எண்பதுகளில் பண்ணையாராக இருந்த ஒருவர் பள்ளி கட்ட தானமாக கொடுத்த இடத்தை இப்போது அரசியல் பிரமுகர் ஒருவர் அபகரித்து அதில் இருந்த பள்ளியை இடித்துவிட்டு சொகுசு விடுதி கட்ட ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். தர்மத்திற்காக கொடுத்த நிலத்தில் வணிக நோக்கத்துடன் கட்டப்படும் விடுதியை அனுமதிக்கமாட்டோம் என நிலம் கொடுத்தவரின் வாரிசுகள் எதிர்க்கின்றனர். நகரத்திற்கு வெளியே பஞ்சாயத்து போர்டின் கீழ் வரும் அந்த பகுதியின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பண்ணையாரின் குடும்பம் பேச, எதற்கும் சரியான நடவடிக்கை இல்லை. பொறுத்துப்பார்த்தவர்கள் சட்டமன்ற உறுப்பினரிடன் முறையிடலாம் என ரத்னதீபன் அலுவலகம் வந்துவிட்டனர். தங்கள் பக்க நேர்மையை அநேகம் பேரிடம் எடுத்துச் செல்லவேண்டும் என ஆட்கள் திரட்டி கும்பலாக வந்துவிட்டனர்.
“இங்க இவ்ளோ பேர் நிக்குறோம். கண்டுக்காம உள்ள போறாரு, அப்போ இவரும் கூட்டா?” என்ற பேச்சு எழ, அமைதி காக்குமாறு அங்கிருந்த ரத்னதீபன் ஆட்கள் சத்தம் போட, உள்ளிருந்து வந்த உதவியாளன் கூட்டத்திலிருந்து இருவர் மட்டும் எம்.எல்.ஏவை சந்தித்து உங்கள் கோரிக்கையை வைக்கலாம் என்றான்.
“ரெண்டு பேர்னா சமாளிச்சு அனுப்பிடலாம்னு பாக்குறீங்களா? பொட்டி வாங்கிட்டீங்களா?” என கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
ரத்னதீபனே எழுந்து வந்தவன், “பொறுமையா ரெண்டு பேர் மட்டும் இருக்குற பிரச்சனையை தெளிவா தொகுத்துச் சொன்னா கேட்டுக்க ஈஸியா இருக்கும். இப்படி கூட்டமா ஆளுக்கு ஒன்னு சொன்னா சலசலப்புல சரியா கேட்டுக்க முடியாது. சரி பண்ணனும்னு நினைச்சா ரெண்டு பேர் மட்டும் வாங்க.” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட, பண்ணையாரின் வாரிசுகள் மட்டும் உள்ளே சென்றனர்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவன் மேசையின் மறுபுறம் இருவரையும் அமரச் சொல்லி என்ன பிரச்சனை என விசாரித்தான்.
“எங்களோட தாத்தா ஸ்கூல் கட்டணும்னு அப்போ எம்.எல்.ஏவா இருந்தவர்கிட்ட தானமா நிலம் கொடுத்தாரு. அரசுடைமையாக்காம அரசு உதவிபெறும் ஸ்கூல் அங்க இயங்குச்சு. பழைய எம்.எல்.ஏ குடும்பம் தான் அதை நிர்வகிச்சாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி ஸ்கூல்ல அட்மிஷன் குறைஞ்சிடுச்சுனு சொல்லி மூடிட்டாங்க. இப்போ பாத்தா அதை இடிச்சிட்டு ஹோட்டல் கட்டுறாங்க. தானம் கொடுத்து பதியும் போதே இந்த இடம் ஸ்கூலுக்கு மட்டுமே பயன்படனும் இல்லைனா இதை ரத்து செய்யுறதுக்கு எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குனு என் தாத்தா ரெஜிஸ்டர் பண்ணி இருக்காரு. அதை காமிச்சு கேட்டா செல்லாது, இடம் எங்க பேர்ல இருக்குனு சொல்றாங்க.” என விஷயத்தை சொன்னவர்கள் அந்த அரசியல் பிரமுகர் பெயரைச் சொல்ல, இவன் புருவம் சுருங்கியது. அங்கிருந்த உதவியாளனை அழைத்து அந்த ஆள் பற்றி விசாரிக்க சொன்னவன், அவர்களிடம் இருக்கும் பத்திரத்தின் நகலை பெற்றுக்கொண்டு,
“கோர்ட்ல கேஸ் போடலாமே?”
“ரெண்டு வருஷமா கேஸ் போய்ட்டு இருக்கு சார். எந்த முன்னேற்றமும் இல்லை. கட்டடம் கட்ட ஸ்டே ஆடர் கேட்டதுக்கான தீர்ப்பு அந்த ஹோட்டல் கட்டி முடிச்சதுக்கு அப்புறம்தான் வரும் போல சார்.” என வருத்தமாக பகிர்ந்துகொண்டனர்.
மேலும் சில தகவல்களை பெற்றுக்கொண்டு நம்பிக்கையாக சொல்லி அனுப்பி வைத்தான்.
“உங்க வார்த்தையை நம்பிதான் சார் கிளம்புறோம். இதுக்கு ஒரு தீர்வு கண்டுபுடிச்சி கொடுக்குறது மட்டுமில்லாம எங்க தாத்தா ஆசைப்படி அங்க ஸ்கூல் கட்ட நீங்கதான் ஏற்பாடு பண்ணனும்.” எனும் கோரிக்கையும் வைத்துவிட்டு கிளம்பினார்.
“இருக்குற பிரச்சனை போதாதுன்னு சொத்து பஞ்சாயத்து எல்லாம் நம்மகிட்ட வருது.” என்றபடியே அன்றைக்கு பார்க்க வேண்டிய பைல்களை புரட்டினான் ரத்னதீபன்.
சிலமணி நேரங்கள் கழித்து மண்டபத்திலிருந்து அலுவலகம் வந்த பிரபு அன்று நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டு ரத்னதீபனை பார்க்க வந்தான். கையோடு விசாரிக்க சொல்லிய இடத்தில் தகவல் பெற்றுக்கொண்டான்.
“நீங்க விசாரிக்க சொன்ன அந்த அரசியல் பிரமுகர் நம்ம கட்சிதானாம். ஆனா ஆக்டிவா கட்சிப் பணியில இல்லைனு பேசிக்குறாங்க. மெம்பெர் கார்ட் மட்டும் போட்டு வச்சிருக்காராம்.”
“ஓ… இதுல வேற எதுவும் வில்லங்கம் இருக்கான்னு நல்லா விசாரிக்க சொல்லு. நல்லது பண்றோம்னு தலை கொடுத்து நம்மளை உருட்டிடப் போறாங்க.” தன் அதிகாரத்திற்கான பாதுகாப்பையும் கணக்கில் கொள்ளும்படி சொல்ல, “இதெல்லாம் நீங்க சொல்லனுமா?” என பிரபு அலட்சியம் காட்ட, பதிலுக்கு,
“சொல்லலைனா அந்த மேடம்கிட்ட உளறுன மாதிரி வேற யார்கிட்டேயும் கோட்டையை விட்டா என்ன செய்றது?” என்ற கடினமான ரத்னதீபனின் வார்த்தைகளில் இவன் முகம் சுருங்கி மீண்டது. கவனித்துவிட்டவன்,
“வீட்டுக்கு கிளம்பு நாளைக்கு பாத்துக்கலாம்.”
“இப்போவேவா? இன்னைக்கு பெருசா எந்த வேலையும் பாக்கலையே?”
“ஜங்க்ஷன்லேந்து பஸ்ஸ்டாப் வரை ரோடு போடுறதுக்கு ஃபண்ட் அலோகேட் பண்ண சொல்லி பைல் வந்திருக்கு. அதை மட்டும் பாத்துட்டு கிளம்பு.” என ஒரு கோப்பை அவன் புறம் லேசாக தூக்கிப்போட, அங்கேயே அமர்ந்து அதை பிரித்துப்பார்த்தவன்,
“அமைச்சருக்கு பத்து பெர்ஸன்ட், கான்ட்ராக்டருக்கு பத்து பர்ஸன்ட், டிபார்ட்மென்ட் ஆஃப்ரூவலுக்கு கொடுக்க வேண்டியது, ஆளுங்க கூலி, மெட்டீரியல்ஸ் காஸ்ட்டுனு பட்ஜெட் பெருசுதான்…” என சொல்லிக்கொண்டே வந்தவன் சட்டென நிமிர்ந்து, “இதுல நமக்கு எவ்ளோ கமிஷன்?” என்று கேட்க முறைத்துப் பார்த்தான் ரத்னதீபன்.
“நேர்மையா இருந்து சிலைக்கு ஆடர் கொடுக்கப் போறீங்களா என்ன?” நக்கலாக கேட்டவனை எட்டி தலையில் தட்டியவன், “நாம வேணாம்னா மதிக்க மாட்டானுங்க. அஞ்சு பர்சென்ட் மட்டும் நம்ம கணக்குல எழுது. ரெண்டரையை நம்ம பிரிச்சிக்கலாம் மிச்சத்தை தொகுதி நிதிக்கு, இந்த ஆபீஸ் மெயின்டைன் பண்றதுக்கு யூஸ் பண்ணிக்கலாம். பெருசா முடியலைனாலும் முடிஞ்சதை மக்களுக்கு செஞ்சுக் கொடுப்போம்டா.” அவனுக்கு ஏற்றவாறு நியாயம் கற்பித்துக்கொண்டு பிரபுவிற்கும் அதை சொல்லிக்கொடுத்தான்.
சரிதான் என சொல்லிக்கொண்டு பிரபு கிளம்ப, இருட்டும் வரை அங்கிருந்து மக்களை சந்தித்து வேலைகள் எல்லாம் முடித்துக்கொண்டு வீடு திரும்பினான். தானே கதவை திறந்து பூட்டிக்கொண்டு வந்தவன் வீட்டை சுற்றிப்பார்க்க, வாடகைக்கு வீடு எடுத்த போது எப்படி இருந்ததோ அப்படியே இன்னும் இருந்தது. இன்னும் எதுவும் பிரித்து அடுக்கப்படவில்லை. அடுக்க நேரமில்லை, விருப்பமுமில்லை. மின்னணு சாதனங்கள் மட்டும் அதன் இடத்தில் வைத்து உபயோகப்படுத்தும் படி இருந்தது. அவன் ஒன்று நினைத்து இத்தனை பெரிய வீட்டினை பிடித்திருக்க, யாரையும் அங்கு பிடித்துவைக்கமுடியவில்லை என்ற எண்ணம் கசந்தது.
‘இவளும் என்ன பேச்சு பேசுறா?’ மனைவியை மனதிற்குள் வைதவன், வெகு தயக்கத்திற்கு பின் மச்சினனுக்கு அழைத்தான். அவனை விட்டால் இப்போது வேறு யாராலும் இதனை கையாள முடியாது என்றே தோன்றியது. அதுவும் செண்பகாவின் அண்ணனாக மட்டுமே மாறிவிட்ட வளவன் இனி உதவுவான் என்ற நம்பிக்கை இல்லாததால் விமலுக்கு அழைப்பு சென்றது.
“என்ன மச்சான் இந்த நேரம்?” காரியமில்லாமல் அழைப்பு வராது என்று புரிந்து வைத்திருந்த விமலுக்கு அப்போதே எதற்காக அழைத்திருப்பான் என்ற ஆவல் அதிகரித்தது.
முதலில் பொதுவாக குடும்பத்தினர் பற்றி ரத்னதீபன் பேச, விமலுக்கு ஆர்வம் தீரவில்லை. வாய்விட்டு கேட்டால் சொல்லாமல் அழைப்பை துண்டித்தாலும் துண்டிப்பான். செய்பவன் தான் இவன் என தேமேவென அவன் வசிக்கும் பகுதியின் நலத்திட்டங்கள் பற்றி கேட்டதற்கு பதில் கூறினான் விமல்.
“நான் இருக்குற தொகுதி எம்.எல்.ஏ கூட இவ்ளோ ஆர்வம் காட்ட மாட்டாரு மச்சான்.” என முடியாமல் சொல்லியேவிட்டான் விமல்.
நெற்றியை தேய்த்துக்கொண்ட ரத்னதீபனுக்கு அத்தனை சங்கடம். தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தை தன்னால் சரிசெய்ய முடியாமல் இவனிடம் உதவி கேட்பது போல் ஆகிவிட்டதே தன் நிலைமை என லேசாக நொந்துகொண்டே, “அன்னைக்கு சொன்னீங்கல்ல வளவனுக்கு பொண்ணு இருக்குனு. அது யாரு?” என்று மெல்ல பேச்சை எடுத்தான்.
“எந்த பொண்ணு?” முதலில் புரியவில்லை.
“அதுதான் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு எங்களை பத்தி விசாரிச்சாங்கன்னு சொன்னீங்கள்ள அது யாரு?” என்று ரத்னதீபன் விஷயம் பகிர, விமலுக்கு ஐயோ என்றானது. அவன் சும்மா அடித்துவிட்ட கதையல்லவா அது, ‘இப்போ அந்த பொண்ணுக்கு எங்கே போவேன்?’ என மனதிற்குள் அலறியவன், “செண்பாவுக்கு அந்த மாப்பிள்ளை சரியா வருவனான்னு விசாரிக்க கேக்குறீங்களா மச்சான்?” இப்படி பேசினால் கடுப்பில் இந்த பேச்சை விட்டுவிடுவான் என்றெண்ணி வேண்டுமென்றே விமல் அப்படி பேச, அவன் எண்ணியது போலதான் நடந்தது.
வாய்விட்டு என் மனைவியை என்னிடம் தக்க வைத்துக்கொள்ள வழி தெரியவில்லை என்று சொல்ல முடியவில்லை. யோசனை கேட்கவும் கர்வம் தடுத்தது. சரி வேறு மாதிரி பேசலாம் என்றால் இது போன்ற பேச்சுக்கள் வருகிறதே என்று கடுப்பானவன், “இன்னைக்கு என்கிட்டேயே வந்து உங்க தங்கச்சியை பத்தி விசாரிச்சாரு. அதான் கேட்டேன் மச்சான். வேற ஒன்னுமில்லை.” என திருப்பிக் கொடுத்து விமலை மண்டை காயவிட்டான்.
“மச்சான்.” விமல் அதிர்ந்துபோய் விளிக்க,
“ஹான் சொல்லுங்க மச்சான். கேட்டுட்டு இருக்கேன்.” என்று வேறு ரத்னதீபன் இலகுவாக பேச,
இந்த மனுஷனுக்கு இருக்குற ஈகோக்கும் குசும்புக்கும்… ம்க்கும்… பேச்சை அப்படியே தன்பக்கம் திருப்பிவிட்ட கடுப்பில் முணுமுணுத்தவன், “உங்க மருமகன் அழறான் என்னனு போய் பாக்கலைனா உங்க தங்கச்சி மேக்கப் போடாத காளியா மாறிடுவா. நான் அப்புறம் கூப்பிடுறேன்.” உன்னைத்தான் எதுவும் சொல்லமுடியவில்லை உன் தங்கையை சொல்லலாமே என்ற குசும்பில் இவனும் ரத்னதீபனை உரசிவிட்டு வைத்தான்.
இது தேறாது என நெற்றியில் அடித்துக்கொண்டு ரத்னதீபன் வேறு வழியின்றி தனக்குத்தானே துணை என்று கூடத்திலேயே அமர்ந்துவிட்டான். மனம் மனைவியை எண்ணி தவிக்க, அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை சென்றது.
இவனிடமிருந்து தப்பித்த விமல் உடனே வளவனை அழைத்துவிட்டான், “உங்க மச்சானுக்கு இவ்ளோ ஆகாது வளா.” எனப் புலம்ப,
“என்னாச்சு?”
“இன்னைக்கு என்னவோ பொண்டாட்டி நியாபகம் வந்துடுச்சு மனுஷனுக்கு. போனை போட்டு பொண்டாட்டிக்கு பாத்த மாப்பிள்ளை யாருனு சுத்தி வளைச்சு கேக்குறாரு. அவன் யாருனு நான் என்ன கண்டேன்? நல்லது நடக்கும்னு சும்மா அடிச்சிவிட்டேன். அன்னைக்கு விட்டுட்டு இப்போ வந்து கேக்குறாரு.” என விமல் புலம்பிய தொனி வளவனுக்கு சிரிப்பை வரவைத்தது.
“ஏற்கனவே எல்லாம் ஆச்சு ஆச்சு. நானே போன் போட்டு கோர்த்து பிரிஞ்சாச்சு. ஒன்னும் தேறல.” என்றவன் ரத்னதீபன் செண்பாவின் பணி மாறுதலுக்கு முயன்றது, பின் அதனை மறந்து அவன் கிடப்பில் விட்டது, அதனை கொண்டு தான் அழைத்துப் பேசியது, அதற்கு பிடிகொடுக்காமல் அவன் தன்னிலையிலிருந்தே பேசியது என எல்லாம் சொன்னான்.
“ஓ இவ்ளோ நடந்திருக்கா? நான்கூட எப்படிடா மச்சானுக்கு இவ்ளோ பக்கத்துல செண்பாவுக்கு ட்ரான்ஸ்பெர் வந்திருக்குனு பாத்தேன். மனுஷன் ஓப்பனிங் எல்லாம் நல்லா பண்றாரு ஆனா பினிஷிங் சரியில்லை.” என்றதில் மீண்டும் வளவனுக்கு சிரிப்பு வந்தது.
“இன்னைக்கு என்ன ஓவர் சிரிப்ஸ் சத்தம் கேக்குது. எப்போதும் என் அன்புத் தங்கச்சி வாழ்க்கைனு சோக கீதம் வாசிப்பீங்க?”
“உங்களுக்கு எல்லாமே விளையாட்டு.” என்றவன், “என்னோட சித்தப்பா உண்மையிலேயே செண்பாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காரு. அதைக்கேட்டு செண்பா பயங்கர ஷாக்ல இருக்கா. சித்தப்பா இப்படி பண்ணுவாருனு நாங்களே எதிர்பாக்கல. சேர்த்து வை இல்லை பிரிச்சிவிடுனு சொல்லிட்டு இருப்பாரு. இப்போ என்னன்னா அவராவே மாப்பிள்ளை இருக்கானு விசாரிச்சிருக்கார், அவர் தலையிட்டாவது ஏதாவது நல்லது நடக்கும்னு நினைச்சி எங்ககிட்ட கூட சொல்லல.”
“அடி சக்கை. அதான் பதறிப்போய் அரசியல்வாதி எனக்கு போன் அடிச்சிருக்காரு.” என்ற விமலுக்கு இப்போது முழுதாய் விவரம் பிடிபட,
“அவர்கிட்ட யாரோ விசாரிச்சிருக்காங்க, நான் வேற பிட்டு போட்டு வச்சிருக்கவும் பதறிட்டாரு போல மனுஷன். ஆனாலும் கெத்தை விட்டு வெளில வரமாட்டேங்குறாரு.” என்றான் சரியாய் கணித்து.
“நாங்க பெற்ற இன்பம் நீங்களும் பெற வேணாமா? அதெல்லாம் முடியாது நானே ஒரு பொண்ணை பாக்குறேன் அடுத்த முகூர்த்தத்துல உங்களை மாப்பிள்ளை ஆக்குறேன். என்னோட அடுத்த டார்கெட் இதுதான்.”
“ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி?”
“அதெல்லாம் முடியாது… எம்.எல்.ஏ மச்சான் தலைமையில கல்யாணம் பண்றோம். அலப்பறை கூட்டுறோம்.” என இலகுவாக இவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
இரண்டு நாள் சென்றிருக்கும் செண்பகா தன் தமையனுக்கு அழைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.
வேலையின் நடுவே இருந்தவனை இவள் அழைப்பு தொந்தரவு செய்ய, “என்ன பாப்பா வேணும் இப்போ?” என கொஞ்சம் எரிச்சலுடன் பேசிவிட்டான். உடனே அவள் குரல் உள்ளே சென்றுவிட, தணிந்தவன்,
“எனக்கு இன்னொரு கல்யாணம் எல்லாம் வேணாம்னா. நீதான் வீட்ல பேசணும்.” என ஒருவாறு தயங்கி ஆரம்பிக்க, இவனுக்கு முதலில் புரியவில்லை.
“நம்ம வீட்ல யாரும் பாக்கல பாப்பா. சித்தப்பா அவரா ஏதோ செஞ்சிட்டு இருக்காரு.”
“ஆனா அப்பா அம்மாக்கு அவர் பேச்சை கேக்கணுங்குற எண்ணம் வந்துடுச்சு. அம்மா பேசுறதை பாத்தாலே தெரியுது.” என்றவள் குரல் உள்ளே சென்றுவிட்டது. இருநாட்களாக பெற்றவர்களிடம் பலவாறு பேசி அவர்களின் தற்போதைய மனநிலையை தெரிந்துகொண்ட பின் அமைதியாக இருக்கமுடியவில்லை அவளால்.
“இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காச்சு ஒருநாள் இது இப்படித்தான் ஆகும்னு உனக்குத் தெரியாதா?” என தங்கையையே திருப்பிக் கேட்க,
“எனக்கு எப்படியும் ஆக வேண்டாம். உங்களுக்கெல்லாம் என்ன இப்போ? நான் அங்க போகணும் அதானே. போறேன். ஆனா நானா போ மாட்டேன்.” கோபம் போல் அவள் தன் எண்ணத்தை வெளிப்படுத்த,
“பாப்பா?”
“நானா போனா அந்த மனுஷனுக்கு இன்னும் ஏறிப்போயிடும்.” என்றும் சொல்ல,
“நிஜமாதான் சொல்றியா? உனக்கு மாப்பிள்ளையோட இருக்க சம்மதமா?” நம்பிக்கையின்றி உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டான் வளவன்.
“அதுதானே சொன்னேன்?” அண்ணனையே அவள் திருப்பிக் கேட்க, “நீயும் அந்த மனுஷனுக்கு சளைச்சவ இல்லை. சுத்தல்ல விடுறீங்கல்ல ரெண்டு பேரும்.” என்றுவிட்டான் அண்ணன்காரன்.
“…”
“உடனே ஆஃப் ஆகாத. நல்லா யோசிச்சிக்கோ. இன்னும் அந்த மந்த்ரா பொண்ணு பழக்கம் இருக்குற மாதிரி இருக்கு.” என்று சொல்ல, கோவத்தில் வார்த்தைக்கு வார்த்தை அவளை உரிமையாய் அவன் சாடியதும், நெருக்கியதும், தனக்கு இன்னொரு திருமணம் என்பதை சகிக்க முடியாமல் அவன் காட்டிய பாவமும் வந்து போனது. பெண் மனது எதிர்பார்ப்பது தன்னவனின் சிறு கவனிப்பும் தனக்காக அவன் உருகும் நேரங்கள் தானே. அது நிறைவேறியது போன்றொரு எண்ணம் அவளுக்கு.
“பாப்பா…”
“அது தனிகணக்கு. நான் பாத்துக்குறேன்.”
“உனக்கு ஓகேவா?”
“சும்மா சும்மா அதையே கேக்காத. இருந்தா அவர்கூடதான் இல்லைனா யார்கூடவும் இல்லை போதுமா?” என்று வார்த்தைகளில் அவள் முடிவை அழுத்தமாய் பதிவு செய்துவிட, அதற்கு மேல் கேட்கவும் வேண்டுமா.
அடுத்த மாத துவக்கத்தில் வரலட்சுமி பூஜை என விமலை விட்டு ரத்னதீபன் வீட்டினில் பூஜைக்கு ஏற்பாடு செய்து, அவர்களாகவே செண்பகாவை கூப்பிடும்படி வைத்து அவளை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டான் வளவன்.