“நாளைக்கு லீவ்தானே இருந்துட்டு போகலாம்ல.” என்ற அபிராமியை வெறுமையாக பார்த்தாள் செண்பகா. பரந்தூரில் இருக்கும் புகுந்த வீட்டில் வந்து இறங்கியதும் விழுப்புரம் கிளம்புகிறேன் என்றவளை தடுத்து நிறுத்தி வாதம் புரிந்தார் அபிராமி.
“அவனும் இங்க வர்றது இல்லை நீயும் இல்லைனா எப்படி? இதுதான் உன் குடும்பம்.”
“எனக்கு மட்டும்தானா அத்தை?” உங்கள் மகனுக்கு மட்டும் இது குடும்பம் இல்லையா என்ற கேள்வி தாங்கிய பார்வை அபிராமியை சுட்டது.
புரியவும், “ஆம்பளைங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நாமதான் அனுசரிச்சு போகணும்.” என தழைந்து பேசினார்.
“ஓ… எனக்கு அப்போ வேலை இல்லைனு சொல்றீங்களா?”
“இந்த பேச்சுதான் உனக்கு எதிரியே. பட்டு பட்டுனு பேசுற.”
“அரசியல் குடும்பத்துல வாக்கப்பட்டு வந்துட்டு இப்படிக்கூட பேச தெரியலைன்னா எப்படி?” என்றவளுக்கு அவருடன் இயல்பாக வழக்காட வந்தது.
“உன் வீட்ல ஒன்னும் சொல்றது இல்லையா?”
“சொல்றதாலதான் இன்னமும் இங்க வந்து போக இருக்கேன் அத்தை.” என்றவளிடம் இதற்கு மேல் என்ன பேச என ஆயாசமாக வந்தது அபிராமிக்கு.
“ஆளாளுக்கு அவங்களுக்கு தோன்றதை பண்றீங்க. யாரும் யார் பேச்சையும் கேக்குறது இல்லை. என்னவோ பண்ணுங்க.” என்றுவிட்டார்.
விட்டால் போதுமென கிளம்பி வெளியே வந்தவளை இப்போது பிடித்து நிறுத்தியது விமல்.
“கிளம்பியாச்சு போல? இப்படி பட்டும்படாம இருந்தா எப்படி? யார் மேல தப்பிருந்தாலும் கடைசியில கெட்ட பேர் என்னவோ பொண்ணுங்களுக்குதான். புரிஞ்சிக்கோ செண்பா. இழுத்து புடிக்க வேண்டிய நீயே கயிறை அவுத்துவிட்டா?” என கேள்வியாய் நிறுத்த,
“புடிக்கிறதுக்கு முன்னாடியே அறுத்துகிட்டு ஓடுனா துரத்திக்கிட்டு ஓடிப்போய் புடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.” நிதானமாக அதே சமயம் அழுத்தமாக அவள் பதில் கூற,
“ஆனா பாதிப்பு இப்போ யாருக்கு?” என்ற கேள்வியில் முகம் திருப்பினாள் செண்பகா. உண்மைதானே பாதிப்பு என்னவோ இவளுக்குத்தான் அதிகம். இவளது அன்றாடம்தான் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
“இதுதான் சரியான நேரம். இழுத்து புடிச்சிக்கோ.” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
செல்லும் அவனை திரும்பிப்பார்த்தவள் விறுவிறுவென சாலையில் இறங்கி நடந்தாள். எதிர்பட்ட சிலர் அறிமுகப்புன்னகை சிந்த, சிலர் ஆர்வமாய் பார்த்தனர். எதையும் கண்டுகொள்ளக்கூடாது என மனதில் உருபோட்டபடி பேருந்து நிலையம் வந்தவள் ரயில் நிலையம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். எண்ணம் போல அப்பேருந்து அவ்விடத்திலிருந்து அவளை அழைத்துச் சென்றது. ரயிலேறி மாலை போல் வீடு வந்துவிட்டவளை ஆராய்ச்சியாக பார்த்தார் அமுதா.
“இருந்துட்டு வந்திருக்கலாம்ல. கால்ல சுடுதண்ணி ஊத்தின கணக்கா ஏன் உடனே ஓடியாந்த?” என கேட்டபடி மகளுக்கு தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தார்.
தாய்க்கு ஒரு முறைப்பை பரிசளித்தவள் உடலை வளைத்து சோம்பல் முறித்து அமர, ஆர்வமாய் அவளிடம் வந்த அமுதா, “நியூஸ்ல விழாவை பாத்தேன். ரொம்ப சந்தோஷம். மாப்பிள்ளை என்ன சொல்றாரு? அவர் எண்ணம் போல ஜெயிச்சிட்டாரு.”
இளக்காரமான பார்வை ஒன்றை வீசியவளோ, “அவர் எண்ணம் போல அவருக்கு வேண்டப்பட்ட எல்லாரும் வந்ததுல ரொம்ப சந்தோசமா இருந்தாரு.” என வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து குதர்க்கமாகவே பதில் கொடுத்தாள்.
மகளின் பதிலில் சுணக்கம் கொண்ட அமுதா அதன்பின் அவளிடம் வாய் கொடுக்கவில்லை. இதற்கு மேல் எது கேட்டாலும் பதில் வராது என்று புரிந்துபோனது. இரவு உணவு தயார் செய்ய எழுந்துவிட்டார்.
“காலையிலிருந்து ட்ராவல் பண்ணது டயர்டா இருக்கு. நான் போய் தூங்குறேன். சாப்பிட எழுப்புனா போதும்.” என்று அறைக்குச் சென்றவள் பொத்தென்று மெத்தையில் விழ, உறக்கம் அவளை தழுவிக்கொண்டது.
கடையடைத்து ஆண்கள் வீட்டிற்கு வரவும் மகளை எழுப்பிவிட்டார் அமுதா. நன்றாக உறங்கி எழுந்ததில் தெளிவாக இருந்த மகளை கண்ட பெற்றவர்களுக்கு நிம்மதியாய் இருந்தது.
“பங்ஷன் எல்லாம் எப்படி போச்சுடா? சோஷியல் மீடியால ரீல்ஸ் அள்ளுது. பாதுகாப்பு எல்லாம் பலமா இருந்துச்சா?” என வளவன் பொதுவாக பேச்சை துவங்க, விழா பற்றிய பொதுவான தகவல்களை பகிர்ந்துகொண்டாள்.
“இளைச்சி போயிருந்தாலும் மாப்பிள்ளை பாக்க நல்லா இருந்தாரு.” என பெருமையாக சொன்ன வையாபுரியை பார்த்து கோணலாக இதழ் வளைத்த மகள், “வேணும்னா கடையிலிருக்க ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விட்டானு எல்லாத்தையும் எடுத்துட்டு போய் சீராட்டிட்டு வாங்களேன். உங்க வரவைதான் ஆவலா எதிர்பார்த்து வாசல்லையே உக்காந்திருக்காராம்.” என நக்கல் பேச, அவள் தலையிலேயே ஒரு கொட்டு வைத்தார் அமுதா.
“என்ன பேச்சு இது? இப்படி தான் மாப்பிள்ளைக்கிட்ட பேசி அவரை கோவப்படுத்தியிருப்ப.” என குற்றம்சாட்ட பொங்கிக்கொண்டு வந்தாள் செண்பகா.
“மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. ஜெயிச்சிருக்காரே விழாவுக்கு உங்களை கூப்பிட்டாரா இல்லை இதுமாதிரின்னு உங்ககிட்ட ஒத்த வார்த்தை சொல்லியிருப்பாரா? மூணாவது மனுஷங்க மாதிரி டீவி பாத்துதான எல்லாம் தெரிஞ்சிக்கிட்டிங்க. மதிக்காத மாப்பிள்ளைக்கு பட்டுக்குஞ்சமா?”
“வர வர உன் பேச்செல்லாம் சரியில்லை பாப்பா. மாப்பிள்ளைக்கு இருக்கிற வேலைக்கு அவர் வீட்டுக்கே பேசலையாம். சம்பந்தி முன்னமே எனக்கு போன் போட்டு எல்லா தகவலும் சொல்லிட்டாரு. இவ்வளவு பேருக்குதான் அனுமதினு ரூல்ஸ் இருக்காம் அதுனால மருமவளை அனுப்பி வைங்கன்னும் கேட்டுக்கிட்டாரு. உரிமைப்பட்டவ நீயா போய் நின்னிருக்கணும். அவங்க கூப்பிடுற நிலைமையில தான் வச்சிருக்க.” என்ற தந்தையை வருத்தமாக பார்த்த செண்பகா,
“அப்போவும் கூப்பிட வேண்டியவர் கூப்பிடலையே அப்பா. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது. இல்லை இது மாதிரி பொது வாழ்க்கையில இருக்குறவங்க வீட்டை சுத்தமா மறந்துட்டா இருக்காங்க?”
“மறந்தவருதான் அவர் பதவியேத்துக்குற விழாவுக்கு நீங்க எல்லாம் வரணும்னு அனுமதி வாங்கி அனுப்பியிருக்காரா? எல்லாத்தையும் தப்பாவே பாக்காத பாப்பா. அவருக்கு எவ்ளோ வேலை இருக்கும் எவ்ளோ பேரை சமாளிக்கணும். அதுவும் மாப்பிள்ளைதான் இந்த விழா ஏற்பாடு எல்லாம் முன்ன நின்னு கவனிச்சாராம் சம்பந்தி சொன்னாரு.”
“யார் என் மாமனார் தான… அளந்து விட்டிருப்பாரு. உங்க மாப்பிள்ளை அவர் வீட்டையும் மதிக்கல. போன் போட்டு கூட சொல்லாம வரச்சொல்லி ஒரு மெசேஜ் மட்டும் போட்டு விட்டிருக்காரு.”
“சும்மா எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்காத பாப்பா. இப்படியே போச்சுன்னா இது எங்க போய் முடியும்னு தெரியல.” என்ற வளவனுக்கு ஒத்தூதினார் அமுதா.
“கூட கூட பேசாத பாப்பா. இப்படியே இருந்துட முடியுமா? சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். சாப்பிட்டு போய் தூங்கு.” என்றார் வையாபுரி கண்டிப்பாய்.
பாதி சாப்பாட்டில் இருந்தவள் பட்டென எழுந்து அறைக்குச் சென்றுவிட்டாள்.
“என்னப்பா? எப்போதும் பொறுமையா தான பேசுவீங்க. இன்னைக்கு ஏன்? அவளே அலைச்சல்ல மாப்பிள்ளையை பார்த்த குழப்பத்துல இருப்பா.” என தங்கைக்காக வளவன் முன்வர,
“ரொம்ப பொறுமையா இருந்துட்டோமோன்னு தோணுதுடா. இவ்ளோ தூரம் வளரவிட்டுட்டோம்னு இருக்கு. எப்படி பேசுறா பாரு.” என வையாபுரி வருந்த, கண்ணமர்த்தி அவரை அமைதி காக்க சொன்னான்.
சலித்துக்கொண்ட தந்தையும் மகள் சென்ற திசையை பார்த்துவிட்டு மனைவியை பார்க்க, “போறேன் போறேன்.” என அவள் பாதியில் விட்டு சென்ற தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகளை கெஞ்சி கொஞ்சி மிரட்டி மீதி உணவை ஊட்டிவிட்டு வெளியே வர, இவர்கள் இருவரும் வெளியே செல்வதாய் கூறிவிட்டு சென்றனர்.
“பாப்பா இருக்குறப்போ எதிர்மறையா பேசாதீங்க அப்பா. இப்போ சொல்லுங்க ஏன் திடீர்னு ஒருமாதிரி இருக்கீங்க?” என பொறுப்பாக கேட்டான் வளவன்.
“இத்தனை நாள் மாப்பிள்ளையா தேடி வருவாரு இல்லை எங்க போயிட போறாரு வேலை முடிஞ்சி ஓஞ்சதும் வந்துருவாருன்னு பாத்தேன். இப்போ நாம தொட முடியாத தூரத்துக்கு போயிட்டாரோன்னு இருக்கு. முன்னமே தேடி வரல இப்போ செல்வாக்கு கூடிப்போச்சு… அவரை தேடி போகவே ஆள் இருக்குறப்போ நம்ம பாப்பாவை தேடி வருவாரா? வந்தாலும் பாப்பா பேசியே அனுப்பிடுவா போல.” கலக்கமாக மகனை பார்த்தவர் முகத்தினில் மகள் வாழ்க்கை குறித்த பரிதவிப்பு அப்பட்டமாய் வழிந்தது.
“அவரை சந்தேகப்படுறீங்களா? பாப்பா வேண்டாம்ன்னா இன்னைக்கு பங்ஷனுல அவ கலந்துக்க ஏற்பாடு பண்ணியிருக்க மாட்டாரு. அதுல இருந்த பாப்பா பேரை பாத்தீங்கள்ல… ரெண்டு வருஷம் முன்னாடி வச்ச நம்பிக்கையை இப்போவும் எப்போவும் வைங்க.” என ஆறுதல் சொன்ன வளவனுக்கு இன்னுமே நம்பிக்கை இருந்தது தங்கை வாழ்வு செழித்துவிடுமென்று.
“என்னவோ சொல்ற. கேட்டுக்குறேன்.” என்று சொல்லி வீட்டை நோக்கி நடைபோட, தளர்ந்து சென்றவரை பார்த்து தான்தான் இறங்கி ஏதாவது செய்ய வேண்டுமோ என்ற யோசனையில் இறங்கினான்.
பதவியேற்பு விழா முடிந்து ஒருவாரம் சென்றிருந்தது. திடுமென வாசலில் வண்டிச் சத்தம் கேட்க, எழுந்து வந்து பார்த்த அபிராமிக்கு தன் கண்ணெதிரே நிற்பவனைப் பார்த்து நம்பவே முடியவில்லை. வெகு மாதங்கள் கழித்து மகன் வீடு வந்திருந்தான்.
“ரத்தினம்…” என்ற கூக்குரலோடு அவர் வெளியே வர, சுற்றத்தினர் சிலர் இவன் வருகை அறிந்து அருகில் வந்து கைப்பிடித்து வாழ்த்து சொல்லி பேசிச் சென்றனர். சிலர் போட்டோ எடுத்துக்கொண்டனர். மகனை பார்க்கவென அவனை சூழ்ந்து நிற்கும் கூட்டத்தினை தள்ளி நின்று பார்த்த தாய்க்கு மனம் நிறைந்து போனது. என் மகன் என பெருமையாய் எண்ணிக்கொண்டது. இவன் வந்த விஷயம் மருதுவுக்கு தெரிய, எங்கிருந்தோ வேகமாக வந்தார். சுற்றியிருந்த கூட்டத்தினரை கலைத்துவிட்டார்.
“என்னடி பாத்துட்டு இருக்க? போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா.” என அவர் மனைவியை விரட்ட, உள்ளே ஓடிச் சென்றார் அபிராமி.
“இங்க வர இத்தனை நாள் ஆச்சா ரத்தினம்.” புதிதாக மகனின் முகத்தில் வந்தமர்ந்திருக்கும் அதிகாரக்கலையை கர்வத்துடன் பார்த்து நின்றார் மருது. தன்னால் முடியாததை மகன் நடத்திக்காட்டி விட்டான் என்பதில் அத்தனை பெருமை.
“அப்படி என்ன இருக்கு என் முகத்துல?” சின்னச் சிரிப்போடு தந்தையின் பார்வையை கவனித்துக் கேட்டான் தீபன்.
“ரெண்டு மாசமா ரொம்ப அலைச்சல்ல… முகமெல்லாம் வத்தி போயிடுச்சு.” தந்தையாக அவர் கவலை கொள்ள அதற்கும் சின்ன புன்னகையுடன், “ரெண்டு மாசமாவா ரெண்டு வருஷம்!” என்றான்.
சட்டென அவர் முகம் கவலை பூசிக்கொள்ள அதற்குள் அபிராமி வந்துவிட்டார். கணவரை நகர்த்தி மகனை நடுவே நிற்க வைத்து ஆலம் சுற்றியவர் அவனை உள்ளே அனுப்பினார்.
அவன் உள்ளே செல்லவும் அவனைத் தொடர்ந்த கேமரா வாசலோட நின்றுவிட, அத்தனை நேரம் அவன் உதட்டில் ஒட்டியிருந்த புன்னகை மெல்ல விலகியது.
“அமைச்சர் சீட் கேட்டியா ரத்தினம்?” தந்தை ஆவலாக பார்க்க,
“நேத்து முளைச்ச காளானா? எவன் சொன்னான் அப்படி? பதினெட்டு வயசுலேந்து அரசியல் கூட்டத்துக்கு உன்னை கூட்டிட்டு போக ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட பன்னெண்டு வருஷமாவுது. இந்த வருஷம் கொடுத்த முதல் சீட்லையே ஜெயிச்சி காமிச்சிருக்க அப்புறம் என்ன வேணுமாம்?” வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சண்டைக்கு செல்வது போல் அப்போதே தயாரானார்.
“எத்தனை மாசம் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கான் அவனை சாப்பிட சொல்லுங்க அதைவிட்டு அரசியல் பேசிட்டு இருக்கீங்க.” என்ற அபிராமியை முறைத்த மருது,
“உன் அம்மாக்கு எந்த நேரத்துல எது முக்கியம்னு நேரங்காலம் தெரியாது. அதேமாதிரி மருமவளும் அமைஞ்சிருக்கு.” என்று சொல்ல, தீபனின் முகம் இறுகியது.
“நாளைக்கு காலையில கிளம்பிடுவேன்.” என்றான் தகவல் போல்.
“இப்போவே மணி ஒம்போது. விடிஞ்சதுமே கிளம்புனா? இருந்துட்டு போ ரத்தினம்.” என்றார் தாய் கனிவாய்.
“அதுசரி இங்கேயே இருந்து பாசப்பயிர் வளத்துட்டு இருந்தா வேலையை யார் பார்ப்பா? இந்த இடத்துக்கு கஷ்டப்பட்டு வந்திருக்கேன். அதை தக்கவச்சிக்கிறது ரொம்ப முக்கியம். உங்களை எல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சேன்னு தான் வந்தேன்.” என்றவனிடத்தில் மருந்துக்கும் இளக்கம் இல்லை.
“சரிய்யா உன் வேலையை பாத்துக்க… ஏய் என்ன பாத்துட்டு இருக்க புள்ளைக்கு புடிச்சதை செஞ்சு போடு. எதுவும் வேணும்னா சொல்லு ஒரு எட்டு போய் வாங்கிட்டு வந்துர்றேன்.” மருது மனைவிக்கு கட்டளையிட, தனக்கென்று தனியாக எதுவும் வேண்டாம். வீட்டில் இருப்பதே போதும் என்றான் மகன்.
“ஏன்ய்யா… ஜெயிக்கணும்னு ரெண்டு வருஷமா வீட்டுக்கு கூட சரியா வராம ஓடிட்டு இருக்க. இனி வேலையும் அதிகமாகிடும் இப்படி வரும் போதாவது நாவுக்கு ருசியா கேட்டு வாங்கி சாப்பிடலாம்ல. நீ இரு அம்மா உனக்கு புடிச்ச பூரி கிழங்கு பண்றேன். காலைலைக்கு கேப்பங்கூழ் பண்றேன் குடிச்சிட்டு தான் போகணும்.” என்றார் கட்டளை போல.
“ராத்திரி எண்ணெய் பலகாரம் போடுவியா? நான் போய் மாவு வாங்கிட்டு வரேன். வெங்காய தோசை, தக்காளி தோசை போட்டுக் கொடு.” என்றார் மருது.
“இருங்க இருங்க… ஏன் ரெண்டு பேரும் அடிச்சிக்குறீங்க. உங்களுக்கு ராத்திரிக்கு என்ன ம்மா பண்ண?” என அவன் அபிராமியிடம் கேட்க, மருதுவின் முகம் கோணியது.
“அப்போ எனக்கும் அதுவே போதும். இட்லி, தோசை, பூரி எங்க போனாலும் கிடைக்கும். நீ சிம்பிலா உப்புமா பண்ணுமா.” என்றவன் நிற்கவில்லை தனதறைக்கு சென்றுவிட்டான்.
“அதுதான் உனக்கு வேலை கொடுக்காம போயிட்டானே. போ போ உப்பு போட்டு அந்த மாவை கிண்டு.” என்ற மருது துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு திண்ணைக்கு சென்று அமர்ந்துவிட்டார்.
தனதறைக்கு சென்று சட்டையை களைந்து மெத்தையில் போட்டவன் அங்கிருக்கும் அலமாரியிலிருந்து மாற்றுடை எடுக்க, பார்வை அருகில் நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மனைவியின் உடையில் பதிந்தது. எப்போதாவது வருபவள் இங்கு இருக்கட்டும் என சில உடைகள் வைத்திருந்தாள்.
இருவரின் உடையும் அருகருகே இருக்கக் கண்டவன், ‘இது மட்டும் என் பக்கத்துல இருந்தா பரவாயில்லையாமா…’ என நினைத்துக்கொண்டு அவளுடையை லேசாக தள்ளிவிட்டான். அதில் உடைகள் களைந்து சரிந்தது. அலட்சியமாக அதனை எடுத்து இருகைகளாலும் சுருட்டி அந்த அலமாரியிலே தூக்கிப்போட்டான்.
‘ச்சைக் என்ன நினைப்பு இது.’ என நெற்றியில் அடித்துக்கொண்டவன் உடனே உடைமாற்றி வெளியே வந்து அன்னையை தேடிக்கொண்டு சமையலறை சென்றான்.
“அஞ்சு நிமிஷம் ரத்தினம். நீ வரேன்னு முன்னமே சொல்லியிருந்தா திவ்யாகிட்ட சொல்லியிருப்பேன். மாப்பிள்ளையும் நீ எப்போ வருவேன்னு கேட்டுட்டே இருந்தாரு.” அடுப்பில் ஒருகண்ணும் மகனில் ஒரு கவனமும் வைத்துப் பேசினார் அபிராமி.
ம் போட்டுக்கொண்டவன் அங்கேயே நின்று அலைபேசியை பார்க்க ஆரம்பித்தான்.
“நீ ஆசைப்பட்ட மாதிரி எம்.எல்.ஏ ஆகிட்டீல்ல இங்கேயே தங்கக்கூடாதா ரத்தினம்.” ஏக்கமாய் மகனை பார்க்க, அவரை நோக்கி கழுத்தை உயர்த்தியவன்,
“வேளச்சேரில இருக்கு ஆபீஸ். தினம் இங்கிருந்து போய்ட்டு வரமுடியாதுமா.”
“ஜெயிக்குறதுக்கு முன்னாடி கட்சி வேலை இருக்கு. இங்க உக்காந்துட்டு அங்க ஓட்டு வாங்க முடியாது. களத்துல இறங்கணும்னு அங்க மாறுன. இப்போவும் அப்படியேனா எப்படிடா?” என பாவமாக பார்த்தவரை கனிவாக ஏறிட்டவன்,
“அங்க வீடு பாக்குறேன். நீ அங்க வந்துடுறியா?”
“அட போடா நடக்குறதை பேசு. இங்க இருந்தா செத்த நேரம் வயலுக்கு போயிட்டு வராரு உன் அப்பா. அங்க வந்துட்டா மொத்தமா அரசியல்னு நிப்பாரு. ஆளை புடிக்க முடியாது. சரி வராது.” என சலித்துக்கொள்ள, சன்னமாய் சிரித்தான் ரத்னதீபன்.
“இப்படியே சிரிச்ச முகமா இரு. வீடு பாக்குறேனு சொன்னியே. பாரு… செண்பாவை கூட்டிட்டு போ.” என்கவும் சிரிப்பு மறைந்து இறுகியது.
“உடனே மூஞ்சை தூக்காத. நீ ஒருபக்கம் வேலைனு அங்க உக்காந்திருக்க. அவ வேலைனு இன்னொரு பக்கம் உக்காந்திருக்கா. இதெல்லாம் நல்லாவா இருக்கு.”
“என் வேலையை அங்க இருந்துதான் பாக்க முடியும்.” என்றவன் பதிலில் அவளின் வேலை மாறுதலுக்குரியது எங்கிருந்தாலும் பார்க்கலாம் என்ற செய்தி மறைந்திருந்ததை அறியவில்லை அபிராமி.
“கோச்சிக்கிட்டு முகத்தை திருப்பிகிட்டு இன்னும் எத்தனை நாள் வேலையை காரணம் சொல்லுவீங்களோ தெரியல. நீ வர நேரம் அவ இல்லை, அவ இங்க வர நேரம் நீ வர்றது இல்லை. அப்புறம் எப்படி சரியாகும்? எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்னு இருக்கு.”
“உப்புமா ரெடினா கிண்ணத்துல ஸ்பூன் போட்டு குடு. ஆறிட்டா நல்லா இருக்காது.” என அவன் பேச்சை மாற்றி கையை நீட்ட, மகன் வயிற்றை கவனிப்பதில் பேச்சை அப்போதைக்கு விட்டார்.
டீவியை போட்டுக்கொண்டு அமைதியாக உண்டவன் வயிறு நிறையவும் அலைபேசி எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டான். அவன் சென்றதும் உள்ளே வந்த மருது, “என்ன முடிவு பண்ணியிருக்கான்னு கேட்டியா?” என மனைவியை பிடித்தார்.
“புடிகொடுக்க மாட்டேங்குறான்.” என்று கவலைப்பட்டார் அபிராமி.
“பொண்ணைப் பெத்தவங்களே தைரியமா பொண்ணை வீட்டுல வச்சிருக்குறப்போ நீயேன் கலங்குற? அவன் ஆளப்பொறந்தவன். தப்பு தண்டா பண்ண மாட்டான். அது புரியாம அந்த பொண்ணும் அங்க போய் உக்காந்திருக்கு. எவ்வளவு தூரம்தான் போறாங்கன்னு பாப்போம்.” என்று மருது அதனை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட, பெற்றவள் மனது கனத்துப்போனது.
இருவருடங்கள் முன்னே நிறைவாக நடத்தி வைக்கப்பட்ட திருமணம் வெகு சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை. சண்டை சச்சரவு என எளிதாக உடைந்துவிட்டது. அதனை ஒட்ட வைக்க சிறு சிறு முயற்சிகள் எடுத்தாலும் உரியவர்கள் முழுமனதாக அதில் லயிக்காத போது என்ன செய்ய… தாமரை இல்லை தண்ணீர் போல் அவர்களின் உறவும் ஒட்டாது மிதந்து கொண்டிருக்கிறது.