*5*

“என்னங்க ஏதோ யோசனைல இருக்குற மாதிரி இருக்கு?” கடையிலிருந்து வந்ததிலிருந்து சிந்தனை வயப்பட்டிருக்கும் கணவரை பார்த்துக் கேட்டார் அமுதா. 

“இதை சொல்லக்கூடாதுதான் ஆனா… வளவன் கல்யாணம் பாப்பாவால தள்ளிப்போகுதோனு தோணுது அமுதா.” கவலையுடன் வையாபுரி சொல்ல, பெற்றவள் மனது பதைபதைத்தது.

“பாப்பா கல்யாணம் முடிஞ்சதுலேந்து வளவனுக்கு பாக்குறோம். எதுவும் தகைஞ்சி வரமாட்டேங்குதேன்னு யோசனையாவே இருந்துது. இன்னைக்கு நாம பதிஞ்சிருக்கிற திருமண தகவல் மையத்தோட தலைவர் நம்ம கடைக்கு வந்தாரு. இதுமாதிரி பையனுக்கு அமைய மாட்டேங்குதுனு சொன்னேன். 

உங்க மாப்பிள்ளை தான இப்போ எம்.எல்.ஏ எலெக்ஷன்ல ஜெயிச்சிருக்காரு. உங்க பொண்ணு கூட அவரோட சண்டை போட்டுட்டு உங்கக்கூட இருக்கேன்னு கேட்டாரு. சண்டையில்லை பாப்பா வேலைனால இங்க இருக்குனு சொன்னேன். எல்லாம் தெரியும், நம்ம பக்கமும் பரவலா விஷயம் தெரிஞ்சிருக்கு. அதுனால பொண்ணை கொடுக்க யோசிக்குறாங்க. எங்க கடைசி வரை நாத்தனாரோட பொறுப்பு அவங்க தலையில விழுந்துடும்னு நினைக்கிறாங்க. சீக்கிரம் பொண்ணு வாழ்க்கையை செட்டில் பண்ணிட்டு பையனுக்குக் பாருங்க முடிஞ்சிடும்னு சொல்லிட்டு போறாரு.” என அவர் விஷயம் சொல்லவும் கலங்கிவிட்டார் அமுதா.

“என்னங்க இது பசங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் இப்படி இருக்கு. முன்னமே யோசிச்சு பாப்பாவை கொடுத்திருக்கணுமோ? மாப்பிள்ளை அரசியல்ல தீவிரமா இருக்காருன்னு விசாரிச்சப்போ சொன்னாங்க. அப்போவே நாம சுதாரிச்சிருக்கனும்.”

“ஏன் உன் அண்ணன் அரசியல்ல இல்லையா இல்லை என் தம்பி இல்லையா? நம்ம குடும்பத்துக்கு அரசியல் புதுசில்லையே.” என பார்த்த வையாபுரியும் கலங்கித்தான் தெரிந்தார். 

மகளை கட்டாயப்படுத்தி வாழ்க்கைக்குள் தள்ள விருப்பமில்லாமல்தான் சண்டை என மகள் வீடு வந்த பிறகும் அவளுக்கான நேரம் கொடுத்து முற்றிலுமாக அவளது புகுந்த வீட்டினரை புறக்கணிக்காமல் அவர்களுடன் இணக்கமாக அவள் செல்லும்படி பார்த்துக்கொண்டார்கள். இப்போது அதனால் மகன் வாழ்க்கையும் தடைபட, இனியும் அவளுக்கு நேரம் கொடுத்து தங்களுடனே வைத்திருப்பது உசிதமில்லை என்பதே பெற்றவர்களின் ஒருமித்த எண்ணம். அதனை பகிர்ந்துகொண்டு உறுதிக்காக தங்கள் இணையைப் பார்க்க, “எப்படி பாப்பாவை சமாதானப்படுத்த போறோம்?”

“மாப்பிள்ளையும் கொஞ்சம் இறங்கி வந்து கூப்பிட்டா பாப்பாவும் இறங்கி போவா. இவளுக்கு மேல அவரும் வீம்பு புடிச்சி பாப்பாவை விட்டுட்டு இருக்காரு.” என வேதனைப்பட்டார் வையாபுரி.

“ரெண்டும் விடாக்கண்டனா இருந்த என்ன செய்ய…” அமுதாவும் அலுத்துக்கொண்டார்.  

“அவங்க வீட்லயும் எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்குறாங்க. அவங்க பையனுக்கு அவங்கதான எடுத்து சொல்லணும்.” 

“யார் கண்டா அவங்க சொன்னாலும் அவர் கேக்கணும்ல. நாமளும்தான் சொல்றோம் பாப்பா கேக்குறாளா?”

“வளவனை பேச சொல்லவா?” வையாபுரி எதிர்பார்ப்புடன் பார்க்க, உதட்டை பிதுக்கினார் அமுதா.

“ரெண்டு பேர்கிட்டேயும் அவன் பேசுனானாம் பாப்பா குதிக்குறா, மாப்பிள்ளை என்ன நினைக்குறாருனு தெரியலைனு சொன்னான்.”

“அதுக்காக அப்படியே விட முடியுமா?” என்ற வையாபுரி மகளிடம் பேச வேண்டும் ஆனால் திணிக்கப்பட்டது போல் இருக்ககூடாது என்ற எண்ணத்தில் இருப்பது புரிய, தானே மகளிடம் பேசுகிறேன் என்றார். 

“மாப்பிள்ளை நல்லவருனுதான் நானும் பொறுமையா இருக்கேன். அவளுக்கு புரியுற மாதிரி பேசு. மனசு வலிக்குற மாதிரி பேசிடாத.” 

“கஷ்டப்படாம இருக்கணும்னு பாத்து பாத்து கட்டிவச்சதுக்கு மாறா உள்ளுக்குள்ள போட்டு வருத்திகிட்டு இருக்கா…” என பெற்றவர்கள் மகள் வாழ்க்கை குறித்து வருந்தி பேசிக்கொண்டிருக்க, அறையில் அலைபேசியில் மூழ்கியிருந்த செண்பகா இன்ஸ்டாக்கிராமில் இருந்த அந்த ஒருவரின் ஜனரஞ்சக ரீலை பார்த்து கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தாள். தேவையற்றதை தேடித் தேடி பார்த்து குமைந்து போகாதே என்று அறிவு அறிவுறுத்தினாலும் மனது கேட்காது தன் கோபங்களுக்கு தூபம் போடவென தினம் அந்த குறிப்பிட்ட ஆளை பின்தொடர்ந்து அதில் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பார்த்து பார்த்து தன்னை வருத்திக்கொள்வது வாடிக்கையாகிப் போனது. இன்றும் உறக்கம் வரும் வரை அலைபேசியை நோண்டிவிட்டு படுத்தாள்.

மறுநாள் வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்தபின் வீட்டில் ஏதோ மாற்றம் இருப்பது போல் தோன்றியது. தான் வந்ததும் விழுந்து விழுந்து கவனிக்கும் அமுதா அன்று அமைதியாக தன் வேலையை பார்த்துக்கொண்டிருக்க,

“உடம்புக்கு முடியலையா அம்மா?”  என தனக்குத்தானே காபி போட்டுக்கொண்டு வந்தமர்ந்து அவர் நெற்றியில் கைவைத்துப் பார்க்க, அவள் கையை தட்டிவிட்டவர்,

“மனசு சரியில்லைன்னா உடம்பு பாரமா ஆகிடும் போல.” 

“என்னாச்சும்மா?” மகளுக்கு கவலையாகிவிட்டது.

“அண்ணனுக்கு வரன் பாத்துட்டு இருக்கோம்ல. தட்டி போயிட்டே இருக்குடி.” என்று மெல்ல ஆரம்பித்தார். கணவரிடம் மகளை கண்ணாடி பாத்திரம் போல் கையாளுவேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு கசப்பான மருந்து கொடுத்தால்தான் வியாதி குணமாகும் என காதுக்கு வந்த விஷயத்தை மகளுக்கு கடத்த முடிவெடுத்துவிட்டார்.   

“கவலைப்படாத ம்மா. சீக்கிரம் அமைஞ்சிடும். லேட்டானாலும் குணமா அண்ணி கிடைப்பாங்க பாரு.”

“அடி போடி செண்பா… மாப்பிள்ளைக்கு, அவரோட மச்சானுக்கு வளவனுக்கு எல்லாம் ஒரே வயசு. அந்த விமல் தம்பிக்கு ரெண்டு வயசுல குழந்தை இருக்கு, மாப்பிள்ளையும் நீயும்தான் இப்படி இருக்கீங்கன்னு பாத்தா வளவனுக்கும் ஒன்னும் தகைய மாட்டேங்குது. முப்பது ஆச்சு, இப்போவே வயசு அதிகங்குறாங்க பொண்ணுங்க வீட்ல.”

“சீக்கிரம் கல்யாணம் பண்ணி என்னை மாதிரி நிம்மதி இல்லாம இருக்குறதுக்கு லேட்டா பண்ணாலும் நல்லதா அமைஞ்சா போதும்னு நினை.” என்ற மகளை வருத்தமாக பார்த்தவர் நெகிழும் மனதினை இறுக்கிப் பிடித்தார்.

“நிம்மதி இல்லாம நீ தவிக்குற வீட்ல அவங்க பொண்ணை கொடுத்தா நிம்மதியா இருக்க முடியாதுனு பொண்ணு வீட்ல நினைச்சி தயங்குறாங்க.” என்றுவிட்டார். 

இதை எதிர்பார்க்காத செண்பகா அதிர்ந்துவிட்டாள். என்ன மாதிரியான பேச்சிது? நான் இங்கு இருப்பதால் என் அண்ணனுக்கு இடைஞ்சலா? அவனுக்கு நல்வாழ்க்கை அமைவதில் இழுப்பறியா? என் வாழ்வு சிக்கலில் இருப்பது போதாதென்று அண்ணனின் வாழ்வும் தள்ளிப் போகிறதா? பேச்சே வரவில்லை செண்பகாவிற்கு. இந்த கோணத்தில் யோசித்திராதவள் முதல் முறையாய் தன் பிறந்தவீட்டில் தன் இருப்பை கேள்வி கேட்டுக்கொண்டாள். நான் இங்கு இருப்பது தவறா? திருமணமாகிவிட்டதால் இது என் வீடு இல்லையா? கணவனை விட்டு பிரிந்து இருந்தால் சுமையாகிடுவேனா? திருமண வாழ்வில் முரண் இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு சுகித்து இல்லையென்றாலும் சகித்து செல்ல வேண்டுமா? என்னை கொண்டு என் குடும்பத்திற்கு பாரமா? தற்காலிக பிரிவுக்கே இப்படி பேச்சு வருகையில் அண்ணன் கேட்டது போல் நிரந்தர பிரிவு நேர்ந்தால் என் நிலை என்ன? என் குடும்பத்தின் நிலை என்ன? என்றெல்லாம் யோசிக்க யோசிக்க தலை வெடிப்பது போலிருந்தது.

மகளின் முகத்தில் வந்து செல்லும் கலவையான உணர்வுகளை வேதனையுடன் பார்த்த அமுதாவிற்கு எப்படியாவது இதற்கு ஒரு தீர்வு வந்தால் போதுமென்று தோன்றியது. அம்மாவை ஏற்றிட்டு பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் அறைக்குச் சென்றுவிட, மகள் யோசிக்கட்டும் என்று விட்டுவிட்டார். மருமகன் மீது கோபத்தில் இருப்பவள் அவனை வேண்டாம் என்று சொல்லியிருந்தால் கூட அவனிடமிருந்து விடுதலை பெற்று இந்நேரம் மகளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருப்பர். மருமகன் மீது கோபம் தானே ஒழிய மகள் மனதில் அப்படியொரு எண்ணமில்லை என்று தெரிந்துதான் இரண்டு வருடம் அமைதியாக சென்றது. இப்போது அந்த அமைதியை உடைக்கும் நேரம் வந்துவிட்டது என்று இவர்கள் நினைக்க, அந்த நிலையை ஏற்படுத்தியவனே மறுபக்கமும் அம்பு எய்தான்.

“மச்சான் விஷயம் கேள்விப்பட்டீங்களா?” என்று ஆரம்பித்த விமலின் அழைப்பை யோசனையுடன் எதிர்கொண்டான். 

சமீபகாலமாக குடும்பத்தினரிடமிருந்து அழைப்பு வரும் சமயம் வேலையில் மாட்டிக்கொள்வதால் பெரிதாக பேசவில்லை. இன்று படுக்கும் நேரம் பார்த்து தங்கை கணவன் அழைத்துவிட எடுப்போமா வேண்டாமா என்ற யோசனை இருந்தாலும் ஓய்வு நேரத்தில் ஏற்காமல் தவிர்ப்பது மரியாதையாக இருக்காது என்று எடுத்துவிட்டான்.

“சொல்லுங்க மச்சான் என்ன விஷயம்? கமல் என்ன பண்றான்? உங்களை ட்ரில் எடுக்குறானா?” 

“அவனுக்கென்ன ஏறி மிதிக்க மாமன் பக்கத்துல இல்லைனு என்னை சாத்துறான். நீங்க இங்க வந்துட்டு போறது. ரெண்டு மிதி வாங்குனா நாங்களும் நிம்மதியா இருப்போம்ல.” என உரிமையாக விமல் சலித்துக்கொள்ள, லேசான புன்னகை ரத்னதீபனிடம்.

“என்ன அமைதியா சிரிக்குறீங்களா மச்சான்? நீங்க வரலைனா என்ன சீக்கிரம் வீடு பாருங்க. உங்க தங்கைச்சியையும் மருமகனையும் உங்ககிட்ட ரெண்டு நாள் அனுப்பி வச்சிட்டு நான் கொஞ்சம் மூச்சு வாங்கிப்பேன்ல.”

“திவ்யா தூங்கிட்டாளா? சத்தம் அதிகம் வருதே.” சிரிப்பினூடே கேட்டான் ரத்னதீபன்.

“உங்களை மாதிரியா? தனிக்காட்டு ராஜாவா கேள்வி கேக்க ஆள் இல்லாம ஜம்முனு சுத்துறீங்க. பாத்ரூம் போனாகூட உங்க தங்கச்சிகிட்ட சொல்லிட்டுதான் போகணும் நானு.” 

“நான் ஜம்முனு சுத்துறதை நீங்க பாத்தீங்க?” கடுப்புடன் ரத்னதீபன் கேட்க, 

“இல்லையா பின்ன. தங்கச்சியோட சண்டை. அது டெம்ப்ரவரியா இருந்தாலும் சீக்கிரம் பர்மனென்ட் ஆகிடும். அப்புறம் என்ன ஜாலிதான் மச்சானுக்கு.” என்றதில் ரத்னதீபனின் காதுகள் கூர்மையாகியது. 

“ஏதோ பர்மனெண்ட்ன்னு சொன்னீங்களே என்ன மச்சான்?” தெரியாதது போல் கேட்டான் ரத்னதீபன்.

“அதுதான் உங்க மச்சான் வளவன் இருக்காருல்ல, அவருக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்களாம். தங்கச்சி வாழாம வீட்டோட வந்துடுச்சுனு பொண்ணு கொடுக்கவே யோசிக்குறாங்க போல. என் பிரெண்டோட சகல நம்ம சங்கத்துல இருக்காரு அவர்தான் சொன்னாரு. கூடவே இப்போ ஒரு வரன் வந்திருக்கு. பொண்ணோட அண்ணனுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சாம் செண்பாவும் தனியா இருக்கு, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாம்னு யோசிக்குறாங்க போல. விஷயம் செண்பா வீட்டுக்கு இன்னும் போகல அதுக்கு முன்னாடி என்கிட்ட விசாரிச்சாங்க. செண்பாவுக்கும் உங்களுக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சான்னு கேட்டாங்க. லீகலா பிரியல நீங்க எதுக்கும் செண்பா வீட்ல பேசுங்க ஒத்துகிட்டா அடுத்து என்னனு பாக்கலாம்னு சொல்லிட்டேன்.” என்று விமல் ஒரே மூச்சில் சொல்லிவிட, இங்கு இவனுக்கு மூச்சு தடைபட்டது போலானது.

“எவ்ளோ நாள் இப்படியே இருப்பீங்க நீங்களும்? இப்போ எம்.எல்.ஏ ஆகிட்டீங்க. அதுக்கு ஏத்த மாதிரி பாத்துக்கலாம் மச்சான்.”

“எது? எதை பாக்கலாம்?” என்ன சொல்கிறான் இவன் என திணறிவிட்டான் ரத்னதீபன். 

“பொண்ணு மச்சான் பொண்ணு. ஒத்துவரலைனு பிரிஞ்சிட்டீங்க. அதுக்காக நீங்க ஏன் தனிக்கட்டையாவே இருக்கணும்? செண்பாவுக்கு ஒருத்தன் வரப்போ உங்களுக்கு பொண்ணு கிடைக்காதா?” என்று இன்னும் ஏற்றிவிட்டான் விமல். சுரீரென்று ஏறியது உரியவனுக்கு. வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. 

“லைன்ல இருக்கீங்களா மச்சான்?” ரத்னதீபன் அமைதியாக இருக்கவும் விமல் கேட்க, இவன் முனக மட்டும் செய்தான்.

“நாள் புல்லா அலைஞ்சிருப்பீங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க. நா அப்புறம் கூப்பிடுறேன். குட் நைட்.” என்று தீபனை பேசவிடாமல் விமல் பேசிவிட உறங்கா இரவாகிடுமோ என்ற பயம் அப்போதே ரத்னதீபனை கவ்வியது.

சிரித்துக்கொண்டே அழைப்பை துண்டித்த விமல், வளவனுக்கு அழைத்து, “மிஷன் ஸ்டார்ட்டட். எதிரியை வாயடைக்க வச்சாச்சு.” என உற்சாகமாய் சொல்ல,

“இது சரியா வருமா?” இன்னுமே சந்தேகத்துடன் கேட்டான் வளவன்.

“அதெல்லாம் வரும் வளா. இவங்களை இப்படியே விட்டா வளவளவன்னு இருப்பாங்க. அதோட யாராவது ஒருத்தர் சைட் மட்டும் மூவ் பண்ணா நாந்தான் விட்டுக்கொடுத்தேன்னு ஈகோல முட்டிகிட்டு திரும்ப முகம் திருப்புவாங்க. இப்போ ரெண்டு பக்கமும் பால் போட்டாச்சு. யோசிச்சு அவங்களே இறங்கி வந்துதான் ஆகணும். அப்புறம் என்னவும் பண்ணிகட்டும்.” என்று வெகு சுலபமாக பேச, அதுவே புதுத்தெம்பை கொடுத்தது வளவனுக்கு. 

தங்கையையும் அவள் கணவனையும் சேர்ப்பது அத்தனை பெரிய விஷயமில்லை என்று தூசி போல கையாண்டான் விமல். முன்னமே இவனிடம் உதவி கேட்டிருக்க வேண்டுமோ என்ற எண்ணத்தை அவனிடம்  பகிர்ந்துகொள்ள,

“நானும் ஒன்னு ரெண்டு முறை ரெண்டு பேர்கிட்டேயுமே பேசிப்பாத்தேன். எனக்கென்னன்னு இருந்தாங்க நானும் அப்படியே இருந்துட்டேன். நீங்க கேட்கவும் இன்னொரு முயற்சி பண்ணி பாப்போம்னு தோணுச்சு. இதுக்கு எதுக்கு இவ்ளோ பீலீங்ஸ்? பீ கூல்.” என்றவனுக்கு நன்றி உரைத்தான் வளவன்.

பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்ட விமலுக்கு சற்று பெருமையாகவே இருந்தது. திருமணம் ஆன சில நாட்களிலேயே பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்துவிட்டால் மனைவியின் முன்னிலையில் தன் வீடு, மாமியார் வீடு, மச்சானின் மாமியார் வீடு என மூன்று வீட்டிலும் தன் பிம்பம் உயரும் என்ற கனவில் மிதந்தான். 

“உங்களை நம்பிதான் இருக்கேன்.” என்று வேறு வளவன் சொல்ல, என்ன செய்தேனும் இறங்கியிருக்கும் வேலையில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பு எழுந்தது. ஆனால் அது அத்தனை சுலபத்தில் நிறைவேறவில்லை.

செண்பகாவும் சரி ரத்னதீபனும் சரி பிடிவாதமாக வாய்ப்பூட்டு போட்டிருந்தனர். தானாகவும் இறங்கி வரவில்லை, கேட்ட கேள்விகளுக்கும் பதிலில்லை. செவி அடைந்த விஷயத்தை கிடப்பில் போட்டது போல் அவர்கள் வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருக்க இதனை துவங்கி வைத்தவனுக்கு மண்டை சூடாகியது. இவர்களின் உறுதியை உடைக்கும் ஆயுதம் தேடி அலைந்தான் விமல். விதியின் விளையாட்டில் தன்னால் அப்படி ஒரு நிகழ்வு தேடி வந்தது.