Advertisement

சொல்லாமல்…!

மௌனம் 11(i)

சில வருடங்களுக்கு முன்..

ஏனோ இன்று வேலை செய்த அசதியின் காரணத்தால் எட்டு மணிக்கு முன்னமே படுக்கைக்கு வந்தவனுக்கு உறக்கம் எட்டவில்லை என்றாலும் கட்டிலிலே படுத்திருந்தான்,

பல வித எண்ண அலைகளோடு.

ஏனென்று தெரியால் ஆடவனின் பார்வை அந்த கீசெய்னையே சுற்றி வர எத்தனை முயன்றும் விலக்கிக் கொள்ளத் தான் இயலவில்லை.

இத்தனை நாள் இல்லாமல் இன்று அவளின் தரிசனம் கிட்டியவுடன் ஆக்கிரமித்துக் கொண்ட உணர்வு வெகு சுகமாய் இருக்க ஆராய்ந்து தன் மனதை ஆழம் பார்த்திட விரும்பவில்லை,ஆடவன்.

அவளைக் கண்டவுன் ஏதோ ஆகித் தான் தொலைகிறது.

மறுக்க இயலவில்லை, அவனால்.

என்னவென்றாலும் தன்னை ஆட்படுத்தும் அவ்வுணர்வு  பிடித்திருக்கவே ரசிக்க விழைந்தான் என்பதே உண்மை.

அவனுக்கும் அவன் பெயரில் உள்ள மற்ற பகுதியை விடுத்து “தேவா..” என்பதில் அப்படி ஒரு ப்ரியம்.

அதனால் தான் நெருங்கியவர்களிடம் மட்டும் அதைச் சொல்லி அழைக்கும் படி கட்டளை விடுத்திருக்க மீறியதில்லை எவரும்.

அதே போல் அவளுக்கும் பிடித்திருக்கிறதே.

இனம் புரியா உணர்வொன்று இதம் பரப்பி ஆடவனின் மனதையும் தனக்குள் இழுத்துக் கொண்டு இளைப்பாறி நின்றது.

மெதுவாய் புரண்டு படுத்தவனுக்கு மனதில் பழைய கசடுகள் எட்டிப் பார்த்தாலும் அவள் நினைவுகளின் ஆதிக்கத்தில் முன்பு போல் அவனை ஆக்கிரமிக்கவில்லை என்பதே உண்மை.

இதழ்கள் விரிந்திட நினைவுகளின் பிடியில் விரும்பியே சிக்கிக் கொண்டிருந்தவனை கலைத்தது கதவை தட்டும் ஓசை.

சிறு யோசனையுடன் எழுந்து அவன் திறந்திட அவனின் முன்னே நின்றிருந்தார்,ஒரு வயதான பெண்மணி.

“என்ன பாட்டீஈஈஈஈ..?”ஒரு போதும் தன் அறைக்கதவு சாற்றியிருக்கும் போது தன்னை அழைக்காதிருக்க இன்று மாறாய் நடந்ததன் பதட்டம் அவர் குரலில்.

“ராசா..பக்கத்து வீட்டுல குடியிருக்குறவங்க ஏதோ கொண்டு வந்து தந்துருக்காங்க..வீட்டுல ஏதோ விசேஷம்னு..அந்த அம்மா உன் கூட பேசணும்னு சொல்றாங்க ராசா..”

“யாரு பாட்டி..சரி இருங்க வரேன்..” என்றவனின் பாதங்கள் கூடத்துக்கு விரைந்திட அங்கு அவனைப் பார்த்தவாறு காத்திருந்ததது, தர்ஷினியின் தாயே தான்.

அடிக்கடி அவரைக் கண்டிருப்பதால் மட்டுமல்ல..

ஏறத்தாழ அவரின் முகஜாடையில் தர்ஷினி இருப்பதால் இலகுவாக இனங்கண்டிட முடிந்திட வரவேற்று அமரச் சொன்னவனோ அருகே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டான்,

மரியாதை நிமித்தம்.

அவருக்கு அவன் செயல் சங்கடத்தை தந்தது போலும்.

“தம்பீஈஈஈஈ..நீங்களும் வந்து உக்காருங்க தம்பி…”

“இல்லம்மா இருக்கட்டும்..”

“உக்காருங்க தம்பீ..பேசறதுக்கு சவுகரியமா இருக்கும்..” என்றிட மறுப்பு சொல்ல இயலவில்லை, ஆடவனால்.

அவருக்கு நேரெதிரே போடப்பட்டிருந்த கதிரையில் வந்து அமர்ந்து கொண்டிட சங்கடமாய் பார்த்து புன்னகைத்தவருக்கு பேச்சைத் துவக்கும் வழி தான் தெரியவில்லை.

மகள் செய்து விட்ட வேலை அப்படியே.

“தம்பீஈஈஈஈஈஈஈஈ…நா தர்ஷினியோட அம்மா..உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்..”

“தெரியும்மா..சொல்லுங்க..”

“அது தம்பீ..நா சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்க தான..”

“இல்லம்மா இல்ல சொல்லுங்க..”

“அன்னிக்கீஈஈஈஈ…உங்களுக்கு ஒரு லவ் லெட்டர் வந்துருக்கும்..இவ பேர்ல..”

“ஆமாம்மா..” என்றவனுக்கும் அவரின் தயக்கம் கண்டு சிறு யோசனை.

“அது இவ..இவ..கொடுக்கல தம்பீ..எங்க சொந்தக்கார பொண்ணு ஒன்னு எழுதி கேட்டுருக்கு..இவளும் நச்சரிப்பு தாங்காம எழுதி கொடுத்துருக்கா..உங்க கிட்ட சொல்லவும் மாட்டா..நேத்து நீங்க அவள பாத்து மொறக்கிறத கண்டேன் தம்பீ..அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்..”அவர் சொல்ல அவனுக்குத் தான் அசடு வழிந்தது.

“சாரி மா..எனக்கு யாருன்னு தெரியாது..அதான் கொஞ்சம் கோபம் வந்தருச்சு..” நிஜமான வருத்தம் ஆடவனின் வார்த்தைகளில்.

“ஐயோ அப்டிலாம் இல்ல தம்பீ..அவளுக்கு யாராவது லவ் லெட்டர் கொடுத்து இருந்தா சாமியாடிருப்பா..உங்க மேல எந்த தப்பும் இல்ல தம்பீ..நீங்க யோசிக்க வேணா..தம்பீ எனக்கொரு உதவி பண்ணனும்..?”

“என்னம்மா..?”

“இவ காலஜ் விட்டு வர்ர டைம் ரெண்டு பேர் பின்னாடி வர்ராங்க…இவ பின்னாடி இல்ல பா..இவ ப்ரெண்டு பின்னாடி..நீங்க தான் பாத்து கொஞ்சம் ஏதாவது..”

“சரிம்மா..சரி நா பாக்கறேன்..நீங்க ரொம்ப யோசிக்காதீங்க..”

“ரொம்ப நன்றி தம்பி..”

“சரிம்மா..” என்றிட சில பேச்சுக்களுடன் அவர் கிளம்பிச் சென்றிட ஆடவன் மனதில் நிம்மதியும் அதே நேரம் துளியளவாய் சிறு ஏமாற்றமும்.

“அவள் தன்னை விரும்பவில்லையா..?” என்கின்ற கேள்வி ஏதோ செய்தது அவனை.

நிச்சயம் அது ஏமாற்றம் இல்லை.

தான் விரும்பியது போல் அவள் இருக்கிறாளே என்கின்ற ஆழ்மன பரவசம் ஆடவனை ஆட்டுவித்திட துளிர்த்திருந்த சுகமான உணர்வு அவனை தனக்குள் மொத்தமாய் அமிழ்த்திக் கொண்டிட விரும்பியே மூழ்கிப் போனான், ஆடவன்.

 மறுநாள் காலை கல்லூரிக்கு கிளம்பியவனோ வழமையாக தாங்கள் தரித்திருக்கும் மரத்தடியில் அமர்ந்திருக்க தோழனை வித்தியாசமாய் தான் பார்த்திருந்தனர் பாலாவும் கிஷோரும்.

“என்ன மச்சீ எப்பவும் இல்லாம இன்னிக்கு இவன் பேஸ் டாலடிக்கிது..” மெதுவாய் கிஷோர் பாலாவின் காதுகளில் கிசுகிசுத்திட “தெரியாது” எனும் படியான முகபாவனை பாலாவிடம் இருந்து.

தேவாவின் விழிகள் தூரத்தில் தெரிந்த நுழைவாயிலைத் தான் துழாவி நின்றது.

அவளைக் கண்டிட வேண்டும் என்று தோன்றிட்ட ஆவலுக்கு அவன் பிடித்துக் கொண்ட காரணம் ” அவளின் கீ செய்னை ஒப்படைக்க வேண்டும்..” என்பதே.

அதற்காகத் தான் அவளின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக தனக்கும் சொல்லி தோழர்களையும் நம்ப வைத்திருந்த ஆடவனின் செயலின் உண்மைக் காரணத்தை அவனுமே இன்னும் ஆராயவில்லை, என்பதே சத்தியமான உண்மை.

நேரத்தை பார்ப்பதும் வாயிலை பார்வையால் அலசுவதுமாய் இருந்தவனை மேலும் காத்திருக்க வைத்திடாது வந்தாள்,

தர்ஷினி.

இத்தனை நாள் எதிர்பாராமல் அவளின் தரிசனம் கிட்டிய பொழுதும் இல்லாமல்..

பல முறை அவளை நேருக்கு விழி பார்த்து பேசிடும் போது நிகழ்ந்திடாமல்.. முதன் முதலாய் அவளைக் கண்டவுடன் சிலிர்த்தடங்கியது ஆடவனின் தேகம்.

அவனுமே அதை எதிர்பாராமல் இருக்கவே ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் எண்ணிலடங்கா மாற்றங்கள் நிகழ்ந்திட பட்டென மறுபுறம் திரும்பியவனுக்கு வேகவேகமாய் மூச்சு வாங்கிட பின்னங்கழுத்தை அழுந்தத் தேய்த்துக் கொண்டவனின் விரல்களில் மெல்லிய இழையாய் நடுக்கமொன்று.

புதிராய் பார்த்து அவனை நெருங்க முயன்ற கிஷோரை மறுப்பாய் தலையசைத்து தடுத்த பாலாவின் இதழ்களில் ஒட்டிக்கொண்டு மிளிர்ந்தது, பல நூறு அர்த்தங்களை தனக்குள் ஒளித்து வைத்திருந்த புன்னகையொன்று.

“வாட் ஹேப்பன்ட் தேவா..ரிலாக்ஸ்..” தனக்கு சொல்லிக் கொண்டு நெஞ்சை நீவிய படி ஆடவன் திரும்ப அவனில் இருந்து சற்றுத் தள்ளி  நடந்து வந்து கொண்டிருந்தவளோ அவனைக் கண்டதும் தலையைக் குனிந்து கொண்டு விடுவிடுவென நடந்து சென்றிட ஏனோ ரசனைப் புன்னகையொன்று ஓடியது, ஆடவனின் இதழ்கடையில்.

அவள் சென்று முடிந்ததுமே அவன் இயல்புக்கு மீள இத்தனை நேரம் தோழர்கள் இருப்பதையே மறந்திருந்தவனின் நினைவில் திடுமென உதிப்பு வந்திட திரும்பி விரிந்து விழிகளுடன் தோழனை ஏறிட நமட்டுச் சிரிப்புடன் பார்த்திருந்தவர்களுக்கு என்ன பதில் சொல்லிட இயலும் ஆடவனால்..?

கணநேரத்தில் தன் அழுத்தமான முகத்தை கொண்டு வந்திட மேலும் தோண்டி துருவவில்லை,தோழர்களும்.

மதிய நேரத்துக்கு பின் கல்லூரியில் நிகழ்வு ஆரம்பித்திருக்க அந்த பெரிய மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்ந்து நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள், தர்ஷினி.

அவளுக்கு பக்கத்தில் காலிக்கதிரை ஒன்று இருக்க அதற்கு சற்றுத்தள்ளி அந்த மண்டத்தின் இன்னொரு வாயில்.

கதவு திறப்பதற்கு இடம் இருந்தாலும் கதவை மூடியே வைத்திருக்க அந்த மூடிய கதவிற்கு வெளியே நின்று பிற ஏற்பாடுகளை பற்றி தேவா ஆலோசித்துக் கொண்டிருப்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லையே.

தன் கலந்துரையாடலை முடித்து விட்டு  அவசரமாக கதவைத் திறந்த தேவாவின் முன்னே அவளிருக்க சட்டென நின்றது,

ஆடவனின் நடை.

மொத்தமாய் ஆண்கள் மட்டுமே அமர்ந்திருந்த அந்த பகுதியில் இடம் போதாதென்று அவர்கள் வந்தமர்ந்திருக்க அது தனக்கு அவஸ்தையாகிடும் என்பது அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லையே.

பெருமூச்சுடன் அவன் நிமிரவும் விழிகளில் விரிவுடன் தர்ஷினி அவனை பார்த்திடவும் சரியாய் இருக்க அவள் முகத்தில் சடுதியாய் வந்து ஒட்டிக் கொண்ட பய ரேகைகள் புரியாமல் இல்லை ஆடவனுக்கு.

கதவை அடைத்து விட்டு தனக்கொரு இடம் தேடி இரண்டு வெற்றுக் கதிரைகள்.

அவளுக்கு பக்கத்தில் ஒன்று.

அவளுக்கு முன்னே ஒன்றும்.

தயக்கமாய் இருந்தாலும் ஆறடி உயரத்தில் தான் மட்டும் பின்னே நின்றிருந்தால் வெகுவாய் தன் புறம் கவனம் ஈர்க்கப்படும் என்பதை உணர்ந்து அவளுக்கு முன்னே இருந்த கதிரையில் வந்தமர்ந்திட அவளுக்கு முன்னே அவனின் பிடரி மட்டும் தான் தெரிந்தது.

முகத்தில் அப்பட்டமான சலிப்பு.

எதுவும் விளங்கவில்லையே.

சற்றுத் தள்ளி அமரச் சொல்லி சொல்லிடவா இயலும்..?

அவள் தலையை அங்குமிங்கும் அசைத்து மேடையை பார்த்திட முயல்வது புரிய கால்களை முன்னே நீட்டி கைகளை பின்னந்தலையில் கோர்த்து வைத்து கொஞ்சம் சரிந்தமர்ந்தான் ஆடவன், இயல்பான செயலாய் காட்டிக் கொண்டு.

அவளிதழ்களில் உற்சாகப் புன்னகை.

“கடவுளே இப்டியே இருக்கனும்..” என்கின்ற வேண்டுதலையும் வைக்கத் தவறவில்லை,மனது.

அவனும் அங்குமிங்கும் அசைந்து அமர்ந்தாலும் நிமிர்ந்து மட்டும் அமரவில்லை என்பதே உண்மை.

காரணம் காதல் என்று அவனுக்கு புரியாமல் இருக்க அதற்கு அவன் சூட்டிக் கொண்ட பெயர் மனிதாபிமானம்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும்.

பாலா தான் அழைத்திருந்தான் மறுபுறம் வரச்சொல்லி.

பின்னந்தலையை அழுந்தக் கோதிய படி அலைபேசியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஈரெட்டு எடுத்து வைத்தவனுக்கு முன்னே இருந்த கம்பியில் கால் தடுக்கிட விழப்பார்த்தவனை நோக்கி நீண்டிருந்தது அவள் கைகள், “சீனியர் பாத்து..” என்று பதற்றமாய் ஒலித்த குரலுடன்.

ஒரு நொடி தடுமாறினாலும் மறுகணம் சுதாரித்தி பக்கத்து இருக்கையின் கைப்பிடியை பற்றி சமநிலையை தக்க வைத்துக் கொண்டவனின் பார்வை அப்படி சாய்வாய் நின்றபடியே தனக்கு பக்கவாட்டாய் நின்றிருந்தவளை ஆராய்ந்தது.

நீட்டியிருந்த கைகளையும் சிறு பதற்றத்தை தாங்கியிருந்த விழிகளும் அவனை ஆழமாய் தாக்கிட பட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டு நிமிர்ந்து நின்றதுமே தன் கைகளை பின்னே இழுத்துக் கொண்டாள், அவள்.

“ஐயோஓ..சும்மாலே எகிறுமே..இப்போ இப்டி வேற..” நெற்றியில் அறைந்தவாறே தன்னிருக்கையில் அமர்ந்திட அவளின் இயல்பே அது தான் என்பதால் தோழியர் யாரும் பெரிதாய் கருத்திற் கொள்ளவில்லை, சம்பவத்தை.

பதில் கூட சொல்லாமல் வெளியேறி வந்த ஆடவனுக்கு முகத்தில் வந்து மோதிய மென்காற்றும் செய்தி சொல்லிப் போனதே.

ஏனென்று கேட்டிடாமல் சிறு புன்னகை தவழ்ந்தது, அவனிதழ்களில்.

ஏனோ ஒரு நொடி தான் அவளின் உணர்வுகளை உள்வாங்கி இருந்தாலும் அத்தனை அழகாய் மனதில் பதிந்து போனதே.

அச்சுப்பிசகாமல் ஒட்டிக் கொண்டதன் காரணம் என்னவோ…?

அந்த விழிகளில் தெரிந்தது ஒரு வித மனிதாபிமானமும் இயல்பான பதட்டமும் தான் என்பது புரியாமல் போய்விடவில்லை,

ஆடவனுக்கு.

ஆனால், அதற்கு மேல் ஏதோ ஒரு உணர்வை அவள் விழிகளில் எதிர்ப்பார்த்தது.

என்னவென்றே ஆராயும் மனநிலை இல்லை அவனுக்கு.

“ஊப்ப்ப்ப்ப்ப்..” ஆழமாய் காற்றை சுவாசித்து ஊதித் தள்ளி பேன்ட் பாக்கெட்டில் கையை விட்ட படி சாதாரணமாக காட்டிக் கொண்டு நடந்தாலும் அவனால் தன்னையே ஏமாற்றிக் கொள்ள இயலுமா..?

பின்னந்தலை சிகையில் விரல்கள் நுழைந்து கலைத்திட நடை நீண்டது,பாலாவை நோக்கி.

சற்று முன் நடந்தேறிய நிகழ்வின் தாக்கத்தில் கொஞ்சம் சங்கடம் எழுந்திற்று அவளுள்.

ஆடவனோ தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள அவ்விடத்தில் இருந்து நகர்ந்திருக்க அவளுக்கு அது கோபமாய் அல்லவா தோன்றியது..?

“ச்ச..மென்டல் மாதிரி..எதுக்குடி கைய நீட்டுன..எரும..சும்மாவே ஆடும்..நீ இப்ப சலங்க வேற கட்டி விட்டாச்சு..ச்சே..” தன்னையே மனதால் திட்டுக் கொண்டு மேடையின் மேல் பார்வையை பதித்த படி நின்றிருந்தவளின் செயல் அங்கு யாருக்கும் வித்தியாசமாய் படவில்லை.

தனக்குத் திட்டி தானே தேறி பின் உறக்கம் கண்ணை சுழற்ற அமர்ந்து இருக்க முடியாமல் போய் விட எழுந்து வெளியே நகர்ந்திருந்தாள்,

தர்ஷினி.

                    ***************

இன்று….

உடைந்து போய் அமர்ந்திருந்தவனை கண்டதும் அவர் விழிகளில் இருந்து தனை மீறி நீர் கசிந்திட்டாலும் எதுவும் செய்ய இயலாத கையறு நிலை தான்.

நெருங்க விடமாட்டானே..

அவனுக்கோ அவர் பார்ப்பது எதுவும் புரியவையில்லை.

மொத்த கவனமும் அவள் மீதல்லவா படிந்து நின்றிருந்தது.

உறக்கத்தில் இருந்தவளின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தவனின் விழிகளில் இருந்த சிவப்பு இன்னும் மறைந்து போயிருக்கவில்லை.

கொஞ்சம் அவள் முகத்தருகே நெருங்கி அமர்ந்து விழியெடுக்காது அவளின் வதனத்தையே விழிகளால் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

மெல்ல தன் ஒற்றைக் கரத்தில் அவளின் விரல்களை பொத்தி வைத்துக் கொண்டவாறு…

“தயவு செஞ்சு என்ன விட்டுட்டு செத்து போயிராதடி பைத்தியம்..அப்றம் நா தனியா யாருமில்லாம பைத்தியம் ஆயிருவேன் இங்க..நீ இல்லாம என்னோட நெலமய பத்தி யோசிச்சு கூட பாக்க முடியல டி..நா செத்ததுக்கு அப்றம் நீ தாராளமா செத்துக்கோ..ப்ளீஸ் டி” அவள் கேட்டிட வாய்ப்பில்லை என்று தெரிந்தும் அழுகையை அடக்கிய குரலில் கூறிய படி அவளின் உச்சியை மெல்லமாய் மென்மையாய் அவளே உணராதவாறு முகர்ந்து விட்டு நிமிர்ந்திட அவனின் விழிகளில் இருந்து அணை கடந்து கன்னத்தில் வழிந்த கண்ணீர்த்துளியொன்று அவளின் நெற்றியை மோதி நிற்க பதறிக் கொண்டு துடைத்து விட்டான், மெதுவாக.

அந்த நிசப்த அறையில் அவன் கொஞ்சம் சத்தமாகவே பேசியிருக்க அது தெளிவாகவே வந்து விழுந்திருந்தது, சாரதாவின் செவிகளில்.

ஏனோ அந்த வார்த்தைகளின் கனத்தை தாங்கிட அவரால் இயலவில்லை, அந்த நொடி.

அப்படியே கதவோரம் சாய்ந்து நின்றிட கடிகாரமும் சுழன்றது.

அங்கு ஓரமாய் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து அவர் சிறு தூக்கம் போட்டிட முயல விழிக்கும் கணமெல்லாம் அவளின் தலையை வருடி விட்டுக் கொண்டு விழித்தே கிடந்தவனின் செயல் அவருக்குள் சுருக்கென்று தைத்தது.

காலை ஆறரை மணி இருக்கும்.

மெதுவாக சோம்பல் முறித்த படி எழுந்திட அவனோ அவளுக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வெளியே செல்ல முயன்றான் போலும்.

அவள் இன்னும் விழிக்காதிருக்க செக்கச் சிவந்து இருந்த விழிகளோ அவனின் உறக்கமின்மையை பறைசாற்றிட கவலையின் சாரலில் நனைந்திருந்த முகமோ அச்சுப்பிசகமால் எடுத்துக் காட்டியது,

அவளுக்கான தவிப்பை.

அதை பார்த்தவருக்கு தன்னாலே ஆழ்ந்த பெருமூச்சொன்று.

அவர் அந்த சம்பவத்தை சரிவர கூறி முடித்த பின் கயல்விழியின் முகத்தில் பலவித உணர்வுகளின் கலவைகள்.

ஏனோ மனம் பிசைந்தது.

“மேம்ம்ம்ம்ம்ம்ம்ம்..”

“ம்ம்..” என்றவரோ இன்னும் இயல்புக்கு மீண்டிருக்கவில்லை.

“அது யாருன்னு சொல்ல முடியுமா..?” கேட்டவளின் குரலில் பெரும் எதிர்ப்பார்ப்பு.

அதிவேகமாய் மறுப்பாய் அசைந்தது,

அவர் சிரசு.

“இல்லம்மா..இல்ல..என்னால அது யாருன்னு சொல்ல முடியாது..” நாசூக்காய் மறுத்தவரை மேலும் சொல்லிடச் சொல்லி வற்புறுத்தும் எண்ணத்தை அடியோடு அவள் மனதில் இருந்து தகர்த்திருந்தது,

அவர் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த வலியின் சாயல்.

நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.

விழிகளில் அனல் தெறிக்க பற்களை நறநறத்தவாறு அந்த இடத்தில் அமர்ந்திருந்தான்,

தேவேந்திரன்.

ஏனோ தன் கண் முன்னே காணும் காட்சியை ஏற்றுக்கொள்ள இயலவில்லை, அவனால்.

“புல்ஷிட்..” முணுமுணுத்துக் கொண்டு முன்னே இருந்த மேசையில் அமர்ந்து தீபிகாவுடன் சிறு புன்னகையுடன் கதைத்துக் கொண்டிருப்பதை கண்டவனுக்கு மனம் ஆறவேயில்லை.

அவன் இயல்பு இது இல்லையே.

அவனின் புன்னகை முகத்தை தான் ஒருமுறை கூட கண்டதில்லையே.

ஏன் அவ்வப்போது தர்ஷினியுடன் இருவரையும் ஜோடியாக காண நேரிடும் போதும் இப்படி ஒரு விகசிப்பை முகத்தில் கண்டதில்லை.

முகம் விகசிக்க விழிகளில் உணர்வுகள் கொட்டிக் கிடக்க அவன் ஏதோ சொல்லிக் கொண்டு அதற்கு பதில் கொடுத்தவாறு கேட்டுக் கொண்டிருந்தாள், அவள்.

“ச்சே..இவ கூட சிரிச்சி சிரிச்சி பேசறான்..ச்சை..இந்த அர்ஜுன எதுக்கு தான் தர்ஷினிக்கு கட்டி வச்சாங்களோ தெரில..ச்சை..” என்று உள்ளத்தில் அவனுக்கு வசை மாரி பொழிந்து தீர்த்தாலும் ஆழ்மனதில் சிறு சந்தோஷப்பூ..

அவள் தனக்கு கிடைத்திடுவாள் என்று.

தற்செயலால் திரும்பியவனுக்கு தேவேந்திரன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது புரிய இதழ் சுளிப்புடன் கடந்து தன் கதையில் மூழ்கியவனின் செயல் அவனுக்கு எரிச்சலை கிளப்பிட தோழன் சொன்ன விடயம் உறுதிப்படுத்தப்படுவது போன்றதோர் எண்ணம்.

அதற்குள் தான் சந்திக்க வேண்டிய நபர்கள் வந்து விட மெல்ல கவனத்தை கடினப்பட்டு அவர்களின் புறம் திருப்பியிருந்தான், தேவேந்திரன்.

தனது வேலை முடிந்திட கிளம்பியவனின் பார்வை அவனின் மேல் முறைப்புடன் படிந்து மீளவும் மறந்திடவில்லை.

தனது இருசக்கர மோட்டார் வண்டியை கிளப்பிக் கொண்டு வீட்டின் அருகே நிறுத்தவும் அவனின் வீட்டில் இருந்து தர்ஷினியும் அவளது தாயும் வெளியே வரவும் சரியாய் இருக்க அவளைக் கண்டதும் அவன் முகத்தில் சடுதியாய் ஒரு விகசிப்பு.

முயன்று தன்னை சமாளித்துக் கொண்டு அவன் முன்னே வர சம்பிரதாயத்துக்காக ஒரு புன்னகையை சிந்தி விட்டு தன் வீட்டுக்கு விரைந்திருந்தாள்,

தர்ஷினி.

அவனுக்கு அவளின் செயலில் மனதின் ஓரம் மெல்லியதாய் வலி.

கொஞ்சம் சிரித்திருக்கலாம் என்று நினைத்திட தன்னை மீறி பெருமூச்சொன்று வெளிப்பட்டது, அவனில் இருந்து.

அவனின் எண்ணம் அவ்வாறென்றால் அவளுக்கு தன் நடத்தை சரியானதல்லவா..?

அவளுக்கு அவன் அந்நியன் தானே..

அவளின் பார்வையில்.

வண்டியின் சாவியை பாக்கெட்டினுள் இட்ட படி தர்ஷினியின் தாயாருடன் ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு உள்ளே நுழைந்தவனுக்கு தர்ஷினியின் விழிகளில் தெரிந்த வெறுமையும் சோகமும் பல யோசனைகளை கிளறி விட்டிருக்க மறந்திடவில்லை.

நெற்றியைத் தட்டிய படி வந்தவனை சிறு புன்னகையுடன் ஆர்த்தி ஏறிட அவளைக் கண்டவனுக்கு சினம் எகிறியது.

“அத்தான்ன்ன்ன்ன்..” அவள் ராகமிழுக்க “என்ன..?”வெடுக்கென பதில் வந்தது,

அவனிடம் இருந்து.

தேவேந்திரனின் தம்பி யோகேந்திரனோ இருவரையும் பார்த்து தலையில் அடித்து கொண்டு தன்னறைக்குள் நுழைந்திட தம்பியின் செயலில் இன்னும் ஏறித் தான் போனது,

அண்ணனின் கோபம்.

“இப்போ உனக்கு என்ன வேணும்..?”

“எதுக்கு அத்தான் இவ்ளோ எரிச்சலா பேசறீங்க..?”

“பின்ன வெறும் இன்பாக்ஷுவேஷன லவ்வு கிவ்வுனு சொல்லி பினாத்திகிட்டு திரிஞ்சா கோபம் வரத்தான செய்யும்..”

“நா உங்க மேல வச்சுருக்குறது வெறும் இன்பாக்ஷுவேஷனா..?”

“ஆமா..உனக்கு தான் எக்கச்சக்க க்ரஷ் இருந்துருக்கே..?”

“ஆமா அத்தான்..க்ரஷ் இருந்துருக்கு தான்..அதுக்குன்னு அவங்க எனக்கு ஹஸ்பன்டா வரனும்னு நா ஒரு நாளும் நெனச்சதில்ல..அவங்களோட சில பழக்கம் புடிக்கும்..அதுக்காக அவங்க மேலயும் சின்னதா ஒரு ஈர்ப்பு அவ்ளவு தான்..அத நா சரின்னு சொல்லல..அந்த ரெண்டுங்கெட்டான் வயசு..”

“………..”

“எதுக்கு மொறக்கிறீங்க..ஆமா க்ரஷ்ஷு தான்..அதுக்கென்ன இப்போ..எனக்கு எக்கச்சக்கமா க்ரஷ்ஷு இருந்துச்சு தான்..சின்ன வயசுல பக்கத்து வீட்டு அபி அண்ணா..செவன்த் ஸ்டேன்டர்ட்ல உங்க க்ளால் ரமேஷ் அண்ணா..அப்றம் நம்ம கோயில் தெரு குணா அண்ணா..அப்றம் நம்ம பக்கத்து வீட்டு பிரகாஷ் அண்ணா..ஆ..தர்ஷினியோட ஹஸ்பெண்ட் அர்ஜுன்…உங்க பெஸ்ட் ப்ரெண்டோட தம்பி கார்த்திக்..அப்றம் உங்க சித்தி பையன் குருமூர்த்தி..ம்ம்..ஆ..நம்ம வீட்டுக்கு பக்கத்துல தங்கிக்க வந்தாங்களே வெற்றிவேல்..உங்க சீனியர் வசந்தன்..அப்றம் உங்க ஆபிஸ் மேகலாவோட தம்பி மனோஜ்..அப்றம் எங்க ஆபிஸ் பார்த்திபன்.. இவங்க எல்லாரும் என்னோட க்ரஷ் லிஸ்ட்ல இருந்தவங்க தான்..ஆனா லவ்வுன்னது உங்க மேல மட்டுந்தான்..”

“என்ன சமாளிக்கிறியா..?”

“இல்ல உண்மய சொன்னேன்..”

“என்னோட மனசுக்கு நாம கட்டிக்க போறவங்கள தவிர மத்தவங்க மேல விருப்பப்பட்ரதே தப்பு..அது புரியுதா..?”

“அப்போ உங்க காதல் மட்டும் சரியா..?” கொஞ்சம் கோபமாய் அவள் கேட்டிட சட்டென மௌனியாகி நின்றான், தேவேந்திரன்.

அவள் கேள்வியும் நியாயமானது தானே.

ஏனோ அந்த கேள்வியைக் கேட்டிட்டும் போதே அவள் விழிகளில் அனல் பறந்தது.

வேறு எந்த பெண்ணை உருகி உருகி அவன் நேசித்திருந்தாலும் அவனின் காதல் கை கூடட்டும் என்கின்ற எண்ணமாவது அவள் மனதில் உதித்திருக்கும்.

ஆனால், அவன் நேசித்தது தர்ஷினி ஆயிற்றே.

அவளால் அவனின் காதலை ஒப்புக் கொள்ள முடியவே இல்லை.

ஏனோ…?

“இங்க பாரு ஆர்த்தி..டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட்..என்னோட பர்சனல்ல தலையிட்ற உரிம உனக்கு கெடயாது..மைன்ட் இட்..” பதில் சொல்ல முடியாமல் திணறிய நிலையில் எழுந்த கோபத்தை அவள் மீது காட்டி விட்டு அவன் நகர்ந்திட அவளுக்குத் தான் விழிகள் கலங்கிற்று.

விடுவிடுவென கிளம்பி அவர்களின் வீட்டில் இருந்து வெளியே வந்தவளின் நடை அவளின் வீட்டை நோக்கி இருக்க கன்னத்தில் கண்ணீர் தடம் பதித்துக் கொண்டு வழிந்தது.

துடைக்க கூட விரல்கள் எழுந்திடவில்லை.

மனமும் அத்தனை வலித்தது, அவனின் அலட்சியத்தினால்.

“நீங்க யார லவ் பண்ணி இருந்தாலும் உங்க காதல என்னால அக்செப்ட் பண்ணிகிட்டு சேந்து வாழனும்னு வேண்டிகிட்டு இருக்க முடியும்…ஆனா தர்ஷினி..ம்ஹும்..அவள தான் நீங்க லவ் பண்றீங்கன்னு அப்போ தெரிஞ்சு இருந்தா கூட கண்டிப்பா நா சேரனும்னு வேண்டிகிட்டு இருக்க மாட்டேன்..” அவனிடம் சொல்ல இயலாலதை மனதினுள் மௌனமாய் அரற்றிய படி நடந்திட மனதில் அத்தனை வெறுமை.

தன் காதலை புரிந்து கொள்ளவும் முயல்வதில்லை.

கை சேராது என்று உணர்ந்தும் தன் காதலை விட்டு விடவும் முனைவதில்லை.

முதன் முதலாய் தன் காதலை நினைத்து மனம் கசந்தது,

அவளுக்கு.

இத்தனை நாள் தன் காதலை அவன் உதாசீனப்படுத்திய பொழுது இல்லாத வலி இன்று மட்டும் புதிதாய் துளிர்த்ததன் காரணத்தை அறியவில்லை, அவள் மனது.

அதே நேரம்…

தன் மனம் அமைதியடைந்திடும் வரை நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தவனை விசித்திரமாக பார்த்து வைத்தான், குரு.

தோழன் எடுத்திருக்கும் முடிவு சரியானது எனும் எண்ணமில்லை,

அவனுக்கு.

“யாதவ்வ்வ்வ்வ்வ்வ்..நீ பண்ணப் போறது சரியா..?” நீச்சல் குளத்தில் காலை விட்டு ஆட்டியவாறு கத்தியவனின் குரல் செவிப்பறையில் வந்து அலைமோதியதும் அவனிதழ்களில் சிறு புன்னகை.

“சில விஷயங்கள சொல்லி புரிய வச்சிற முடியாது..நடத்தி காட்டுனா தான் புரிஞ்சிப்பாங்க…அதுக்காக சரி நா இத பண்ணியாகனும்..”

“டேய் இது சீரியஸான விஷயம் டா..”

“யெஸ்..நானும் அத தான் சொல்றேன்..புரிய வேண்டியவங்களுக்கு புரிய மாட்டேங்குதே..ஸோ..அதுக்காக சரி இத பண்ணியாகனும்..”

“மச்சீஈஈஈஈ…இது ஒத்து வரும்னு தோணுதா..”

“கண்டிப்பா..” கூறியவனோ படிகளில் ஏறி வெளியே வந்தான்,

நீச்சல் தடாகத்தில் இருந்து.

தன் உடலில் கோலமிட்டிருந்த நீர்த்திவலைகளை துவாயால் ஒற்றிய படி இருந்தவனின் மனதில் நினைவுகள் நிழற்படமாகிட புன்னகையின் தேக்கம், இதழோரங்களில்.

“யாதவ்..அப்போ உன் பெட்ல நீ ஜெய்க்கனும்னு தான் இத பண்ணுற..?”

“ஆமா..பின்ன வேறெதுக்கு மச்சீ..இந்த ஒரு தடவயாவது அவன நா ஜெய்க்கனும்டா..”

“யாதவ் வேணான்டா..அந்த பொண்ணு ரொம்ப வருத்தப்படும் டா..”

“ஸோ வாட்..உருகி உருகி காதலிச்ச அவனுக்கு கூட அந்த கவல இல்ல..அதுக்கு நா என்ன பண்ண முடியும்..? இல்லன்னா தான் லவ் பண்ற பொண்ணுன்னு தெரிஞ்சும் அவளுக்கு இன்னொரு பையன் கூட கல்யாணம் பேச்சு வந்தத பாத்துட்டு சும்மா இருந்திருப்பானா..?”

“………….”

“அவனுக்கு புடிச்சது அவள மட்டுந்தான்..இப்போ எனக்கு அவன பழிவாங்க ஒரு சான்ஸ் கெடச்சுருக்கு..அத நா யூஸ் பண்ணிக்கிறேன்..உனக்கென்ன இப்போ..? அதான் அவ தான் டைவோர்ஸ் வாங்கப் போறா இல்ல..அப்றம் எதுக்கு நா பீல் பண்ணனும்..?”

“யாதவ்..பொண்ணுங்கள பத்தி இருக்குற தாட்ட மாத்து பர்ஸ்ட்..உன் வைப் மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்க..”

“வைப் இல்ல எக்ஸ் வைப்..”

“என்னமோ..அதுவா முக்கியம்..நீ பண்ணப்போறது ரொம்ப தப்பு யாதவ்..

அந்த பொண்ண காதலிக்கிற மாதிரி நடிக்க போற..”

“இங்க பாரு குரு..இப்போ அவ ஒரு டிவோர்ஸீஈ..யாரோட வைபும் கெடயாது..ஸோ அதுல என்ன தப்பு..மிஸஸ்..சாரி..சாரி மிஸ்.தர்ஷினி மனசளவுல ஸ்ட்ராங்க் இல்லியா..?”

“நீ..நீ தான் அந்த பொண்ண லவ் பண்ணிருவ போல இருக்கு..”

“என்ன மச்சீஈஈஈஈ..பதில் சொல்லாம யோசிச்சிகிட்டு இருக்க..தேவாவ நெனச்சா பாவமா இருக்கா..”

“போடா..நீயும் உன் வேலயும்..பட் திஸ் ஈஸ் நாட் குட்..நீ பண்ற வேல தப்பு..அத மட்டும் மைன்ட்ல வச்சுக்கோ..”

தொடரும்.

🖋️அதி….!

2023.08.23

Advertisement