ஆயுத பூஜைக்கு முந்தைய நாள். திங்கட்கிழமை. இடையில் வந்துபோன விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி என எதற்கும் ஊருக்கு செல்லவில்லை. ஆரம்பத்தில் தனியாக சென்று சிக்கிக்கொள்ள விரும்பவில்லை, பிறகு அவனுடனான மனக்கசப்பு அவளை இறுக்கத்திற்கு தள்ள, வேலைக்குச் செல்வது ஒன்றே அவளை இலகுவாக்கும் வழியாகிப்போனது. இப்போது ஊருக்கு செல்கிறோம் என்றதும் ஒரு குறுகுறுப்பு. அவனிடமிருந்து தள்ளி நிற்கும் பொழுதுகளுக்கு விடுப்பு. குடும்பத்தினர் முன் இயல்பாக காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் என அனைத்தும் அவளை ஒரு நிர்பந்தத்திற்குள் தள்ளியது. இருமனதாகவே ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டுமா என பார்த்து எடுத்து வைத்தாள். இன்னும் அவன் வரவில்லை எப்போது வருவேன் என்றும் சொல்லவில்லை. சொல்லவில்லை என்பதை விட இவள் சொல்லவிடவில்லை.
காலை இவள் கிளம்பிக்கொண்டிருக்கும் போதே உறங்கி எழுந்து வந்து நின்றவன், “இன்னைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு உனக்கு முடிஞ்சுடும்ல…” எனதான் துவங்கினான் கை நீட்டி தடுத்துவிட்ட செண்பகா,
“என்கிட்ட இந்த டைமுக்கு கிளம்பலாம்னு சொல்லிட்டு கரெக்ட் டைமுக்கு எப்படியும் வரப்போறதில்லை. தேவையில்லாம டென்ஷன் ஆக நான் ஆளில்லை. நீங்க வந்ததுக்கு அப்புறம் கிளம்பிக்குறேன் நான்.” என சொல்லி நகர்ந்துவிட்டாள். அவள் சொன்னது போலவேதான் வந்து நின்றான் ரத்னதீபன் உறங்கும் நேரத்தில்.
“இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிடுவேன். எல்லாத்தையும் பாத்துக்கோ. எதுவும் பிரச்சனைனா மட்டும் எனக்கு கூப்பிடு.” என்று அன்று காலையே பிரபுவிடம் சொல்லியவன்தான் இரவு வீடு சென்று சேர நேரமாகிவிட்டது.
“இன்னைக்கு மறக்கல செண்பா. லேட்டாகும்னு சொல்ல போன் போட்டேன் உனக்கு. கால் போகலை என்னை பிளாக் பண்ணிட்டியா.”
ஊருக்கு செல்கிறோம் என்பது தனக்கு நினைவு இருந்தது என்பதை உணர்த்தி விடும் வேகத்தில் தன் புது அலைபேசியை கூட எடுத்துக்காண்பித்த ரத்னதீபன், “இதுல என்னோட ரெண்டாவது நம்பர் போட்டுட்டேன். உன்னை தவிர யாருக்கும் இந்த நம்பர் கொடுக்கல. இது உனக்கும் எனக்கும் மட்டுமே உள்ளது.” உனக்காக யோசிக்கிறேன் என தன்னை நிரூபித்துவிட வேண்டும் என்ற வேகம் அவனிடம்.
அதை பார்க்காமல் நகர்ந்தவள் உள்ளே சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பலாம் என்பது போல் வெளியே வந்து நின்றாள். ஆயாசமாய் அவளைப் பார்த்த ரத்னதீபனுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என புரியவில்லை.
“செண்பா…”
அவள் அசராது அவனைப் பார்த்து நிற்க, பெருமூச்சுடன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கார் புக் செய்தான். அவனையே பார்த்துக்கொண்டு செண்பகா அமைதியாக அமர்ந்துவிட,
“நான் சாப்பிட்டேனான்னு கேக்க மாட்டியா?” மனைவியை பேச வைத்துவிட என்று அவன் நெருங்க,
“உங்களை சாப்பிட வைக்கத்தான் ஆள் இருக்கே.” பேச்சிலேயே அவனை தள்ளி நிறுத்தினாள் செண்பகா.
என்ன பேசினாலும் விதண்டாவாதம் செய்யத் தயாராக இருக்கும் மனைவியை இதற்கு மேல் சீண்டுவது அறிவின்மையின் உச்சம் என்பது போல் ஓரமாய் அமர்ந்துகொண்டான். கார் வரவும் இருவருமாக அதிலேயே பரந்தூர் சென்று சேர்ந்தனர். காரில் ஏறி அமர்ந்ததும் உறங்குவது போல் அவள் கண்களை மூடிவிட, காரில் வைத்து எதுவும் பேச முடியாதவன் வீட்டிற்கு வந்ததும் நெருங்கப் பார்த்தான். கட்டில் மெத்தை எல்லாம் சென்னையில் இருப்பதால் இங்கிருக்கும் அறையில் தனக்கு மட்டும் கீழே பாய் விரித்து படுத்துவிட்டாள்.
“செண்பா…” அழைத்துப் பார்த்து சோர்வுற்றவனுக்கும் அதற்கு மேல் கண்களை திறந்து வைக்க முடியவில்லை. உறக்கம் சுழற்றி அடிக்க காலை எழுந்து பார்த்துக்கொள்ளலாம் என அவளருகிலேயே படுத்துவிட்டான். ஆனால் காலை அவளை பார்க்கவே முடியவில்லை. அபிராமியுடன் சமையலறையில் புகுந்து கொண்டாள். விஷேஷ நாட்கள் என்றாலே விருந்துதான், அதுவும் மகன் வருகிறான் எனவும் பதார்த்தங்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது.
‘இவங்க பையன் வரான்னு சந்தோஷத்துல இவங்க செய்யலாம். இவங்க பையனோட வந்த என்னையும் செய்ய வைக்குறாங்களே.’ என நொந்து கொண்டே உளுந்து வடைக்கு அரைத்து வைத்துவிட்டு பருப்பு வடைக்கும் தயார் செய்தாள் செண்பகா. இனிப்பும் அது போல இரண்டு தயாரானது.
எட்டி எட்டி பார்த்த ரத்னதீபன் ஒருகட்டத்தில் வெளியே செல்கிறேன் என சொல்லி கிளம்பிவிட்டான். மகனை அந்த பக்கம் அனுப்பிவிட்டு வந்த அபிராமி மருமகளிடம்,
“எவ்ளோ நாள் கழிச்சி சேர்ந்து வந்திருக்கீங்க. நல்ல நாள் அதுவுமா சாமி கும்பிடுற வரைக்குமாவது அவனை வீட்ல தங்க சொல்லாம்ல. இப்படி விட்டுட்ட.” என இவளிடம் கேட்க, பல்லைக் கடித்துக்கொண்டவள் அதை காதில் வாங்காதது போல் இருந்துகொண்டாள். மதியம் சாமி கும்பிடும் நேரம் திவ்யாவும் விமலும் தங்கள் மகனுடன் வந்துவிட்டனர். செண்பகா கமலை தூக்கி வைத்து கொஞ்ச,
“அண்ணனே எப்போவாச்சும் தான் வருது. வீட்ல இருக்கலாம்ல.” ரத்னதீபன் இல்லாததை கவனித்து திவ்யா கேட்க, பதில் அவள் கணவனிடமிருந்து வந்தது.
“கட்சி ஆபிஸ் இன்னைக்கு ஓபன் பண்றாங்க. மச்சான்தான் முக்கிய விருந்தினரே. சோஷியல் மீடியால போஸ்ட் வந்திருக்கே பாக்கலையா நீ?”
கேட்ட குடும்பத்தினர் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர், செண்பகாதான் மனதிற்குள் புகைந்தாள். எங்கு சென்றாலும் இந்த அரசியலையும் தூக்கி சுமந்துகொண்டு செல்ல வேண்டுமா? குடும்பத்திற்கான நேரம் என தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று இவனுக்கு கிடையாதா? எது செய்தாலும் அதில் ஆதாயம் பார்த்தால் எப்படி? அரசியல் புத்தி இருக்கே… என பொருமிவிட்டாள்.
சிறிது நேரத்தில் ரத்னதீபன் வந்துவிட, குடும்பத்தினருடன் அமர்க்களமாக சென்றது நேரம். செண்பகாவுக்கும் ரத்னதீபனுக்கும் பிரச்சனை என்ற விஷயம் அங்கு கவனிக்கப்படவே இல்லை. ஆனால் அவள் வீட்டில் அப்படியில்லை. அதுவும் வளவன் பெயரை வைத்து செண்பகாவை ரத்னதீபன் கிளப்பியிருக்க, சந்தேகத்துடன் பார்த்தான் வளவன். முன்மாலை பொழுதில் கிளம்பி விழுப்புரம் வந்து சேர்ந்தவர்களை செண்பகா குடும்பம் சந்தோஷமாக வரவேற்றது. மாமியார் மச்சினன் முன்னிலையில் அவளிடம் எதுவும் பேச முடியாமல் மச்சினனுடன் அவர்கள் கடைக்கு கிளம்பிவிட்டான் ரத்னதீபன்.
வீட்டிற்கே வராத மாப்பிள்ளை கடைக்கு வந்து நின்றதும் மகிழ்வில் பரபரத்தார் வையாபுரி. சிறு பண்பொருள் அங்காடியாக மாற்றப்பட்டிருந்த கடையை சுற்றக்காட்டி, காலையில் கடைக்கு பூஜை போட்டது முதற்கொண்டு சொல்லி அவனை பார்த்து பார்த்து கவனிக்க, சங்கடப்படாமல் மகிழ்வாகவே கவனிப்புகளை ஏற்றுக்கொண்டான்.
“கொஞ்ச நேரம் கடையை பாத்துக்கோங்க ப்பா. நானும் மாப்பிள்ளையும் வெளில போயிட்டு வீட்டுக்கு வந்துர்றோம்.” என தந்தையிடம் சொல்லிவிட்டு ரத்னதீபனை அழைத்தான் வளவன்.
புருவச் சுருக்கத்துடன் மச்சினனை பார்த்தவன் எழுந்து வந்து அவனுடன் சேர்ந்துகொண்டான்.
“வேற வண்டி வாங்குனா என்ன மச்சான்? இன்னும் டி.வி.எஸ் வண்டியே வச்சிருக்கீங்க.” அந்த டிவிஎஸ் வண்டி ஒருவேகத்திற்கு மேல் செல்லவில்லை என்கவும் கொஞ்சம் எரிச்சலுடன்தான் கேட்டான் பின்னே அமர்ந்திருந்த ரத்னதீபன்.
“டெலிவரி கொடுக்கவும் எடுக்கவும் இதுதான் கடைக்கு வசதியா இருக்கு.” என்ற வளவன் ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி இருவருக்கும் தேவையானதை வாங்கி வந்தான். அமைதியாக பருகிய ரத்னதீபன் வளவனை தீவிரமாகப் பார்க்க,
“என்ன மாப்பிள்ளை அப்படி ஒரு பார்வை?”
“உங்க தங்கச்சியை சேர வேண்டிய பதிலெல்லாம் உங்களுக்கு கிடைக்காதுனு தெரிஞ்சும் இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்திருக்கீங்களே, எப்போ ஸ்டார்ட் பண்ணப் போறீங்கன்னு பாத்தேன் மச்சான்.” ரத்னதீபன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்ல, முறைப்பாய் பார்த்தான் வளவன்.
“என்ன முறைப்பு? ஊருக்கு வரச்சொல்லி நீங்க கூப்பிட்டீங்கனு உங்க தங்கச்சி சொன்னாளாக்கும்… உடனே விசாரணை கமிஷன் வைக்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. நியாயமா ஊருக்கு வாங்கனு நீங்க கூப்பிட்டிருக்கணும். ஏதோ மனசு வச்சு நானே வந்துட்டேன்.” என இன்னுமின்னும் பேசினான் ரத்னதீபன்.
‘மனுஷனா இவரு’ ஆயாசமாக நினைத்துக்கொண்ட வளவன், “உங்களை எப்படித்தான் என் தங்கச்சி சமாளிக்குறான்னு தெரியல.” விமல் போல் இப்படியெல்லாம் இவனிடம் பேசிட மாட்டான்தான், ஆனால் இன்றைக்கு ரத்னதீபனின் பேச்சு தொனியே வளவனின் பொறுமையை சோதித்தது.
“நீங்க சொல்றதே தப்பு. நான் எப்படி உங்க தங்கச்சியை வச்சி சமாளிக்குறேனுதான் நீங்க கவலைப்படணும்.” என அசராது பேசியவனை பார்த்து தலையசைத்துக் கொண்டான் வளவன்.
“முதல்ல என்னை கொடையுறதை விட்டுட்டு உங்க போனை கொடைஞ்சி ஏதாவது பொண்ணை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ற வழியைப் பாருங்க.”
“ம்ம்க்கும்… உங்ககிட்ட பேச வந்தா நீங்க என்பக்கம் திருப்புங்க.”
“திருப்புனாலும் அங்க ஒன்னுமில்லையே. நானாச்சு ஒருத்தியை கட்டிட்டேன்.” என வம்பாக பேசியவனிடம் இனி வாய் கொடுக்க முடியாது, “என்னவோ பண்ணுங்க. வீட்டுக்கு போகலாம்.” என கிளம்பிவிட்டான் வளவன்.
‘இந்த கட்சிக்காரங்களை சமாளிக்குறதவிட குடும்பத்தை சமாளிக்குறதுதான் பெரிய வேலையா இருக்கு. ம்னா நாட்டாமை பண்ண ரெடியா இருக்காங்க.’ என மனதிற்குள் சலித்துக்கொண்டான் ரத்னதீபனும்.
அதற்கு பின் இரவு உறங்கும்வரை மனைவி அவனிடம் தனியே சிக்கவில்லை. படுக்கவென அவள் அறைக்குள் வரவும் பிடித்துக்கொண்டான்.
“இங்க பாரு இதுக்கு மேல சுத்திட்டு இருக்க என்னால முடியாது. ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது. கோவம் தீர என்னை நாலு அடி அடிச்சிக்கோ.” என அவள் கைப்பிடித்து அவன் கன்னத்தில் வைக்க, அதனை உருவிக்கொண்டாள் செண்பகா.
“செண்பா… என்னதான்டி வேணும் உனக்கு? ஏன் என்னை போட்டு படுத்துற. அன்னைக்கே சொல்லிட்டேன் அமைச்சரை பாக்க போயிட்டு எதர்ச்சையா மந்த்ராவை பாத்தேன் அவங்க கார்ல வந்தேன்னு. இவ்ளோ நாள் பழகிட்டு எதிர்ல வர்றப்போ யாரோ மாதிரி முகம் திருப்பிட்டு வரமுடியாது செண்பா. அவ்வளவு ஏன் எதிர்க்கட்சிக்காரங்களை கிழிகிழினு கிழிச்சாலும் அவங்களை நேருக்கு நேர் சந்திக்கிற மாதிரியான சூழல்ல மரியாதை நிமித்தமா ரெண்டு வார்த்தை பேசிட்டுதான் வரணும். நமக்கும் புடிச்சாலும் புடிக்கலைனாலும் அரசியல் நாகரிகம் கடைபிடிக்கணும்.”
“உங்க மந்த்ரா எப்போ அரசியல்ல சேர்ந்தாங்க? யாரும் சொல்லவே இல்லையே.” நக்கலாக கேட்டாள் செண்பகா. இதுவரை சண்டை பற்றிய பேச்செடுக்காமல் அவளுடம் இயல்பாக அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளை எளிதாக முறியடித்தவளால் மந்த்ரா பேச்சு வரவும் அமைதியாக இருக்க முடியவில்லை.
அவள் ‘உன் மந்த்ரா’ என பேசியது அவனை முகம் சுழிக்க வைத்தது, “ப்ச்… என்ன பேச்சு இது?”
“இதைதான் சார் எல்லாரும் பேசுனாங்க. அப்போ இனிச்சிச்சோ?”
“அது முடிஞ்சி போனது செண்பா. இப்போ உள்ளதை பேசு. இப்போ எதுவும் அதுமாதிரி வந்துச்சா?” இன்னும் எத்தனை காலம் பழையதையே பேசுவாள் என்ற எண்ணம் அவனுக்கு. அவனுக்குத்தான் அது முடிந்துபோனது அவளுக்கில்லையே.
“முடிஞ்சிடுச்சா?” நக்கலாக கேட்டவள் அவன் நெஞ்சில் குத்தி, “முடிஞ்சி போனதாலதான் பதவியேற்பு விழாவுக்கு, பால் காய்ச்சுறதுக்கு வந்தாங்களா? எல்லாம் இப்போ நடந்ததுதான?”
“பால் காய்ச்சுறதுக்கு கூப்படலைனு நான் அன்னைக்கே சொல்லிட்டேன். பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு கொடுக்க வேண்டிய நிர்பந்தம். எனக்கு மட்டுமில்லை எங்க கட்சிக்கும் ஃபண்ட் கொடுத்திருக்காங்க. அவங்க காசுல தான் எனக்கு சீட் கிடைச்சுது, உதவியை மறக்க முடியுமா?” என அவன் புது நியாயம் பேச, ஆவேசமானவள்,
“இதுதான் வேணாம்னு சொல்றேன். அவ தயவுல நீ வந்தேன் வந்தேன்னு சொல்றதை கேக்குறப்போ ஈயத்தை காய்ச்சி காதுல ஊத்துற மாதிரி இருக்கு. அப்படிதான் மேல உயரணும்னு என்ன இருக்கு? ஏன் உன்மேல உனக்கே நம்பிக்கை இல்லையா?”
“என்னடி பேசுற நீ. இந்த ரெண்டு வருஷத்துல நான் பார்த்த உயரம் மந்த்ராவோட விளம்பரத்தால வந்தது. அது இல்லைன்னா இன்னமும் போஸ்டர் ஒட்டிக்கிட்டு, கோஷம் போட்டுக்கிட்டு, கொடி புடிச்சுகிட்டு போலீஸ்ல அரெஸ்ட் ஆகி வெளில வர்றது திரும்ப போறதுன்னு இருந்திருப்பேன். இன்னைக்கு எனக்காக கொடி புடிக்குறாங்க. எல்லாம் இந்த பதவினால வந்தது. இது எதுவும் வேணாம் அப்படியே கீழேயே இருக்கணும்னுதான் எதிர்பாக்குறியா நீ?”
“கீழேந்து மேல வர்றதுல அப்படி என்ன கெளரவ குறைச்சல் உங்களுக்கு?”
“என் இடத்துல இருந்து அவமானப்பட்டுப் பாரு அப்போ புரியும். ஏன் அன்னைக்கு ஒருநாள் போலீஸ் ஸ்டேஷன்ல உக்காந்திருந்தது மேடமுக்கு எப்படி இருந்துச்சு?” அவனும் சரிக்கு சமமாய் நக்கலாய் வாதிட, பேச்சுக்கள் வளர்ந்தது.
“நான் எந்த தப்பும் செஞ்சிட்டு போலீஸ் ஸ்டேஷன் போகல. என் பக்கம் நியாயம் இருந்துச்சு.” உண்மையின் நிமிர்வு அவள் உடல்மொழியில் தெரிந்தது. ஆனால் அவள் பேச்சில் குற்றம் செய்தவனாய் தன்னை அவள் நிறுத்துவதை ஏற்க முடியவில்லை.
“அப்போ நான் தப்பு செஞ்சேன்னு சொல்றியா? பொண்டாட்டி இருக்குறப்போ இன்னொருத்தி பின்னாடி நாக்கை தொங்கப் போட்டு போறவன் மாதிரி இருக்கா என்னைப் பார்த்தா? அன்னைலேந்து இன்னைக்கு வரைக்கும் உனக்கு என்மேல நம்பிக்கையே இல்லை.” என அவன் குரல் உயர்த்த,
“என்ன சும்மா நம்பிக்கை இல்லை இல்லைனுட்டு இருக்க. என்னை சொல்றியே, நம்பிக்கை வர மாதிரி என்ன செஞ்ச நீ? இப்படி போட்டோ வந்துடுச்சு, இப்படி செய்யலாம்னு இருக்கேன்னு என்கிட்ட சொன்னியா, வேற என்ன பண்றது கேட்டியா இல்லை எனக்கு புரியதான் வச்சியா? கேள்வி கேக்குறேனு வீட்டுக்கு வர்றதை குறைச்ச, வேலை வேலைனு என்னை கண்டுக்காம சுத்துன. அப்போ நான் இருந்தாலும் இல்லைனாலும் உனக்கு ஒன்னுமில்லை, அப்படித்தான? அதுதான் என் வீட்டுக்கு போனேன். என்னை தேடி வருவேன்னு நினைச்சேன். சார் இதுதான் சாக்குன்னு மொத்தமா இங்க வந்து உக்காந்துக்கிட்டிங்க.
நாம இப்படி வேற ஒரு பொண்ணோட இருக்குற மாதிரி நியூஸ் விடுறோமே, போட்டோஸ் வருதே. பொண்டாட்டி கோவமா இருக்காளே. அவளுக்கு இது புடிக்காதே, அவளுக்கு இதை பாக்குறப்போ கஷ்டமா இருக்குமேன்னு என்னைக்காவது யோசிச்சு பார்த்திருக்கியா? நான் மட்டும் எல்லாத்தையும் அனுசரிச்சு உன் மேல நம்பிக்கை வச்சி இன்னொருத்தி கூட வர்ற நியூஸை பெருசா எடுத்துக்காம உன்கூட இருக்கணும்னு எதிர்பாக்குற நீ எனக்காக என்ன செஞ்ச?” மனதில் இருப்பதை கொட்டி அவனை நிற்க வைத்து கேள்வி கேட்க, அவள் முகத்தில் ஜொலித்த கோபத்தில் வாயடைத்து நின்றான் ரத்னதீபன்.
“விளம்பரத்துக்காகனாலும் அவகூட நேரம் செலவழிச்சிருக்க, போட்டோ எடுத்திருக்க. அப்போல்லாம் என் நியாபகம் வரவே இல்லையா உனக்கு? எனக்கு வலிக்கும்னு ஒருமுறை கூட தோணலையா? என்னை சமாதானப்படுத்தனும், என்கூட உன்னோட வெற்றியை ஷேர் பண்ணிக்கணும் இப்படி எந்த நினைப்பும் வரலையா? கோச்சிக்கிட்டு போனா போன்னு அப்படியே விட்டுருவியா நீ? நான் இருந்தாலும் இல்லாம போனாலும் எந்த வித்தியாசமும் இல்லையா உனக்கு? அவ்வளவுதானா நான் உனக்கு?” என்றவள் உடைந்துவிட, அவளுக்கான முக்கியத்துவத்தை தன்னிடம் எதிர்பார்த்திருக்கிறாள் என்பதே அப்போதுதான் புரிந்தது அந்த மடையனுக்கு.
“செண்பா?” என்ன சொல்லி தன்னை நியாயப்படுத்திக்கொள்ள முடியும், தவறு முழுதும் தன்மீது தானோ என்ற யோசனை அவன் வார்த்தைகளை தடை செய்தது.
“இப்படி இப்படி இருக்கு. இதுமாதிரி செய்யலாம்னு இருக்கேனு உன்னை புரியவைக்க என்ன முயற்சி செஞ்ச நீ? அப்போதான் கல்யாணம் ஆச்சு என்ன புரிதல் இருக்கும்னு நீ எதுவுமே சொல்லாம நானே எல்லாத்தையும் அனுசரிச்சு போகணும் எதிர்பார்த்த? நீங்க எதிர்பார்த்த மாதிரி நான் இல்லைங்கவும் விட்டுட்டீங்க… அப்புறம் உங்களுக்கு தேவைப்படக்குள்ள எதுவுமே நடக்காத மாதிரி நான் வந்து சிரிச்சிகிட்டு நிக்கணும்ல? வரலைன்னு சொன்னா மிரட்டி காரியம் சாதிச்சிப்பீங்க. எல்லாமே உங்க இஷ்டம்னா தனியாவே உங்க இஷ்டத்துக்கு வாழ வேண்டியதுதான. என்னை கல்யாணம் பண்ணி எதுக்கு ஆசை காமிச்சீங்க?” அழக்கூடாது என்று நினைத்தாலும் எப்பொழுது அவள் கண்களை நீர் நிறைத்தது என தெரியவில்லை. கண்கள் கலங்கி மூக்கு விடைத்தது.
தவிப்பாய் அவள் முகம் ஏந்தியவன், “செண்பா செண்பா… இவ்வளவு பீல் பண்ணாதடி. நான்தானே தப்பு, நீ ஏன் அழற.” என கண்களை துடைத்துவிட,
“அப்போ நீ அழறியா?” என்று சீறியது பெண்.
“கண்ணுல தண்ணி வச்சாதான் அழுகுறதுன்னு அர்த்தமா? இந்த மூணு மாசமா கூட இருந்தே என்னை கதறவிட்டியேடி. அதை நினைச்சுப்பாரு.” பாவமாக சொன்ன ரத்னதீபனை அழுகையுடன் முறைத்தாள் செண்பகா.
“சரி நாந்தான் தப்பு. இனிமே உனக்கு புடிக்காத எதுவுமே செய்ய மாட்டேன். செய்யுற மாதிரி வந்தாலும் உன்னை கேட்டுட்டு செய்யுறேன் ஓகேவா?” என்றதற்கு அவள் முறைக்க,
“அரசியல்ல சில மொள்ளமாரித்தனம் செய்ய வேண்டியதிருக்கு. அதெல்லாம் மாத்திக்க முடியாது. ஆனா அது எதுவும் உன்னை பாதிக்காத மாதிரி நான் பாத்துக்குறேன்.” என்றவனை நன்றாக இரண்டு சாத்து சாத்தினாள்.
அதிர்ந்தவனாய் அவளை தடுத்து, “இப்போதான ஜென்டில் டீல் போட்டோம. அதுக்குள்ள ஏன்டி கைநீட்டுற?”
“அடிச்சிக்கோன்னு சொன்னது மறந்து போச்சா?”
“அது நீ கோபத்துல இருக்குறப்போ சொன்னேன். இப்போதான் எல்லாம் சரியாகிடுச்சே.”
“என்ன சரியாகிடுச்சு?”
“எம்மா தாயே… நான் தேர்ந்தெடுத்த வழி தப்புதான். ஆனா நீதான் சரியாச்சே, இப்படி பண்ணலாமா? நியாயமா? இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா எப்போ நாம அ போட ஆரம்பிச்சி புள்ளைக்கு அ சொல்லிக்கொடுக்கிறது.” என்றவனை இன்னுமின்னும் முறைத்தாள் செண்பகா.
நெருங்கி அமர்ந்து அவள் கன்னங்களை அழுந்த துடைத்துவிட்டவன், “நான் கண்டுக்காம விட்டுட்டேன்னு நீ நினைச்சாலும் ஆஞ்சி ஓஞ்சி போனப்போ உன்னைதான் தேடினேன் செண்பா. இதை நீ நம்பலைனாலும் இனிமே நாம நல்லா வாழ்வோம்ன்னு நம்பனும். போனதெல்லாம் போகட்டும், இனிமே சந்தோஷமா இருக்கலாம். என்ன சரியா?”
அவள் தலையசைக்காமல் அவனை இமைக்காது பார்க்க, அவனே அவள் தலை பிடித்து சம்மதம் போல் ஆட்டிக்கொள்ள, அவன் கையை தட்டிவிட்டாள்.
“என்னவாம் இப்போ?” வேண்டுமென்றே அவள் கழுத்தை சுற்றி கையிட்டு அவளை தன்னுடன் இழுத்துக்கொண்டான்.
“விடுங்க…” என விலகி அமர்ந்துகொண்டாள் செண்பகா.
“ப்ச்… உனக்கு புடிக்கும்னு பூ, சாப்பாடு வாங்குறதுலேந்து நீ சொன்னேன்னு கொஞ்ச கொஞ்சமா மாற ஆரம்பிச்சிருக்கேன். எனக்கும் டைம் எடுக்கும்லடி. இப்போகூட உன் அம்மா வீட்டுக்கு வந்தா ரிலாக்ஸ்ஸா பீல் பண்ணுவ, நாம மனசு விட்டு பேச சான்ஸ் கிடைக்கும்னு என் வேலையெல்லாம் விட்டுட்டு இங்க கூட்டிட்டு வந்திருக்கேன். நீயும் கொஞ்சம் கன்சிடர் பண்ணலாம்ல.” என்றதற்கு முறைப்பு.
“என்ன சும்மா சும்மா முறைப்பு வேண்டிக்கிடக்கு?” அவள் கன்னத்தில் முழங்கையால் இவன் இடிக்க,
“எது வேலையை ஒதுக்கி வச்சிட்டு கூட்டிட்டு வந்தவருதான் இன்னைக்கு காலையில கட்டடம் திறந்து வச்சாராக்கும்?”
“சான்ஸ் கிடைக்குற அப்போல்லாம் யூஸ் பண்ணிக்கணும்டி அப்போதான் பொது வாழ்க்கையை மெயின்டைன் பண்ண முடியும்.” என காரணம் சொன்னவனை என்ன செய்தால் தகும் எனப் பார்த்தவள் மனதின் பாரம் குறைந்தது போல் உணர்ந்தாள். கணவன் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையா, கணவனிடம் மொத்தமாய் தன் அகத்தை கொட்டிவிட்ட திருப்தியா இல்லை மாறிக்கொள்கிறேன் என்ற அவனின் பாங்கா எதுவோ ஒன்று அவளை சற்று தளர்த்தியது.
“வெளில எனக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் முடிச்சிட்டு நான் தேடுறது உன்னை தான். இடையில உன்னை மறந்துட்டேன் அப்படீங்குற பேச்சே கிடையாது. இல்லை மறந்துட்டேன்னு நீ நினைச்சாலும் உடனே போன் போடு. என்னால அந்த நேரம் உனக்கு ஒதுக்க முடியுதா இல்லையானு பாக்குறேன். ஒதுக்க முடியலைன்னா இன்னொரு தரம் பாத்துக்கலாம். நீயும் என் வேலையை புரிஞ்சிக்க கொஞ்சம் முயற்சி பண்ணு, நானும் உன் எதிர்பார்ப்ப புரிஞ்சிக்க பாக்குறேன். இல்லைனா பழசை பேசிகிட்டு கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் இப்படியே இருக்க வேண்டியதுதான். உனக்கும் சலிச்சிடும் எனக்கும் பிடிப்பு போயிடும்.” என்றவனுக்கு லேசாக செவி சாய்ந்தாள் செண்பகா.
“எல்லாம் ஓகேதான? இப்போ தூங்கலாம்ல?” ஆசுவாசத்துடன் அவன் கேட்க, குழப்பமாக தலையாட்டியவளுக்குள் இன்னதென சொல்லமுடியாத உறுத்தல் என்னவோ ஒன்று தேங்கிக் கிடந்தது.
ஆனால் எல்லாம் சரியாகிவிட்டது என்ற நிம்மதியில் மனைவியின் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்த ரத்னதீபன் உடலை சரித்து மனைவியை தன் கைவளைவில் படுக்க வைத்துக்கொண்டான்.