*20*

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்லக்கூடிய அதிகாரத்தில் இருந்தாலும் நிதர்சனம் அப்படி இருக்காதே. குடும்பத்தை பார்க்கலாம் என நினைக்கையில்தான் அவன் பார்வைக்கு பிரச்சனைகளோ கூட்டங்களோ சலசலப்புகளோ வருகிறது. அதனை உதறித் தள்ளிவிட்டு வரவும் முடியவில்லை. வீட்டு சாவி வாங்கும் சாக்கில் நேரமே மனைவியை பார்க்க செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவன் வேறொரு வேலையில் மாட்டிக்கொள்ள, இரவாகிவிட்டது. 

‘இப்போ போய் அவ ஹாஸ்டல் முன்னாடி நிக்க முடியாது. வீட்டு சாவியும் இல்லையே.’ என வீட்டுக்கு வெளியே வண்டியை நிறுத்தி அலமலந்து பார்க்க, உள்ளே மெல்லிய விளக்கொளி அவன் கருத்தை எட்டி வியக்க வைத்தது.

மனைவி இங்கிருக்கிறாளா? ஆர்வதோடு வண்டியை உள்ளே விட்டு கதவடைத்தவன் அழைப்பு மணி அழுத்த, வந்து கதவைத் திறந்த மனைவியை ஆவென்று பார்த்தான்.

“செண்பா…” ஆவலுடன் வந்த அவன் குரலை கண்டுகொண்டது போல் காட்டிக்கொள்ளாமல் இவள் உள்ளே செல்ல, கதவைப் பூட்டிய ரத்னதீபன்,

“ஹாஸ்டல்ல இருப்பேன்னு நினைச்சேன்.” என்கவும் நின்று அவனை கூர்மையாக பார்த்தவள், 

“சாவி வேணும்னு நைட் ஹாஸ்டல் முன்னாடி வந்து நின்னு தொலைச்சா எல்லாருக்கும் பதில் சொல்ல முடியாது என்னால…” இத்தனை நேரம் யோசித்து வைத்திருந்த காரணத்தை அவள் அவிழ்த்து விட, 

“பக்கத்துல இருக்குற ஹஸ்பண்டோட இல்லாம ஏன் இங்க தங்கியிருக்கேனு கூட கேப்பாங்க செண்பா. அதனால இங்கேயே இருந்துடு.” என்றான் இவனும் பட்டென்று.

‘கொஞ்சம் விட்டா இப்படி வேற கேட்டிருப்பாங்களோ… ஆனா இங்கிருக்குறதுக்கு இதுவும் நல்ல யோசனைதான்.’ மனதிற்குள் நினைத்தவளோ வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஓரப்பார்வையால் கணவனை முறைத்துக்கொண்டே அறைக்குச் சென்றாள்.

‘வாயை வச்சிட்டு சும்மான்னு இருடா. ஒரு நாளாச்சும் இங்க இருக்காளே, இதை அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணிடனும்.’ என எண்ணிக்கொண்டே அவனும் பின்தொடர்ந்து சென்று உடைமாற்றி கட்டிலில் படுக்க, மறுபுறம் படுத்திருந்த செண்பாவிடம் அசைவே இல்லை. உறங்கிவிட்டது போல் அவள் பாவனை செய்ய, எட்டி அவள் முகத்தை பார்த்த ரத்னதீபனுக்கு அளப்பரிய நிம்மதி. 

கைநீண்டு அவள் வதனம் தீண்ட முயன்ற விரல்களை உள்ளிடக்கி நேராக படுத்தவன் அமைதி அமைதி என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். இரவு தாமதமாக வந்ததற்கு நான் என்ன உனக்கு வைத்த ஆளா என் உறக்கத்தை கெடுத்து கதவு திறந்துவிட வேண்டுமா என வார்த்தையாடாமல் இந்தமட்டும் இருக்கிறாளே அதுவே பெரிய விஷயம். உன் ஆர்வத்தை கொஞ்சம் அடக்கு, இரண்டு வருடம் அடக்கித்தானே இருந்தாய் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு உறங்க முயன்றான். மனைவியின் இருப்பு அவனை உற்சாகத்தில் ஆழ்த்த, உறக்கம் வருவேனா என்றது. ஆர்வத்துல எதுவும் பண்ணி இப்போவே என்னை கொண்டுபோய் ஹாஸ்டல்ல விடுன்னு சொல்லிடப் போறா, கம்முனு இரு என பலவாறான சுயகடிதலுக்குப் பின் உறங்கிப் போனான்.

காலை தாமாக விழிப்பு தட்டவும் மனைவி வீட்டில் தங்கிய நினைவில்  ஆர்வமுடன் புரண்டுப்படுக்க அவ்விடம் காலியாக இருந்தது.

‘ஐயோ திரும்ப கிளம்பிட்டாளா?’ என்ற அலறலுடன் எழும்பியவன் அரக்கப்பரக்க எழுந்து வெளியே வர, சமையலறையில் சத்தம் கேட்டது. வேகமாக அங்கு சென்றுப் பார்த்தவனுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை. பாதி பிரித்த நிலையிலிருந்த அட்டைப்பெட்டிகளில் இருந்து சாமான்கள் எட்டிப்பார்க்க, மிச்சசொச்சங்கள் அனைத்தும் சமையலறை முழுக்க பரப்பப்பட்டு அதற்கான இடம் ஒதுக்க காத்திருந்தது. மேலிருந்த ஒரு கப்போர்டிற்குள் தலையை விட்டபடி என்னவோ செய்துகொண்டிருந்தாள் செண்பகா.  

“என்ன பண்ற செண்பா?” புரிந்தும் புரியாத நிலையில் அவன் கேட்க, கழுத்தை வெளியே இழுத்து தலையை நீட்டியவள், “பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க. பசிக்குது எனக்கு.”

“ஏதே? பால் பாக்கெட் நான் வாங்கணுமா?” சட்டென்று இப்படித்தான் கேட்டிருந்தான். வீட்டிற்கு என்று பெரிதாக எதுவும் அவன் செய்ததில்லை. அவன் மட்டுமல்ல அவன் தந்தை கூட கட்சி வேலை, வயல் என்று சென்றுவிடுவார். அபிராமிதான் அனைத்தும் பார்த்துக்கொள்வார். திவ்யா திருமணத்தின் போது ஏதோ கொஞ்சம் செய்தான். அபிராமியும் எதுவும் சொன்னதில்லை. ஏன் திருமணமான புதிதில் சில மாதங்கள் உடன் இருந்த செண்பகாவும் அவனிடம் எதுவும் கேட்டதில்லை. இப்போது வந்து சட்டமாய் பால் வாங்கிவா என்றதும் முழிக்கவே செய்தான். அதுவும் ஒரு அதிகாரத்திற்கு வந்தபின் அவனுக்கு வேண்டியதை செய்ய ஆட்கள் இருப்பதால் இதெல்லாம் ஒவ்வாதது போல் பாவனை காட்டி நின்றவனை அவள் முறைக்க, சட்டென்று தன் உடல்மொழியை மாற்றியவன்,

“எதுக்கு இழுத்துப்போட்டு செஞ்சிட்டு இருக்க? கிச்சன்ல நான் எதுவும் செய்ய மாட்டேன், எனக்கு தேவைப்படாது.” என்றவனை இரண்டு அடி அடித்தால் என்னவென்று கூட தோன்றியது செண்பகாவிற்கு. பல்லைக் கடித்து எதுவும் சொல்லாமல் மீண்டும் கப்போர்ட்டினுள் தலையை விட்டு சாமான்களை அடுக்க, நாக்கு துறுதுறுத்தது ரத்னதீபனுக்கு. அவளுக்கு ஏற்றது போல் அடுக்குகிறாளா? அப்படியென்றால் இங்கேயே இருக்கப்போகிறாளா? என்னுடனே தங்க வந்துவிட்டாளா? தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அவனைப் போட்டு துளைக்க, அவள் வாயாலே கேட்க வேண்டுமென்ற துடுக்குத்தனம் தலைதூக்கியது. நேரடியாக கேட்டால் குதர்க்கமாக பதில் கொடுப்பாள் என்று தெரிந்து வைத்திருந்த கணவன்,

“உன்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடவா?” என கேட்க, உடனே கையில் எடுத்ததை அப்படியே போட்டுவிட்டு அவனிடம் வந்தவள், “போலாம் வாங்க.” என்றுவிட, ஐயோவென்றானது அவனுக்கு.

என்கிட்டேயேவா என அவள் பதில் பார்வை கொடுக்க, தன் இருகரம் கொண்டு அவள் இரு வளைக்கரத்தையும் பிடித்தவன், “அம்மா தாயே உனக்கு என்ன தோணுதோ பண்ணு. இன்னும் நாலு பெட்டியை பிரிச்சி போட்டு அடுக்கணுமா அடுக்கு. எதுவும் வாங்கணுமா சொல்லு வாங்கிட்டு வரேன். ஆனா இதுக்கு மேல சத்தியமா என்னால முடியாது சாமி. இங்கேயே இருந்துடுடி.” என குரல் தழைந்துவிட, புன்னகை உதிர்க்கத் துடித்தது அவள் இதழ்கள். அதட்டி அதனை அடக்கி வைத்தவள்,

“நீங்க சொன்ன மாதிரி வீட்டை பக்கத்துல வச்சிக்கிட்டு நான் ஹாஸ்டல்ல இருந்தா நிறையா கேள்வி வரும். இதுக்கு மேல என்னாலயும் ஏச்சு பேச்சு வாங்கிகிட்டு சமாளிக்க முடியாது. அதனால ஒரு கெஸ்ட்… நல்லா கேட்டுக்கோங்க கெஸ்ட்டா இங்க தங்கிக்குறேன்.” என்று புருவம் உயர்த்த,

“கெஸ்டோ ஓனரோ நீ இரு, அது போதும்.” என்றுவிட்டான் ரத்னதீபன். நெருங்கவே முடியாதபடி முட்டுக்கட்டை போடுவதற்கு இது எவ்வளவோ மேல். சிறிது நாட்களாகவே தனிமை உணருபவனுக்கு பொழுது சாய்ந்து விடிவது அவள் முகத்தினில் என்றால் கசக்கவா செய்யும். விழுந்துவிடுகிறேன் ஐயா என்பதுபோல் பணிந்துவிட்டான். 

“அப்போ போய் பால் வாங்கிட்டு வரலாமே.” செண்பகா கைகளை மெல்ல அவனிடமிருந்து உருவிக்கொண்டு இரண்டடி பின்னெடுத்து வைக்க,

“போறேன் போறேன். நான் போகலாமா? நாளையிலிருந்து டெய்லி போட சொல்லிடவா? எவ்ளோ வேணும்?” சட்டென குடும்பஸ்தனாக மாறிவிட்டவன் மனைவியிடம் விவரம் கேட்டுக்கொண்டு உடை மாற்றி வெளியே சென்றான்.

இவர்கள் வீடிருக்கும் தெரு முனையில் ஒரு சிறு மளிகை கடை இருக்கும். வரும் போதும் செல்லும் போதும் பார்த்திருக்கிறான். இன்று அந்தக் கடை நோக்கி நடக்க, ஒருசில பார்வைகள் இவன்மீது படிந்தது. சில கால்கள் நின்று வணக்கம் வைத்தது, சில தயங்கியது, சில கண்டுகொள்ளாமல் சென்றது. அனைத்தையும் நோட்டமிட்டபடி கடைக்குச் சென்றவன் தேவையானவற்றை வாங்க, பவ்யமாக பேசினான் கடைக்காரன். அன்று அநேக பள்ளிகள் விடுமுறை என்பதால் தெருவிலும் கூட அவ்வளவு கூட்டமில்லை. பொதுவாக தெருவைப் பற்றி விசாரித்துவிட்டு கிளம்ப எத்தனித்தவனை அத்தெருவாசிகள் சிலர் நிறுத்தி தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். 

“நம்ம தெருவுக்கு ரோட் போட போறதா பேசிக்குறாங்க. பழைய ரோடை முழுசா ரிமூவ் பண்ணாம லேசா நோண்டிட்டு மேல மேல புது ரோட் போட்டு இப்போ ரோட் உயரம் அதிகமாகி வீடெல்லாம் பள்ளமாகிட்டு. இதனாலேயே மழைநாள் வந்தா வீட்டுக்குள்ள தண்ணி வந்துடுது. நீங்கதான் கொஞ்சம் பாத்து செய்யணும் சார்.”

“ரோட் போடுறதுக்கு முன்னாடியே வேற எதுக்கெல்லாம் குழி தோண்டி வேலை செய்யணுமோ எல்லாத்தையும் மொத்தமா முடிக்க சொல்லுங்க சார். பழைய ரோட்டை நோண்டிட்டு புது ரோட் போடுறாங்க அப்புறம் ஒரே மாசத்துல ஈபிக்கு, குடிநீருக்கு, வடிகாலுக்குனு மாத்தி மாத்தி நோண்டி அப்படியே மண்ணை போட்டு மூடிட்டு போயிடுறாங்க. எப்போதும் மேடும் பள்ளமுமா குண்டும் குழியுமா இருக்கு. குழந்தைங்களை வச்சிக்கிட்டு டெய்லி இதுல போயிட்டு வரதே திகிலா இருக்கு சார். பெரியவங்க எங்களுக்கே எப்போ விழுந்து வைப்போம்னு இருக்கு.” என்று தங்களின் தினசரி சங்கடங்களை பகிர்ந்து கொண்டனர். 

கண்டிப்பாக சரிசெய்ய பார்க்கிறேன் என வாக்கு கொடுத்து நடைபோட, கன்னாபின்னாவென தொங்கும் வையர்களை காட்டி அவனிடம் புகார் கொடுத்தனர் சிலர். அனைத்தையும் சரி செய்வதாக சொல்லியவன், வீடு நோக்கி வேக நடையிட்டு, ‘வீட்டுக்கு வர்றதுக்குள்ள எவ்ளோ கம்ப்ளைண்ட்.’ என முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்கு வந்து அவளிடம் பாலை கொடுக்க, எவ்வளவு நேரம் என முறைப்பும் முணுமுணுப்புமாக சென்றாள் செண்பகா.

“நான் என்ன வேணும்னேவா லேட் பண்ணேன். என் தலை தெரியவும் எல்லாம் வந்து புகார் கொடுக்குறாங்க. பொதுவாழ்க்கையில் இருந்துகிட்டு வீட்ல என் பொண்டாட்டி வெயிட் பண்ணறா அப்புறம் பேசுங்கனு சொல்ல முடியாதுடி.” என சொல்லிக்கொண்டே அவள் பின்னோடு சென்றவன் பார்த்தது காபி போடத் தயாராக பாலை பிரித்து பாத்திரத்தில் மாற்றி அடுப்பில் ஏற்றுபவளைத்தான்.

அவளை தொந்தரவு செய்ய வேண்டாமென அலைபேசி எடுத்துக்கொண்டு நகர்ந்து சென்றவன் பிரபுவிற்கு அழைத்து இந்த பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்யும்படி சொல்ல,

“நாம சொன்னா அது பொதுப்பணித்துறைல வரும், இது நீர்வளத்துறை, நகர மேம்பாட்டுத்துறைன்னு ஒருத்தரை ஒருத்தர் கை காமிச்சு நீட்டி முழக்குவாங்க.”

“எம்.எல்.ஏடா நானு. என்னையே சுத்தல்ல விட்டா அசிங்கமா போயிடும். ஒழுங்கா ஆள் புடிச்சி நான் இருக்குற தெருவை சரிபண்ண பாரு முதல்ல. மத்தது எல்லாம் அப்புறம் பாக்கலாம். இங்க செய்யலைன்னா மானம் போகும். அவன் தங்கியிருக்குற தெருவுல உள்ள குறையே அவனால நிவர்த்தி பண்ணமுடியலைன்னா வேற என்ன புடுங்குவான்னு முதுகுக்கு பின்ன பேசுவாங்க.”

“முதுகுக்கு பின்னாடியெல்லாம் இல்லை நேராவே ஷோஷியல் மீடியாவுல பேசுவாங்க. சரி போனை வைங்க, நான் என்னனு பாத்துட்டு கூப்பிடுறேன். இன்னைக்கு வீட்ல வேலை இருக்குண்ணே சீக்கிரம் வரமுடியாது.” என்று பிரபு அந்தப்பக்கம் சொல்ல, கையில் காபி டம்ளருடன் வந்த மனைவியை பார்த்துவிட்டு அழைப்பை துண்டிக்கும் விதமாய், 

“எனக்கும் வேற வேலை இருக்குடா. லேட்டாதான் ஆபிஸ் வருவேன். அங்க பாக்கலாம் பிரபு.” என்றவன் ஒருகையால் அலைபேசியில் அழைப்பை துண்டித்து மறுகையை அவளை நோக்கி காபிக்காக நீட்ட, அவனை கண்டுகொள்ளாதவளாய் அங்கிருந்த மற்றொரு சேரில் சம்மணமிட்டு அமர்ந்து காபியை ருசித்துப் பருகினாள் செண்பகா.

இங்கு ரத்னதீபன் நீட்டிய கை அந்தரத்தில் தொங்க, குழப்பமும் பாவமுமாய் அவளைப் பார்த்து, “செண்பா எனக்கு காபி?” 

காபி டம்ளருக்குள் முகத்தை விட்டிருந்தவள் முகத்தை நிமிர்த்தி நாக்கை நீட்டி உதட்டில் இருந்த காப்பியை ஈரம் செய்து நாவரும்புகளுக்கு விருந்தாக்கியவள் வெகு சாதாரணமாய், “எதுவும் கேட்டீங்களா?” என அவனைப் பார்த்தாள்.

உலர்ந்து போன உதட்டை ஈரம் செய்துகொண்ட ரத்னதீபனின் குரல் கிணத்திலிருந்து ஒலிப்பது போல் வந்தது, “எனக்கு காபி?”

“உங்களுக்கு எதுக்கு?” புரியாதவள் போல் நெற்றி சுருக்கி செண்பகா பார்க்க,

“இல்லை நீ குடிக்குற எனக்கு?”

“இங்க நான் கெஸ்ட் மறந்துட்டீங்களா?” பாவனையாய் கேட்டவள், அழுத்தமாய் பார்த்து புருவம் உயர்த்த, வேண்டுமென்றே செய்கிறாள் என புரிந்துபோனது ரத்னதீபனுக்கு.

நீ இருந்தால் மட்டும் போதும் என சில நிமிடங்கள் முன்னர் கொடுத்த வாக்கு அவனை மேற்கொண்டு வில்லங்கமாய் பேச விடாமல் செய்ய, கொஞ்சம் முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டவன், “உனக்கே தெரியும் எனக்கு வெந்நீர் வைக்ககூடத் தெரியாதுன்னு. நடந்து போய் பால் வாங்கிட்டு வந்ததுல டயர்ட் ஆகிட்டேன் செண்பா. இன்னைக்கு ஒருநாள் மட்டும் காபி போட்டு கொடேன்.” என கேட்டுப்பார்த்தான்.

“இத்தனை நாள் எப்படி குடிச்சீங்க சார்?” சிக்குவேனா என்பது போல் பார்த்தாள்.

“வெளில குடிப்பேன்.” சின்னக்குரலில் சொன்னவன், “சரி கிளம்பு. இன்னைக்கு உனக்கு லீவ்தானே. ஹாஸ்டல் போய் உன் லக்கேஜ் எடுத்துட்டு வந்துடலாம். அப்புறம்னா ஏதாவது எனக்கு வேலை வந்துடும்.” என இலகுவாகி அவன் எழுந்து நிற்க, செண்பகா மணியைப் பார்க்கவும், “வெளில டிபன் வாங்கிக்கலாம். இனி தினம் காலையில பால் போட்டுருவாங்க. வேற எதுவும் வேணும்னாலும் இந்த நம்பருக்கு கால் பண்ணு. நம்ம தெரு முனையில இருக்குற கடைதான். நான் சொல்லிட்டேன். மாச கடைசில பணம் கொடுத்துக்கலாம்.” என அந்த கடையின் எண்ணை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

சரியென்று அவனுடன் சென்று விடுதியை காலி செய்து தன் பொருட்களை எல்லாம் எடுத்துவர, ஒரு ஆட்டோவை பிடித்துவிட்டான் ரத்னதீபன்.

எதுக்கு ஆட்டோ? என்பது போல் அவள் பார்க்க, 

“நாலு பை வந்துடுச்சு. நெறுக்கியடிச்சி வண்டில வச்சிட்டு போயிடலாம். ஆனா யாரும் பாத்தா நானே ரூல்ஸ் பாலோ பண்ணலைன்னு பேச்சு வரும். சிலது எல்லாம் நம்ம பதவிக்கும் இடத்துக்கும் தகுந்த மாதிரி மாத்திகிட்டு நடந்துக்கணும்.”

“எப்படி? உங்க பேர் அரசல்புரசலா காசிப்ல சிக்குச்சே, அதை உங்களுக்கு ஏத்தமாதிரி மாத்திக்கிட்டு இப்போ இருக்குற இடத்துக்கு வந்திருக்கீங்களே அப்படி மாறிக்கணுமா?” கேட்க வேண்டுமென்று கேட்கவில்லை ஆனால் அவளையும் மீறி வார்த்தைகள் வந்துவிட, பெருமூச்சு விட்டவன், “நீ ஆட்டோல போ. நான் பின்னாடியே வரேன்.” என அவளை ஆட்டோவில் ஏற்றிவிட்டு இவன் பின்தொடர்ந்தான்.  

மனைவியிடம் இளக்கம் வந்திருந்தாலும் இன்னும் பழைய கசப்புகள் நீங்கவில்லை என்று புரிந்தது ரத்னதீபனுக்கு. என்ன செய்து அதை சரிசெய்வது என்ற கலக்கம் பிறந்தாலும் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்தது அவள் வீடு சேர்ந்துவிட்ட திருப்தியில்.

ஆட்டோவோடே சென்றவன் அதிலிருந்த பைகளை கீழிறக்கி தானே தூக்கிச்சென்று உள்ளே வைத்தான். அவன் இரு பைகளை எடுக்க பின்னோடே இவள் இரு பைகளை எடுத்துச் சென்றாள். என்ன உணவு வேண்டும் என அவளிடமே கேட்டு ஆடர் போட்டுவிட்டான்.

இருவருமாக சேர்ந்து உண்ண, இருவரிடமும் பேச்சில்லை. ஆர்வத்தில் தான் ஏதாவது சொல்லி இருப்பதை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என அமைதி காக்க, மந்த்ரா நினைவு வந்ததில் இவள் மெளனமாகிவிட்டாள். சிறிது நேரத்தில் பத்திரமாக இருக்கும்படியும் எதுவும் அவசரம் என்றால் கூப்பிடும்படியும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான் ரத்னதீபன்.

அவன் சென்ற பின் கதவை பூட்டிக்கொண்டவள் தன் உடமைகளை பிரித்தடுக்க, நேரம் போனதே தெரியவில்லை. வீட்டிலிருந்து அழைப்பு வரவும் அவர்களிடம் பேசினாள். சமைத்துவிட்டாயா என கேட்கவும் மதியத்திற்கு எளிமையாக செய்து உண்டவளுக்கு மனது உறுத்தியது. பசி என காலை அவன் காபி கேட்டு இவள் கொடுக்காதது என்னவோ போலானது. அவள் மனமே அவளை குற்றம் சுமத்த, அவன் மட்டும் ரெண்டு வருஷம் என்னை கண்டுக்கிட்டானா? இப்போ எதுக்கு நான் மட்டும் உடனே விழுந்து விழுந்து கவனிக்கணும். கெஸ்ட்டாவே இருப்போம் கொஞ்சநாள் அப்போதான் நம்ம அருமை புரியும் என பலவாறு யோசித்து சமாதானம் செய்துகொண்டவள் இரவும் அவளுக்கு மட்டும் செய்து உண்டாள். 

முந்தைய தினம் போல் அல்லாமல் கொஞ்சம் நேரமே வந்துவிட்டவனிடம் உண்டாயா என்று கேட்கக்கூட இல்லை. ஆனால் அவன் கேட்டான். என்னென்ன செய்தாய், சாமான்களை அடுக்க உதவிக்கு ஆள் அனுப்பவா என்று கேட்டதற்கு, ‘காலையில கேட்க வேண்டிய கேள்வியை எல்லா வேலையும் முடிச்சதுக்கு அப்புறம் கேக்குறான் பாரு.’ மனதிற்குள் கவுண்ட்டர் கொடுத்தவள் வேண்டாம் என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு படுத்துவிட, வருடம் கழித்து குடும்பத்துடன் இருப்பது போல் உணர்ந்தான் ரத்னதீபன். அவள் வந்துவிட்டதே இத்தனை திருப்தி கொடுக்கிறது என்றால் எல்லாம் சரியானால் வாழ்வு எப்படியிருக்கும் என கனவுகள் மின்ன, அவ்விரவு அழகானது போன்றொரு எண்ணம். மனைவியை கண்களுக்குள் நிரப்பி உறங்கிப்போனான் ரத்னதீபன்.