“கார் வாங்கிட்டிங்களாம் எப்போ இந்த பக்கம் வர்றீங்க?” உரிமையுடன் அழைத்துப் பேசிய விமலுக்கு என்ன பதில் சொல்வது என நெற்றியில் விரலால் கோடிழுத்து அமைதியாக இருந்தான் ரத்னதீபன்.
“என்ன மச்சான் சத்தத்தையே காணோம்?”
“டெண்டர் கிடைச்சிருச்சே வேலை ஆரம்பிச்சிட்டீங்களா? எப்படி போகுது எல்லாம்?” பேச்சை மாற்றினான் சாமர்த்தியக்காரன்.
“இன்னும் ரெண்டு டிராக்டர் தேவைப்படுது லோன் போட்டு சொந்தமா வாங்கிடலாமா இல்லை வாடகைக்கு எடுத்து ஓட்டலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் மச்சான். மழைக்குள்ள தூர்வாரணும்னு நோட்டிஸ் மட்டும் கொடுத்திருக்காங்க, நீங்களே சொல்லுங்க தீபாவளியே முடிஞ்சிடுச்சு. பருவமழைக்குள்ள தூர்வாரனும்னா எப்படி முடியும்? இப்போவே மழை பெய்யுது அடிக்கடி.” என பேச்சுக்கள் வேலை நோக்கி நகர, அவனிடம் பேசிவிட்டு வைத்தவன் பிரபுவை அழைத்தான்.
“சுகாதாரத்துறை அமைச்சரோட இன்னைக்கு மீட்டிங் இருக்கே, போன் போட்டு கன்பார்ம் பண்ணிட்டியா? அவங்க சைட்லேந்து என்ன தகவல் வருது?” கட்சியினுள் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் கோஷ்டி பூசலில் தங்கள் இருப்பை அழுத்தமாக பதிவு செய்யும் நோக்கில் இவனை வளர்த்துவிட எண்ணி தூது விட்டுக்கொண்டிருக்கிறார் அந்த அமைச்சர். கிடைத்தது வாய்ப்பு என அதனை பற்றிக்கொள்ள தயாராகிவிட்டான் இவனும். அதுகுறித்த சந்திப்பு இன்று நிகழவிருக்கிறது.
“ஒன்னும் பிரச்சனை இல்லைதான். ஆனா அவரோட பினாமி நமக்கு ஃபண்ட் பண்றேன்னு சொல்றாரு. அதுதான் இடிக்குது.” என இழுத்தான் பிரபு.
நெற்றி சுருக்கிய ரத்னதீபன், “அமைச்சர் சொல்லியிருப்பார் அதனால அவர் ஃபண்ட் பண்ண தயாரா இருக்கலாம். இதுல எங்க இடிக்குது உனக்கு?”
“அந்த ஆள் அமைச்சர் வேலுச்சாமிக்கும் வேண்டப்பட்டவர். அவங்களுக்குள்ள இருக்குற ஈகோல உங்களை தூக்கிவிடுற மாதிரி விட்டு நாளைக்கு கழட்டிவிட்டுருவாங்களோனு தோணுது அண்ணே. எதுக்கும் நாம அகலக்கால் வைக்காம இருக்குறது நல்லதோனு படுத்து.”
“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும் பிரபு. எனக்கு வேற வழியில்லை. இனியும் மந்த்ராவை நம்பிட்டு இருக்குறது சரியா வராது. ஏற்கனவே கட்சிக்குள்ள எனக்கு அவங்ககூட இருக்குற பழக்கத்தை வச்சி பேச்சு ஓடிட்டு இருக்கு. சிபாரிசுனு என்கிட்ட வராங்க. இதை வளரவிடுறது நல்லது இல்லை.”
“ஃபண்ட்டுக்கு வேற வழியே இல்லையா என்ன?”
“இருக்குதான். மத்தவங்க மாதிரி நம்ம சைட் கமிஷனை அதிகப்படுத்துனா அதுவே போதும் நமக்கு. அப்படி செய்ய வேண்டாம்னுதான் வெளில பாக்குறோம். அதுவும் ஆதாயம் இல்லாம யாரும் நமக்கு செய்யமாட்டாங்க, நம்மளோட கொள்கையை கொஞ்சம் தளர்த்துற மாதிரி இருக்கும். அந்த பினாமி காண்டாக்ட் வாங்கி வச்சிக்கோ. அவங்க நம்மள யூஸ் பண்ணி தூக்கிப் போடுறதுக்கு முன்னாடி நாம அவங்களை யூஸ் பண்ணி மேல வந்துடனும், நம்மள தவிர்க்க முடியாத இடத்துக்கு போயிடணும்.” என்றவனை பிரபு ஒருமாதிரி பார்க்க,
“அவங்க எங்கயோ இருக்காங்க, நாம இப்போதான் கத்துக்குட்டியா உள்ள வந்திருக்கோம்.”
“இருக்கட்டுமே… என்ன இப்போ! அஞ்சு வருஷம் நம்மகிட்ட அதிகாரம் இருக்கு அதை எப்படி யூஸ் பண்ணிக்கிறோம்னு நம்ம கையிலதான் இருக்கு.” என்றவன் முழு அரசியல்வாதியாக மாறி கணக்கு போட, காலம் வேறு கணக்கு வைத்திருந்தது.
“இன்னைக்கு வீட்டுக்கு வர லேட்டாகும். வெயிட் பண்ணாம தூங்கிடு.” மனைவியை பின்னிருந்து அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தபடி அவன் சொல்ல,
“நீங்க இல்லாதப்போ உங்களை தேடி யாராவது வர்றாங்க. அவங்களை வீட்டுக்கெல்லாம் வரவேண்டாம்னு சொல்லலாம்ல.”
முன்பு இவன் வீடு மற்றவர்களுக்கு தெரியாததால் மட்டுமல்ல இவனுமே தன்னைத் தேடி அலுவலகத்திற்கு வந்தால் போதுமென்று கட்சி ஆட்களுக்கு சொல்லியிருந்தான். இப்பொழுது வெளிப்படையாக இவனைப் பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு தெரியவர, மக்களும் கட்சியினரும் அவ்வப்போது இவனை சந்திக்க வந்து விடுகின்றனர். அதற்காகவே காவலுக்கு ஆள் போட்டுவிட்டான். வருபவர்களை வாயிலில் அமர வைத்து கவனித்துக்கொள்வது அவர்கள் வேலை. எக்காரணம் கொண்டும் வீட்டினில் இருக்கும் செண்பகாவிற்கு தொந்தரவு வராதபடி பார்த்துக்கொள்ள சொல்லியிருந்தாலும் இவளுக்கு சங்கடமாகத்தான் இருந்தது. இதனையெல்லாம் பழகிக்கொள்ள வேண்டும் என தனக்குத் தானே சொல்லிக்கொள்பவள் இவனிடமும் முறையிட தவறுவதில்லை.
“அடுத்த மாசத்துலேந்து வீட்டு வேலைக்கு ஆள் சொல்லிடலாம். உனக்கும் தனியா இருக்குற மாதிரி இருக்காது, வேலைக்கும் ஒத்தாசையா இருப்பாங்க.”
அவர்களின் வாழ்க்கை முறையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கியது. அதனை அவன் எளிதாக எடுத்துக்கொள்ள, இவளுக்குதான் சங்கடம். இன்னுமின்னும் செல்வாக்கு கூடினால் இதைவிட அதிக மக்களை சந்திக்க நேரிடும், பெரிய குடும்பங்களுடன் பழக்கவழக்கங்கள் ஏற்படும், வேறு பகுதிக்கு ஜாகை மாற்றி செல்ல வேண்டிய கட்டாயம் வரலாம் என எதிர்காலத்தை கணித்து அவ்வப்போது மனைவியை அதற்கு தகுந்தாற் போல் தயார் செய்ய ஆரம்பித்திருந்தான் ரத்னதீபன்.
“இன்னைக்கு கட்சி மீட்டிங்கா?”
“அப்படியும் சொல்லலாம். அமைச்சரோட வீட்ல மீட்டிங். அப்படியே முடிஞ்சா கட்சி தலைவரை பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். நம்ம தொகுதிக்கு தேவையான உதவி கேக்கணும்.” என்று சொல்லிவிட்டு சென்றவன் அவன் வேலையை முடித்துவிட்டு கிளம்பப்போகும் சமயம் ஒரு இறப்பு செய்தி வந்தது. இவர்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கும் திரைத்துறை பிரபலம் ஒருவர் வயது மூப்பில் இறைவனடி சேர்ந்திருந்தார். இவன் போகத் தேவையில்லை என்றாலும் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் மேலிடத்திற்கும் முக்கியப்பட்டவர் என்ற முறையில் ஆட்சியில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்ற உத்தரவு வந்தது. செண்பகாவிடம் சொல்லிக்கொண்டு அங்கு கிளம்பினான். வழியில் கட்சியினர் சிலர் உடன் சேர்ந்துகொள்ள அவர்களுடன் பேசியபடியே கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் அவர் வீட்டிற்கு சென்றான்.
நடுஇரவு எனினும் பத்திரிக்கையாளர்களின் கேமரா வழி வந்த வெளிச்சமே அந்த இடத்தை பகல் போல் காட்டியது. அங்கிருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியவன் மந்த்ராவை அந்நேரம் அங்கு எதிர்பார்க்கவில்லை. பார்க்கவே களைப்பாக இருந்தாள். அவளும் மரியாதை செலுத்திவிட்டு இவனை கண்டுகொண்டு இவனிடம் வந்தவள்,
“என்னை படத்துல அறிமுகப்படுத்துனது இவர்தான். இப்போதான் ஷூட்டிங் முடிஞ்சுது நேரா இங்க வந்துட்டேன்.” என தகவல் போல் சொல்ல, மரியாதை நிமித்தமாக இரண்டொரு வார்த்தை அவளிடம் பேசிவிட்டு கிளம்பப்பார்க்க, உடன் வந்திருந்த கட்சி ஆட்கள் இவனை சாக்காக வைத்து மந்த்ராவிடம் பேச முயன்றார்கள். இவன் தடுத்தாலும் இவனையே பின்னுக்கு தள்ளிவிட்டு சிலர் அவளிடம் செல்லப்போக வேறு வழியே இன்றி தன் ஆட்களை சத்தம் போட்டு அதட்டி அவளை முதலில் கிளம்பச் சொல்லியதுடன் மழை வந்ததால் தன்னிடம் இருந்த குடையை அவளிடம் கொடுத்துவிட்டு பின்னோடே இவனும் இவன் காருக்கு நடக்க, மறுநாள் இவன்தான் பரபரப்பு செய்தியானான். செய்தி என்னவோ பத்தோடு பதினொன்றாகதான் வந்தது. ஆனால் சிலர் தங்களின் விளம்பரத்திற்காக,
“திரையுலகிலிருந்து அரசியல் உலகிற்கு நெருக்கமாகும் மந்த்ரா.
கூட்டத்தில் சிக்கிக்கொண்ட நடிகையை பாதுகாப்பாக காரில் ஏற்றி வழியனுப்பி வைத்த எம்.எல்.ஏ.
இரவில் நடிகையை தனியே அனுப்ப மனமின்றி அவரும் உடன் வந்தாரா?
இரண்டு வருடங்கள் முன் நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட இவர் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவருடன் நடிகை இன்னுமே தொடர்பில் இருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுக்கிறது.” என போட்டுவிட்டதோடு அவர்களின் பழைய புகைப்படங்களையும் எடுத்துப்போட்டு கதை எழுதிவிட்டனர்.
“என்னய்யா எதுவும் இல்லைனு அன்னைக்கு சாதிச்ச இப்படி துக்க வீட்டுக்கு ஜோடியா போயிருக்கீங்க.” வேலுசாமி நேரடியாக அழைத்து கேட்டுவிட்டார். அன்று அவரிடமும் தயாரிப்பாளர் முன்னிலையில் ஒன்றுமில்லை என சாதித்தானே. இன்று என்ன பதில் சொல்வானாம் என்ற இளக்காரம்.
மறுநாள் அலுவலகம் வந்தபின்தான் இந்த செய்தி பரவியதே ரத்னதீபனுக்கு தெரியவந்திருக்க, வீட்டிற்கு சென்று செண்பகாவை எதிர்கொள்ளவே அத்தனை யோசனை.
‘நம்மளை நிம்மதியாவே இருக்க விடமாட்டானுங்க.’ என முனகிக்கொண்டவன் தலை பிடித்து அமர்ந்துவிட்டான். அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டான். யாரையும் சந்தித்து இலகுவாய் பேச முடியும் என்று தோன்றவில்லை. மனம் முழுதும் மனைவியின் மனம் எப்படி தவிக்கும் என்பதிலேயே உழன்றது. அவளை எப்படி சமாதானம் செய்து சமாளிக்க போகிறோம், என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டு தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாளோ என்று அகம் அடித்துக்கொண்டது. அலுவலில் இருப்பு கொள்ளவில்லை அதற்காக மனைவியை தேடிக்கொண்டு செல்லலாம் என்றால் அவளுக்கு அலுவல் வேலை இருக்குமே. அதுவரை என்ன செய்வது என்ற பதட்டத்தில் இருந்தவன் மனைவியின் மனநிலையை கிரகிக்க எண்ணி அவளுக்கு அழைத்தான். எப்போதும் அழைப்பே செல்லாது இன்று என்னவோ செண்பகா உடனே எடுத்துவிட்டாள். அதுவே அவனுக்குள் பீதியை கிளப்பியது.
“என்னங்க இப்போ கூப்பிட்டிருக்கீங்க?” என அவள் இலகுவாக பேச, அவள் இன்னும் இந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.
“என்னங்க?”
“ஹான்… அந்த பக்கமா வேலை இருக்கு. வந்தா உன்னை பாக்கலாமான்னு கேக்க தான் கூப்பிட்டேன்.” தானாக எதையும் சொல்லி அவளை வருத்த வேண்டாம், வீட்டிற்கு வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று வேறு பேசினான் ரத்னதீபன்.
“ஐயோடா! என்கிட்ட கேட்டுட்டுதான் இவர் என்னை பார்க்க இங்க வருவாரு, அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாரு, பர்மிஷன் போட்டு கூட்டிட்டு போவாரு.” கேலியாய் அவள் சலித்துக்கொள்ள, ஓசையில்லா புன்னகை அவன் இதழ்களை ஆக்கிரமித்தது. அவளை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற உந்துதலில் என்னவெல்லாம் செய்தோம் என எண்ணிப்பார்த்தான்.
“சரி நீங்க யோசிச்சிகிட்டே இருங்க. என் பிரேக் டைம் முடிஞ்சிடுச்சு.” என அவள் அழைப்பை துண்டிக்க, இவனுக்கு ஆசுவாசம். மாலை வரை அவள் நிம்மதியாக இருக்கட்டும் என எண்ணிக்கொண்டவனும் தன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான்.
அவன் தொகுதிக்கு உட்பட்டு வரும் பகுதிகளில் முக்கிய ஏரிகளாக கண்டுபிடிக்கபட்டவைகளை தூர் வாரி பருவமழைக்கு தயார் செய்ய சொல்லியிருந்தான். அதனை பார்வையிட பிரபுவுடன் கிளம்பியவன் அங்கு நடக்கும் வேலைகளில் திருப்தியுற்றவனாய் பார்த்தான்.
“இந்த ஏரியோட சேர்த்து இன்னும் ரெண்டு ஏரில கழிவு நீர் கலக்குறதை தடுத்திருத்துக்காங்க. ஆனா இன்னும் மீட்டு நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டிய நீர்நிலைகள் நிறைய இருக்குண்ணா.” என்ற பிரபுவிடம் அடுத்து செய்ய வேண்டியவற்றினை பட்டியலிட்டு நகர்ந்தவன் செண்பகா வேலை நேரம் முடியும் முன்னரே வீட்டிற்கு சென்றுவிட்டான். எப்பொழுது வருவாள் என வாசலையே பார்த்துக்கொண்டிருந்தவன் சோர்வாக அவள் உள்நுழையவும் எழுந்து சென்று அவளை வரவேற்றவன்,
“உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கிடலாம் செண்பா. முன்னாடிதான் கோவத்துல வேண்டாம்னுட்ட. இப்போ வாங்கிக்கலாம், டெய்லி நடந்து போய் ஆட்டோ புடிச்சி ஏன் கஷ்டப்படணும்.”
“அதுதான் இப்போ எனக்கு கஷ்டம் கொடுக்குதுல்ல?” என்று ஒருபார்வை பார்த்தாள். சீற்றமில்லாத அழுத்தமில்லாத பேச்சு கூட நறுக்கென்று கூறுபோடுமா? அவள் வார்த்தைகளுக்கு துணையாய் அவள் விழிகளும் பேச, ரத்னதீபன் வாயடைத்துப் பார்த்தான்.
சத்தமில்லை அழுகையில்லை, சண்டையில்லை முகச்சுழிப்பில்லை. இதுதான் வாழ்க்கை என ஏற்றுக்கொண்ட பாவனையுடன் விரக்தியை கொஞ்சம் அள்ளித்தெளித்து அவள் நின்ற கோலம் சொன்னது இவன் பயந்த விஷயம் அவள் பார்வை எட்டிவிட்டதென.
இதுபோன்ற புகைப்படங்களும் கட்டுரைகளும் முன்பு வந்தபோது ஆவேசமாய் சண்டையிட்டு தன் விருப்பமின்மையை தெரியப்படுத்தியவள் இப்போது அமைதியாக இருப்பது கலக்கத்தை கொடுத்தது ரத்னதீபனுக்கு.
தன்னைப்போல் உள்ளே சென்று உடை மாற்றி குடிக்க காபி போட்டுக்கொண்டு அமர்ந்தவள் பின்னேயே சுற்றியவன் அவளருகில் அமர்ந்து விரல் கோர்த்துக்கொண்டான். அவள் கண்டுகொண்டது போலவோ மறுத்து நகரவோ இல்லையென்றதும் தவிப்பாய் பார்த்து துக்க வீட்டில் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்ல, கேட்டுக்கொண்டேன் என்ற பாவனை கொடுத்தாள் செண்பகா.
“ஏதாச்சும் பேசு செண்பா?”
“எப்போ வீட்டுக்கு வந்தீங்க? காபி குடிச்சீங்களா?” என்றாள் எதுவும் நடவாதது போல்.
“என்னடி! உனக்கு என்கிட்ட பேச வேறெதுவும் இல்லையா?” வருத்தமாய் அவன் ஏறிட,
“நான் வேற பேசுறதால என்ன மாறிடப் போகுது?”
“செண்பா?” தவிப்பும் தத்தளிப்புமாய் வந்தது அவன் அழைப்பு.
“சொல்லுங்க நைட் என்ன செய்ய?” என்றாள் மீண்டும். அவளின் ஒட்டாத தன்மையை ஏற்க முடியாதவனாய் அவளை தன்மேல் சாய்த்துக்கொண்டான்.
“இப்படி இருக்காத செண்பா.”
“வேற எப்படி இருக்கணும்? நீங்கதானே எல்லாத்துக்கும் பழகிக்கணும் சொன்னீங்க. அதைதான் பண்றேன்.” என்று நயமாய் சொன்னவளை ஆயாசமாக பார்த்தவனுக்கு இந்த செண்பகாவை எப்படி கையாள எனப் புரியவில்லை.
“செண்பா?”
“சொல்லுங்க.”
எதுவுமே நடவாதது போல் அவ நடிக்க முயல்வது அப்பட்டமாய் தெரிய, அதற்கு மேல் அதனை தோண்டித் துருவவில்லை ரத்னதீபன். அவள் விருப்பத்திற்கு விட்டுவிட்டான். வழமை போல் சமைத்துவிட்டு வேலைக்கு சென்று வருவது, இரவு உறங்கும் நேரம் அவனிடம் பேசுவது என இயல்பாக இருக்க முற்பட்டாள். நடுநடுவே மனைவியை நெருங்க முயன்றவன் இப்போது மொத்தமாய் தள்ளி நின்றுவிட்டான். அருகருகே கைகள் பிடித்துக்கொண்டு உறங்கினாலும் நெருக்கம் என்பது விலகியே இருந்தது.
அடுத்து வந்த நாட்களில் வளவன் அழைத்துவிட்டான் தங்கையின் எண்ணவோட்டத்தை அறிந்துவிட்டவன் போல.
“நீங்க மாறவே இல்லையில்லை?” ரத்னதீபன் அழைப்பை ஏற்றதும் வளவன் எகிற, அடுத்து இவனா என்ற எண்ணம்.
“என்ன பேச்சையே காணும்? இன்னும் எவ்ளோ நாள் பாப்பாவை கஷ்டப்படுத்திட்டே இருப்பீங்க? உங்களுக்கு புடிச்சவங்க அந்த ஹீரோயின்தான்னா அவங்களையே கட்டிக்க வேண்டியதுதான? எதுக்கு என் தங்கச்சியை கூட வச்சிக்கிட்டு வேற யாரோடையோ சுத்திட்டு இருக்கணும்?”
“அப்போ உங்க தங்கச்சியை அனுப்பிட்டு வேற யார்கூட சுத்துனாலும் பரவாயில்லையா உங்களுக்கு?” என்ன நடந்தது என்று தெரியாமல் கேள்வி கேட்கலாமா, வீம்புக்கென்று பேசினான் ரத்னதீபன்.
‘இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.’ என்று சொல்ல வளவனுக்கு ஆசைதான், ஆனால் தங்கை கணவனாகிவிட்டானே அதனால் பல்லைக்கடித்தான்.
“என்ன பேச்சையே காணும். உண்மை என்னனு தெரிஞ்சுதான் உங்க தங்கச்சி என்கூட இருக்கா. முடிஞ்சா அடக்கமா பேச பழகுங்க.” ரத்னதீபன் திமிர் அடங்குவது போல் தெரியவில்லை.
“அதை நீங்க சொல்ல வேணாம்.” என்றான் வளவனும் கடுப்புடன்.
“நான் சொல்லாம? என்னைத்தான கேக்குறீங்க?”
“பின்ன கேக்காம? என் தங்கச்சியை கட்டி கொடுத்திருக்கு. அவளை சந்தோஷமா வச்சிருக்குற வரைக்கும்தான் நான் அமைதியா இருப்பேன்.”
“இல்லைனா வெடிச்சிருவீங்களோ? எனக்கு நிறைய வேலை இருக்கு, நான் போன் வைக்குறேன். எதுனாலும் உங்க தங்கச்சிகிட்ட பேசிக்கோங்க.” என்று திண்ணக்கமாக பேசி வைக்க, வளவனுக்கு சுர்ரென்று ஏறியது. விளைவு தங்கைக்கு அழைத்து அவன் பேசியதையெல்லாம் சொல்லியவன்,
“உன்னை மதிக்காதவர் கூட இன்னும் எத்தனை காலம் நிம்மதியா இருக்க முடியும் சொல்லு. எங்களுக்காக எல்லாம் யோசிக்காத. நீ என்ன முடிவெடுத்ததாலும் நான் கூட நிப்பேன்.”
“அப்படியெல்லாம் இல்லை அண்ணா.” மனதில் கணவனை வறுத்தெடுத்துக்கொண்டே அண்ணனை சமாதானம் செய்ய முயன்றாள் செண்பகா.
“சும்மா சமாளிக்காத. இன்னைக்கு வெள்ளிக்கிழமை, அடுத்த ரெண்டு நாள் லீவ்தானே. இங்க வந்துட்டு போ, அப்போவாச்சும் உன் வீட்டுக்காரருக்கு உன் அருமை புரியட்டும்.” ஒரு வேகத்தில் யோசியாமல் தங்கையை அழைத்துவிட, யோசித்துப் பார்த்த செண்பகாவும் வீட்டிற்கு வருகிறேன் என்றுவிட்டாள். என்னதான் இயல்பாய் இருப்பதாய் காட்டிக்கொண்டாலும் மனதை அழுத்தும் பாரத்தை சமாளிப்பது பெரும் வேலையாய் இருக்க, இந்த இடமாற்றம் நிம்மதி கொடுக்கும் என்று நினைத்து கணவனுக்கு அழைத்து சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் இயல்பாக கடந்திருப்பான். சங்கடத்தில் இருக்கும் மனைவி ஊருக்கு செல்கிறேன் என்றதும் என்னவோ போல் ஆனது. ஏதாவது செய்து அவளது சஞ்சலத்தை தீர்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு அந்த வாய்ப்பு தானாக வந்தது.
ஏரிகள் தூர்வாரி செப்பனிடும் பணியின் ஒருபகுதியாக ஏரியை சுற்றி நடைபாதை அமைத்து அடுத்த வருடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் திட்டத்தின் செயல்விளக்கம் நடைபெற்றது. அதுகுறித்து பேட்டியெடுக்கவென வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் பொதுவான விஷயங்கள் குறித்து அவனிடம் கேள்வியெழுப்பி பதில் வாங்கிக்கொள்ள, துடுக்கான நிருபர் ஒருவர் இவனுக்கும் மந்த்ராவுக்கும் இருக்கும் பழக்கம் பற்றி கேட்க, இறுகிப்போன ரத்னதீபனின் முகம் சட்டென இயல்பை மீட்டுக்கொண்டது.
“ஒரு விழா மூலமா அவங்களோட அறிமுகம் கிடைச்சிது. பழக்கமானவங்களை நாலு இடத்துல பாக்குறப்போ ஒன்னு ரெண்டு வார்த்தை விசாரிப்பா பேசுறது இயல்புதான. அதை போய் உங்க பிரெண்ட்ஸ்ல சிலர் போட்டோ புடிச்சி போட்டு திரிச்சி எழுதிட்டாங்க. வீட்ல என் வொய்ப் காத்திட்டு இருக்காங்க, என்னை அடிவாங்க வச்சிடாதீங்க.” என கேலி போல முடித்துவைத்தான்.
“அப்போ நட்பு ரீதியான பழக்கம் மட்டும்தானா?”
“அதுதானேங்க சொன்னேன். இந்த தேர்தல், பதவி எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என் மனைவி என்னோட பலம். அதுக்கு கலங்கம் விளைவுக்குற மாதிரி இந்த நியூஸ் பரப்புறதை வன்மையா கண்டிக்கிறேன்.” என சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இவன் மட்டும் சொன்னால் போதுமா, சம்மந்தப்பட்ட இன்னொருவரும் உறுதி செய்ய வேண்டுமே என்று மந்த்ராவையும் தொடர்புகொண்டது பத்திரிக்கை குழு. எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது நட்புதான் என அடித்துக்கூறினாள் அவளும். மனைவி, குடும்பம் என அவன் ஒதுங்கிக்கொண்ட பின் அவனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை அவள். பதிலுக்கு பதில் உதவி செய்து ஆதாயம் பெற்றாயிற்று, இதோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதே அவள் எண்ணமாகவும் இருக்க,
“இத்தனை நாள் மறுப்பு சொல்லாம இப்போ மட்டும் ஏன் சொல்லணும்?” என்ற கேள்வி வந்தது.
“இப்போதான நேரடியா நீங்க கேட்குறீங்க? நீங்க கேட்டாத்தான் நான் சொல்ல முடியும்.” என சாமர்த்தியமாக கழன்றுவிட்டாள் மந்த்ரா. இதற்கு முன் இதுகுறித்த கேள்விகளை அவள் சந்திக்கவில்லை என்று சொல்லமுடியாது. பேட்டிக்கு முன்னரே தனிப்பட்ட கேள்விகள் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் நேர்க்காணல் கொடுப்பாள். இப்போது ரத்னதீபனின் மறுப்பு செய்தியை பார்த்துவிட்டு இவளும் அதனை முடித்து வைத்துவிட்டாள்.
மறுப்பு, அது தந்த மதிப்பு செண்பகாவிற்கு வார்த்தையால் சொல்லியடங்காது. கணவனுடன் வேறொரு பெண்ணை சேர்த்துப் பேசுகையில் பெயருக்கேனும் அப்படியில்லை என்று அன்றே அவன் சொல்லியிருந்தால் தனக்கு இத்தனை வருத்தம் இருந்திருக்காதோ? ஊர் ஆயிரம் சொல்லட்டும் ஏன் இவனே கூட புரளியை கிளப்பி இருக்கட்டும், கட்டிய மஞ்சள் கயிற்றுக்கு மரியாதை செய்யும் விதமாய் ஒரே ஒருமுறையேனும் அவன் மறுப்பு சொல்லிவிட்டு பின் என்னவும் செய்து கொண்டிருக்கட்டும் அவளின் மரியாதை அங்கு நிலையாய் நின்றிருக்குமே. அவனின் அடையாளமாய், அவளுக்கான அடையாளமாய் எங்கோ ஒரு துரும்பாய் அவளும் இருந்திருப்பாளே. இது ஏன் இவனுக்கு அன்றே தோணாமல் போனது என நினைத்தாலும் இது தனக்கும் தோன்றவில்லையே என கேள்வி எழுப்பியவளுக்கு விநோதமாய் தன் இறுக்கங்கள் காணாமல் போன உணர்வு. இவன் என்னவன் எனக்கானவன் என ஊரின் முன்னே தலைநிமிர்ந்து செல்லலாம் என்ற இளக்கம். உள்ளுக்குள் பலமோ பலவீனமோ வெளியே மனைவி தன் பலம் என பகிரங்கமாக அவன் சொல்லிவிட்டதில் மென்சாரல். அவனை உடனே பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தலைதூக்க, அலைபேசியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
விடிந்தால் வேலைக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து நேராக சென்றுவிடலாம் என்ற எண்ணத்தை ஒதுக்கியவள் மறுநாள் விடுப்பிற்கு சொல்லிவிட்டு எப்போது விடியும் என காத்திருந்தாள். தனக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அலைபேசி அழைப்புகள் வழி கடத்த விரும்பாதவளாய் அவன் குறுஞ்செய்திகளைக் கூட தவிர்த்தாள். அழைப்புகளை அமர்த்தி உறக்கம் வருவதாய் பொய்யுரைத்து இன்பமான அவஸ்தையாக கழிந்த நொடிகளை ஆழ்ந்து அனுபவித்தாள். இதுபோன்று திருமணத்திற்கு முன்னிருந்த நியாபகம். அவனுடன் எப்போது பேசுவோம் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் இன்று மீண்டும் கிளர்ந்தெழுந்து வந்தது. அலைபேசியில் இருக்கும் அவனது புகைப்படங்களை திறந்து ரசனையுடன் ஏறிட்டாள். மனதினில் கொஞ்சமே கொஞ்சம் கொஞ்சிக்கொண்டாள். உறக்கம் வருவேனா என முரடு பிடிக்க, காலை முதல் ரயிலிலேயே ஏறி வீடு சென்று சேர்ந்தவள் கணவனை கண்ட நொடி பாய்ந்து சென்று கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
“செண்பா?” அதிர்ந்து விழித்த ரத்னதீபன் கரங்களும் உயர்ந்து மனைவியை பிடித்துக்கொண்டது.
“இதை சொல்ல இத்தனை வருஷமா உங்களுக்கு?” அணைப்பிலிருந்து லேசாக விலகி அவனை அடிக்க,
“ஏய் எதுக்குடி அடிக்குற…” அவன் அலற,
“டீவில அடிப்பேன்னு சொன்னீல்ல நீ, அதுதான்.” என காரணம் சொன்னவள் மூக்கை பிடித்து நிமிண்டியவன், “அதுல ஆயிரம் வரும். எல்லாம் உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்லை.”
“அப்போ நான் உங்களோட பலம்னு சொன்னது பொய்யா?” இவள் முறைக்க, அவள் தலையில் செல்லமாக தட்டியவன்,
“அதை கூட இருந்து தெரிஞ்சிக்கோடி என் செண்பகப்பூவே.”
“ஹான் அதுக்குதான் வந்திருக்கேன். இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.”
“அதையும் பாக்கலாம்.” என அவளை பிடிக்கப்போக, துள்ளி ஓடியது பெண்.