சொல்லாமல்…!

மௌனம் 10(ii)

இன்று..

தன் முன்னே ருத்ரமூர்த்தியாய் அமர்ந்திருந்தவனைக்கண்டதும் அவருக்கு நா வரண்டு போயிற்று.

தீட்சண்யம் மின்னும் விழிகளில் அளவுக்கு மீறிய கோபம் அப்பிக் கிடக்க அந்த கூரிய பார்வையை தாங்கிடும் சக்தி அவருக்கு சற்றேனும் இல்லை என்பதே நிதர்சனம்.

இருபுறமும் கைப்பிடி இருக்கும் அந்த இருக்கையில் முழங்கையை ஊன்றி அதே கரத்தில் உள்ளங்கையால் கன்னத்தை தாங்கி அழுத்தமாய் அவரைப் பார்த்திருக்க ஏனோ அவனின் தோரணை அத்தனை ரசனையைத் தந்தது.

“செல்லக்குட்டி என்ன அப்டி பாக்கற..? ஐயா அவளோ அழகா இருக்கேனா..” ஒற்றைக் கண் அடித்து விட்டு கேட்டவனின் முகத்தில் குறும்புக்கு மாறாக கொப்பளித்தது ஒட்டு மொத்த ரௌத்திரம் ஆயிற்றே.

அவரோ பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்ள தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

அவனுக்கு அவரின் பயத்தில் அப்படி ஒரு மிதப்பு.

வாயில் இருந்த துணி எடுக்கப்பட்டிருந்தாலும் பேச வார்த்தை திக்கியதே.

அவனோ அவரை ஆசுவாசமாக பார்த்த படி முதுகுக்கு பின்னே சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து விரலிடுக்கில் வைத்து சுழற்றிட அரண்டு விட்டார்,

மனிதர்.

“எ..என்..என்ன பண்ணப்போற..?” உயிர் பயம் வார்த்தைகளை சிதறவிட்டிருக்க அவனிதழ்களில் தொக்கியிருந்த எள்ளலுடன் கூடிய நகைப்பு மேலும் விரிந்தது.

“நா ஒரு கத சொல்லவா செல்லக்குட்டீஈஈஈ..?” கைகளை பின்னே நீட்டி சோம்பல் முறித்த படி கேட்டவனின் குரலில் துளியும் கோபம் வெளிப்படவில்லை.

“என்ன எதுவுமே பேச மாட்டேங்குற..?” துப்பாக்கியை விரல் கொண்டு தடவிய படி கேட்க உள்ளுக்குள் அத்தனை பயம் மனிதருக்கு.

“சரி..சரி..சொல்லு கேக்கறேன்..” அவர் பிதற்ற அவரைப் பார்த்தவனின் இதழ்களில் மர்மப் புன்னகை.

“வாட்..சொல்லு..என்ன மரியாத இல்லாம பேசற..சொல்லுப்பான்னு சொன்னா தான் நா கத சொல்லுவேன்..” வேண்டுமென சிறு பிள்ளையாய் மாறி முறுக்கிக் கொண்டு நின்றான், அவன்.

“என்ன சொல்ல மாட்டியா..?” பெரு விரலாலும் நடு விரலாலும் தாடையை நீவிய சாவகாசமாய் சரிந்து சாய்ந்து கொண்டான், இருக்கையில்.

“உன்ன தான் கேக்கறேன்..என்ன சொல்ல மாட்டியா..?”

“………..”

“எதுக்கு இப்டி வெறிச்சு வெறிச்சு பாக்கற பயத்துல..நீ சொன்னா தான் நா கத சொல்லுவேன்..”

“………..”

“என்ன செல்லக்குட்டீஈஈஈ..என்ன பாக்கும் போது யாரயோ பாக்கற மாதிரி இருக்கா..?”

“………..”

“எதுக்கு இப்டி பேயறஞ்ச மாதிரி நிக்கற..இந்த பாரு நெத்தியில எல்லாம் வேர்த்து போட்டுருக்கு..கத சொல்லப் போறேன்னு பயந்துட்டியா என்ன..?” கேட்டவாறே க்ளவுஸ் போட்டிருந்த தன் கையின் ஆட்காட்டி விரலால் அவரின் வியர்வையைத் துளியொன்றை தொட்டு அவர் தோற்பட்டையிலேயே அழுத்தி துடைத்தான்,

சிறு புன்னகையுடன்.

“இப்போ நீ கத சொல்லுப்பான்னு சொல்லல…உன் கதய யாராவது சொல்லுவாங்க..அ மிஸ்டரி டெத்னு..ஓகேவாஆஆ..?”

“நீ..நீ சொல்லுப்பா நா கேக்கறேன்..”பதற்றத்துடன் வந்த அவர் குரலில் மொத்தமாய் பயம்.

“ம்ம்..ஒரு ஊர்ல ஒரு வெள்ள முயல் இருந்துச்சாம்..அந்த வெள்ள முயல் ரொம்ப கஷ்டப்பட்டு ஒழச்சி வாழ்க்கைல நல்ல எடத்துக்கு வந்துச்சாம்..அந்த வெள்ள முயலோட மனசும் ரொம்ப வெள்ள தானாம்..”

அவன் சொல்லிட வெளிறிய முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த மனிதரின் முகத்திலும் கழுத்திலும் வியர்வைப் பூக்கள் பூத்துக்குலுங்கின.

“என்ன..நீ ம்ம் சொல்ல மாட்டேங்குற..ம்ம் சொன்னா தான் எனக்கு கத சொல்ல வரும்..”

“……….”

“என்ன ம்ம் போட மாட்டியா..?”

“ம்ம்..”

“தட்ஸ் குட்..” என்றவனின் விழிகளில் இப்போது மெல்ல ரௌத்திரம் ஏறத் துவங்கி இருந்தது.

“அந்த வெள்ள முயல்கு ஒரு பொண்ண பாத்து பேசுனாங்களாம்..அப்றம் கல்யாணம் எல்லாம் நடந்து கொழந்தயோட அவங்க சந்தோஷமா இருக்கும் போது திடீர்னு ஒரு நாள் தன்னோட நண்பன தேடி வந்துச்சாம் கேடி செகப்பு முயல்..த்து த்தூஊஊஊஊ..செகப்பு நரி..” என்றிடும் போதே அவனின் சப்பாத்து அணிந்த பாதங்கள் காயங்களை சுமந்திருந்த அவரின் பாதத்தை நசுக்கிட கத்தப் பார்த்தவரின் கழுத்தில் துப்பாக்கி முனையை வைத்திருந்தான்,

மறுப்பாய் தலையசைத்தது.

சர்வமும் அடங்கி சப்த நாடி அடங்கிய ஏறி இறங்கிய தொண்டைக்குழியில் இருந்து வழிந்தது,வியர்வைத் துளிகள்.

 “ஷ்ஷ்ஷ்..சத்தமா  வந்தா அடுத்ததா அ மிஸ்ட்ரி டெத்னு உன் கதய தான் நா சொல்ல வேண்டி வரும்..ஸோ பீ கொய்ட்..” என்க பயத்துடன் தலையசைத்தவரின் விழிகளில் இருந்தது,

வழிந்தது திரவமொன்று.

“அப்றம் என்னாச்சுன்னா அந்த செகப்பு நரி வந்து தன்னோட நண்பன் கிட்ட “மச்சான்..மச்சான்..என் கஷ்டத்தை பாருடா” ன்னு சொல்ல வெள்ள முயலும் செகப்பு நரியோட குறுக்கு புத்தி தெரியாம அந்த துரோகிக்கு ஹெல்ப் பண்ண போய்டுச்சாம்..என்ன இப்டி பாக்கற..? நா ஏதாச்சும் தப்பா சொல்றேன்..கரெக்ட் தானே..?”

“………..”

“இங்க பாரு உன்ன தான் கேக்கறேன்..கரெக்ட் தான…” என்றவனின் விரலோ துப்பாக்கியை இன்னும் அவரின் தொண்டைக்குழிக்குள் அழுத்த ஆமோதிப்பாய் தலையசைத்தவரின் உள்ளுக்குள் கிடுகிடுத்தது.

“அப்றம் என்னாச்சுனா..பர்ஸ்டு வெள்ள முயலோட பாமிலில சண்டய மூட்டி விட்டு வெள்ள முயல் ப்ளஸ் அதோட வைப தனியா சிட்டிக்கு கூட்டி வந்துச்சாம்..செகப்பு நரியோட திட்டம் தெரியாம வெள்ள முயலும் வந்து சேர என்னக்கும் இல்லாம ஒரு ப்ராப்ளம் வந்து வெள்ள முயலோட வைப் வெள்ள முயல விட்டு பிரிஞ்சு போச்சாம்..அது அந்த குள்ள நரி கள்ள நரியோட ப்ளேன்னு அப்போ அவங்களுக்கு புரியாதது தான் ப்ராப்ளமே..”அவன் தீவிரமான முகத்துடன் இங்கு அவருக்கோ உயிர்க் கூட்டினுள் நடுக்கம்.

“என்ன செல்லக்குட்டி…நடுங்குதா..அப்றம் என்னாச்சுன்னா ஒரு நாள் அந்த வெள்ள முயல அந்த குள்ள நரி போட்டுத் தள்ளி மொத்த சொத்தையும் தன்னோட பேருக்கு மாத்திக்க இப்போ அது சிட்டில நல்ல ஒரு பிஸ்னஸ் மேன்..ம்ம்..டூ யூ க்நோ ஹிம்..?” என்று ஆட்காட்டி விரலால் நெற்றியில் தட்டியவாறு கேட்டிட அவனின் பாவனையில் இன்னும் உதறல் தான் மனிதருக்கு.

எந்த வித பதிலையும் அவர் கொடுக்காது இருக்கவே சன்னமாய் சிரித்தவனின் விழிகளில் இப்பொழுது முழுதாய் வன்மமே.

“என்ன உனக்கு தெரியாதா..?”

“………….”

“என்ன பதிலே சொல்லாம இருக்க..?”

“……….”

“என்ன பயம் விட்டுப் போச்சா..?” கேட்டவாறு தொண்டைக்குழியில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரின் நடு மண்டையில் ஓங்கி அடிக்க குருதி வழிந்தது, தலையிலிருந்து முகம் வரை நெற்றியூடு.

துப்பாக்கி முனை கத்தலை அடக்கியிருக்க வலியில் தவித்து பதறி துடித்து துடைக்கப் பார்த்த விரல்கள் அந்தரத்தில் நின்றது, அவன் பார்வை வெளிப்படுத்தி நின்ற அர்த்தத்தில்.

“குட் பா..”என்றவாறு சாவகாசமாய் காலை நீட்டி அமர்ந்திருந்தவனின் மனதில் அவரின் குருதி கண்டு அப்படி ஒரு மகிழ்ச்சி.

அவரைப் பார்த்து என்ன தோன்றியதோ…

“கே.கே.”என்று தன் சிம்மக்குரலில் பதறிக் கொண்டு கதவை திறந்து வந்தான்,

அவன்.

“பாஸ்ஸ்ஸ்ஸ்..” குருதி வழிய அமர்ந்திருந்தவரையும் அவனையும் மாறி மாறி பார்த்து எதுவும் புரியாமல் நிற்க உதவியாளனின் குழப்பம் முகம் புரியாது போகுமா..?

அவனுக்கு.

“இந்தாளுக்கு நைட் சாப்பாடு கொடுக்காத..ம்ம்..இன்னும் ஒரு டூ டேஸ்கு அப்றம் தான் நா வருவேன்..அது வர பத்ரம்..” சொல்லிக் கொண்டே எழுந்து கையுறையை கழற்றி அருகில் இருந்த குப்பைக் கூடையில் இட்டு விட்டு பின்னே திரும்பியும் பாராமல் நிமிர்வாய் நடந்து சென்றிட அவனின் கம்பீரத்தை கண்டு கலவையான உணர்வுகள் உதவியாளனின் மனதில்.

அதே நேரம்…

வழமை போல சாரதாவுடன் கதைத்திட கயல்விழி வந்திருக்க அவளை அற்பப் பார்வையுடன் கடந்து விட்டிருந்த ஆரிணியிற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை, அவளிடமிருந்து.

கண்ணாடிக்கு கல்லெறிந்தால் உடையும்.

ஏற்கனவே நொருங்கிப் போன துகள்களுக்கு கல்லெறிந்தாலும் கடப்பாறையால் அடித்தாலும் என்ன நடந்திடப் போகிறது..?

பெரிய அண்ணன் சித்தார்த் வந்துருக்காரு…அதான் வெளில வர்ல..” யாருடனோ அலைபேசியில் கதைத்துக் கொண்டே செல்வது கேட்டிட கூடுதலாய் கிடைத்திருந்தது, ஒரு செய்தி.

வெறுமையான பெருமூச்சொன்று அவளிடம் இருந்து வெளிப்பட்டிட அதற்குள் வந்து விட்டிருந்தார், சாரதா.

அவரைப் பார்த்து இவள் புன்னகைத்திட பதிலுக்கு அவளருகே வந்து அமர்ந்து கொண்டு புன்னகைத்தவரின் முகத்தில் மெல்லிய கலக்கம் சூழ்ந்திருந்தது.

“மேடம்ம்ம்ம்ம்..ஸ்டார்ட் பண்ணலாமா..?”

“ம்ம்..சரிம்மா..”

“உங்க லைப்ல நீங்க சந்திச்ச கேஸ்ல ரொம்ப எமோஷனஷா டச் பண்ணது எது மேம்..?” என்றிட அவர் முன் நிழலாடியது, பல நினைவுகளின் கோர்வை.

“நெறய இருக்குமா..இன்னிக்கு நா ஒன்ன சொல்றேன்..”

“சரி மேடம்ம்ம்ம்ம்ம்..”

வருடம் 2022 ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி.

ஏ.கே தனியார் மருத்துவமனை.

சென்னை.

நேரம் நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டிக் கொண்டிருந்த சமயம் அது.

நெடுநாளைக்கு பிறகு நைட் டியூட்டில் சாரதா தரித்திருக்க கணவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்திக்கு  பதில் அனுப்பி விட்டு நிமிர்ந்திட அந்த இடமே அதிரும் வண்ணம் ஒலித்த “டாக்டர்..” எனும் கத்தல் அவரின் செவிப்பறையில் அலைமோதிட உள்ளுக்குள் பெரும் திடுக்கிடல்.

ரிசப்ஷனின் அருகே இருந்த அறையில் அவர் தரித்திருந்ததால் சத்தம் நன்றாகவே கேட்டிட பதற்றத்துடன் வெளிவந்தவரின் விழிகளை அவனின் விம்பத்தை கண்டவுடன் பெரும் அதிர்வில் விரிந்தன.

அந்த வெண்ணிற சட்டையில் பாதி குருதியில் தோய்ந்திருக்க பெண்ணொருத்தியை கைகளில் ஏந்தி நின்றிருந்தது,

ஒரு ஆடவன் தான்.

விழிகள் கலங்க கசங்கிய முகத்துடன் நின்றிருந்தவனின் கன்னத்தில் கண்ணீர் வழிந்ததற்கான தடமும் இருந்தது.

அவனின் நிலை கண்டு வெகுவாய் அதிர்ந்து போயிருந்தார்,அவர்.

இத்தனை நாட்களில் இப்படி ஒரு கோலத்தில் அவனைக் கண்டதே இல்லையே.

அவரின் உறைநிலை கண்டு அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

“டாக்டர்..” மீண்டும் உச்தஸ்தானியில் கத்திட அருகே ரிஷப்ஷனில் இருந்த பெண்ணுக்கும் சற்றே பயம் வந்தது, மறுப்பதற்கல்ல.

அவனின் சத்தம் கேட்டு விரைந்த இன்னும் ஓரிரு மருத்துவர்கள் துரிதமாய் செயற்பட்டு அவளுக்கான சிகிச்சைகளை ஆரம்பித்திட சிகிச்சை நடந்து கொண்டிருந்த அறைக்கு வெளியே தலையை தாங்கிய படி அமர்ந்து கொண்டிருந்தவனின் ஏனோ அவரின் மனதை வெகுவாக பிசைய மெல்ல அடியெடுத்து வைத்து அருகே அணுகியவரை எட்ட நிறுத்தியது, காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்தவனின் விழிகள் பாய்ச்சிய அழுத்தமான பார்வை.

அந்த பார்வை அவருக்கு பெரும் பயத்தை தந்திட அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவரின் பார்வை அவனை விட்டு விலகவே இல்லை.

முக்கால் மணி நேரம் கடந்திருக்கும்.

சிகிச்சைகளை முடித்து விட்டு வந்திட்ட மருத்துவர்களுக்கும் அவனின் தோற்றம் கண்டு சிறு வியப்பு தான்.

“ரொம்ப லவ் பண்றீங்க போல..சின்ன இன்ஜரீஸ் தான்..என்ன கொஞ்சமா ப்ளட் லாஸ் ஆகியிருக்கு..அதனால சின்ன மயக்கம்…மத்த படி ஒன்னும் இல்ல..காம் டவுன் மை ஹேன்ட்ஸம்..அவங்களுக்கு ஒன்னும் இல்ல..அவங்க மயக்கத்துல இருக்காங்க..காலைல கண் விழிச்சுருவாங்க..டோன்ட் வொர்ரி..” அவனின் நிலை கண்டு மூத்த மருத்துவர் ஒருவர் தோளைத் தட்டி சிறு புன்னகையுடன் சொல்லி விட்டு நகர்ந்திட அவனுக்கு “அவள் நலம்…”என்கின்ற செய்தியே பெரும் இதமாய்.

அவர்கள் வெளியேறிய பின் அறைக்குள் நுழைந்தவனின் பாதங்கள் துவழ நடையின் வேகமும் ஒவ்வொரு அடிக்கும் தேய்ந்தது.

தலையில் கட்டுடன் மயக்க மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை கண்டதுமே அவன் விழிகளில் நீர் கோர்த்தது.

அவன் அப்படி பட்டவன் அல்ல.

அத்தனை அடிகளை தாங்கியும் அழுத்தமாய் வளர்ந்திருப்பவனின்  இயல்பு இவளின் முன் மட்டும் இருப்பிடம் தெரியாமல் காணாமல் போகிறதே.

அடங்காது அசராது அழுத்தமாய் நிற்பவனின் ஒற்றை பலவீனம் அவள்.

அவனை முற்றாய் மாற்றி விடும் ஒற்றை பலவீனம்.

அருகே இருந்த சிறு கதிரையை இழுத்துப் போட்டு அவளருகே அமர்ந்து கொண்டு விழியெடுக்காது அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அழுகை வந்திட அவளின் ஒற்றைக் கையை எடுத்து தன் முகம் புதைத்து அழுதிட அவனின் விழிகளில் ஈரம் அவளின் கையை நனைத்தாலும் அதை உணர்ந்திடும் நிலையில் இல்லையே அவள்.

மூன்று நிமிடங்கள் அவளின் கைகளுக்குள் தன் முகத்தை புதைத்து ஆறுதல் தேடியிருப்பான் போலும்.

துவண்டு விழும் சந்தர்ப்பங்களில் நேசிப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் வார்த்தைகளும் ஸ்பரிசங்களும் தந்திடும் ஆறுதல் அளப்பரியதல்லவா…?

குழந்தையாய் மாறிப் போயி உடைந்து நின்றிருந்தவனை கதவோரம் சாய்ந்து விழியெடுக்காது பார்த்து நின்றிருந்தார், சாரதா.

அவரைக் கேளாமலே விழிநீர் ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருந்தது,

கன்னத்தில் கரை தீட்டிய படி.

தொடரும்.

🖋️அதி…!

2023.08.18