் கட்டுக்கள் போடப்பட்டிருக்க அதைக் கண்டதும் அவன் விழிகளில் ரௌத்திரம் மீள ஏறிக் கொண்டது.

அவளின் தாயாரிடம் இன்னும் விடயத்தை சொல்லி இருக்கவில்லை என்பதால் இப்போதைக்கு அவளருகில் தந்தை மட்டுமே.

அவரோ அவளின் கைகளை தடவிய படி அருகே அமர்ந்து கொண்டிட அவளை விழியெடுக்காது பார்த்தவாறை சுவற்றிலு சாய்ந்து நின்றவனின் பாதங்கள் சற்றே சரிந்திருந்தது.

அவள் எப்படி இருந்தாலும் அவன் ஏற்றுக் கொள்வான்.

ஆனால், எழுந்தவுடன் அவள் நடவடிக்கை எப்படி இருக்குமோ..?

அதுவே பெரும் பயமாய் அவன் நெஞ்சினில்.

தொடரும்.

🖋️அதி…!

2023.08.27

Advertisement