*28*

“வாழ்வின் வளமே!

வெற்றியின் வல்லவனே!

வாழ்க்கை என்னும் சட்டமன்றத்தில்

அன்பை ஆட்சியாக்கு!

இன்பத்தை அமைச்சராக்கு!

சந்தோஷத்தை எதிர்க்கட்சியில்லா ஆட்சியாக்கு!

இன்று மணமேடை ஏறும் வளவனே!

உன் திருமண வெற்றியை எங்கள் வாழ்க்கையின் வெற்றியாய் கொண்டாடும் – விமல், கமல், திவ்யா!”`

“வளவமாய் வாழ வளவனை வாழ்த்துகிறோம்.”

“மக்கள் மன்றத்தில் குரலாய்!

சட்டமன்றத்தில் வீரமாய்!

எங்கள் மனங்களில் உறவாய்!

இன்று வளவன் திருமண விழாவில் சிறப்பு வருகை தரும்

மாண்புமிகு MLA ரத்னதீபன் அவர்களே –

வருக! வருக! வருக!”

இப்படியான வாசகங்கள் தாங்கி வழி நெடுக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை பார்த்து புருவம் உயர்த்திய வண்ணம் செண்பகா வீட்டிற்கு காரை இயக்கினான் ரத்னதீபன். ஒருவாரம் முன்னதாகவே அண்ணன் திருமணம் என சொல்லிக்கொண்டு பிறந்தகம் வந்துவிட்டாள் செண்பகா. இதோ இன்னும் சற்று நேரத்தில் வரவேற்பு, மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம். நேரத்தை பார்த்துக்கொண்டே வேகமாக ஓட்டியவன் அவள் வீட்டு வாயிலில் காரை நிறுத்த, வாசலிலேயே அமர்ந்திருந்த செண்பகாவின் சித்தப்பா எழுந்து வந்தார்.

“என்ன மாப்பிள்ளை இவ்ளோ லேட் பண்ணிட்டீங்க? உங்க டிரெஸ் இங்க இருக்காமே சீக்கிரம் மாத்திட்டு வாங்க மண்டபத்துக்கு போலாம். எல்லாரும் ராகுகாலம் முன்னாடியே கிளம்பிட்டாங்க.” என்றவரிடம் தலையசைத்து அவன் வீட்டினை பார்க்க, வாழைமரமும் லைட்டுமாய் கல்யாணக் கலை தாங்கியிருந்தது. வீட்டினில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. மனைவியும் முன்னரே சென்றிருப்பாள் என்று யூகித்தாலும் அவளை தேடும் மனதினையும் பார்வையையும் அடக்கி அறைக்குள் சென்றான். வரவேற்புக்கான இவனது உடை அங்கு தயாராய் இருந்தது. மாற்றிக்கொண்டு விரைவாக கிளம்பி வந்தவன் செண்பகாவின் சித்தப்பாவோடு கிளம்பினான்.

“நீங்க வர வரைக்கும் யாராவது ஒருத்தர் வீட்ல இருக்கணுமே யார் இருக்குறதுனு மூஞ்சை மூஞ்சை பாத்துட்டு நின்னாங்க. நான் இருக்கேன்னுட்டேன். அப்புறம் வேலையெல்லாம் எப்படி போகுது மாப்பிள்ளை? எல்லாம் ஒத்துழைக்குறாங்களா இல்லை காலை வாரிவிடப் பாக்குறாங்களா?” என அவர் பேச்சை துவங்க இவன் மேலோட்டமாக பதில் கொடுத்தபடி இருந்தான்.

“கமிஷன் கம்மியா வாங்குறீங்க, நிறைய விளம்பரம் பண்றீங்க, அமைச்சராக முயற்சி பண்றீங்கன்னு உங்க கொறடா சொன்னான். ஒரு கோஷ்டி உங்களுக்கு எதிரா இருந்தாலும் பல வருஷமா அந்த கட்சியிலேயே இருக்குறவங்க உங்களுக்கு ஆதரவாதான் இருக்காங்க மாப்பிள்ளை. அதை அப்படியே தக்க வச்சிக்கோங்க. இப்போ இல்லைனாலும் நாளைக்கு நம்ம கைக்கு பதவி தானா தேடி வரும். எந்த உதவினாலும் கூச்சப்படாம அவர்கிட்ட கேளுங்க.” என்றவர் மேலும் பேச, அரசியல் குறித்து என்கவும் ஆர்வமாக பேச்சில் ஐக்கியமாகிவிட்டான் ரத்னதீபன்.

மண்டபம் வந்ததும் அவரை வாசலிலேயே இறக்கிவிட்டு இவன் காரை உள்ளே நிறுத்தி இறங்க, வேகமாக அவனிடம் வந்தான் விமல்.

“மச்சான் கல்யாணத்துக்கு வீட்டு மாப்பிள்ளை வர்ற நேரமா இது?” என ஆரம்பித்தவன் ரத்னதீபன் முறைக்கவும், “நான் மட்டுமில்லை செண்பாதான் சொல்லிட்டு இருந்துச்சு. தரமான பரிசு உங்களுக்கு காத்துட்டு இருக்கு மச்சான்.” 

“கட்சிக்கூட்டம் மாதிரி வர்ற வழியெல்லாம் பேனர் வச்சிருக்கீங்க. வீட்டு பங்ஷனுக்கு எதுக்கு இதெல்லாம்?” அதிருப்தி இருந்ததோ, விமல் கண்டுகொள்ளவில்லை.

“உங்க பஞ்சாயத்துல அவருக்கு கல்யாணம்னு ஒன்னு நடக்குமான்னே சந்தேகமா இருந்துச்சு. யார் செஞ்ச புண்ணியமோ ஒரு குடும்பம் ஓகே சொல்லி பொண்ணு கொடுத்துருச்சு, அதை கொண்டாட வேணாமா மச்சான்? அவருக்கு உங்க தலைமையில கல்யாணம் நடத்தணும்னு சொன்னேன் யார்கேட்டா… ம்ம்ம்… சரி அதுதான் நடக்கல உங்களுக்கு ஒரு வரவேற்ப்ப போட்டுருவோம்னு போட்டா ரொம்பதான் பண்றீங்க மச்சான்.”

இவனிடம் வாய் கொடுத்தோமே பேசியே சரிகட்டிவிடுவானே என நினைத்துக்கொண்டே மனைவியைத் தேட, 

“அதோ இருக்காங்க உங்க ஆளு. போய் கால்ல வுழுந்துடுங்க.” என கேலியாக செண்பகா இருக்கும் இடம் நோக்கி கை காண்பித்தான் விமல். நன்றாக அவனை முறைத்துவிட்டு மனைவி நோக்கி நடை போட, இவனை கண்டுகொண்டவள் முகத்தை திருப்பிக்கொண்டு வேறுபுறம் சென்றாள். அவளை பின்தொடரலாம் என்றால் தெரிந்தவர் தெரியாதவர், நெருங்கிய சொந்தங்கள், தூரத்து உறவுகள் என வழியில் இவனை பிடித்துக்கொண்டனர். எங்கிருந்தோ வேகமாக வந்த வையாபுரி தன் மாப்பிள்ளையை காப்பாற்றி மேடைக்கு அழைத்துச் சென்றார். சிரித்துக்கொண்டே வளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க,

“யாரோ மாதிரி வாழ்த்து சொல்லி போட்டோ எடுத்துட்டு வேலை இருக்குனு கிளம்பிடாதீங்க மாப்பிள்ளை. முன்னால உக்காருங்க.” என்றான் வளவன்.

“மாப்பிள்ளைக்கிட்ட இப்படியா பேசுவ. அவருக்கு தெரியும்.” என்று மகனை அடக்கியவர், “சாப்புடலாம் வாங்க மாப்பிள்ளை.”

“இருக்கட்டும் மாமா, இன்னும் நேரமாகலையே எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுக்கலாம். நீங்க வந்தவங்களை கவனிங்க.” என்று கீழே இறங்கியவன் தன் பெற்றோருடன் சென்று அமர்ந்துகொண்டான்.

“ரொம்ப வேலையா ரத்தினம், இப்போதான் வர்ற? சாப்பிட்டியா?” என கேட்டுக்கொண்ட அபிராமி, “காலையிலேயே போலாம்னு மாப்பிள்ளை சொல்லவும் அவரோடவே கிளம்பி வந்துட்டோம். பொண்ணு வீட்ல ரூம் போட்டிருந்தாங்க. நாங்க ரூம்ல ரெஸ்ட் எடுத்தோம் மாப்பிள்ளைதான் வளவன் கூடவே தோழன் மாதிரி சுத்திட்டு இருந்தாரு.” என அன்றைய நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். 

மகனின்றி அனைத்திற்கும் மருமகனின் முடிவுபடி பயணத் திட்டங்களை மேற்கொள்வது கொஞ்சம் சிரமமாக இருப்பினும் மகனிடம் எதையும் கேட்டிட மாட்டார் அபிராமி. கட்சி, வேலை என மகன் எந்நேரமும் ஓய்வின்றி உழைக்க அவன் ஓய்வாக இருக்கும் நேரம் அவனுக்கானதாய் இருக்கட்டும் என அவர்கள் அறியாமலேயே ஒதுங்கிக்கொண்டனர். அதுவும் ஊசலாடிய அவனின் குடும்ப வாழ்க்கை இப்போதுதான் மீண்டு வந்திருக்க, எதற்கும் அவனை தொந்தரவு செய்வதில்லை. நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம். 

ஆனால் தங்கையும் அப்படியே நினைப்பாளா என்ன? “நீ இருந்து கூட்டிட்டு வரணும் அண்ணே. வேலைனு ஒதுங்கிக்கிட்டே இருக்க, இன்னைக்கு காலையிலையே இங்க வரணும்னு இந்த மனுஷன் ஆட்டமா ஆடுறாரு. உன் மச்சான் கல்யாணத்துக்கு நாங்க சாயந்திரம் வந்திருந்தா போதும்ல.” என கொஞ்சம் சுணங்கினாள். 

“நான் கூட்டிட்டு வந்திருந்தாலும் அவர் எனக்கு முன்னாடியே இங்க வந்திருப்பார். வளவனும் அவரும் பயங்கர தோஸ்த்.” என்றவன்தானே அவர்களின் நெருக்கத்திற்கு காரணம். கொஞ்சம் புரிந்தது அவனுக்கும்.

சிறிது நேரம் தங்கை மகனை தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் நடந்தவன் நைச்சியமாக மனைவிடம் சென்றான்.

“யாருனு தெரியாதவங்க கூட என்னை கூப்பிட்டுட்டாங்க. உன் அத்தை என்னை கண்டுக்கவே இல்லைடா என்னனு கேளு.” குழந்தையிடம் சொல்வது போல் மெல்லிய குரலில் கேள்வியை மனைவிக்கு கடத்தினான்.

“போனாப்போகுதுனு கட்டங்கடைசியா மண்டபத்துக்கு வர்றவங்களுக்கு எல்லாம் அழைப்பு கிடையாது.” என்றாள் செண்பகா சீற்றமாய்.

“அப்படியொன்னும் லேட் ஆகிடல. மணி ஏழரைதான் ஆகுது. வந்துட்டேன்ல செண்பா.” என இப்போது நேரடியாக மனைவியிடம் பேசினான். 

“அப்போ நானும் நாளைக்கு உங்க வீட்ல பங்ஷன்னா லேட்டா ஊருக்கு போறேன். அப்போ ஒத்துப்பீங்களா?”

“என்ன பிரிச்சி பேசுற? இங்க மட்டுமா லேட்டா வந்தேன், நம்ம வீட்டுக்கும் லேட்டாதான் போறேன். என் வேலை அப்படி. சாயந்தரம் ஆறு மணி ஆனா மணியடிச்ச மாதிரி வீட்டுக்கு வர முடியாது.” எரிச்சலிருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் பேசினான் ரத்னதீபன். 

வாரத்தில் ஒருமுறையேனும் பெரிதாக முட்டிக்கொள்ளாமல் அவர்கள் வாழ்க்கை நகர்வதில்லை. ஆனால் வளவன் திருமணப்பேச்சு துவங்கியதிலிருந்து சண்டைதான் இருவருக்கும். ஒவ்வொன்றிற்கும் ஊருக்கு செல்ல வேண்டும் என்று அனைத்து வாரஇறுதிகளிலும் அவள் நிற்க, இப்பொழுது தான் சேர்ந்திருக்கிறோம் என்னுடன் இரு என்றான் இவன்.

மூன்று வருடங்களை நீ வீணடித்ததற்காக ஒரே ஒருமுறை நடக்கும் என் அண்ணன் திருமண நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் நான் பங்குபெறக்கூடாதா என்று அவள் பிடிவாதமாய் நின்று சாதித்துக்கொண்டாள். 

“ஒருவாரம் கழிச்சி பாக்குறோமேன்னு இருக்கா பாரு உனக்கு.”

“அந்த இது இருந்தா முன்னாடியே கிளம்பி நீங்களும் என்னை பார்க்க வந்திருப்பீங்க.” என்றாள் இவளும் சளைக்காமல்.

“சரிம்மா தாயே. நாந்தான் தப்பு, எப்போதும் நாந்தான் தப்பு. இப்போ பேசு என்னோட. ஒருவாரம் என்னை காயப்போட்டுட்ட.” முழுதாக சரணடைந்துவிட்டான் ரத்னதீபன். அதில் இறங்கிவிட்டது பாவை. 

“சரி வாங்க போட்டோ எடுத்துக்கலாம். நீங்க வந்ததும் எடுக்கணும்னு நான் வெய்ட் பண்ணிட்டே இருந்தேன்.” என செண்பகா அவன் கைபிடித்துக்கொள்ள, அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு மேடையேறிவிட்டான் ரத்னதீபன். 

கையில் கமலுடன் இவன் வளவன் அருகிலும் அண்ணியுடன் செண்பகாவும் நின்றுகொள்ள, அழகான புகைப்படமானது.

“சீக்கிரம் இதுமாதிரி நீங்களும் ஒன்னை இறக்குங்க.” கேலியாக கமலை காண்பித்து ரத்னதீபன் மச்சானை சீண்ட,

“சீனியர் நீங்க இருக்குறப்போ ஜுனியர் நான் முந்தலாமா.” என்றான் வளவன்.

“உங்களுக்கு மாமா போஸ்டிங் வேணும் அதானே… உங்க பங்ஷனை முதல்ல சீக்கிரம் முடிச்சிவிட்டு என் பொண்டாட்டியை அனுப்பி வைங்க சீக்கிரம் வந்துரும்.”

‘என்ன பேசுனாலும் இந்த மனுஷன்கிட்ட வாய் கொடுத்தா நாமளே வாய் மூடிக்குற மாதிரி பண்ணிடுறாரு.’ ரத்னதீபனை முறைக்க முடியாமல் நின்றான் வளவன்.

இவர்கள் போட்டோ எடுக்கவும் ரத்னதீபன் குடும்பம், செண்பகா குடும்பம் மொத்தமும் மேடையேறியது. தனித்தனி குடும்பங்களாக பின் தம்பதிகள் சகிதமாக என எடுத்துக்கொண்டு நகர்ந்தனர். 

பேச்சும் சிரிப்பும், கிண்டலும் சீண்டலும் என சிறிது நேரம் செல்ல, இரவு அறையில் மனைவியைப் பிடித்துவிட்டான் ரத்னதீபன்.

“டையர்டா இருக்குங்க. காலையில நேரமே எழும்பணும். தொல்லை பண்ணாதீங்க, அதுவும் மண்டபத்துல இருக்கோம்.” அவன் கட்டியணைத்ததற்கே பெண் உறக்கத்தில் கெஞ்ச, கொஞ்சம் கோபம்தான் இவனுக்கு.

‘ஒருவாரம் கழித்து பார்க்கிறோம். ஏதாவது ஆசை இருக்கா பார்.’ என்ற சுணக்கம் அவனுக்கு. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை, அப்படியே வெளிப்படுத்தினாலும் மூன்று வருடம் நீயும் இப்படிதான் இருந்தாய் என்றுவிடுவாள். எதற்கு பழையதை மீண்டும் மீண்டும் கிளறிக்கொண்டு என அமைதியாக அவளை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான். 

மறுநாள் நல்லபடியாக திருமணம் முடிந்து புதுமணத்தம்பதிகள் பெண்வீட்டிற்கு சென்றுவிட்டு மாப்பிள்ளை வீடு வரும்வரை உடன் இருந்தான் ரத்னதீபன். இரவுக்கான சடங்குகள் ஏற்பாடாக, மனைவியை தனியாகப் பிடித்தவன்,

“எல்லாம் முடிஞ்சிடுச்சுல்ல ஊருக்கு போலாம் செண்பா.”

“மனசாட்சியே இல்லையா உங்களுக்கு. கல்யாணம் முடிஞ்சவுடனேயே கிளம்ப நான் என்ன யாரோவோ?” நெற்றிக்கண் திறந்துவிட்டாள் செண்பகா. 

“அடியே… ஒருவாரமா லீவ் போட்டுட்டு இருந்தியேடி. உன்கூட ரிட்டர்ன் போகலாம்னு டிரைவருக்கு லீவ் கொடுத்துட்டு காரை நானே ஓட்டிட்டு வந்திருக்கேன்.”

“அதுக்கு?”

“என்ன அதுக்கு? உன் அண்ணனுக்கு இன்னைக்கு ஃப்ரஸ்ட் நைட்…”

“ச்சீ என்ன பேச்சு இது?”

“முழுசா சொல்ல விடுடி. நம்ம நைட்டைதான் நீ தரையைப் பார்த்து தயங்கி மயங்கி போங்கடிச்சி அது தள்ளிப்போய் மூணு வருஷம் ஆகிடுச்சு. நாம ஏன் அந்த சரித்திரத்தை கொஞ்சம் மாத்தி எழுதக்கூடாது?” என்றவன் தோளில் செல்லமாக அடித்தாள் செண்பகா.

“என்னடி அடிக்குற… உன் அண்ணனுக்கு மாமா ஆகணுமாம். தங்கச்சியை அனுப்பி வைங்கனு சொன்னேன், கூட்டிட்டு போக சொல்லிட்டாரு.” என்று இவன் சேர்த்துச் சொல்ல,

“ச்சீ அண்ணன்கிட்ட போய் என்ன பேசியிருக்கீங்க.” என முகத்தை மூடி அவன் நெஞ்சில் லேசாக சாய்ந்தாள்.

“இப்போதாண்டி நீ வெட்கப்பட்டு பாக்குறேன்.”

“வெட்கப்படாதடீனு சொல்லி சொல்லி என்னை மாத்திட்டு இப்போதான் இவர் பாக்குறாராம்.” என செல்லமாய் சலித்துக்கொண்டவள் அவனை அழுத்தமாக அணைத்து விடுவித்து, “இன்னும் ரெண்டு நாள்ல வந்திருவேன். நீங்க இன்னைக்கு இங்க தங்கிட்டு நாளைக்கு ஊருக்கு கிளம்புங்க, அங்க போயிட்டா பொண்டாட்டி நினைப்பெல்லாம் வராது.” இறுதி வாக்கியத்தை மூக்கை சுருக்கிச் சொல்ல, அதனைப் பிடித்து நிமிண்டப்போனவன் யாரோ வரும் அரவம் கேட்டு தள்ளி நின்றான். 

இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு வந்த மனைவி அன்றைக்கு வேலை முடித்து வந்ததும் வராததுமாய் உக்கிரமாக முறைக்க, என்னவென்று பார்த்தான் ரத்னதீபன்.

“எதுக்கு பேஸ்புக்ல போட்டோ போட்டீங்க?”  

“எந்த போட்டோ?”

“அண்ணன் கல்யாணத்துல நாம எடுத்துக்கிட்ட போட்டோவ உங்க பேஸ்புக் பேஜ்ல போட்டிருக்கீங்க. அதை பார்த்துட்டு என்கூட வொர்க் பண்றவங்க எல்லாம் கேக்குறாங்க. அதுகூட பரவாயில்லை பக்கத்து கடையில இருக்குறவரு, பஸ் கண்டக்டரு எல்லாம் வீட்ல பங்ஷனா’மான்னு கேக்குறாங்க.”

“ஆமான்னு சொல்லிட்டு போக வேண்டியதுதான?” இதெல்லாம் ஒரு விஷயமா என்று கொஞ்சம் அலட்சியம் அவனுக்கு. 

“உங்களுக்கு வேணும்னா இது சாதாரணமா இருக்கலாம். இப்படி போற இடத்துல எல்லாம் யாராவது ஒருத்தருக்கு என்னை தெரிஞ்சிருக்கு. எனக்கு ஒருமாதிரி இருக்கு.”

“எப்படி தெரிஞ்சிருக்கு?” அவனிடம் சற்று முன்னிருந்த அலட்சியம் இப்போதில்லை. அழுத்தமாக அவளைப் பார்த்தான்.

“எப்படின்ன்னா? எம்.எல்.ஏ வொய்ப் தானேன்னு கேக்குறாங்க.” 

“நீ ஆசைப்பட்டதுதானே?” என்றவன் கூற்றில் வாயடைத்துப் பார்த்தாள் செண்பகா. 

“சொல்லு செண்பா. மந்த்ராவோட என்னை சேர்த்து பேசவும் என்னோட அடையாளத்துல நீ இருக்கணும்னு ஆசைப்பட்ட. அப்போ எனக்கு அது புரியல, இப்போ செஞ்ச தப்பை திருத்தக்க பாக்குறேன். உனக்கான முக்கியத்துவத்தை குடுக்க நினைக்கிறேன். அது தப்பா? இதனால உனக்கு எந்த பாதிப்பும் வராம நான் பாத்துப்பேன். நான் டெய்லி போட்டோ போடல, மாசத்துக்கு ஒன்னு அந்தமாதிரி பிளான் பண்ணியிருக்கோம். வேண்டாம்னா சொல்லு விட்டுரலாம்.”

“அப்போவும் என்கிட்ட சொல்லாம செஞ்சீங்க. இப்போவும் செய்றீங்க.”

“உனக்கு சர்பிரைஸா இருக்கும்னு பாத்தேன். சோஷியல் மீடியாவுல நம்ம போட்டோ சேர்ந்து வர்றது இது ஒன்னும் முதல்முறை இல்லை. ஏற்கனவே பர்த்டே, வெடிங் டே பங்ஷனுக்கு சேர்ந்து போனப்போ எடுத்த போட்டோஸ் எல்லாம் அந்ததந்த ஆட்கள் போட்டிருக்காங்க. அதுனால நாமளே அதை போடுவோம், பாத்துட்டு நீயும் சந்தோஷப்படுவ, அண்ணன் கல்யாணம்னு மேக்கப் எல்லாம் போட்டு அழகா வேற இருந்தியா…”

“அழகா இருக்கேனு இப்போதான் சொல்ல தோணுச்சாக்கும்?” என அவனை லேசாக அடிக்க, அடிக்க நீண்ட கையை பிடித்திழுத்து அவளை தன்மீது போட்டுக்கொண்டவன், அவள் மூக்கோடு மூக்குரசி,

“உனக்கும் சரி எனக்கும் சரி இந்த காதல் டயலாக் அடிக்குறது, ஒட்டிகிட்டே திரியுறது எல்லாம் வராது. நமக்கு வர்றது எல்லாம் மோதலும் மோகமும்தான். நாளைக்கு எப்படி வேணும்னாலும் நம்ம வாழ்க்கை மாறலாம். நான் பிசி ஆகலாம், நீ உன் வேலையில முன்னேறலாம் இல்லை அதை தொடர முடியாம வேற எதுவும் கூட பண்ணலாம். அதனால சின்ன சின்ன இந்த மொமெண்ட்ஸ் எல்லாம் அனுபவிக்கனும்.” என்றவன் இதழ்கள் ஆளுமையோடு அதன் இணையுடன் சேர்ந்துகொள்ள, அவள் விரல்கள் அவன் பிடரி முடியைத் தேடி அலைந்து பிடித்துக்கொண்டது. 

சில வருடங்கள் கழித்து,

“ரத்தத்தின் ரத்தமே! 

ரத்தினத்தின் ரத்தினமே!

செண்பகாவின் செண்பகப்பூவே!

உன் மழலைக்கு நாங்கள் அடிமை! 

உன் சிரிப்பை சிந்தனையாக்கு!

அன்பை ஆட்சியாக்கு!

மகிழ்ச்சியை வாழ்க்கையாக்கு!

இன்று முதல் பிறந்தநாள் காணும்

எங்கள் வீட்டு செல்லமே!

உன் வாழ்வின் ஒவ்வொரு வெற்றியையும்

எங்கள் வாழ்க்கையின் வெற்றியாய் கொண்டாடும் –  விமல், கமல், திவ்யா.”

இந்த பேனரைப் படித்துப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டான் ரத்னதீபன்.

“இவரை பேசாம உங்களோட மீட்டிங்கு கன்டென்ட் எழுத வச்சிக்கலாம்.” சிரித்துக்கொண்டே அவனிடம் சொன்னான் வளவன். 

“என் பொண்ணுக்கு நான்கூட இப்படி எதுவும் பண்ணல, என்னை விட பெரிய மடல் எழுதிட்டாரு.” என்றான் ரத்னதீபனும் சிரித்துக்கொண்டே.

“அம்புட்டும் சாட் ஜிபிடி. டெக்னாலஜி மச்சான். அப்டேட்டா இருங்க.” என பின்னிருந்து சத்தம் கேட்க, இருவரும் திரும்பினார்கள். 

விமல் ரத்னதீபன் மகளை தூக்கிக்கொண்டு நின்றிருந்தான், “உங்க பொண்ணை புடிங்க, சமாளிக்க முடியாம உங்ககிட்ட கொடுத்துட்டு வரச்சொல்லி ஆடர்.” என அவன் மகளை அவனிடம் கொடுக்க, பூச்செண்டாய் மகளை பிடித்துக்கொண்டான் ரத்னதீபன்.

மகள் வந்தபின் வாழ்க்கையில் பெரிய மாற்றம். அரசியல், கட்சி, பதவி, அதிகாரம் என்று ஓடிக்கொண்டிருந்தவனை வீட்டினில் பிடித்து வைத்துக்கொண்டது இந்த சிட்டு. அது எப்படித்தான் பெண் பிள்ளைகள் பிறந்தால் இந்த அப்பாக்கள் மாறி விடுகிறார்களோ. அவனின் அமைச்சர் கனவைக் கூட தள்ளிப்போட்டுவிட்டான். மகளுடன் நேரம் செலவழிக்க வேண்டுமாம். செண்பகா கடுப்பாகிவிட்டாள்.

மூன்று வருடம் என்னை கண்டுகொள்ளாமல் இருக்க முடிந்தவரால் மூன்று மாதக்குழந்தையை விட்டு இருக்க முடியாதமாம் என சண்டை போடுவாள். சமாளித்துவிடுகிறான் இப்போதெல்லாம். மகள் பிறந்தபின் அவளை இன்னும் இன்னும் புரிந்துகொள்ள முடிகிறது. சோர்வாய் இருந்தாலும் மகளின் பிறந்தநாள் என்ற மகிழ்வில் முகம் கொள்ளா புன்னகையுடன் வளைய வந்த செண்பகாவைப் பார்த்தான். கவனித்தவள் அவனிடம் வந்துவிட்டாள்.

“என்ன யோசனை?” மகள் சமத்தாக அப்பனின் தோளில் முகம் புதைத்து அம்மாவைப் பார்த்தது.

“இந்த அழுத்தக்காரியை எப்படித்தான் கரெக்ட் பண்ணேனோனு யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று சொல்லி செல்ல அடிகள் வாங்கிக்கொண்டான்.

அம்மா தந்தையை அடிப்பதை பார்த்து அம்மாவை முறைத்து கையாட்டியது அவர்கள் சிட்டு.

“என்னடி… என் புருஷனை நான் அடிப்பேன், கதறவிடுவேன். நீ என்னடி குறுக்க வர?” என செல்லமாய் மகளுடன் மல்லுக்கு செல்ல, அவள் தோளில் கையிட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டான் ரத்னதீபன்.

செண்பகப்பூக்கள் அவன் கைசேர்ந்துவிட்ட திருப்தி செங்கோலைவிட அளப்பரிய ஆனந்தத்தை கொடுத்தது. உணர்ந்து தன் கூட்டை அடைகாத்துக்கொண்டான் ரத்னதீபன்.