பளிச்சென்று வந்தமர்ந்திருந்த ரத்னதீபனை ஆச்சரியமாய் பார்த்த பிரபு, “ஊருக்கு போயிட்டு வந்ததும் முகமே டாலடிக்குது. என்ன விஷேஷம் அண்ணே?”
“போய் வேலையைப் பாருடா.” கடிய முயன்றவன் முகம் புன்னகை தாங்கி நின்றது. மனைவியுடனான சமாதான உடன்படிக்கை வெற்றி கண்டபின் ஆசுவாசம் கொண்ட மனதின் உல்லாச கூச்சல் முகத்தினில் வெளிப்பட்டது.
“என்ன அண்ணி செமத்தியா கவனிச்சு விட்டாங்களா?” என கேலி பேசிவன் மீது பேனாவை விட்டெறிந்து முறைக்க, சிரித்துக்கொண்டே வெளியேறினான் பிரபு.
சிறிது நாட்கள் பாராமுகம் காட்டிய மனைவியின் புறக்கணிப்பு தந்த பாரத்தையே தன்னால் தாங்க முடியவில்லையே, தான் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்த நாட்கள் எல்லாம் அவள் என்ன செய்தாளோ என மனைவியின் உணர்வுகள் குறித்த எண்ணம் எழுந்தது. இன்னும் கொஞ்சம் முன்னமே தன் வாழ்க்கையை கவனத்திருக்க வேண்டுமோ? காலம் கடந்த யோசனை.
திருமணத்திற்கு பின்னான முதல் பிறந்தநாள், முதல் திருமணநாள் என எதுவும் சிறப்பிக்கப்படவில்லையே. எதிரே மேசையில் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் பிறந்தநாள் விழாவிற்கான அழைப்பிதழ் கண்ணில்படவும் எண்ணிக்கொண்டான். அந்த விழாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சென்றால் என்ன என்று இப்போது தோன்றியது. நினைத்த மாத்திரம் மற்றவர்கள் போல் வார விடுமுறை என கடற்கரைக்கோ, மாலிற்கோ, இலக்கின்றி வெறுமென ஊர் சுற்றவெல்லாம் முடியாது. இதுபோன்ற கட்சி சார்ந்த குடும்ப விழாக்கள் என்றால் ஒத்துப்போகும் என்ற யோசனையுடன் மனைவிக்கு அழைத்தான். அழைப்பு செல்லவில்லை.
‘இன்னும் என்னை அன்பிளாக் பண்ணலையா இவ?’ கடுப்புடன் எண்ணிக்கொண்டவன் மணியைப் பார்த்தான். முன்மாலை ஆகியிருந்தது. பின்மாலையில் விழா. அவள் வீடு வந்தபின் கிளம்பினால் கூட போதும், அப்போது சொல்லிக்கொள்ளலாம் என்ற நினைப்புடன் வேலையை கவனித்தான். பிரபுவை விட்டு பரிசுபொருள் வாங்கிவர சொல்லலாம் என்ற எண்ணத்தையும் கைவிட்டு மனைவியுடன் நேரம் செலவழிக்கும் ஆசையில் மாலை நேரமே வீடு சென்றான்.
“இன்னைக்கு ஒரு பர்த்டே பார்ட்டி இருக்கு. கிளம்பு போயிட்டு வந்துரலாம்.” திடுமென இப்படி சொல்பவனை விசித்திரமாக அவள் பார்க்க,
“நான் எதுக்கு?” இதுவரை பெரிதாக எங்கும் அழைத்துச் செல்லாதவன் திடுமென பார்ட்டி என்கவும் புரியவில்லை அவளுக்கு.
அறை வாயிலிலேயே நின்று திரும்பிப் பார்த்தவன் புருவங்கள் நெறிபட்டது, “என்ன கேள்வி இது? நான் மட்டும் எப்படி போக முடியும்?”
“இதுவரைக்கும் அப்படித்தான இருந்துச்சு? இப்போ என்ன புதுசா?” எழாமல் அவள் அமர்ந்தவாக்கிலேயே கேள்வி கேட்கவும் பாய்ந்து வந்து அவளை எழுப்பி கைகளில் தூக்கிக்கொண்டான் ரத்னதீபன்.
“ஆ… என்ன பண்றீங்க?” அதிர்வில் அவன் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டவள் கண்கள் அகல விரிந்துகொள்ள, இதழ்கள் லேசாக பிளந்து மூச்சுகள் வேகமெடுத்து ஏறி இறங்கியது.
“கேள்வி கேட்டுகிட்டே இருந்தா அங்க பங்ஷனே முடிஞ்சிடும். போற வழில கிப்ட் வாங்கிட்டு போயிடலாம்னா நீ கேள்வி பதில் விளையாடிட்டு இருக்க.”
“இனி இதுக்கெல்லாம் பழகிக்கோ செண்பா. நைட் டின்னர் அங்கேயே பார்த்துக்கலாம்.” என்றவன் மெல்ல அவளை தன்வட்டத்திற்குள் இழுக்கப் பார்த்தான்.
“எனக்கு அங்க யாரையும் தெரியாது. இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை.” செண்பகாவிற்கு தயக்கம்தான்.
“இனிமே தெரிஞ்சுக்கோ செண்பா. நீ இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு அது கட்சி கூட்டம் இல்லை ஃபேமிலி ஃபங்ஷன். அப்படி பிரச்சனை இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போய் உன்னை நிறுத்திட மாட்டேன்.” என்றபின் கிளம்ப ஆரம்பித்தாள் செண்பகா.
எளிமையாகவும் அதேசமயம் அதிக வேலைப்பாடும் இல்லாத ஒரு உடைக்கு மாறிக்கொண்டு கண்ணாடி முன்னின்று செண்பகா தலைவார, அவள் பின்னே வந்து நின்றான் ரத்னதீபன். அவன் கண்ணாடி பார்க்க ஏதுவாய் அவள் நகர, நகரவிடாமல் அவள் இடையில் கைவைத்து தடுத்தான் ரத்னதீபன். யோசனையுடன் அவள் திரும்பிப்பார்க்க, அவள் தோளில் தாடை பதித்து தன் ஒற்றை விரலால் அவள் முகத்தை கண்ணாடி பார்க்க திருப்பியவன் அவள் வயிற்றோடு சேர்த்துப்பிடித்து விரல்கள் கோர்த்துக்கொண்டு அப்படியே நிற்க, இவளுக்கு குறுகுறுவென்றது.
“ஹான்… கிளம்ப வேணாமா?” கரகரத்த குரலை சரிசெய்துகொண்டு கண்ணாடி பிம்பத்தில் தெரிந்தவனைப் பார்த்து செண்பகா கேள்வி எழுப்ப,
“கிளம்பணும்தான்.” என்றவன் குரலிலும் ஏதோ மாற்றம்.
“இப்படியிருந்தா எப்படி கிளம்ப?” என கேட்டுக்கொண்டே அவள் நகரப் பார்க்க, அவளை பிடித்திழுத்து முன்போல் நிற்க வைத்துக்கொண்டவன், “எப்போதும் ஓடிட்டேதான இருக்கோம். இன்னைக்கு நிதானமா இருக்கலாம்.” என்றவன் பார்வை மொத்தமும் கண்ணாடியில் தெரிந்த பாவையின் பாவனைகளை ரசித்தது.
அதிர்ந்து, படபடத்து, தத்தளித்து, அவஸ்தையாக நெளிந்து நிற்பவளின் இந்த பரிமாணங்கள் எல்லாம் அத்தி பூத்தாற் போல் கிடைத்த தரிசனமாக எண்ணி அவன் பூரிக்க, மறுபுறம் அவன் அறிவே அவனை காறித்துப்பியது. இன்னும் சில மாதங்கள் கடந்தால் மணமாகி மூன்று முடிந்துவிடும், இதுவரை என்ன புடுங்கினாய் என கேள்வி எழும்ப, அதை ஏற்கமுடியாதவனாய் ஒதுக்கி வைத்து மனைவியிடம் கவனம் குவித்தான். பின்னலிட்டுக்கொண்டிருந்த விரல்கள் தளர்ந்து கோர்த்திருந்த அவன் கைகளை விலக்கும் பொருட்டு அவனதை அழுந்தப் பற்றியபடி இருந்தது.
“விடுங்க கிளம்பணும்.” என்றாள் அவள் மீண்டும். அதில் கொஞ்சம் சுணக்கம்தான் இவனுக்கு. எட்ட நிறுத்துவதில் குறியாய் இருப்பவள் கிட்ட வருவதை ஏற்பதில் சங்கடம் கொள்கிறாளே. சென்றவாரம்தானே எல்லாம் பேசினோம் இன்னும் என்னவாம்? என்ற யோசனையுடன் அவன் விலகிவிட, சப்பென்று போனது செண்பகாவிற்கு. தவிப்புடனும் குழப்பத்துடனும் அவனை கண்ணாடியில் பார்த்தாள்.
பெருமூச்சுடன் தலை கோதியவன் கிளம்பலாம் என்பது போல் தலையசைத்து வெளியேறிட, செண்பகாவிற்கு தன் எண்ணங்களை புரிந்துகொள்ள கடினமாய் இருந்தது. அவன் நெருக்கம் ஒரு இனிமையை விதைக்கிறது ஆனால் முழுமனதாய் ஏற்க முடியவில்லை. மனம் விட்டு பேசிய பின் நடந்தவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வரும்காலங்களை பார்க்கலாம் என்றால் என்னவோ ஒரு நெருடல். சில நாட்களுக்கு முன் அவன் அருகாமையை ஏற்றோமே அப்போது நெருடவில்லையே என யோசித்துப் பார்த்தாலும் இன்னதென அவளுக்கும் புலப்படவில்லை.
“செண்பா.” இவள் தாமதமாக்க, குரல் கொடுத்துவிட்டான் ரத்னதீபன். துரிதமாக முகத்தை ஒழுங்கு செய்துகொண்டு கிளம்பினாள். வண்டியில் போகும் போதும் பெரிதாக பேச்சில்லை. பரிசு வாங்க ஒரு கடைக்கு செல்ல, செண்பகாவையே பார்த்து வாங்கச்சொன்னான். அவளும் பிள்ளையின் வயதென்ன என கேட்டுக்கொண்டு அதற்கேற்றாற்போல் தேர்ந்தெடுத்து அவனிடம் காண்பிக்க, மெச்சுதலுடன் அதனை வாங்கி பார்த்தவன் உடனேயே திரும்ப வைத்துவிட்டு,
“விலை அதிகமா இருக்கு. இன்னும் கம்மியா பாரு.” என்றான். அவளும் வேறு ஒன்றை எடுத்து வர, “விலை ரொம்ப கம்மியா இருக்கே. இவ்ளோ சீப்பா வாங்கிட்டு போனா மதிக்க மாட்டாங்க.” என்றான் அதற்கும்.
“நீயே வாங்கிக்கோ போ.” என அலுத்துக்கொண்ட பெண் கைகட்டி நின்றுவிட,
“இதுக்கே சலிச்சிக்குற.” என சொல்லிக்கொண்டே அவன் ஒன்றை தேர்ந்தெடுக்க, முறைத்துப் பார்த்த செண்பகா, “இதுக்கு நீங்களே வாங்க வேண்டியதுதானே?”
“நீ பாத்து வாங்குவேன்னு நினைச்சேன்.”
“ரெண்டு வயசு குழந்தைக்கு எப்படி வாங்குறதுன்னு எனக்கெப்படி தெரியும்?”
“மண்ணாந்தையா இருந்த என்னை சொல்லணும். எல்லாம் ஒழுங்கா இருந்திருந்தா இந்நேரம் நம்ம புள்ளையை பால்வாடிக்கு அனுப்பி இருக்கலாம், அப்போ இந்த சந்தேகம் எல்லாம் வந்திருக்காது.” மெல்லிய முணுமுணுப்புடன் அவளை தாண்டிக்கொண்டு அவன் பில் போட செல்ல, அதனை கேட்டவள் இதழ்கள் கேலியில் வளைந்தது.
‘இந்த மனுஷனுக்கு அரசியல் பண்ணவே நேரம் போதல இதுல புள்ளையை பால்வாடிக்கு அனுப்புறதா?’ சிரித்துக்கொண்டே அவனை பின்தொடர்ந்தாள்.
பரிசு வாங்கிக்கொண்டு மீண்டுமொரு அமைதியான பயணம். பிரபல உணவகம் ஒன்றின் விழா கூடத்தில் விழா ஏற்பாடாகியிருந்தது. மனைவியுடன் இவன் உள்ளே நுழையவும் விழா குடும்பத்தினர் இனிமையாக அதிர்ந்தனர். மரியாதை நிமித்தமான அழைப்பிற்கு எம்.எல்.ஏவான இவன் மனைவியுடன் வருவான் என எதிர்பார்த்திராதவர்கள் வாயில் வரை வந்து வரவேற்று உடனிருந்து இவர்களை கவனித்தனர்.
எம்.எல்.ஏ என்றதும் தேடி வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது, கைகுலுக்கி போட்டோ எடுத்துக்கொள்வது என்று இருக்க, ஒதுங்கி நின்றுகொண்ட செண்பகாவிற்கு அனைத்தும் புதியதாய் இருந்தது. அவ்விடத்தின் அலங்காரங்கள் புருவம் உயர்த்த வைத்தது. பகட்டு என்று சொல்ல முடியவில்லை என்றாலும் இவர்கள் இருக்கும் நிலைக்கு சற்று மேல் என்ற தோரணை வெளிப்படுத்தியது அங்கிருந்த அலங்காரங்கள் ஒவ்வொன்றும். இவள் தனியாக நிற்பதை பார்த்துவிட்டு விழா சிட்டின் அம்மாவோடு சிலர் வந்து சூழ்ந்துகொண்டனர். குழந்தையை அவளிடம் காட்டி இயல்பாக பேச, சிறிது நேரத்தில் இலகுவாகிவிட்டாள்.
மேடையில் கேக் வெட்டும் சமயம் இவர்களையும் அழைக்க, நாம் எதற்கு என மறுப்பாக கணவனைப் பார்த்தாள் செண்பகா. அவனோ வா என்பது போல் முன்னே கைகாட்டி நடந்துவிட்டான். சங்கடமாக உணர்ந்து கொண்டே மேடையேறியவளை அருகிலேயே நிற்க வைத்துக்கொண்டனர் குழந்தையின் பெற்றோர். கணவனை அடிக்கண்ணால் முறைத்துக்கொண்டே பிறந்தநாள் வாழ்த்து பாடியவள் அவனோடு சேர்ந்து பரிசு கொடுத்துவிட்டு இறங்கிவிட்டாள். அப்போதும் இவர்களை தனித்துவிடாமல் ஒருகூட்டம் சுற்றிக்கொண்டே இருந்தது. பஃப்பே முறையிலான உணவு இவனுக்கு மட்டுமின்றி இவளுக்கும் சேர்த்து கைக்கே வந்தது. மனைவியின் தொடர் முறைப்பில் சூழல் உணர்ந்தவனாய் சுற்றி இருந்தவர்களை பேசி அனுப்பிவைத்தான்.
‘இப்போ ஓகேவா?’ என்பது போல் புருவம் உயர்த்தி தலையசைப்பாய் ஒரு கேள்வி வேறு. மனைவி இன்னும் முறைத்து வைத்தாள். அங்கு வைத்து எதுவும் பேச முடியாதபடி கவனிக்கிறேன் என்ற பேர்வழியில் மீண்டும் சிலர் வந்தனர். அவனுக்கே போதுமென்று ஆகிவிடவும் கிளம்பிவிட்டான்.
“இந்த மாதிரி பங்ஷனுக்கு எல்லாம் இனிமே வரமாட்டேன் நான்.” என்றாள் செண்பகா வண்டியில் ஏறியதும்.
“ஏனாம்?”
“அஞ்சு நிமிஷம் நிம்மதியா மூச்சுவிட முடியல, யாராவது வந்து கவனிச்சிகிட்டே இருக்காங்க. சுத்தி கூடிடுறாங்க. நானெல்லாம் ஒரு பங்ஷன் போனோமா கிப்ட் கொடுத்தோமா நல்லா சாப்பிட்டோமா வந்தோமான்னு இருப்பேன். ஹப்பா இங்க எவ்வளவு கேள்வி, எவ்வளவு கவனிப்பு…”
“உன் புருஷன் செல்வாக்கு அப்படி. இதுக்கே பேக் அடிச்சா நாளைக்கு அமைச்சர் பதவியெல்லாம் வந்தா இன்னும் நிறையா பாக்கணுமே. எல்லாத்துக்கும் இப்போவே பழகிக்கோ.”
“இதுக்கே தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா ரெண்டு வருஷம் காலி. அடுத்து அமைச்சர் ஆகணும்னு எதை இழுப்பீங்களோ யாரை புடிப்பீங்களோ.” ஒரு வேகத்தில் பட்டென பேசிவிட்டவளுக்கு அதன் அர்த்தம் உரைத்த நொடி முகம் இறுகிப்போனது.
இதற்கு முடிவே இல்லையா என ரத்னதீபனுக்கு ஆயாசமாய் வந்தது. மனம் திறந்து பேசிவிட்டதால் அவள் மனதை அழுத்திய பாரமும் அதனில் வடுவாய் பதிந்துவிட்ட கசப்புகளும் மறைந்துவிடும் என எண்ணிவிட்டான் போல. இப்படி வெளியே கூட்டிச் சென்றால் இலகுவாவாள், விட்ட காலங்களின் இனிமையை மீட்டுக்கொள்ளலாம் என நினைத்து அவன் அழைத்து வந்தும் இதில்தான் முடியவேண்டுமா என்ற எரிச்சலுடன் வண்டியை வீட்டிற்கு விட்டான்.
கண்களுக்கு புலப்படாத இறுக்கம் இருவரையும் சூழ்ந்துகொள்ள, கேட்டதற்கு மட்டும் பதில் என்ற ரீதியில் வந்து நின்றது அவர்கள் உறவு. உடலும் மனமும் அலுப்பில் சுணங்க மெனக்கெடாது உறங்கிவிட்டான். அத்தனை நாள் வேறொரு அறையில் தங்கியிருந்தவள் ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவனருகே படுக்கிறாள். வெகு நேரம் மனதை அழுத்திய விஷயத்திலிருந்து வெளிவர முடியாது புரண்டு புரண்டு படுத்தவள் ஒருகட்டத்தில் உறங்கிப்போக, மறுநாள் கொஞ்சம் இணக்கம் வந்தது. முகம் பார்த்து பதில் கூறினாள், அவனுக்கும் சேர்த்து சமைத்தாள் ஆனால் என்னவோ ஒரு விலகல். புரிந்த ரத்னதீபனுக்கும் சரி செய்யும் யுக்தி தெரியவில்லை. மேலும் ஒன்றிரண்டு விழாக்களுக்கு அவளது அதிருப்தியையும் மீறி அழைத்துச் சென்றான். எதுவும் வேலைக்கு ஆகவில்லை அவளே தெளிந்து வரட்டும் என்று அதனை ஒதுக்க நினைத்தாலும் முடியாமல் போக, அந்த வார இறுதியில் அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
“எம்.எல்.ஏ சாருக்கு இன்னைக்கு எங்க பாராட்டு விழா நடத்துறாங்க? என்னை கூட்டிட்டு ஊர்வலம் கிளம்புறீங்க?” கேலியுடன் பயணித்தவள் அவன் வண்டி நிறுத்திய இடத்தைப் பார்த்து புருவம் சுருக்க, உள்ளே செல்லலாம் என்பது போல் கைகாட்டி அவளை முன்னே விட்டு இவன் ஓரடி இடைவெளியில் பின்தொடர்ந்தான். கடையின் விளம்பர யுக்தியில் பளிச்சிட்டவற்றை பார்வையிட்டு சென்றவளுக்கு அவன் நோக்கம் புரிந்தது. ஆனால் அவன் அடுத்து செய்த செயலை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்த இரண்டினை சுட்டிக்காண்பித்தவன் அவளிடம் அபிப்பிராயம் கேட்க, ஆச்சர்யமாய் பார்த்தாள்.
“உனக்கு எது புடிச்சிருக்குனு சொல்லு.” அவள் கைபிடித்து ஊக்குவிக்க, ஒருவித ஆர்வத்துடன் தனக்கு காட்டப்பட்டவற்றை பார்த்தாள். நீளத்தில் ஒன்றும் சிவப்பில் ஒன்றுமாய் ஐவர் பயணம் செய்யும் சுசுகி கார்கள் அணிவகுத்து நின்றது.
“நமக்கா?” ஆர்வம் மேலிட அவளது விழிகள் வெளிப்படுத்திய அப்பட்டமான மகிழ்வை உள்வாங்கியபடி தலையாட்டிய ரத்னதீபன் அவளை அதனருகில் அழைத்துச் சென்று காரினுள் அமரச்சொல்ல,
“ஐயோ நானா? மாட்டேன் மாட்டேன். எனக்கு ஓட்டவெல்லாம் தெரியாது.” செண்பகா பின்வாங்கினாள்.
“ஓனரம்மா உக்காந்து பாக்காம எப்படி வாங்குறதாம். உக்காருங்க எசமான்.” கேலியாக சொல்லியபடி அவனே அவள் கைபிடித்து கதவைத் திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமரவைத்தான்.
நடப்பது எதையும் நம்பமுடியாமல் பொம்மை போல் அவன் செய்ய வைத்தவற்றை செய்தாள் செண்பகா. திருமணத்திற்கு முன் எப்படியோ ஆனால் அதன்பின் தன்னிச்சையாக அவன் எடுத்த பல முடிவுகள் இவர்கள் வாழ்க்கையை தீர்மானித்தது. நன்மை பயக்குவதற்கு பதில் விரிசல்களை உண்டுபண்ணியது. இதோ இன்றுவரை அதன் தாக்கம் இருக்க, திடுமென வந்து உன் விருப்பம் சொல், நீ உடமைப்பட்டவள் என்றெல்லாம் அவன் பேசினால் என்னவென்று நினைப்பாள், தத்தளித்தாள் செண்பகா.
மறுபக்கம் வந்து அமர்ந்தவன் காரை பற்றியும் அதனை இரண்டாமவதாக வாங்கப்போவதாகவும் அடுத்த வருடத்தில் நாமே புதிது வாங்கிடலாம் என்றெல்லாம் தகவல் பகிர்ந்தான். அனைத்தையும் கேட்டுக்கொண்டவளுக்கு அது கருத்தில் பதிந்ததா என்றால், இல்லையென்பாள். அவனின் அதிரடியான இந்த மாற்றத்தை கிரகிக்க முயன்று கணவனையே பார்வையால் தொடர்ந்தாள்.
“ஓய்… எங்க கனவு காண போயிட்ட நீ? வெளில பாரு கடை ஆளுங்க, என் அசிஸ்டென்ட் எல்லாம் எப்போ நாம வெளில வருவோங்குற மாதிரி பார்த்தும் பார்க்காம நிக்குறாங்க.” என மெல்லிய குரலில் சொல்லவும்தான் சுற்றம் உணர்ந்தது பெண்ணுக்கு.
“எனக்கு இது ஓகேதான்.” என்றாள் பட்டென்று.
“அதுக்குள்ள சொல்லிட்ட… இன்னொன்னு இருக்கு, அதுலயும் உக்காந்து பாரு.” என மற்றொரு காரிலும் அவளை அமர வைத்து அவள் கருத்தை கேட்டபின்னே கார் தெரிவு செய்தான்.
காரும் அவள் பெயரிலேயே வாங்க, சொல்லணா உணர்வு பெண்ணவளுக்கு. விழாக்களுக்கு பழக வேண்டும் என அவன் சார்ந்த இடங்களுக்கு வெளியே அழைத்துச் செல்வதாகட்டும், இப்படி தன் பெயரில் வாகனம் வாங்குவதாகட்டும் தன்னை முன்னிறுத்துகிறான். வெளியுலகிற்கு மனைவி என்று தன்னை அடையாளப்படுத்தி அங்கீகாரம் கொடுக்கிறான் என எண்ணிக்கொண்ட பெண்ணுக்கு மனம் லேசானது. மகிழ்வாகவே கார் வாங்க தேவையான ஆவணங்களில் கையொப்பம் இட்டாள். ஒரு வாரத்தில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என சொல்லிவிட இனிய மனநிலையுடன் அங்கிருந்து கிளம்பினர்.
வீட்டிற்கு வந்ததுமே அவளைப் பிடித்து நிறுத்தியவன், “இப்போதான் முகத்தில வெளிச்சமே வருது. இப்படியே இரு செண்பா. முடிஞ்சதை மாத்த முடியாது. ம்ம் இனிமே நாம மாறிக்கலாம்.” என்றவன் அவள் கன்ன கதுப்புகளை பற்றி ஆதுரமாக நெற்றியில் முத்தமிட்டான். கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தவள் மெல்ல அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவளை சுற்றி கரங்களை படரவிட்டு மனைவியை அணைத்துக்கொண்டவன்,
“வெளில கொஞ்சம் வேலை இருக்கு. போயிட்டு சீக்கிரம் வந்துர்றேன். ரெஸ்ட் எடு நீ.” என்கவும் சுணக்கத்துடன் விலகி அவன் முகம் பார்த்தாள் செண்பகா.
“இப்படி மூஞ்சை வச்சுக்கிட்டா எப்படி போறது நான்?” சலுகையாக அவள் கன்னத்தில் குத்துவது போல் விரல்களை மடக்கி கொண்டு சென்றவன் பின் என்ன நினைத்தானோ விரல்களை பிரித்து அவள் கன்னத்தில் கோலமிட்டான். புன்னகை பூக்க அவனை ஏறிட்ட செண்பகா அவன் விரல்களை தடுக்க, வீம்புக்கு விரல்களில் அழுத்தம் கொடுத்து அவள் கன்னத்தை பற்றி இழுத்து இதழ்களில் வன்மையாக முத்தமிட, கணவனின் நெஞ்சுச் சட்டையை கசக்கிப்பிடித்தவள் மூச்சுக்கு திணறியபடி திமிறி விலகினாள்.
“இதுக்கே மூச்சு வாங்குற?” மையலாய் அவள் மூக்கை பிடித்தாட்டிய ரத்னதீபனின் கரங்கள் அழகாக மனைவியின் இடையை வளைத்துப் பிடித்து தன்னோடு நெருக்கிக்கொண்டது. அவன் நெஞ்சோடு மோதி நின்றவள் சற்று எம்பி அவன் மூக்கோடு மூக்குரசி அவன் கழுத்தை மாலையாக கட்டிக்கொண்டாள்.
“யாரோ வெளில போகணும்னு சொன்னாங்களே?”
“பொண்டாட்டி கட்டிப்புடிச்சிட்டு இருக்குறப்போ அவளை தள்ளிவிட்டுட்டு எந்த மடையனாவது வெளில போவானா?” என்றவன் நாசி ஊர்வலம் செல்லவென மனைவியின் கழுத்தை தேடியது.
பேச்சினூடே சிறு சிறு முத்தங்களை வாங்கிக்கொண்டது அவள் மேனி.
“இவர் ஜம்முனு ஊர் சுத்துவாரு நாங்க இவரை கண்டுக்கிட்டு இவரை தாங்கணுமாக்கும்?”
“ஏன் தாங்குனா என்னங்குறேன்? நீதான எல்லா விதத்திலேயும் என்னை தாங்கணும்?”
“தாங்குற மாதிரி என்ன பண்ணிட்டாராம் இவரு.” கணவனின் முத்தங்களில் மயங்கினாலும் பதில்கள் என்னவோ நறுக்கென வந்தது.
“எங்க பண்ணவிட்டா இவ… இப்போகூட பாரு முத்தம் கொடுக்கிறேன் அதையும் மீறி வாய் பேசிட்டு இருக்கா.” என அவள் வாயை பட்டென்று அடைக்க, மீண்டும் மூச்சுக்கு திணறியது பெண்.
“ம்ம்கூம் இது சரி வராது. டைரக்ட்டா மெயின் பிக்சருக்கு போயிட வேண்டியதுதான்.” கண்களைச் சிமிட்டி மனைவியை கையில் ஏந்திக்கொண்டவன் அறை நோக்கி செல்ல, அத்தனை நேரம் வழக்காடிய பெண்ணின் முகம் சோர்வை தத்தெடுத்துக் கொண்டது.
கவனித்த அவனுக்கும் அலுப்புதான், “என்னடி செண்பா? இன்னும் எதை யோசிச்சிகிட்டே கிடக்க?” எனக் கேட்க, பதில் தெரிந்தால்தானே அவள் சொல்வதற்கு.
“ஏன் இப்படி ஆகுறேன்னு எனக்கே தெரியல.” என உதட்டை பிதுக்க, ஆயாசமாக மனைவியை கட்டிலில் விட்டவன் கதவடைத்து வந்தான். முன்னெச்சரிக்கையாக அலைபேசியை அமைதிபடுத்திவிட்டான்.
செண்பகா மெத்தையில் ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, அருகில் வந்தவன் இடுப்போடு அவளை சுற்றி வளைத்து கழுத்தில் முகம் புதைத்து முன்னேற, மறுப்பு தெரிவிக்காத பாவை அவன் அருகாமையை ஏற்க முயன்றாள். அவளே தடுக்கவில்லை நீ என்னை தடுப்பதா என அவளாடைகளில் கை நுழைத்து அதனை களைய முயல, செண்பகாவின் உடல் இறுக்கத்திற்குள் செல்வதை அவனால் உணரமுடிந்தது. ஆனால் அதற்காகவெல்லாம் நிற்கவில்லை ரத்னதீபன். தள்ளி இருப்பதால்தான் இவள் எதையோ நினைத்து குழம்புகிறாள் இன்றோடு இதற்கு முடிவு கட்டிட துணிந்துவிட்டவன் போல் செய்லபட, உணர்ச்சிகளின் ஆர்பரிப்பில் அவன் செயல்கள் வேகம் பெற்றது. பெண்ணவள் திணற ஆரம்பித்தாள். முற்று பெற மனைவியின் இறுக்கம் இடம் கொடுக்காததால் முடிவு என்பதை நெருங்கவே முடியாதவனாய் ஒருகட்டத்தில் விலகிவிட்டான் ரத்னதீபன். மனதை சூழ்ந்த ஏமாற்றத்தோடு தன் வேக மூச்சுக்களை இயல்பாக்க முயன்றவனின் நெஞ்சத்தில் வந்து படுத்துக்கொண்ட செண்பகாவின் உடல் நடுங்குவது போல் தெரிந்தது.
சட்டென அவளை அணைத்துக்கொண்டவன், “ஹே செண்பா… ஒண்ணுமில்லை விடு. பாத்துக்கலாம்.” என அவன் சமாதானப்படுத்த,
“ஏன்னு எனக்கே தெரியல.” என்றவளுக்குமே வருத்தம்தான். ஆசை வைத்த கணவனையே ஏற்க முடியவில்லையே என யோசனைகளை பலமாகியது.
ஆத்மார்த்தமான தாம்பத்தியத்திற்கு உள்ளும் புறமும், அன்பும் அறிவும், காதலும் காமமும் நேர்கோட்டில் வந்து இருவரைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதாய் சிந்தை நிறைக்க வேண்டும். இதில் ஒன்றில் சுணக்கம் வந்தாலும் ஆத்ம திருப்தி நிலை கேள்விக்குறிதான். இங்கு அனைத்தும் சரியாகிவிட்டது என்று நினைத்தாலும் ஏதோவொன்று அவளுள் வண்டென குடைந்தது. வலி கொடுக்காத வரை அது வண்டா பூச்சியா எது கடிக்கிறது என தெரியாதல்லவா… அப்படி ஒருநாள் அவள் வலிகள் வெளிவர, அதற்கு மருந்தாகிப் போனான் ரத்னதீபன்.
ஆதாயத்திற்காக அவன் ஆரம்பித்து வைத்த ஆட்டம் மீண்டும் சூடு பிடிக்க, அதன் சூடு தாங்காதவனாய் ஆட்டத்தையே கலைத்துவிட்டிருந்தான். அதில் செண்பகா மனதில் சூழ்ந்திருந்த வருத்தங்கள் அனைத்தும் காணாமல் போனது.