Advertisement

சொல்லாமல்…!

மௌனம் 10(i)

சில வருடங்களுக்கு முன்பு…

யாருடனோ பேசிய படி வந்தவனின் குரல் அவளின் விழிகளை விரியச் செய்தது என்றால் அந்த அழுத்தமான காலடியோசையைக் கேட்டு மெதுமெதுவாய் ஊற்றெடுத்தது, பயம்.

“ஐயோஓஓஓஓ…மாட்டுனோம்டா சாமி..” என்றவளுக்கு சத்தியமாய் தப்பிக்கும் உபாயம் பிடிபடவில்லை, அந்நொடி.

“க்கும்..” இலேசாக ஆடவன் தொண்டையைக் கனைக்க கொஞ்சம் தன்னை திடப்படுத்திக் கொண்டு திரும்பியவளின் முகம் முழுதும் மறைக்கப்பட்டிருக்க துப்பட்டாவின் விளிம்புகளை மேலும் கீழும் தாங்கி பயமும் அதிர்வும் ஒரு சேர கலந்து விரிந்திருந்த விழிகளை ஏனோ சந்திக்க இயலவில்லை, ஆடவனால்.

பட்டென பார்வையைத் திருப்பி கருமணிகளை அலையவிட்டு மீண்டும் அவள் விழிகளுக்குள் செலுத்தி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி நின்றவனுக்கு தன்னிடமே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

தனக்குள் எந்த சலனமும் இல்லை என்று தனக்கே உணர்த்திட வேண்டிய தேவை.

“யாரும் ஹெல்புக்கு வர்லியா..?”முயன்று ஏற்படுத்திக் கொண்ட நேரப்பார்வையுடன் அவன் கேட்டிட நாலாப்புறமும் அசைந்து அவளின் தலை.

“யாரும் கூட வர்லியா..?” இறுகிய குரல் மீண்டும்.

மறுப்பாய் அசைந்த அவளின் சிரசை கண்டதும் அவனுக்கு என்ன தோன்றியதோ…?

“ஓகே..கேரி ஆன்..” சாதாரணமாய் சொல்லி விட்டு நகர்ந்திருந்தான் அவ்விடத்தில்.

அவளுக்கு அவன் நடத்தை கொஞ்சம் புதிராய் தெரிந்தாலும் ஆராய்ச்சி செய்திட விழையவில்லை, மனம்.

மொத்த இடத்தையும் சுத்தம் செய்து குப்பைகளை அள்ளிப் போட்டு நிமிர்ந்திடும் போது அத்தனை களைப்பாய் இருந்தது.

வெளியை கைகளை கழுவிக் கொண்டு வந்து தன் துப்பட்டாவை முகத்தில் இருந்து அகற்றி தன் பின்னலை சரிபார்த்துக் கொண்டு திரும்பியவளின் செயல் தூரத்தில் நின்றிருந்த தேவாவின் விழிகளில் பதிந்திட ஏனோ கொஞ்சமாய் ரசனைத் துளிகளின் தேக்கம் ஆடவனின் விழிகளில்.

அவளருகே நின்றிருந்த இன்னொரு மாணவன் அவளை அதே போல் ரசனையுடன் பார்ப்பது புரிந்து இவனுக்கு பிடிக்கவில்லை.

அதிலும் தனக்குத் தெரிந்தவன் தான் என்பதும் மனதில் நிழலாடியது.

ஏனோ கோபம் கொண்டு சலிப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு வெளியேறிட எதுவும் அறியாமல் வெளியேறி இருந்தாள், அவளும்.

“இவளுக்கு யாரு அங்க வச்சி அப்டி இருக்க சொன்னாங்க..? அடுத்தவன் பாக்குறது புரியாம அப்டி இருக்கா..?” மனதால் அவளை அர்ச்சித்த படி முன்னே இருந்த மரத்தடியில் வந்து நின்றிட்டவனுக்கு அவளுக்கு தானும் அந்நியவன் தான் என்கின்ற எண்ணம் அந்த நொடி வரவே இல்லை.

கடுகடு முகத்துடன் அவன் நின்றிருக்க அவளோ தோழிகளுடன் ஏதோ கதைத்த படி அவனைக் கண்டு கொள்ளாது தன்பாட்டில் கடந்து சென்றிட இவனுக்கு இன்னும் எகிறியது.

சிகைக்குள் விரல் நுழைத்து பரபரவென அழுத்தமாய் தடவிக் கொண்டதன் விளைவாய் முன் நெற்றியில் வழமைக்கு மாறாய் முட்டி நின்றன சிகைக் கற்றைகள்.

அவனின் மனதை அறிந்தோ என்னவோ அதே நேரம் இத்தனை  நேரம் அவளை பார்த்துக் கொண்டிருந்த அந்த மாணவன் கடந்து செல்ல அவனை நிறுத்தியது, “ஜூனியர்..” எனும் ஆடவனின் அழைப்பு.

பக்கத்தில் குடியிருப்பவன் என்பதால் அவனின் இதழ்களில் புன்னகை நெளிந்திட அதற்கு பதில் புன்னகை கூட துளிர்க்கவில்லை,

ஆடவனின் இதழ்களில்.

“சொல்லுங்க அண்ணா..” அவனின் கட்டளையை மீறாத படி வந்து நின்றவனை ஏறிட்டவனின் விழிகளில் இருந்து தப்பவில்லை, வலது நெற்றியின் ஓரமாய் இருந்த மெல்லிய கோடான வடு.

“ஜூனியர்..உங்களுக்கு அந்த பொண்ண புடிச்சுருக்கா..?” உணர்வுகள் எதனையும் பிரதிபலிக்காத பாவத்துடன் அவன் கேட்டிட முதலில் அதிர்ந்து விரிந்தது அவனின் விழிகள்.

இருந்தாலும் தேவாவின் முகத்தில் கோபம் எதுவும் பிரதிபலிக்கப்படாததை உறுதிப்படுத்திக் கொண்டு ஆமோதிப்பாய் தலையசைத்திட அடுத்த நொடி கணிக்க முடியாத அளவு இறுக்கம் ஆடவனின் வதனத்தில்.

“ஓஹ்ஹ்ஹ்ஹ்..” வெறுமையை மட்டும் தன்னகத்தே கொண்டதாய் அவன் தொனி.

“அண்ணா..யார் கிட்டயும் சொல்லிர மாட்டீங்க தானே..”அவன் தயங்கித் தயங்கிக் கேட்டிட “இல்லை” என்பதாய் தலையசைத்தான்,

தேவா.

“ஜூனியர்..அந்த பொண்ணுக்கு பர்ஸ்ட் யார் மேலயாவது விருப்பம் இருக்கான்னு பாத்துக்கோங்க..”

“இல்லண்ணா..ரொம்ப நல்ல பொண்ணு..அவ ரொம்ப ரொம்ப நல்லவ..” என்க தேவாவின் முகத்தில் ஒரு வித கோபம்.

ஏனோ அவளை அவன் ஒருமையில் அழைத்தது துளியும் பிடிக்கவில்லை,

ஆடவனின் மனதிற்கு.

“லுக் ஜூனியர்..என்ன உரிமைல வா போன்னு பேசறீங்க..பர்ஸ்ட் ரெஸ்பெக்ட் கொடுக்க பழகிக்கோங்க..உங்களுக்கு அந்த பொண்ண புடிச்சி இருந்தாலும் அவளுக்கு உங்கள புடிக்கும் வர..புடிச்சாலும் அவங்க பர்மிஷன் தர்ர வர அவங்கள மத்தவங்க முன்னாடி வா போன்னு பேசுற உரிம உங்களுக்கு கெடயாது..ஓகே ரைட்ட்ட்ட்..” அழுத்தம் திருத்தமாய் வந்த குரலில் தானாகவே ஒப்புக் கொண்டு ஆடியது, முன்னிலையில் இருந்தவனின் சிரசு.

“நீ மட்டும் மரியாதயாயவாடா பேசற..?” மனம் கேட்டிட ” நா அவகிட்ட தான் ஒருமைல பேசறேன்..மத்தவங்க முன்னாடி மரியாதயா தான பேசறேன்..” என தன் செயலை நியாயப்படுத்தி மார்தட்டிக் கொண்டது மனது.

“அப்போ அன்னிக்கி பாலாகிட்ட பேசுனது..?”

“அது தவறுதலா..” தன் மனசாட்சிக்கு பதில் சொல்லிட அதுவே இவனின் சமாளிப்பு தாளாமல் அடங்கிப் போய்விட்டது.

அழுத்தமாய் அவனிடம் பேசி விட்டு நகர்ந்திட அவனைப் புரியாது பார்த்து நின்ற மாணவனுக்கு ஏனோ சிறு கோபம் எழுந்தது ஆடவன் மீது.

மதிய நேரம் தாண்டி மீண்டும் கேட்போர் கூடத்திற்கு வந்திருந்தான்,தேவா.

ஒருமுறை அவளைத் தேடி நாலாப்புறமும் சுழன்ற விழிகள் அவளைக் காணாது ஏதோ ஓர் ஏமாற்றத்தை மனதில் விதைத்திட நெற்றியைத் தடவிக் கொண்டான், அவன்.

விலகத் தான் பார்க்கிறான்..

விழிகளில் விம்பம் விழுந்தவுடன் விடாப்பிடியாய் விடை கேட்கிறதே மனம் விலகலுக்கான எண்ணத்துக்கு.

அதே அவனின் அலைபேசி ஒலிக்க அழைப்பை ஏற்று பேசி விட்டு திரும்பிட சில பைகளுடன் அவள் உள்ளே நுழைவது தெரிய எதிர்பாரா அதிர்வில் அவன் விழிகள் விரிந்திட கொஞ்சம் ஆழமாய் மூச்சு வாங்கியது.

“தேவா என்னடா..ரேஸ் ஓடிட்டு வந்தவன் மாதிரி இப்டி மூச்சு வாங்கற திடீர்னு..” எதிர்முனையில் இருந்த பாலா அவனின் மூச்சுக் காற்றின் ஓசையில் கேட்டிட எதுவும் இல்லை என மழுப்பி சமாளித்தான்,ஆடவன்.

அழைப்பை துண்டித்து விட்டு நிமிர தோழனை திரும்பவும் மேடைக்கு வரச் சொல்லி அழைக்க வந்திருந்தான்,கிஷோர்.

தேவாவும் மேடையேற அடிக்கடி ஒலித்தது, அவனின் அலைபேசி.

“மச்சீ..என்னடா புது ரிங்க்டோன்..எங்கிருந்துடா தேடி எடுத்த..? எனக்கும் அனுப்பி விட்றா..”அழைப்பை துண்டித்து விட்டு திரும்பிய தோழனிடம் கேட்டான்,கிஷோர்.

“புதுசு இல்லடா பழசு தான்..பழய மூவி பீ.ஜீ.எம் ஒன்னு..”

“உன் டேஸ்டே டிபரெண்ட் தான்..யுனிக்காவும் இருக்கும்..”

“அது அப்டி தான்..நம்ம டேஸ்ட்டும் தாட்ஸும் யார் கூடவும் ஒத்து போகாது..”

“நெனச்சிக்க வேண்டியது தான்..”

“என்னடா முணுமுணுப்பு..”

“ஒன்னுல்ல..தேவான்னே தேவா தான்னு சொன்னேன்..”

“நம்ப முடியலியே..ஆனா ஒன்னு உண்ம தான்..தேவான்னு சும்மாவா..?” ஒற்றைக் கண் அடித்து கெத்தாய் கேட்டிட்ட கணம் மீண்டும் அவனின் ரிங்க்டோன் ஒலித்திட பாக்கெட்டினுள் துழாவியவனுக்கு அடுத்த நொடி அலறுவது அவனின் அலைபேசி அல்ல என்பது புரிந்திட விழிகளை சுழற்சியடைந்தது.

அவர்களுக்கே சற்றுத் தள்ளி இருந்த தர்ஷினி தான் பதறிக் கொண்டு அழைப்பை ஏற்றிருக்க தோழனின் விழிகளை தொடர்ந்து பயணித்த கிஷோரின் விழிகளில் அத்தனை அதிர்வு.

இதழோரம் ஒட்டிக் கொண்டு மிளிர்ந்த குறும்புப் புன்னகையுடன் தோழனை பார்த்திட அதிர்ந்தாலும் தனை மீட்டு நின்றிருந்தவனை கலாய்க்கத் தோன்றிற்றே.

“ஆமா..மச்சீஈஈஈஈ…தேவான்னா சும்மா இல்ல..” ஒரு வித சிரிப்புடன் கூறிட ஆடவனுக்குத் தான் தலையை எங்காவது முட்டிக் கொள்ளலாம் என்று தோன்றிற்று.

அசடு வழியாமல் முறைப்புடன் தன் வேலையை பார்க்கத் துவங்கியவனுக்கு மனதின் அடி ஆழத்தில் ஏனோ சின்னதாய் ஒரு சந்தோஷம்.

காரணத்தை ஆராய்ந்து தன்னை கலவரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையே,

ஆடவன்.

தர்ஷினிக்கு  அவன் தன்னை கவனிப்பது புரியவே இல்லை.

என்னதான் வேலையில் மும்முரமாய் இருந்தாலும் அடிக்கடி ஒலித்த அவளின் அலைபேசி சத்தத்தில் தன்னிச்சையாக இவனின் விரல்கள் தன் பாக்கெட்டை தடவி அலைபேசியை எடுக்க முயல்வதும் அதைக் கண்டு கிஷோர் நமட்டுச் சிரிப்பை உதிர்வதும் நடந்து கொண்டிருக்க தோழனை சத்தியமாய் எதிர்கொள்ள இயலவில்லை,

ஆடவனால்.

ஒருவாறு வேலைகள் அனைத்தும் நிறைவுற அனைவரையும் வெளியேறச் சொல்லி விட்டு அந்த மண்டபத்தின் கதவை பூட்டிக் கொண்டு இருக்கும் வேளை அவன் முன்னே வந்து நின்றாள், தர்ஷினி.

அவள் உடல்மொழியில் அப்படியொரு பதட்டம்.

என்னவென்று கேட்டு தீர்த்திட ஆழ்மனம் உந்தினாலும் ஏனோ கேட்டவில்லை.

“சீனியர்..என்னோட பேக் உள்ள இருக்கு..?” வார்த்தைகளை கோர்த்தவனின் விழிகளில் எங்கே திட்டுவிடுவானோ என்கின்ற பயம் அதிகமாகவே.

இயல்பாய் இருந்தால் பேசாமல் கதவை திறந்து விட்டிருப்பானோ..?

இவளென்பதால் ஏதோ தடுமாற்றம் தனை சூழ்ந்திட செய்தறியாது தவித்தவனுக்கு அவளை அலட்சியப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.

புறக்கணிப்புக்கள் வெறுப்பும் எரிச்சலும் மட்டும் தான் என்று யார் சொன்னது..?

ஆழமான நேசங்களும் இனம்புரியா தவிப்புக்களும் புறக்கணிப்புக்கு காரணமாகி விடலாமே.

“ப்ச்ச்..வெய்ட்..” அவன் வேண்டுமென்று சலிப்புடன் சொன்னது அவளுக்கு கொஞ்சம் சங்கடத்தை தர தோழனின் புதிரான நடத்தையை புருவம் சுருக்கி பார்த்த கிஷோருக்கு ஏதோ ஒன்று மனதில் ஊர்ஜிதமாகியது.

அவனோ கதவைத் திறந்து விட வேகவேகமாக சென்றவளின் கரங்கள் தன் பையை எடுத்த வேகத்துக்கு அது ஒரு புறமாய் சரிந்திட பையில் இருந்த சில பொருட்கள் கீழே சிதறியது.

தேவாவை ஒரு பார்வை பார்த்து விட்டு பதறிக் கொண்டு குனிந்து பொறுக்கி எடுத்தவளுக்கு பையில் இருந்த தனது கீ செய்ன் சற்றுத் தள்ளி விழுந்தது கருத்தில் பதியவில்லை.

ஆனால், அது தப்புமா..? ஆடவனின் நேத்திரங்களில் இருந்து.

கீழே குனிந்து அதை எடுத்துக் கொடுத்திடப் பார்க்க அதற்கு முன்னமே விட்டால் போதுமென ஓடியவளின் செயலில் மெல்லமாய் இதழோரம் எட்டிநின்றது, சிறு கோட்டுப் புன்னகையொன்று.

மீண்டும் கதவை அடைத்து விட்டு வரும் போது தான் கவனித்தான், அவளின் கீ செய்னை.

சிறு கண்ணாடி குப்பியில் ஏதோ ஒரு திரவம் மிதக்க அதனுள் இருந்த அரிசிமணியில் “தேவா” என்று ஆங்கிலத்தில் இருபுறமும் எழுதியிருக்க பார்த்திட அழகாய் இருந்தது.

பொதுவாக ஜோடிகளின் பெயர்களையே தனித்தனியாய் ஒவ்வொரு  புறமும் எழுதியிருப்பதை கண்டவனுக்கு இவள் தன் பெயரையே இரு புறமும் எழுதியிருப்பதை கண்டு ஒட்டிக் கொண்டிருந்த இதழ்கள் மீள விரிந்திட்டது.

தோழனின் கையில் இருந்ததை வாங்கிப் பார்த்த கிஷோருக்கும் ஏதோ ஒன்று நினைவில் வந்திட சிறு புன்னகை.

“டேய் என்னடா சிரிக்கிற..?”

“ம்ஹும்..ஒன்னுல்ல..”

“என்னடா ஒரே பேர் ரெண்டு சைட எழுதியிருக்கே..வழமயா ஜோடி பேர தான எழுதுவாங்கனு யோசிக்கிறியா..?”

“இல்லயேடா..சரியா தான எழுதியிருக்கே..தேவா..தேவா..” என்று அவனையும் தூரத்தில் நின்றிருந்த அவளையும் சுட்டிக் காட்டிக் இயல்பாய் கூறிட அதிர்ந்தாலும் மறு நொடி உறுத்து விழித்தான், தோழனை.

மெல்ல மேலெழுந்த கரத்தின் விரல்கள் தோழனின் கழுத்தை அழுந்தப் பற்ற பதறினான்,கிஷோர்.

“டேய்..விட்றா..கொலகாரப் பயலே..விடுடா..பக்கி..ஆஆ..ஆஆ..நெருக்காதடா..”

“………”

“சரி சரி…மொறக்காத..இனி நா அப்டி சொல்ல மாட்டேன்..” என்கவே விடுபட்டு மீண்டது,

ஆடவனின் விரல்கள்.

“சரி..எதுக்கு இந்த கீ சென்ய கொடுக்காம வச்சிகிட்டு இருக்க..?”

“கொடுக்கனும்..நாளக்கி கொடுக்குறேன்..”

“தோடா..என்ன இது திடீர் மாற்றம்..?”

“இப்போ போனா அரண்டு நின்னுரும்டா அந்த பொண்ணு..அதான் நாளக்கி அவங்க கைல கொடுத்துர்லாம்னு இருக்கேன்..” என்றவனுக்கு அதை அவளிடம் ஒப்படைத்திடும் எண்ணம் மனதில் சிறிதளவும் இல்லை தான்.

“பாக்கலாம்…” என்ற தோழனுக்கு ஆடவனின் பதில் முறைப்புத் தான்.

இரவு நேரம்.

தேவா கட்டிலில் படுத்திருக்க நடுவிரலில் மாட்டியிருந்த வளையத்தில் உபயத்தால் அவனின் உள்ளங்கையில் தொங்கிக் கொண்டிருந்தது அந்த கீ செய்ன்.

ஏனோ தெரியவில்லை.

அடிக்கடி பார்வை அதை தொட்டு மீண்டிட இதழ்கள் உச்சரித்து சிரித்துக் கொண்டன “தேவா” என்று.

Advertisement