*1*

வாட்டி வதக்கிய வெயிலை தணிக்க எழும்பிய நிலவின் ஒளி அந்த இருளை விரட்ட போதாதென்று ஒளிரவிடப்பட்டிருந்த மின்விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த பதாகையை பார்த்தவன் முகத்தில் அதிருப்தி எழுந்தது, “என்னடா இது?” என அருகில் இருப்பவனை உக்கிரத்துடன் பார்க்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என தலையை சொரிந்தபடி, 

“என்ன அண்ணே? எல்லாம் நீங்க சொன்ன மாதிரி வந்திருக்கே.” என்றான் அவன் விசுவாசி சேகர்.

“ஏதே சொன்ன மாதிரி வந்திருக்கா?” என நாக்கை துருத்தி அவனது பின்னந்தலையில் தட்டியவன்,  

“இளைஞர்களின் ரத்தினமே!

எங்கள் வீடுகளை ஒளிரவிடும் தீப விளக்கே! நீதான் எங்கள் குலவிளக்கு!

சட்டமன்றம் ஏறு! சட்டத்தினை ஒரு கை பாரு!

விடிவெள்ளியில் மிளிரும் மாணிக்கமே! 

கோட்டை ஏறி கொடியை பற்று!

ஐயமின்றி கயமையை விரட்டு!

ஒரு விரல் புரட்சியை இருவிரல் கையொப்பமாய் மாற்றிய எங்கள் எழுச்சியே! 

இன்று மன்றம் ஏறி பதவி ஏற்கும் ரத்னதீபனே!   

உன் வெற்றியை எங்கள் வெற்றியாய் கொண்டாடும் – விமல், கமல், திவ்யா.”

என அதனை படித்துக்காட்டியவன் பெயர்களுக்கு கீழே அவர்கள் புகைப்படம் இருக்கும் இடத்தினை சுட்டிக்காண்பித்து, “என் போட்டோ, என் பொண்டாட்டி போட்டோ, என் பையன் போட்டோ எல்லாம் இவ்ளோ சின்னதா போட்டிருக்க? எடிட் பண்ணி என் மச்சான் போட்டோ பக்கத்துலேயே என்னோடதை பெருசா போட சொன்னேனே…”

“மேலேயும் உங்க போட்டோ கீழேயும் உங்க போட்டோ இருந்தா க்ரிஞ்சா இருக்கும்னு எடிட் பண்ணவன் சொன்னான் அதான் எடுக்க சொன்னேன் அண்ணன்.” என காரணம் சொன்னான் அவன். 

பதாகையின் இடப்பக்கம் முழுதும் அவனது மச்சான் என்பவன் படம் அவன் கட்சி கொடியின் நிறத்தை பின்னணியாக கொண்டு பெரிதாக போடப்பட்டு அதன் பக்கவாட்டில் வாழ்த்து மடலும் தொடர்ந்து கீழே பதாகை அடிக்கச்சொன்ன இவன் படத்தினை சிறியதாக கீழே போட்டதற்குதான் கடுப்பாகிப் போனான் விமல்.

“சொன்னதை செய்யதான் உன்கிட்ட இந்த வேலையை கொடுத்தேன். நீயா முடிவு செய்வியா?” என கடிந்து கொண்டவன் மீண்டும் அந்த விளம்பரத்தாளை நன்றாக விரித்துப் பார்த்தான்.

“இன்னும் பெருசா பேனர் போட்டிருக்கலாமோ?”

“இதைவிட பெருசா போட்டா இந்த ரோட்டுல வைக்க பர்மிஷன் இல்லை அண்ணே.” என்றான் அவன்.  

“ம்ம்க்கும் அப்படியே ரூல்ஸ் பாலோ பண்ற மாதிரி நம்மகிட்ட தான் எகிறுவானுங்க… எல்லாம் கொஞ்ச நாள்தான்.” என்ற விமலின் முகத்தில் வெற்றிக்களிப்பும் பெருமிதமும் கர்வமும் மிதமிஞ்சி இருந்தது.

“இதை இன்னைக்கு ஒட்டிரலாம். நான் சொன்ன மாதிரி என் போட்டோவை பெருசா மச்சான் பக்கத்துல போட்டு நாளைக்கு ஒரு அம்பது பேனர் அடிச்சிடு இல்லைனா நானும் மச்சானும் இருக்குற போட்டோ இருக்கா பாக்குறேன் அதை போட்டுக்கலாம்.” என்ற விமல் எதிரில் இருந்த சுவற்றில் விளம்பரத்தாளை விரித்து வைத்து அதன் பின்புறம் பசை தடவியவன் தானே அந்த சுவரில் ஒட்டி பின்னங்கையால் ஓங்கி அடித்து நன்றாக அழுத்தம் கொடுத்தான்.

“எதுக்கு கையை புண்ணாக்கிகுறீங்க? நல்லா ஸ்ட்ராங்கான பசைதான் வாங்கி வந்தேன், நல்லா ஒட்டிக்கும்.” என்ற சேகரை சட்டை செய்யாதவன் வரிசையாக பத்து இடத்தில் ஒட்டிவிட்டுதான் நிமிர்ந்தான்.

“மிச்சத்தை ஒட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு. டிபன் செலவுக்கு வச்சிக்கோ.” என நூறு ரூபாய் தாளொன்றை சேகரின் சட்டைப்பையில் வைத்துவிட்டு அவன் கன்னத்தை லேசாக தட்ட,

“பெரிய மனசு அண்ணே உங்களுக்கு. மச்சானுக்கு பெரிய பேனர் வைக்குறீங்க, அந்த பேனர் ஒட்டுற எனக்கு சோறு போடுறீங்க.” என தன் சட்டைப்பையை தேய்த்துக்கொண்டே இளித்து வைத்தான் சேகர்.

ஒன்றும் சொல்லாமல் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வண்டியை உயிர்ப்பித்துக் கிளம்பினான் விமல். பகல் நேரத்தில் குறுகலாக அத்தனை நெரிசலாக இருக்கும் அந்த மாநில நெடுஞ்சாலை இரவு நேரத்தில் பயணத்தை இரசிக்கும் வண்ணம் விசாலமாக தெரிந்தது. மனதிற்குள் ஒலித்த பாடலை வாய்விட்டு மெல்லிய குரலில் பாடியபடி வீடு வந்து சேர்ந்தான்.

இரு படுக்கையறை கொண்ட மாடி வீட்டினில் வாடகைக்கு இருக்கின்றனர். வண்டியை கீழே நிறுத்திவிட்டு இரண்டு படிகளாக தாவித்தாவி மேலேறியவன் வாசலில் நின்று முறைத்துக்கொண்டிருந்த மனைவியைக் கண்டு தன் வேகத்தை குறைத்தான். மெல்லிய குரலில் வெளிவந்த பாடல் மொத்தமாக நின்றது. 

“தூங்காம என்னத்துக்கு வாசலை காவ காத்துட்டு உக்காந்திருக்க?” என கேட்டபடி மனைவியை தாண்டிக்கொண்டு செல்ல, பின்னோடே வந்த திவ்யா,

“நேரமே சாப்பிட்டு போனா நான் ஏன் வாட்ச்மேன் வேலை பாக்குறேன்.” என திட்டியபடி இரவு உணவை எடுத்துவைத்தாள். 

அறைக்கு சென்று மெத்தையில் உறங்கிய மகனுக்கு முத்தம் பதித்து உடை மாற்றி வந்தவன் மனைவியின் பார்வையை கண்டும் காணாதது போல் இருக்க, பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.

“இந்நேரம் வரைக்கும் என்ன வேலை? லேட்டாகும்னு சொல்லிட்டு போகலைனாலும் மெசஜ் போடலாம்ல. போன் போட்டாலும் எடுக்கல.” என வரிசையாக அடுக்கினாள்.

பதிலாக சொல்லாமல் தன் அலைபேசியில் எதையோ தேடி எடுத்து அவளிடம் காண்பித்தான். புருவச் சுருக்கத்துடன் அதனை வாங்கிப் பார்த்தவள் பார்வை விரிந்தது. ஊரின் முக்கிய சாலையில் இருக்கும் ஒரு சுவரில் தங்களின் படங்களைத் தாங்கி பெரிதாக ஒட்டப்பட்டிருந்தது அந்த விளம்பரம்.

“இந்த புடவையில நான் நல்லாவே இல்லை. வேற போட்டோ போட்டிருக்கலாம்.” என திவ்யா சிணுங்க, முறைப்பது இப்போது இவன் முறை.

“மூளையை கசக்கி நச்சுனு ஒரு கவிதையை எழுதி பேனர் ஒட்டுனா உன் புத்தி போகுது பார் புடவை நல்லாயில்லை பூ நல்லாயில்லைனு.” 

“எது இது கவிதையா…” என்றவள் அப்போதுதான் அதனை படித்துப்பார்த்தாள். சிரிப்பு வருவது போல் இருந்தது.

“வீட்டை ஒளிர வைக்கும் தீபவிளக்கா? என் அண்ணனா இந்த ஊருக்கு கரண்ட்டு, லைட்டு கொண்டு வந்துச்சு? இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.” என சொல்லி சிரித்தவள், “குலவிளக்கு வேற…” என இன்னும் சிரித்தாள்.

“அரசியல் பேனர்னா இப்படித்தான் எக்ஸ்டரா பிட் போடணும். அப்போதான் நாலு பேர் பாப்பாங்க. நம்மள பத்தியும் நல்லதா நாலு விஷயம் பரவும்.” என அவன் காரணம் சொல்ல, சரிதான் என தலையாட்டிக்கொண்டவளுக்கு தன் பெயரும் பேனரில் வருவதை எண்ணி பெருமையாகத்தான் இருந்தது.   

“மச்சானுக்கு போன் போட்டேன் எடுக்கல. நீ பேசுனியா? எப்போ அழைப்பு வருமாம்?” என விமல் கேள்விகள் எழுப்ப உதட்டை பிதுக்கினாள் அவள்.

“வீட்டுலையும் பேசலையாம். அவங்களும் கூப்பிட்டு பாத்திருக்காங்க. இன்னும் ஒன்னும் தெரியல. நியூஸ்ல சொல்றதை வச்சுதான் ஏதோ தெரிஞ்சிக்க முடியுது. அதுக்குள்ள நீங்க பேனர்ல இன்னைக்கு பதவி ஏற்புன்னு போட்டிருக்கீங்க?” பதில் கொடுத்து கேள்வியில் நிறுத்தினாள் திவ்யா. 

முகத்தை சுழித்தவன், “ஒரு ப்ளோல எழுதிட்டேன்.”

“சரி விடுங்க எப்படியும் என்னைக்காவது நடந்துதான் ஆகும்.” என்றவள் பாத்திரங்களை ஒதுங்க வைக்க, இவன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்ந்துவிட்டான்.

“தூங்க வரலையா?” திரும்பி வந்த திவ்யா கேட்க மறுப்பாய் தலையசைத்தான்.

“சத்தம் கம்மியா வச்சிக்கோங்க. தலை வலிக்குதுன்னு அத்தை முன்னமே போய் படுத்துட்டாங்க.” என சொல்லிச் சென்றாள் திவ்யா.

தலைவலி என்கவும் எழுந்து சென்று தன் பெற்றோர் உறங்கும் அறையை எட்டிப்பார்த்தான். இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். தொந்தரவு செய்யாமல் அவனும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு அறையில் முடங்கிவிட்டான். காலை நேரமே எழுந்துவிட்டவன் தாயிடம் அவர் நலன் விசாரித்துவிட்டு மனைவி மகனை கிளப்பிக்கொண்டு மாமனார் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

“இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்னு அம்மாட்ட சொல்லலைங்க.”

“ஏன் முன்னாடியே தகவல் கொடுத்தாதான் வீட்டுக்குள்ள சேப்பாங்களா என்ன?” என இடக்காக கேட்டு வண்டியை ஓட்ட,

“பேச்செல்லாம் தினுசா இருக்கு. இப்படி காலையிலேயே நீங்க கூட்டிட்டு போற ஆள் இல்லையே?” சந்தேகம் மனைவிக்கு.

“உன் அண்ணன் எலெக்ஷன்ல ஜெயிச்சிருக்காரு. எவ்ளோ பெரிய விஷயம். இப்போதான் உன் வீட்ல இருக்கனும் நீ. அவங்க சந்தோஷத்துல நாமளும் இருந்தாதான அவங்களுக்கும் நிறைவா இருக்கும். ஏன் உனக்கு ஆசையில்லையா இப்போ உன் வீட்ல இருக்கணும்னு?” என அவனும் எதிர்கேள்வி எழுப்ப, “எனக்கும் ஆசைதான்.” என்றாள் திவ்யா. 

காலை நேரம் என்பதால் நேரமே வீடு சென்றுவிட்டனர். மகளை பார்த்ததும் முகமெல்லாம் விகசிக்க வாசலுக்கு ஓடி வந்தார் அபிராமி.

“வாங்க வாங்க மாப்பிள்ளை. என் ராசா…” என ஆசையாக பேரனை வாங்கிக்கொண்டார்.

“மேல தாளம் இல்லை ஸ்பீக்கர் இல்லை. அட கட்சி கொடி கூட வீட்ல இல்லை. இதுல அப்பா, மகன் ரெண்டு பேரும் அரசியல்ல இருக்காங்க. உங்க பையன் இப்போ ஜெயிச்சிட்டாரு. அதுக்கு தக்கன மாதிரி ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லையே.” இரும்பு கேட்டை மூடிவிட்டு வண்டி நிறுத்தவென இருந்த அந்த சிறு வராண்டாவை தாண்டிக்கொண்டு வீட்டுனுள் நுழைந்தபடி கேட்டான் விமல்.

அதுவும் இரு படுக்கையறை கொண்ட வாடகை வீடுதான். விமல் தங்கியிருக்கும் வீட்டை விட சற்று சிறியதும் கூட. விமலின் கண்கள் வீட்டினை அளவெடுக்க, திவ்யா உரிமையாய் அடுப்பங்கரை சென்று அம்மா சமைத்து வைத்திருந்ததை எடுத்து ருசி பார்த்தாள். 

“ரிசல்ட் வந்த அன்னைக்கு அவன் ஜெயிச்சிட்டானு உங்க மாமா தோஸ்துங்க கொஞ்ச பேர் வந்து வாழ்த்துறோம்னு காபி பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு போனாங்க. அதுக்கப்புறம் உங்க மாமா வழக்கம் போல கட்சி, கூட்டம்னு போயிட்டாரு.” சலிப்பாய் இருந்தாலும் அதனை காட்டிக்கொள்ளாது பேசினார் அபிராமி. 

“அப்போ மச்சான்?” என எதிர்பார்ப்புடன் பார்க்க, சங்கடமாய் போனது அபிராமிக்கு.

கணவன் போலவே பெற்ற மகனும் அரசியல் என்று அதில் மூழ்கிப் போனவன் சில நேரங்களில் வீட்டையும் மறந்துவிடுகிறான் என பெருமைபட்டுக்கொள்ளவோ வெளியே அவன் மரியாதை குறையுமளவுக்கு விட்டுக்கொடுப்பதோ என எதுவும் முடியாதே. 

“வேலையா இருக்கான் போல மாப்பிள்ளை. ரிசல்ட் வந்த அன்னைக்கு நைட் பேசுனான்.” 

“அதுக்கப்புறம் பேசலையா?” சுணக்கத்துடன் கேட்டவன் பார்வை மீண்டும் அவ்வீட்டை சுற்றி வந்தது. 

அவன் பார்வை தேடும் பாவை அங்கில்லை என அபிராமி சொல்ல, “இனிமேலும் அப்படியே விடப்போறீங்களா என்ன?”

“நான் என்ன பண்ண முடியும் மாப்பிள்ளை?” என அப்பாவியாக கேட்டவரை மேலும் நெருக்க மனமில்லாதவனாய், “பதவி ஏற்புக்கு அழைப்பு வரும்ல நாம எல்லாரும் போவும் அத்தை. என்னனு பாக்கலாம்.” பதவி ஏற்புக்கு இங்காவது அழைப்பு வந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வந்தவன் அது இல்லை எனவும் அரைமனதாக மனைவியை அங்கு விட்டுவிட்டு கிளம்பிச் சென்றான். 

என்றைக்கும் இல்லாத பரபரப்பை தாங்கி இயங்கியது அந்த நிதி நிறுவனம். அரசு அங்கீகாரத்துடன் வெகு சமீபமாக ஐந்து வருடங்களுக்குள் துவங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் மாத தணிக்கைகள் நடப்பது வழக்கம். இன்று அந்த கிளை அலுவலகத்தில் கணக்கு சரிபார்ப்புக்கு என மண்டல அலுவலகத்திலிருந்து வருகிறார்கள்.

“டேலி ஆன அந்த கோல்ட் லோன் செக்ஷன் பைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா செண்பா. அப்படியே எப்.டி பைல்ஸ் கூட எடுத்துட்டு மேனேஜர் ரூமுக்கு வந்துடு.” என கட்டளைகள் பறந்தது அவளுக்கு.

தன் கணினியில் இருந்த தகவல்களை வேகமாக பதிவிறக்கம் செய்து அச்சடிக்க கொடுக்க, கணினியோடு பொருத்தப்பட்டிருந்த அந்த அச்சு இயந்திரத்திலிருந்து சத்தம் மட்டும் வந்தது. தலையை தட்டிக்கொண்டவள் வேகமாக கத்தைக் காகிதங்களை சமமாக வைத்து மீண்டும் அச்சடிக்க கொடுத்தாள். அதற்குள் இருமுறை அவளுக்கு அழைப்பு வந்துவிட்டது மேலாளர் அறையிலிருந்து. தங்கக்கடன் குறித்த விவரங்களை விரைவாக அச்செடுத்து முதலில் கொண்டு சென்றவள் பின் எப்.டி குறித்த தரவுகளை எடுத்துச் சென்றாள். மேலாளர் அறையில் சரிபார்ப்பு நடந்தது. சந்தேகம் வரும் நேரம் அவ்வப்போது ஊழியர்களை அழைத்து கேட்டுக்கொண்டனர்.

யாருக்கும் யாருடனும் பேச நேரமே இல்லாதவாறு கேள்விகளும் தரவுகளும் கேட்ட வண்ணம் இருக்க, வேலை நேரம் முடியும் சமயம் சோர்ந்துவிட்டனர் பணியாளர்கள்.

“இதுக்கே ரெண்டு நாள் லீவ் கொடுக்கணும்.” என கழுத்தின் பின்புறம் கைவைத்து தலையை இடவலமாய் அசைத்து சோம்பல் முறித்தாள் செண்பகா.

“கொடுத்துட்டு தான் மறுவேலை. நாளைக்கு ஒருநாள் கஸ்டமர்ஸ் ஒண்ணு ரெண்டு பேர் கம்மியா வந்தா அதுவே போதும்.” என்றாள் அவள் தோழி சுமிதா.

“ம்ம்க்கும் இப்போ மட்டும் நிக்க இடமில்லாத அளவுக்கு வர்றாங்களாக்கும்?” என சலித்துக்கொண்ட செண்பகா தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீடு செல்ல ஆயத்தமானாள். 

“பேங்க் மாதிரி ஒரே நேரத்துல இல்லாம கொஞ்சம் மாறி மாறி வர்றாங்க. அதுக்கே ப்ரோசிஜர் முடிச்சி ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுக்க எவ்ளோ நேரம் ஆகுது தெரியுமா. பேங்க்ல இவ்ளோ நேரம் ஆகாது.” 

“கவர்ன்மென்ட் பேங்க்ஸும் இது மாதிரி நிதி லிமிடெட்டும் ஒண்ணா… இதுக்கு அதிக ரூல்ஸ் அண்ட் ப்ரோசீஜர்ஸ் இருக்கும்.” என சொல்லிக்கொண்டே வந்த செண்பகா பேருந்து நிறுத்தம் வரவும் சுமிதாவுக்கு கை காட்ட, சுமிதா எதிர்புறம் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள்.

விழுப்புரம் நகராட்சியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கும் தன் கிராமத்திற்கு அரைமணி நேரத்திற்கு ஒரு டவுன் வண்டி உண்டு. அதற்காக அவள் காத்திருக்க, அவள் முன் வேகமாக வந்து நின்ற வண்டியை சட்டென்று மூண்டுவிட்ட பதட்டத்துடன் பார்த்தாள்.

“நாந்தான்… ஏன் டென்சன்? ஏறு வீட்டுக்கு போலாம்.” என்ற அண்ணனைப் பார்த்து பெருமூச்சு விட்டவள் அண்ணன் பின் அமர்ந்துகொண்டாள்.

“என்ன இந்த பக்கம்?’

“கடைக்கு சரக்கு எடுக்க வந்தேன் பாப்பா.” என்றதும் தான் லேசாக முன்னே எட்டிப்பார்த்தாள்.

அந்த டீ.வி.எஸ் வண்டியின் முன்னால் பொருட்கள் அடங்கிய பெரிய பை மாட்டியிருந்தது. 

“சரக்கு எடுத்துட்டு டைம் பாத்தேன். உனக்கு வேலை முடியுற நேரம்தான. இப்படியே வருவோம் நீ இருந்தா அழைச்சிட்டு போலாம்னு இந்த பக்கம் வந்தேன்.” என சுயவிளக்கம் கொடுத்தான். கேட்டுக்கொண்டவள் பொதுவாக பேசிக்கொண்டு வர, அவளை வீட்டில் இறக்கிவிட்டு கடைக்கு சென்றான்.

“வண்டி சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு?” அவள் உள்ளே வரவும் எதிர்ப்பட்ட அவள் அம்மா அமுதா கேட்க, அண்ணன் வந்ததை சொன்னாள்.

“கடலை அவிச்சிருக்கேன் உள்ள வந்து சாப்பிட்டு ஒரு வாய் காபி குடிச்சிட்டு போயிருக்கலாம். நீயாவது என்னை கூப்பிட்டிருக்கலாம்ல அண்ணன் வந்திருக்கானு.” என அங்கலாய்த்துக் கொள்ள, “நீ அவிச்சி வைப்பேன்னு எனக்கு தெரியுமா? குடு நான் அப்பாக்கும் அண்ணனுக்கும் குடுத்துட்டு வரேன்.” என்றாள் மகள்.  

“ஆளே சுணங்கி போய் வந்திருக்க. ரெஸ்ட் எடு நீ. அவங்களுக்கு நைட் குடுத்துக்கலாம். இல்லை இன்னொரு முறை வளவன் இந்த பக்கம் வந்தா கொடுத்துக்கலாம்.” என்றவர் அப்போதே மகனுக்கு அழைத்து விவரம் சொன்னார். 

செண்பகா அறைக்குச் சென்று உடை மாற்றி முகம் கழுவி வர, ஒரு தட்டில் கடலையும் அருகே ஆவி பறக்க காபியும் இருந்தது.

“இன்னைக்கு அதிகம் வேலையா பாப்பா?” மகளின் முகம் சோர்வைக் காட்ட அவளருகில் அமர்ந்து பேச்சு கொடுத்தார்.

அன்றைக்கு நடந்தது எல்லாம் செண்பகா பகிர்ந்துகொள்ள, மாலைப் பொழுது அப்படியே சென்றது. இரவு கடையடைத்து அப்பாவும் மகனும் வர, குடும்பமாய் அமர்ந்து உண்டனர்.

“ராத்திரி கடலை வச்சி நெஞ்சடைக்குது. இனிமே இதெல்லாம் செஞ்சா முன்னாடியே குடு அமுதா.” என்று கண்டிப்பு காட்டினார் செண்பகாவின் தந்தை வையாபுரி.

“தினம் பாப்பா சோர்ந்து வர்றா அவளுக்காக செஞ்சேன். வளவன் சாயந்தரமா வருவான் குடுத்துவிடலாம்னு பாத்தா அவன் பாப்பாவை விட்டுட்டு போயிட்டான்.”

“கடையில வேலை இருந்துச்சு.” என்ற வையாபுரி மகளை பார்த்தார். 

அண்ணனும் தங்கையும் அலைபேசியில் என்னவோ பார்த்து சிரித்துகொண்டிருந்தனர்.

“என்னங்க அப்படி பாக்குறீங்க?” அமுதா கேட்க, 

“நாளைக்கு பாப்பாவை பரந்தூர் போக சொல்லணும்.” என்றார் வையாபுரி.

சட்டென அமுதாவின் முகம் கவலை பூசிக்கொண்டு மகளிடம் சென்றுவந்தது, “வார இறுதி கூட இல்லையே. அவளுக்கு வேலை இருக்குமே.” 

“எல்லாரும் கேக்குறாங்க அமுதா.” என்றவர் முகமும் கசங்கிப் போனது. 

“என்னைக்கு இதுக்கு விடிவு வரும்னு தெரியல.”

“இதுவரைக்குமே வரலை. இனி வருமான்னு பயமா இருக்கு அமுதா.” என்ற வையாபுரி நெஞ்சை தடவிக்கொள்ள, அமுதாவுக்கு பயம்தான்.

“ஒன்னுமில்லை நெஞ்செரிச்சல்தான். ஜீரக தண்ணி போட்டு எடுத்துட்டு வா. நான் செத்த நடக்குறேன்.” என்று சொல்லி வெளியே சென்று தெருவில் இறங்கி நடந்தார்.

“இந்த நேரத்துல அப்பா எங்க போகுது?” வையாபுரி வெளிக்கதவை திறப்பதை வளவன் கவனித்துவிட்டு கேட்க, அமுதா விவரம் சொன்னார்.

தான் சென்று பார்க்கிறேன் என்று வெளியே சென்றான் வளவன். அவன் சென்றதும் அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்த செண்பகாவின் பார்வை திரையில் வந்து விழுந்த செய்தியில் வெறுமை உணர்ந்தது.

நாளை மறுநாள் பொறுப்பேற்கப்போகும் புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுக்க இருக்கின்றனர். குடும்பத்தினர் எனும் முறையில் அதில் கலந்து கொள்வதற்கான நுழைவுச்சீட்டு வந்திருந்தது. கூடவே அதற்கான அழைப்பிதழும். உடன் பாதுகாப்பு அம்சங்களும் அதில் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் அடக்கம். 

வெறுமையை விரட்டி அதனை படித்துப்பார்த்தாள். முதலில் ஆர்வமின்றி மேலோட்டமாக படித்தவள் அதில் அச்சிடப்பட்டிருந்த அவள் பெயரைப் பார்க்கவும் கொதித்துப் போனாள். 

‘இன்றுதான் என் நினைவு வந்ததா? இதற்கு மட்டும் நான் தேவையா?’ என உள்ளிருந்து எழுந்த கோவத்தை எதைக்கொண்டு அணைக்க என புரியவில்லை. அத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை மறைந்து அழுத்தம் கூடியது. 

மனதின் வெட்கை உடலைத் தாக்க தேகம் சூடேறியது. முகமெல்லாம் இளஞ்சிவப்பு பூசிக்கொள்ள அலைபேசியை இடக்கைக்கும் வலக்கைக்கும் மாற்றினாள். உடல் நிழலுலகின் தாளத்திற்கு ஆடுவது போல் முன்னும் பின்னும் சென்று வந்தது. மனம் முணுமுணுவென பழையதை அசைபோட்டது. கோபத்தை சேர்த்து மென்றது. ஊசியென குத்திய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து வலிந்து வலியை உணர்ந்தது. 

‘என்னை வளைத்து விடலாம் என்ற நினைப்போ… யார் என்ன சொன்னாலும் சரி நான் போக மாட்டேன்.’ என பிடிவாதமாக மனதிற்குள் உரு போட்டுக்கொண்டாள்.