“என்னோட இல்லாம எப்படி மேடம்? முன்னாடி ரூம்ல இருந்தேன் அதுனால அவங்க ஊர்ல இருந்தாங்க. வீடு பார்க்கவும் இங்கேயே வந்துட்டாங்க. அவங்க இல்லைனா எனக்கு எதுவும் ஓடாது.” என்று இவன் கொஞ்சம் அழுத்தம் கூட்டிப் பேச, அவள் அதற்கு மேல் துருவவில்லை.

“ஓகே தீபன். நீங்க ஊருக்கே போகாம இங்கேயே இருக்கவும் உங்களுக்கும் உங்க வொய்ப்புக்கும் செட் ஆகலைனு நினைச்சேன். எனிவே கங்ராட்ஸ். ஃப்ரியா இருக்கும் போது மீட் பண்ணலாம்.” என்று சொல்லி அவள் வைக்கவும்தான் இவனுக்கு மூச்சே வந்தது. 

இவங்களுக்கும் ஏதோ எண்ணம் இருந்திருக்கும் போல, எப்படியோ புரிஞ்சிகிட்டா சரி என நினைத்துக்கொண்டவன் வீட்டிற்கு கிளம்பலாம் என்கையில் மீண்டும் ஒரு பஞ்சாயத்து பேனர் வைத்து விபத்து ஏற்பட்டுவிட்டது என. ஒரே கட்சிக்குள் இரு பக்கமாய் பிரிந்து அவர்களுக்குள்ளாகவே இரு வேறு அமைச்சர்களுக்கு கொடி பிடித்து சண்டை. 

“இதெல்லாம் அவங்களே பாத்துக்கட்டும்டா. இந்த கட்சி பூசல் எல்லாம் பாத்துகிட்டு இருந்தா நம்ம வேலையை எப்போ பாக்குறது?” என்று ரத்னதீபன் மறுக்கத்தான் செய்தான். பிரபு விடாது, 

“எல்லாம் ஒரு சப்போட்டுக்குதான் அண்ணே. நாளைக்கே நம்ம பக்கம் தொண்டர்கள் இருக்காங்கனு ஸ்ட்ராங்கா சீட் கேட்கலாம்.” எனச் சொல்லி அவர்களை இங்கு வரவழைக்க ஆவண செய்தான். 

“சில நேரம் எனக்கே பாடம் எடுக்குறடா.” என ரத்னதீபன் பிரபுவை பாராட்டவும் செய்ய,

“எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்.”

“நாளைக்கே எனக்கு அதை திருப்பிவிடாம இருந்தா சரி.”

“அதெல்லாம் பண்ண மாட்டேண்ணே. எம்.எல்.ஏ ஆனதும் என்னை உங்க பி.ஏ ஆக்கி அழகு பாத்த மாதிரி அமைச்சர் ஆனதும் பெரிய போஸ்டிங் கொடுக்க மாட்டீங்க? அதுக்கு தக்கன வேலை தெரிஞ்சவனா இருக்கணும்ல நான்.” என நீட்டி முழுக்க, மாவட்ட செயலாளர் உட்பட இரு பிரிவுகளாக பிரிந்து நிற்பவர்கள் வந்து சேர்ந்தார்கள். 

ரத்னதீபன் முன்னின்று விசாரித்து பூசலை சரிசெய்து மாவட்ட செயலாளரிடம் பேச்சு கொடுக்க, அவர் கட்சியில் தனக்குத் தெரிந்த அமைச்சரை அறிமுகப்படுத்துகிறேன் என்றார்.

“சட்டசபைல பாப்போமே அண்ணே.” என இவன் மறுக்க,

“காரணமாத்தான் சொல்றேன் ரத்தினம். இவனுங்க அடங்க மாட்டானுங்க, வேலுச்சாமி கோஷ்டி அவரோட சேர்ந்து கட்சி தாவி இப்போ நம்மகிட்ட அலப்பறை பண்ணிட்டு இருக்காங்க. இவ்ளோ வருஷமா நாம எல்லாம் பண்ணுவோமாம் இப்போ வந்து சேர்ந்த இவனுங்க துள்ளுவாங்கலாம். நம்ம விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் வேலுச்சாமியோட ஆதிக்கம் பிடிக்கல.” இப்படி வேலுச்சாமிக்கு எதிராக கட்சியினுள் பிரிவுகள் ஏற்பட, அதை பிடித்துக்கொண்டு முன்னேறவே உந்தியது அவனின் அரசியல் மூளை. 

மாவட்ட செயலாளருடன் சேர்ந்து அமைச்சரை சந்திக்க அந்த நட்சத்திர விடுதிக்கு சென்றான். வேலுச்சாமிக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் சேர்ந்துகொண்டு மற்றைய சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் புறம் இழுத்து கூட்டம் சேர்ப்பதை அங்கு சென்றபின் தெரிந்துகொண்டான் ரத்னதீபன். அவர்கள் கூட்டத்தினுள் ஒருவனாய் இவனும் ஐக்கியமாகிவிட, அவர்களுடம் பேசிய இடத்தில் தவிர்க்க முடியாமல் கொஞ்சம் மது அருந்திவிட்டான். உடனே கண்கள் சிவந்துவிட்டது அவனுக்கு. இதுதான் தன் எல்லை என்று புரிந்துகொண்டு அவன் நிறுத்திவிட்டு பிரபுவைத் தேட, கிடைத்த வரை உள்ளே தள்ளுவோம் என்பது போல் குடித்துக்கொண்டிருந்தான். அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டு மெல்ல நழுவிச் சென்று பிரபுவின் முதுகிலேயே ஒன்று வைக்க, அசைவேனா என்று இருந்தான் அவன்.

அவனை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிடுவோமா என்றுகூட யோசனை வந்தது, மனம் கேட்கவில்லை. கைத்தாங்கலாக அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன், “என்ன வேலை பாத்து வச்சிருக்க நீ?” இங்கு வரும்போது மாவட்ட செயலாளருடன் அவர் வாகனத்திலேயே வந்துவிட்டார்கள். இப்போது கார் புக் செய்துதான் செல்ல வேண்டும் என யோசித்துக்கொண்டிருக்கையிலேயே, 

“அந்த மாவட்ட செயலாளர் கார் வச்சிருக்காரு. நீங்க ஒரு எம்.எல்.ஏ உங்ககிட்ட ஒன்னுமில்லையே.” லேசாக நினைவு வரப்பெற்றவனாய் பிரபு உளறினான். 

“இப்போ நீ கம்முனு வரல இப்படியே விட்டுட்டு போயிடுவேன்டா.” என சத்தம் போட்டு அவனை அமைதிப்படுத்தியவன் கார் புக் செய்யலாம் என்று பார்க்க, தீபன் என்ற அழைப்புடன் அவ்விடுதிக்குள் நுழைந்தாள் மந்த்ரா.

“நீங்க எங்க இங்க?” வியப்புடன் கேட்டவள் பார்வை நிலையில்லாமல் இருந்த பிரபுவிடம் பதிந்து மீண்டது. 

சங்கடப்பட்டவனாய் ரத்னதீபன் கட்சி வேலையாக வந்ததாக சொல்ல, “என் கார்லையே போயிடலாம்.” இவர்களிடம் கார் இல்லையென்று தெரிந்து அவளாகவே சொல்ல, உடனே மறுத்தான். 

“இட்ஸ் ஓகே தீபன். டெரெக்டர் கூட இங்க ஒரு மீட்டிங் இருக்கு, கான்செப்ட் பைனலைஸ் பண்ண டைம் ஆகும். பிரபுவும் ஸ்டெடியா இல்லை, ரொம்ப நேரம் நீங்க இப்படி நிக்குறது நல்லா இருக்காது. என் ட்ரைவர் உங்களை ட்ராப் பண்ணிட்டு என்னை பிக்கப் பண்ணிப்பாரு. நம்மளோட ஆதாயத்துக்காக எவ்வளவோ பண்ணியிருக்கோம், இது எந்த ஆதாயமும் எதிர்பார்க்காத பிரெண்ட்லி ஹெல்ப் தீபன்.” என அவள் வற்புறுத்த, பிரபுவை வைத்துக்கொண்டு வெகுநேரம் நிற்க முடியாது என புரிந்து போனது ரத்னதீபனுக்கு. இருட்ட ஆரம்பித்துவிட, இரவு விருந்துக்கு ஆட்கள் நடமாட்டம் அதிகமாவது போல் தெரிந்தது. 

கார் தானே என்று அவளின் உதவியை ஏற்றுக்கொண்டு அவள் காரிலேயே பிரபுவை அவன் வீட்டினில் இறக்கிவிட்டு இவன் வீடு வந்திறங்க, வேகமாக வந்து கதவை திறந்துவிட்டாள் செண்பகா.

“செண்பா…” அவன் ஆசையாய் கூப்பிட்டுக்கொண்டே அவளை நெருங்க, ஆவலாய் அவனை எதிர்நோக்கியவள் அவன் கண்கள் சிவப்பேறியிருப்பதை கண்டு பின்னடைந்தாள். 

முகம் மலர தன்னை வரவேற்றவள் முகம் சுருக்கி பின்னகரவும், “என்னாச்சு?” 

“குடிச்சீங்களா?” என்ற அவள் கேள்வி அவன் நடைக்கு தடைபோட, சங்கடமாய் பார்த்தவன்,

“அவாய்ட் பண்ண முடியலடி. லைட்டா தான் எடுத்தேன்.” என்றதும் அத்தனை நேரம் இருந்த உற்சாகம் வடிந்துபோனது செண்பகாவுக்கு. 

“எனக்குப் பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா?” தனக்கு ஒவ்வாதது எனத் தெரிந்தும் தைரியமாய் குடித்துவிட்டு வீட்டிற்கே வருகிறான் என்றால் என் விருப்புகள் அவனிடம் மதிப்பிழக்கிறது என்றுதானே அர்த்தம். மனம் சோர்ந்துவிட, நேற்றிலிருந்து இளகியிருந்த இதயம் இறுகிக்கொண்டது.

இன்றுதான் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்தேன் அதற்குள்ளாக மனைவிக்கு அதிருப்தி அளிப்பது போல் நடந்துகொண்டோமே என அவனுக்கு தோன்றிவிட்டது போலும், தன்னை நியாயப்படுத்திக்கொள்ளாமல் இறங்கி வந்தான் ரத்னதீபன்.

“இனி செய்ய மாட்டேன் செண்பா.”

“அப்போ இன்னைக்கு செஞ்சதுக்கு? இப்படி குடிச்சிட்டு வந்துதான் என்னை வெளில அழைச்சிட்டு போகணும்னு இருந்தீங்களா?” இவனுடன் வெளியே செல்லலாம் என்ற ஆசையில் சிரத்தையெடுத்து கிளம்பி அமர்ந்திருந்தால் அந்த யோசனையில்லாது இவன் குடித்துவிட்டு வருவானா என்ற கோபத்தை மீறி அடிவாங்கியது மனது. 

ரத்னதீபனோ எதுவும் சொல்லாது நாக்கை கடித்துக்கொண்டு தலைகுனிந்தான். 

“ஓ… என்னை வெளில அழைச்சிட்டு போறதையே சார் மறந்துட்டிங்க. ரொம்ப நல்லது. நாந்தான் லூசு மாதிரி இங்க கிளம்பி உக்காந்திருக்கேன்.” அத்தனை நேரம் கோபம் தாங்கியிருந்த முகம் சட்டென கலங்கிவிட, குற்றவுணர்வாகிப் போனது ரத்னதீபனுக்கு.

சும்மா இருந்தவளை வெளியே அழைத்துச் செல்கிறேன் என ஆசைகாட்டியது அவன்தானே. அப்போது அவன்தானே இதையெல்லாம் யோசித்து மது அருந்துவதை தவிர்த்திருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு இப்படி வெளியே செல்ல வேண்டும் என்பதையே மறந்துவிட்டாயே என தன்னைத்தானே கடிந்துகொண்டு நின்றவனை காணப் பிடிக்காதவளாய் உள்ளே சென்றுவிட்டாள் செண்பகா.

‘இவ விஷயத்துல மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என நொந்துகொண்டே அவளை பின்தொடர்ந்தவனுக்கு இன்னுமே அவள் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் காட்டுகிறோம் என்பது புரியவில்லை. 

அறைக்குள் சென்று ஆவேசமாய் கதவடைத்த செண்பகா சில நொடிகளில் நைட்டி மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். விசனத்துடன் அவளை எதிர்கொண்டவன், “சாரி செண்பா. இனி கவனமா இருக்கேன். தூங்கி எழுந்தா சரியாகிடும். நைட் பீச் போகலாம்.” என்று சொல்லிப்பார்த்தான்.

கண்டுகொள்ளவே இல்லை அவள். கூடத்தின் அலமாரியில் இருந்தவற்றை எடுத்துத் துடைப்பதும் அதனை இடம் மாற்றி மாற்றி வைப்பதும் என இருந்தாள்.

பெருமூச்சுடன் அவள் நகரும் இடமெல்லாம் பின்னேயே சுற்றியவன், “தப்புதான். கடைசியா ஒருதடவை மன்னிச்சுடு. இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன்.”

ம்கூம் பதிலில்லை.

“சாரிடி செண்பா. கட்சி கூட்டம்னு போனா மைண்ட் அங்கேயே தேங்கிடுது. இனிமே இப்படி பண்ணா போன் போட்டு திட்டு, உடனே ஓடி வந்துர்றேன்.”

“சரி ரெண்டு அடி அடிச்சிக்கோ. காலையில எப்படியோ ஆரம்பிச்சி இப்போ இப்படி சொதப்பிட்டேன்.” என கெஞ்சிப் பார்த்தான், மூக்குறிஞ்சியவள் கண்டுகொள்ளவே இல்லை. இவனுக்காக காத்திருந்தால் உதாசீனம் செய்வானா? முன்பும் சரி இப்போதும் சரி அரசியல்தான் அவன் கவனத்தில் இருக்கிறதென்றால் நான் எதற்காம்? யோசிக்க யோசிக்க மண்டை கனத்தது. மனம் கசங்கியது. என்றுமே நான் இவனுக்கு முதன்மை இல்லையா என கழிவிரக்கம் கொண்ட நேரம் தன் நாசி எட்டிய வாசனையில் முகம் சுருக்கி திரும்பினாள்.

மன்னிப்பு வேண்டி ரத்னதீபன் இவளை நெருங்கி கைப்பிடிக்கும் நேரம் அந்த வாசனை அவனிடமிருந்து வருவதை கண்டுகொண்டவளாய் அந்த நறுமணத்தை நினைவடுக்கில் இருப்பவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க, அதிர்வில் கண்கள் விரிந்தது.

ஒன்றும் புரியாமல் ரத்னதீபன், “செண்பா…” இறைஞ்சுதலோடு பார்க்கும் நேரம், பட்டென அவனை உதறித் தள்ளியவளாய் அவனை வெறித்துப் பார்த்தாள். உணர்ச்சித்தழும்பலில் உடல் உதறியது. அனுமதியின்றி கண்ணீர் வழிந்தது. 

“செண்பா என்னாச்சுடி? ஏன் ஒருமாதிரி இருக்க?” பதறிப்போனவனாய் அவள் தோள் பற்றிய நேரம் எங்கிருந்து அவளுக்கு அப்படியொரு பலம் வந்ததோ தன் தோள் குலுக்கி அவனைத் தள்ளியதில் தடுமாறி நின்றவன் அதிர்ந்து போனான். கோபத்தில் அமைதியாக இருந்தவளுக்கு திடுமென என்னானதோ என பயந்து போக, 

“நீ குடிச்சதை கூட மன்னிச்சிடுவேன் ஆனா அவ கூட கூத்தடிச்சிட்டு வந்திருக்க பாரு…” இதழ் கடித்து வார்த்தைகளை சிரமப்பட்டு அவள் கடித்துத் துப்ப, விளங்காதவனாய் தவித்துப் பார்த்தான் ரத்னதீபன்.

“என்னடி சொல்ற நீ?”

“ஓ… அதை என் வாயாலையே சொல்லனுமா? கல்யாணம் ஆன புதுசுல எந்த பொண்ணும் புருஷனோட இருக்கத்தான் ஆசைப்படுவா ஆனா என்ன பண்ண நீ? அரசியல் கூட்டம்னு போன, சரின்னு விட்டா வெத்து விளம்பரம்னு எவளோ ஒருத்தியோட போட்டோக்கு போஸ் கொடுத்த. அதை சகிக்க முடியாம உன்கூட சண்டை போட்டா என் அரசியல் கனவுதான் முக்கியம்னு இருந்துகிட்ட. நீயா வருவ வருவன்னு காத்திருந்து காத்திருந்து மனசுக்குள்ள புழுங்கிட்டு இருக்க முடியலைன்னு இங்க வந்தா என்னை இங்க கிளம்பி இருக்க சொல்லிட்டு எங்கேயோ அவகூட கூத்தடிச்சிட்டு வந்து என்கிட்டேயே பொய் சொல்றீல்ல நீ. இதுல நான் போன் போடணுமாம். போட்டா மட்டும் எடுத்துருவியா நீ? நான் ஒரு கிறுக்கச்சி போன் போட்டு எடுக்கலைங்கவும் வேலையா இருப்பேன்னு நினைச்சு காத்திருந்தேன் பாரு… இப்போல தெரியுது அவகூட நீ குடிச்சி கும்மாளம் போட்டிருக்கேன்னு…” உடல்மொழியில் ஆவேசம் இருந்தாலும் எப்போதும் உயரும் அவள் குரல் இன்று சத்தம் கூட்டாது அமைதியாய் அதே சமயம் அழுத்தமாய் வந்து விழுந்தது. அதில் ஆற்றாமை, ஏமாற்றம், விரக்தி என எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் இடம்பிடிக்க, அந்நேரம் எதுவுமே பிடிக்கவில்லை செண்பகாவிற்கு. 

“நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு…” என்றவனை இடைமறித்தவள் சுட்டுவிரலால் அவன் நெஞ்சை குத்தி, “உன் மேல வர்ற அந்த சென்ட் வாசம் நான் செத்தாலும் மறக்காது.” 

“செண்பா.” என்னவென்று புரிந்ததும் அதிர்ந்து பார்த்தான் ரத்னதீபன்.

“இப்போ என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசிக்குறியா?” அவளின் விரக்தி கலந்த சிரிப்பின் பின்னிருந்த வெறுமையில் ரத்னதீபன் நெஞ்சம் பதறித் துடித்தது.

மனைவி தன்னைத் தவறாக புரிந்து கொண்டாள் என்பதை விட அந்த புரிதலால் மனதளவில் ஒடிந்து போகிறாள் என மனைவிக்காக வருந்தி அதை தாள முடியாதவனாய் அவள் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டவன்,

“நீ எவ்ளோ வேணாலும் என் மேல கோவப்படு ஆனா இப்படி உன்னை நீயே வருத்திக்காத. நான் அமைச்சரை பார்த்துட்டு வெளில வந்தப்போ மந்த்ரா வந்தாங்க. பிரபு தள்ளாடுற அளவுக்கு குடிச்சிட்டான். அதை பாத்துட்டு அவங்க கார்லையே வீட்டுக்கு போயிக்கலாம், ஜஸ்ட் பிரெண்ட்லி ஹெல்ப்ன்னு சொல்லவும் பிரபுவை வச்சிக்கிட்டு எனக்கும் ரொம்ப நேரம் அங்க நிக்க முடியல. அவங்க கார்ல வீட்டுக்கு வந்தேன், அவ்ளோதான் செண்பா. அந்த கார்ல இருந்த சென்ட் வாசனைதான் இது, நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்லை.” எனச் சொல்லியவனை நம்பவில்லை என அவள் பார்வையே சொல்லியது.

“எத்தனையோ கிசுகிசு வந்தப்போலாம் உன் மேல ஒரு நாளும் எனக்கு சந்தேகம் வந்தது இல்லை. இவ்வளவு ஏன் அன்னைக்கு நடுவீட்ல வச்சி அவ கட்டிப்புடிச்சப்பவும் அவங்களை நீ கூப்பிட்டிருக்கேங்குற கோவம்தானே ஒழிய உன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாம்… எல்லாம்… வேஸ்ட்னு காட்டிட்ட… உன் அரசியல் ஆட்டத்துக்கும் அவளோட சினிமா பகட்டுக்கும் நான் செட் ஆக மாட்டேன்.” போதும். அனைத்தும் போதும் என தோன்றிவிட்டது அவளுக்கு. அரசியல் ஆதாயம் என இவன் அவளிடம் போவதும் தேவைக்கு பழகுதும் எதுவும் உவக்கவில்லை.. கையை உருவிக்கொண்டு அவனது அலுவலக அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள்.

இவன் எவ்வளவு கெஞ்சியும் அவள் கதவை திறக்கவில்லை. காலை நடந்தது எல்லாம் கனவு போல் கலைந்து போக, ஓய்ந்து போனவனாய் தவறிய இடத்தை சரி செய்ய இயலாதவனாய் கூடத்திலேயே அமர்ந்துவிட்டான் ரத்னதீபன்.