அழுகையுடன் சென்ற மனைவியின் பின் செல்லத்துடித்த கால்களை அவளை நோக்கி நகர்த்தவும்தான் குடும்பத்தினர் தங்களையே பார்த்து நின்றது புரிந்தது. அவர்கள் முன்னிலையிலா சண்டையிட்டோம் என சங்கடப்பட்டு அவன் நெற்றியைத் தேய்த்து, தொண்டை செருமி நிற்க, வேகமாக உள்ளே வந்தான் பிரபு.
பிரபுவின் பார்வையோ ரத்னதீபனிடம் இருந்தது. அதில் கூர்மையானவன், “என்னாச்சுடா?”
“பங்ஷன் முடிஞ்சிடுச்சுன்னா அடுத்த வேலை பாக்கலாமே அதான் கேட்டேன்.” என்றான் பிரபு அங்குள்ள நிலவரத்தை கணித்தபடியே. அவன் எதற்கோ தயங்குகிறான் என்று புரிந்துகொண்ட ரத்னதீபன் குரலுயர்த்த,
“பிரபு?”
“நம்ம தொகுதிக்கு கீழ இருக்குற ஒரு ஏரியால பையர் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. எதிர்க்கட்சியில இருக்குற முக்கியமான ஆளோட வீடு அந்த ஏரியாதான். அவருக்கு முன்னாடி நாம களத்துல இறங்கிட்டா நல்லாயிருக்கும்னு பாத்தேன்.” அரசியல் சதுரங்கத்தில் இவர்கள் முந்திக்கொள்ள வேண்டுமென்பதை அவன் முன் வைக்க, எந்தப் பகுதி என கேட்டுக்கொண்டான் ரத்னதீபன்.
அந்தப் பகுதியில் வசிக்கும் எதிர்கட்சி ஆளுக்குதான் அங்கு செல்வாக்கு அதிகம். இவர்கள் கட்சி மேலிடமே அந்தப் பகுதியை இவர்கள் கோட்டையாக மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என பார்த்துக்கொள்ள சொல்லி இவனிடம்தான் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்.
“காலை நேரங்குறதால அந்த பில்டிங்ல நிறைய பேர் இன்னும் தூக்கத்துல இருக்க வாய்ப்பிருக்குனு நியூஸ் வருது. பெரிய பிரச்சனையாகும் அண்ணே.” தாங்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தை பிரபு முன்வைக்க, தவிப்புடன் மனைவி சென்ற அறையை பார்த்துவிட்டு குடும்பத்தினரை பார்த்தவன்,
“போய்ட்டு வந்துர்றேன். செண்பாவை பாத்துக்கோங்க.” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேற, அவனை பின்தொடர்ந்தான் பிரபு.
என்ன சொல்வது செய்வது என்று புரியாது குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பார்க்க,
“செண்பாவை கூட்டிட்டு கிளம்பலாம் அப்பா.” என்றான் வளவன் தன் தந்தையிடம்.
“எதுக்கு இப்போ செண்பாவை கூட்டிட்டு போகணும்? நீங்க இருந்து சாப்பிட்டு கிளம்பலாம்.” விமல் பிரச்சனையாகக் கூடாது என முன்வந்தான்.
“செண்பா வேலைக்கு போகணும். நேரமே போயிட்டா நாங்களும் கடை திறந்துடுவோம்.” மனம் முழுக்க ஏமாற்றமும் அதிருப்தியும் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினான் வளவன்.
“இன்னும் ஒழுங்கா விடியக்கூட இல்லை அதுக்குள்ள ஏன்?” என்ற விமல் மாமனாரைப் பார்த்தான். அவர் பேசி இருக்கும் இறுக்கத்தை குறைத்துவிட மாட்டாரா என்று நினைக்க, அவரோ,
“கண் மூடி கண் திறந்தா ரத்தினத்துக்கு வேலைதான். சின்ன வயசுலேந்தே எல்லாருக்கும் உதவணும்னு ஆர்வமா இருப்பான். நான் அரசியல்ல இருந்ததை பாத்துட்டு என்னோடவே வந்துட்டான். நம்மள நம்பி இருக்குற நாலு மனுஷ மக்களுக்கு ஒன்னுன்னா நாம போய் நிக்கணும்ல.” என மகன் சென்றதற்கு காரணம் சொன்னார். என்னவோ அங்கிருந்து அவன் கிளம்பிச் சென்றதுதான் பிரச்சனை என்பது போல்.
‘யோவ் மாமனாரே இங்க உன் புள்ளை வாழ்க்கை ஊசலாடிட்டு இருக்கு அதை காப்பாத்தணும்னு இல்லாம கதை அளந்துட்டு இருக்க. நம்பி வந்த பொண்ணை விட்டுட்டு மக்கள் முக்கியம்னு போறாராம் இவர் பையன். விளங்கிடும்.’ மனதிற்குள் அலறிய விமல் உதவிக்காக இம்முறை மாமியாரைப் பார்க்க, அவரோ பாவமாய் மருமகள் இருக்கும் அறையை பார்த்துக்கொண்டிருந்தார்.
‘சுத்தம். எனக்கு வாய்ச்ச மச்சான் அவராவே அவர் தலையில மண் அள்ளி போட்டுக்கிட்டது பத்தாதுன்னு இவங்களும் இவங்க பங்குக்கு மண்ணை அள்ள வசதியா அதையெல்லாம் குமிச்சிட்டு இருக்காங்க.’ நொந்துபோன அவ்வீட்டு மாப்பிள்ளை, வளவனைப் பார்க்க அவன் முகம் இறுகிப் போயிருந்தது.
“வளா டென்சன் ஆகாதீங்க. மச்சான் வந்ததும் பேசி சரி பண்ணிக்கலாம்.” வரப்போகும் விபரீதத்தை முடிந்த மட்டும் குறைக்கும் எண்ணத்தில் விமல் மட்டும் சமாதான படலத்தில் இறங்கினான்.
“அவர் வர்றப்போ வரட்டும் விமல். எங்களுக்கும் வேலை இருக்குல்ல.” என்ற வளவன், “செண்பா.” என தங்கையை சத்தமாக அழைக்க, அழுதழுது கண்கள் சிவக்க முகம் உப்ப வந்து நின்றாள் செண்பகா.
“வேலைக்கு போணும்ல. வா உன்னை ரூம்ல விட்டுட்டு நாங்க கிளம்புறோம்.” என்று கூப்பிட உடனே வந்து அவனருகில் நின்றுகொண்டாள் செண்பகா.
“செண்பா இங்கிருந்தே வேலைக்கு போகட்டும் வளவா.” என அபிராமி முன்வர,
“இருக்கட்டும் அத்தை. அவளோட திங்ஸ் எல்லாம் அங்கதான் இருக்கு. நான் அங்கேயே விட்டுட்டு போறேன். இங்கிருந்து வேலைக்கு போறதும் போகாததும் இனி எல்லாம் செண்பா விருப்பம்தான்.” அழுத்தமாக சொன்ன வளவன் தன் பெற்றவர்களைப் பார்க்க அவர்கள் எழுந்துகொண்டனர்.
மகள் அழுத அழுகை அவர்களை புரட்டிபோட்டுவிட்டது. இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால் இந்த குடும்பத்தில் சம்மந்தமே வைத்திருக்க மாட்டோமே என நொந்துகொண்டே வாசல் நோக்கி நடக்க, அபிராமி தன் கணவரை உசுப்பினார்.
“நீங்க ஒருவார்த்தை மருமகளை விட்டுட்டு போக சொல்லுங்க.”
“நான் என்னத்தை சொல்றது? அவங்க பொண்ணு அங்கேயே இருக்கட்டும்னு நினைக்குறாங்க. நீ நினைக்குறபடியா அவங்க நடக்க முடியும்?” என்றார் மருது.
“அப்போ உங்க பையன் இங்க தனியாவே கிடக்கட்டும்னு நீங்க நினைக்குறீங்களா? அதுதான் அதுக்கு ஏத்த மாதிரி நடக்குறீங்களா?” என கேட்டுவிட்டான் விமல்.
“ஏங்க எதுக்கு அப்பாவை பேசுறீங்க?” என்று வந்தாள் திவ்யா.
“இந்த வீட்டு பொண்ணுதான நீ? உரிமையா அம்மா வீட்ல விசேஷம்னா முன்ன நிக்க ஓடி வந்துர்ற, இது வேணும் அது வேணும்னு கேட்டு வாங்கிக்குற, என் அண்ணன் எம்.எல்.ஏன்னு ஊர் முழுக்க பெருமைப்பட்டுக்குற. அப்போ அதே உரிமையில உன் அண்ணனுக்காக அண்ணிக்காக நீ பேசியிருக்கணும். அதைவிட்டு வேடிக்கை பாத்துட்டு நிக்குற.” மனைவியையும் தாக்கினான் விமல். அவள் முகம் சுருங்கிவிட்டது.
“விடுங்க விமல். இந்த பிரச்சனை நாம பேசி சரிபண்றது கிடையாது. மாப்பிள்ளை வரணும். அவருக்கா தோணனும். எப்போ தோணுதோ அவர் வரட்டும்னு விட்டு விட்டு இன்னைக்கு வரைக்கும் என் தங்கச்சி அழுதுட்டு இருக்கா. இனி நாம பேசினாலும் கடைசியில என் தங்கச்சியைதான் இறங்கி போக சொல்ற மாதிரி ஆகிடும். அதுல எனக்கு விருப்பம் இல்லை. காயப்பட்டிருக்கிறது அவ, காயப்படுத்துனது அவர். அவங்களுக்குள்ள எப்போ எல்லாம் தீருதோ அப்போ பாத்துக்கலாம். அதுவரைக்கும் செண்பாவை தொல்லை பண்ணாதீங்க.” என்று பேசியவன் தங்கை தோளில் கையிட்டு அழைத்துச் சென்றுவிட்டான்.
“கிளம்புவோம் வா.” என்று விமல் அடுத்து மனைவியைப் பார்த்து நிற்க,
“அதுக்குள்ளவா?” எனப் பார்த்தாள் திவ்யா.
“பால் காய்ச்சியாச்சு. பொங்கலோ பொங்கல்னு பாலும் செண்பாவும் நல்லா பொங்கிடுச்சு. இனி நமக்கு என்ன வேலை. நம்ம பொழைப்பை பாப்போம் வா.” என மகனை தூக்கிக்கொள்ள, பெற்றவர்களை பார்த்தாள் திவ்யா.
“பால் காய்ச்சின உடனே எப்படி பூட்டிட்டு வர்றது? நீங்க கார்ல போங்க. நாங்க அப்புறம் வரோம்.” என்று அபிராமி சொல்ல,
“நானும் இங்க சில கட்சி ஆளுங்களை பார்க்க வேண்டியிருக்கு. பாத்துட்டு ரத்தினத்துக்கிட்ட சொல்லிட்டு வரோம்.” என்றுவிட்டார் மருதுவும்.
பரந்தூரிலிருந்து வந்த காரிலேயே விமல் குடும்பத்துடன் கிளம்பிவிட, வருத்தமாய் நின்றார் அபிராமி.
“பால் காய்ச்சின கையோட அப்படி ஒப்பாரி வைக்குது மருமவ. இப்போ நீயும் மூஞ்சை தூக்குனா வீடு விளங்குமா?” மருது ஒருமாதிரி பேச,
“ரத்தினம் மட்டும் அப்படி பால் காய்ச்சிறோம்னு அந்த பொண்ணுகிட்ட சொல்லி வர சொல்லி இருக்கலாமா? செண்பாவுக்கு புடிக்கலைனு தெரியுதுல அந்த பழக்கத்தை விட வேண்டியதுதானே…” என்றார் அபிராமி.
“ஆம்பளைங்க செய்யுற காரியத்துல ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உங்களுக்கு எங்க புரியப்போகுது.”
“ரத்தினத்து மேல வச்ச பாசத்துலதான் செண்பா அப்படி பேசுறா. அது புரியலையா உங்களுக்கு? மனசுல எவ்ளோ வலி இருந்தா அப்படி அழுவா. ஆம்பளைங்களுக்கு எங்க மனசு புரியறது இல்லை.” என்று அபிராமியும் இன்று மல்லுக்கு நின்றார்.
“நம்ம எல்லாம் இருக்கோங்குற பயமே இல்லாம ரத்தினத்துக்கிட்ட அப்படி ஆங்காரமா பேசுது. அவன் பேச வர்றதை காதுல வாங்குற எண்ணமே இல்லை. அதுக்கு நீ வக்காலத்து. நீ இப்படி இருந்தா மருமவ வேற எப்படி இருக்கும். நம்ம வீடு இப்படிதான்னு அதுக்கு புரிய வச்சிருக்கணும். வந்ததுலேந்து அது இஷ்டத்துக்கு ஆட விட்டுதான் இன்னைக்கு நடுக்கூடத்துல நின்னு ரத்தினத்தை அப்படி பேசுது.” என்ற மருதுவும் பொடுபொடுவென முகம் காண்பித்து வெளியே சென்றுவிட்டார்.
தேமே என பாவமாய் தனித்து விடப்பட்டார் அபிராமி. பெருமூச்சுடன் தனக்கு மட்டும் பெயருக்கு ஏதோ செய்து சிற்றுண்டி உண்டார்.
வணிக வளாகங்கள் கடந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சாலையின் திருப்பத்தில் இருந்தது அந்த இடம். தீயின் பசிக்கு இரையாகிக் கொண்டிருந்த அந்த இடத்தில் கீழேயும் மேலேயும் வரிசையாக அறைகள் கட்டப்பட்டு தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்திருக்கிறது. இவன் சென்ற நேரம் ஆங்காங்கே பதறியபடி நின்று மக்கள் ஏதோ பேசிக்கொண்டும் தண்ணீர் ஊற்றிக்கொண்டும் இருக்க, இவனைக் கண்டுகொண்ட சிலர்,
“நூத்தி ஒன்னுக்கு போன் பண்ணி அரைமணி நேரம் ஆச்சு. இன்னும் யாரும் வரல. தீ வேகமா பரவிட்டு இருக்கு. உள்ள இருக்குற எல்லாரும் செத்தாதான் வேலை செய்வீங்களா சார்.” என எகிறிக்கொண்டு வர, அவர்களை சமாதானப்படுத்தி மீட்பு வேலைகளை துரிதப்படுத்தினான்.
சில நிமிடங்களிலேயே அப்பகுதி அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. தீயணைப்பு வீரர்கள் தங்கள் வேலையை செவ்வன செய்ய, கரும்புகை சூழ்ந்த அப்பகுதி பரபரப்பாகியது. அத்தெருவின் போக்குவரத்தை வேறு பக்கம் திருப்பிவிட முடியாதபடி சாலை ஒற்றை வழியாக ஒரு வீட்டோடு முடிந்துவிட, புகையின் தீவிரத்தால் தெருவினுள் வசிப்பவர்களை வெளியேற்றுவது கடினமாக இருந்தது. முக்கியமாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை இந்த புகை மண்டலம் பாதிக்க அவர்களை முதலில் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தான் ரத்னதீபன்.
மருத்துவ உதவி ஊர்தியும் காவல்துறை வாகனங்களின் சத்தமும் அப்பகுதிக்கு சுப்பிரபாதமாகின. என்ன ஆகிற்று என்று பிரச்சனையை பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கண்டு தடுப்புகள் வைத்தனர் காவல்துறையினர்.
“அண்ணே உள்ள ஒரு பாடி கிடைச்சிருக்கு. புல்லா கருகி போச்சாம்.” என்று பிரபு வந்து ரத்னதீபன் காதில் கிசுகிசுக்க, மாஸ்க் போட்டிருந்த ரத்னதீபன் நிமிர்ந்து அந்த கட்டடத்தைப் பார்த்தான். எத்தனை பேர் உள்ளே சிக்கி இருக்கின்றனர், அவர்கள் யார் என்று எதுவும் இன்னும் தெரியவில்லை. இதில் முதல் இறப்பு கொஞ்சம் கசப்பாகத்தான் இருந்தது. மீட்புப்பணியை துரிதப்படுத்த சொன்னான். தீ கொஞ்சம் கட்டுக்குள் வர, ஒன்றிரண்டு பத்திரிக்கை செய்திகள் சார்பாக வந்துவிட்டனர்.
“இது அனுமதி இல்லாம இயங்குன விடுதின்னு சொல்றாங்க. இவ்ளோ வருஷம் இதை கண்டுக்காம எப்படி விட்டீங்க. அரசோட அலட்சியத்தால இழந்த உயிர்களுக்கு என்ன பதில்?” என்று அவர்கள் மைக்கை ரத்னதீபன் முன் நீட்டிவிட, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். அனைத்து விடுதிகளின் ஆவணங்களும் சரிபார்க்கப்படும். தீ கட்டுக்குள் வந்துவிட்டது என்று பேசி நகர்ந்தான்.
“இதுக்கு மேல இருந்தா நம்மளை கைமா பண்ணிடுவாங்க.” பிரபுவிடம் முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்த அதிகாரிகளிடம் உடனுக்குடன் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பினான்.
“காசை வாங்கிட்டு அப்ரூவல் குடுத்துடுறாங்க. அதுக்கு அப்புறம் இன்ஸ்பெக்ஷன் பண்றதே இல்லை. அது என்னைக்காச்சு இப்படி வந்து விடிஞ்சிடுது. இப்போவே எனக்கு போன் மேல போன். சீக்கிரம் ஆபீஸ் போடா அப்போதான் நிதானமா இவங்களுக்கு பதில் சொல்ல முடியும். பையர் சர்வீஸ் ஏன் லேட்டுன்னு அடுத்து நம்மளை தூக்கி பந்தாட கிளம்பிடுவானுங்க.” அலுவலகம் செல்லும் வழியில் பிரபுவிடம் சலித்துக்கொண்டான் ரத்னதீபன்.
“எங்கேயோ ஏதோ சின்ன தப்பு நடந்தாலும் அதுக்கு நாம பொறுப்பாகுற மாதிரி ஆகிடுது. எதை வைரல் பண்ணி பெருசாக்குறாங்க எதை விடுறாங்கன்னு ஒன்னும் புரியல.”
“வேறெதுவும் கிடைக்கலைனா குண்டூசி கீழ விழுந்தா கூட அரசியல்தான்டா. ஏன் நம்ம பண்ணாததா? என்ன அதிகாரத்துக்கு வந்ததும் இதுமாதிரி சில்லறைத்தனமா வைக்குற சில குற்றச்சாட்டு எல்லாம் கேட்டா கடுப்பாகுது. எதிர்கட்சிக்கு பதில் சொல்லலைனாலும் நம்ம மேலிடத்துக்கு பதில் சொல்லணுமே.”
பேசிக்கொண்டே அலுவலகம் வந்துவிட, அதன்பின் அந்த தீ விபத்து குறித்தும் வேறு சில தொகுதி பிரச்சனைகள் குறித்தும் வேலை சேர்ந்துகொண்டது. சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பார்த்தால் ஒன்று மாற்றி ஒன்றிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தவண்ணம் இருக்க, மாலை போல தீவிபத்து நடந்த இடத்திற்கு மீண்டும் சென்று பார்வையிட வேண்டிய கட்டாயம். தொடர்ந்து காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, விபத்துக்கான காரணத்தை ஆராயும்படி கட்டளையிட்டு அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு பெருமூச்சு விட,
“அண்ணே காலையிலேயே கேக்கணும்னு இருந்தேன். மேடம் வந்தாங்களா?” எனக் கேட்கவும் தாவிச் சென்று அவன் தலையில் தட்டியவன், “வாடா நல்லவனே… நீதான அட்ரஸ் சொன்னது? நல்லா பொங்கவிட்டுடடா என் வீட்டை…” என கடுப்புடன்தான் கூறினான் ரத்னதீபன்.
“அண்ணி கோச்சுக்கிட்டாங்களா?”
“பின்ன கொஞ்சுவாளா?”
“தூங்கிட்டு இருந்தவனை காலையிலேயே மேடம் போன் போட்டு எழுப்பி இன்னைக்கு என்ன பிளான்ஸ்னு கேட்டாங்க. நான் எதார்த்தமா சொன்னேன். அவங்களும் எதார்த்தமா விசாரிக்குற மாதிரி விசாரிக்கவும் அட்ரஸ் சொல்லிட்டேன். அப்புறம்தான் அவங்க வீட்டுக்கு வந்துடுவாங்களோனு பயந்து உங்களுக்கு போன் போட்டா நீங்க எடுக்கல.”
“இப்போல்லாம் உன் மேடம் அதிகம் என்னோட காலெண்டர் டேட்ஸ் பத்தி கேக்குறாங்கல்ல?” என யோசனையுடன் கேட்டான் ரத்னதீபன்.
“நேத்திக்கே கூப்பிட்டாங்க நான் எடுக்கல. காலையில ஜிம் போக எழுந்தேன்னு சொன்னாங்க. ஏற்கனவே வீடு பாக்குறோம்னு சொல்லியிருக்கேன் அண்ணே. அப்டியே பேச்சு வாக்குல இன்னைக்கு பங்ஷன்னு உளறிட்டேனோ என்னவோ…”
“அப்படியென்ன ஆர்வம்?”
“இப்போ எம்.எல்.ஏ ஆகிட்டிங்க. முன்னாடிய விட இப்போ காசிப் வந்தா பெருசா வளந்துடலாம்னு நினைக்குறாங்களோ? அடிக்கடி லஞ்ச்சுக்கு கேட்டாங்க நீங்க பிசின்னு சொன்னேன். இன்னைக்கு நேராவே வந்துட்டாங்க.” என்ற பிரபுவிடம் இனி கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தன் வீட்டில் இறங்கிக்கொண்டான்.
இருளில் மூழ்கியிருந்த வீட்டுக் கூடத்தில் சிறிய விளக்கை மட்டும் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார் அபிராமி. இவன் அழைப்பு மணி அழுத்தவும் உறக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்துவிட்டவர், “வீட்டு சாவி கையோட எடுத்துட்டு போயிடு ரத்தினம். நேரம்காலம் இல்லாம நீ வந்து போறதுக்கு அதுதான் சரியா இருக்கும்.” என்றவரிடம் இரவுணவு ஆகிவிட்டதா என்று கேட்டுக்கொண்டே அறைக்குச் செல்ல, படுக்கையறை வெறுமையாய் இருந்தது. விழிகள் கூர்மை பெற, அவள் சென்றுவிட்டாள் என்று அறிவு அறிவுறுத்தியதை ஏற்க மறுத்து வெளியே வந்தவன், “எங்க யாரையும் காணும்?”
விளக்கையெல்லாம் அணைத்துவிட்டு அலுவலக அறையாக அவன் சொன்ன அறைக்குள் மருதுவுடன் உறங்கச் சென்றவர் மகன் கேள்வியில் நின்று நிதானித்து, “எல்லாருக்கும் வேலை இருக்கும்ல ரத்தினம் அதுதான் கிளம்பிட்டாங்க.”
“இருந்துட்டு போக சொல்லியிருக்கலாம்ல.” என்றவனுக்கு மனைவியைப் பற்றி கேட்கத் தயக்கம். முன்பென்றால் கண்டுகொள்ளாது கேட்டிருப்பான் இன்று நடந்த நிகழ்வு அவனை சங்கடத்திற்குள் தள்ளியிருக்க, அதனை புரிந்துகொண்ட அன்னையாய்,
“சரி தப்புங்குறத தாண்டி நாம சங்கடப்பட்டு நிக்குற மாதிரி நடந்துக்குற எல்லாமே தார்மீகத்துக்கு எதிரானது ரத்தினம். தினம் எத்தனையோ பேரை பாக்குற நீ, நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை. கையில இப்போ போன் வந்துடுச்சு. நினைச்சதும் கூப்பிட்டு பேசிக்கலாம். அதுக்கு கூட கஷ்டம்னா நாம அந்த உறவுக்கு கொடுக்குற மதிப்பு அவ்வளவுதான்னு அர்த்தம். பாரு இப்போ என்கிட்ட கேட்க சங்கடப்பட்டு நிக்குற.”
காலையில் அத்தனை பெரிய சம்பவம் நடந்த பிறகு அவசர வேலை என்று சென்றிருந்தாலும் நேரம் கிடைக்கையில் மனைவிக்கு அழைத்து பேசியிருக்கலாம் என்று வலிக்காமல் கொட்டு வைத்த அபிராமி மகனை அழுத்தமாய் பார்த்துவிட்டு சென்றார். இன்று மருமகள் அப்படி அழுதது மனதை அழுத்தியது. இத்தனை நாள் அவள் வீம்புக்கு நிற்கிறாள் என்ற நினைப்புக்கு வலு குறைப்பது போல் அவளின் கோவமும் மனைவியாய் நியாயம்தானே என நினைக்க வைத்தது. இனி அவளை சேர்ந்து இருக்கும்படி தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணிக்கொண்டார். அதுவும் எத்தனை நாள் நிலைக்குமோ.
முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டவன் தளர்ந்துபோய் அறைக்குச் சென்றான். அவன் பொருட்கள் அடுக்கி வைக்கப்படாமல் அப்படியே ஒரு ஓரமாய் இருந்தது. வெறுமையான அறையை கட்டில் மெத்தை மட்டும் அலங்கரித்திருக்க இன்றைக்கு அதிகமாய் மனதை பிசையும் உணர்வு. மனைவி வந்துவிட்டாள், வரவைத்துக்கொண்டோம் என்ற கர்வத்தில் இருந்தவனுக்கு பெருத்த அடியாக வந்திறங்கி முதலுக்கே மோசம் செய்துவிட்டாள் மந்த்ரா.
மந்த்ரா – முதலில் எதார்த்தமாக தவறி விழப்போனவளை பிடித்து நிறுத்தி பத்திரம் சொல்லி நகர்ந்துவிட்டான். அவனைப் பொறுத்தவரையில் அதோடு முடிந்தது அந்த சந்திப்பு. ஆனால் மறுநாளே அது பெரிதாக பரப்பப்பட்டு இது முடியவில்லை என்றது சமூக வலைதளம். குடும்பத்தினர் போல் அவனும் முதலில் படபடப்பாய் உணர்ந்தான். முதல்முறையாய் பெண்ணோடு சேர்த்து வைத்து பேசப்பட்டதை தலைகுனிவாய் உணர்ந்தான். அதுவும் தெரிந்தவர்கள் எல்லாம் அழைத்து பெரிய கொம்பாக பிடித்துவிட்டாய் என்றெல்லாம் கேலி பேச, என்னவோ போலானது. அவர்களை சமாளித்து வீடு வந்து மனைவியை சமாளித்தவனுக்கு ஒருவாரம் மனம் சரியில்லாமல் இருந்தது. ஆனால் பத்து நாட்களில் தெளிந்துவிட்டான். காரணம் அவர்களின் மாவட்ட செயலாளர்.
மேலிடத்தை தன்னை நோக்கி திருப்ப வேண்டும். தன் பெயரைச் சொன்னாலே மரியாதையும் மதிப்பும் வரவேண்டும், அதற்கு அதிகார பலத்தை புசிக்க வேண்டும். தன்னை கீழாய் நினைத்து கீழே தள்ள முயன்றவர்களே தன்னை விட்டு இரண்டடி தள்ளி நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும் என்றெல்லாம் சூளுரைத்துக்கொண்டவன் வெறியுடன் ஓட ஆரம்பித்தான். அதில் புது மனைவி எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டாள்.
இவனை அலைக்கழிக்க வேண்டி மாவட்ட செயலாளர் கொடுத்த மனுவை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்னை பயணப்பட்டான் தலைமையை சந்திக்க. அங்கு தலைமையை சந்திக்கும் முன் மீண்டும் மந்த்ராவுடன் சந்திப்பு. அவளே வந்து பேசினாள்.
“என்ன பண்றீங்க நீங்க? உங்களை எதுக்கு என்னோட லிங்க் பண்றாங்க?” விவரம் தெரிந்துகொள்ள வேண்டி அவளே வந்து பேச, அறிமுகப்படலம் நடந்தது. அதில் படங்கள் சரியாக போகாததால் அவளுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் தன் பெயரைக் கெடுக்கவென வேண்டுமென்றே தன்னுடன் சேர்த்து ரத்னதீபனையும் இதில் இழுத்துவிட்ட கதையை சொன்னாள். கொஞ்சம் பழக்கப்பட்டவுடன் படவாய்ப்புக்காக தயாரிப்பாளர் உடன்படுக்கைக்கு அழைத்ததாகவும் தான் முடியாது என மறுத்து அறையை விட்டு வெளியே வந்தபோதுதான் உங்கள் மீது மோதிவிட்டேன் என்றாள்.
“இதை வச்சு நம்மள மட்டம் தட்டி உக்கார வைக்க ட்ரை பண்ணவங்க முன்னாடி மேல வந்து காட்டணும். அதுக்கு இந்த ரூட் சரியா இருக்கும்னு தோணுது.” என்று ரத்னதீபன்தான் அந்த யோசனையை சொன்னான். அவள் தயங்கினாள். பெரிதாக பின்புலம் இல்லாத நடுத்தர வர்க்கத்தினன் என்று யோசித்தவள் பின் தனக்கும் ஏதோவொரு வழியில் திரையின் கண்கள் தன்னை நோக்க வேண்டும். அதற்கு இது ஒரு வழியென்றால் முயன்று பாப்போம் என பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் சம்மதித்தாள்.
பிரபலமாவது என்று முடிவெடுத்துவிட்டால் எப்படி ஆனால் என்ன? அதுவும் நேர்மறை விஷயங்களை தாண்டி எதிர்மறை பிம்பங்களே முன்னிலை பெற, இவர்கள் இருவரின் புகைப்படங்களோடு சமூக வலைதளத்தை கண்காணித்து விளம்பரம் செய்யும் நிறுவனத்திடம் செல்ல முடிவெடுத்தனர். மந்த்ரா அவளுக்கு இருந்த தொடர்புகள் மூலம் இவர்களுக்குள் ஏதோ இருப்பது போல் அடிக்கடி பார்ட்டி செய்வது, ஊர் சுற்றவது போன்று செய்திகள் பரப்ப திரையுலகில் மந்த்ரா பெயர் அடிக்கடி அடிபட ஆரம்பித்தது. ரத்னதீபனும் அவன் பங்குக்கு அந்த பிரபலத்தில் குளிர் காய்ந்துகொண்டான். இருவரும் எதிர்பார்த்தது போல் அவளுக்கு பட வாய்ப்புகளும் இவனது பெயர் மேலிடத்திற்கும் சென்றது. ரத்னதீபனை அழைத்து யாரென்று விசாரித்தனர். கட்சிப்பணிகள் கொடுத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக முன்னணிக்கு வந்தான். படவாய்ப்புகள் அதிகம் வந்ததால் ரத்னதீபன் தேர்தலில் நிற்க மந்த்ரா பண உதவி செய்ய முன்வந்தாள். பண பலம் இருக்கவும் தேர்தலில் ரத்னதீபனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நினைத்த காரியங்கள் நடந்தது. நினையாததும் நடந்தது ரத்னதீபன் வாழ்க்கையில்.