*21*

இருளும் விடியலும் மனைவி வாசத்தின் பிடியில் அவளின் அருகாமைக்கு மீண்டும் பழக ஆரம்பித்திருந்தான் ரத்னதீபன். இன்னும் எதுவும் சரியாகவில்லை, அட இயல்பான பேச்சுக்களுக்கு கூட பஞ்சம் என்ற நிலைதான். அவள் ஓய்வாக இருக்கும் சமயம் இவன் வீட்டில் இருப்பதில்லை. இவன் இலகுவாக இருக்கும்போது அவள் உறக்கத்தின் பிடியிலோ சமையலறையிலோ இல்லை வீட்டு வேலையிலோ தன்னை புகுத்திக் கொள்கிறாள். ஒரு டம்பளர் தண்ணீருக்கே பஞ்சம் எனும் வகையில் அவன் உணவுகள் அனைத்தும் வெளியேதான். வாரத்திற்கு ஐந்தாறு நாட்கள் வேலை, ஓரிரு நாட்கள் விடுமுறை என்ற எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வேலை அவனது. எந்நேரம் எதற்கு அழைப்பு வரும் எனத் தெரியாது. வரப்போகும் மாதங்களின் தேதிகளில் சில முன்கூட்டியே சந்திப்புகளுக்கும் விழாக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அரசு சார்பு விழாக்கள், மரியாதை நிமித்தமாக அவன் பெயரைப்போட்டு அழைக்கும் நிகழ்வுகள், சட்டசபை கூட்டத்தொடர், கட்சி சார்ந்த கூட்டங்கள் என அவன் தேதிகள் நிரம்பி வழிந்தது. இதில் குடும்ப வாழ்க்கைக்கு நேரம் குறைவு என்றாலும் முன்னர் செய்த தவறை மீண்டும் செய்து அவள் மலையேறிவிட்டால் அவளின் பின் சுற்றவும் நேரமில்லை என்ற நிதர்சனம் புரிந்து முடிந்தமட்டும் காலையும் இரவும் வீட்டிலிருக்கும் நேரத்தை அதிகப்படுத்தினான். என்ன அவன் ஒன்று நினைத்தால் வேறு ஒன்றை செய்தாள் அவன் மனைவி.

“இதென்ன உங்க டிரெஸ் எல்லாம் அப்படியே வாஷிங் மிசின்குள்ள கடக்கு. நீங்க எப்போ துவச்சி நான் எப்போ என் டிரெஸ் எல்லாம் போடுறது?” என்று முறைக்கவும் அலுப்புடன் எழுந்து வந்தான் ரத்னதீபன்.

“பத்து நாளுக்கு ஒருதடவைதான் போடுவேன். பிரபு வந்தா காய போடுவான்.” என சொல்லிக்கொண்டே மெஷினை ஓடவிட்டான். 

எவ்வளவு நேரமாகும் என அந்த இயந்திரம் காட்டிய நேரத்தை எட்டிப் பார்த்த செண்பகா, “அம்பது நிமிஷம் காமிக்குது. ஒழுங்கா வீட்ல இருந்து காய வச்சிட்டு போனா என்னோடது போட்டுக்க வசதியா இருக்கும்.” என அவனுக்கு வேலை ஏவிவிட்டு அடுத்தததை பார்க்கச் செல்ல, ஒருமணி நேரம் வீட்டிலிருக்க வேண்டுமா என்று அவசரமாக மணியைப் பார்த்தான். ஏற்கனவே பிரபு அழைத்துவிட்டான் இன்று தொகுதியில் இருக்கும் இரண்டு பெரிய ஏரிகளின் நீர்ஆதாரத்தின் தற்போதைய நிலையை பார்வையிட வேண்டுமென. அதிகாரிகளுக்கு எல்லாம் தகவல் சொல்லியாகிற்று. 

“இன்னும் பத்து நிமிஷத்துல நான் கிளம்பணும் செண்பா.” அப்போதே அவசரத்தின் சாயலுடன் மனைவியைப் பார்க்க,

“அதுக்கு நான் என்ன பண்றது? மிஷின் போடுற முன்னாடியே யோசிச்சு போட்டிருக்கணும்.”

“நீதான போட சொன்ன?”

“இப்போவே துவைச்சு போடணும்னு சொல்லலையே. என் துணி போடணும் எப்போ காலியாகும்னு கேட்டேன். வேலை இருந்துச்சுன்னா துணியை வேற பக்கெட்ல எடுத்து மாத்திப் போட்டுட்டு அப்புறமா வந்து ஆன் பண்ணியிருக்கணும்.” என அவள் நீட்டி முழக்க,

“எனக்கென்ன தெரியும்?”

“ரெண்டு பேர் இருக்கோமே பக்கெட்ல பழைய துணியை போடுவோம்னு இல்லாம எதுக்கு மிஷின்ல போட்டு வச்சீங்க? எல்லாத்தையும் துவைச்சு இஸ்திரி போட்டு வைப்பேன்னு நினைச்சீங்களோ?” என அவள் பொரிய, எதற்கு இப்போது பஞ்சாயத்தை கூட்டுகிறாள் என்ற எண்ணம்தான் அவனுக்கு. 

“நீ நாளைக்கு துவைக்க போட்டுக்கோ. நான் இப்போ கிளம்பியே ஆகணும். வருவேன்னு சொல்லிட்டேன். இப்போவே எல்லாம் பாத்தாதான் மழைக்குள்ள தூர்வார ஆடர் போட முடியும்.” 

“இங்க அவர் துணியை காய போடவே வக்கில்லையாம் இவர் வெளில போய் வாரப்போறாராம்.” என அவள் நொடித்துக்கொள்ள, கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது. 

‘எனக்கு கீழ அத்தனை பேர் வேலை பாக்குறாங்க. நான் துணி வெளுக்குறதா? அமைதியா போறேன்னு எகத்தாளமா.’ என கர்வமும் தலைதூக்கியது. சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டான். இல்லையென்றால் சுத்தலில் விட்டுவிடுவாள் மனைவி என வெகு சில நாட்களில் புரிந்துபோனது. மணமான புதிதில் அத்தனை அன்பாய் தன்னை சுற்றி சுற்றி வந்து கவனித்து குழைந்தவள் இவளில்லை என நொடிக்கொரு முறை நிரூபிக்கிறாள். இப்போதுதான் கொஞ்சம் மனமிறங்கி நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் சேர்வது போல் பால் அதிகமிருக்கிறது தன் ஒருத்தியால் காலி செய்ய முடியவில்லை எனச் சொல்லி காலை காபி கிடைக்கிறது. அதை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. பெருமூச்சுடன் அவன் நகரப்போக,

“துவைச்சு முடிச்சதும் மிஷின்லேந்து எடுக்கலைனா நாறிப் போயிடும்.” என செண்பகா மீண்டும் துவங்க, இவன் குணம் தலைதூக்கிவிட்டது.

“நாறுனா மூக்கை பொத்திக்கோ. இல்லையா எடுத்து காயப் போடு.” என சொல்லிவிட்டு அவசரமாய் கிளம்பிவிட, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவன் சென்ற திசையை முறைத்துப் பார்த்தாள் செண்பகா. 

அன்று சனிக்கிழமை விடுமுறை, ஒருவாரமாய் ஒத்திப்போட்ட வேலைகளை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் துணிகளை துவைக்கப் போட பார்க்கும் போதுதான் இந்தக் கூத்து. மனதில் கணவனை வறுத்தெடுத்தவள் வீம்புக்கென்று அவன் துணிகளை இயந்திரத்திலிருந்து எடுக்கவே இல்லை. அவள் துணியைக் கூட ஊறவைத்து கையால் துவைத்து காயவைத்துவிட்டாள். மாலை போல் பொழுது போகாமல் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டாள்.

‘வாரத்துல ரெண்டு நாள் தனியா இருக்காளே எங்கயாச்சும் கூட்டிட்டு போகணும்னு இருக்கா இந்த மனுஷனுக்கு. ஜம்முனு பேண்ட் சட்டை போட்டுட்டு தினம் கோட்டையை புடிக்க கிளம்பிட வேண்டியது. இப்படி தனியா ஊர் சுத்தவா இவன்கிட்ட வந்தேன்.’ அவனை வறுத்தெடுத்துக்கொண்டே அலைபேசி உதவியுடன் கோவிலுக்கு சென்றாள். இன்னும் சென்னை பழகாததால் வழிகாட்டும் செயலியின் உதவியுடன் செல்லும்போதே சிரமப்பட்டாள். அருகில் இருந்தவர்களை கேட்டு கேட்டு கோவிலை அடைந்தாள்.

ஏரியின் தற்போதைய நிலையை கண்காணித்து விரைந்து அதனை சரிசெய்ய உத்தரவிட்டு வந்த ரத்னதீபன் அலுவல் வேலைகள் பார்த்துக்கொண்டிருக்க, கட்சியில் உட்பூசல் என தகவல் வந்தது. அலுப்புடன் கட்சி அலுவலகம் சென்று இவன் ஒரு கோஷ்டிக்கு ஆதரவு கொடுக்க, எதிர்கோஷ்டி துள்ளியது. பேசி பேசி அவர்களை சமாளித்து வருவதற்குள் நாக்கு தள்ளியது. இதெல்லாம் அவ்வப்போது வருவதுதான் ஏன் இவனே களத்தில் இறங்கி சலசலப்பு ஏற்படுத்தி துள்ளியவன்தான். இப்போது தொண்டனிலிருந்து மேல்மட்டம் வந்ததும் சமரசம் பேசும் அதிகாரத்தில் இருப்பதால் கூடுதல் சுமையாகியது. சொந்த கட்சியிலேயே சிலரை பகைத்துக்கொள்ளும்படி ஆனது. 

‘அதிகாரம் வந்தா பொறுப்பும் வெறுப்பும் கூடுது.’ என நினைத்துக்கொண்டவன் இவன் ஆதரவளிக்கும் அமைச்சர் ஒருவருக்கு அழைத்து இதுகுறித்து பேசினான்.

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்றவர், “தானத்துக்கு கொடுத்த இடத்துல ஹோட்டல் கட்டுற பஞ்சாயத்து பத்தி நீ விசாரிக்க சொல்லியிருந்தியாமே. அது நம்ம வேலுச்சாமி பினாமியோடது. அந்த மனுஷன்தான் ஸ்கூலை மூடிட்டு இப்போ லாபம் பாக்க துடிக்கிறான். என்ன சொல்றது இந்த கட்சிக்கு இருபது வருஷமா உழைக்குற நாம பெருசில்லை இப்போ எல்லாம் அவன்தான்னு ஆடுறாங்க நம்ம மேலிடத்துல. பெரிய பொட்டி கைமாறிடுச்சு. அதுல ரொம்ப மூக்கை நுழைச்சிக்காத. நாளைக்கே தலைவலியா மாறிடும்.” என கூடுதல் தகவலை சொல்லிவிட்டு வைக்க, இவன் யோசனை தறிகெட்டு ஓடியது.

ஆரம்பத்திலேயே அந்த வேலுச்சாமியை திட்டத்தீர்த்த அப்பா, இப்போது இவன் அபிமானம் கொண்டிருப்பவரும் ஏமாற்றமாய் பேச, இவனுக்கு கணக்குகள் விரிந்தது. நடக்குமா என்று தெரியாது ஆனால் முயற்சித்துப் பாப்போம் என அந்நேரமே முடிவு செய்து தேவையானவற்றை கழுகென தேடத் துவங்கினான்.

வேறு வேலையாக சென்றுவிட்டு வந்த பிரபுவிடம், “ஏரி தூர்வார டெண்டர் விட சொல்லி சம்மந்தப்பட்ட துறைக்கு லெட்டர் ரெடி பண்ணு. சைன் பண்ணி இன்னைக்கே அனுப்பிடுவோம்.”

“எலெக்ஷனுக்கு முன்னாடிதான் புதுசா டெண்டர் எடுத்திருக்காங்க. அதை கேன்சல் பண்றதா அப்போ?”

“போன ஆட்சியில உள்ள வந்த ஆள் நமக்கு தோதா எப்படி வேலை பாப்பான்? அமைச்சர்கிட்ட பேசிட்டேன். நம்ம சார்பா ஒரு ரிமைண்டெர் போல விடணும் அப்போதான் நாம கேப்போம்னு ஆபீஸ்ல பேர் இருக்கும். அவங்க இஷ்டத்துக்கு பண்ண மாட்டாங்க. பைலை நம்ம டேபிளுக்கு அனுப்புவாங்க. இன்னும் ஒரு மாசத்துல டெண்டர் விட்டு வேலை ஆரம்பிச்சிடனும்.” என கட்டளைகள் இட,

“உங்க தெருவுக்கு ரோட் போடுற கான்ட்ராக்டரை புடிச்சி விசாரிச்சேன். போன ஆட்சியில அப்ரூவ் ஆன ரோட்தான் இப்போ போடப்போறாங்களாம். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.” என்று பிரபு அடுத்த விஷயத்தை சொல்லி பதிலுக்காக ரத்னதீபனை பார்த்தான். 

“அந்த கன்ட்ராக்ட் எல்லாம் கேன்சல் பண்ண வேண்டாம். ஹோல்ட் பண்ண சொல்லு. மத்த டிபார்ட்மென்ட் வேலை எதுவும் இருக்கான்னு விசாரிச்சிட்டு ரோட் போட சொல்லிக்கலாம்.”

“அடப்போங்க… உங்களுக்கு தெரியாததா… குடிதண்ணிக்கு தோண்டனும், மழைநீர் வடிகால் கட்டணும்னு பிளான் வச்சிருந்தாலும் அந்தந்த டிபார்ட்மெண்ட்ல டிசைன் போட்டு என்ஜினியர்ஸ் அப்ரூவ் பண்ணி அப்புறம் ஃபண்ட் அலோகேட் ஆகி செயல்படுத்துறதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துடும். அப்புறம் இந்த கான்ட்ராக்டர் காணாம போயிடுவார், நமக்கு ஒன்னும் கமிஷன் தேறாதுன்னு விட்டுட்டுகூட போயிடலாம். ஆனா அப்போ எங்கன்னு போய் அவரை புடிச்சி ரோட் போடுறது? நடக்குறதை பார்க்கலாமே அண்ணே.”

“இதுதான் நம்ம சிஸ்டெம்ல இருக்குற பிரச்சனை. எந்த துறையும் ஒருங்கிணைஞ்சி வேலை பாக்குறது இல்லை. எங்க டேபிளுக்கு எப்போ பைல் வருதோ அப்போதான் பாப்போம்ன்னு புது ரோடாவே இருந்தாலும் அதை பேத்தெடுத்துட்டு மத்த வேலையை பாக்குறாங்க. அதால எவ்வளவு பொருட்சேதாரம் கவர்மென்டுக்கு. நாம கொஞ்சம் வித்தியாசமா இருப்போம்டா. நான் இருக்குற தெரு ஒரு சின்ன ஏரியா அதுக்குகூட இப்படி ஒருங்கிணைஞ்சி பண்ண முடியலைன்னா அப்புறம் நம்ம பதவிக்கு என்னடா மரியாதை? இப்போ நடக்குறது நம்ம ஆட்சி. இதை இப்போ செய்ய முடியலைன்னா எப்போ செய்யுறதாம்? நம்ம சைட்லேந்து பிரஷர் கொடு. உன்னால பாலோ பண்ண முடியலைன்னா நம்ம டீம்கிட்ட கொடுத்து பாலோ பண்ணி என் டேபிளுக்கு வாராவாரம் அப்டேட்ஸ் வரணும்.” என கண்டிப்பு காட்ட, பவ்யமாக கேட்டுக்கொண்டான் பிரபு.

“அடுத்த வாரம் நம்ம தொகுதியில அரசு விடுதி கட்டுறதுக்கு அடிக்கல் நாட்டுறாங்கள்ல. அதுக்கு அமைச்சர் வரார். தொகுதி முழுக்க நம்ம சார்புல வரவேற்பு போஸ்டர் ஒட்டிடு. அமைச்சர் காதுக்கும் நம்மள பத்தி போகணும்.” என்றவன் அந்த அமைச்சருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பிரபுவிற்கு அனுப்பி அதை பதாகையாக வைக்கச் சொன்னான். அதற்காக ஆகும் செலவை மந்த்ரா அளித்த நிதியுதவியிலிருந்து எடுத்துக்கொள்ள சொல்லியவன்,

“இனியும் அவங்களை மட்டுமே நம்ம ஃபண்ட்டுக்கு நம்பி இருக்குறது சரியா வராதுடா. வேற சோர்ஸ் பாக்கணும்.” என்றான் ரத்னதீபன் யோசனையுடன்.

“ஏன்?” என பிரபு பார்க்க,

“இந்த கட்சியை கட்டி அழுதுட்டு இருந்தா போதுமாடா… என் வாழ்க்கையை பார்க்க வேண்டாம்.” முணுமுணுத்து ரத்னதீபனுக்கு மனைவியை கட்டிக்கொள்ளும் ஆசை எழ, அதற்கு மேல் வேலை ஓடும் என தோன்றவில்லை. வீட்டிற்கு செல்கிறேன் என சொல்லிக்கொண்டு கிளம்பியவனை பூட்டியிருந்த வீடு வரவேற்க, யோசனையுடன் மனைவிக்கு அழைக்க அலைபேசி எடுத்தான். அதே நேரம் சரியாக ஆட்டோவில் வந்து இறங்கினாள் செண்பகா. 

“எங்க போயிட்ட நீ?”

ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு வீட்டைத் திறந்தவளை பின்தொடர்ந்தவனாய் கேள்வி எழுப்பினான். கோவிலுக்கு சென்று வந்ததை சொல்லியவள் பையை வைத்துவிட்டு தண்ணீர் பிடித்துப் பருக, சட்டையை கழற்றிக்கொண்டே அறைக்குள் சென்றவன் இருந்த கசகசப்பிற்கு ஒரு குளியல் போட்டு வந்தான். இடையில் கட்டிய துண்டோடு அலமாரியில் தன் உடுப்பைத் தேட இரவு போட்டுக்கொள்வது போல் எதுவும் இல்லை.

எல்லாம் துவைக்க போட்டோமா? என நெற்றியில் கைவைத்தவன் காலையில் மெஷினில் போட்டது நியாபகம் வர வேகமாக அங்கு சென்று வாஷிங் மெஷின் கதவை திறந்துப் பார்த்தான். காலையில் அழுக்காக போட்ட துணிகள் எல்லாம் பளிச்சென்று கரை நீங்கி அதிலேயே பாதி காய்ந்தும் காயாமலும் ஈரவாடை அடித்துக்கொண்டிருந்தது. நாசி எட்டிய துர்வாடையில் முகம் சுருங்க,

“என் ட்ரெஸை காய வைக்கலையா நீ?” அபத்தம் என தெரிந்தும் மனைவியைப் பார்த்துக் கேட்டான் ரத்னதீபன்.

கூடத்தில் இலகுவாக அமர்ந்து என்ன செய்கிறான் என பார்த்துக்கொண்டிருந்தவள் இவனது கேள்வியில் கடுப்பாகி நன்றாக முறைத்து வைத்தாள். 

“என்ன முறைப்பு. நாந்தான் சொன்னன்ல அவசரமா போற வேலை இருக்குனு.”

“நானும்தான் சொன்னேன் நான் இங்க கெஸ்ட்டுனு. அதுக்குள்ள மறந்துடுச்சா?” செண்பகா கேலியாக கேட்க,

“கெஸ்ட்டுன்னா எதுக்குடி என்கூட கட்டில்ல படுக்குற?” அவனையும் மீறி பட்டென கேட்டுவிட்டான். கேட்டபின் தான் உரைக்க, திருட்டு முழி வந்து போனது.  

“ஒரு ரூம்ல உங்களோட கட்சி கொடி அதுஇதுனு இருக்குறதால மெத்தை இருக்குற ரூம் யூஸ் பண்றேன் அவ்ளோதான். நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க.” என கழுத்தை வெட்டிச் சென்றவளை ஆயாசமாய் பார்த்தவன் தலையை பிடித்துக்கொண்டான். 

‘என் நிலைமை இப்படியா ஆகணும்.’ மனம் நொந்து துண்டோடு நிற்கும் தன்னை குனிந்து பார்த்துக்கொண்டவன், கடுப்புடன் துவைத்த துணிகளை அந்நேரம் கொல்லைப்புறத்தில் காய வைத்தான். கொல்லைக் கதவை நன்றாக பூட்டிவிட்டு உள்ளே வந்தவன் நாசி எட்டியது தோசையின் வாசம். 

பூனையென பதுங்கிச் சென்று மனைவியின் பின்னின்று எட்டிப் பார்க்க, அவனின் வரவை கண்டுகொண்டவள் சட்டென நகர்ந்தாள். 

“இங்க என்ன வேலை உங்களுக்கு?” நெருங்கினால் சூடு போட்டுவிடுவேன் என்பது போல் தோசைத் திருப்பியை ஆட்டி ஆட்டி அவள் பேசியதிலேயே தள்ளிச் சென்றவன் தன் நிலையை சுட்டிக்காட்டி, “நான் இன்னும் டின்னர் சாப்பிடல. இதோட எப்படி செண்பா வெளில போய் சாப்பிட முடியும்?” என பாவமாக கேட்க, கொஞ்சம் இறங்கி வந்தது பெண். 

துண்டைத் தவிர உடுப்பென்று எதுவமின்றி நின்றவனை ஒருநொடிப் பார்த்துத் திகைத்து கவனத்தை தோசை நோக்கி திசைதிருப்பியவள், “ஏன் ட்ரெஸ்ஸே இல்லாத மாதிரி இப்படி நிக்குறீங்க? போங்க முதல்ல.” என அவனை விரட்ட முயல, 

“நிஜமாவே எதுவும் இல்லடி. எல்லாம் இப்போதான் காய போட்டேன்.” என்றவனை எதுவும் சொல்ல முடியாமல் தடுமாறியது பெண்.  

“ஆடர் போட்டு சாப்பிட வேண்டியதுதான.”

“டெலிவரி பண்றப்போ இப்படியே வாசல்ல போய் வாங்கவா?”

“ப்ச்… நான் வாங்கித்தரேன்.” என்றாளே ஒழிய செய்து தருகிறேன் என சொல்லவில்லை. அவள் கையால் தோசை கிடைக்கும் என்றுதான் இவன் கொஞ்சம் பாவமாய் நின்றான், அது நடக்காது எனப்புரியவும் அழுத்தக்காரி என மனதிற்குள் சலித்துக்கொண்டே அலைபேசியை எடுக்கப் போக, என்ன தோன்றியதோ,

“தோசையும் பொடியும்தான் இருக்கு. வேணும்னா சாப்பிட வரலாம்.” அவன் முகத்தை பாராது பொதுவாக சொல்லிவிட்டு செல்ல, பிரகாசமானவன் சமையலறை மேடையிலேயே அமர்ந்துவிட்டான்.  

தன்னை பார்க்கும்படி அமர்ந்துகொண்டவனை ஒருவித சங்கடத்துடன் பார்த்தவள், “எதுக்கு இங்க உக்காந்திருக்கீங்க? ஹாலுக்கு போங்க. நான் ஊத்தி எடுத்துட்டு வரேன்.”

“உனக்கு எதுக்கு கஷ்டம். நான் இப்படியே வாங்கிக்குறேன்.” என்றபடியே எக்கி மறுபக்கம் ஒரு தட்டில் அவள் வார்த்து வைத்திருந்த தோசையை அவளை லேசாக உரசியபடி எடுக்க, அவஸ்தையாகிப் போனது செண்பகாவிற்கு.

‘பாவம் பார்த்ததற்கு வேண்டுமென்றே செய்கிறானோ.’ என்பது போல் பார்க்க, தான் அவனை உற்றுப் பார்க்கிறோம் என்று புரியவில்லை பாவைக்கு.

அவள் தோள் தட்டி தோசை கருகுகிறது என சொல்லவும்தான் தன் அவஸ்தைகளை மறைத்துக்கொண்டு தோசை வார்த்துக் கொடுத்தாள். வார்த்தையாடி வம்பு செய்யாமல் நல்ல பிள்ளையாக சாப்பிட்டு முடித்தவன், “எனக்கும் உனக்கு ஊத்தித் தரணும்னு ஆசைதான். ஆனா எனக்குத் தெரியாது செண்பா.” என நல்லவன் போல் சொல்ல, அவன் விரிக்கும் வலை உணராத செண்பகா,

“என்ன தெரியாது? ஒரு கரண்டி மாவை எடுத்து ஊத்தி சுத்தி தேய்ச்சிவிட்டா வந்துடப்போகுது.” ஆடு தானாக வந்து சிக்குகிறது என நினைத்துக்கொண்டு இவள் செய்முறை விளக்க, ஆர்வமாக தோசை ஊற்ற வந்தவன் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றித் தேய்க்க, மாவு தோசையாக படரவில்லை. ஒரே இடத்திலும் கரண்டியிலும் ஒட்டிக்கொண்டது.

“என்ன செண்பா இது? கரண்டிலதான் ஒட்டிட்டு இருக்கு.” 

“ப்ச்… கல் ரொம்ப சூடா இருக்கு.” என சொல்லிக்கொண்டே கல்லில் இருந்த மாவை தேய்த்து எடுத்தவள் கொஞ்சம் தண்ணீர் தெளித்து எப்படி ஊற்ற வேண்டும் என சொல்ல, கவனிக்கும் ஆவலில் அவளை நெருங்கி நின்று அவள் கைப்பிடித்து அவளோடே தோசை ஊற்ற, அவன் அருகாமையை உணரவே இல்லை செண்பகா. மாவை இப்படி ஊற்றி தேய்க்க வேண்டும், இவ்வளவு எண்ணெய் சுற்றி ஊற்ற வேண்டும், தீயின் அளவை கூட்டி குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என வரிசையாக பாடம் எடுத்தவள் தோசையை திருப்பிப்போட்ட பின்தான் அவன் வெற்று உடல் தன் முதுகுரச நிற்பதையே உணர்ந்தாள். பட்டென்று அவனை தள்ளிவிட்டவள், “நானே பாத்துக்குறேன். உங்க வேலையைப் பாருங்க.” கடினத்துடன் விலகி நிற்க, அவள் கைப்பிடித்தவன்,

“உன்னை பார்த்துக்குறதும் என் வேலைதான் செண்பா.” உருக்கும் குரல் இல்லையென்றாலும் உணர்வுகள் அதிகமிருந்தது அவன் வார்த்தைகளில். அதை நம்ப மறுத்து, 

“ரொம்ப சீக்கிரம் புரிஞ்சிடுச்சு உங்களுக்கு.” என கையை உருவிக்கொண்டு நக்கலாக சொன்னவள் தோசை திருப்பியால் அவன் கையில் அடிக்க வர, துள்ளி நகர்ந்துவிட்டான் ரத்னதீபன்.

“இதெல்லாம் சரியே இல்லை சொல்லிட்டேன். ஹெல்ப் பண்ணலாம்னு வந்தா ரொம்ப பண்றடி.” 

“நீங்க பண்ண வரை போதும் சாமி.” கையெடுத்து அவள் கும்பிட்டுவிட, 

“இனிமே நான் எதுவும் செய்யலைனு சொல்லு அப்போ பேசிக்குறேன்.” முறைத்துக்கொண்டு வெளியேறியவன் அலுவல் அறைக்கு சென்றுவிட்டான். 

அவன் நகர்ந்ததும் ஆசுவாச மூச்சுவிட்டவளுக்கு மீண்டும் புதிதாய் குறுகுறுப்பு துளிர்விட்டது. அதனை ஒதுக்கித்தள்ளி வேகமாக தோசை வார்த்து உண்டவள் அவன் வரும்முன் உறங்கிவிட வேண்டும் என மெத்தையில் படுத்துவிட, அவள் உறங்குவதற்காக வெகுநேரம் காத்திருந்து அறைக்குத் திரும்பியவன் ஆழந்த உறக்கத்திலிருந்தவளைப் பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டான். 

‘முழிச்சிருந்தா என்னை பக்கத்துலேயே விடமாட்டா இன்னைக்கு. தரையில படுன்னு உருட்டி விட்டுருவா.’ என நினைத்துக்கொண்டே ஒருக்களித்து படுத்திருந்த மனைவியை உரசுவது போல் படுத்துக்கொண்டான். 

கணவனின் ஸ்பரிசத்தில் அன்னிச்சையாக அவள் விலகிப் படுக்க, இவன் முதுகுரச ஒட்டிப்படுத்தான். அவள் புரள, இவனும் அவள் புறம் திரும்பி தோள்கள் உரசிக்கொண்டான். மெல்ல கையுயர்த்தி பட்டும்படாமல் அவளை அணைக்கப்பார்க்க, உறக்கத்திலேயே அதனை தட்டிவிட்டு மீண்டும் திரும்பி படுத்துக்கொண்டாள் செண்பகா.

‘பொண்டாட்டி தூங்கும் போதுகூட நெருங்க விடமாட்டேங்குறாளே…  அசிங்கம்டா தீபா உனக்கு… அவதான் விலகி போறால்ல, நீ எதுக்கு அட்டைப்பூச்சு மாதிரி ஒட்டிக்க போற… கொஞ்சமாச்சும் மான ரோஷம் இருக்காடா…’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவனுக்கு அப்போது தெரியவில்லை காலை எழுந்ததும் தன் மானம் கப்பலேறப்போகிறதென்று.